அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
1

இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று - காலடிப் பட்ட இடமெல்லாம்! களம் பலப்பல! கடுவேகமாகப் போரிட்ட வண்ணம், நாடு பல வென்றான்; நானிலம் நடுங்கிடப் போரிட்டான். எங்கும் இரத்தவெள்ளம்; பிணமலை; எலும்புக் குவியல்!! போர்! போர்! போர்! என்று முழக்கம் எழுப்பியபடி, இருபது ஆண்டுகள், எங்கும் எவரும் இவன் நடாத்தும் செயல்கள் பற்றியே பேசித் தீரவேண்டிய நிலைமை ஏற்படுத்திவிட்டான்; இரத்தம் பொங்கிற்று - மலை முகடுகளில், பெரு நகரங்களில், சாலைகளில், சோலைகளில், கடலோரங்களில்.

கிளம்பிவிட்டது இவன் நடாத்திச் செல்லும் பெரும் படை என்று செய்தி வெளிவந்தவுடன், அரண்மனைகளிலே அச்சம்! மாளிகைகளிலே மருட்சி! இல்லங்களிலே திகைப்பு ஏற்பட்டு
விடும்.

எப்பக்கம் பார்த்துப் பாய்ந்திடுமோ, எவர்மீது தாக்குதல் நடத்திடுமோ, என்ன நிபந்தனை விதித்திடுமோ என்ற ஏக்கம் குடிகொண்ட நிலையில், பேரரசர்கள் பீதி கொள்வர்.

‘நேற்றுதானே கிளம்பிற்று! இதற்குள்ளாகவா, காடு மலை கடந்து, ஆறுகளைத் தாண்டி, அழகு நகர் மீது தாக்குதலை நடத்துகிறது அந்தப் படை’ என்று வியந்து கேட்பர் - அவ்வளவு வேகமாக, எத்தகைய இடுக்கண்களையும் கண்டு கலங்காமல், எதர்ப்புகளை முறியடித்தபடி, அவனுடைய படைகள் பாய்ந்திடும்.

பெருங்காற்றைத் தடுத்து நிறுத்திவிடத் தருக்களால் முடிவதுண்டோ - வேரறுந்தன்றோ பெரு மரங்கள் சாய்கின்றன, பெருங்காற்றின் முன்பு! இப்படையும் அதுபோன்றே, எதிர்ப்புகளை முறித்துக் கீழே சாய்த்துவிட்டு, இடியோசை போன்ற வெற்றி முழக்கமிட்டபடி, முன்னேறும் வேகவேகமாக, குறித்த இடம் நோக்கி, விட்ட கணைபோலதாக்கும் சக்தி மட்டுமல்ல, தாங்கிக் கொள்ளும் சக்தியும் நிரம்பக் கொண்ட படை; வெட்டி வீழ்த்த மட்டுமல்ல, வீழ்ந்துபடவும் அஞ்சாது நடமிடுகிறது படை.

பயம்கொண்டு பதுங்க மறுக்கிறது; பசி, தூக்கம், அதனைத் தொட அஞ்சுகின்றன! பாய்வோம், பாய்வோம், மடைகளை உடைத்தெறிந்திடும் வெள்ளம்போல, தீயைப் போல என்று கூறாமல் கூறிக்கொண்டு செல்கிறது; இரத்தம் பொங்குகிறது! இருபது ஆண்டுகள், இதுபோல!
“எதிரியின் படைபலம் மிக அதிகம்.”

