அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
4

இடுப்பொடிந்தவர்கள் இருபது முப்பது தங்கப் பதக்கங்களை அணிந்து கொண்டு, பெரும் படைத் தலைவர்கள் எனும் பட்டம் சுமந்து கொண்டுள்ளனர். - இதோ ஓர் இளைஞன் - வீரதீரப் போர் புரிகிறான் - வெற்றிக்கான திட்டம் தருகிறான் - வெந்தழலாகிறான் எதிரிகளுக்கும் - இப்படிப் பட்டவர்கள் அல்லவோ படைகளை நடத்திட வேண்டும் - என்று அங்காடியிலும் அலுவலகங்களிலும் பேசலாயினர். இனி, நெப்போலியனுக்காக, பரிந்து பேசி இடம் தேடிக் கொடுக்க, ஒருவரும் தேவை இல்லை. அவன் ஆணையின்படி அஞ்சாது போரிட்டு வெற்றிபெற்ற படையினர் போதும், அவன் புகழ் பாட. புதிய விண்மீன் ஒளிவிடத் தொடங்கிவிட்டது என்பதனைப் பலரும் உணர்ந்தனர். வாய்ப்பு அளிக்கப்பட்டால், வாகை சூடிடலாம் என்ற நம்பிக்கை பலப்பட்டது நெப்போலியனுக்கு.

ஆனால், அவனுக்கான முன்னேற்றப் பாதை, பள்ளம் படுகுழியற்றதாக அமைந்துவிடவில்லை. அவ்வளவு எளிதாகவும் ஒரு புதியவனுக்கு இடம் அளித்துவிடப் பலருக்கு மனம் ஒப்பவில்லை.
அரசு நடாத்துவோர் போர்க் கருவி பெறும் காரியமாக நெப்போலியனை, ஜெனோவா நகர் அனுப்பி வைத்தனர். அங்கு இருக்கும்போது, யாரோ மூட்டிவிட்ட கலகத்தால், அரசினர் நெப்போலியன்மீது ஐயம் கொண்டனர் - ஏதோ சதி நடத்துகிறான் என்று கூறிச் சிறைப்படுத்தினர்.
‘வெற்றி! வெற்றி!’ என்று முழக்கமிட்டான் இளைஞன் - பாபம் சிக்கிக் கொண்டான் வசமாக - காலமெல்லாம் சிறையோ அல்லது சுட்டுத் தள்ளிவிடுவார்களோ, என்ன கதியோ இவனுக்கு என்று ஏளனமாகச் சிலரும், இரக்கம் காட்டிப் பலரும் பேசினர்.

நெப்போலியன் மனம் வெகு பாடுபட்டிருக்க வேண்டும். தூய்மை பற்றி ஐயப்பாடு கிளப்பப்படும்போது, உள்ளம் வெதும்பத்தானே செய்யும். அவ்விதமான மன வேதனையின் போதெல்லாம், நெப்போலியன் வாழ்க்கையையே வெறுத்துப் பேசுவதும், தற்கொலை பற்றி எண்ணுவதும் வாடிக்கை.

என்ன வேலை இருக்கிறது இந்த உலகில். எப்படியும் சாகப் போகிறேன் ஓர்நாள் - என்னை நானே கொன்று கொள்வது சாலச்சிறந்ததல்லவா! அறுபது ஆண்டு முதியவனாகிவிட்டிருப்பின், பரவாயில்லை; இவ்வளவு காலம் இருந்ததுபோல் இன்னும் சிறிது காலம் இருந்துவிடலாம் என்றுகூட எண்ணிக் கொள்ளலாம். நான் முதியவனல்ல; தொல்லைககள், மனச்சங்கடங்கள் அடுக்கடுக்காக, எனக்கு மகிழ்ச்சி திருப்தி இல்லை. ஒருபலனு மற்ற இந்த வாழ்வு இருப்பானேன் - முடித்துக் கொண்டால் என்ன? இவ்விதமாக, மனம் வெதும்பி எண்ணுகிறான், நெப்போலியன்.
உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் - அவற்றைச் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், எண்ணங்கள் நச்சரவுகளாகி இதயத்தை அல்லவா கடித்து, பிய்த்துத் தின்னத் தொடங்கும்? அந்த நிலை நெப்போலியனுக்கு.

