அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
1

திருப்பரங்குன்றம் மாநாடு
கழகம் விடுதலை இயக்கமே
தஞ்சைச் சம்பவம் தரும் படிப்பினை
பதவிப் பித்தர்கள் யார்?
சோற்றுப் பிரச்சினை
தி. மு. க. : அரசியல் வெட்டுக்கிளி அன்று
மக்களாட்சி என்பதன் பொருள்
மெழுகுவர்த்தியால் பெற்ற பாடம்
அண்ணாவின் உடற்கூறும் உளப்பாங்கும்
செய்தித்தாள்களின் வேலைத் திறம்
சிங்களத்தில் சித்திரவதை

தம்பி!

உரிமையுடன் பெருமிதம்கொள்கிறாய் - உன் புன்னகை யிலேயே ஓர் புது எழில் காண்கிறேன் - பனித்துளியுடன் காணப் படும் புதுமலர் உன் கண்கள் - ஆமாம்! வெற்றிக் களிப்புடன் இருக்கிறாய் - வேழத்தின் தந்தத்தை முரித்து, உடலில் பாய்ந் திருந்த வேலினைப்பறித்தெடுத்த மாற்றான்மீது வீசி வெற்றி கண்ட வீரமரபின் வழி வந்தவனன்றோ - இன்று விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, வீறுகொண்டெழுந்து வெற்றிப் பாதையிலே நடைபோடுகிறாய் - உன் கை வண்ணமாக, கருத்தோவியமாக, எழுச்சி வடிவமாகத் தோற்றமளித்த, திருப்பரங்குன்றம் மாநாடு, உன்னையும் என்னையும், மரபின் மாண்பையும், தாயகப் பெருமையையும் மறவாத அனைவரையும், களிப்புக் கடலில் நீந்திடச் செய்தது. எப்படி, அண்ணா! என் பணி? - என்று கேட்கிறாய். என் சொல்வேன், தம்பி! உன்னிடம் இத்தகைய அரும் ஆற்றல் நிரம்ப இருப்பது அறிந்துதானே, நாடு மீட்டிடும் நற்பணியில் ஈடுபட, நான் துணிந்தது.

தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, நமது இயக்க வரலாற்றிலே நிச்சயமாக ஒரு திருப்புமுனை என்பதை, நிகழ்ச்சி களையும் நிலைமைகளையும் ஆராய்வோர் அனைவரும் உணருவர்.

விடுதலை இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெரியதோர் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று மாற்றார் இகழ்ந்துரைக்கும் நேரம்!

தி. மு. க. சுடுகாடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று, அரசாளும் இடம் (தகுதி என்று கூற மனம் இடம் தரவில்லை) பெற்றதனால், ஆணவமாக அமைச்சர் பேசும் காலம்!

உட்குழப்பம் மூட்டிவிட்டோம், இனி ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான் என்று "சாபம்' கொடுக்கும் போக்கிலே, மாற்றார்கள் தூற்றி நிற்கும் நாட்கள்.

இத்தகைய நேரத்திலல்லவா, நாம் கூடினோம் - திருப்பரங் குன்றத்தில்.

தம்பி! திருச்சியிலே நடைபெற்ற மாநில மாநாட்டுக் காக, நாம் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகள், செய்த விளம்பரங்கள், திரட்டிய ஆதரவுகள்போல, இம்முறை எதுவும் செய்ய முடியாத நிலை - அறிவாய்.

விடுதலை இயக்கத்திலே ஒரு வெடிப்பு உண்டாக்கி, வீழ்த்தும் சதி திட்டமிடப்பட்டதோ, அல்லது கேடான நிலைமை அப்படி ஒரு விளைவுக்கு வழிகோலியதோ நான் அறியேன்; எனினும் ஏற்பட்ட நெருக்கடி, என் நெஞ்சுக்குப் பெரிய அதிர்ச்சியாகவும், நமது தோழர்களுக்குப் பெருத்த வேதனையாகவும் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அச்சு முரிந்துவிட்டது என்று அச்சமூட்டியோரும், பயிர் அழிகிறது என்று பச்சாதாபம் காட்டினோரும், கழகம் கலைகிறது என்று கலக்கமூட்டியோரும் பலர்.

