அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
5

மாவீரன் நெப்போலியன் இதுபோல எழுச்சியூட்டினான்? போர் வீரர்கள் எத்தகைய உணர்ச்சிவயப்பட்டிருப்பார்கள் என்பதனைக் கூறவும் வேண்டுமா? முன்னேறிச் சென்றனர் - மூடுபனிக்கு இடையே படைகள் பாய்ந்தன - எதிரிப்படை வரிசைகளைத் தாக்கினர் - நிலைகுலைந்தது - குணம் குவிந்தது - இரத்தம் பொங்கிற்று - வெற்றி மலர்ந்தது.

நெப்போலியன் பெற்ற வெற்றி, அதைப் பெற அவன் தீட்டிய திட்டம், போர் வீரர்கள் வட்டத்திலேயே ஓர் புதிய கிலியைக் கிளப்பிவிட்டது.

எப்படி முடிந்தது இத்தனை மகத்தான வெற்றி பெறும் - என்று கேட்டுக் கேட்டு வியந்தனர். பாரிசில் விழா! நெப்போலி யனுடைய பெயர், ஒவ்வொருவர் பேச்சிலும். நெப்போலியன் நடத்திச் சென்ற படையிலிருந்தவர்களுக்கே பெரும் வியப்பு. முன்னேறித் தாக்கினால் வெற்றி பெற்றிடலாம் என்று நெப்போலியன் கூறியபோதுகூட, வழக்கமான பேச்சு இது என்றுதான் எண்ணிக் கொண்டனர் - நம்பிக்கை முழு அளவில் இல்லை. ஆனால் வாக்களித்தான்; வெற்றி கிடைத்துவிட்டதே! இவனன்றோ பெருந்தலைவன்! இவனை நம்பிச் செல்லலாம் எந்தக் களம் நோக்கியும் - என்ன ஆபத்துகள் குறுக்கிடினும்; கவலையின்றி! நம்மை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் வீரத் தலைவன் நெப்போலியன் - களம் செல்வது என்றால் இத்தகைய மாவீரன் தலைமையிலே செல்லவேண்டும். நெப்போலியன் காட்டிடும் வழி நடப்போம், வெற்றிபெற்றுப் புகழ்க் கொடி நாட்டுவோம்! - என்று கூறிக் கொண்டாடினர், போர் வீரர்கள். படையினருக்கும் நெப்போலியனுக்கும் முன்பே எற்பட்டிருந்த நேசம், பாசமாகிவிட்டது. இனி இது பிரான்சு நாட்டுப் படை மட்டுமல்ல, நெப்போலியனின் படை! வெற்றி பெற்றுக் காட்டிடும் வீரப்படை!!

விழாக்கள் நடத்திக் கொண்டு காலத்தை வீணாக்கவில்லை. ஒவ்வொரு எதிரி முகாமையும் சுற்றி வளைத்துக் கொண்டுவோர் தாக்கித் தகர்த்துவிட்டு, அவர்கள் சரண் அடையும் நிலையை ஏற்படுத்தும் வரையில் நெப்போலியன் ஓயவில்லை.

நெப்போலியன் நடத்திச் சென்ற படையிலே ஒரு தனித் தன்மை இருந்தது. வாலிப முறுக்கினர். போர்த்திறன் மிக்கவர்கள், தளபதிகளாக்கபட்டிருந்தனர். நரைத்த தலையினர், நாற்பதாண்டுக் காலப் போர்க்கள அனுபவம் பெற்றவர்கள். இத்தகைய முதியவர்களே, படைத்தலைமை ஏற்கவேண்டும் என்ற பழைய முறையை நெப்போலியன் மாற்றிவிட்டான். அவனே முப்பதாண்டினன்! எதிரிப் படைகளின் தலைவர்களோ பழங்கதைபேசிடும் பருவத்தினர் - ஆஸ்ட்ரியப் படைத் தலைவருக்கு வயது 72. மற்றோர் படைதலைவர் 60 வயது - காது செவிடு! கீல்வாதம்! வாலிப முறுக்கினர்களே பெரிதும் கொண்ட பிரெஞ்சுப்படை, துணிச்சலாகப் பாயும்போது, அந்த முதியவர்கள் தலையை அசைத்தபடி, இலக்கணப்படி சரியல்லவே! சமரிடும் முறை இது அல்லவே - சாகத் துடித்துக் கொண்டு வருபவர் போலல்லவா வருகிறார்கள் என்று முணுமுணுத்தனர். இவர்கள் போர்முறை இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது படைகளை முறியடித்தபடி வேறு பக்கம் பாய்ந்து கொண்டிருக்கும் நெப்போலியன் படை.