அதிலும், துரோகிப் பட்டம் வேறா? செ! என்ன உலகம் இது! - என்று கூறிக் குமுறுகிறான். நண்பர்கள் சிலர், சிறையிலிருந்து தப்பி ஓடிவிடும்படிச் சொல்கிறார்கள். செவி சாய்க்க மறுக்கிறான்.

“நாட்டுக்குத் துரோகியாக என் தந்தையே மாறினாலும் அவரைக்கூடக் குத்திக் கொன்று போடுவேன். என்னைத் துரோகி என்று தூற்றுவதா! என்று தளைகளை நீக்கி, நான் குற்றமற்றவன் என்பதை ஏற்றுக் கொண்டு விடுதலை அளியுங்கள். அடுத்த கணம், என்னைச் சாகச் சொல்லுங்கள் நாட்டுக்காக. தயார்! மகிழ்ச்சி! சாவுக்கு அஞ்சுபவன் நான் அல்ல! களத்திலே, மரணத்தின் பிடியில் பலமுறை சிக்கிக் கொண்டவன், நான்” என்று நெப்போலியன் நண்பனுக்கு எழுதுகிறான்.

பெரியதோர் ஆபத்து, நெப்போலியனுக்கு ஓர் எதிர் காலம் இல்லாமல் செய்துவிடக் கூடிய பழி, எப்படியோ ஒரே வாரத்திலே துடைக்கப்பட்டு, நெப்போலியன் விடுதலை பெறுகிறான்.

நாடு பல காலடி வீழத்தக்க போர்த் திட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு, உலவுகிறான் மாவீரன் - மதிப்பளித்து ஏற்றக் கொள்வார் இல்லை. வாழ்க்கையிலே மகிழ்ச்சியாவது உண்டா? இல்லை. பணமுடை! சோம்பிக்கிடக்க வேண்டிய நிலை! அண்ணன் ஜோசப் பரவாயில்லை - வணிகனின் மகளை மணந்துகொண்டு, சொத்து சுகம் பெற்று இருக்கிறான் - நெப்போலியனுக்கு? டிசயரியிடம் கொண்ட காதல் கைகூட வில்லை! பணத்தொல்லை! அண்ணனிடம் சிறிதளவு பொறாமைகூட ஏற்பட்டது.

நெடுங்காலம் அடைபட்டுக் கிடக்கும் பொன், என்றேனும் ஓர்நாள் வெளியே வந்திடுவது காண்கிறோம் - அதுபோலவே, மங்கிக் கிடக்கும் ஆற்றல், வெளிவர வாய்ப்புக் கிடைத்தது.
அரசாளும் குழுவினருக்கும் பாரிஸ் நகர மக்களுக்கும் பகை! குழுவினருக்குப் பாதுகாப்பு அளித்திடும் பொறுப்பு, நெப்போலியனிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேற்று நாட்டவரை வீழ்த்துவதிலேயே விருதுகள் கிடைக்கும் - இது உள்நாட்டிலேயே ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும் வேலை, இதுதானா, எனக்கு? மலை முகடு தாவி மாற்றானை வீழ்த்த வல்ல என்னை, காவல் காத்திடச் செய்கின்றனர் - கலகம் விளைவிக்கும் கும்பலை அடக்கச் சொல்லி, நாடாளும் பொறுப் பாளர்களின் வீரம்! - என்று எண்ணி, உள்ளூர சிரிக்கிறான்; உலகாளும் ஆற்றலை உள்ளத்தில் அடக்கி வைத்துக் கொண்டுள்ள வீரன்.

