அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
7

சிரியாக்காரரின் தாக்குதலைவிடக் கொடுமையாகப் பிளேக் காய்ச்சல் நோய் தாக்கிற்று. பலர் மாண்டனர், பலர் குற்றுயிராயினர். படை முற்றுகையிட்டுப் பலன் காணாமல் திரும்பிற்று - வழியெல்லாம் பிணம்! நடந்துகொண்டே இருப்பர், கீழே விழுவர், ஒரு முனகல், ஓர் இழுப்பு, பிணமாவர். பிளேக் தொத்து நோய் என்பதால், அந்தக் காய்ச்சல் கொண்டவர்களை, உடனழைத்துச் செல்ல பயந்துகொண்டு, அங்கங்கே விட்டு விட்டுப்போக நேரிட்டது. குற்றுயிராகிக் கிடந்தவர்களை வெட்டி வீழ்த்திக் கொக்கரித்து வெறிகொண்ட கும்பல், எங்கும் பீதி, அவதி, நெப்போலியன் கூடுமான மட்டும் அவர்களுக்கு ஆறுதல் அளித்துப் பார்த்தான், முடியவில்லை, அழிவைத் தடுத்திட இயலவில்லை. எகிப்திலே பெற்ற வெற்றியால் கிடைத்த களிப்பு கருகியே போய்விட்டது. பாலைவனத்துக்குப் பலியாகிறோம் பாரிசில் உலவிக்கொண்டிருந்த நாங்கள் - என்று கூறிக் கதறினர்.

பலப்பல நூற்றுக்கணக்கானவர்கள், நோயினால் வேதனைப் பட்டபோது, மருந்து கொடுத்துக் குணப்படுத்தாமல், அதிக அளவு அபின் கொடுத்து அவர்களை நெப்போலியன் சாகடித்தான் என்று ஓர் குற்றம் சாட்டப்படுகிறது - முற்றிலும் ஆதாரமற்றது அல்ல.

செயிண்ட் எலினா தீவிலே நெப்போலியன் அடைபட்டுக் கிடந்தபோது, இப்படி நடைபெற்றது என்று ஒப்புக் கொண்டான். ஆனால் வேறு வழியில்லை என்று வாதாடினான். மருந்து இல்லை, அவர்களின் வேதனை வளர்ந்தது. சித்திரவதைக்கு ஆளாகிச் சாவதைவிட, எதிரிகளிடம் சிக்கிச் சிதைக்கப்படுவதை விட, நிம்மதியான முறையிலே சாவு தேடிக்கொள்ளட்டும் என்பதனால்தான் அபின் கொடுக்கச் செய்தேன் என்று விளக்கம் அளித்தான். விளக்கம், நிலைமை என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளப்பயன்படுகிறது என்றாலும், நெப்போலியன்மீது படரும் குற்றம் நீங்கிவிட்டது என்று கூற முடியாது.

என்போன்ற படைத் தலைவர்கள், பலர் கொல்லப்படுவது குறித்து மிகுதியாகக் கவலைப்படுவதற்கில்லை, பலி பல தந்து தான் வெற்றிபெற்றாகவேண்டி இருக்கிறது, என்று வேறோர் முறை நெப்போலியன் கருத்தறிவித்தான்.

இங்கு இது; அங்குப் பாரிசில், நெப்போலியனுக்கு எதிராக ஒரு சதி உருவாகிறது, அது வளருமுன் வெளிப்பட்டு விடுகிறது, அதில் ஈடுபட்டோர், சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

