அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
8

துவக்கத்தில் துளியும் இணங்கவில்லை நெப்போலியன், இறுதியில் பெண் தேடு படலம் ஆரம்பமாயிற்று ஜோசபைன் விவாக விடுதலைக்கு இணங்கவேண்டி நேரிட்டது. கண்ணீர் பொழிந்து காலடி வீழ்ந்து பார்த்துப் பலன் ஏற்படாததால்.

1810இல் ஆஸ்ட்ரியா நாட்டு அரசிளங்குமரி, மேரி லூயியை மணம் செய்து கொள்கிறான் - அரச வம்சத்துடன் கலப்பு!!

அடுத்த ஆண்டு மகன் பிறக்கிறான்! குழந்தை ரோமாபுரி அரசன் என்ற பட்டம் பெற்றுவிடுகிறது, பரம்பரை ஏற்பட்டு விட்டது!!

கணக்குப் பாடத்திலே வல்லவன் நெப்போலியன் - ஆனால் ரஷிய நாட்டைப் பற்றிச் சரியான கணக்குபோட மட்டும் தெரியாமல் போய்விட்டது.

பகை கக்கியபடி இருந்த ஆஸ்டரியா, சம்பந்தி நாடாகி விட்டது. புதிய பலம் என்று தப்புக் கணக்குப்போட்டான் நெப்போலியன். ரஷியாவுடன் போர் தொடுக்க முனைந்தான் - மிகத் தவறான திட்டம் - மிகத் திறமை கெட்ட முறையிலே திட்டத்தை நடத்த முற்பட்டான்.

ரஷியா, விரிந்து பரந்து கிடக்கும் பூபாகம் - அந்த ஓர் இடத்திலே எல்லாவிதமான தட்ப வெப்ப நிலைகளும் உள்ளன - அதுபோலவே, எல்லாவிதமான போர்த்திறன் படைத்தவர் களும் இருக்கின்றனர், தாக்கிடும் போர் நடாத்துவோரும், மறைந்திருந்து தாக்குவோரும், உளர், இது மட்டுமல்லாமல், ஓரிரு களங்களிலே வெற்றி பெற்றுவிடுவதால் மட்டும் ரஷியாவைச் சரண் அடையச் செய்ய முடியாது - களம் மாறிக்கொண்டே போகும், மேலே மேலே, ரஷியாவுக்கு உள்ளே, உள்ளே பாயும் படை புகவேண்டும்.

எந்த இடத்திலே நின்று போரிட்டால், நல்லது என்பது ரஷியாவில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும் - படை எடுப்பு நடத்தும் பிரெஞ்சுக்காரருக்குத் தெரியாது.

எல்லாவற்றையும்விட மேலாக மற்றொன்று இருந்தது - ரஷிய அதிபர் அலெக்சாண்டர் போரிட மறுக்கிறார்!

சரண் அடையவும் முடியாது, போரிடவும் போவதில்லை, பாய்ந்து பாய்ந்து ஓயட்டும். மாயட்டும் பிரெஞ்சுப் படை என்கிறார் அலெக்சாண்டர். உள்ளே பாய்வார்களே - என்கிறார்கள் தளபதிகள். பாயட்டும் அவர்கள் நுழையும் இடத்தை விட்டு நாம் வெளியேறி விடுவோம். வேறு இடம் சென்று முகாமிடுவோம் என்கிறார் ரஷிய அதிபர். அங்கும்தானே வரும் எதிரிப் படை? என்கிறார்கள் வரட்டும்! நாம் அவர்கள் வருகிறபோது அங்கு இருக்கமாட்டோம். முகாம் மாறும் என்கிறார், அலெக்சாண்டர். எதுவரையில்? என்று கேட்கிறார்கள் தளபதிகள். நாம் பின்வாங்கிச் செல்ல இடம் இருக்கும் வரையில் என்கிறார் அவர். இடையில் சிக்கிய இடங்களை எல்லாம் எதிரிகள் அழிப்பார்களே என்று கலக்கத்துடன் கேட்கிறார்கள்; அழிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை! நாமே அழிப்போம். நாசமாக்குவோம், அவர்கள் நுழையும் இடத்தை, நாம் வெளியேறி வேறிடம் செல்லு முன்பு என்று போர்முறை கூறுகிறார் அலெக்சாண்டர். திகைக்கிறார்கள் தளபதிகள் விளக்கமளிக்கிறார் அதிபர்.