இரண்டு திங்கள், இதழ்கள் எல்லாம், இந்தச் சேதிகளையே தாங்கிக்கொண்டு வந்தன.

விடிந்ததும், இன்று என்ன தூற்றலோ? இன்று எவர் அறிக்கையோ? எவருடைய அறைகூவலோ? என்று நினைத்த வண்ணமே, இதழ்களைப் பிரிக்க முடியும் என்ற நிலைமை.

இப்படி ஒரு தாக்குதல் இதுவரையில், இந்த இயக்கத்தின் மீதாவது தொடுக்கப்பட்டதுண்டா என்று நானும் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன், ஒன்றுகூட எனக்குத் தெரியவில்லை.

மனமுரிவுகள் ஏற்பட்டதுண்டு, - பிளவுகள் காணப் பட்டதுண்டு - முகாம்கள் அமைக்கப்பட்டதுண்டு - புகார்கள் வெளியிடப்பட்டதுண்டு - ஆனால், அப்பப்பா! பகை, இந்த அளவுக்குக் கக்கப்பட்டதுண்டா? எப்போதாகிலும்?

எந்தக் கட்சியிலாகிலும்? காந்தியாருக்கும், சுபாஷ்சந்திரபோசுக்கும் மூண்ட பெரும் தகராறுகூட, ஊரூருக்கும் "முகாம்கள்' அமையவும், தலைவர்கள் அறிக்கைகள் விடவுமான நிலைமையைத்தான் ஏற்படுத்திற்றே தவிர, பழிச் சொல், இழிமொழி பதற பதறத் தூற்றுவது, பகையைக் கக்குவது போன்ற சிறுமைச் செயல்கள் தலைதூக்கவில்லை. நம்மை நோக்கியோ, நச்சரவினும் கொடிய பழிச்சொற்கள், நாராசத்திலே தோய்த்தெடுக்கப்பட்ட இழிமொழிகள் நாளைக்கு ஒரு புகார், வேளைக்கு ஒரு குற்றச்சாட்டு - வீசப்பட்டன.

நேசம் முரிந்ததே, பாசம் அற்றுப்போய்விட்டதே, தொடர்பும், தோழமையும் அறுபட்டுப்போகின்றனவே கூடிப் பணியாற்றிய இனிய நாட்கள் முடிவுற்றுப் போகின்றனவே, கண்டதும் களிப்பு பேசும்போது மகிழ்ச்சி என்பதை எண்ணியே, என் மனம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும்போது, இருபது முப்பது ஆண்டுகள் எல்லாத்துறைகளிலும் பகை மூண்டு மூண்டு, பார்த்த உடனே, முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்குக் கடுகடுப்பாகத்தக்க கசப்புணர்ச்சி கப்பிக்கொண்டால், எப்படி இழித்தும் பழித்தும் பேசிக்கொள்வார்களோ, எதிர்ப்பு மூட்டிக்கொள்வார்களோ, எதிரிகளுடன் கூடிக்கொண் டாகிலும் அழித்துவிட முனைவார்களோ, அப்படி அப்படி அல்லவா, விலகிய விநாடியே வேகம், விறுவிறுப்பு, பகை கக்குவதிலே காட்டத் தொடங்கினார்கள். அதை எண்ணும் போதுதானே, தம்பி! இவர்கள் நெடுங்காலமாகவே, இவ்வளவு பகை உணர்ச்சியை மனத்திலே குவித்து வைத்துக்கொண்டிருந் தார்கள். சமயம் வரட்டும் வரட்டும் என்று பார்த்துக்கொண் டிருந்தார்கள் என்பது புரிகிறது நானோர் ஏமாளி - துளியும் இப்படி இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு எனக்கு எழவே இல்லை! கடைசி விநாடி வரையில், கழகத்தின் கட்டுக்கோப்புக்காக வாதாடுகிறார்கள் - விதிமுறைகளில் மாற்றம் காண விழை கிறார்கள் - என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன் - சிறிதளவு கூட என்னைப்பற்றியோ, அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த ஏற்புடைய கொள்கைபற்றியோ, இத்தனை பகை, அவர்கள் உள்ளத்தில் புற்றரவுபோல இருக்கிறது என்று நினைக்கவே இல்லை.

