அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
3

இவ்விதம் தொடங்கிய காதல்தான், கடிமணமாகி மலர்ந்தது. ஆனால் மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த வேளையிலே போர் நடாத்த அழைப்பு வந்தது. மாவீரன், இத்தாலி நோக்கிச் சென்றான்.

நெப்போலியன் கட்டழகி ஜோசபைனிடம் கட்டுண்டதிலே வியப்பில்லை - அந்த வசீகரத்தின் முன்பு வீழாமலிருக்க இயலாது. ஆனால், மற்றோர் காரணமும் உண்டு. நெப்போலியன், ஏற்கெனவே ஒரு மங்கைக்காக ஏங்கிக் கிடந்து, அது எட்டாக் கனியாகிவிட்டதால், மனத்திலே வாட்டமுற்றுக் கிடந்தவன். மாடப்புறா கிட்டாவிட்டால், மணிப் புறா கிடைக்கட்டும் என்று எண்ணி, வேட்டையாடிடும் போக்கினன் அல்லவே. எனவே, காதல் முயற்சியிலே ஏற்பட்ட தோல்வி நெப்போலியனுக்குப் பெருத்த வேதனையைத் தந்தது. தன் மனநிலையை விளக்கி, ஒரு காதற்கதை எழுதினான். எந்த எண்ணத்தையும் எழுச்சியையும், நாடகபாணியில் எழுதும் வழக்கமல்லவா - அதுபோலவே, காதலில் ஏற்பட்ட தோல்வி பற்றியும் மனம் உருகும்படி சிறுகதை தீட்டிடலானான் - வரலாறு தீட்டும் வல்லமை கொண்டோன்.

மார்சேல்ஸ் நகர வணிகரின் மகள், வனப்புமிக்க டிசயரி என்பவளை மணம் செய்துகொள்ள விரும்பினான் நெப்போலியன். அவள் செல்வக்குமாரி - நெப்போலியன் போர் வீரன் - தளபதிகூட அல்ல - களத்திலே, மற்றவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, இருக்கவேண்டியவன் இந்தத் துப்பாக்கி தூக்கிக்குத் தன் மகளைத் தருவதற்குப் பட்டாடை விற்பதால் பணம் திரட்டிய வணிகருக்கு விருப்பம் இல்லை.

நெப்போலியனுடைய அண்ணன் ஜோசப், ஒரு வணிகர் மகளை மணமுடித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தான் - அண்ணிக்கு உறவினள்தான் டிசயரி! நல்வார்த்தை பேசி இந்த மணத்தை முடித்து வைக்கவேண்டுமென்று கூட, அண்ணனுக்குக் கடிதம் எழுதிப் பார்த்தான்; எனினும் நெப்போலியன் எண்ணம் ஈடேறவில்லை. காதலிலே தோல்வி கண்டான்; கதை பிறந்தது. கிளிசான் - யூஜினி - என்பது கதைத் தலைப்பு. கிளிசான், நெப்போலியன்! யூஜினி டிசயரி!! மனம் உடைந்து காதலனைப்பற்றி மட்டுமல்ல, அந்தக் காதலன் எப்படிப் பட்டவன், எதிலே திறமைமிக்கவன் என்பதனையும் விளக்கினான், கதையில்.

கிளசான், பிறவி வீரன்! குழந்தைப் பருவத்திலேயே, உலகப் பெருவீரர்களைப் பற்றி அறிந்து கொண்டிருந்தான். பள்ளிப் பருவத்திலே, மற்றவர்கள்போல் மனத்தை மையலில் அலையவிடாமல் போர்முறைகளை அறிவதிலும், புதுமுறைகள் வகுப்பதிலும் ஈடுபட்டான் - திறமை மிக்கவனானான். வெற்றிமேல் வெற்றி! விருதுகள் பலப்பல! நாட்டவர் போற்றினர், நமது பாதுகாவலன் இவனே என்று.