நமது நாட்டிலே நுழையும் எதிரிப்படை பொன்னும் பொருளும் கிடைக்கும். உணவும் உரையுளும் கிடைக்கும். போரிட்ட அலுப்புத்தீரும். புதிய வலிவு பெற்றுக்கொண்டு மேலும் தாக்குதலை நடத்தலாம் என்று எண்ணுவார்கள். அதுபோலத்தான் போரிலே நடைபெற்று வருகிறது. நாம் புதுமை முறை மேற்கொள்வோம். தாக்கத் துடிப்பார்கள், சிக்க மாட்டோம்! உள்ளே நுழைவார்கள். வெற்றிடமாகி விட்டிருக்கும் செல்வத் திருநகர்கள். பாதைகள் இடிபாடுகளாகி விடும்! பாலங்கள் தகர்க்கப்பட்டிருக்கும்! வீடுகள் தங்குமிடமாக இரா! களஞ்சியம் கருகிக் கிடக்கும்! கடைகள் சாம்பலாகிக் கிடக்கும். ஆறு குளம் குட்டைகள் சேறும் சகதியுமாகிவிடும். வயல்கள் வெடித்துக் கிடக்கும். ஆடு மாடு கோழி பன்றி மருந்துக்கும் கிடைக்காது. புல் பூண்டுகூடக் கிடைக்காது அவர்களுக்கு. அந்த விதத்தில் எல்லாவற்றையும் பொசுக்கி விடுவோம். எதிரியிடம் எதுவும் சிக்கலாகாது!

கடைசியில், எதிரிகளைத் தாக்குவதுதான் யார்? என்று கேட்கிறார்கள் தளபதிகள். ரஷிய அதிபர் கூறுகிறார். “நாம் போரிடத் தேவையில்லை! கடுங்குளிரும் பனிமழையும் அவர்களைத் தாக்கி அழிக்கும், நமது பலமிக்க படை அவை!” என்று கூறுகிறார்.

ரஷிய அதிபர் கூறியதுபோலத்தான் நடைபெறுகிறது.

1812இல் துவக்கப்பட்ட ரஷியப் படை எடுப்பு, நெப்போலியனைத் திகைக்கச் செய்துவிட்டது. தேடித் தேடிப் பார்க்கிறான், ரஷியப் படையைக் காணோம். ஊரூராகப் பாய்கிறது, பிரெஞ்சுப் படை, போரிடத் துடிக்கிறது; ரஷியப் படை இல்லை.

வில்னா பிடிபட்டது; விட்பெஸ்க் பிடிபட்டது; ஸ்மலான்ஸ்க் பிடிபட்டது! என்று பாரிசுக்குச் செய்திகள் செல்கின்றன. ஆனால் ஓர் இடத்திலாவது எதிரியைத் தாக்கி அல்ல! எதிரி இருப்பதில்லை; எதுவும் இருப்பதில்øல்.
இடையிடையே, ரஷிய காசாக் குதிரை வீரர்கள், பிரெஞ்சுப் படையைப் பக்கவாட்டத்தில் தாக்கிவிட்டு முகாம்களை அழித்துவிட்டு, பாய்ந்தோடி விடுவார்கள்.

அலையும் அலையும் மோதுதல்போல், மலையும் மலையும் தாக்குதல் நடத்திக்கொள்வதுபோல, இருபெரும் படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து நின்று போரிடுவதுதான் அதுவரை நெப்போலியன் கண்ட போர் முறை! இது விந்தையாக இருக்கிறது!!