“பொருள் என்ன? விளங்குகிறதா? நம்மிடம் எதிரிக்கு உள்ள பயம் அவ்வளவு. பெரும்படை திரட்டித்தான். தனக்கு வர இருக்கும் ஆபத்தைத் தடுத்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறான். வீரதீரமாகப் போரிடுபவர்கள் என்பதை உணர்ந்து கொண்டு விட்டனர். மாற்றார் என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமோ! படை வருகிறது என்றதும் தொடை நடுக்கம் ஏற்பட்டுவிடுகிறது மாற்றார்களுக்கு. இந்த நிலை கண்டு. கெக்கலி செய்திட வாரீர்! கிலிகொண்டு ஒரு பெருத்த கும்பல் கூடிவிட்டிருக்கிறது. விரட்டி அடித்திடக் கிளம்புவீர், வெற்றி நம்மை அழைக்கிறது! வீரர்களுக்கு அழைப்பு, கோழைகளுக்கு அல்ல! கோழைகளா!! கோழைகள், இந்தக் கொடியின் கீழ் ஏது!! இது வீரர் படை, வெற்றிப்படை; தீரர் படை, தியாகப் படை!!”

களம் நோக்கிப் பாயும்போது படை வரிசையிலே, பாடி வீடுகளிலே இதுபோன்ற உரையாடல்!
எதிரியின் படைபலம் அதிகம் என்று கேள்விப்பட்டவுடன் என்ன ஆகுமோ நமது கதி என்ற ஏக்கம் கொள்வதில்லை. எதிரியின் படை அதிகமாகவாக, வேட்டை மும்முரமாகும், விருதுகள் விதம்விதம் பெறலாம், விருந்தின் சுவை மிகுதியாகும் என்று எண்ணிக் களித்திடுவர், அந்தப் படையினர்.

கிளம்பிற்று காண் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை!! - என்று கவிகள் சிந்து பாடிடுவர், அத்துணை வீரம் கொப்புளிக்கும் படையினரிடம்! வீரம் கொப்புளிக்கும் நிலையினர் பாய்ந்திடும் இடமெங்கும். இரத்தம் பொங்கும்!

வெறியோ? மண்டலங்களைத் தாக்கிட வேண்டும், மாடுமனை அழித்திட வேண்டும், இரத்தச் சேற்றிலே புரண்டிட வேண்டும் என்ற வெறியோ எனில், வெறி அல்ல! எமது கொடி எங்கணும் பறந்திட வேண்டும்! எமது ஆணைக்கு எவரும் அடங்கிடுதல் வேண்டும்! எமக்கு நிகர் எவரும் இல்லை என்ற பேருண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றனர் எழுச்சி கொண்டிருந்த படை வீரர்கள் - கொண்டிருந்தனரா! எழுச்சி ஊட்டப்பட்டிருந்தது அவர்களுக்கு!

வெறி - எழுச்சி - ஆர்வம் - ஆவல் - இவை வெவ்வேறு வார்த்தைகள் - வெறும் வார்த்தை மாற்றங்கள் மட்டுமா இவை! நிலைமை மாற்றங்கள்? நினைப்பிலே ஏற்படும் மாற்றங்கள்! போக்கிலே மூட்டப்படும் மாற்றங்கள்! அந்த மாற்றங்களுக்கு ஏற்ப விளைவுகள் வெவ்வேறாகின்றன.

தாயகத்தைத் தருக்கர் தாக்கிடும்போது, நாட்டுப் பாதுகாப்புக்காக, நாட்டு உரிமைப் பாதுகாப்புக்காகப் போரிடும் படையினர் காட்டிடும் வீரம், எழுச்சியை அடிப்படையாகக் கொள்கிறது.

பிறிதோர் நாட்டின்மீது, படை எடுத்துச் சென்று, தாக்கிப் பிடித்திடலாம், தாள் பணியச் செய்திடலாம், கொன்று குவித்திடலாம், கொள்ளை அடித்திடலாம், சிட்டுப்போல, மல்லிகை மொட்டுப்போல, உள்ள மெல்லியலார் கிடைப்பர்; அலறித் துடித்திடுவர் அதரம் சுவைத்திடும்போது என்ற எண்ணம் கொண்டிடுவோர் வெளிகொண்டலைகின்றனர் எனலாம்.