செயல்வீரனான கிளிசான் இலட்சியக் கனவுகள் கொண்டவனாகவும் இருந்துவந்தான். சில வேளைகளில், தனியாக உலவச் செல்வான் - சிந்தனையில் பல அரும்பும் - மலரும்.

ஓர்நாள், ஏரிக்கரை ஓரத்திலே எழில்மங்கை ஒருத்தியைக் கண்டான். அவள் பெயர் யூஜினி! காதல் கொள்கின்றனர் - கடிமணம் நடக்கிறது. கடமை அழைக்கிறது; களம் செல்கிறான்; சீறிப் போரிடுகிறான்; படுகாயமடைகிறான்.

நண்பன் ஒருவன் மூலமாக நிலைமையை, யூஜினிக்குச் சொல்லி அனுப்புகிறான்.

தூது சென்றவனோ அந்தத் தோகை மயிலாளைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கிவிடுகிறான்.

பாவை என்ன சொன்னாள், பதில் என்ன வரும் என்று படுகாயமுற்ற நிலையிலே வீரன் களத்திலே காத்துக் கிடகிறான். அங்கோ - தூது சென்றவனிடம் அந்தத் தூரத்தைக் கொஞ்சிக் கிடக்கிறாள்.

அது தெரிகிறது கிளிசானுக்கு. நடமாடும் நிலைபெறுகிறான். ஆனால் மனத்திலே வேதனை கொட்டுகிறது. ஊர் திரும்பினா னில்லை. மீண்டும் களம் நோக்கிப் பாய்கிறான் - மாற்றாரின் படை வரிசை மிகுதியாக உள்ள பக்கம் சென்று போரிடுகிறான் - உடலெங்கும் வடுக்கள் - ஓராயிரம் தாக்குதல்கள் - போரிட்டபடி மடிந்து போகிறான்.

காதலில் தோல்வி கண்டதும், கட்டாரியால் குத்திக் கொல்பவர்கள் அல்லது கட்டாரியால் குத்திக்கொண்டோ, கடுவிஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்பவர்கள், காதலிலே துரோகம் இழைத்தவளைக் காரி உமிழ்ந்து அவளுடைய கயமைத்தனத்தை ஊரறியச் செய்பவர்கள் - இப்படியெல்லாம்தான் எழுதுவார்கள் கதை எழுதுவோர்.

நெப்போலியன் அவ்விதம் அல்ல! காதலிலே ஏற்பட்ட தோல்வி காரணமாக, வாழ்க்கை வெறுத்துப் போகுமானாலும், கடும்போரிட்டபடி, களத்திலே மாற்றாரைத் தாக்கியபடி, மாற்றாரின் தாக்குதலைப் பெற்றபடி, கடைசி மூச்சு இருக்கும் வரையில் போராடிக் களத்திலே மடிந்து விடவேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.

வெற்றி அல்லது வீரமரணம் என்ற எண்ணமே எந்தப் போர் வீரனுக்கும் ஏற்படும். நெப்போலியனுடைய கருத்தும் - களத்திலே கடும்போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வீரமரணம் ஏற்படவேண்டும் என்பதுதான் என்று கதை மூலம் தெரிகிறது.

கண்டோர் கலங்கிடவும் கேட்டோர் திடுக்கிடவுமான பெரும் போர்களைக் கண்டான் நெப்போலியன் - களத்திலே கடும் புயலெனச் சுற்றிச் சுற்றி வருவது வழக்கம். - ஆனால் அவனுக்குக் களத்திலே வீரமரணம் கிடைக்கவில்லை. எந்த மாற்றானுக்கும் அந்த ஆற்றல் இல்லை! பிடிபட்டு, அடைபட்டு, மனம் உடைந்த நிலையில், நோய் வாய்ப்பட்டு, கண்காணாத் தீவிலே இறந்துபட்டான். தீவிலே இருந்தபோது பலமுறை, ‘களத்திலே இறந்திருந்தால்... வீரமரணம் கிடைத்திருந்தால்...’ என்று ஏக்கத்துடன் நெப்போலியன் பேசினான். அந்த அஞ்சா நெஞ்சனைக் கொல்லவரும் எந்த எதிரியும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதால் போலும். நேருக்கு நேர் நின்று தாக்காமல், கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து, நோய்க்கிருமிகள், உடலிலே இடம்பிடித்துக் கொண்டு, நெப்போலியனைச் சிறுகச் சிறுகச் சிதைத்துச் சாகடித்தன.