பிரான்சு நாட்டைவிட்டு நெடுந்தொலைவு வந்தாகி விட்டது; இனி அங்கிருந்து படைக்குத் தேவைப்படும் பொருள் ஏதும் பெறமுடியாது; எல்லாம் ரஷியாவிலேதான் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டும்; ஆனால் இங்குதான் ஏதும் இல்லையே! எல்லாம் கருகிக் கிடக்கின்றன; சாம்பலாகிக் கிடக்கின்றன. உணவுத் தட்டுப்பாடு; நோய் வேறு பரவுகிறது; படை படாதபாடுபடுகிறது.

குடூசாவ் எனும் ரஷியத் தளபதி, ‘ஒற்றைக் கண்ணன்’ பொரோடினோ எனும் இடத்தில் படையுடன் இருந்தான் - போரிட்டாக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பெருத்த மகிழ்ச்சி, பிரெஞ்சுப் படையினருக்கு.

“வந்தது வீரர்களே! நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு. வல்லமையைக் காட்டும் வாய்ப்பு. உமது வீரத்தைப் பொறுத்திருக்கிறது வெற்றி. வெற்றி பெற்றால், எல்லாம் நமக்கு - மாரி காலத்தங்குமிடம் - வாழ்க்கை வசதிகள் - விருதுடன் வீடு திரும்பும் வாழ்க்கை...” வழக்கப்படி உற்சாக மூட்டுகிறான் நெப்போலியன், பயங்கரமான போர் மூண்டு விடுகிறது. இருதரப்பிலும் பலத்த சேதம். நிலைமை, மணிக்கு மணி மாறியபடி இருக்கிறது, பிணத்தின் மீது நடக்க வேண்டி இருக்கிறது - ரஷியப்படை விரட்டப் படுகிறது!

மாஸ்கோ!! அதோ பொன்மயமாக விளங்கும் கட்டடம் நிறைந்த ரஷிய தலைநகரம்.

ஒரு முகடு மீதேறி, பிரெஞ்சுப்படை, தொலைவிலே தெரியும், மாஸ்கோ நகரைக் கண்டு களிக்கிறது.

உள்ளே செல்கிறது படை, போரிடுவோரும் இல்லை. சரணடைந்தோம் என்று கூறுவாரும் இல்லை, ஆள் அரவமே இல்லை. மாஸ்கோ காலி செய்யப்பட்டுவிட்டிருக்கிறது, கடுங் கோபம் பிரெஞ்சுப் படையினருக்கும். ஆனால் யார்மீது காட்டுவது, கட்டடங்கள்மீது; அங்குக் கிடந்த விலையுயர்ந்த பொருட் களின்மீது! போரிட வந்த படை கொள்ளை அடிக்கிறது - வேறு வேலை? மாளிகைகளிலும், மாதாகோவில்களிலும் பொன்னும் பொருளும் விலையுயர்ந்த கலைக் கருவூலங்களும் கிடைக் கின்றன. பத்திரப்படுத்திக் கொள்வார்கள், பட்டாலான அங்கிகள், வைரம் இழைத்த சிலுவைகள், வண்ணம் நிறைந்த கிண்ணங்கள், தங்க நகைகள், கண்கவரும் வனப்புள்ள ஓவியங்கள்!!