நீதிக்காக, நேர்மைக்காக, உரிமை காத்திட, அநீதியை அழித்திடக் கிளம்பும் படை வீரதீரத்துடனும், தியாக உணர்வுடனும், தாளின்கீழ் வீழ்ந்து தாசராவதைக் காட்டிலும், மண்ணிலே மாற்றான் வாளால் வெட்டுண்டு நம் தலை உருளட்டும், கழுகு உடலைக் கொத்தித் தின்னட்டும், செத்துத் தொலைந்தான் சீறிப் போரிட்டவன் என்று கூறிக் கேலி பேசட்டும், தாக்க முனைந்தோம், தாள் தொழுதான், உயிர்ப்பிச்சை தாரும். உமக்கு நான் எதனையும் உடைமையாக்குகிறேன் என்று கெஞ்சினான் என்று எதிரி பேசிடும் பேச்சைவிட, சாவு, கொடுமையுள்ளது அல்ல என்ற உணர்ச்சியுடன் போரிடும் படை, மண்ணுக்காக அல்ல, மானாங்காத்திட, மாண்பு நிலைத்திடப் போரிடும் படை என்றும் நிலைத்த புகழ் பெறுகிறது. பாவாணர்களின் புகழாரம் சூட்டப்பட்டு, பலப்பல தலைமுறைகளுக்குப் பின்பும், வீடுதோறும் பேசப்படும் கதைகளுக்கும் பாடப்படும் கவிதைகளுக்கும் உறுபொருளாகிறது, அவர் காட்டும் வீரம்!

படைகளைக் கொன்று குவித்து, மண்டலங்களை மண் மேடுகளாக்கி, மணிமுடிகளைக் காலால் உதைத்து விளையாடி, நகர்களைக் கொளுத்தி, நாசத்தை நடமிடவிட்டுக் கொள்ளை அடித்து, குமரிகளைக் கற்பழித்து, அடிமை கொண்டு, எஞ்சியோரைச் சித்திரவதை செய்து, சரிந்துவிழும் கட்டிடம், அதன்கீழ் சிக்கிக் கூழானோர் தொகை, பற்றி எரியும் வீடுகள், ஆங்கு பதறிக் கருகிடும் மக்கள் - இதைப்போன்ற நெஞ்சம் உருக்கும் நிலைமைகளைக் கண்டு, கொட்டிச் சிரித்திடும் போக்கு, வீரம் அல்ல - வெறி!

எழுச்சி கொண்டவன் வீரன்!

தியாக உணர்வுடன் போரிடுபவன் மாவீரன்!

வெறி உணர்ச்சியால் ஆட்டி வைக்கப்படும் நிலையில் போரிடுபவன், மாவீரன் ஆகான் - மனிதன் மிருகமாகிறான்.

ஒரு நாட்டுப் படைபற்றி எதிரி நாட்டுப்படை கூறிய கருத்தினை ஆதாரமாகக் கொண்டு பெறப்படும் எண்ணம் முற்றிலும் உண்மையானது என்று கூறுவதற்கில்லை. போர் நடந்திடும்போதும், அதை அடுத்துச் சில ஆண்டுகள் வரை
யிலும்கூட, உலவிடும் கருத்துக்களைக் கொண்டு, உண்மை என்ன என்பதனைக் கண்டறிதலும் முடியாத காரியமாகும்.
போர் குறித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பொது நிலையினர், ஆய்வாளர்கள், விருப்பு வெறுப்பற்ற நிலையிலே வெளியிடும் கருத்துகளே, பெரும் அளவு உண்மை நிலையை எடுத்துக் காட்டுவனவாக இருக்க முடியும்.

ஒரு நாட்டுக்கும் மற்றோர் நாட்டுக்கும் ஏற்பட்டுவிடும் தொடர்புபற்றி, மூண்டுவிடும் போர்பற்றி, எல்லாக் காரணங்களும், எல்லா உண்மைகளும், எப்படியும் வெளிவந்தே தீரும் என்றுகூடக் கூறுவதற்கில்லை. எத்தனையோ உண்மைகள் வெளிவராமலே போய்விடக் கூடும். மூச்சடக்கி மூழ்கி மூழ்கி எடுத்தாலும், கடலிலே உள்ள எல்லா முத்துக்களையுமா எடுத்து விடமுடிகிறது!!