இரண்டோர் முறை களத்திலே, நெப்போலியனுக்குக் குண்டடி பட்டதுண்டு. மிகச் சாதாரணமான காயம் ஒருமுறை கணுக்காலில் ஏற்பட்டது.

மற்றோர் முறை, களத்திலே போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த இடத்திலே நெப்போலியன் சென்றபோது மாற்றார் சூழ்ந்துகொண்டனர் - ஆனால் வீரத்திலும் தியாக உணர்விலும் மிக்க தோழன் ஒருவன், நெப்போலியன் மீது பாயவந்த குண்டுகளைத் தன்மீது விழச்செய்து கொண்டு இறந்தான் - நெப்போலியனைத் தன் உடலால் மறைத்துக் கொண்டான்.

நெப்போலியன் இறந்துபடத்தக்க ஆபத்தான நிலை கிளம்பியபோதெல்லாம், அவன் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்தபடி இருந்தது.

கார்சிகா விடுதலைக்காக இளமைப் பருவத்திலே ஈடுபட்ட போது, பிரான்சுப் படையின் தாக்குதலால், நெப்போலியனுக்கு ஆபத்து ஏற்பட இருந்தது; ஆனால் தப்பித்துக் கொண்டான்.

பிரபு வம்சத்திலே பிறந்து, ஏழ்மையில் உழலும் குடும் பத்தினருக்கு இலவசமாகக் கல்வி கற்பித்துத் தரும் முறை பிரான்சு நாட்டிலே இருந்ததால், நெப்போலியன், கல்விக் கூடம் சென்றிட முடிந்தது. ஓயாமல் படிப்பதும், சிந்திப்பதுமாக இருந்துவந்த நெப்போலியன் முதல் மாணவனாக இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க இடம் பெற்ற மாணவனானான். விடியற்காலை நான்கு மணிக்குத் துயிலெழுவதும், மற்ற எந்த அலுவலிலும் அதிக காலத்தைச் செலவிடாமல், படிப்பிலேயே கவனம் செலுத்துவதுமாக இருந்து வந்த நெப்போலியனைக் கண்டவர்கள், அப்போதே இவன் உள்ளம் இரு எரிமலையாகி ஒரு காலத்தில் நெருப்பைக் கக்கும் என்று கூறினர். நாளைக்கு ஒரு வேளைதான் உணவு! வாரத்துக்கு ஒருமுறைதான் உடை மாற்றுவது! கேளிக்கைக்கு நேரமும் கிடையாது. வசதியும் கிடையாது.

‘ஏழை என்பதால் ஏளனம் செய்கிறார்கள் - இதைத் தாங்கித் தத்தளிக்க வேண்டி இருக்கிறது’ என்று பாரிசில் இருந்து, ஊருக்கு நெப்போலியன் கடிதம் எழுதுவான். ‘என்ன கஷ்டம் ஏற்படினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்கொள் மகனே!’ என்பாள் அன்னை. மிகச் சிறுவயதிலேயே பொறுப்பை மிக நன்றாக உணர்ந்திருந்தான், பல பெரிய பொறுப்புகளைப் பிற்காலத்திலே ஏற்று நடத்த வேண்டிய நெப்போலியன்.