தேக்கிவைக்கப்பட்ட வெள்ளம், கரையிலே சிறு விரிசல் ஏற்பட்ட உடனே, அந்த வழியாகப் புகுந்து, விரிசலை உடைப்பு ஆக்கி, கரையைப் பெயர்த்துக்கொண்டு வெளியே பாய்ந்து, சுற்றுப்புறம் முழுவதையும் வெள்ளக்காடாக்கி, மாடுமனை அழித்து, மக்கள் கூட்டத்தைப் பாழ்படுத்தி, வயல்களை நாசமாக்கி, வாழ்வைக் குலைப்பதுபோலல்லவா. வெறுப்புணர்ச்சி இருந்திருக்கிறது, இந்த அளவு; இன்று வெள்ளமாக வெளியே பாய்கிறது! இதை நான் துளிகூட எதிர்பார்க்கவே இல்லை. அதனால், என் வேதனை மற்றவர்க்குள்ளதைவிடப் பன்மடங்கு அதிகம். அந்த நிலையிலே மாநாடு என்ற அறிவிப்பு. எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை, அதற்கான முன்னேற்பாடு களிலே ஈடுபடும் ஆர்வத்தையும் நான் போதுமான அளவு பெறவில்லை.

ஜூலை 13ஆம் தேதி மாநாடு - தம்பி! நான் ஜூலை 9ஆம் தேதிவரையில், வடாற்காட்டிலே கூட்டங்களில் கலந்துகொண் டிருக்கிறேன். பொருளாளர் கருணாநிதி மாநாட்டு அமைப்பாளர் அலுவலையும் சேர்த்துப்பார்க்கவேண்டி நேரிட்டது. கலைக் காட்சிப் பொறுப்போ, நண்பர்கள் பார்த்தசாரதி, இராஜாராம், பொன்னுவேல், செழியன் ஆகியோரிடம்; நண்பர் மதி, நடராசன், நாவலர் ஆகியோர் மாநாட்டுக்கான அறிவிப்புக்களை, அலுவல் களைக் கவனித்துக்கொண்டிருந்தனர். மதுரைத் தோழர் முத்துவுடன், மாவட்டத் தோழர்களும், அன்பிலும் மன்னார் குடியும்! நானோ, ஊரூருக்கும், தர்மலிங்கம் எம். பி. அவர்களால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்!

நடைபெறுவதோ, நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பொது மாநாடு. எண்ணி நாலு நாட்கள்கூட, நான் அந்த மாநாடு குறித்து ஏதும் செய்வதற்கு இல்லாமலே போய்விட்டது - எனினும், மாநாடு, எழிலும் ஏற்றமும், பயனும் சுவையும் மிக்க முறையிலே, நடந்தேறித் திராவிடத்துக்குப் புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று.

எங்கெங்குக் "கால்' நடுவது என்பதிலே இருந்து எந்த இடத்திலே எந்தப் படம் இருக்கவேண்டும் என்பது வரையிலே, திருச்சி மாநில மாநாட்டிலே, நான் கவனித்துக்கொண்டேன். மதுரையிலோ உள்ளே நுழைகிறவரையில், கொட்டகையின் அளவோ, வகையோ, அதன் வண்ணமோ எனக்குத் தெரியாது. மாநாட்டு வேலைகளுக்கும் எனக்கும் அவ்வளவு தொடர்பற்ற நிலைமை! இருந்தால் என்ன? மாநாடு காண்போர் களித்திடும் சீருடன் நடைபெற்றது. காருலாவிற்று - சீர்கெடக்கூடிய மழையாகிவிடவில்லை - வெப்பத்தைத் தணித்திடும் குளிர் காற்றளிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாள், இயற்கை அன்னை!