படையிலே இருக்கிறோம்; ஆகவே போரிடுகிறோம் என்று மட்டும் எண்ணம் கொண்டிருந்தால், ஒரு படை வீரர் படையாக, வெற்றிப் படையாக முடியாது. நாட்டின் பெருமைக்காகப் போரிடுகிறோம் என்ற உணர்ச்சி எழவேண்டும்; பெருமைப்படத் தக்கது நம்நாடு என்ற உணர்ச்சியும் மேலோங்கி இருக்க வேண்டும். எப்படி இருப்பினும் என் நாடு! எது செய்தாலும் என் நாடு செய்வதே எனக்கு நியாயமானது என்ற குருட்டுப் போக்கைவிட, என் நாடு செய்வதே எனக்கு நியாயமானது என்ற குருட்டுப் போக்கைவிட, என் நாடு ஏற்றம் பெற்றது, என்று நாட்டின் நினைப்பும் நடவடிக்கையும் நியாயமானது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் போரிடும் ஆர்வம் கொழுந்துவிட்டு எரியும். நெப்போலியன் காலத்துப் படையினருக்கு, பிரான்சு நாடு பற்றி பெருமித உணர்ச்சி இருந்தது. பன்னெடுங் காலமாகக் கொட்டமடித்து வந்த பட்டத்தரசர்களின் ஏவலை நிறைவேற்றுவதற்காகக் கூலி பெற்றுவந்த கும்பல் என்ற இழிவைச் சுமந்து கொண்டு இருந்த படையினர், புரட்சி பூத்த பிறகு, புதுமுறை கண்டு பூரித்தனர்; பெருமை கொண்டனர். அது மட்டுமல்ல, புது முறைக்கு ஆபத்து ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தம்முடையது என்று உணர்ந்தனர்; விரட்டப்பட்ட பிரான்சு மன்னர்கள் - போர்போன் வம்சத்தினர் - ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலே சதிக்கூடங்களை அமைத்திருந்தனர். பல்வேறு நாட்டு மன்னர்கள், மீண்டும் பிரான்சிலே போர்போன் வம்சத்தை முடிதரிக்கச் செய்தால் மட்டுமே, முடியாட்சி முறை நிலைக்கும், தமது அரசுரிமையும் காப்பாற்றப்படும் என்று கருதி வேலை செய்து வந்தனர். எனவே, பிரெஞ்சுப் படை, வேறு ஓர் நாட்டின் மீது படை எடுப்பதாக மட்டும், போர் அமையவில்லை; வெகு பாடுபட்டுக் கண்டெடுத்த குடியாட்சி முறையில் பகைவர்களை அழித்திடும் இலட்சியப் போராகவும் அமைந்தது.