எகிப்துப் படை எடுப்பு பேரிழப்பாகிவிட்டது என்ற செய்தி, பிரான்சிலே பரவி, தன் மதிப்பு மங்கி, வெறுப்பும் எதிர்ப்பும் மூண்டுவிடா முன்பு, தானே நேரில் சென்று அங்கு நிலைமையைச் சீர்படுத்தியாகவேண்டும் என்று தோன்றிற்று. எனவே படையினரை எகிப்தில் விட்டுவிட்டு, பாரிஸ் பயணமானான் நெப்போலியன். வழியிலே பிரிட்டிஷ் கடற்படை வீசிய வலையிலே விழாமல் தப்பினான் - பாரிஸ் வந்தடைந்தான் - கண்டதும் மக்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர். சிரியாவிலே நேரிட்ட சீரழிவு பற்றிய செய்தி எட்டவில்லை அதுவரையில் எகிப்து பிடிபட்டது - பிரான்சுக்கு அடி பணிந்தது - என்ற செய்தி மட்டுமே எட்டி இருந்தது. எனவே, இதோ எமது அலெக்சாண்டர், இவர் எமது சீசர் - என்று களிப்புடன் கூவினர், கொண்டாடினர் கோலாகல விழா நடத்தினர் பாரிஸ் மக்கள்.

நெப்போலியன் எகிப்து சென்று திரும்புவதற்குள், இத்தாலிய களத்திலும் ஆஸ்ட்ரியப் போலிலும் நெப்போலியன் ஈட்டிய பெருமைகள் அத்தனையும் பாழ்படும் படியான தோல்விகள் பிரெஞ்சுப் படைகளுக்கு அங்கெல்லாம் ஏற்பட்டு, பிரான்சின் மதிப்பு குன்றிக்கிடந்தது. வெற்றி மேல் வெற்றி பெற்றுத்தர அந்த ஒரு நெப்போலியனால் மட்டும்தான் முடியும் மற்றவர்கள் வெறும் ஆடம்பர உருவங்கள் என்று மக்கள் மனம் நொந்து பேசிக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையைப் பக்குவ
மாகப் பயன்படுத்திக் கொண்டு, சய்யீஸ், டுகோஸ், பாராஸ், கோசியர், மோலீன் எனும் ஐவர் பொறுப்பாளர்களாக இருந்து நடத்தி வந்த ஆட்சிக் குழுவை உருட்டி மிரட்டி, இடம் தனக்குத் கிடைக்கும்படியாகவும், குழுவை ஆட்டிப் படைக்கும் நிலை தனக்கு ஏற்படும்படியாகவும் நெப்போலியன் செய்து கொண்டான்.

ஐந்நூறு உறுப்பினர்கள் கொண்ட ஆட்சி மன்றத்தில், நெப்போலியனுடைய உடன்பிறந்தான் லூசியின் அவைத் தலைவராக இருந்தது, வாய்ப்பாகிவிட்டது.

இரத்தம் சிந்தாத முறையில், காற்றடித்துக் கனி காலடி வீழ்வது போல், ஆட்சி செய்யும் அதிகாரம் தன்னிடம் வந்து சேரத்தக்க சூழ்நிலையை உண்டாக்கினான்.

சர்வாதிகாரத்துக்குப் பணியமாட்டோம்! அரசியல் சட்டத்துக்கு வேட்டு வைப்பதைச் சகித்துக்கொள்ள மாட்டோம்! என்றெல்லாம், இலட்சிய முழக்கம் எழுப்பிப் பார்த்தனர்! ஆட்சி மன்றத்தினர். நெப்போலியன் நடத்திய நேர்த்தியான நாடகம் அனைவர் மனத்தையும கவர்ந்துவிட்டது.