படிப்பது என்றால், மேலெழுந்தவாரியாக அல்ல - மிகுந்த அக்கறையுடன் - ஒன்றுவிடாமல் படிப்பதும், குறிப்புகள் எழுதுவதுமான முறையில் படித்துவந்தான்; பல அரிய ஏடுகளில் இருந்து குறிப்புகளை எடுத்துத் தொகுத்து எழுதி வைத்துக் கொண்டான்.

விந்தை நிறைந்த ஒரு செய்தி உளது, நெப்போலியன் படித்து எழுதி வைத்த குறிப்பேடுகளிலே கடைசிக் குறிப்பேட்டில்! கடைசியாக அவன் எழுதி இருப்பது எலினா தீவு பற்றிய தகவலைத்தான். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சிறு தீவு, செயின்ட் எலினா. பிரிட்டிஷாருடையது!!

எந்த எலினா தீவு பற்றி, மாணவன் நெப்போலியன் குறிப் பேட்டில் எழுதி வைத்தானோ, அதே தீவுதான், நெப்போலி
யனுக்குச் சிறைக்கூடமாயிற்று; கல்லறை பூமியுமாயிற்று.

இருபதாண்டு நிரம்பப் பெற்ற நிலையிலேயே, நெப்போலியனுக்கு, கார்சிகாவை விடுதலை அடையச் செய்ய வேண்டும் என்பதற்கான செயலில் ஈடுபடும் துணிவு ஏற்பட்டுவிட்டது.

பிரான்சு நாடு, புரட்சியை வெற்றிகரமாக நடாத்தி, முடிதரித்த மன்னனை வெட்டுப்பாறையில் நிறுத்திக் கொன்று விட்டதுடன், குடி அரசு நாடாகி, கோல் காட்டுபவனுக்கெல்லாம் அஞ்சிக் கிடந்த சாமான்யர்களே கொற்றம் நடாத்தும் நிலைபெற்றிடச் செய்தது.

இதுவே, கார்சிகா விடுதலைக்கு ஏற்ற சமயம் என்று கருதிய நெப்போலியன், 1789 செப்டம்பர் திங்கள் பள்ளி விடுமுறையின்போது, தீவு சென்று விடுதலைப் படையினருடன் கூடிப் பணியாற்றினான் - வெற்றி கிட்டவில்லை. பிரான்சுக்கு எதிராகப் புரட்சி நடத்தியதற்காக, பிடித்திழுத்துச் சென்று சிறையில் அடைத்திடுவர் என்று பேசிக் கொள்ளப்பட்டது; ஆனால் அதற்கு இடம் கொடுக்காத முறையில், நெப்போலியன் பாரிஸ் திரும்பிவிட்டான். முதல் முயற்சியில் தோல்வி - காதலிலும் களத்திலும்!
திரும்பவும் பாரிஸ் நகர் வந்தபோது, நெப்போலியனுடன் தம்பி லூயியும் வந்தான். இருவரிடமும் சேர்ந்து இருந்தது 85 (பிராங்குகள்) வெள்ளி நாணயங்கள்! பாரிசில், எவ்வளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தினாலும், கடன்படாமல் இருக்க முடியவில்லை. கைக் கடிகாரத்தைக்கூட அடகு வைத்துச் செலவுக்குப் பணம் தேடவேண்டியதாயிற்று. பிறகோர் நாள். பல்வேறு அரசுகளிலே இருந்த செல்வக் களஞ்சியங்களின் திறவுகோலுக்கு உரிமையாளனாகும் உயரிடம் பெற்ற நெப்போலியனுக்கு.