போர் என்பதே வெறிதானே - மனிதன் நிலைதடுமாறிடும் போதும் - அறநெறி மறைந்திடும்போதும் விளைவதே போர்! போர்! போர் எந்த நோக்கத்துக்காயினும் சரி, காரணம் எத்துணை உண்மையானதாக இருப்பினும், நோக்கம் எவ்வளவு தூய்மையானதாக அமையினும், போர் வெறுக்கத் தக்கதே! கண்டிக்கத்தக்கதே! ஒருநாடு இழைக்கும் கொடுமை, கொண்டிடும் அநீதியான போக்கு என்பவற்றைக் கண்டிக்க, களைந்தெறிய நடத்தப்படும் போர் எனினும் கூடப், போர் மனித குலத்துக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதிலே ஐயமில்லை. எத்துணை புனிதத்தன்மையுடையது என்று எடுத்து விளக்கப்பட்டாலும், போர்ச்சூழ்நிலை ஏற்பட்ட பிறகு, மக்களிடம், விரும்பத்தகாத வெறுப்புணர்ச்சிகள், கிளம்பிடு வதைத் தடுக்க இயலுவதில்லை - அதனைக் கவனிக்கும்போது போர் மனித குலத்துக்குக் கேடு பயக்கும் என்பதை மறுக்க இயலாது என்று பொது நீதி பேசுவோர் உளர்; அந்தப் பொது நீதியை நிலைநாட்டுவது முடியாததாக இன்று வரை இருந்துவருகிறதே தவிர, அதன் மாண்பினை, உண்மையினை, மறுத்துப் பேசுவார் எவரும் இல்லை.

இந்த வையகம் வலிவுள்ளவனுக்கே! எவன் வலிவுள்ளவன் என்பதனை அவ்வப்போது எடுத்து விளக்கியாக வேண்டி நேரிட்டுவிடுகிறது; போர் அக்காரணம் பற்றியே தேவைப்படு கிறது; போரின்போது வலிவு மிக்கவன் வாகை சூடுகிறான்; ஆற்றல் அற்றவர்கள் அடிபணிகின்றனர்; அவனிக்குப் புதிய தோர் ஆற்றலரசு கிடைக்கிறது - போரின் விளைவு இஃதே என்று கூறுவோரின் தொகை மிகக் குறைந்துபட்டுவிட்டது. உள்ளனர், இப்போதும் ஒரு சிலர் - போர் தவிர்க்க முடியாதது - என்று கூறிட! தேவைப்படுகிறது என்றுகூடக் கூற முனைவர், அறிவுத் தெளிவு பெற்றநிலை இன்று அவனியில் இல்லாதிருந்தால்.
போரற்ற, புகைச்சலற்ற ஓர் உலகு, பொன்னுலகாகும் - ஐயமில்லை!

மலர்தரும் செடி கொடிகளும், கனி தரும் மரங்களும் கொண்டதாகவே தோட்டங்கள் இருத்தல் வேண்டும் - பூங்காக்கள் கொண்டதாகவே புவி இருக்க வேண்டும் என்று விரும்புவதும் கூறுவதும், தவறு அல்ல - அந்த நிலைக்காகப் பாடுபடுவது தேவையானதுங்கூட! ஆனால் மலர்த்தோட்டத் துக்குப் பக்கத்திலே கள்ளிக் காளான் முளைத்துவிடுகிறது - பக்கத்திலா? - தோட்டத்திலேகூட!! என்ன செய்யலாம்? கனி குலுங்கும் மரத்தைக் கருமந்தி பிடித்தாட்டுகிறது; கடுங் காற்றுக் கிளம்பி மரங்களைப் பெயர்த்தெடுத்து விடுகிறது!! என்ன செய்வது?