இந்த நிலையினின்றும், நானோர் பாடம் பெற்றேன்.

நாம் கவனிக்காவிட்டால், கருத்துடன் காரியமாற்றா விட்டால், செம்மை ஏற்படாது என்ற எண்ணம், அகந்தையளவு எனக்கு எப்போதும் எழுவதில்லை என்றாலும், அச்சம் தரத்தக்க அளவுக்கு எழுவதுண்டு. இதைச் செய்யவேண்டுமே, அதை இப்படி அமைக்கவேண்டுமே எதை எதை எப்படி எப்படிக் கெடுத்துவிடுவார்களோ என்றெல்லாம், ஒரு பதைப்பு, பரபரப்புணர்ச்சி ஏற்படும். அதனால், எல்லாக் காரியத்திலும் ஏதேனும் ஓர்விதமான தொடர்பு இருக்கவேண்டும் என்று துடிப்பதுண்டு! அப்படித் தொடர்பு இருப்பதனால்தான். காரியம் செம்மையாக நடக்கிறது என்ற நினைப்பும் உண்டு - மறைப்பானேன்!!

ஆனால், தம்பி! இம்முறை நடைபெற்ற மாநாடு, எனக்கிருந்து வந்த அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை நான் உணரச் செய்தது.

தென்னங்கீற்றிலே அணில் அமர்ந்திருக்கும்! காற்றடிக்கும்! கீற்று ஊஞ்சலாடும்! பார்த்திருக்கிறாயல்லவா? அப்போது, அந்த அணில், கீற்றினை ஆடவைப்பது தான் தான் என்று எண்ணிக் கொள்ளுமோ என்னவோ - நடைபெறுகிற காரியத்தில் ஒரு தொடர்பு இருந்தால், அந்தக் காரியத்தை நான் செய்வதாக, எனக்கு ஒரு நினைப்பு உண்டு. அது தேவையற்றது என்பதைத் தெளிவாக்கும் வகையிலே, நான் தொடர்புகொள்ள முடியா திருந்தும், மாநாடு சம்பந்தமான எல்லா நிகழ்ச்சிகளும் மிகச் செம்மையாக நடைபெற்றிருக்கின்றன.

தம்பி! இதன் உட்பொருள் என்ன, தெரிகிறதல்லவா? நடு நாயகர்களின் திறமையால் மட்டுமே, நமது இயக்கம் வாழ முடியும், வளரமுடியும், என்பது தவறான தத்துவம்; பல இலட்சக்கணக்கானவர்களின் அறிவாற்றலால், உழைப்பினால், வடிவமெடுத்துள்ள இயக்கம், தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும், மற்றவர்களை இயங்க வைக்கவுமான ஓர் நிலையை, வலிவை, தன்மையைப் பெற்றுவிட்டது!

இந்தப் "பாடம்' எனக்குக் கிடைத்ததைப்போலக் கிடைத் திருந்தால், ஒருவேளை, விலகி வீறாப்புப் பேசுவோர் தன்னடக்கம் கொண்டிருக்க முடியுமோ, என்னவோ!!

மாநாட்டு வெற்றி, நிச்சயமாக, ஏற்கனவே இருந்து வந்த தவறான எண்ணத்தைப் போக்கியதுடன், இயக்கத்திடம் எனக்கு முன்பு இருந்ததைவிட அதிகமான மதிப்பும் நம்பிக்கையும் கொள்ளச் செய்தது.

