அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
2

தாலாட்டாக அமைந்த பாட்டே, விடுதலைப் போர் குறித்ததாக இருந்தது என்று கூறலாம்.

தொட்டிலிலே படுத்திருக்கும் குழந்தை, கால்களால் உதைக்கிறது! எதை? வெறும் காற்றுத்தானே தட்டுப்படுகிறது! ஆனால் எதிர்காலத்திலே, மணிமுடிகளைப் பந்தாடப் பழகிக் கொள்கின்றன போலும், அந்தக் கால்கள்! கைகளை ஆட்டுகிறது, எதனையோ, பிடித்துக் கொள்ள முனைவதுபோல! என்ன வேண்டும் இந்தக் குழந்தைக்கு? விளையாட்டுக்கான பொம்மைகளா! தின்னப் பழமா! - இப்போது அவை போதும். ஆனால், அந்தக் கரங்கள், போரிடப் போகின்றன பல அரசர்களுடன் - வலிவுபெற்றதும் அதற்கு இது ஒத்திகை போலும்.

லெடிசா, குழந்தையிடம் கொஞ்சிக் குலவாமலிருந்திருக்க முடியாது - ஆனால், அதற்கு அதிக நேரம், ஓய்வு கிடைத்திருக்க முடியுமா என்பது சந்தேகந்தான், விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டிருந்த கணவன்; குடும்பம் நடந்திட வழி தேடும் பொறுப்பினை ஏற்றுத் தீரவேண்டிய நிலையிலே லெடிசா. மிகச் சிக்கனமாகக் குடும்பத்தை நடத்தி இருக்க வேண்டும் - நெப்போலியனுடன் சேர்ந்து எட்டு குழந்தைகள் லெடிசாவுக்கு.

குடும்பத்துக்குச் சிறப்புப் பெயராக, போன பார்ட்டி என்பது அமைந்திருந்தது. அந்தப் பெயரின்படி பார்த்தால், இத்தாலிய மேட்டுக் குடியினர் இக்குடும்பத்தினர் என்று தெரிகிறது.

நெப்போலியனுக்கு, வெற்றிமேல் வெற்றி கிட்டிய நாட்களில், இந்த உணர்ச்சி மேலோங்கியும் காணப்பட்டது. ‘பிரபு வம்சம்’ என்று கூறிக் கொள்வதிலே ஒரு சுவை இருக்கத்தான் செய்தது. ஆனால் புகழ்பாடி மயக்க விரும்பிய சிலர், குடும்பத்தின் பூர்வீக பெருமைகள் பற்றி அதிகம் கதைத்த போது, நெப்போலியன், விரும்பவில்லை. பொய்யுரை கேட்டு ஏமாறுபவன் அல்ல என்பதால் மட்டுமல்ல, இந்தக் குடும்பத்துக்கு, ஏற்பட இயலாத பெரும் புகழ் ஈட்டியிருக்கும்போது, பழைய நாட்களிலே என்னென்ன பெருமைகள் இருந்தன என்று கண்டறிந்து கூறத்தான் வேண்டுமா? வைரம் ஒளிவிட்டு, அதன் மதிப்பைத் தானே எடுத்துக் காட்டும்போது, அது எத்தகைய ஆழமான சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கூறியா, புதிய மதிப்புத் தேடவேண்டும்! நெப்போலியன் இவ்விதம் எண்ணாமலிருந்திருக்க முடியாது.

கார்சிகா தீவில், அஜாசியோ எனும் சிற்றூரில், 1769ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 15-ஆம் நாள், நெப்போலியன் பிறந்தான். அஜாசியோ எனும் ஊர், கார்சிகா தீவுக்குத் தலைநரகம்கூட அல்ல. கார்ட்டி எனும் இடமே தலைநகரமாக இருந்தது.

நெப்போலியன், புகழேணியின் உச்சியில் இருந்தபோது குடும்பத்தினர், உற்றார் உறவினர் அனைவருக்கும், புதிய புதிய பதவிகள் வழங்கினான் - நிலைகளை உயர்த்தினான். தாய், லெடிசாவை அன்பாகக் கேட்டான்; விரும்பி இருந்தால் ஏதாவதொரு நாட்டுக்கு அரசியாக்கிவிட்டிருக்க முடியும்; அரசுகள் அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தனவே! “மகனே! எனக்கு வேறு எதுவும் வேண்டாம். நம்முடைய சொந்த ஊரான அஜாசியோ, கார்சிகாவுக்குத் தலைநகரானால் போதும்” என்று தாயார் சொல்ல, நெப்போலியன், ‘அப்படியே ஆகுக!’ என்றான்; அதற்கான ஆணையும் பிறப்பித்தான்.