பீதி கொண்ட ஆளும் குழுவினரிடம், ஆர்ப்பரித்து எழுந்து, அமளி மூட்டிடும், கும்பல் மோதிக் கொள்ள வந்த போது, நெப்போலியன், கலகக்காரர்கள்தானே, கைஒலி கேட்டாலே சிதறி ஓடுவர் என்று இருந்துவிடவில்லை - கடுமையாகத் தாக்கினான் - பலரைச் சுட்டு வீழ்த்தினான்! துணிவு! துரிதமான நடவடிக்கை!!

லூயி மன்னன், புரட்சிக்காரர்களால் பிடித்திழுத்துச் செல்லப்பட்ட நாட்களிலேயே, நெப்போலியன், நண்பர் சிலரிடம் மெல்லிய குரலில் கூறியிருக்கிறான். கண்டதைக் கையில் எடுத்துக் கொண்டு, காட்டுக் கூச்சலிடும் கும்பலின் முன்வரிசையிலே உள்ள சிலநூறு பேர்வழிகளை, மன்னர் படையினர் சுட்டுத்தள்ளி இருந்தால், பின்வரிசை யாவும் பீதி அடைந்து, சிதறி ஓடி இருக்கும். தவறிவிட்டார்கள் மன்னர் தரப்பினர் என்றான்.

மன்னர்களின் மமதையும் சீமான்களின் செருக்கும் நெப்போலியன் மனத்திலே வெறுப்பை மூட்டியதுபோலவே மக்களின் காட்டுப்போக்கும் கடுங்கோபத்தை மூட்டிற்று.

“மக்களாம், மக்கள்! என்ன தெரியும், அப்பாவிகளுக்கு? ஆயிரம் அறிவுரை பேசட்டும்; திருந்துவார்களா? அமைப்புகளை மேலும் மேலும் செம்மைப்படுத்தட்டும்; நல்வாழ்வு பெறுவார்
களா? ஒருக்காலும் இல்லை. மக்களுக்குத் தேவைப்படுவது, தத்துவங்களுமல்ல, விதவிதமான அமைப்புகளிலே இடமும் அல்ல! அவர்களுக்குத் தேவை, அவர்கள் போற்றத்தக்க, புகழ்மிக்க ஒரு தலைவன்! பரம்பரை காட்டியோ பணத்தைக் காட்டியோ புகழ் பெற்றவர்களை அல்ல; ஆற்றலைக்காட்டி, பெற்ற வெற்றிகளைக் காட்டி ஒரு தலைவன் புகழ் ஒளியுடன் நின்றால் போதும், மக்கள் அவன் ஏவலம்படி நடந்திட போட்டியிட்டுக் கொண்டு வருவார்கள். இது நெப்போலியன் கொண்டிருந்த கருத்து. மக்களை மதியாத மாமன்னர்களை விரட்டி அடித்து, மக்களாட்சி அமைத்த நாட்கள் - அதே பிரான்சு - அங்கு மக்களை மரப்பாச்சிகள் என்று கணக்கிடும் போர்வீரன் - அவன் புகழ் பெறுகிறான்! பொருள் என்ன? மக்களாட்சி மறைகிறது. மாவீரன் காலடி வீழ்ந்து, அவன் கட்டளைப்படி நடக்கும் முறை வெளிவருகிறது என்பதுதான்.
இந்தச் சம்பவம், நெப்போலியனுக்கு ஒரு புதிய இடம் பிடித்துக் கொடுத்திட மட்டும் பயன்படவில்லை. ஆட்சிக் குழுவில் அமர்ந்து அமுல் நடத்தும் பொறுப்பாளர்கள், எவ்வளவு கோழைகள், முதுகெலும்பு அற்றவர்கள் என்பதைத் தெளிவாக நெப்போலியன் உணர்ந்து கொள்ள வைத்தது.

