அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமாஸ்தாவின் பெண்
2

காதல் விஷயமாக நான் பல கதைகளில் படித்திருக்கிறேன். துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டகதை, நளதமயந்தி கதை, இராமச்சந்திரன் சீதாபிராட்டியார் கதை, சத்தியவான் சாவித்திரி கதை என்று பல படித்துமிருக்கிறேன். ஆனால், அவையெல்லாம், கடவுள் கை கொடுத்துதவினார் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் அபலையாகிய என் பொருட்டு அவர் செய்வாரா? அவ்வளவு அக்கறை ஆண்டவனுக்கு என்னிடம் இருந்தால் எங்கள் வறுமையை முதலில் ஓட்டிவிட்டு மறு வேலை பார்க்கமாட்டாரா! அதையே செய்யாதவர் அவருக்கிருக்கிற வேறு எத்தனையோ வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்மீது சோமுவுக்கு அன்பு உண்டாகும்படிச் செய்ய முன்வரவா போகிறார்! நடக்கிற விஷயமா? சோமுவுக்கும் எனக்கும் மணம் நடந்து, கதைகளிலே கூறப்படுவதுபோல், கஷ்டங்கள் ஏற்பட்டால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன்.

வறுமையின் காரணத்தால் எனக்கு உலகின் மற்றைய காட்சிகளைக் காண, நேரமோ, வசதியோ கிடையாது. மன மகிழ்ச்சிக்கு வேறு மார்க்கமும் கிடையாது. செல்வவான் வீட்டுப் பெண்ணாக இருந்தால், மனக் கவலை தோன்றாதபடி நாடகம், சினிமா பார்க்கலாம். நகை நட்டு போட்டுக்கொண்டு ஆனந்திக் லாம். கிளப்புக்குப் போய் பந்தாடலாம். கடற்கரைக்குப் போய் உலாவலாம். கிராமபோன் கேட்கலாம். உல்லாசத்துக்கு எத்தனையோ வழிகள் உண்டு. எனக்கோ பணமின்றிப் பெறக்
கூடிய ஒரே இன்பந்தான் இருந்தது. அதுதான், சோமுவைப் பற்றிய நினைப்பு. அவரைப் பார்ப்பது, அவரைப் பற்றிப் பேசுவது அவர் விஷயமாகத் தங்கையோ, அம்மாவோ அப்பாவோ பேசினால் காது குளிரக் கேட்பது இதுவே எனக்கிருந்த இன்பம். இந்த இன்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்தது. நான் பரிபூரணமாக அவருடைய அடிமையாகி விட்டேன். சோமு மிக நல்லவர் என்று சொன்னேனே அது தவறு. என்னைக் கவர்ந்தவன் எப்படி நல்லவனாக முடியும்?

சோமுவின்மீது எனக்கு வளர்ந்து வந்து காதல் என் மனத்தில் ஆழமாகப் பதிய ஆரம்பித்துவிட்டது. சில சமயங்களில் அவருடைய தரிசனத்திற்காக நான் ஏங்கித் தவிப்பதுண்டு. முக்கியமாக அவர் பூசை செய்யச் சென்றுவிட்டால், குறைந்தது இரண்டு மணி நேரமாகும் வாசலுக்கு வர. அதுவரை அவரைக் காண முடியாமல் நான் படும்பாட்டை அவர் எப்படி அறிவார்? காதல் பலப்பட்டது. கலக்கமும் அதிகரித்தது. நான் அவர் மீது மையல் கெண்டு என்ன பயன்? சோமு எந்தச் சீமாட்டி வீட்டுச் சிங்காரிக்குக் கணவனாகப் போகிறாரோ? என் எண்ணம் எப்படி ஈடேறும்? கடைசியில் என் கருத்து ஈடேறவில்லையானால் என் மனம் உடைந்து விடுமே, அதற்கென்ன செய்வது?