கார்சிகா விடுதலைக்காகப் பாடுபடுபவர் என்பதால் எந்தப் பாயோலி என்பாரிடம், நெப்போலியன் மெத்த மதிப்பு வைத்திருந்தானோ, அதே தளபதியை நேரில் கண்டு, பழகி, உரையாடி, உள்ளப் பாங்கைத் தெரிந்து கொண்டபிறகு, மதிப்பு மங்கிவிட்டது - மிகச்சாதாரண ஆசாமி! விடுதலைக்கான போர் நடத்தும் திறமையுள்ளவரல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பகை மூளும் அளவு வளர்ந்தது; ஊரார் பாயோலி பக்கம். எனவே, நெப்போலியனுடைய வீட்டைத் தாக்கக் கிளம்பினர், ஆத்திரம் கொண்ட மக்கள் - கொள்ளையும் அடித்தனர் - தலை தப்பினால் போதும் என்று நெப்போலியன் குடும்பத்தாருடன் ஓடி ஒளிய நேரிட்டது.
பாரிசில், இந்த நிகழ்ச்சி நெப்போலியனுக்குச் சாதகமான நிலையை உண்டாக்கிற்று. கார்சிகாக்காரனாக இருந்தாலும், நெப்போலியன் குடியாட்சி கண்ட புரட்சி இயக்கத்திடம் பற்று மிகக் கொண்டவன், அதனால்தான். பிரான்சு சார்பில் நின்று பாயோலியை எதிர்த்திருக்கிறான் என்று, பிரான்சிலே அரசு நடத்துவோர் எண்ணிக் கொண்டனர். புதிய ஆதரவு கிடைத்திட இந்த எண்ணம் பயன்படுவது கண்டு, நெப்போலியன் தன் பழைய கருத்தை பிரான்சிடம் கொண்டிருந்த பகை உணர்ச்சியைக்கூட மாற்றிக் கொண்டான்.

பாயோலியை எதிர்க்க, நெப்போலியனையே ஒரு படைப் பிரிவுக்குத் தலைவனாக்குகிறது பிரான்சு அரசு.

எந்தக் கார்சிகாவின் விடுதலைக்காகச் சீறிப் போரிட்டானோ, அதே கார்சிகாவில் பிரான்சு ஆதிக்கம் நிலைத்திட, அதே நெப்போலியன், எந்தப் பாயோலியை விடுதலை வீரர் என்று கொண்டாடி வந்தானோ அதே தளபதியை எதிர்த்துப் போரிட முனைந்தான்.

இலட்சியப் பற்றுள்ளவரின் செயலாகுமா இது எனில், ஆகாது. நெப்போலியன் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டுவிட்டான் என்றுதான் கூற வேண்டும் - கூறுவர் - கூறினர். ஆனால் நெப்போலியனின் மனம் வேறு விதமாகப் பக்குவம் அடைந்ததன் விளைவுதான் இந்த நிலைமை மாற்றமேயன்றி, கேவலப் போக்கு அல்ல என்பதனை மிகக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணர முடியும்!

பிரான்சு, கொடுங்கோலரின் கொலுமண்டபம் அல்ல; புரட்சிப் பூங்காவாகிவிட்டது; எனவே, கார்சிகா, தன்னைப் பிரான்சு அடிமைப் படுத்திவிட்டதாக இனி எண்ணத் தேவை யில்லை; புதிய கருத்துகள் பரவிட, புதிய ஆட்சி முறை மலர்ந்திட, பிரான்சு நாட்டுடைய வலிவு எந்த அளவு வளருகிறதோ அந்த அளவுக்குப் புரட்சியில் பூத்த புதுமைக் கருத்துக்களுக்கு வெற்றி கிட்டும். எனவே இனி நாம் பிரான்சின் பக்கம் நிற்கவேண்டும் என்று முடிவு செய்தான் - எதனையும் ஆய்ந்தறிந்து கணக்குப் போட்டுப் பார்க்கும் திறமை படைத்த நெப்போலியன்.