படைவீரர்களும் ஆர்வம் கொந்தளிக்கும் மனத்தினரான மக்களும் நெப்போலியன் பக்கம். பொறுப்பாளர் பாராஸ் தமது செயலாளரை அனுப்பி இருந்தார் நிலைமைக்கான விளக்கத்தைக் கேட்டு வரும்படி, நெப்போலியனிடம். எதிரே கூடி இருந்தோர் உள்ளம் புல்லரித்துப் போயிற்று. நெப்போலியன் அப்போது நிகழ்த்திய உரை. பாராஸ் அனுப்பிய ஆசாமியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, மிகவும் உருக்கமான குரலில்,
“கீர்த்திமிக்க நிலையில் உங்களிடம் நான் ஒப்புவித்து விட்டுப்போன பிரான்சு நாட்டை என்ன செய்தீர்கள்? அமைதியை ஏற்படுத்திவிட்டுச் சென்றேன், வந்து காண்கிறேன், அமளியை! வெற்றி வீரர்களாக்கி விட்டுச் சென்றேன், இப்போது தோல்வி தாக்குகிறது, இத்தாலியிலிருந்து கொண்டுவந்த பெரும் பொருளைத் தந்துவிட்டுச் சென்றேன், இப்போது தவிப்பு, பிற்போக்குத்தனம், தொல்லைகளைக் காண்கிறேன். கீர்த்திமிக்க போர்களிலே என் உடனிருந்த ஆயிரமாயிரம் ஆற்றல் மறவர்கள் - இத்தாலிய களங்களிலே வெற்றி தேடித்தந்த வீரப்புதல்வர்கள் எங்கே? கொல்லப்பட்டுப் போயினர்” என்று நெப்போலியன் பேசினான் - அந்தப் பேச்சு, பிரான்சு நாட்டை ஆளும் பொறுப்பினை அவனுக்குத் தந்து விட்டது என்று கூறலாம். உயர்தரமான கறுப்புக் குதிரைமீது அமர்ந்தபடி நெப்போலியன் ஆற்றிய இந்த வீர உரை கேட்டவர்கள், நாடு நெப்போலியனிடம் ஒப்படைக்கப்பட்டா லன்றி இழிவு துடைக்கப்பட முடியாது என்று முடிவுக்கு வந்தனர். இழிவு துடைக்கப்பட வேண்டும், இரத்தம் கொண்டு கழுவினால் மட்டுமே, இழிவு போகும் என்றான் நெப்போலியன். சரி! தயார்! என்றனர் வீரர்கள். இரத்தம் பொங்கிற்று, மேலும் மேலும்; வெற்றிகள் கிடைத்தன ஒன்றன் பின் ஒன்றாக.

கிளம்பிய எதிர்ப்புணர்ச்சிகளை முறியடிக்க, படை நெப்போலியன் பக்கம் திரண்டுவிட்டது. ஆட்சி மன்றத்தின் அவைத் தலைவராக இருந்த லூசியன் உடன் பிறந்தானுக்காக உன்னதமான நாடகம் வேறு நடத்தினான். நெப்போலியன் ஆட்சி நடத்தும் பொறுப்பு ஏற்கவேண்டியதுதான், “ஆனால்... என்று கூறியபடி, வாளை உருவினான் லூசியன், நெப்போலியன் முயன்றால், கூர்வாளைப் பாய்ச்சுவேன் கொடியோன் மார்பில், கொன்று போடுவேன், உடன் பிறந்தவன் என்ற எண்ணம் துளியுமின்றி” என்று பேசினான். இதனைக் கண்ட மக்களின் கண்களிலே நீர் துளிர்த்தது.

லூசியனும் நெப்போலியனும் நடாத்திய நாடகம் வெற்றி பெற்றது, சய்யீஸ், டுகோஸ், நெப்போலியன் எனும் மூவரிடம் ஆட்சிப் பொறுப்பு தரப்பட்டது - அதிலே முதலிடம் நெப்போலி
யனுக்கு. பிறகு செய்து முடித்த அரசியல் திட்டங்களின் பயனாக முதலிடம், முழு இடமாகிவிட்டது. நெப்போலியன், ஈடு எதிர்ப் பற்ற நிலை பெற்றான்.

ஆட்சி மன்றங்கள் எதற்கும் நெப்போலியனைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் கிடையாது - ஆட்சி மன்றங்களுக்கு உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், மறைமுக வாக்கெடுப்பின் மூலம்! இப்படிப்பட்ட மாறுதல் புகுத்தப்பட்டது. அரண்மனையிலே அடைபட்டுக் கிடக்கும் அதிகாரங்களை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்திடத்தான் மாபெரும் புரட்சி நடந்தது; ஆனால் இப்போது, மாமன்னரிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் அனைத்தும் மாவீரனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. பட்டம் சூட்டிக்கொள்ள வில்லையே தவிர, பட்டத் தரசர்களுக்கெல்லாம் கிட்டாத அதிகார பலமும், மக்கள் ஒப்புதலும் நெப்போலியனுக்குக் கிடைத்தது.