பெரிய கூட்டமாம்! துப்பாக்கியுடன் வருகிறார்களாம்! - என்று பீதியுடன் பேசினர், நாடாள்வோர். என்ன நடக்கும்! எத்துணை திகில்! இவ்வளவுதானா இவர்கள் - இதுகள்! போரிடத் தெரியாத மக்கள், ஆயுதம் எடுத்து வந்தாலே, குலைநடுக்கம் எடுக்கும்போது, அஞ்சாநெஞ்சுடைத் தலைவனொருவன் ஆணையின்படி நடந்திடும் ஆற்றலுள்ள கட்டுப்பாடுமிக்க ஒரு படை இவர்களை எதிர்த்தால் என்ன ஆவார்கள்? - என்று எண்ணினான் - எதிர்காலமே அவன் கண்ணெதிரே தெரிகிறது.

ஒருவர் சொல்லியிருக்கிறார், “நெப்போலியன், எரி நட்சத்திரம்போல! வளர வளர ஒளி அதிகமாகும் - வேறெந்த ஒளியையும் மிஞ்சும் அளவு. ஆனால் ஒளி மிகுந்திட மிகுந்திட, தன்னைத் தானே எரித்துக் கொண்டுவிடும் - எவ்வளவு அதிக மாக ஒளி காணப்படுகிறதோ அவ்வளவு அதிகமான நெருப்பு பிடித்துக் கொண்டது என்று பொருள் - எவ்வளவு வேகமாக ஒளி வருகிறதோ அவ்வளவு வேகமாக, பற்றி எரிந்து கொண்டு போகிறது என்று பொருள். இறுதி? கருகிப் போய் விடுகிறது. எரிநட்சத்திரம், நெப்போலியனுடைய வரலாறும் இதுதான்.”

இத்தாலி நோக்கிக் கிளம்பும்போது புகழ், புள்ளி அளவாகத்தான் இருந்தது.

பாரிஸ் - பள்ளி அறை - பளிங்குக் கண்ணாடி - எனக்குப் பின்னால். முன்னால் இருப்பது புகழ் தரும் வெற்றிகள்! என்று எண்ணியபடி, களம் நோக்கிச் செல்கிறான். வழியிலே, தங்கு மிடங்களிலிருந்தெல்லாம், ஜோசபைனுக்குத் காதற் கடிதங்கள் தீட்டுகிறான். களம் வந்திராவிட்டால், என்னென்ன பேசி மகிழ்ந் திருப்பானோ, அவற்றை எல்லாம் கடித மூலம் அனுப்பி மகிழ்கிறான் - மகிழ்விப்பதாகவும் எண்ணிக் கொள்கிறான்.
இத்தாலி மீது படை எடுத்துச் சென்று பிடித்திடவேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால் அதற்கு ஏற்ற வலிவுமிக்க படை உண்டா? இல்லை! வசதிகள் உண்டா? கிடையாது! ஆனால் இவற்றைக் கூறித் தயக்கம் காட்டினானா என்றால் இல்லை. போரிலே ஈடுபட்டுப் பயிற்சி பெற்ற பொறியியல் அதிகாரி ஒருவர் கூடக் கிடையாது. வத்தலும் தொத்தலுமான நாலாயிரம் குதிரைகள்; உணவு போதுமான அளவு இல்லை; செலவுக்கான பணம் மிகக் குறைவு. ஆனால், உடன் சென்ற படையினரிடம் வீரம் நிரம்ப! அதனை அதிகமாக்கத்தக்க உணர்ச்சியை, உற்சாகத்தை ஊட்டவல்ல வீர உரை நிகழ்த்தினான் நெப்போலியன்.

இந்தப் போரிலே நெப்போலியன் காட்டிய துணிவும் மேற்கொண்ட முறைகளும், வல்லரசுகள் பலவற்றுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்திவிட்டன.

இத்தாலியைத் தாக்க, மிக உயரமான, பனி நிரம்பிய, ஆல்ப்ஸ் மலையைக் கடந்தாக வேண்டும் என்று திட்டமிட்டான் - கேட்போர் மலைக்கத்தக்க திட்டம்.