வீரனுடைய, ஆற்றலின் காரணமாகத்தான், அம்பு பாய்கிறது! ஆனால், விடுபட்ட அம்புக்கு, செலுத்துபவனிடம் உள்ளதைக்காட்டிலும், வேகமும் துளைக்கும் சக்தியும் ஏற்பட்டு விடுகிறது அல்லவா?

அம்பினை எய்துவிட்டு, எய்தவனே முயன்றாலும் அதன் வேகத்தைத் தடுக்க, கெடுக்க, மடக்க முடியாது அல்லவா? தம்பி! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோர் அளவு, இயக்கம் வளர வகையும் வடிவமும்பெறத் துணை நின்றோம். நமது கூட்டு முயற்சியின் விளைவுதான், தி. மு. க. ஆனால், அந்த அமைப்பு செம்மைப்பட்டதும், நாமே கண்டு வியக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதிலே, நமது பங்கு இது, அதன் தரம் இத்தகையது என்று, பிரித்தெடுத்துக் காட்ட இயலாது - உரிமை கொண்டாடுவதும் பொருளற்றதாகும்.

வண்ணக் கலயங்களில் உள்ள சிவப்பும் பச்சையும், நீலமும், மஞ்சளும், கருப்பும் பிறவுமான வண்ணங்கள், தூரிகைகொண்டு ஓவியம் வரைவோனின் திறமையினால், வானமாகி, வாவியாகி, மலராகி, மாதாகி, கனியாகி, கிள்ளையாகி, அருவியாகி, அல்லி யாகிவிடுகிறது. கலயத்தில் இருந்தபோது, வெறும் வண்ணக் குழம்பு! ஓவியமான பிறகோ, புத்தம் புதிய வடிவங்கள்! வண்ணக்குழம்பின்றி ஓவியம் இல்லை! உண்மை! எனினும், ஓவியமான பிறகு, வண்ணக்குழம்பு என்னால்தான் இவையாவும் என்று உரிமைகொண்டாடவா முடியும்?

நம் உழைப்பு, தம்பி, அந்த வண்ணக்குழம்புக்கு ஒப்பிட லாம்! ஓவியன் நிலையில் உனது காலக்கரம்!!

காலக்கரத்தின் வேலைத் திறத்தால், வடிவம்பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் ஈடுபட்டு, பதவி பிடிக்கும் அரசியல் சூதாட்டத்துக்காக அமைக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால், அப்போது, மேட்டுக் குடியினர், மேடை அதிரப் பேசுவோர், கூடுவிட்டுக் கூடு பாய்வோர், குலவிக் கெடுக்கவல்லோர், சிண்டு முடிந்துவிடுவோர், சீமான்களை வலை போட்டு இழுக்கத் தெரிந்தோர், இருபொருள் தரும் "இலட்சியம்' கூறுவோர் எனும் தரத்தினர் தேவைப்படுவர்.

எவரிடம் இரும்புப் பெட்டி அல்லது மற்றவர்களின் இரும்புப் பெட்டியைத் தனதாக்கிக்கொள்ளும் தந்திரமோ இருக்கிறதோ அவர், கட்சிக்குக் கர்த்தாவாகிடவேண்டிவரும். அவருடைய "ஆதரவு' இருந்தால் மட்டுமே கட்சி வளரும், வெற்றி கிட்டும். அவர் விலகினாலோ, அல்லது அவர் செல்வம் கரைந்து போய்விட்டாலோ, கட்சி கருகும்.

அரசியலில் உள்ள, விளைந்த காட்டுக் குருவிகள், அப்படிப் பட்ட கட்சியில் "பசையும் உருசியும்' உள்ள வரையில், இடம் பெற்று இருக்கும்; பசையும், உருசியும் உலர்ந்தால், பறந்தோடும் வேறோர் பசை தேடி.

எவருக்கு என்ன விலை? யாரைக் கொண்டு யாரை வீழ்த்தலாம்? எவரெவருக்குள்ளே பகை உளது? - என்று மோப்பம் பிடிக்கத் தெரிந்தவர்கள் அப்படிப்பட்ட கட்சிக்கு நடுநாயகர்களாகக்கூடும்.