இத்தகைய கலக்கத்தினால் பல இரவுகளில் நான் அழுததுண்டு. பெரியதோர் ஆபத்தில் சிக்கிக் கொண்டதை உணர்ந்தேன். சோமுவின் மனநிலையோ எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள மார்க்கமுமில்லை. அவர் தமது ‘பக்தி’யைக் காட்டிக்கொள்ள கட்டுக்கட்டாக விபூதி பூசிக் கொண்டு காலணா அளவுள்ள சந்தனப் பொட்டிட்டுக் கொண்டிருந்தார். என் விஷயமாக அவர் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதைக் காட்ட ஓர் அடையாளம் தென்படவில்லை. பல வஸ்துக்களை அவர் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தாரே தவிர, அவருடைய பார்வையிலே தனி விசேஷம் இருக்கவில்லை. கண்ணால் பேசியிருக்கலாம், மனம் இருந்தால். அவரே பக்தர்களின் பாடலைக் கேட்டுக் கேட்டு, மௌனமாக இருக்கும் பழக்கங்கொண்ட தேவனைப் போல், என் கண்களின் வேண்டுகோளைக் கண்டும், அசையாத உள்ளங் கொண்டவராகவே இருந்தார். நான் அப்படியொன்றும் அழகற்றவளுமல்ல!

என் மனக் குறையைத் தீர்க்க யார் முன்வருவார்கள்? ஒரு சமயம் எனது ஆழ்ந்த இருதயப் பூர்வமான காதல், சோமுவுக்குத் தெரிய நேரிட்டால், என்னை மகிழ்விக்க இசைவாரோ? ஆனால் எப்படி அவரிடம் என் காதலைத் தெரிவிப்பது? மிகச் சாந்த குணசீலராகிய சோமு என்னைப் பற்றித் தவறாகக் கருதிவிட்டால் என்ன செய்வது? வீட்டிலே அம்மா அப்பாதான் என்ன சொல்லமாட்டார்கள்? ஊராரும் ஏசுவார்களோ? நான் என்ன செய்வேன்? சோமுவை மறந்து விடவும் முடியவில்லை. மனநிலையை அவருக்குத் தெரிவிக்க மார்க்கமும் தோன்றவில்லை. நான் தத்தளித்தேன். சாந்தாவுக்கு இவற்றை நான் கூறவில்லை. ஆனால் பெருமூச்சும் அடிக்கடி எதிர்வீட்டின்மீது ஏக்கத்தோடு செல்வதும், இரவில் என் தலையணை நனைந்து போவதும், என் மனத்தில் இருந்த எண்ணங்களைச் சாந்தாவுக்குத் தெரிவித்துவிட்டன. அவளோ சிறு பெண்! அவளால் என்ன செய்ய முடியும்!

சாந்தா எப்போதாவது சோமுவிடமிருந்து புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாள். புராணக் கதைகளே சோமு தருவார். ஒருநாள் எனக்கோர் யுக்தி தோன்றிற்று. கண்ணபிரான் மீது காதல் கொண்ட ருக்மணியின் மனோநிலை வர்ணிக்கப்பட்டிருந்த பாகத்தைச் சோமு தந்தனுப்பிய பாரதத்தில் நான் பென்சிலால் கோடிட்டு அனுப்பினேன். அப்போது என் நெஞ்சம் துடித்ததை என்னென்பேன். அவர் அதனைக் கவனிப்பரா? கவனித்தாலும் விஷயம் இன்னதென்று புரிந்து கொள்வாரா? துஷ்டச்சிறுக்கி என்று என்மீது சீறுவாரா? அலமுவிடம் காட்டி விடுவாரோ? அப்பாவிடம் உன் மகளின் யோக்கியதையைப் பார் என்று கூறுவாரோ? என்ன நடக்குமோ என்று பயமாகவே இருந்தது. நான் கோடிட்டு அனுப்பிய பாகத்தில் ஆபாசமான வார்த்தைகள் ஏதும் இல்லை.

“கண்ணன் மீது நான் கொண்டுள்ள காதலின் ஆழம், கடலாழத்தைவிடப் பெரியது. அவரே என் ஆவி. அவர்இன்றி நான் வாழேன். ஆனால் அந்தோ என் மனநிலை அவருக்குத் தெரியுமோ? தெரியவந்தால் அவர் என் காதலை ஏற்றுக் கொள்வாரோ? ஏளனஞ் செய்வாரோ? என் செய்தியை அவரிடம் கூற யார் இருக்கிறார்கள்? இரவுக் காலங்களில் என்னை வாட்டி வதைக்கும் நிலவே! கனல்போல் வீசிக் கருத்தைக் கெடுக்கும் காற்றே! பொறாமை மூளும்படி உன் சந்தோஷத்தைப் பற்றிக் கொஞ்சிக் கொண்டிருக்கும் கிளியே! கூவும் குயிலே! ஆடும் மயிலே! தாமரை பூத்த குளத்திலே தாண்டவநடை நடக்கும் அன்னமே! யார் போய் கூற முன்வருவீர்கள்” இதுதான், நான் கோடிட்ட பாகம்.

