அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
6

பாரிஸ் நகரப் பத்திரிகைகள் நெப்போலியனுடைய அன்றாட நடவடிக்கைகளை விவரமாக எழுதின - பாராட்டுகளுடன். என்ன உண்கிறான், என்ன உடுத்துகிறான், எங்கு உலவச் செல்கிறான், யாராருடன் உரையாடுகிறான், எவரிடம் சிரித்து மகிழ்கிறான் என்பது பற்றி எல்லாம் விளக்கமாக இதழ்கள் வெளியிட்டன. பிரான்சு, ஒவ்வோர் நாளும், நெப்போலியனைப் பற்றிய பாராட்டத்தக்க செய்தி ஏதாவதொன்று படித்தபடி இருந்தது. ஒவ்வொரு இல்லத்திலும், அவனைப் பற்றிய பேச்சு! வலிபர்கள் அவன் காட்டிய வீரத்தைப் பாராட்டினர்! முதியவர்கள் அவனுடைய அறிவுத் தெளிவைப் புகழ்ந்தனர்! மங்கையர் அவனுடைய காதல் மேம்பாடு பற்றி கசிந்துருகிப் பேசினர். நெப்போலியன் பிரான்சு நாட்டுப் பொதுச் சொத்து ஆகிவிட்டான். இதனை நெப்போலியன் நன்கு உணர்ந்திருந்தான் - எதிர்காலத்துக்கான திட்டம் அரும்பாக இருந்தது - மலரும் நாளை எதிர்பார்த்தபடி இருந்து வந்தான். கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு, வீட்டுத் தோட்டத்திலே உலவியபடி, ஏதேதோ எண்ணிபடி இருந்தான்.

“உன்னைக் காணத் திரள் திரளாக மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் ஓடி வருகிறார்கள். பார்த்தனையா?” என்று கேட்பார்கள், சிலர். “இதைக் கண்டு மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கிற தல்லவா என்றுதானே கேட்கிறீர்கள். இதிலே என்ன பொருள் இருக்கிறது, மக்கள் காட்டும் ஆர்வத்தில்! என்னைத் தூக்கில்போட ஏற்பாடு செய்யட்டும் - அதை வேடிக்கை பார்க்க இதைவிடப் பெரிய கூட்டம் கூடிவிடும்.” என் கூறுவான். மக்கள் காட்டும் ஆர்வத்தை மட்டும் நம்பி திட்டமிடக் கூடாது என்பது அவன் எண்ணம். ஆனால் மக்களின் ஆர்வத்தைப் பெற வேண்டும்; ஆர்வம் அவர்களுக்கு ஏற்படுவதற்காக வேலை செய்யவேண்டும்; தூண்ட வேண்டும் என்பதிலே கவனம் செலுத்தத் தவறவில்லை. பிரச்சாரம் மிக வலிவுள்ள ஆயுதம் என்பதை உணர்ந்திருந்தான்.