குடியாட்சி முறை குறித்து நெப்போலியனுக்கு மதிப்பு அதிகம் கிடையாது. அவனுடைய திட்டம் திறமையாளர் அரசு நடத்த வேண்டும் என்பதுதான். எனினும், குடியாட்சி முறைக்குக் கேடு செய்வோரைச் சாடுகிறோம் என்று படையினர் இலட்சியம் கொள்வதால், வீரம் கொப்பளிக்கிறது என்பது அறிந்து அந்த உணர்ச்சியை வளரச் செய்தான்! பிரான்சு நாட்டுப்படை பிறர் பீதிகொள்ளத் தக்க துணிவுடன் போரிட்டதற்கு இது ஒரு காரணம். மற்றொன்று, வெற்றி பெற்றுத் தரத்தக்க படைத் தலைவனால் நடத்திச் செல்லப்படுகிறோம் என்ற உற்சாகம்.

“பீரங்கிகள் இல்லாமலேயே பெரும் போரில் வெற்றி பெற்றீர்கள்! பாலங்களின்றி ஆறுகளைக் கடந்தீர்கள்; காலணியின்றிக் கடுவழி நடந்தீர்கள்; உணவு போதுமானது இல்லை. எனினும் நெடுவழி சென்றீர்கள், வீரர்கள்! எனது நன்றி, உங்கட்கு. நாடு, உம்மை வாழ்த்த, நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறது. வளமும் வாழ்வும் நாட்டுக்கு வழங்குபவர் நீங்களே!”
படைத் தலைவன் இதுபோலப் பேசிடக் கேட்கும்போது, பட்ட கஷ்டம் அத்தனையும் பறந்தோடிப் போகாதா! வடுக்கள் இருக்கும்; வலி மறைந்துவிடும்! புண் இருக்கும்; புகழ் அதைப் போக்கும் மாமருந்தாகிவிடும்!

இத்தகைய உற்சாகம், எழுச்சி, ஊட்டிட வல்லவன் நெப்போலியன். அவனிடம் பாராட்டுப்பெற ஒவ்வொரு படைப் பிரிவும் ஆவல்காட்டும். வீரம் காட்டத் தவறினாலோ நெப்போலியன் வெகுண்டுரைப்பான். அதைத் தாங்கிக் கொள்ள அஞ்சுவர்.

ஆஸ்ட்ரியப் படையின் தாக்குதலைக் கண்டு பீதி கொண்டு படைப் பிரிவுகளில் இரண்டு பின்வாங்கி ஓடின. நெப்போலியன், அந்தப் பிரிவினரை மற்றவர் முன்பு அணிவகுத்துச் செல்லச் செய்து கடுங்கோபத்துடன் கண்டித்து, அந்தப் பிரிவுகளின் கொடிகளிலே, “இவர்கள் இத்தாலிய எதிர்ப்புப் படையினர் அல்ல - இனி -” என்ற கண்டனத்தைப் பொறித்திடச் செய்தான். சுட்டுத் தள்ளுவது, கட்டி வைத்து அடிப்பது, கொட்டடியில் போட்டு அடைப்பது போன்றவற்றைகளைவிட, இந்தக் கண்டனமுறை, வாட்டிவதைத்தது. இழிவைச் சுமக்கச் சொல்லி அல்லவா, தண்டனை! அப்பிரிவினர், ‘மற்றோர் வாய்ப்பளியும் எமது வீரத்தை விளக்கிட’ என்று கேட்டு மன்றாடினர்.
உள்ளத்தைத் தொடத்தக்க புதிய முறைகள் இதுபோலப் பலப்பல.

நெப்போலியன் இத்தாலியக் களத்திலே நடத்திய பல போர்களுக்கான செலவுக்காக, அவ்வப்போது பிரான்சிலிருந்து பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டுத் தொல்லை தரவில்லை. போர் செலவுக்கான பணத்தை, பெற்ற வெற்றிகளின் மூலமே திரட்டிக் கொண்டான். பிரான்சு அரசுக்கு, பெரும் செலவு இல்லாமலேயே, பல வெற்றிகள், பல நாடுகள் கிடைத்தன.

இத்தாலி நாடு, கலைக்கூடம் அல்லவா. அங்கிருந்து ஏராளமான கலை அழகுப் பொருள்களை, காலத்தை வெல்லும் கீர்த்தி மிக்க ஓவியங்களை, நெப்போலியன், பிரான்சு நாட்டுக்கு அனுப்பிவைத்தான்.