ஆல்ப்ஸ் மலையை முன்பு அனிபால் எனும் இரணகளச் சூரன் கடந்ததுண்டு. உலகம் வியந்தது.
நெப்போலியன், வேறு எவராயினும் இதனைச் செய்திருப்பர் என்று கூறிடத்தக்க செயலை நடத்திக் காட்டுவது போதாது என்ற எண்ணம் கொண்டவன். இதற்கு முன்பு இதுபோலச் செயலாற்றியவர் எவரும் இல்லை! - என்று எவரும் வியந்து கூறத்தக்க செயல்களைச் செய்வதிலேயே நாட்டம் மிகுதியும் கொண்டிருந்தான்.

எது நடைபெறாது என்று மாற்றார் நம்பிக் கொண்டிருக் கிறார்களோ, அதனை நடத்திக் காட்டுவது எதிரி முகாமைக் கிடுகிடுக்க வைத்துவிடும் என்பதனை நெப்போலியன் அறிவான். ஒவ்வொரு களத்திலும், இதனை நோக்கமாகக் கொண்டு, கேட்போர் திடுக்கிடத்தக்க செயலாற்றி, வீரக்கதை தீட்டியபடி இருந்தான்.

ஆல்ப்ஸ் மலையுச்சியைக் கடந்து படை வர இயலுமா? என்று எண்ணி ஏமாந்து கிடப்பர், மாற்றர்கள். மலையைக் கடந்து நம் படை எதிரே சென்று நின்றால் போதும், பீதி எதிரியின் வலிவிலே பாதியைச் சாகடித்துவிடும் என்று அறிந்து திட்ட மிட்டான், வீரத்தளபதி.

ஆல்ப்ஸ் மலையைக் கடப்பதற்கான திட்டத்தை, மிகத் திறமையாக, தீர யோசித்து வகுத்தான். இயற்கை விளைவிக்கக் கூடிய கொடுமைகளையும் சமாளிக்க வேண்டும், எதிரிப்படை களின் தொல்லைகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டும். படை வீரர்கள் மட்டுமல்ல, பீரங்கி வண்டிகளும் மலையைக் கடந்தாக வேண்டும். உணர்ச்சி ஊட்டத்தக்க தலைவனால் மட்டுமே, இத்தகைய மகத்தான செயலைச் செய்யும்படியான வீரத்தைப் படையினர் பெறச்செய்ய முடியும்! நெப்போலியன், தான் கொண்டிருந்த நம்பிக்கையைப் படையினர் அனைவரும் பெறத் தக்கவிதமாக நடந்து கொள்வான். பட்டாடைகளாலான கூடாரத்தில் ஓய்வாகச் சாய்ந்து கொண்டு, களியாட்டத்துக் கிடையே, கட்டளை பிறப்பித்துக் கொண்டுள்ள, படைத் தலைவன் அல்ல; குடும்பப் பெருமை காரணமாகவோ, கொலுமண்டபத்து தயவாலோ, படைத் தளபதியான
வனல்லவே நெப்போலியன். ஓயாத உழைப்பினால், மங்காத வீரத்தால், செயலாற்றும் திறத்தால், முன்னணியில் நிற்பவன். எனவே, தன் படைவரிசையிலும் வீரம் காட்டப்படும் போதெல்லாம் பாராட்ட, பரிசு வழங்க, பெரிய பதவிகள் அளித்திடத் தவறுவதில்லை. தமது வீரச் செயலைப் பாராட்ட, வாழ்த்த, தலைவன் முன்வருவது தெரிந்ததும், படைவீரர்கள் புதிய எழுச்சி பெறத்தானே செய்வர்.

நெப்போலியனிடம், படை வீரர்களுக்கு ஏற்பட்ட பாசம், மிக உன்னதமானது. அவன் ஆணை எதுவாயினும், முறை எது கூறினும், தட்டாமல் தயங்காமல் மட்டுமல்ல, மகிழ்ச்சியுடன் அவற்றின்படி நடப்பர்.