சாந்தா குறும்புத்தனமாக ஒரு வேலை செய்து விட்டாள் என்பது எனக்குப் பிறகே தெரியவந்தது. கண்ணபிரான் என்பதை அடித்து விட்டு சோமு என்று அவள் எழுதிவிட்டு, பிறகு புத்தகத்தைச் சோமுவிடம் கொடுத்தாளாம். கொடுக்கும்போது, “இந்தப் புத்தகம் ரொம்ப நன்றாக இருந்ததாம், அக்கா படித்துவிட்டு முக்கியமான இடத்திலே கோடு போட்டு இருக்கிறாள்” என்றும் சொன்னாளாம். சோமு புன்னகையுடன் “சாந்தா நல்ல புத்தசாலியல்லவா! பரம சாது! பகவத்கடாட்சம் அவளுக்குக் கிடைக்கும். புண்ணிய கதைகளைப் படிப்பதிலே அவளுக்கு விருப்பம் இருப்பதால் அவள் நல்ல குணவதியாக விளங்குவாள்” என்று கூறினாராம்.

“புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தாரடி?” என்று நான் ஆவலுடன் கேட்டேன். புத்தகத்தைப் பார்த்துவிட்டு, விஷயம் தெரிந்து கொண்டு, சோமு தன் சம்மதத்தைக் கூறியனுப்பினார் என்று பேதை நான் எண்ணிக் கொண்டேன்.

“புத்தகத்தைப் பிரித்து பார்க்கவில்லையே, அக்கா” என்று சாந்தா சோகத்துடன் கூறிவிட்டு, “நான் வந்து விட்ட பிறகு நிச்சயம் பார்த்திருப்பார்” என்று என்னைத் தேற்றினாள். சாந்தா தேற்றிவிடக் கூடிய நோயா எனக்கு! என் மருந்து எதிர் வீட்டில். என் நோய், அவருக்குத் தெரிந்தால்தானே!!

தம்பி இராகவன் சோமுவிடம் நெருங்குவதில்லை. காரணம், இராகவனுக்கு நல்லவர்களே பிடிப்பதில்லை. சோமு எப்படியாவது இராகவனைத் தோழனாக்கிக் கொள்ள வேண்டுமென்று, இராகவன் இருக்கும் நேரத்தில், சில நாட்கள் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு, பேசுவதுண்டு. பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். எனக்கு நல்ல விருந்து. ஆனால் இராகவன் கண்டிப்பாய் பேசுவான்.

நான் பாரதத்தில் கோடிட்டு அனுப்பியதற்குச் சில நாட்களுக்குப் பிறகு இராகவன் ஒரு தினம் களைத்து வந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். வறுமையினால் வாடும் வாட்டம் எனக்கிருப்பதைவிட அவனுக்கு அதிகம். நான் வீட்டிலேயே கிடப்பவள், அவன் வெளியே போய் வருவான். வறுமையின் கொடுமைகள் அவனுக்கு அதிகமாக உறுத்தலாயின. தனது நண்பர்களின் நாகரிக உடை தனது அழுக்குச் சட்டையைப் பார்த்துப் பரிகாசம் செய்வது போலிருக்கிறது. தானோர் திருஷ்டி பரிகாரம்; சனீஸ்வரூபம்! என்று ஏதேதோ பேசுவான். தன்னைத்தானே நொந்து கொள்வான். வாட்டத்தைக் கொடுத்த வறுமை இராகவனுக்கு முரட்டுத்தனத்தையும், பணக்காரர் என்றால் ஒரு வெறுப்பையும், நீதி, நேர்மை, பாவ புண்ணியம், தர்மம், தயை என்று பேசப்படுவதிலே கசப்பையும் கொடுத்து விட்டது. சதா கடுகடுத்த முகத்தோடுதான் இருப்பான். ‘விரசநாயகன் வந்தான்’ என்று சாந்தா கேலி செய்வாள். பேசும்போது துடுக்குத்தனமாக இருக்கும். அதிலும் பணக்காரர் பேச்சை எடுத்தால் போதும், சீறுவான். மனத்திலே அவனுக்கு நம்பிக்கை கிடையாது. கடவுளைப் பற்றிக்கூடக் கேலி செய்வான்.