புதிய மாறுதலுக்கு இசைவு தந்து 3,011,007 - மக்கள் வாக்களித்தனர்; மறுத்தவர் தொகை 1,562.
பத்து ஆண்டுகள் பதவிக் காலம் என்று அறிவிக்கப்பட்டது.

1799ஆம்ஆண்டு இந்த நிலை கிடைத்தது நெப்போலியனுக்கு.

1800ஆம் ஆண்டு, ஆல்ப்ஸ் மலையைக் கடக்கிறான், ஆஸ்ட்ரியாவைச் செம்மையாகப் புடைத்து மாராங்கோ எனும் களத்தில் வெற்றிபெறுகிறான்.

இழிவு துடைக்கப்பட்டது என்று எக்களிப்பு, மக்களுக்கு. இத்தகைய வெற்றி பெற்றளிக்கத்தக்கவனை பத்து ஆண்டுகளாக, அவன் உயிருள்ள மட்டும், அதிபராகக் கொள்ளலாமே! என்றனர் மக்கள் ஆர்வத்துடன்.
தோற்கடிக்கப்பட்ட ஆஸ்ட்ரியாவுடன் தொடர்ந்து பகை கொண்டால், மற்ற களங்களிலே கவனம் செலுத்த இயலாது என்பதால், 1801இல் ஆஸ்டரியாவுடன் சமாதானம் செய்து கொண்டான். போப்பாண்டவருடன் மூண்டு கிடந்த பூசலையும் விட்டொழித்து சமரசம் ஏற்படுத்திக் கொண்டான். 1802ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் நேச ஒப்பந்தம் செய்துகொண்டது நீடிக்கவில்லை, மறு ஆண்டே போரிடவேண்டி நேரிட்டது.

இதற்கிடையில், மிரண்டோடிய போர்போன் வம்ச மன்னர் குடும்பத்தினரும், இங்கிலாந்து போன்ற பகை நாடுகளும் மூட்டி விட்ட கூட்டுச் சதியால்; நெப்போலியனைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டது. தப்பித்துக்கொண்டான். ஆபத்து நீங்கியது மட்டுமல்ல, அதே ஆபத்தைக் காரணம் காட்டி, நெப்போலியனுடைய நிலையை மேலும் பாதுகாப்புள்ளதாக உயர்த்திடவேண்டும் என்ற திட்டமும் ஏற்பட்டது.

1804ஆம் ஆண்டு ஏழாவது பயஸ் எனும் போப்பாண்டவர், நெப்போலியனுக்கு முடிசூட்டுவிழா நடத்தினார்; ஆற்றலால் அதிபனானான். இப்போது அருளும் கிடைத்து விட்டது. எட்டுக் குழந்தைகள் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து, கடினமாக உழைத்து களம் பல சுற்றிப் போரிட்ட நெப்போலியன் அரசர்க்கரசன் ஆனான்; ஆக்கப்பட்டான், மன்னன் வேண்டாம்! அப்படி ஒருவனை உயர்த்திவிடுவது மக்களின் உரிமைக்கு உலை வைக்கிறது என்று கூறிப் புரட்சி நடத்திய பிரான்சு நாட்டிலே மன்னனுக்குப் பதிலாக மாமன்னன் அரசோச்சலானான்!

1805ஆம் ஆண்டு, இத்தாலி நாட்டுக்கு மன்னன் ஆனான் - அதற்கும் ஒரு தனி முடிசூட்டு விழா.
நெப்போலியனுடன் ஜோசபைனுக்கும் முடிசூட்டு விழா நடந்தது. முதற் கணவன், சீமான் என்பதற்காக வெட்டிக் கொல்லப்பட்டான். புரட்சி அரசினால், மூன்று மாதம் ஜோசபைனையும் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள், இப்போது அவள் மணிமுடி தரித்துக்கொண்ட மகாராணி! எச்சிற்கலம் என்று ஏளனம் பேசினோர் என்ன ஆயினர்? மகாராணி முன் மண்டியிடுகிறார்கள்! உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் மணிமுடிகள்.