காலமெல்லாம் காட்டிக் காட்டி மகிழலாம் - தலைமுறை தலைமுறையாக இல்லத்தில் இருக்கும், பெருமைதரும் பொருளாக என்று எண்ணி எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். எத்தனை விருப்பத்துடன் ரஷியர்கள் இந்தப் பொருட்களைச் சேர்த்து வைத்திருந்தனரோ, பாவம். அவ்வளவும் பிரான்சுக்கு! மாஸ்கோவுக்குப் பொலிவளித்த பொருள் அத்தனையும் பாரிசுக்கு! - என்று நினைக்கின்றனர். முன்பு எடுத்துச் செல்லவில்லையா; இத்தாலியிலிருந்து, அதுபோலத்தான் என்ற எண்ணம். ஆனால், இத்தாலியா, ரஷியா! ஒரு பொருளும் போய்ச் சேரவில்லை பாரிசுக்கு! பொருளைக் களவாடிய வீரர்களிலே மிகப் பெரும்பாலோர் வீடு திரும்பவில்லையே, பொருள் எப்படிப் பாரிஸ் போகும். பொருள் மாஸ்கோவுக்குச் சொந்தம், அதனைச் சூறையாடினவன் உடல் மாஸ்கோ மண்ணுக்கு உரம் என்றாகிவிட்டது.

எந்த இடத்தை இழக்கச் சம்மதித்தாலும் மாஸ்கோவை இழக்க மனம் வராதே, எப்படியும் படையுடன் வருவார் ரஷிய அதிபர் என்றெண்ணினர் - ரஷியப் படையைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மூட்டிவிட்டுச் சென்ற தீ மாஸ்கோவில் பரவி விட்டது - நகரம் நெருப்பு மயம் - நாசம் நர்த்தனமாடுகிறது! ரஷியப் படையுடன் போரிடலாம். வாய்ப்புக் கிடைத்தால்; நெருப்புடன் எப்படிப் போரிடுவது! கட்டடங்கள் சரிகின்றன, பொருள்கள் சாம்பலாகின்றன. மாஸ்கோ அழிகிறது. வளையை அழித்தால் அதிலே பதுங்கி இருக்கும் பாம்பு என்ன செய்ய முடியும் - நெளியும் சில நேரம் - பிறகு? வேறு இடம் தேடும். அதுபோலத்தான். பொறுத்திருந்து பார்த்தாகிவிட்டது. இனி ஊர்ப் போய்ச் சேரலாம், என்று பிரெஞ்சுப் படை பின்வாங்கத் தொடங்கிற்று. ரஷியப்படை பக்க வாட்டத்திலே தாக்கும் முறையை மேற்கொண்டது; பாதைகளும் பாலங்களும் பாழாக்கப் பட்டதால், படை நடைபோட இயலவில்லை. இந்தச் சமயம் பார்த்துத்தான் புதிய பகைவன், கிளம்பினான். - மாரி, பனி பெய்யத் தொடங்கிற்று. கடுங்குளிர்! ஊர்களே உறைந்து போகின்றன! நடக்கக் கால் வரவில்லை! நின்றால் பனி கொல்லுகிறது! உண்ண உணவில்லை. போகும் வழி அடைபட்டு விடுகிறது; கண் பூத்துப்போகிறது. எப்பக்கம் நோக்கினாலும் வெள்ளை வெளேரென்ற பனிக்கட்டிகள்!! பிரெஞ்சுப் படையினரில் பல்லாயிரவர் செத்துக் கீழே சுருண்டு விழுந்தனர். எவ்வளவு பயங்கரச் சண்டையென்றாலும் இத்துணை கோரமான பிணக்குவியலைக் காணமுடியாது. அழைத்துச் சென்ற வீரர்களில் மிகப் பெரும் பகுதியை இழந்து, துக்கம் துளைத்திட, வெட்கம் வேலாகிக் குத்த, நெப்போலியன் பாரிசு திரும்பினான், பயத்தால் வெளுத்த முகம், பனியால் ஏற்பட்ட வெடிப்புகள், நடமாடும் வேதனையானான் நாடு பல பிடித்து, விருதுகளுடன் வீடு திரும்பி விழா காண்பவன். ரஷ்யர்கள் பழி தீர்த்துக் கொண்டனர். எந்தப் பகைவனாலும் சாதிக்க முடியாததை, ரஷ்யப் பனி மழை சாதித்து விட்டது. மிரண்டோடாத நெப்போலியன் படைசுருண்டு வீழ்ந்தது. நெப்போலியனுக்கு இனி புகழ் தரும் எதிர்காலம் இல்லை. அது உறைபனியிலே புதையுண்டவிட்டது!