இத்தாலி நாட்டிலே, ரோம் அரசிலே, பெரும்படை தலைவனாக இருந்த ஜுலியஸ் சீசர் தான் வெற்றிபெற்ற நாடுகளிலிருந்து அரிய பொருள்களை ரோம் நகர மக்கள் கண்டு மகிழவும் பெருமைப்படவும் அனுப்பிவைத்தான் - முன்பு. இப்போது ஜுலியஸ் சீசர் வெற்றி நடை போட்ட வீரக் கோட்டத்திலிருந்து விதவிதமான கலைப் பொருள்களை, நெப்போலியன் பிரான்சுக்கு அனுப்பி வைத்தான். அந்தப் பொருள்கள் ஒவ்வொன்றும் நெப்போலியனுக்காகப் பரிந்து பேசி, செல்வாக்கைத் தேடித்தரும், தூதுவர் போன்றவை அல்லவா! எவரும், நெப்போலியனைப் பற்றியே பேசி வந்தனர். நெடுந் தொலைவில், ஆல்ப்ஸ் மலைக்கு அப்பால் இருக்கிறான், நெப்போலியன் ஆனால் ஒவ்வொரு பிரான்சுக்காரன் உள்ளத்திலும் உலவுகிறான் - எப்படி என் வீரம்? என்ன என் எதிர்காலம்? என்று கேட்டபடி.

வெற்றி, வெறி உணர்ச்சியைக் கிளப்பிவிடும். படை வீரர் தோற்ற மக்களைக் கொடுமைப்படுத்துவர் - கொள்ளை - கொலை - கற்பழித்தல் போன்றவை தலைவிரித்தாடும். இதனால் வெறுப்பும் வேதனையும் பெருகும் - எந்த நாட்டுப் படையினர் தீயசெயலைச் செய்கின்றனரோ அந்த நாட்டின் மீது அடக்கொணா வெறுப்பு உலகினருக்கு ஏற்பட்டுவிடும். உலகே கண்டு கிலி கொள்ளத்தக்க படை எடுப்புகள் நடத்திய செங்கிஸ் கான், தைமூர் போன்றவர்கள், தமது படையினர் எத்தகைய கொடுமை செய்திடவும் இடமளித்ததால் துடைக்கப்பட முடியாத இழிவும் பழியும் அவர்களின் பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. பெரும்போர் நடத்தும் முறை மட்டுமல்லாமல், பின் விளைவுகள் பற்றியும் நன்கு அறிந்திருந்த நெப்போலியன், வெற்றிக்குப் பிறகு, படையினர் சற்று, கட்டுமீறி நடந்து கொண்டதைக் கண்டும் காணாததுபோல இருந்துவந்தான். பல நாட்களாகத் தொல்லைப்பட்டார்கள். சில நாள் களியாட்டம் தேடுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் கட்டு குலையும் முறையில், கெட்டபெயர் ஏற்படும் விதத்தில், நடந்து கொள்ள அவர்கள் முனைந்ததும், மிகக் கடுமையான எச்சரிக்கை பிறப்பித்தான்.

‘வெற்றி, வெறியாகக் கூடாது; வீரர்கள், கொள்ளைக் காரர்களாகக் கூடாது; பெற்ற பெருமையைப் பாழ்படுத்தும் கெட்ட காரியத்தில் ஈடுபடுவோர் சுட்டுத் தள்ளப்படுவார்கள்’ என்று கண்டிப்பான அறிவிப்பு வெளியிட்டு, படையினரைக் கட்டுக்குக் கொண்டு வந்தான். எனினும், படையினர் கொள்ளை அடிக்க நெப்போலியன் அனுமதி அளித்தான் - இது ஒரு பெருந்தலைவனுக்கு இழுக்கு என்று சிலர் குற்றம் சாட்டினர்.