பிற்காலத்திலே நெப்போலியன், தனக்குற்ற நண்பர்களுக்கு, தங்கத்தாலானதும், தந்தத்தாலானதுமான பொடி டப்பாக்களைப் பரிசளித்தான் - மாமன்னனான காலத்தில், வேண்டியவர்களுக்கெல்லாம் மணி முடிகளைப் பரிசளித்தான்.

ஆலந்துக்கு அதிபன் ஜோசப், நேப்பிள்ஸ் நாட்டு மன்னன் லூயி, வெஸ்ட்பேலியா வேந்தனானான் ஜெரோம்! - இரண்டு ஆண்டுகளானதும் ஜோசப், ஸ்பெயின், நாட்டுக்கு மன்னனாக்கப்பட்டான். மணிமுடிகள், நெப்போலியனிடம் பூப்பந்துகளாயின!

ஆஸ்ட்ரியா, பிரஷ்யா, ரஷ்யா, இந்த மூன்று நாடுகளும், நெப்போலியனுடைய கண்களை உறுத்திக் கொண்டிருந்தன. கருத்தை மருட்டிக்கொண்டிருந்தன. தனித்தனியாக இவற்றைத் தீர்த்துக்கட்ட முனைவான் ஒருமுறை; இவற்றுக்குள் கிலேசம் ஏற்படுத்தி வலிவைப் பிளந்திட நினைக்கிறான் ஒருமுறை! ஒவ்வொரு முறையிலும் வெற்றி கிட்டுகிறது, ஆனால் நிலைக்கவில்லை; நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டது போலத் தெரிகிறது. ஆனால் மீண்டும் தலைதூக்கிப் போரிட முனைகின்றன இந்த நாடுகள்.

பேரரசு அமைக்க நான் எண்ணியதற்குக் காரணமே, அப்போதுதான் அமைதி ஏற்பட்டு, ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு, மக்கள் வளம் நிரம்பிய வாழ்வு பெறுவர் என்று நெப்போலியன் தத்துவம் பேசினான் - ஓரரசு - பேரரசு - ஆற்றலரசு - என் அரசு - என்று எழுச்சியுடன் முழக்கமிட்டான். ஆனால், ஒவ்வோர் இடத்து இன, தேசிய உணர்ச்சிகளை மாய்த்துக் கொள்ள, மன்னர்கள் மட்டுமல்ல, எந்த நாட்டு மக்களும் ஒப்புவதில்லை. சில வேலைகளிலே தாங்க முடியாத தாக்குதல் காரணமாக, தமது உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளக்கூடும், ஆனால் அவை அடியோடு மாய்ந்துவிடுவதில்லை - ஏனெனில் அந்த உணர்ச்சி ஊனில் உயிரில் கலந்துவிட்டிருக்கிறது. தலைமுறை தலைமுறை யாகப் பையப்பைய வளர்ந்தது அந்த உணர்ச்சி. காவியத்திலும் ஓவியத்திலும் கலந்து நிற்கிற மொழி, அதற்கான வழிகாட்டுகிறது. இத்தகைய உணர்ச்சியை உருக்குலைக்க முனைவானேன்? பல தனித்தனி வடிவங்களைப் பொடிப் பொடியாக்கி, புதிய கலவை முறை கண்டுபிடித்து, பேருரு அமைப்பானேன்? நெப்போலியன் இதற்கான விளக்கம் தரவில்லை. பேரரசு அமைக்கவேண்டும் என்று கூறினான் - தக்க பொருள் அமைப்பு காரணம் காட்ட முடியவில்லை.

ஐரோப்பாவில் அமளியற்ற நிலை ஏற்பட்டுவிட்டால், பிறகு இங்கிலாந்தை ஒழித்துக்கட்ட எளிதாக முடியும் என்பது அவன் எண்ணம்.