கார்சிகா தீவினருக்கு, தங்கள் நாடு, தங்கள் ஊர், தங்கள் குடும்பம் என்ற உணர்ச்சி மிகுதியாக உண்டு. நெப்போலி யனுடைய தந்தை, சார்லஸ் போனபார்ட்டி, இந்த உணர்ச்சி காரணமாகத்தான், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட நேரிட்டது; நெப்போலியனுக்கும் இந்த எண்ணம் இளமைப் பருவத்தில் மிகுதியும் இருந்தது. பிரான்சு மீதே நெப்போலியனுக்கு வெறுப்பு, கோபம், பழி வாங்க வேண்டும் - கார்சிகாவை விடுவிப்பதன் மூலம் -என்று எண்ணம் கொண்டான். அதற்கு ஏற்றபடிதான், பிரான்சு நாட்டினரும், கார்சிகா மக்களைப் பற்றி மிகத் துச்சமாக மதித்துப் பேசி வந்தனர்; ஏளனம் செய்து வந்தனர்.

ஏழைக் குடும்பம் என்பதற்காக ஓர் ஏளனப் பேச்சு!

அடிமைப்பட்டுக் கிடந்த கார்சிகா தீவினன் என்பதற்காக மற்றோர் கேலிப் பேச்சு.

இந்த இருவித ஏளனக் கணைகளைத் தாங்க வேண்டி இருந்தது, நெப்போலியனுக்கு - மாணவப் பருவத்தில்.

“வீராதி வீரர்கள் என்கிறாயே! உன்னுடைய கார்சிகா மக்களை, அது உண்மையானால், எப்படி அவர்கள், பிரான்சுக்கு அடிபணிய முடிந்தது!”

“அதுவா! ஒன்றுக்குப் பத்து என்ற அளவில், உங்கள் பிரான்சுக்காரர், எங்கள் கார்சிகா மக்களைத் தாக்கினர். வீழ்ந்தது அதனால்தான்; வீரம் இல்லாததால் அல்ல.”

“மீசையில் மண் ஒட்டவில்லையாம்... கேட்டீர்களா...”

“பொறு! பொறு! நான் பெரியவனான பிறகு பார் அப்போது தெரியப் போகிறது, கார்சிகாக்காரர் எப்படிப்பட்டவர்கள் என்பது.” மாணவர்களின் உரையாடல் இந்தக் கருத்துப்பட. மாணவனாக இருந்தபோதே, நெப்போலியனுக்கு, வீரத்தின்மீது, வெற்றியின்மீது நினைப்பு! அப்போது அவன் கண்களுக்கு, கார்சிகா பிடிபட்டு, பிரான்சுடன் பிணைக்கப்பட்டிருப்பது தான் மிகப் பெரிதாகத் தெரிந்தது. அதனால்தான், கார்சிகா விடுதலை பெறவேண்டும், பிரான்சு நாட்டுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் துடித்தது. முயற்சிகளிலும் ஈடுபட்டான் - வெற்றி கிட்டவில்லை?

உன் ஆற்றலுக்கு ஈடான வெற்றி, சின்னஞ்சிறு தீவான கார்சிகாவை விடுவிப்பதாகவா இருக்க வேண்டும்? உன் ஆற்றல் மிகப்பெரிது! கார்சிகாவை அடிமைகொண்ட பிரான்சு நாடே உன் காலடியில் விழப்போகிறது! உன் தீவைப் பிடிக்கப் பாய்ந்துவந்த, பிரான்சுப் போர் வீரர்களே, உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு, உன் சுட்டுவிரல் காட்டும் திக்கு நோக்கிப் பாயப் போகிறார்கள். பிரான்சுக்கு அதிபனே ஆகப்போகிறாய்! உன் ஆற்றல் உன்னை அந்தச் செயலுக்கு அழைத்துச் செல்லப் போகிறது. இடையிலே கார்சிகா விடுதலைக்காக வேலை செய்ய வேண்டுமா! - காலம் கூறிற்று போலும் இதுபோல.