போர் நிறுத்தம் ஏற்பட்டது - சார்டினியா சமாதானமாகப் போகச் சொல்லி வேண்டிக் கொண்டது. பிரான்சு நாட்டு ஆட்சிக் குழுவினர், சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு, அதனைக் களத்திலே இருந்த நெப்போலியனுக்கு அறிவித்தனர்.

“சார்டினியாவிடம் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் வரப்பெற்றேன். படை, அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்பம் அளிக்கிறது” என்று நெப்போலியன், அரசுக் குழுவினருக்கு அறிவித்தான்.
நெப்போலியன் எழுதிய முறைகண்டு, அரசு நடாத்தும் பொறுப்பாளர்கள் அஞ்சினர்.

படை ஒப்பம் அளிக்கிறதாமே - கேட்டீர்களா இந்தப் பேச்சை - பார்த்தீர்களா இந்தப் போக்கை - புரிகிறதா இதனுடைய உட்பொருள்! நாம் அரசு நடாத்துகிறோம். நமது நாட்டுப் படைகளிலே ஒரு பிரிவை நடத்தச் சொல்லி நாம் வேலை கொடுத்தோம் - இவன் எழுதுகிறான், நமக்குப் படை கப்பம் அளிக்கிறது என்று போர் தொடுக்க, போர் நிறுத்த, அரசு உரிமை பெற்றது - முழு உரிமை. அரசு பிறப்பிக்கும் ஆணைக்கு ஏற்றபடி, படை நடந்து கொள்ளவேண்டும். இதுதானே ஆட்சி, மக்களாட்சி, படை ஒப்பம் அளிக்கிறதாமே, ஆணை பிறப்பிக்கும் அரசுக்கு! இது என்ன முறை? படை ஒப்பம் அளிக்கவேண்டும் என்றா எழுதிக் கேட்டோம். ஏதோ நாம் எழுதிக்கேட்கக் கடமைப்பட்டவர்கள் போலவும், அதன்படியே, எழுதி அனுப்பியது போலவும்-, அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை மறுக்கும் உரிமைகூட படைக்கு இருப்பது போலவும், ஆனால் ஏதோ தயவு வைத்து ஒப்பம் அளிப்பது போலவும் அல்லவா இருக்கிறது, நெப்போலியன் பயன்படுத்தும் வார்த்தைகள்.

ஆணவப் பேச்சுக்காரன்! மக்களாட்சியை மதிக்காத மமதையாளன். இவனை வளர விடுவது ஆபத்து! பிடித்திழுத்து வந்து சுட்டுத் தள்ளவேண்டும்! - என்று ஆட்சிக் குழுவினர் சிலர் கொதிப்புடன் கூறினர்.