சோமுவிடம் பேசுவது இராகவனுக்கு இஷ்டமில்லை என்ற போதிலும் வீடேறி வந்தவனிடம் எப்படிப் பேசாமலிருப்பதென்று வேண்டா வெறுப்புடன் பேசுவான். சோமு மிக்க வாத்சல்யத்துடன் பேசுவதுடன் மத விஷயமாக இராகவனுக்குப் போதிப்பதுண்டு. சில சமயங்களில் இராகவன் அவற்றைக் கேட்டுக் கொள்வான். சில சமயங்களில், “சோமண்ணா, வேறு ஏதாவது பேசுங்கோ, கேட்போம். இந்த இழவுப் பேச்சு வேண்டாம்” என்று கூறிவிடுவான்.

“சிவ, சிவா! இராகவா, அப்படிச் சொல்லாதே, அபச்சாரம்” என்பார் சோமு.

“அபச்சாராமாவது கிரகச்சாரமாவது” என்று இராகவன் முரட்டுத்தனமாகக் கூறிவிட்டு வெளியே போய்விடுவான். அப்பா, அம்மா இராகவனிடம் கோபித்துக் கொள்வார்கள். வைவார்கள். நான் மட்டும் கோபிப்பதில்லை. இராகவன் முரட்டுத் தனமுடையவனாவதற்கும், வெறுத்துப் பேசுவதற்கும் காரணம் வறுமையின் கொடுமைதான் என்பது எனக்குத் தெரியும். சிற்சில சமயங்களில் இராகவன் தன் மனத்தைத் திறந்து காட்டுவதுபோல் என்னிடம் பேசுவான். கேட்கமிக உருக்கமாக இருக்கும் அவனது பேச்சு.

ஒருநாள், சோமுவுக்கும், இராகவனுக்கும் கீழ்க்கண்டபடி பேச்சு நடந்தது.

சோமு : இராகவா! எங்கே உன்னைக் காண்பதே அரிதாகி விட்டது?

இராகவன் : கழுதை கெட்டால் குட்டிச் சுவரிலேதானே! சாக்கடைக்குப் போக்கிடமேது? வேலை ஏதாவது கிடைக்குமோ என்று தேடி அலைந்தேன்.

சோமு : கிடைத்ததோ?

இராகவன் : நன்றாகக் கிடைத்தது. டாமிட், இடியட் என்ற அர்ச்சனை. வேலையாவது கிடைப்பதாவது. புலிப்பாலில் குதிரைக் கொம்பைத் தேய்த்து அந்தத் திலகத்தை நெற்றியிலே வைத்துக் கொண்டு வந்தால் கிடைக்குமாம்!

சோமு : காலம் இப்படியே இராது இராகவா! பகவான் கிருபை செய்யாமல் போக மாட்டார்.

இராகவன் : அது சரி அண்ணா! கிருபை பண்ணுவார். ஓய்வு இருந்தால்தானே! தேரும், திருவிழாவும் வேத பாராயணமும், பஜனையும், கதா காலட்சேபமும், பரத நாட்டியமும், அதிர்வெடியும், அக்காரவடிசலும், அன்னாபிஷேகமும், விடாயத்தியும் அனுபவித்துவிட்டு, மிகுந்த நேரத்தில், உம்மைப் போன்ற ‘பக்தர்’களைக் கண்டு பேசிக் கடாட்சித்து விட்டுப் பிறகுதானே என்னைப் போன்ற பஞ்சையிடம் வருவார். அதற்குள் எனக்கு வேலையே அவசியமில்லாத நிலைமை வரும். சாவுதான் அவர் எனக்குச் செய்ய வேண்டிய கடாட்சம்.

சோமு : மனம் வெறுத்துப் பேசாதே இராகவா. இது ஒரு கஷ்டமா? சாட்சாத் ஸ்ரீராமரே காடு சுற்றினார். கஷ்டம் சுகமும் இரவும் பகலும் போல மாறி மாறித்தான் வரும். இதற்காகப் பகவத் நிந்தனை செய்வதா?