கார்சிகா, பிரான்சுடன் பிணைக்கப்பட்டிருந்தது. என்றாலும், என்ன காரணத்தினாலோ, ரூசோ, “ஐரோப்பாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது இந்தக் கார்சிகா - என்றோ ஓர் நாள்.” என்று எழுதினார்.

கார்சிகா விடுதலைக்காகப் போராடி, நாடு கடத்தப்பட்ட தளபதிக்கு நெப்போலியன் எழுதிய கடிதத்தில், மாணவனின் மனக்கொந்தளிப்பு நன்கு தெரிந்தது.

“என் நாடு இறந்து கொண்டிருக்கும்போது நான் பிறந்தேன். உரிமையை அழித்திட 30,000 பிரான்சுக்காரர்கள் இங்குக் கொட்டமடிக்க வந்த நேரம், நான் தொட்டிலில் கிடந்தபோது அதைச்சுற்றி, இறந்து படுவோரின் அழுகுரல், கொடுமைக்கு ஆளானோரின் குமுறல், கண்ணீர் இவையே இருந்தன.”

நெப்போலியன், போர் வீரன் மட்டுமல்ல; உள்ளத்தைத் தொடத்தக்க உணர்ச்சிகளைத் தொடுத்திடும் ஆற்றலும் மிக்கவன் என்பது, அவன் எழுதிய கடிதங்கள் மூலமும், போர் துவக்கப் பேச்சுக்களின் மூலமும் மிக நன்றாகத் தெரிகிறது.

மாணவப் பருவத்திலே, நெப்போலியன், கதைகள் கட்டுரைகள் எழுதுவதிலே ஆர்வம் கொண்டிருந்தான். ‘நாடக பாணி’யில் எழுதுவதிலே நெப்போலியனுக்குப் பெருவிருப்பம். உணர்ச்சிகளை உரையாடல்கள் வடிவிலே எழுதி வந்திருக்கிறான்.

காதல் - கடமை - இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கும் ஏற்படும் மோதுதல் - அதனால் விளையும் சிக்கல் - இவை பற்றி ஓர் உரையாடல் எழுதினான் மாணவன் நெப்போலியன். ஒருவன் காதலுக்காக - மற்றவன் கடமைக்காக வாதாடும் முறை.

“உன் நாடு தாக்கப்படும்போது, உன் கடமை என்ன? நீ என்ன செய்வாய்?”

“நாடு! கடமை! வெறும் வார்த்தைகள். எனக்கென்ன கவலை, அரசு கவனிக்க வேண்டிய பிரச்சினை பற்றி.”

“கோழையின் மனப்பான்மை இது. களியாட்டக்காரனின் போக்கு. சுயநலம், மக்களை மறந்திடும்போக்கு. மகிழ்ச்சியாக வாழத்தான் பிறந்தோம். ஆம்! ஆனால், சமுதாயத்தில் வாழும்போது, சில பொறுப்புகள் மேற்கொண்டாக வேண்டும். ஆட்சிப் பொறுப்புச் சிலரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள், மதத் தரகர்களுடன் கூடிக் கொண்டு, கடமையை மறந்து காட்டுப் போக்கிலே நடந்து கொள்கிறார்கள். உன் கடமை என்ன? கொடுமைக்கு ஆளானவர்கள் கூவி அழைக்கிறார்கள், உதவிக்காக! கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பதா, குமரியுடன் அந்த நேரத்தில்.”

மாணவப் பருவத்திலே, இலட்சியம் பற்றிய உணர்ச்சி மேலிட்ட நிலையிலே இதுபோல எழுதுவது இயல்பு. பலர் இந்த இயல்பு கொள்கின்றனர். ஆனால் வயது ஆக ஆக, இலட்சிய ஆர்வம் மங்கிவிடுகிறது; மறைந்தே கூடப் போய்விடுகிறது. ஆனால் நெப்போலியனுக்கு அவ்விதம் இல்லை.