வெற்றி பெற்றுத்தரத்தக்க மாவீரன், நமது தலைவன் என்ற உணர்ச்சி, படையிலே, எப்போதும், எத்தகைய சூழ்நிலையிலும், நெப்போலியனுக்காக உயிரைக் கொடுக்கவும், போர்வீரர் காத்துக் கிடந்தனர். அரச குடும்பத்தினர், சீமான்கள் என்போர் மட்டுமே பெரிய பதவிகளைப் பெற்று வந்தனர் பட்டாளத்தில். நெப்போலியன் அப்படிப்பட்டவன் அல்ல. எளிய குடும்பம் . உழைப்பால் உயர்ந்தவன். எனவே, அவனிடம் எளிய குடும்பத்தினரான போர்வீரர்களுக்கு உயிர். சொந்தத்தோடும் பந்தத்தோடும் பழக முடிகிறது. செல்லப் பெயரிட்டு அழைத்து மகிழ முடிகிறது. எனவே, வேறு எந்தக் காலத்திலும் ஏற்படாத விதமான தீவிர எழுச்சி காட்டிப் போரிட்டனர், நெப்போலியன் தலைமையில் இருந்து வந்த போர்வீரர்கள்.

துணிகரமான போக்குடன், பெரிய ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் போரிடும் வீரமிக்க பல தளபதிகள் தோன்றினர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அளவில், நெப்போலியன்
களாகவே விளங்கினர். எதிர்ப்படை எத்துணை பெரிதாக இருப்பினும், தன்வசம் உள்ள படையைக் கொண்டு, எதிரிப் படைவரிசையில் ஏதேனும் ஓர் பகுதியை மிக வேகமாகத் தாக்கி, எதிரிப்படை வரிசையில் பிளவை ஏற்படுத்தி, சிதறவைத்து, நிலை குலைந்து அப்படை ஓட, துரத்திச் சென்று தாக்கி அழிப்பது, நெப்போலியன் கையாண்ட போர்முறை. இதற்கு அச்சமற்ற போக்கும், கணக்கிட்டபடி காரியமாற்றும் துரிதத் தன்மையும் வேண்டும்.

‘களத்திலே பெறக்கூடிய சில வெற்றிகளை இழக்கக்கூட நான் சம்மதிப்பேன். ஆனால் காலம் வீணாக்கப்படுவதை, இழக்கப்படுவதை மட்டும் விரும்பவே மாட்டேன்’ என்று நெப்போலியன் ஒருமுறை கூறினான்.

போர் நடைபெறும்போது, நெப்போலியன் குதிரை மீதேறி களத்திலே எங்கெங்கு சென்று நேரிடையாகக் காரிய மாற்ற வேண்டுமோ அங்கெல்லாம் செல்வான் - காற்றெனச் சுற்றிச் சுற்றி வருவான். வேலை கடினமானது ஆக ஆக அவன் சுறுசுறுப்பு வளரும். நிலைமையில் ஆபத்து அதிகப் பட அதிகப்பட நெப்போலியனுடைய வீர உணர்ச்சி கொழுந்து விட்டு எரியும். பசி தூக்கம் மறந்து பம்பரமாகச் சுற்றுவான். களத்திலேயே ஓரிடத்தில் குதிரைமீது அமர்ந்தபடியே சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொள்வான் - தூக்கம்! உடனே விழித்துக் கொள்வான் - புது வேகம் பிறக்கும்.

செயலாற்றுவதற்கான வேகம், அளவிட முடியாதபடி இருந்தது. இத்தனைக்கும், சில படைத் தலைவர்கள் போல், பார்க்கவே பயங்கரமாகத் தோற்றமளிக்கும் பேருருக்கொண்டவன் அல்ல. நாலடி பத்து அங்குல உயரம். நெப்போலியன் - ஐந்தடிக்கும் குறைவு. குதிரை மீது அமர்ந்திருக்கும் போது மட்டுமே கம்பீரமான தோற்றம் இருக்கும். நேர்த்தியான உடற்கட்டு! களைப்பு சலிப்பு அவனைத் தீண்டுவதில்லை.