பாயோலியின் கோட்டையை இருமுறை தாக்கியும் பலன் ஏற்படவில்லை - அந்தத் தளபதியின் கை ஓங்கிவிடுகிறது - நெப்போலியன் நாட்டுத் துரோகி என்று அறிவிக்கப்பட்டு விடுகிறது. நெப்போலியன் தப்பினால் போதும் என்ற நிலை! குடும்பத்துடன், கார்சிகாவை விட்டு வெளி ஏறிவிடுகிறான். அப்போதே சிக்கியிருந்தால் நெப்போலியனுடைய எதிர்காலம் இருண்டுபோய் விட்டிருக்கும்.

மார்சேல்ஸ் நகரில், ஒரு வீட்டின் நாலாவது மாடியின் தஞ்சமடை இந்தக் குடும்பம் வாடுகிறது.
இந்தச் சமயத்தில்தான் நெப்போலியனுடைய அண்ணன் ஜோசப், வணிகர் மகளை மணமுடித்ததும், நெப்போலியன் டிசயரியைக் காதலித்துக் கைகூடாமற்போனதும்.

இதிலிருந்து, நெப்போலியன் கார்சிகன் என்ற நினைப்பை மாற்றிக் கொண்டு விடுகிறான்; நிலைமை மாறிவிடுகிறது-; பிரான்சுக்காரனாகி விடுகிறான்; பிரான்சு என் நாடு என்று கொள்கிறான்.

தனித்து இயங்க முடியாது - ஏதாவது ஒரு பக்கம் சேர்ந்து தான் வாழமுடியும் என்ற நிலை ஏற்படுமானால், எந்தப் பக்கம் ஆதிக்கம் செலுத்தும் வலிவுடையதோ அங்குச் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்! வீழ்த்தப்பட்டுப் போவதைக் காட்டிலும், வீழ்த்தும் வலிவு தேடிக் கொள்வது நல்லது - இது நெப்போலியன் கொண்டுவிட்ட கொள்கை.

நிலைத்து நிற்பது கொள்கை; நேர்மையுடன் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்; வேளைக்கு ஒரு கொள்கை, நாளைக்கு ஒரு கட்சி என்று மாறுவது தவறு. அதிலும் சுயநலத்துக்காக மாறுவது, மிகக் கேவலம்.

எவரும் மறுக்கொணாத, எவருக்கும் எளிதிலே புரியத் தக்க, எவராலும் போற்றிப் பாராட்டத்தக்க, இந்தக் கருத்து, நெப்போலியனுக்குத் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும்! படித்த ஏடுகள் கொஞ்சமா! சிந்தித்த காலம்தான் குறைவா!!

கரு உருவில் இருந்து வந்த நோக்கம் பெரிதாக வளர்ந்து வளர்ச்சி காரணமாக வடிவத்திலே மாற்றம் கொண்டுவிட்டது என்று கூறுவதுதான், பொருத்தமாக இருக்கும். கோழைத் தனமும் சுயநலமும் நெப்போலியனை மாற்றிவிடவில்லை. கார்சிகா விடுதலை என்பது, துவக்கத்தில் மிகப் பெரிய சாதனை என்று அவன் மனத்திலே தோன்றிற்று. காலம் மாறிற்று. கருத்தும் மாறிற்று! கார்சிகா, உள்ளங்கை அளவுள்ள தீவு! இதிலே ஆதிக்கம் பெற்றுத்தான் என்ன பலன்? உலகறியும் வீரனாகவா முடியும். வெற்றி பெற்றால், தீவின் தலைவனாகலாம் - எந்தச் சமயம் எந்த எதிரிக் கப்பல் வருகிறதோ என்ற திகிலுடன் இருக்கவேண்டும்; தோற்றுவிட்டால், பாரிசில், சந்தைச் சதுக்கத்தில், வெட்டுப் பாறையிலே வீழவேண்டும். இதற்கா, திரட்டி வைத்துள்ள ஆற்றல் பயன்படுவது. பிரான்சிலே பிடிதேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும், பிறகு பிறநாடுகள்; பேரரசு; காலத்தை வெல்லும் கீர்த்தி பெறவேண்டும் - இது நெப்போலியனுடைய புதிய கோட்பாடாகிவிட்டது.