நெப்போலியன், இங்கிலாந்தின்மீது படை எடுத்து அந்த நாட்டை அழிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தபோது, படைகளை வரிசைப்படுத்துவதற்கு முன்பே, பிரச்சார யந்திரத்தைத்தான் ஏவினான். இங்கிலாந்திடம் அலட்சியம், வெறுப்பு, பகை உணர்ச்சி ஏற்படத் தக்கபடி பிரான்சு நாட்டுப் பத்திரிகைகளிலே கட்டுரைகள், கதைகள், கவிதைகள், கேலிச் சித்திரங்கள் இப்படி இப்படி வரவேண்டும் என்று, உள்துறை அமைச்சர் மூலம், யோசனைகள் என்ற பெயரால் புதிய கட்டளைகள் பிறப்பித்தான், நாடாளும் நாயகனான பிறகு. பல்வேறு அரசியல் பிரச்சனைகளுக்கு இடையில், பத்திரிகை மூலம் என்னென்ன கருத்துகள் மக்களிடம் பரப்பப்படுகின்றன என்பதைக் கவனிக்காமலில்லை. இங்கிலாந்து நாட்டிடம் பிரான்சு மக்களுக்கு வெறுப்பு எழவேண்டும். அப்போதுதான் பேரார்வம் எழும். ஆனால் அந்த வெறுப்பும் பகை உணர்ச்சியும் எங்ஙனம் மூட்டப்பட வேண்டும்? இது தெரியாதா, பத்திரிகை நடத்துபவர்களுக்கு என்று நெப்போலியன் இருந்து விடவில்லை. அயர்லாந்து நாட்டினை அடிமை கொண்டு அவதி மூட்டுவதுபற்றி, தீப்பொறி பறக்க எழுதுங்கள். அயர்லாந்து நாட்டு கத்தோலிக்கர்களை, இங்கிலாந்து நாட்டு மதப் பிரிவினர் கொடுமை செய்வதை எடுத்துக் காட்டுங்கள் - பிராடெஸ்ட்டெண்டுகள் கத்தோலிக்கர்களைக் கொடுமை செய்கிறார்கள் என்று பொதுப்படையாக எழுதாதீர்கள் - ஏனெனில் பிரான்சிலே உள்ள பிராடெஸ்ட்டெண்டுகளுக்கு மனச்சங்கடம் ஏற்படும்! இங்கிலாந்து நாட்டிலே உள்ள மதப் பிரிவினர் என்று எழுதி, அவர்களைத் தாக்குங்கள்! - என்று நெப்போலியன் இதழ் நடத்துபவர்களுக்கு எடுத்துக் கூறினான் என்றால், எவ்வளவு நுணுக்கமான முறையில், பிரச்சனைகளை அலசிப் பார்த்திருக் கிறான் என்பது விளங்குகிறதல்லவா?

இத்தனை அறிவாற்றலையும் பயன்படுத்த வாய்ப்பு எழவில்லை - எழத்தான் போகிறது என்பதிலே ஐயமில்லை - எப்போது, எந்த முறையில் என்பது பற்றி எண்ணியபடி இருந்துவந்தான்.

கார்சிகா தீவு விழா நடத்திற்று, வரவேற்பு வைபவம்! துரோகிகள் என்று முன்பு கண்டனக் குரலெழுப்பி, குத்திக் குடலெடுப்போம் என்று கொக்கரித்தார்கள் அல்லவா. நெப்போலியனுடைய வீட்டைச் சூழ்ந்துகொண்டு. அதே மக்கள், அவன் புகழ் பாடுகிறார்கள். பிரான்சு நாடு கொண்டாடும் மாவீரன், இங்கல்லவா பிறந்தான்! என்று சொந்தம் கொண்டாடுகிறது. நெப்போலியனை வரவேற்றா? இல்லை! அவன் வரவில்லை. தாயார் லெடிசா அம்மையார் வந்திருந்தனர்; அந்த வருகை, விழாவாயிற்று.

எங்கும் நெப்போலியனைப் பற்றியே பேச்சு இருந்து வந்தது - என்ன செய்யப் போகிறான் இப்போது? அரசு என்ன பணியினைச் செய்யும்படிக் கூறப்போகிறது? எந்த நாட்டின்மீது படை எடுக்கப் போகிறான்? என்ன திட்டமிட்டுக் கொண்டிருக் கிறான் என்றெல்லாம்.

ஏன், நெப்போலியன் நாட்டை ஆளக்கூடாதா?

ஆற்றல் மிக்கோன் அரசாளாமல் வேறு எவர் ஆட்சி நடத்துவது?

ஆமாம்! அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நெப்போலியன் கண் காட்டினால் போதும், காலடியில் வந்து விழும் மணிமகுடம்!

அவனுக்காக உயிரையே கொடுத்திட உறுதி கொண்டுள்ள படைவீரர்கள் இலட்சக்கணக்கினர் உளர்.
அவர்களுடன் நெப்போலியன் தொடர்பு கொண்டிருக் கிறான் – திட்டம் தயாரிக்கப்படுகிறது – ஆட்சியைக் காப்பாற்ற.