நினைத்தபோது தூங்கவும் முடியும் - விரும்பிய உடனே விழித்துக் கொள்ளவும் முடியும். பல நாட்கள் போதுமான அளவு தூங்காமலேயே, வேலைசெய்து கொண்டிருக்க இயலும். விடிய விடிய வேலை செய்வதுண்டு - உடன் இருப்பார், களைத்துப் போய்க் கண் அயர்வர்; நெப்போலியன் துளியும் சோர்வின்றிக் காணப்படுவான். உணவு உட்கொள்வதிலும் நெப்போலியன் அதிகமான ஆர்வம் காட்டுவதில்லை. படாடோபமான முறையிலே, பத்துப் பன்னிரண்டு வகைகள் கொண்ட விருந்து உண்டிடுவதிலே விருப்பம் கொள்வதில்லை. பெரிய நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, பேரரசனான பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட ஆடம்பரமான விருந்திலேகூட அவன் மனம் ஈடுபட்டதில்லை. சீமான்கள் சீமாட்டிகளிடம் சிரித்துப் பேசிக் கொண்டே பல பண்டங்களைத் தொடுவது“ துண்டாடுவதும், சுவைப்பதும் சிதற விடுவதுமான முறையில் நெடுநேரம் விருந்து சாப்பிடுவது சம்பிரதாயம். ஒருபுறம் இன்னிசை! எங்கும் மெல்லிய குரலிலே பேச்சு. விழியாலே மொழி பேசும் கலை! நடந்தவற்றை எண்ணிப் புன்னகை, நடக்க வேண்டியவற்றை நினைத்து ஏக்கப் பார்வை, பெருமூச்சு! இப்படி, மணிக் கணக்கிலே விருந்து நடைபெறும். நெப்போலியன் இதனைக் காலக்கேடு என்று கருதினான் - அரைமணி நேரத்திலே விருந்து வேலையை முடித்துக் கொண்டு, எழுந்துவிடுவான். மற்றவர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். அவர்கள் அப்போதுதான், உள்ள பண்டங்களில் எதை உண்பது என்ற முடிவுக்கு வந்து, சிறிதளவு சுவைத்துக் கொண்டு இருப்பார்கள். நெப்போலியன் அதுபற்றிக் கவனம் செலுத்துவதில்லை - தன் வேலை முடிந்ததும் எழுந்துவிடுவான். மாமன்னன் எழுந்தான பிறகு, மற்றவர்களும் எழுந்தாக வேண்டுமே! இருந்து முடிந்துவிட்டதாகத்தானே பொருள். எனவே, எழுந்துவிடுவார்கள் - விருந்து கலைந்துவிடும். விதவிதமான பண்டங்கள் வீணாகிக் கிடக்கும்; பசித்த வயிறோடு பலரும் தத்தமது இடம் செல்வர்.

மாமன்னன் நெப்போலியன் நடத்தும் விருந்துக்குப் போவதானால், போகுமுன் வீட்டில் வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டுத்தான் செல்லவேண்டும் என்று பலரும் பேசுவர். பானங்கள் பருகுவதிலும் நெப்போலியனுக்கு ஆர்வம் அதிகம் கிடையாது. போதை தரும் பழச்சாறு பரும்கும்போதுகூட. இனிப்புக்காகவும் உடல் வலிவுக்காகவும் பருகவேண்டுமே தவிர, சுருண்டு கீழே விழவோ, உளறுமொழி பேசவோ அல்ல என்ற எண்ணத்தில் திராட்சை ரசத்தாலான போதை பானத்தில் நிரம்பத் தண்ணீர் கலந்துதான் பருகுவான்.