கேடுகள் முளைக்கும்போது, அவற்றினை எதிர்த்து வீழ்த்தி, நல்லனவற்றைப் பாதுகாத்துத் தீர வேண்டும்!

அதுமட்டும் போதாது - கேடுகள் மீண்டும் எழாதபடி, பாதுகாத்து ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும்.

இது தேவையானதுதான் - இதனை வற்புறுத்த, விளக்கம் அளிக்க, இதற்கு ஆதரவு திரட்டிடத் தேவையா - எவரும் இசைவரே என்று கூறத்தோன்றுகிறது. ஆனால் இதிலே உள்ள சிக்கல் யாதெனில், களைந்தெறியப்பட வேண்டிய கேடு எது - என்ன இலக்கணம் கண்டு ஒன்றினைக் கேடு என்று கொள்ள முடிகிறது என்பதுதான்.

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள், நாடு பலவற்றைத் தாக்கி--, அரசு பலவற்றைக் கவிழ்த்து, பல இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தது; கொடுமை என்பதற்கு வாதங்கள் தேவையா? மகனை இழந்த தாயின் கண்ணீர் போதாதா! தந்தையை இழந்த மதலையின் கதறல் போதாதா! தாலி இழந்த தையலரின் தவிப்புப் போதாதா! எனின் - எத்தகைய போரிலும் - அறம் காத்திட, உரிமை பெற்றிட - மானம் காத்திட - நடத்தப்படும் போரிலும், நெஞ்சு நெக்குருகச் செய்யும் இசை காணப்படுகின்றன! எனவே, இவை காணப்படும் போர் கொடுமை நடத்தப் பட்டிருக்கிறது என்பதற்குப் போதுமான சான்று என்றால், எல்லாப் போரிலும் இவை நேரிட்டு விடுகின்றன. எனவே இவற்றைக் கொண்டு, கேடு என்று கண்டறிய இயலவில்லை.

எனவே, சிக்கல் நிரம்பிய பிரச்சனை, கேடு எது என்பதனைக் கண்டறிவதே!

இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிடச் செய்ததே கேடன்றோ, கொடுமையன்றோ, அக்கிரமமல்லவோ, அநீதியன்றோ! - என்போருக்கு, ஆம்! ஆம்! இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று! மறுக்கவில்லை! ஆனால், கேடுகளைக் களைய, மீண்டும் கேடுகள் ஏற்படாமலிருக்கும் வலிவான ஓர் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, இரத்தம் பொங்கிட இருபது ஆண்டுகள் போர் நடத்தினேன் - வெறும் வெற்றிகளுக்காக அல்ல - விருதுகள் பெற அல்ல - வெறியினால் அல்ல! போர் நடத்திப், பொல்லாங்கு மூட்ட வல்லவர்களை அடக்கி ஒடுக்கி, ஒரு பெரும் பேரரசு அமைத்து, அந்தப் பெரும் பேரரசின் கீழ் எல்லா மக்களும் வாழ்ந்து, வளம்
பல பெற்று, நீதி நிலைத்திட, நிம்மதி ஓங்கிடத்தக்க நன்னிலை பெறவேண்டும் என்ற நோக்கமே கொண்டேன் - என்றுதான், இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிட வைத்த இணையில்லாப் போர் வீரன், தளர்வு காட்டாத படைத்தலைவன், அச்சமற்ற பெருவீரன், ஆற்றலுக்குத் தனி இலக்கணம் வகுத்துக் காட்டிய அருந்திறன் மிக்கோன் நெப்போலியன் கூறினான். இருபது ஆண்டுகள் இரத்தம் கொட்டப்பட்டதற்காகத் தன்னை மன்னிக்கும்படி கேட்டானில்லை. என் நோக்கம் நல்லது; கணக்குப் பொய்த்துப் போய்விட்டது. அவ்வளவு தான்! - என்று மட்டுமே கருத்தறிவித்தான்.