ஆட்சி மன்றத்தை அவன் படையினர் சுற்றி வளைத்துக் கொள்வர் – ஆட்சிப் பொறுப்பில் உள்ளோருக்கு ஆணை பிறப்பிக்கப்படும். துப்பாக்கி முனையில், “வீரன் வருகிறான்; விலகி நில்லுங்கள்!” என்று.

இவ்விதமான பேச்சு உல்லாச விடுதிகளில், தங்குமிடங்களில், உணவு விடுதிகளில், கேளிக்கைக் கூடங்களில்.

துரைத்தனத்தாரின் ஒற்றர்கள் இதுபோன்ற செய்திகளைத் திரட்டிக் கொடுத்தனர் ஆட்சிக் குழுவினரிடம். அவர்கள் அந்தத் தகவல்களை நெப்போலியனிடமே கொடுத்தனர் – அவ்வளவு நம்பிக்கை அவனிடம், அவன் அக்கிரமம் ஏதும் செய்யமாட்டான், மக்களாட்சி முறையைக் கெடுக்க மாட்டான். ஆதிக்கம் பெற அலையமாட்டான் என்பதிலே! நெப்போலியனும், இந்தத் தகவல்கள் தரப்பட்டபோது பதறவுமில்லை; மறுக்கவுமில்லை; புருவத்தை நெறிக்கவுமில்லை; பொறிபறக்கப் பேசவில்லை; புன்னகை மட்டும் செய்தான்.

ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று ஆஸ்ட்ரியப் படைகளை முறியடித்து இத்தாலியை அடிபணிய வைத்தவன் எத்தனை காலத்துக்குப் பாரிஸ் பட்டினத்திலே, காட்சிப் பொருளாக இருந்து கொண்டிருக்க முடியும். வேறு புதிய வீரச் செயலில் ஈடுபடாமல், கஞ்சன் கரத்தில் சிக்கிய தங்கக் கட்டிபோல, இத்தனை ஆற்றல் மிக்கவன் கிடைத்தான் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத ஆட்சிக் குழுவினரிடம், வானத்திலே வட்டமிட வேண்டிய வானம்பாடி இவன். பட்டு நூலால் கட்டப்பட்டு சிறார்கள் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்திடும் பொன்வண்டு அல்ல! சந்தனம் கிடைத்தும் அதை அறைத்தெடுக்கத் தெரியாமல் குளிர்போக்கிக் கொள்ள மூட்டப்படும் நெருப்புக்கு விறகாக்கப் பார்க்கிறார்கள். விவரமறியாதவர்கள் – என்று பலவிதமாக எண்ணத் தலைப்பட்டனர். வீரத் தலைவனுக்கு ஏற்ற வேலை தரப்படவில்லை என்ற பழிக்கு அஞ்சி, ஆட்சிக்குழுவினர், நெப்போலியனை, இங்கிலாந்து நாட்டைத் தாக்கத் தளபதி ஆக்கினர்.

நெடுங்காலமாக இருந்துவரும் ஆவல் இது – கடலிலே கட்டப்பட்ட கோட்டை என விளங்கிவரும் இங்கிலாந்தைப் பிடித்தாளவேண்டும் என்பது. அளவிலே சிறியது என்றாலும் புகழ்மிக்க வரலாறு பெற்றிருந்த இங்கிலாந்து, வாணிபத்தில் வந்து, பொருள் மிக ஈட்டி, வீழ்ச்சியறியாத கப்பற்படையுடன், வீரக் கோட்டமாக விளங்கி வருவதுடன், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலேயும் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது. அது ஒழிக்கப்பட்டாக வேண்டும். இங்கிலாந்து வீழ்த்தப்பட்டால், அதன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப் பட்டிருக்கும், ஏழைப்பக்க நாடுகள் பலவும், பொன் விளையும் பூமி நமது பூமியும் சிக்கும்.சிக்கினால்...!