இங்கிலாந்து பிற்போக்காளர்களின் பிறப்பிடம், பிரபுக்களின் கொலுக்கூடம், என்பது நெப்போலியன் கொண்ட கருத்து, சுரண்டிப் பிழைப்பதும் சுகபோகம் அனுபவிப்பதும், இதற்குச் சூது முறைகளை மேற்கொள்வதும் இங்கிலாந்து நாட்டுப் பரம்பரைக் குணம் என்று கண்டிப்பது வாடிக்கை.

வீரதீர மிக்கவர்கள் அல்ல, இங்கிலாந்து நாட்டவர், பெட்டிக் கடைக்காரர்கள் அந்நாட்டு மக்கள் என்று ஏளனம் செய்வான்.

அங்கிருந்து கிளம்பிய வெலிங்டன் தான், தன்னை இறுதியாக வீழ்த்தப் போகிறான் என்று நெப்போலியன் துளிகூட எண்ணவில்லை.

இங்கிலாந்திடம் ரஷியாவோ, ஆஸ்ட்ரியாவோ, தன்னைப் போலவே பகைகொண்டுவிட்டால், திட்டம் எளிதாக வெற்றி பெறும் என்ற எண்ணம்கொண்டு, ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு நாட்டுடன் நேச உறவு ஏற்படுத்திக்கொள்ள முனைந்தான்.

ரஷியா, பிரஷ்யா, ஆஸ்ட்ரியா எனும் இம்மூன்று அரசுகளும் கூட்டுச் சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதே போது இவை ஒவ்வொன்றும், பிரான்சு நாட்டின் ஆதிக்கத்தை மறுக்கக்கூடாது, இங்கிலாந்திடம் நேசத் தொடர்புகொள்ளக் கூடாது - இது நெப்போலியன் நடத்திக்காட்ட விரும்பிய திட்டம்.

கூட்டாகப் பணியாற்றினால் மட்டுமே, நெப்போலியனைச் சமாளிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டதற்குக் காரணம், அச்சமூட்டத்தக்க விதமான வெற்றிகளை, நெப்போலியன் பெற்றதுதான். 1805 - 1806 - 1807 - ஆண்டுகளில், நெப்போலியன், இந்த மூன்று நாடுகளும் ஆஸ்ட்டர் லிட்ஸ், ஜினா, பிரயிட்லாண்டு எனும் களங்களில் திடட்மிட்டு முறியடித்தான். ஏராளமான இரத்தம் பொங்கிற்று, ஆனால் நெப்போலியனுடைய புகழ் உலகெங்கும் எதிரொலித்தது.

டில்சிட் என்ற இடத்தில் ரஷிய அதிபருடன் நெப்போலியன் நேச உறவு கொண்டான்; அது ஒரு விழாவாக, வெற்றி வைபவமாகக் கொண்டாடப்பட்டது. “ஐரோப்பாவின் இப்புறத்தில் நான், அப்புறத்தில் தாங்கள், ரஷிய அதிபரே நமக்குள் நேசக் கூட்டுறவு நிலைத்துவிடுகிறது. இங்கிலாந்து நாடு இனி என்ன செய்யும்! தீர்த்துக்கட்டி விடுகிறேன். உலகிலே கீழை நாடுகளிலே இங்கிலாந்து பெற்றுள்ள பூபாகங்களை நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம்” என்று பூரிப்புடன் நெப்போலியன் கூறினான். புகை வெளியே தெரியவிடாமல் நெருப்பை மூட்டத்தக்க தந்திரம் கொண்ட ரஷிய அதிபர், அலெக்சாண்டர், சொல்லவேண்டுமா! தெரியாதா! என்பன போன்ற இருபொருள், மறைபொருள் பேச்சுப் பேசி, நெப்போலியனை ஏமாளியாக்கினான்.

ஆற்றல் அளவு கடந்தது, கட்டுக்கடங்காத ஆவல் - எனவே நெப்போலியன் மனத்திலே, அலை அலையாக எண்ணங்கள், விதவிதமான திட்டங்கள் குமுறி எழுந்த வண்ணம் இருந்தன.