“இருபதாண்டுகள் இரத்தம் பொங்கச் செய்தவனா? ஐயோ! அத்துணை கொடியவனா! மனிதகுலத்தைக் கருவறுக்க வந்த மாபாவியா! - என்று கண்டித்து, அவன் கல்லறை மீது காரித்துப்புகின்றனரோ, இன்று? இல்லை! கல்லறையைக் காணும்போது, கண்களில் நீர் துளிர்க்கிறது. அவன் நடத்திய போரிலே கொட்டப்பட்ட இரத்தம் பற்றி அல்ல, அவன் காட்டிய வீரம்பற்றி, போர் முறைகளை வகுத்த நேர்த்தி பற்றி, பெற்ற வெற்றிகளைப் பற்றி, அவனைச் சுற்றி அமைந்திருந்த புகழொளி பற்றி எண்ணுகின்றனர் - எண்ணியதும், நீர் துளிர்க்கிறது, கண்களில்! நானிலத்தை நடுங்க வைத்த ஓர் மாவீரன் கல்லறை முன் நிற்கிறோம் என்ற உணர்வு; வலிவு பெறுகிறது; வாழ்த்தத் தோன்றாவிட்டாலும், வசைபாட முடியவில்லை, வணக்கம் கூற முனைகிறோம்.

இந்தக் கல்லறையிலா உள்ளான், கடும்போர் பல புரிந்த நெப்போலியன் - காவலர் பலரைக் கவிழ்த்தவன் - புதிய காவலர் களை நொடிப்போதிலே உண்டாக்கிக் காட்டியவன். இந்தக் கல்லறைக்குள்ளா அடைபட்டுக்கிடக்கிறது, பல நூற்றாண்டுகளாக எங்கும் எவரும் கண்டறியாத வீர உணர்ச்சி - போர்த்திறன்!! என்று வியப்படைகின்றனர்.

கல்லறை காட்சிப் பொருளாகிவிட்டது.

கல்லறையைக் கவனிக்கத் தொடங்கி விட்டோம் - கடைசியாகக் காணவேண்டிய கல்லறையை; முதலிலேயோ!!

உலகினரில், அரசு நடாத்துவோர் ஆற்றல் அறிவோர், படை நடாத்துவோர், போர்முறை வகுப்போர் என்பவர் பலரும், சுட்டி, கல்லறை காண்மின்! கல்லூரிகள் பலவும் கற்பிக்க இயலாத கருத்துகளைப் பெற்றிடலாம் - அத்தகைய கல்லறை இது, என்று சுட்டிக்காட்டிடத் தக்கதாகிவிட்டது - நெப்போலியனின் கல்லறை! ஆனால், காலத்தை வென்று நிற்கும் கல்லறைக்கு உரியவனாகிவிட்ட நெப்போலியன், படுத்துறங்கிய தொட்டில்?

தங்கத்தாலானது அல்ல! மணிகள் இழைக்கப்பட்டது அல்ல! மாளிகைக் கூடத்திலே அதனை ஆட வைத்து மதுர கீதமிசைத்துத் தாதிமார் பாடவில்லை - எத்தனையோ ஏழைக் குழந்தைகளிலே அதுவும் ஒன்று. கைகளை ஆட்டுகிறது! கால்களால் உதைக்கிறது! உற்றுப் பார்க்கிறது! கலகலவெனச் சிரிக்கவில்லை; பார்ப்பவர், மறுபடியும் பார்க்க விரும்புவர் - அதுபோன்றதோர் கவர்ச்சித் தோற்றம் இருக்கிறது. ஆனால் எத்தனையோ குழந்தைகள் உள்ளன, அந்தத் தீவினில்!! கார்சிகா எனும் தீவில்!