கடமை அழைக்கிறபோது, காதற் களியாட்டத்திலே ஈடுபடுவதா? என்று கேட்ட அதே போக்கில், தானே நடந்து காட்டவும் முற்பட்டான். போர் வீரனாவதற்கான பயிற்சிக் கூடத்திலே பயிலும்போது மற்ற மாணவர்கள், மலர் விழியாளைத் தேடுவதும், மது அருந்தி ஆடுவதும், கண்ணழகியின் கருத்து என்ன? கனி, துவர்ப்பா இனிப்பா? புன்னகை போதுமா, பொன்னகை கேட்பாளா; பட்டுப்பூச்சியா? வெட்டுக்கிளியா? - கட்டுக்காவல் அதிகமா? தொட்டால் ஒட்டிக் கொள்ளுமா? - என்று பேசிக் காலத்தைப் பாழாக்கிக் கொண்டிருந்தனர் - நெப்போலியன், கோட்டை கொத்தளங்களின் அமைப்பு, போர் முறைகளின் நுணுக்கங்கள், நாடுகளின் இயல்புகள், நாடாள் வோரின் போக்கு எனும் இவை பற்றிய ஏடுகளைப் படிப்பதிலே ஈடுபட்டுச், சிறப்பறிவு எனும் செல்வத்தைத் தேடிப்பெற்றுக் கொண்டிருந்தான். வரலாறும், பூகோளமும் நெப்போலியன் படித்துக் கொண்டிருப்பான்; அவனுடைய தோழர்களோ, வடிவழகு இயற்கையா செயற்கையா என்பது பற்றிய கருத்துக்களிலே மூழ்குவர்.

கணக்குப் பாடத்திலே நெப்போலியனுக்கு மிகுந்த அக்கறை! படைத்துறைக்கு இந்தப் பயிற்சி மெத்தப் பயன் படக்கூடியது.

காதலிக்கத் தெரியாதா என்றால், தெரியும்; கண்மண் தெரியாமல் அதிலே சிக்கிக் கொள்வதில்லை - வேறு கடமையிலே ஈடுபடும்போது காதல் விளையாட்டிலே நுழைவதில்லை.

நெப்போலியன் மனத்தைக் கொள்ளை கொண்ட ஜோசபைன், வியக்கத்தக்க பேரழகி - விதவை - விரும்பத்தக்க அவள் கட்டுண்டான் நெப்போலியன் - அவளைப் பற்றிப் பல்வேறு வதந்திகள் உலவின - “அந்த மதுக்கோப்பையா! சுவைமிகுதிதான் - ஆனால் எச்சிற் கலமாயிற்றே” என்று கூடப் பேசுவர். ஆனால் நெப்போலியன் கண்களுக்கு, காதற் கலையின் அழகத்தனையும் திரண்டெழுந்து வடிவமெடுத்து ஜோசப்பைனாக வந்ததாகத்தான் தெரிந்தது. நெப்போலியன் தன் நேரத்தையும் நினைப்பையும் பெரிதும் படிப்பிலேயும் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திப்பதிலேயும் ஈடுபடுத்தியதால், அவனால் குயிலுக்கும் கருங்குருவிக்கும், மயிலுக்கும் வான் கோழிக்கும், பருவ மெருகுக்கும் பூச்சு மினுக்குக்கும், முகமலர்ச்சிக்கும் பாவனைச் சிரிப்புக்கும், மயக்கும் மொழிக்கும் மயக்க மொழிக்கும், தளிர்மேனிக்கும் ஆபரணத் தகத்தகயாத்துக்கு உள்ள வேறுபாடுகளைக் கண்டறியும் கலை கற்க இயலாதிருந்தது என்று கூறலாம்.

வயதிலே தன்னைவிட மூத்தவள் என்றால் என்ன? - வசீகரிக்கத் தெரிகிறது அவளுக்கு! எனவே நெப்போலியன் ஜோசபைனை மணமுடித்துக் கொண்டான்.

தீர்ந்தது அவனுடைய இலட்சியங்கள் - திட்டங்கள் - கனவெல்லாம் கலைந்தது - இனி ஒரே களம்தானே நெப்போலியனுக்கு, ஜோசபைன் மாளிகை! ஒரே ஓர் ஆணைக்குத்தான் அவன் எழுவான் - அவளுடைய புன்னகை - அடி மூச்சுக் குரல்! போரிலே புலிதான் - ஆனால் இனி...! என்றுதான் எவரும் எண்ணிக் கொள்வர் - ஜோசபைனை அறிந்தவர்கள்.