இங்கிலாந்தைத் தாக்கவேண்டும் என்ற திட்டம் வெற்றி பெறுவதற்கு வெகு பாடுபடவேண்டும், ஆற்றல் அனைத்தையும் செலவிடவேண்டும். இங்கிலாந்திலே என் படை இறங்கினால், சில மணி நேரம் போதும், அந்நாட்டவரை நையப் புடைத்து வீழ்த்த என்று இறுமாந்து பேசினான் நெப்போலியன். - வீரன், ஐயமில்லை, வெற்றி பெற்றுமிருப்பான், மறுத்திட இயலாதுதான், ஆனால் இங்கிலாந்து நாட்டிலே படைகள் இறங்க வேண்டுமே! இடையே உள்ள கடலில், பிரிடடிஷ் கப்பற்படை விழிப்புடன் இருக்கிறது. எத்தனையோ களங்களில் வெற்றிபெற்ற பிரான்சு, கடற்போரில் இங்கிலாந்திடம் டிராபால்கர் எனும் போரில் தோற்றுத்தானே இருக்கிறது.

இதனை எண்ணும்போது நெப்போலியனுக்கு எரிச்சல் மேலிட்டது, அச்சம் எழவில்லை.

சரி, இங்கிலாந்தைத் தாக்குவதையே ஒரே குறிக்கோளாக வாவதுகொண்டு செயலாற்ற முடிந்ததா என்றால், இல்லை - இடையில் பல இடங்களில் பகை மூள்கிறது.

1807இல் போர்ச்சுகல்மீது படை எடுப்பு.

1808இல் ஸ்பெயினைத் தாக்கிப் பிடிக்கிறது பிரெஞ்சுப் படை; ஜோசப் மன்னனாக்கப்படுகிறான்.

ஸ்பெயின், இங்கிலாந்தின் துணை நாடிப்பெறுகிறது; அங்கு இருந்துகொண்டு, வெலிங்டன் ஆறு ஆண்டுகள் போர் நடத்துகிறான் - வாடர்லூவுக்கு ஒத்திகை நடத்துவது போல. 1808 முதல் 1814 வரையில் ஸ்பெயினுக்காக நடைபெற்ற போரில், பிரான்சு மிக அதிக அளவிலே இரத்தம் கொட்டி, தோற்றது.

நேச உறவு கொண்டிருந்த அலெக்சாண்டர், கெக்கலி செய்யாதிருப்பாரா? நையப் புடைத்த பிறகுதானே, நெப்போலியன் அவரிடம் நேசக்கரம் நீட்டினான். இப்போது பிரான்சின் புகழ் பாழ்படும்படி ஸ்பெயினிலே தோல்வி - ஏற்பட்டது கண்டதால்,

இனி நெப்போலியனுக்கு இறங்குமுகம் கண்டுவிட்டது என்று எண்ணி, எதிர்ப்புக் காட்டலானான் ரஷிய அதிபன். நேச உறவு கெடாதபடி பார்த்துக்கொள்ள, ரஷிய அதிபருடன் நெப்போலியன் எர்பர்ட் எனும் இடத்தில் பேசுகிறான் - பாவனைதான் அதிகம், உண்மைப் பாசம் எழவில்லை.

1809இல், வாக்ராம் எனும் களத்தில், மறுபடியும் ஆஸ்ட்ரியாவை முறியடித்து நெப்போலியன் தன் புகழை நிலை நாட்டுகிறான்.

ஓர் இடத்திலே தோல்வி ஏற்பட்டால், இழிவு உண்டாகிறது. உடனே அதனைத் துடைத்தாகவேண்டும், இல்லையென்றால், உள்நாட்டிலே மதிப்பு மங்கிவிடும், எனவே, வேறு ஓர் களம் ஏற்படுத்திக்கொண்டாகிலும் வெற்றிபெற்றுக் காட்டித் தீரவேண்டி ஏற்படுகிறது.
நெப்போலியன் சில நிலைமைகளை உண்டாக்கிவிட்டான் முதலில்; பிறகு அந்த நிலைமைகள் அவனை ஆட்டிப்படைக்க லாயின.