இராகவன் : நானா நிந்திக்கிறேன்? என்ன அண்ணா, உம்மைப் பெரிய வேதாந்தி என்று கூறுகிறார்களே. நான் பேசுகிறேன், நான் ஏசுகிறேன் என்று சொல்லலாகுமா? நான் ஏது? நீர் ஏது? எல்லாம் அவன் மயம்! எல்லாம் அவன் செயல். உம்மை இலாட்சாதிபதியாக வைத்திருப்பது அவன் செயல்! என்னைப் பிச்சாதிகாரியாக வைத்திருப்பதும் அவன் செயல்! மிக நல்லவன் அவன்.

சோமு : இராகவா! நீ நாத்திகம் பேசுகிறாய். நாக்குக் கூசவில்லையா?

இராகவன் : இதற்குப் பெயர் நாõத்திகமா? எனக்குத் தெரியாது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. எனது நாக்கின் அசைவும் அவனது செயல்தான்!
சோமு : பிராமண குலத்தில் உதித்து இப்படிப் பகவத் வேஷியாவதா?

இராகவன் : பூர்வகர்ம பலன்!

சோமு : நீ வக்கீல் போலப் பேசுகிறாய். நீ மட்டும் வக்கீல் வேலைக்குப் படித்திருந்தால்...

இராகவன் : கிழிந்த கறுப்புச் சட்டையுடன் வெளியே கிளம்பியிருப்பேன், வேறென்ன நடந்திருக்கும்!

சோமு : நீ சத் விஷயங்களைப் படிக்கவேண்டும்.

இராகவன் : அருமையான புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருக்கிறேன், உலகத்தைவிட உன்னதமான புத்தகம் இருக்கிறதா அண்ணா! அதை நான் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு சோமு மௌனமாக இருந்துவிட்டுப் போய்விட்டார். நான் இராகவனைத் திட்டினேன். நல்லவர்கள் மனத்தை நோகச்செய்வது அழகல்ல என்றேன். நான் இவ்விதம் இராகவனுக்குப் புத்தி சொன்னதேயில்லை. அன்று அவனது பேச்சு சோமுவின் முக விலாசத்தையே மாற்றி விட்டதைக் கண்டேன். ஆகவே எனக்குக் கோபம் பிறந்தது. இராகவன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சிரித்தான். “அந்தச் சிரிப்பின் அர்த்தம் என்ன?” என்று நான் சீறினேன்.

“எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி
எட்டாத கோட்டைக்கு
ஏணியிட்டு”
என்று இராகவன் பாடிக்கொண்டே சிரித்தான்.

எனக்குச் சோமுமீது இருக்கும் எண்ணத்தை இராகவன் எப்படியோ தெரிந்து கொண்டான் என்பது தெரிந்தது. நான் நாணத்தால் தலை குனிந்தேன். “அழகுக்குத் தக்கயோகம் அடிக்க வேண்டும்” என்று குறும்பு பேச ஆரம்பித்தான் இராகவன்.

புன்சிரிப்புடன் நான் இராகவனை முறைத்துப் பார்த்தேன்! ‘இந்தப் பார்வைக்கே அவன் உன்னைத் தான் பட்ட மகிஷியாக்கிக் கொள்ளலாம்’ என்று இராகவன் கூறினான்.

“இராகவன்! வம்புத் தும்பு பேசாதே!” நான் கூறினேன், இராகவன், அதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே, “உனது அழகைக் கண்டிருப்பான் அவன். ஆனால் அதற்கேற்ற அந்தஸ்தை உனக்கேற்படுத்த அவன் முன்வருவானா என்பது சந்தேகம்தான். அவன் ஒரு முட்டாள்!” என்று கூறினான். இராகவனின் அந்தப் பேச்சு, சேலி செய்வதுபோலத் தோன்றவில்லை. ஆழ்ந்த கருத்துடன் அவன் அதனைக் கூறினதாகவே தென்பட்டது. அதைக் கூறும்போது, இராகவனின் முகம் வாடியது. என் மனம் ஒரு குலுக்கு குலுக்கிற்று.

திகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார்? இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி நிர்ப்பந்தம் உண்டாகவே, ‘அண்டிமாண்டு, எழுதிக்கொடுத்து வேறோரிடத்தில் கடன் வாங்கி, வட்டியைக் கட்டினார். இந்தக் கஷ்டத்திலே, ஓர் இளைப்பு இளைத்தே போனார். எவ்வளவு அலைச்சல், எவ்வளவு உழைப்பு என்ன செய்வார். மிராசுதாரரிடம் அவர் ஒரு கணக்குப் பிள்ளை. ஆயிரம் இரண்டாயிரம் என்று கணக்கெழுதுகிறார். தேள் கொட்டிவிட்டால் விஷம் ஏறுவதுபோல் வயதும் மேல் வளர்ந்து கொண்டே வந்தது. எனது வயதும் வளர்ந்தது. ஊரார் ஏன் இன்னமும் காந்தாவுக்குக் கலியாணம் ஆகவில்லை என்று கேட்கும் கேள்வியும் வளர்ந்தது. அப்ப அம்மாவின் விசாரமோ சொல்ல முடியாது. இந்த நிலையில் தம்பி இராகவன் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டுப் போய்விட்டான். எங்கே போனானோ என்ன நேரிட்டதோ என்று நாங்கள் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்தோம். ஒரு மாதத்திற்குப் பிறகு இராகவனிடமிருந்து கடிதம் வந்தது. மேல் விலாசம் இராகவன் கையெழுத்தாக இருந்ததால் மகிழ்ந்தேன். கடிதம் என் பெயருக்குத்தான் வந்தது. வீட்டிலும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் உள்ளே இருந்த செய்தி எங்களுக்குச் சர்ப்பம் தீண்டியதுபோல் இருந்தது.

“காந்தாவுக்கு, நான் சொல்லாமல் ஓடிவந்து விட்டேன் என்று கவலைப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். முதுகு வலிக்க மூட்டை சுமப்பவனுக்குப் பாரம் குறைந்தால் நல்லதுதானே. வறுமையிலே வதையும் நமது குடும்பத்தில் நான் இல்லாதிருப்பது ஓரளவு பாரம் குறைவதாகவே நான் கருதுகிறேன். இங்கு நான் வந்ததற்குக் காரணம் வேலை ஏதாகிலும் கிடைக்கும் என்பதற்காக மட்டுமல்ல; அங்குள்ள தரித்திரத்தின் கோரத்தைக் காணச் சகியாது வந்து விட்டேன். என்று சொல்வது போதாது. சோமுவின் நடத்தையினாலேயே நான் இப்படி வந்துவிட நேரிட்டது.

காந்தா, நீ சோமுவைக் காதலிக்கும் விஷயம் எனக்குத் தெரியும். கண்ணில்லையா எனக்கு, கருத்து இல்லையா, சோமு நல்லவன். ஆனால் அவனுடைய உலகம் வேறு. அவன் ஒரு பணக்கார வேதாந்தி. நாம் ஏழைகள். அவனுக்கு உலகம் மாயமாம். வாழ்வு பொய்யாம். மணம் ஒரு சிறை வாசமாம், காதல் ஒரு பந்தமரம், அவன் வாழ்நாளில் பகவத் சேவையைத் தவிர வேறொன்றும் செய்ய மனம் இடந்தர வில்லையாம்.

உன்னை அவன் நிராகரிக்கிறான். பெண்கள் சமூகமே பேய்ச்சுரை என்று பேசுகிறான். ஏசுகிறான். நான் வெட்கத்தை விட்டு அவனிடம் உன் விஷயமாகப் பேசினேன்; வேண்டினேன், கெஞ்சினேன். உன்னைக் கலியாணம் செய்து கொள்வது, நமது குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவரும் பேருதவியாக இருக்குமென்பதை எடுத்துக் காட்டினேன். குப்பையில் கிடக்கும் மாணிக்கத்தை எடுத்துக் கொள், என்று கதறினேன் காந்தா. துளியும் தயங்காமல் கலியாணம் என்ற பேச்சே எடுக்காதே என்று சோமு கூறிவிட்டான். நீ கட்டிய மனக்கோட்டை நொறுங்கிற்று. நானுங்கூட உன்னைப்போலவே மனக்கோட்டை கட்டினேன். சோமு உன்னைக் கலியாணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கிருந்திராவிட்டால் அவனுடைய வேதாந்தப் பேச்சை ஒரு விநாடிகூடக் கேட்டுக் கொண்டிருக்கமாட்டேன்.