சிக்கலுள்ள அரசியல் பிரச்சனைகளை எல்லாம் மறந்து விட்டு, முதுபெரும் அரசியல்வாதிகள் அந்தச் சிங்காரியின் சிரிப்பொலியிலே மயங்கிக் கிடந்திட, மாலை வேளைகளிலே அவளுடைய மாளிகையைத் தேடி வருகிறார்கள் - நெப்போலியன் எம்மாத்திரம்! டோவ்லான் சண்டையிலே திறமையைக் காட்டினான் - உண்மை - வெற்றிபெற்றான் - உண்மைதான் - ஆனால் அவை, ஜோசபைனிடம் சிறைப்படுவதற்கு முன்பு! இனி?

நெப்போலியனுடைய பாசம் நிறைந்த பார்வையையும் அவளுடைய பாகு மொழி கேட்டதால் சொக்கிவிட்ட தன்மையையும் கண்டவர்கள், வீரன் காதலைப் பரிசாகப் பெற்றான்! இனி அவன் காதலன் - அவ்வளவுதான்!! - என்று தீர்மானித்தனர்.

ஆனால், கடமை அழைக்கிறபோது காதலியுடன் கொஞ்சி கிடப்பதா? என்று கேட்டானே, மாணவப் பருவத்தில் அந்த நெப்போலியன், அழகி ஜோசபைனை அடைந்ததால், மறைந்து விடவில்லை. இத்தாலி நாட்டின் மீது தாக்குதல் நடத்தப் பெரும் படையொன்று கிளம்பட்டும் - உன் தலைமையில் என்று அரசு ஆணை பிறப்பித்தது. கண்ணாளா!’ என்று அவளும், ‘கட்டித்தங்கமே!’ என்று வீரனும், ‘மலரா, இதழா?’ என்று அவனும், ‘கேலியா போதையா?’ என்று அவளும் பேசி மகிழும் காலம் - மணமாகி இரண்டு நாட்கள் முடிந்ததும் இந்த அழைப்பு - கடும் போரிடச் செல்லும்படி.

‘என் இதயம் என்னிடம் இல்லையே! அதனைத் தங்களுக்குக் காணிக்கையாக்கி நாட்கள் பல ஆகிவிட்டனவே!’ என்று கூறி, தன்னை அவன் அணைத்துக் கொள்ளும் உரிமையை ஜோசபைன் அளித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட எந்த அளவிலும் குறைவான களிப்பல்ல - இத்தாலி மீது போரிடப் புறப்படுக!’ - என்று அரசு அழைத்தது கேட்டு.

நாட்கள் இரண்டுதானே ஆகியுள்ளன - நெஞ்சிலே உலவும் எண்ண அலைகளைப் பற்றிப் பேசி மகிழக்கூட நேரம் காணாதே - பூங்காவிலே உலவி, புதுவித இன்பம் சுவைத்திடு வதற்கு ஏற்ற மணக்கோலம் கொண்டுள்ள போதா, களம் நோக்கிச் செல்ல ஆணை - கட்டழகியை மறந்து! - நெப்போலியன் இதுபோல எண்ணி ஏங்கினானில்லை. இத்தாலியைத் தாக்குவது எப்படி? என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும்? எவ்வளவு வலிவு திரட்ட வேண்டும்? - என்ற இவை பற்றிய எண்ணம்தான் அவனை ஆட்கொண்டது. அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். ‘அன்பே! உன் காதலன் எத்தகையவன் - எத்துணை ஆற்றல் மிக்கவன் - என்னென்ன விருதுகள் பெறப்போகிறான் - யார்! நீ மகிழத்தக்க, பெருமைப்படத்தக்க வெற்றிகளைப் பெற்றிடக் கிளம்புகிறேன்; பற்பல நூற்றாண்டுகளாகப் பாரோர் மெச்ச விளங்கி வரும் இத்தாலி செல்கிறேன்! உலகப் பெருவீரன் ஜுலியஸ் சீசர் உலவிய இடம்! அங்கு செல்கிறேன் அழகு மயிலே! உன்னை அடைந்ததால் நான் பெற்ற மகிழ்ச்சியைத் துணைகொண்டு செல்கிறேன்!! வெற்றிச் செய்திகளுக்காகக் காத்திரு - உன் வேல்விழி, நான் செல்லும் பக்கம் எப்போதும் இருக்கும் என்பது அறிவேன் - நான் என் இதயத்தில், நீ அளித்த காதலைக் கருவூலமாகக் கொண்டு செல்கிறேன்!”- என்று நெப்போலியன் சொல்ல முனைந்தானேயன்றி, மணமாகி இருநாட்கள் முடிந்ததும், மலரணை மறந்து களம் செல்வதா என்று கவலை கொண்டானில்லை. - இங்குப் பாவை பன்னீர் தெளித்திடுகிறாள் - அங்கு? - இரத்தம் பொங்கும்! ஆம்! ஆனால் இரத்தம் பொங்குவதுடன் என் வீரம் பொங்கும்; வெற்றி பொங்கும்; கீர்த்தி பொங்கும். தன் காதலிக்கு இந்தக் கீர்த்தியைப் பெற்றுத் தருவதைக் காட்டிலும் ஒரு காதலன் தரத்தக்க பெருமைமிகு பொருளும் உண்டா! - என்ற எண்ணம் எழுகிறது; இத்தாலி செல்கிறான்.
நெப்போலியனுடைய உறுதிப்பாட்டுக்கு இது போன்ற எடுத்துக்காட்டுகள் பல உள.