பரம்பரை மன்னர்கள் பலமுறை தோற்கலாம் பாதகமில்லை; மக்கள் மன்னனிடம் கொண்டுள்ள மதிப்பைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள்; அந்த மதிப்பு ‘பக்தி’யாகி விட்டிருக்கிறது; என் நிலை அப்படிப் பட்டது அல்ல; ‘ராஜ பக்தி’ எனும் அடிப்படைமீது நான் நின்று கொண்டில்லை; ஆற்றலால் அரசாளும் நிலை பெற்றேன்; அந்த ஆற்றல் குறைகிறது, குலைகிறது என்றால் களத்திலே தோல்விகள் கண்டால், போற்றுவோர் தூற்றத் தொடங்குவர், வாழ்த்தி நிற்போர் வசைபாடுவர், அடங்கிக் கிடப்போர் ஆர்ப்பரிப்பர்; ஆபத்து ஏற்படும் என் பதவிக்கு”

என்று நெப்போலியன் ஒருமுறை கூறினான். முற்றிலும் உண்மைதான்! ஆனால், பல இலட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து, இரத்தம் பொங்கச் செய்து வெற்றிகளைப் பெற்று ஒரு தனி மனிதனின் நிலையை. பதவியைக் காப்பாற்றிக் கொள்வதால், அவனைத் தாங்கி நிற்கும் நாட்டுக்கும், பின்பற்றும் மக்களுக்கும் என்ன பலன் கிடைக்கிறது, வெற்றி! வெற்றி! மகத்தான வெற்றி! என்ற முழக்கம்தானே அவர்கள் கண்ட பலன். உரிமைகள் அழிகின்றன; வாழ்வு ஆபத்துச் சூழ்ந்ததாகிறது, பொருள் பாழாகிறது; மக்களிடம் மிருக குணம் மேலோங்கி விடுகிறது; தேவைதானா?

களங்களிலே இந்த நிலை எனில், பிரான்சு நாட்டு அரசியலிலேயும் பல, புதிய சிக்கல்கள்!

நெப்போலியனைக் கொல்லச் சதிகள்! எதிர்க்க ஏற்பாடுகள்! விரட்ட திட்டங்கள், அவ்வப்போது எழுகின்றன. திறமைமிக்க போலீசுப் படையும் உளவாளரும் இருப்பதாலும், இவர்களைவிடத் திறமையாக நெப்போலியன் எந்தக் காரியத்தையும் கவனித்துக் கொள்வதாலும், சதிகாரர் வெற்றி பெறவில்லை.

நண்பர்கள் கூறுகிறார்கள், வாரிசு இல்லாதவராகத் தாங்கள் இருப்பதால்தான், சதிகாரர்கள் தங்களைத் தீர்த்துக் கட்டிவிட்டால் பழைய மன்னர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று எண்ணு
கிறார்கள். ஆகையால்...

“என்ன செய்ய வேண்டும்?”

“நாட்டுக்கு ஓர் இளவரசன் வேண்டும், மகன் வேண்டும்”

“ஜோசபைன், தாயாக வேண்டும்”

“ஆகக் காணோமே, அறிகுறியும் இல்லையே...”

“அவள் அழகும் என் ஆற்றலும் கலந்து ஒரு குழந்தை பிறந்தால்...”

“நாடே கொண்டாடும், ஆனால் எதிர்பார்த்து ஏமாற்றம் தான் காண்கிறோம். ஆகவே...”

“ஆகவே...?”

“தாங்கள் வேறோர் திருமணம் செய்துகொள்ள வேண்டும்...”

“ஜோசபைன் இருக்கும்போதா! என் காதலரசி இருக்கும் போதா?”

“இன்றுபோல் என்றும் ஜோசபைன், காதல் அரசியாக இருக்கட்டும். பட்டத்தரசியாக வேறோர் பாவையைத் தேடித் திருமணம் முடித்துக்கொள்ளவேண்டும். அவர்கள் நாட்டுக்கு ஓர் இளவரசனைப் பெற்றளித்தால், பேராபத்து யாவும் மடிந் தொழியும்.”