போரில் புதுமுறை காண்பவன் நெப்போலியன். எனவே, போர் இப்போதைக்கு இல்லை என்ற எண்ணத்தில், ஏற்பாடுகளைச் சரியாகச் செய்து கொள்ளாமல், மாரி கால விடுதிகளிலே ஓய்வாக எதிரிப்படைகள் இருப்பதனை அறிந்து தாக்கி திகைக்க வைத்து வெற்றி கொள்ள இதுவே தக்க சமயம் என்று துணிந்து திட்டமிட்டு இயற்கையுடன் போராடுவதால் களைத்துக் கிடந்த தன் வீரர்களுக்கு உற்சாகமூட்டி, முன்னேறச் செய்தான்.

“குதிரைகள் போதுமான அளவு இல்லையே” என்பார் ஒரு தளபதி.

“நம்மிடம் இல்லை-சரி; ஆனால் வேறு எங்குமா குதிரைகள் இல்லை? எங்கு இருந்தாலும் சரி, குதிரைகளைப் பிடித்து வாருங்கள்” என்று உத்தரவு கிளம்பும், நெப்போலியனிடமிருந்து.

உணவு பற்றாக்குறை, நோய் - இவை எதிரிகளே! பணிந்துவிடக்கூடாது, இவற்றிடம். தாங்கிக் கொள்ள வேண்டும்; தாக்கக் கிளம்ப வேண்டும் என்பான் நெப்போலியன். அதுபோலக் கூறிவிட்டு அலங்கார வண்டியில் அமர்ந்து கொண்டு கேளிக்கைக்கூடம் சென்றுவிடுபவனா? இல்லை! முன்பு அப்படிப்பட்டவர்கள் பதவி வகித்தனர் - இவன் பிறவித் தளபதி! பதினெட்டு மணி நேரம் வேலை - களத்துக்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் கவித்துக் கொள்கிறான் - வைரங்கள் இழைக்கப்பட்ட தங்கப்பதக்கங்கள் நிரம்பிய பளபளப்பான பட்டாலான உடை அல்ல அணிந்திருப்பது, போர்த் தளபதி அணியும் உடைதான் - படாடோபம் துளியும் இல்லை. இரவெல்லாம் வேலைசெய்து விட்டு, விடியும்போது படுத்திடுவான் - தூக்கம் வருவதற்குள், போர் பற்றிய ஏதேனும் ஓர் புதிய எண்ணம் தோன்றும் - காலையில் பார்த்துக் கொள்வோம் என்று இருந்து விடுவதில்லை - உடனே கிளம்புவான், படையினருக்குக் கூற; புதிய ஏற்பாடுகளைக் கவனிக்கமகத்தான செயலை மேற்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வும், வெற்றி பெறத்தக்க ஆற்றலுமுள்ளவர்கள் நாம் என்ற நம்பிக்கையும், ஒரு படைக்கு வலிவான போர்க் கருவிக்கும். அழிக்கும் வலிவுகொண்ட படைக்கலன்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உறுதியும் நம்பிக்கையும் இல்லை என்றால் வெற்றி கிட்டாது. உறுதியும் உணர்ச்சியும் படையினர் பெறத் தக்கவிதமான செயல் வீரனாகவும் பேச்சுத்திறன் மிக்கவனாகவும் விளங்கினான் நெப்போலியன்.

“தொல்லைகள் பலவற்றைத் தாங்கிக் கொண்டீர்கள், அவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட தீர்மானித்துவிட்டேன். அதோ அந்த மலைகளுக்கு அப்பால், இருக்கின்றன, உணவு, உடை, பாய்ந்திடும் புரவிகள், பொன், பொருள் யாவும். எல்லாம் நமக்காக! செல்வோம், வெல்வோம், அவற்றைக் கொள்வோம். எதிரிகளை நாம் சந்திக்கக் கிளம்புவோம் - இடையிலே உள்ள உடைகளைத் தகர்த்துவிட்டு முன்னேறி, நமது ஈட்டிமுனைகளை எதிரிகளின் மார்பில் பாய்ச்சுவோம் - புறப்படுக!”