இந்த இன்பக் கனவு காணாத பிரான்சுக்காரன் இல்லை. ஆகவே நெப்போலியன், இங்கிலாந்தைத் தாக்கும் படைக்குத் தலைவனாக்கப்பட்டது வரவேற்கப்பட்டது. நெப்போலியனும், தன்னிடம் ஒப்படைக்கப்படும் வேலையை வெற்றியுடன் முடித்திட யாது செய்திட வேண்டும் என்பதற்கான எண்ணங்களை ஆராய்ந்தான். ஒரு பேருண்மையைக் கண்டறிந்தான் – கப்பற்படை வலிவுடன் அமைந்திருந்தாலொழிய இங்கிலாந்து நாட்டை வீழ்த்த முடியாது என்ற பேருண்மையை மறுக்க முடியாத மற்றோர் உண்மை அனைவருக்கும் தெரியும்! பிரான்சிடம், தரமான கப்பற்படை இல்லை!

எனவே, நிலைமை முற்றிலும் திருத்தி அமைக்கப்பட்டாலொழிய, இங்கிலாந்தைத் தாக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கில்லை என்ற முடிவுக்கு வந்தான். பெரும்பாலானவை கணைகளால் வீழாது – முதலில் பறவையின் பெரும் சிறகுகளை வெட்டிச் சாய்த்திட வேண்டும். சிறகு வெட்டுண்ட நிலையில், பறவை, விண் நோக்கிப் பறந்து, கணைக்குத் தப்பவும் முடியாது. இங்கிலாந்து நாட்டை வீழ்த்த, இங்கிலாந்தை உடனடியாகத் தாக்கிப் பயனில்லை; கீழை நாடுகளைக் கைப்பற்றி எங்கிருந்து இங்கிலாந்து வலிவுகளைப் பெறுகிறதோ அந்த இடங்களைத் தகர்த்துவிடவேண்டும், முதலில்! அப்போது சிறகிழந்த பெரும் பறவையாகிவிடும் இங்கிலாந்து. இந்த நோக்கத்துடன், நெப்போலியன், புதிய திட்டம் எடுத்துரைத்தான் – எகிப்து நாட்டின்மீது பாய்வது என்ற போர்த் திட்டத்தை.