ஆனால், தி. மு. க. தேர்தலில் ஈடுபடுகிறது என்றாலும், இடம் பிடித்து இனிப்புப்பெற அல்ல; பதவி பிடித்துச் சுவைக்க அல்ல; பல்வேறு நாட்டின் தலைவர்கள், இன்று அக்கறை காட்ட மறுக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினை குறித்து; அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், ஆதரவைப் பெறவும், தேர்தல் வெற்றியின் மூலம், பொதுமக்களின் ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டும் தூய நோக்கத்துக்காகவே! எனவே, தேர்தலில் ஈடுபட்டாலும், கழகம் விடுதலை இயக்கம் எனும் மாண்பினை இழந்துவிடாது; விடுதலைக் கிளர்ச்சியின் ஒரு கட்டமாகவே, கழகம் தேர்தலில் ஈடுபடுவதைக் கொள்கிறது.

தம்பி! விடுதலை இயக்கத்துக்குத் தேவைப்படுபவர் - எட்டு இலட்சம் கொட்டிக் கொடுக்கத்தக்க செல்வவான் அல்ல - எதிர்ப்புக்கு அஞ்சாத ஏறுகள் வேண்டும்! வேளைக்கு ஒரு வேடமிடும், அரசியல் கழைக்கூத்தாடிகள் அல்ல, எந்தச் செயலையும், இலட்சியத்துக்கு வலிவு தரத்தக்கதாக அமைத்துக் கொள்ளத்தக்கவர்கள் வேண்டும். அவர்கள் குடிசை வாழ்வோ ராக இருக்கலாம்; ஆனால், கொள்கைத் தங்கம்கொண்டோராக இருத்தல்வேண்டும். தேர்தலில் ஈடுபடலாம்; ஆனால் வெற்றிக் காக ஏக்கம்கொண்டு, கூடாநட்பும், கொள்கை இழப்பும் தேடிக்கொள்ளக்கூடாது.

தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, நாடாள முடியும்; நாடாண்டால்தான், நமது கட்சியின் வளர்ச்சிக்கான வழி தேடிக் கொள்ளலாம் என்ற நப்பாசையால், ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், சிற்றரசர்களையும் சீமான்களையும், ஆலை அதிபர் களையும் தட்டிக் கொடுத்தும் கட்டித் தழுவியும், பணம் பெற்று வருவது உலகறிந்த இரகசியமாகும். சபர்மதி குடிலில் இருந்து சாந்தம் போதித்து, காந்தியார் திரட்டிய செல்வாக்கு மட்டும், தேர்தலில் வெற்றிபெறப் போதாது என்று உணர்ந்துகொண்ட காங்கிரஸ் கட்சி, இன்று கோடிக்கணக்கான ரூபாய்களைத் தேர்தலில் செலவழித்துத் தான், வெற்றிபெற முடியும் என்பதை அறிந்து, அந்தப் பணம் பெற, எப்படிப்பட்ட படுபாதகச் செயல் புரிவோராக இருப்பினும் கவலை இல்லை என்று கூறிப் பணம் திரட்டிடக் காண்கிறோம்.

"நமஸ்தே'' - பயபக்தியுடன் கூறுகிறான், கட்டுடல் படைத்தவன்.

"நமஸ்தே!'' என்று நடுக்கும் குரலில் பேசுகிறார், அந்தக் காங்கிரஸ் தலைவர்.

"நெடுநாட்களாக எனக்கு ஒரு ஆவல், என்னால் ஆன தொண்டு செய்யவேண்டும் என்று. இன்றுதான் அதற்குச் சந்தர்ப்பம் கிட்டிற்று; ஜென்மம் சாபல்யமாகும் இனி,'' என்று உருக்கமாகப் பேசுகிறான், ஓங்கி வளர்ந்தவன். பயத்தால் உதடு உலருகிறது, நா வறளுகிறது, உடல் ஆடுகிறது காங்கிரஸ் தலைவருக்கு; ஏனெனில், இன்றுதான் சந்தர்ப்பம் கிட்டிற்று என்று சொல்பவன், பெரிய கொள்ளைக்காரன்; இடம்: மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு காடு!!