களத்திலே கடும் போரிடும் கடமையை மறந்து வேறு எந்தச் செயலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவனல்ல, இளமைப் பருவத்திலேயே, இந்த இணையிலா வீரன்.

1796ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் திருமணம் - 12ஆம் நாள் இத்தாலி நோக்கிப் பாய்கிறான்.

ஜோசபைன் வயது சிறிது அதிகமல்லவா?

நெப்போலியன், அவளைவிட இளையவன் - நிச்சயமாக!

இவ்விதம் பேசுவது தெரியும் இருவருக்கும். எனவே, பதிவாளரிடம் சென்று திருமணத்தை நடத்திக் கொண்ட பொழுது, நெப்போலியன் தன் வயதை ஒன்றரை ஆண்டு கூட்டி அதிகமாக்கிச் சொன்னான் - ஜோசபைன்? தன் உண்மை வயதிலே நான்கு ஆண்டு குறைத்து, கணக்குக் கொடுத்தாள். வயது பொருத்தம் கிடைத்துவிட்டது, திருமணத்துக்கு! இருமனம் ஒன்றான பிறகு திருமணம்தானே! பொருளற்ற கேள்விகள் எழுப்புகிறார்கள் - வயது என்ன? என்று! வயதாம் வயது! எனக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ள வயது! வேறு என்ன தெரிய வேண்டும்? - சாகசப் பேச்சிலே திறமைமிக்க ஜோசபைனால் இதுபோலெல்லாம் பேசவா முடியாது. ஆனால், நெப்போலியன் அவளைத் திருமணம் செய்துகொண்டபோது, ஜோசபைனுக்கு, ஒரு மகன் - ஒரு மகள்! மகனுக்கு வயது பன்னிரண்டு! மகனைத்தான் நெப்போலியன் முதலிலே கண்டான் - அவனுடைய பேச்சும் போக்கும் மிகவும் பிடித்தது. பிறகு அவள் வந்தாள் - நன்றி கூற.

நெப்போலியன், தன் திறமையை டோவ்லான் களத்திலே காட்டிய பிறகு, பிரான்சு ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டு வந்த குழுவினருக்கு, நெப்போலியன் மீது ஒரு பற்று; நம்பிக்கை.

ஆட்சிக் குழுவினருக்குப் பாரிஸ் நகர மக்களிலே ஒரு சாரார் எதிர்ப்பு மூட்டியபோது, நெப்போலியன், ஆட்சி மன்றத்துப் பாதுகாப்புப் பொறுப்பு ஏற்று, ஆபத்தை முறியடித்தான். எதிர்ப்பாளர்களைத் தாக்கி விரட்டி அடித்தது, ஆட்சிக் குழுவினருக்கு நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அந்தப் படைப் பிரிவுக்கு நெப்போலியனைத் தளபதியாக்கினர்.

எந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டாலும், அக்கறை காட்டித் திறம்படப் பணியாற்றுவது நெப்போலியனுடைய இயல்பல்லவா? அந்த இயல்பின்படி, குடிமக்களிடம் இருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தால்தான், கலக உணர்ச்சி ஏற்படும்போது தாக்குதலில் ஈடுபடாமலிருப்பார்கள் என்று தீர்மானித்தான் - ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டான. அப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களிலே, சீமான் ஒருவனுடைய வாளும் ஒன்று.