எகிப்து! பரோவா மன்னர்கள் – கடவுளின் பிம்பங்கள் – ஆண்ட எழில்மிகு நாடு – நைல் நதியால் வளர்க்கப்பட்டு, நானிலத்தின் நளினமிகு நாரீமணி என்று புகழப்பட்டு விளங்கும் நாடு காவியமும் கலையும் கட்டடச் சிறப்பும் மிகுதியும் கொண்டது. உலகிலே வேறு எங்கும் காணமுடியாது பிரமிட் கோபுரங்கள் கொண்ட நாடு. பாலைவனமும் நீர் ஊற்றும் ஆங்கு உண்டு – எகிப்து காட்டும் கோபம் பாலைவன வெப்பம் – எகிப்பது காட்டும் நேசம், குளிர்ந்த இனிய நீர் ஊற்று!! எத்தனையோ, வீரச் செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன, அந்த நாட்டில். கடவுள்களை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரச்செய்த வல்லவர்கள் என்று விருதுபெற்ற மாந்திரீகர்கள், மன்னனை மகேசனாக்க முடியும் என்று கூறிவந்த இடம்! சல்லாபிகள் புடைசூழ உல்லாசப் படகேறி ஓய்வுச் சுவைபெற்று வந்த செல்வர்கள், அங்கு ஆதிக்கம் பெற்றிருந்தனர், அடிமைகள், கூட்டம் கூட்டமாக – உழைக்க உயிர் விட, பிரமிட் எழுப்ப உழுது பயிரிட்டு கோதுமை அறுத்தெடுத்துக் களஞ்சியத்தில் கொண்டு வந்து சேர்த்திட, விண்ணகத்தில் ஏதுமில்லை, யாவற்றையும் இந்த மண்ணகத்தைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம் என்று கூறி இறுமாந்து கிடந்தனர் எகிப்தில். பொன்னும் பொருளும் மிகுதியாக, மணியும் நவநிதியும் ஏராளம். காதலும் கவிதையும் கைகோர்த்து விளையாடி பூங்கா! அதுபோது, வீரமறியா நாடு அல்ல, வெற்றி காணா நாடு அல்ல. எகிப்திலே, பல சிற்றரசர்கள் அரசிகள், பேரரசுக்குக் கட்டுப்பட்டு இருந்து வந்தனர். விந்தைபூமி, எகிப்து! அழகும் ஆற்றலும் ஒன்றைய ஒன்று தழுவிக் கொள்ளும், அதுவே விரும்பத்தக்க முறை என்று உலகுக்கு உரைத்திடுவதுபோல, இங்குதானே வெற்றி வீரன் ஜூலியஸ் சீசரும், கண்ணாலே கொள்ளும் கட்டழகி கிளியோ பாட்ராவும் காதற் களியாட்டம் நடத்தி, காலத்தை வெல்லும் காவியமும் ஓவியமும் உலகு பெற்றிடச் செய்தனர். ஆற்றலிலே, வெற்றிபல பெறுவதிலே அவனுக்கு நிகர் இல்லை. என்ற விருது சீசருக்கு! அவள் விரும்பி, அதரத்தைச் சிறிதளவு பிரித்து, பவளமும் முத்தும் இந்தப் பொற்கொடியில் பார்! என்று காட்டி, கண்வலை வீசினால், சிக்காதவன் இல்லை – மேக மண்டலங்களால் தம்மை மறைத்துக் கொண்டதால் விண்ணகத்து வீராதி வீரர்கள் தப்பினார்கள் போலும், இந்த மண்ணகத்திலே அவளுடைய பார்வைபெற்று வீழாதார் இருக்க முடியாது என்று கற்பனை மிகுதியுடன், ஆனால் கருப்பொருளாக உண்மையை அமைத்துக் கொண்டு கவிகள் களிப்புடன் பாடியது. கிளியோபாட்ரா பற்றி!! அழகும் ஆற்றலும் – அவளும் அவனும் – கொடியும் தருவும் – குழைவும் குலையும் – தாக்குதலும் தளர்வும்!

அந்த எகிப்திலே, சீசருக்கு முன்னாலே, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மற்றோர் மாவீரன், கிரேக்கத்தில் பிறந்து அந்த நாட்களிலே குறிப்பிடத்தக்க நாடுகளிலே எல்லாம் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் அலெக்சாண்டர் உலவி இருக்கிறான். அவன் அமைத்துச் சென்ற அரசில், கிரேக்க வீரமும் எகிப்திய எழிலும் இணைந்ததால் விளைந்த பொலிவுமிகு மலராளே, கிளியோபாட்ரா!

நாலாயிரம் ஆண்டுகளாக நானிலம் வியந்து பேசிக்கொண்டு வருகிறது, எகிப்து பற்றி.

அங்குச் செல்கிறான் நெப்போலியன் – கப்பல்களிலே படை வீரர்களை ஏற்றிக்கொண்டு.

சென்றேன் – கண்டேன் – வென்றேன் – என்று கூறினவனல்லவா ஜூலியர் சீசர் – ஆனால் பாவம், அந்த வரலாற்றை, வந்தான் – வீழ்ந்தான் – என்று முடித்துவிட்டாள்; வடிவழகி கிளியோபாட்ரா!

நல்லவேளையாக, நெப்போலியன் செல்லும் நாட்களில், மான்விழி மாதர் மையலூட்டி வீரர்களை வீழ்த்தும் நிலை இல்லை – ஆனால் பாய்ந்து தாக்கிப் பயங்கரப் போரிடும் மறவர் கூட்டம் மிகுந்திருந்தது. சீசருக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவம் நெப்போலியனுக்கு ஏற்பட்டிருந்தால்...! அவனை மயக்க ஒரு கிளியோபாட்ரா அங்கு இருந்திருந்தால்...!