தீவினில் பிறந்தவன் வேறோர் தீவினில் அடைபட்டு இறந்துபடப் போகிறான் என்றா கண்டார்கள்.
தீவினில் பிறந்த இவன், நாடு பல ஆளப்பிறந்தவன் என்றும் அன்னை எண்ணவில்லை; முடிவிலே எலினா தீவிலே சிறை வைக்கப்பட்டு, இறந்து படப்போகிறான் என்ற எண்ணம் எழக் காரணமும் இல்லை.

கார்சிகா தீவிலிருந்து கிளம்பி, எலினா தீவு போய்ச் சேர்ந்தான் - எத்தகைய பயணம்! இடையிலே என்னென்ன வகையான தங்குமிடங்கள்! பெரும் படைகள் போரிட்ட களங்கள்! கோட்டை கொத்தளங்கள்! கொட்டும் குளிர் சூழ்ந்த சதுப்புகள்! பயங்கரச் சரிவுகள்! மலையுச்சிகள்! பெருநகரங்கள்! அரண்மனைகள்! உல்லாசக் கூடங்கள்! பூங்காக்கள்! புலவர் குழாம் கூடும் கழகங்கள்! கூடாரங்கள்! குழலியர் கொலுவிருக்கும் மணிமாடங்கள்!!

எங்கெல்லாமோ சென்றான் - எத்துணை எத் துணையோ நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டான்!

கடைசியில், ஒரு தீவிலே பிறந்தவன் மற்றோர் தீவிலே இறந்துபடுகிறான்!

அன்னையின் மடியிலே தவழ்ந்திருந்தான் பிறந்த தீவில், கார்சிகாவில்! இறந்துபோது, பிடித்தடைத்த மாற்றாரின் முகாமுக்குப் பக்கத்திலே, இறுதிவரை அவனுடன் இருக்கும் வாய்ப்பு பெற்ற ஆருயிர் நண்பர்கள் அருகிருந்து கண்ணீர் மல்கிட இறந்து பட்டான் - நீங்காத துயிலுற்றான் என்றனர் உடனிருந்தோர்.
மண்டலங்கள் பலவற்றை மருட்டிய மாவீரனான மகன் இறந்துபட்ட இடத்துக்கு நெடுந்தொலைவிலே, பெற்ற மாது இருந்தாள். நெப்போலியனைச் சிறைப்படுத்தியது மட்டுமல்ல, அவன் உடன் சென்றிருக்க, அன்னைக்கு அனுமதி அளிக்க, அதிபர்கள் கூட்டுக் கழகம் மறுத்துவிட்டது.

நெடுந்தொலைவிலே கண்ணீர் சிந்தியபடி, தாய்!

துணைவி? அரண்மனையில்!! அரசகுமாரி, மேரி லூயி ஆஸ்ட்ரியாவில்!

மகன்? இளவரசன்!! - அவனும் ஆஸ்டரியாவில்!

தாய் இல்லை! மனைவி இல்லை! மகன் இல்லை! நெடுந்தொலைவிலே இருக்கிறார்கள். எலினா தீவிலே அவன் இறந்துபடுகிறான் - ஓர் நீர் ஊற்றுப் பக்கத்தில் மரங்கள் அடர்ந்த சிறு தோட்டத்தில், புதை குழி!! அந்த இடத்தைக் கூட, நெப்போலியன், முன்னதாகவே கண்டு வைத்திருந்தான் - காவல் காத்திருந்த அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தான்.

“என் உடலை, பாரிஸ் பட்டினத்துக்கு அனுப்பச் சொல்லிக் கேளுங்கள்; மறுப்பார்களானால், நமக்குப் பருகும் நீர் கிடைத்து வந்ததே, நீர்ஊற்று, அதற்கு அருகாமையில், என் உடலைப் புதைத்துவிடச் சொல்லுங்கள்” - என்று, நெப்போலியன், உடனிருந்த நண்பர்களிடம் கூறினான்.
“இந்த நாட்டுக்கு இவனை மன்னனாக்கினேன்! இந்த மன்னனை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் மண்டியிடச் சொல்லு! இத்தனை இலட்சம் வீரர்கள் புறப்பட்டாக வேண்டும்!” என்ற இதுபோன்ற ஆணைகளைப் பிறப்பித்து வந்த நெப்போலியன், நான் இறந்துபட்டதும், என் உடலை இன்ன இடத்திலே புதைத்து விடுங்கள் என்றும் ஆணை கூறிய பிறகுதான் ஆவி பிரிந்தது.