மின்ஸ்க், ஸ்மாலன்ஸ்க், மாஸ்கோ ஆகிய நகர்களில், நாற்றமடித்துக் கொண்டிருந்த பிணக்குவியலைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள் - 1,42,000 பிணங்கள்!!
இந்த அழிவைத் தொடர்ந்து ரஷியா, பிரஷ்யா, ஆஸ்ட்ரியா, இங்கிலாந்து, சுவீடன், இத்தாலி எனும் நாடுகள் கூட்டுக் கழகம் அமைத்துக்கொண்டு, லிப்சிக் எனும் களத்தில் நெப்போலியன் படைகளை முறியடித்தன. இனி நேச நாட்டுப் படைகள், பாரிஸ் நோக்கிச் செல்லவேண்டியதுதான்!

இழந்த கீர்த்தியைத் திரும்பப்பெற ஏதேதோ முயற்சிகள் - ஆட்சிமன்ற உறுப்பினர்களிடம் மன்றாடுகிறான் - புள்ளி விவரம் காட்டுகிறான் - புதிய போர்த் திட்டம் கூறுகிறான் - ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். படமுடியாதினித் துயரம், பட்ட தெல்லாம் போதும் என்று கூறிவிடுகிறார்கள் - பட்டம் துறந்து விடத்தான்வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

டோவ்லான், ரிவோலி, ஆஸ்ட்டர்லிட்ஸ், ஜினா - எத்தனை எத்தனை வியப்பூட்டும் வெற்றிகள்! எத்தனை நாடுகள் அடிபணிந்தன! எத்தனை மன்னர்கள் மண்டியிட்டனர்! அப்படிப்பட்ட நெப்போலியனுக்கு என்ன நிலை நேரிட்டது! 1814 இல் முடி பறிபோகிறது, நாடு நெப்போலியனுடைய பிடியில் இருக்க மறுக்கிறது; பழைய மன்னர் வம்சத்துக்கு அரசாள அழைப்பு செல்கிறது - எல்பா தீவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்; எதிர்ப்புகளைக் கண்டதுண்டமாக்கிய மாவீரன்.

எல்பா தீவு! ஈட்டியாலும் வேலாலும் குத்தி அடக்கி, வேங்கையைக் கூண்டிலிட்டு வைப்பதுபோல, நெப்போலியனை எல்பா தீவிலே சிறை வைத்தனர். ஐரோப்பாவிலே பல அரண்மனைகளிலே உலவியவன், எல்பா தீவிலே அடைபட்டுக் கிடக்கிறான்.

எத்தனை ஆண்டுகளாகப் போரிடுவது! எவ்வளவு இரத்தம் கொட்டுவது! எங்கெங்கிருந்தெல்லாம் பகை மூண்டு விடுவது! போதுமப்பா, போதும். புகழ்நாடி அழிவினைத் தேடிக் கொண்டது. போதும், இனியேனும், புண்களுக்கு மருந்திட்டு, புகையைப் போக்கி வாழ்வைக் கவனிக்கலாம், இத்தனை ஆண்டுகளாக இரத்தம் பொங்கியது போதும், இனியாவது நிம்மதி பெறலாம் என்று எண்ணினர், பிரெஞ்சு மக்கள். விடவில்லை நெப்போலியன்! கூண்டுக் கம்பிகளைப் பெயர்த்துக் கொண்டு. புறப்பட்டுவிட்டது புலி. எல்பாவிலிருந்து தப்பித்துக் கொண்டு கிளம்பிவிட்டான் நெப்போலியன்.