‘ஆண்டவன் அருளால் அரசனானேன்’ - என்று கூறிடும் மன்னர்கள் காலத்தில், மன்னர்களை மிஞ்சக்கூடிய திறமையும், மருட்டக்கூடிய வலிவும் பெற்று படைத்தலைவன் இருந்தாலும், ஆபத்து வராது - மன்னனை எதிர்ப்பது மாபாவம் என்ற பயத்தால் கட்டுண்டு கிடக்கும் மக்கள், மன்னனைக் கவிழ்க்க, படைத் தலைவன் கிளம்பினால் ஆதரிக்கமாட்டார்கள். மக்களாட்சிக் காலத்தில்அவ்விதமல்ல; தங்களைப் போன்ற சாமான்யர்கள், தங்கள் தயவை நாடி அரசாளும் உரிமையைப் பெற்றுள்ளனர் - நாட்டுக்குக் கீர்த்தியைத் தேடித் தரத்தக்க ஆற்றல்மிக்க ஒரு படைத் தலைவன் கிடைத்தால்,அவனை அழைத்துக் கொலுவீற்றிருக்கச் செய்வதில், ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைப்பதிலே, பாவமுமில்லை, தவறுமில்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். எனவே மக்களாட்சியினர், நெப்போலியன் வெற்றி பல பெற்று, மக்களின் பெருமதிப்புக்கு உரியவனாகியது கண்டு, கிலி கொண்டனர். நெப்போலியன் பேசும் போக்கு அவர்களின் பீதியை அதிகமாக்கிவிட்டது. தலை தப்பவேண்டுமானால் இவன் கொண்டுள்ள செருக்கைத் தடுத்தாக வேண்டும் என்று தீரமானித்தனர்; அதற்கேற்ப நெப்போலியனுடன் கூட்டாகப் பணியாற்றிட, படைத் தலைமையில் பங்குபெற கெல்லர் மன் என்பானையும், போரின் விளைவாக எழக் கூடிய அரசியல் பிரச்சனைகளைக் கவனித்துக் கொள்ள செலிசிடி என்பானையும் நியமித்திருப்பதாகச் செய்தி அனுப்பி வைத்தனர், நெப்போலியனுக்கு. நெறித்த புருவத்தினனானான். தான் பெற்ற வெற்றிகளும், அதனால் கிடைத்துள்ள புகழும் செல்வாக்கும் புது வலிவும், நெப்போலியனுக்கு நம்பிக்கையைத் தந்தன. அதிகாரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டான்.
என்னிடம் முழு நம்பிக்கை வைப்பதாக இருந்தால் படைத் தலைவனாகக் கொள்ளுங்கள்; இல்லையேல் தள்ளுங்கள்; ஆனால் கூட்டுத் தலைமை மட்டும் வேண்டாம். நிலைமைக் கேற்றபடி, நானே முடிவெடுத்து திட்டமிட்டுப் போர் நடாத்தினால் மட்டுமே வெற்றிகள் கிட்டும் - எதற்கும் இருவர் கூடிப் பேசி, கருத்துக்களிலே ஒன்றுபட்ட தன்மையை ஏற்படுத்திக் கொண்டுதான், போரினை நடத்திட வேண்டும் என்றால், வெற்றி பல பெற்றளிக்க முடியாது. எனவே, என் போக்கைத் தடுக்கும் ஓர் தடையைப் புகுத்த வேண்டாம். நான் ஏற்றுக் கொள்ளவதற் கில்லை என்று நெப்போலியன் கண்டிப்பாகத் தெரிவித்தான் - செய்திகொண்டு வந்தவனைத் திருப்பி அனுப்பிவிட்டான்.

கடுங்கோபம் எழுந்து என்ன பயன்? நெப்போலியனுடைய மறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இயலா நிலை, அரசாளும் பொறுப்பேற்றுக் கொண்டோர்களுக்கு.

ஒரே ஆண்டில், நெப்போலியன் ஆஸ்ட்ரியாவையும் அதற்குத் துணை நின்ற நாடுகளையும் லோடி, அர்கோலி, நிவோலி எனும் களங்களிலே தாக்கி வெற்றிபெற்று, காம்ப்போ பார்மியோ என்னும் இடத்திலே, சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டான். வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்று, தன் சுட்டுவிரல் காட்டும் வழி நடக்கத் துடித்திடும் பெரும் படையுடன் போர்க்கோலப் பொலிவுடன் விளங்கும் நெப்போலியனை வாதிடுவதிலே வல்லவர்களான ஆட்சிப் பொறுப்பினர், தட்டிக் கேட்கக்கூடத் தயக்கம் காட்டினர்.