அங்கு இல்லை. ஆனால் அவன் சென்ற கப்பலிலேயே கிளோபாட்ரா ஆகவேண்டும் என்ற நினைப்புடன் ஒரு மங்கை இருந்தாள் – ஆண் உடையில் அவள், கிளியோபாட்ரா அல்ல ஆகையினாலே, கன்னம் கிள்ளி வளையாட, அன்னம் சொர்ணம் என்று உரையாட மட்டுமே அவளை நெப்போலியன் பயன்படுத்திக்கொண்டான். எப்படியும் நெப்போலியனுடைய நேசத்தைப் பெறவேண்டும் என்ற நினைப்பு, இந்தப் பெண்ணை ஒருவருக்கும் தெரியாமல், ஒயிலை ஆணுடையால் மறைத்துக் கொண்டு கப்பலேறச் செய்தது. இரகசியம் வெளிப்பட்டது; நெப்போலியன், கடற் பயணத்தின்போது குளிர்காற்றைப்பெற்று இன்புறுதல் போல, இவள் நேசம் பெற்று மகிழ்ந்தான்.

வீரப் போரிடக் கிளம்பியபோதா விளையாட்டு! அவ்வளவு சபலமா? என்று கேட்கத் தோன்றும். அந்தக் காலத்திலே அவ்விதமான ‘விளையாட்டு’களில், மேல் மட்டத்தவர் ஈடுபடுவது, சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகிக் கிடந்தது. அனைவருமே அப்படித்தான் என்ற நிலையும் அல்ல; அந்த நிலை, மேன்மைக்குச் சான்று என்ற கருத்தும் நிலைத்து விடவில்லை; ஆனால் கண்டு கண் சிமிட்டுவர், இவனுக்கு இப்படி ஒரு பழக்கம்! என்று கோபம் குறைவாகவும், வேடிக்கை மிகுதியாகவும் கலந்த குரலொலியில்.

முறையா, சரியா என்பதுகூட இருக்கட்டும், பழம்பெரும் நாட்டின்மீது படை எடுக்கச் செல்லும்போது, உல்லாசியை உடனழைத்துச் செல்வதா? என்று கேட்கத் தோன்றும். நெப்போலியன், தன் உடன் அழைத்துச் சென்றவர்கள், கேளிக்கை மூட்டிடும் கோல மயில்களை அல்ல; பொறியியலார், வான நூலறிவினர், மருத்துவர், புலவர், மண்வள ஆராய்சியாளர் புதை பொருள் நுணுக்கம் உணர்வோர், அச்சுப்பொறி இயக்குநோர் ஆடை அணிமுறை அறிவோர், வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கலைஞர்கள், கவிஞர்கள், இவர்கள் உடன் வருகின்றனர். படிப்பகம் கூட உண்டு. ஒரு பல்கலைக் கழகமே இந்தப் படைத்தலைவனுடன் பயணமாகிறது. உல்லாசி ஒருத்தி வந்திருந்தாளே அவளுடனே ஆடிப்பாடியபடிதான் இருந்தான்போலும் வழிநெடுக என்று எண்ணத் தோன்றும். அவ்விதம் இல்லை. எப்போதுமே மெல்லியாரிடம், நெப்போலியன் தன்னைப் பறிகொடுத்து விடுவதில்லை. தேன், துளிகள்தானே தேவை – குடம் குடமாகவா!!

கப்பலில் மேல்தட்டில் படுத்துக் கொள்கிறான் நெப்போலியன் இரவுக் காலங்களில் – விண்மீன்கள் மேல் மின்னுகின்றன – அவனைச் சூழ விற்பன்னர்கள் அமர்ந்து கொண்டு உரையாடுகின்றனர். உலக அமைப்பு பற்றிய விஷயத்திலிருந்து ஊராளும் முறை வரையில்!

மேலே காணப்படும் கோள்களின் தன்மை எப்படிப் பட்டது, ஆங்கு உயிரினங்கள் இருக்க முடியுமா? ஆங்கெல்லாம் சென்றுவரும் அறிவாற்றலை மக்கள் பெறமுடியுமா என்பது பற்றிக்கூடப் பேசுகின்றனர்.