நாசம் கண்டு நடுநடுங்கி இனி தாங்கிக்கொள்ள முடியாது என்று திகிலடைந்து, நெப்போலியனை விரட்டினார்கள்; ஆனால் இலட்சக்கணக்கான பிரன்ச்சுக்காரர் நெஞ்சிலே அவனைப் பற்றிய நினைவு இருந்தபடி இருந்தது அவன் வீரன். வீரன்தான்! என்று உள்ளம் உருகிப் பாராட்டப் பலப் பலர் இருந்தனர். அவர்களெல்லாம், திரண்டெழுந்து நின்றனர் நெப்போலியனுக்கு ஆதரவு காட்ட, மன்னன் ஓடோடிப் போய் ஒளிந்து கொண்டான். பழைய படி பாரிசில் நெப்போலியன்! படை சேர்த்தான்; பகைவர்களைச் சந்தித்தான். அதுதான் கடைசி சந்திப்பாகி விட்டது.

நேச நாடுகளின் பகடைளின் தலைமை, வெலிங்டனிடம்.

போர் முறையிலும், திறத்திலும் வெலிங்டன் யாருக்கும் இளைத்தவனல்ல; களம் நின்று காரியமாற்றவும் சளைக்க வில்லை.

நெப்போலியன் எப்போதும்போல் வீரம் காட்டினான். ஆனால் ஏற்கெனவே ஏற்பட்ட வடுக்கள், செயலிலே ஒரு தரக் குறைவைத் தன்னாலே ஏற்படுத்திவிட்டது. தயக்கம், குழப்பம், திகைப்பு மேலிட்டது செயலாற்றுகையில், கணக்குத் தவறுவதில்லை. களம்பற்றிய திட்டமிடும்போது, வாடர்லூ களத்திலே. கணக்கிடுவதிலும் தவறு நேரிட்டுவிட்டது. தன் படையின் ஒரு பலமான பிரிவு உடன் இல்லாதிருந்த சமயத்தில், எதிரிப் படைகள் யாவும் ஒரணியாகிவிட்ட நிலையில், போரைத் துவக்கினான் - தாக்குதல் திகில் கொள்ளத்தக்க வகையில் ரஷியாவில் பேரிழப்பு, லிப்சிக்கில் பெருந்தோல்வி, இப்போது மட்டும் என்ன என்ற எக்களிப்புடன் நேச நாட்டுப் படைகள் போரிட்டன. இறுதி முயற்சி! என்ற நினைப்புடன் நெப்போலியன் வாடர்லூவிலே வெலிங்டன் வாகை சூடினான் - நெப்போலியன் நொந்த நிலையில், வெந்த உள்ளத்துடன் களம்விட்டுச் சென்றான். மீண்டும் முடி துறந்திட என்பதை முடிந்துவிட்டது; என் முயற்சி தோற்றுவிட்டது! என்று கூற வேண்டியதாகி விட்டது. நெப்போலியனை, நேச நாட்டினர், செயிண்ட் எலினா தீவிலே சிறை வைத்தனர்.

இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று இணையில்லா இந்த வீரன் நடாத்திய போர்களினால்.

பலன் என்ன கண்டான்? தாயும் இல்லை, மனைவி மகனும் இல்லை. தத்தளித்தான் எலினா தீவில்!

நாடு கண்ட பலனாவது உண்டா? இல்லை! பூத்த புரட்சி பொசுங்கிக் கிடந்தது. போரிட்டதாலே நாட்டு வளம், பொருளியல் பாழனாது.

எல்லைகளை அழித்தான் போரிட்டுப் போரிட்டு -

ஆனால் இயற்கையான எல்லைக் கோடு மீண்டும் அமைந்து விட்டது.

மண்டிலங்களை அடிமைகொண்டான் - ஆனால் அவை மண்டியிட்டனவேயன்றி மடிந்து போய்விடவில்லை; சமயம் கிடைத்ததும், சரிந்தது சீரமைப்பு பெற்றது. சாய்ந்தது, நிமிர்ந்தது.