வழிப்பறி நடத்துபவன்; போலீஸ் வளையத்தில் சிக்காதவன் இந்தக் கொள்ளைக்காரன் - இவனிடம் வந்து சிக்கிக் கொண்டோமே; பாவி, என்ன பாடுபடுத்தப்போகிறானோ என்று எண்ணினார் அந்தக் காங்கிரஸ் பிரமுகர். கும்பிடுவதும் குழையக் குழையப் பேசுவதும், பிறகு குத்தவும் வெட்டவும் குழி பறித்துத் தள்ளவுந்தான் இருக்கும்! வேறென்ன? கொள்ளைக்காரன் கொஞ்சிப் போவானா? சூது! பசப்பு! ஏமாற்றுவித்தை - என்றெல்லாம் எண்ணி நடுநடுங்கினார் அந்தக் காங்கிரஸ்காரர். ஆனால், நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! அந்தக் கொள்ளைக் காரன், பெருந்தொகை நன்கொடையாகத் தந்து, அதனைக் காங்கிரசின் தேர்தல் நிதிக்கு வைத்துக்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டான்!

நடத்துவது வழிப்பறி! கொடுப்பது காங்கிரசுக்கு நன்கொடை! எப்படி இருக்கிறது விசித்திரம்!! அதுகூடக் கிடக்கட்டும், எப்படியெல்லாம் இருக்கிறது பார்த்தனையா காங்கிரசுக்குத் தேர்தல் நிதி குவியும் வகை!! வழிப்பறி நடத்துபவன், எவரெவருடைய வயிறு எரிய எரியப் பார்த்தானோ இந்தப் பணத்தை! காது அறுத்தானோ! யாராரைப் பதறப்பதற வெட்டினானோ! "ஐயா! ஐயா! எல்லா நகைகளையும் பறித்துக்கொண்டாயிற்று; இதை மட்டும் விட்டுவிடு! அவர் தொட்டுக் கட்டிய தாலி! புனிதமானது! என் உயிரினும் மேலானது! இதை மட்டும் பறிக்காதே!' என்று காரிகை கதறி இருப்பாள் - அவன், கன்னத்தில் அறைந்தானோ, கைகளை முறித்தானோ, கடகடவெனச் சிரித்தானோ, கனல் கக்கினானோ, யாரறிவார்கள்! தாலியையும் பறித்தெடுக்கத் தயங்காத காதகன்! அவன் தருகிறான், கொள்ளைப் பொருளிலே, ஒரு பங்கு! காங்கிரசின் தேர்தல் நிதிக்கு!! பெறுகிறார் பிரமுகர், கூச்சமின்றி.

கதைகளிலே மட்டுமே படித்திருக்கிறோம், "தாயே! மகமாயி! தயாபரியே! அருளுமம்மா! போகும் இடந்தன்னிலே, ஆபத்து வராமல் காத்து நில்லம்மா! மாகாளி! மகேஸ்வரி! ஆடு கோழியுடன் ஆர்ப்பாட்ட பூஜையெல்லாம், அடியேன் செய்திடுவேன், அன்னை மனம் மகிழ! மையிருட்டு வேளையிலே மதிலேறித் தாவுகையில், எவர் கண்ணிலும் சிக்காமல் எனைக்காக்க வேணுமம்மா! -'' என்றெல்லாம் திருடர்கள் வேண்டிக்கொள்வார்களாம், கொள்ளை அடித்துவிட்டுப் பிடிபடாமல் காடு திரும்பியதும், "வேண்டுதலை' நிறைவேற்று வார்களாம்!!