போரிடச்செல்கிறோம், வெற்றியோ தோல்வியோ யார் கண்டார்கள் என்ற எண்ணம் எழவில்லை. ஆற்றலில் அளவற்ற நம்பிக்கை நெப்போலியனுக்கு வெற்றிபெறப் போகிறோம், நிச்சயமாக ஆனால் வெற்றிக்குப் பிறகு...! அதுபற்றித் திட்டமிடுகிறான். எகிப்து பழம்பெரும் நாடு – நாலு ஆயிரம் ஆண்டுகளாக அங்குப் பல துறைகளிலே வெற்றி கண்டுள்ளனர், ஆகவே அங்குக் கண்டறிந்து திரட்டி எடுத்துச் செல்லவேண்டிய கருத்துக் கருவூலங்கள் நிரம்ப இருக்கும், நாட்டை அடிமை கொண்டு, இவற்றை இழந்து என்ன பயன்? என்று எண்ணித்தான், வெற்றிக்குப் பிறகு, எகிப்து நாட்டிலே பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சி நடத்திப் பயன்பெற ஒரு பல்கலைக் கழகத்தையே உடன் அழைத்துச் செல்கிறான்.
எகிப்து போகும் வழியிலேயே, மால்ட்டர் தீவு சிக்குகிறது. அவன் கரத்தில், தொல்லை அதிகம் இல்லாமலேயே!

அங்குச் சில நாள் தங்கி, அமைதியையும் ஒழுங்கையும் ஏற்படுத்துகிறான்.

நெப்போலியன் அழைத்துச் செல்லும் கப்பற் படையை வழியிலேயே மடக்கி, அழித்திட, பிரிட்டிஷ் கடற்படைத் தளபதி நெல்சன், காத்துக் கொண்டிருக்கிறான் – நெப்போலியன் சிக்கவில்லை – காற்றைத் துரத்திப் பிடித்துக் கைக்குள் அடக்க முடிகிறதா! எகிப்து செல்கிறது எதிர்ப்போரை முறியடிக்கும் ஆற்றல் படை வீரமிக்க எதிர்ப்பு – பயங்கரச் சண்டை – இரத்தம் பொங்கி வழிகிறது – நெப்போலியன் வெற்றி பெறுகிறான் – எகிப்து பிரான்சுக்குப் பணிகிறது.

அடிமை கொள்ள வரவில்லை, அக்கிரமக்காரர்களிடமிருந்து மக்களை விடுவிக்க வந்திருக்கிறேன், நாடு பிடிக்கும் எண்ணத்துடன் வரவில்லை, நாட்டைத் தமது களிநடனக் காடாக்கிக் கொண்டுள்ள மாமூலூக்குகளின் – செருக்குமிக்க சீமான்களின் – கொட்டத்தை அடக்கி – மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க வந்திருக்கிறேன் – என்று அராபிய மொழியில் அச்சடித்த அறிக்கைகளை எகிப்திலே பரப்பி, பாமர மக்களிடமிருந்து எதிர்ப்பு எழாதபடி பார்த்துக் கொள்கிறான். மத நம்பிக்கை கொண்ட மக்களைத் தன்வயப்படுத்துவதற்காக, எகிப்து நாட்டிலே உள்ள முசுலீம் மார்க்கத்தைப் போற்றுகிறான் – நெப்போலியன் முசுலீமாக மாறிவிட்டான் என்று வதந்தியே பரவுமளவுக்கு; பிறகோர் சமயம் நெப்போலியன் இந்தப் போக்கை விளக்கினான், எந்த நாட்டிலே நான் ஆதிக்கம் பெற நடமாடுகிறேனோ, அந்த நாட்டு மக்கள் எந்த மதத்தை மேற்கொண்டிருக்கிறார்களோ, அந்த மதம் அந்தச் சமயம் என் மதம் என்று.

அலெக்சாண்டிரியா பிடிபட்டது; கெய்ரொவுக்குள் நுழைந்தாயிற்று. நெப்போலியன் கொண்டிருந்த நீண்ட காலத்துக் கனவு நிறைவேறிவிட்டது.