நாட்டுப் பற்று, இனப்பற்று தேசிய உணர்ச்சி இவற்றை அழித்தொழிக்க படைகளால் இயலாது, பயங்கரச் சண்டைகளால் இயலாது. பார் மெச்சும் போர்த்திறன் கொண்ட நெப்போலியன் போன்றவர்கள் இருபதாண்டுகள் இரத்தம் பொங்கிடும் போர் நடாத்தினாலும், இயற்கை நீதியை அழித்திட முடியாது என்பது விளக்கப்படுகிறது.

நாடுகளுக்குள்ளே நேசம் இருக்கலாம் - இருக்கவேண்டும் ஆனால் ஒன்றுக்கு மற்றொன்று அடிமை என்ற நிலை இருத்தல் ஆகாது. அந்த நிலையை எவர் புகுத்தினாலும் வெற்றி கிட்டாது என்பதை, இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிட நெப்போலியன் நடத்திய போர் காட்டுகிறது.

அளவிலே வளத்திலே, வரலாற்றுச் சிறப்பிலே, வெவ்வேறு அளவுள்ள அரசுகள் பல இருக்கலாம் - இருக்கின்றன - அவற்றை, வலிவுமிக்க ஒரு நாடோ வல்லமை மிக்க ஒரு நெப்போலியனோ, தாக்கித் தழுவி, ஒரு பேரரசு காண விரும்பினால், அது சில காலம் வெறியாகத் தெரியுமே தவிர, இறுதியில் இயற்கை எல்லையும் தேசியமுமே வெற்றிபெறும் என்ற பாடம் கிடைத்திருக்கிறது.

கொள்வன கொண்டு, கொடுப்பன கொடுத்து, கூட்டுப் பணியாற்றி, மனித குல ஏற்றத்துக்குப் பல நாடுகள் பணியாற்ற வேண்டுமேயன்றி, ஓரரசு, பேரரசு, வல்லரசு என் அரசு என்ற கொள்கைகொண்டு போரிடுவது, இரத்தம் பொங்கிடத்தான் வழிகாட்டுமே அல்லாமல், சுவையும் பயனும் உள்ள பலனைத் தராது. வையகம் இவனைப்போல ஆற்றல் மிக்கவனைக் கண்டதுமில்லை, அவன் நடத்திய இருபதாண்டுப் போரில் பொங்கிய அளவு இரத்தம் எப்போதும் பொங்கியதுமில்லை. அவனுடைய வீரம் பயனற்றுப்போனதுபோல வேறெதுவும் இல்லை. மாவீரன் நெப்போலியன் நடத்திக் காட்டிய வாழ்க்கை மனித குலத்துக்குக் காலம் காட்டும் ஒரு பயங்கர எச்சரிக்கை. நடமாடும் எரிமலையாக இருந்து வந்தான் நெப்போலியன். தீவிலே பிறந்தான், தீவிலே இறந்தான். இடையிலே திக்கெட்டும் புகழ் முழக்கினான். - ஆனால் அந்த முழக்கம் நாடு பலவற்றிலே இரத்தம் பொங்கவும் எலும்புக் கூடுகள் நிரம்பிடவும்தான் பயன்பட்டது.

வாழ்த்த முடியவில்லை. வசை பாட மனம் இடம் கொடுக்க வில்லை. நீர் துளிக்கும் கண்களுடன் அவன் கல்லறைமுன் வியப்புடன் நிற்கத் தோன்றுகிறது.

அவன் கல்லறை புகுந்தான், ஆனால் அவன் கொண்டிருந்த ஓரரசு, பேரரசு வல்லரசு, என் அரசு எனும் விபரீத எண்ணம் கல்லறைக்கு அனுப்பப்படவில்லை. அனுப்பிவிட வேண்டும் என்று பாடம் புகட்டத்தான். அந்த மாவீரன் கல்லறைக் காட்சிப் பொருளாகி நிற்கிறது.

(திராவிட நாடு - 1963)