ஒருநாள், அவசரமாகத் தன்னைப் பார்க்க விரும்புகிறான் ஓர் இளைஞன் என்று நெப்போலியனுக்கு அறிவிக்கப்பட்டது.

“இளைஞனா? என்னைக் காணவா?”

“ஆமாம், பன்னிரண்டு வயது இருக்கும்.”

“பன்னிரண்டு வயதுப் பொடியனா! என்ன வேலை அவனுக்கு, என்னிடம்...?”

“கூற மறுக்கிறான்; நேரிலே கண்டுதான் கூறுவானாம்.”

நெப்போலியன் அந்தப் பன்னிரண்டு வயதினனை விரட்டிவிடவில்øல்; வரச்சொன்னான், தன்னைக் காண.

“என்ன வேலையாக...”

“ஒரு வேண்டுகோள்... தாங்கள் பலருடைய ஆயுதங்களைப் பறிமுதல் செய்தீர்கள்...”

“ஆயுதம் ஏந்தும் வயதினனல்லவே, நீ...”

“என்னுடையது அல்ல! என் தந்தையின் வாள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது...”

“அரசு பாதுகாப்புக்கான நடவடிக்கை. உன் தகப்பனார், யார்... அவர் எங்கே...”

“அவர் இறந்துவிட்டார்... கொல்லப்பட்டுவிட்டார்... புரட்சியின்போது, வாள், எம்மிடம் இருந்தது... குடும்பத்தின் பெருமைப் பொருளாக...”

“குடும்பப் பெருமையிலே அவ்வளவு விருப்பமா...”

“நியாயமற்ற உணர்ச்சி அல்லவே...”

“கூர்மையான புத்தி உனக்கு...”

வாள், திருப்பித் தரப்பட்டது; மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக் கொண்டு சென்றான், பன்னிரண்டு வயதினன். எத்தனையோ விந்தையான சம்பவங்களிலே இது ஒன்று என்று எண்ணினான், நெப்போலியன் - இல்லை - அது தொடர் கதையாகிவிட்டது.

“தங்களைக் காண ஒரு மாது...”

“என்னைக் காண ஒரு மாதா...?”

“ஒரு சீமாட்டி...”

“சீமாட்டிக்கு இங்கு என்ன வேலை? என்னிடம்.”

“தங்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறார்கள்...”

“எதற்கு நன்றி... புரியவில்லையே...”

“பறிமுதல் செய்த வாளைத் திருப்பித் தந்தீர்களே...”

“ஆமாம்; உணர்ச்சிமிக்க பன்னிரண்டு வயதினன்...”


“அவனுடைய தாயார் - வந்திருக்கும் சீமாட்டி.”

“அப்படியா! வரச் சொல்லு.”

வந்தாள் ஜோசபைன்! நெப்போலியன், முதுமைக் கோல விதவையை எதிர்பார்த்தான் - அவன் எதிரில் வந்ததோ, புன்னகை பூத்த முகத்தழகி, புதுமலர் போலும் எழிலுடையாள், ஜோசபைன்.
“வாளைத் திருப்பித் தந்ததற்கு என் நன்றி...” என்றாள் வனிதை! ஒரு வாளா, ஓராயிரம் வாட்களைத் திருப்பித் தரச் சொன்னாலும் தரலாமே - இவ்வளவு சுவைமிகு பார்வையோடு, கேட்டால்!

வாளைப் பறித்தவனை, வேல் விழியால் அவள் வென்றாள். சீமாட்டி எனும் நிலைக்கு ஏற்ற கம்பீரம் - அதே போது அதிலே ஓர் தனிக் கவர்ச்சி - அதிகம் பழக்கமில்லாதவரிடம் பேசும்போது காட்டவேண்டிய கூச்சம்! தயக்கம்! - அதேபோது பேச்சிலே ஓர் இனிமை, குளுமை! களம் கண்டவனானால் என்ன, வெற்றிபெற நெப்போலியனால் மட்டுந்தானா முடியும். ஜோசபைன் என்ன, போர் முறை தெரியாதவளா? கட்டழகி விட்ட பார்வை, அவன் கட்டுடல் எங்கும் பாய்ந்தது - அவள் வென்றாள்!