இதற்கிடையில், நெப்போலியனுடைய கப்பல்கள் பிரிட்டிஷ் தாக்குதலால், சிதறிச் சின்னாபின்னமாயின. எனவே, பிரான்சுக்கும், நெப்போலியனுக்கும் தொடர்பு அறுபட்டுப் போய்விட்டது. ஐந்து திங்களாகச் செய்தியே கிடைக்கவில்லை பாரிசிலிருந்து. நெப்போலியனுக்குச் சங்கடமும் சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. தவறி, அவனிடம் கிடைத்த ஒரு தகவல், அவன் நெஞ்சிலே தீ முட்டிவிட்டது - ஆடிப்பாடிக் களிக்கிறாள் புதுக் காதலனோடு உன்னுடைய ஜோசபைன், என்பது சேதி.

வெற்றியாம்! விருதுகளாம்! விழாவாம், மகிழ்வாம்! புகழாரமாம் எனக்கு! சே! என்ன இருக்கிறது இவற்றில், வீண் ஆரவாரம்! நான் தனிமையை விரும்புகிறேன், கீர்த்தியே எனக்குச் சுமையாகி விட்டது. - என்று சலிப்புடன் பேசுகிறான் நெப்போலியன், வயது முப்பதுக்கு ஓராண்டு குறைவு.

தனக்குச் சலிப்பு ஏற்படலாம், ஆனால் போர் வீரர்களுக்கு ஏற்படக்கூடாதே. ஏக்கம் வளர்ந்தால், வீடு திரும்பும் துடிப்பு எழும், அதற்கு வழி இல்லை என்று தெரிந்தால், திகைப்பு ஏற்படும், எதிர்ப்புக் குணம் ஏற்படும்; பிறகு?... புரட்சி! - படைத் தலைமையை எதிர்த்து, மாவீரன் அலெக்சாண்டருக்கே இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்கிறதே. இதை அறிந்திருந்ததால், நெப்போலியன் தனக்கு ஏற்பட்டிருந்த சங்கடத்தையும் தாங்கிக் கொண்டு, போர் வீரர்களுக்குக் கவலை மேலெழாதிருக்க என்னென்ன செய்வது என்று திட்டமிட்டான். கேளிக்கைக் கூடங்கள் - சூதாடும் அரங்குகள் - நாடக மன்றங்கள் - நாட்டியக் கொட்டகைகள் - உல்லாசத் தோட்டங்கள் - இவற்றை அமைத்து, வீரர்கள் மகிழ்ச்சிபெறச் செய்தான்.

படமெடுத்தாடும் பாம்பு முன் குழலூதி ஆட வைப்போன், பாம்பென நெளிந்தாடும் பாவையர், மேனி அழகை முற்றிலும் மறைத்திடாத முறையில் இருந்த நேர்த்திமிகு மேலாடைகளை
யும் பந்தயப் பொருளாக ஏற்றுக்கொள்ளும் கழலாடுமிடங்கள், இசைபாடி மகிழ்விப்போர், இப்படிப் பலவகை.

இது மட்டும் போதாது என்பதை உணர்ந்த நெப்போலியன், வீரருக்கு விருப்பமான பொழுதுபோக்கு, போர் என்ற முறைக்கு ஏற்ப, சிரியா மீது போர் தொடுத்தான். வேலை வந்தது விசாரம் தொலைந்தது என்று எண்ணிப் படையினர் கிளம்பினர். ஆனால் சிரியாவின் கோட்டை நகரை முற்றுகையிட்டு மும்முரமாகப் போரிட்டும் வெற்றி கிட்டவில்லை - பிரிட்டிஷ் தளபதி ஒருவன் பீரங்கிப் படையை அமைத்துக்கொடுத்ததால், சிரியா, தாக்குப் பிடித்தது மட்டுமல்ல, நெப்போலியன் படையை விரட்டித் தாக்கவும் முடிந்தது.