எதிரிப் படைகள் தோற்றுச் சின்னாபின்னமானதுடன், 1,50,000 பேர்கள், நெப்போலியனிடம் பிடிபட்டனர். இத்தகைய வீர வெற்றிகளைப் பெற்றவனை, விரட்டிவிட முடியுமா, குழுகூடி ஆணை பிறப்பிப்பதன் மூலம்! முகத்திலே கரி பூசுவது போன்றதுதான், நெப்போலியன் செய்கை என்ன செய்வது, ஆட்சிக் குழுவினர், வெளியே தெரியாமலிருந்தால் போதும் என்று, தங்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டு, மக்களுடன் கூடிக் கொண்டு, குதூகலம் காட்டிக் கொண்டனர்.
பாரீஸ் விழாக்கோலம் பூண்டது. வீர வெற்றிகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

நெப்போலியன் ஊர் திரும்பவில்லை - ஜோசபைனுக்குக் கொண்டாட்டம். ஏனெனில், அவனுக்கு அளிக்க வேண்டிய வரவேற்புகள் - வாழ்த்துகள் - பாராட்டுகள் - யாவும் தேவிக்கல்லவா கிடைத்தன!

ஒரு சாதாரண சிப்பாயை மணம் செய்து கொள்கிறாளே, சிற்றரசனுக்கு ஏற்ற இந்தச் சீமாட்டி! இவளுடைய உடைக்கு ஆகும் செலவுக்கான பணம் திரட்டக்கூட முடியாதே, நெப்போலியனால்! - என்று கேலி பேசியவர்களெல்லாம், இப்போது ஜோசபைன், ‘கொடுத்து வைத்தவள்’ என்று பேசிக் கொள்கிறார்கள், அவள் இல்லா இடத்தில்; எதிரிலே அவள் இருந்தாலோ, ‘எல்லாம் உன்னைத் தொட்டதால் கிடைத்த வெற்றிகள்’ என்று புகழ் சொரிகின்றனர். பாரிஸ் நகரத்து நெடுஞ்சாலைகளிலே, அலங்கார வண்டியில் அமர்ந்து, புன்னகை பூத்த முகத்தழகி செல்கிறாள்; போர் நிறுத்தப்பட்ட பிறகு ஓய்வுகொள்ளும் நிலை ஏற்பட்டதால் மனத்திலே சிறிதளவு வாட்டம் கொண்ட நிலையில், மிலான் நகர் அருகே கொலுவிருக்கிறான் நெப்போலியன், ஒரு கோட்டையில்.

அரசர்கள் அடிபணிந்திட, சீமான்கள் கட்டியம் கூறிட, சீமாட்டிகள் நடை உடை அழகு காட்டிடக் கொலுவிருக்கிறான் நெப்போலியன், மணிமாடம்! ஆடம்பரப் பொருள்கள்! அவன் படுத்துறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மஞ்சம்’. மன்னர் காலத்தது மலரணை போதுமா, தூக்கம் பெற. தூக்கம் வரவில்லை. எல்லாம் இருக்கிறது, அவள் இல்லையே! அவள் விரும்பும் சூழ்நிலை; பளபளப்பு, மினுமினுப்பு, செல்வம்! ஆனால் அவ்வளவும் அவள் இல்லாததால் உயிரற்ற நிலையில் உள்ளனவே!

அழைப்பு செல்கிறது ஜோசபைனுக்கு, அகமகிழ்ச்சியுடன் மிலான் வருகிறாள், நெப்போலியன் பெற்றுள்ள பெருமைமிகு செல்வச் சூழ்நிலையைக் காண்கிறாள்!

அழகு மலர் பூத்திடும் பூங்காவும், அதற்கருகே இசை எழுப்பிடும் அருவியும் கண்டால், புள்ளிமான் எவ்வளவு மகிழ்ச்சியாய்த் துள்ளி விளையாடும்! ஜோசபைன் அதுபோலானாள்.