பெரிய வேதாந்தியாம் அவன். பக்தனாம்; ஆண்டவனிடம் அன்பு கொண்டவனாம். காந்தா இதைக் கேள்! பணம் கிடைத்துவிட்ட பிறகு அதைப்போலச் செல்வந்தராக இருப்பது எளிது. அவனுடைய வேந்தாந்தம் செல்வத்தினால் அவனுக்குக் கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்திற்கு ஒரு பொழுதுபோக்கு. அவனை நீ மறந்துவிடு. எத்தனையோ சீமான் வீட்டுப் பெண்களையெல்லாம் அவன் ஒப்பவில்லையாம். கேள் காந்தா, வறுமை நோய்கொண்ட நம்மை அவன் ஏற்றுக் கொள்வானா? அவன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொன்னதும் என் மனம் பட்டபாடு நீ அறியமாட்டாய். அந்த ஊரில், அவன் எதிரில், இருக்க மனம் ஒப்பவில்லை.

பணம், பணம், பணம். அதைத் தவிர உலகம் வேறு எதையும் உள்ளன்போடு பூசிக்கக் காணோம். அது கிடைத்தால் ஊர் திரும்புகிறேன். அந்தச் சோமு பேசும் வேதாந்தத்தைவிட வண்டி வண்டியாக, அப்போது என்னால் பேச முடியும். அந்தக்காலம் வரட்டும், பார்த்துக் கொள்வோம். நீ சோமுவை மறந்து விடு. உன் ‘கதி’ என்னாகுமோ நானறியேன். அறிந்துதான் என்ன செய்ய முடியும்? அப்பாவும் அம்மாவும் கோபித்து வைதால் நீ குறுக்கிட்டு தடுக்காதே. அவர்களுடைய விசாரம் என்னைத் திட்டுவதனாலாவது கொஞ்சம் குறையட்டும்.

இப்படிக்கு,
உன் தம்பி
இராகவன்.

கண்களிலே நீர் அருவியாக ஓடிற்று. இந்தக் கடிதத்தைப் படித்தபோது, வீடு முழுவதும் விசாரம். சோமுவைப் பற்றி நான் எண்ணிக்கொண்டிருந்ததுபோலவே அப்பாவும் அம்மாவும் எண்ணிக் கொண்டிருந்தார்களாம். எல்லோருடைய எண்ணத்திலும் மண் விழுந்தது. என் காதல் பொய்மான் வேட்டையாகி விட்டது. என் மனத்தில் எழும்பிய மாளிகைகள் மண் மேடாயின. கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க நேரிட்டது. என் அழகை நான் சாபித்தேன்; எனக்கு எதற்கு அழகு!

‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தில் கதாநாயகன் இராமுவை, அவன் தாயாரே சீதையைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்லியும், இராமு மறுத்து விட்டான். என் வாழ்க்கையில் என் தம்பியே சோமுவைக் கேட்டுப்பார்த்தும் பயன் ஏற்படவில்லை பாபம்! கேட்கும் முன் என்னென்ன எண்ணினானோ, தமக்கை தங்கப் பதுமை போன்ற அழகுடன் இருக்கிறாள் என்று யாரார் புகழக் கேட்டானோ தெரியவில்லை. தரித்திரத்தால் நான் வாழக்கூடாது. தனவந்தனை மணம் செய்து கொண்டு சுகமாக வாழ வேண்டும், கண்குளிரக் காணவேண்டும் என்று எண்ணியிருப்பான். “என் தமக்கை கணவன் பெரிய தனவந்தன்” என்று கருதியிருப்பான். சகஜந்தானே. அவன் நேரிலே கேட்டும் சோமு மறுத்துவிட்டது என் துரதிர்ஷ்டமா? தலைவிதியா?”

குமாஸ்தாவின் பெண் நாடகத்தை நான் கண்டபோது நினைத்தேன். கதாநாயகி சீதாவோ, இராமுவிடம் தன் காதலைத் தெரிவித்திருந்தால், காரியம் பலித்திருக்கும் என்று கூச்சத்தால் சீதா இராமுவிடம் உண்மை உரைக்கவில்லை. அது தற்கொலையில் முடிந்தது. நானும் அந்தக் கதிதான் அடைய வேண்டுமோ என்று பயந்தேன். கூச்சத்தை மறந்தேன். என் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களைக் கடிதத்தில் எழுதினேன். சாந்தாவிடம் கொடுத்தனுப்பிவிட்டு மார்பு துடிதுடிக்க, கண்கள் மிரள மிரளக் காத்துக் கொண்டிருந்தேன். நெடுநேரங் கழித்து வந்த சாந்தாவின் முகத்தைக் கண்டதும் காரியம் கைகூட வில்லை என்று புரிந்துவிட்டது.