தன் ஆற்றலிலே அளவற்ற நம்பிக்கை; அந்த ஆற்றலை வெளிப்படுத்தி வீர வெற்றிகள் பெற்றாக வேண்டும் என்ற துடிப்பு - நெப்போலியனுக்கு.

ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதிலே, அத்துணை வெறி என்று குற்றம் சாட்டினர், பிற்காலத்தில். நெப்போலியன் சொன்னான். “நான் ஆதிக்கம் பெற விரும்புகிறேன் - மறுக்க வில்லை. ஆனால் எந்த முறையில், எனக்கு அந்த ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். யாழ் வாசிப்பவனுக்கு, எப்படி, யாழிடம் தனக்கு நிகரற்ற ஆதிக்கம் இருக்கவேண்டும் என்று எண்ணம் இருக்குமோ, அப்படி எனக்கு. ஆதிக்கத்தின்மீது ஆர்வம். யாழ் வல்லோன் எதற்கு விரும்புகிறான் ஆதிக்கத்தை? யாழினின்றும் எவரையும் மகிழ் விக்கவல்ல இனிய இசையை எழுப்ப! என் நோக்கமும் அஃதே போன்றதுதான். பல அரசுகளிலே ஆதிக்கம் பெற முனைகிறேன் - எதன் பொருட்டு? அமைதி நிலைத்திட, அரசு நிலைத்திட, வாழ்வு சிறந்திட, வளம் பெருகிட! மக்கள் வாழ்ந்திட!!”

இரத்தம் இருபது ஆண்டுகள் பொங்கிடும் விதமான போர் பல நடத்தி, ஆட்சிகள் பலவற்றைக் கலைத்தும், கவிழ்த்தும், ஒரு பேரரசு அமைத்திட முனைந்தது! மக்களுக்கு நல்வாழ்வு பெற்றளிக்க என்று கூறுவதாலேயே, இருபது ஆண்டுகள் விளைந்த விபரீதங்களை விருந்தாக்கிக் கொண்டு விருது அளித்திட எவர் ஒப்புவர்!

நெப்போலியனுடைய ஆதிக்க வேட்டைக்கு ஒரு நோக்கம்கூட இருக்கலாம் - அந்த நோக்கம் நேர்த்தியானது என்று திறம்பட வாதிடவும் செய்யலாம். ஆனால் எத்தனை எத்தனை அழிவு, கொடுமை, இழப்பு, இடிபாடு, இடர்ப்பாடு! எல்லாம் கடைசியில் எதற்குப் பயன்பட்டது - ஒரு மாவீரன் மகத்தான வெற்றிகளை, திறமையால், உழைப்பால், திட்டமிடுவதால் பெறமுடிந்தது என்பதை வரலாற்றுச் சுவடியிலே இணைத்துக் காட்டத்தானே! மல்லிகையின் வெண்ணிறத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து, மதலையினைக் கொன்று, அந்தக் குருதியிலே மல்லிகையைக் கொட்டி, செந்நிறமேற்றிக் காட்டுவதா! இரத்தம் பொங்கிடும் இருபது ஆண்டுகள், ஓர் இலட்சிய அடிப்படையிலே மேற்கொள்ளப் பட்ட புனிதப் பணி அல்லவே அல்ல! ஆற்றலை அளவுகடந்து பெற்றவன், அவனியை அழித்தேனும், வெற்றிப் புகழ்பெற நினைந்திடும் விபரீத விளையாட்டு அது. உலக வரலாற்றிலே பல நூற்றாண்டு களுக்கு ஒருமுறை, ஏற்படும் பூகம்பம், எரிமலை, பெரும் புயல், பெருவெள்ளம்.