தீவிலே பிறந்தான் - தீவிலே இறந்தான்! ஆனால் புதைகுழியினின்றும் உடலை எடுத்துச் சென்று, பாரிஸ் பட்டணத்திலே, அரச விருதுகளுடன், மற்றோர் கல்லறையில் அடக்கம் செய்தனர், பிரான்சு நாட்டு ஆளவந்தார்கள் - சில ஆண்டுகளுக்குப் பிறகு, தீவிலேயே உடலும் இருந்துவிடவில்லை - புகழொளி மிகுந்த பாரிஸ் பட்டினம் கொண்டு செல்லப்பட்டது.

தீவிலே பிறந்தான் - தீவிலே இறந்தான்! ஆனால் கார்சிகா தீவு போதுமானதாக இருக்க இயலுமா, அளவற்ற ஆற்றல் கொண்டோனுக்கு! பிரான்சு சென்றான்! ஐரோப்பா அழைத்தது! எகிப்து அழைத்தது! வீரக் கோட்டங்களில் உலவினான்!

தீவிலே இறந்தான் - எலினா தீவில்! ஆனால், அவனின் போர் கண்டு அதிசயிக்கத்தக்க ஆற்றலரசனுக்குப் போதுமான இடமா, எலினா தீவு! எப்படிப்பட்ட கல்லறை! அதற்கு ஏற்ற இடம், பாரிஸ்! இந்தப் பயணம், கேட்போர் வியப்படையத்தக்க நிகழ்ச்சிகள் கொண்ட காப்பியமாகி விட்டிருக்கிறது.

“புறப்பட்டு வருகிறேன் மகனே! நெடுந்தொலைவு என்கிறார்கள். வழியிலே இறந்துவிடுவேன் என்று சொல்லினார்கள். இறந்தாலும் பரவாயில்லை; பயணத்திலே இறந்தால், இப்போது இருப்பதைவிட உனக்கு அருகாமையில் இருப்பேனல்லவா! அதுபோதும் மகனே! புறப்படுகிறேன்” - என்று, நெப்போலியனுடைய தாயார் லெடிசா அம்மையார் கடிதம் அனுப்பினார்கள் - எலினா தீவுக்கு.

கடிதம், எழுதப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு நெப்போலினுக்குக் கிடைத்தது. படித்துப் படித்துப் பாகாய் உருகினான். அன்னையோ, நெடுந்தொலைவில், ரோம் நகரில்! லினா தீவு சென்று மகனுடன் தங்கி இருக்க அனுமதி கிடைக்கவில்லை. மகனைப் பிரிந்து மனமுடைந்த நிலையில் லெடிசா, இருந்துவர நேரிட்டது.

குடும்பப் பாசம் மிகுதியும் கொண்டவர்கள், கார்சிகா தீவு வாழ் மக்கள். கார்சிகா தீவு, பிரான்சு நாட்டு ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது - ஆனால், அது தனியான தீவு! அந்தத் தீவு, அரசுரிமை பெறவேண்டும் என்று விடுதலைக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில்தான், நெப்போலியன் பிறந்தான். அவனுடைய தந்தை, விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர். அந்தக் கிளர்ச்சியை நடத்திவந்த பாயொலி எனும் தலைவனுக்குத் துணை நின்று போரிட்டவன்.

தொட்டிலிலே நெப்போலியன் கிடந்தபோதே, போர்ச் சூழ்நிலை, அந்தத் தீவிலே.