‘போர் வீரன்தானே, களத்திலே ஏற்பட்ட வடுக்களைத் தான் காட்டுவான்’ - என்று முன்பு எண்ணிடுவாள்; - இப்போது, அவன் காட்டுபவை? - அதோ அந்த இருக்கை, சார்டினியா மன்னன் தந்த காணிக்கை, தங்கத்தாலான கோப்பை ஆஸ்ட்ரியா நாட்டவர் அனுப்பி வைத்தது என்று ஆடம்பரப் பொருட் குவியலையல்லவா காட்டுகிறான். வெற்றி, புகழ், செல்வம் இவற்றை அவன் அவளுக்கு அளிக்கிறான். ஆனால் அவள் அளித்ததற்கு இவை ஈடாகா என்று எண்ணுகிறான். அவன் அதுபோல் நினைத்திடத்தக்கதாக, அந்த ஆரணங்கு அவனுக்கு அளித்தது என்ன? புதிதாக! அளித்தாள், அவன் அகமகிழத்தக்க ஒரு சுவைமிகு செய்தி! ‘தாயாகப் போகிறேன்’ என்றாள் தழுதழுத்த குரலில்! தந்தையாகிறேனா, தந்தை மொழியாளே! உன் தயவால்!’ என்று கேட்கிறான் விழியால்.

மான்ட்டிபெல்லோ கோட்டையில், ‘தர்பார்’ நடத்தப்படு கிறது, ஜோசபைன் அங்கு வந்த பிறகு. பொன்னொளி வீசுகிறது அங்கு. அங்குக் காணப்பட்ட நிலையைக் கவனித்த ஒருவர் சொன்னார்:
‘இன்னும் நாலு ஆண்டுகளில் இவன் களத்திலே இறந்து படாமலிருந்தால், நாடு கடத்தப்படுவான் அல்லது அரியாசனம் அமருவான்.’

பாரிஸ் செல்கிறான் நெப்போலியன் - வெற்றி உலா நடை பெறுகிறது. மக்கள் அவனைக் கண்டு களிநடமிடுகிறார்கள். ஆட்சிக் குழுவினர் ஆரத்தழுவிக் கொள்கிறார்கள். மரியாதைக் குண்டுகள் முழங்குகின்றன.

‘வீர வெற்றிகள் பல பெற்ற இந்த மாவீரன், ஒரு துளியாவது படாடோபம் காட்டுகிறானா பாருங்கள்’ என்று பாமர மக்கள் பேசிப் பாராட்டும் விதமாக நெப்போலியன் நடந்து கொள்கிறான். பட்டாளத் தலைவன் உடைகூட அணிவதில்லை. மிகச் சாதாரணமான வீடு! அலங்காரமற்ற வண்டி! நாடகக் கொட்டகையில் இவனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் காட்டும்போது, கூச்சப்படுவது, கோலாகல விருந்துகள் கொண்டாட்டங்கள் கிடையாது. வீட்டில், பல்வேறு துறைகளிலே உள்ள விற்பன்னர்களை வரவேற்று உரையாடி அறிவுக்கு விருந்து பெறுவதிலே நாட்டம் காட்டினான்.

நாட்டுக்குக் கீர்த்தி பெற்றளிக்கும் கடமையை மேற் கொண்டேன் - செய்து முடித்துவிட்டேன் என்று கூறுவது போலிருந்தது அவன் போக்கு.

அறிவு வளர்ச்சிக்காகப் பாரிசில் ஒரு கழகம் அமைக்கப் பட்டிருந்தது. அதிலே உறுப்பினனாகி அறிவாளர்களுடன் அளவளாவினான். படைத்தலைவன் என்றால் கொல்லும் தொழிலை மேற்கொள்பவன்தானே! அவனுக்கு அறிவுத்துறையிலே அக்கறை ஏற்பட முடியாதே! ஆனால் இந்த அதிசய மனிதனைப் பாருங்கள்! கற்றறிவாளருடன் உரையாடுவதைக் கேளுங்கள்! எத்தகைய மனப்பாங்கு, எத்தகைய நுண்ணறிவு, எதிலும் வல்லவனாக அல்லவா இருக்கிறான்! என்று பலரும் பாராட்டினர்.