துவக்கத்திலேயே, நெப்போலியனுடைய போக்கைக் கூர்ந்து கவனித்தவர்கள், ‘தன்னால் முடியும் என்ற எண்ணம் தடித்துப்போன நிலை இந்த வீரனுக்கு இருக்கிறது. அது மிக ஆபத்தானது. இவன் ஆட்டிப் படைத்திட, ஆதிக்கம் கொண்டு அலைந்திட முனைவான். வருங்காலத்தினர், கொடுமையின் சின்னம், பயங்கர மனிதன் என்று கூறத்தக்க நிலைக்குச் செல்கிறான் இந்த நெப்போலியன்’ என்று கூறினர்.

டோவ்லான் எனும் ஊரில், பிரிட்டிஷார் கோட்டை எழுப்பிக்கொண்டு, மன்னர் கட்சியை மீண்டும் பிரான்சில் குத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த இடத்தைத் தாக்கிப் பிடித்திடுவதற்கேற்ற வழி இல்லை என்று பிரான்சுத் தளபதிகள் பலரும் கருதினர்.

நெப்போலியன், துணிவாகத் தாக்கி, டோவ்லானில் வெற்றி பெறமுடியும் என்று கூறி, அதற்கான திட்டம் தயாரித் திருப்பதாகத் தெரிவித்தான். தயக்கத்துடன் தான், நெப்போலி யனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. என்றாலும், வியக்கத் தக்க வெற்றியைப் பெற்றான். அஞ்சாமல் தாக்குவது, விரைவாகச் செயலாற்றுவது எனும் போக்கின் காரணமாக அந்த வெற்றி கிடைத்தது. பிரிட்டிஷாரும் அவர்களை நம்பி அங்குக் குடியேறி இருந்த பல்லாயிரவரும் பதைபதைத்துப் போயினர்.

அந்தப் போரிலே பெரும் படைத்தலைவன், நெப்போலியன் அல்ல.

அந்தப் பதவியில் வேறொருவர் இருந்தார் - திட்டம் நெப்போலியனுடையது - வெற்றி பெற்றதற்குக் காரணம் திட்டம்தான் என்பது அனைவருக்கும் தெரியும் - பெரும்படைத் தலைவரும் அறிவித்தார் - நெப்போலியனைப் பாராட்டினர்.

நெப்போலியன் நடாத்திய புயல் வேகத் தாக்குதலால் நிலைகுலைந்து போனவர்கள், பீதியுற்று, பல்வகைக் கலங்க ளேறிக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முனைந்தனர். பதினையாயிரவர், முதியவர் இளைஞர், ஆடவர் பெண்டிர், படுகாயமுற்றோர், நோய்வாய்ப்பட்டோர், பதறி ஓடுகிறார்கள் படகுகளை நோக்கி! படகுகளிலே ஏறுவதற்குப் போட்டி, சச்சரவு! படகுகள் கவிழ்ந்துவிட, பலர் பிணமாகி மிதக்கிறார்கள். இதற்குள் ஊரிலே ஆயுதக் கிடங்கு தீப்பிடித்துக் கொள்கிறது. பெரு நெருப்பு பரவுகிறது. சிக்கினோர் கருகினர்! கட்டடங்கள் இடிபாடுகளாயின! பொருட்குவியல் சாம்பலாயிற்று! ஒருபுறம் கொந்தளிக்கும் கடல். மற்றோர் புறம் பெருநெருப்பு - இடையிலே பீதிகொண்ட மக்கள்.

எதிரபாராதிருந்த நேரத்தில் எவரும் எதிர்பார்த்திருக்க முடியாத முறையிலே தாக்குதலை நடத்தியதால் வெற்றி கிட்டியது மட்டுமல்ல, தோற்றவர்கள் நாசமாயினர் இரத்தம் பொங்கப் போகிறது, இனி இவன் நடாத்தும் போரினால் என்பதை அறிவிக்கும் எச்சிரிக்கையாயிற்று டோவ்லான்.

நெப்போலியனுடைய புகழ் பாடலாயினர் பலரும்.