அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
6

அரண்மனைகளிலே காங்கிரஸ் கொடி பறக்கலாயிற்று - நீண்ட காலமாக அந்தக் கொடியைத் தமது குடில்களில் மட்டுமே ஏற்றி வைத்திருந்த ஏழையர் கொடி போட்டுவிட்டோம் பணக்காரர் கோட்டைமீது என்றெண்ணிக் களித்தனர்; கொடி ஏற்றிக்கொண்டோம், இனிக் காந்திபடை, நமது வெற்றிக்குப் பாடுபடும் என்று சீமான்கள் உணர்ந்தனர்.

குச்சு நாயுடன் குலவும் வெள்ளைக்காரக் கவர்னரின் படத்துக்குத் தங்கமுலாம் பூசப்பட்ட சட்டம் போட்டு, மாடத்தின் கூடத்திலே முன்பு மாட்டி வைத்திருந்த சீமான்கள், அந்தப் படத்தை அப்புறப்படுத்தினர் - அண்ணல் காந்தியார் படத்தை, அரிஅரன் படத்தருகே தொங்கவிட்டுத் தொழுதிடத் தக்க தேவ தேவன் இவரே என்றனர். இதுகண்டு, காங்கிரஸ் தொண்டர்கள் பூரித்துப்போயினர்.

இவ்வளவு இலகுவாக இவர்களை வலையில் போட்டுக் கொள்ள வழி இருக்கும்போது, வறட்டு ஜம்பத்துடன் நாம் இலட்சக்கணக்கிலே பொருளைக் கொட்டி எதிர்த்து, பணத்தைப் பாழாக்கிக்கொண்டு, சிறுமையையும் தேடிக் கொண்டோமே முட்டாள்தனமாக, என்றுகூட அந்தச் சீமான்கள் எண்ணினர்; ஆயாசப்பட்டனர்.

புற்றிருக்க, வெற்றிடத்தில் உலவி, அடிபட்டுச் சாகும் பாம்புபோல, புதரிருக்க அதிலே பாதுகாப்புத் தேடிடாமல் பாதையிலே படுத்திருந்து ஊராரின் தடியடிக்கு இரையாகும் ஓநாய்போல அல்லவா இதுநாள்வரை இருந்து வந்தோம், இதோ, காப்பளிக்கக் காத்திருக்கிறது காங்கிரசுக்கட்சி, இது நமக்குக் கேடயமாகும், வாள், நம் பணம்! இனி வெற்றி நமக்கே, என்றனர்; வெற்றிமேல் வெற்றியும் பெற்றனர்.

வெள்ளையன் காலத்திலேகூட, வெறும் பணக்காரன் என்பதற்காக, ஆட்சிபீடத்திலே இடம் அளிக்கப்பட்டதில்லை; தோட்டக்கச்சேரியும் துரையுடன் கை குலுக்கலும், பட்டமும் மெடலும் என்பதோடு, சரி! மெத்தப் படித்தவர்களை மட்டுமே, மேலான அலுவல் பார்க்க இடமளித்தனர்.

இப்போது, பணம் படைத்தான் என்றால் போதும், பதவி அவனைத் தேடிவருகிறது!!

ஒருவர் மட்டுமே, இந்த நிலை ஏற்படும், நாடு கெடும் என்பதனை உணர்ந்தார், அண்ணல் காந்தியார். எனவே அவர், "காங்கிரஸ் தன் புனிதக் கடமையைச் செய்தாகிவிட்டது. இனி அதனைக் கலைத்துவிடவேண்டும். இல்லையேல், அதனைச் சுயநலமிகளும் பாதகர்களும் புகலிடமாக்கிக்கொண்டு, பொது மக்களை ஆட்டிப் படைப்பர், அது ஆபத்தாக முடியும்' என்று தம்முடைய பத்திரிகையில் எழுதினர், படித்தனர், சிரித்தனர், கலைத்திடுவதா காங்கிரசை!! என்று கேட்டுக் கண்சிமிட்டினர்.

இன்று, காங்கிரஸ் கட்சியின் "தூண்களாக' - முன்னாளில், துரைமார்களின், "கைத்தடிகளாக' இருந்தவர்கள் விளங்குகின்றனர்.

துகிலுரித்த துச்சாதனனுக்குத் துரோபதை மாலையிடுவதா? என்று கேட்டோமே, தம்பி! சென்ற தேர்தலின்போது; கவனமிருக்கிறதா?

காங்கிரசின் அமைப்பு, இதுபோலாகிவிட்டது.

இதனால், காங்கிரசின் கட்சி கெடுக்கப்பட்டுவிட்டது, என்பது வெளிப்படை, குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியாகும் என்றார் மனோன்மணீயம் ஆசிரியர்!

ஆபத்து அந்த மட்டோடு இல்லை! காங்கிரஸ் கெட்டது மட்டுமல்ல, சீமான்களும் சிற்றரசர்களும் காங்கிரசை எதிர்க்க முடியாது என்று கூறி, அதன் அடி பணிந்துவிட்டார்கள், நாம் எம்மாத்திரம், காங்கிரசுக்கு! நம்மால் ஆகுமா, காங்கிரசை எதிர்க்க! என்ற எண்ணம் வலுத்தது - பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியிடம் பரிவு காட்டிய நிலைமாறிப் பயப்படும் நிலை பிறந்தது.

காங்கிரஸ் ஏழையர் முகாமாகத் தியாகிகள் திரருச்சபையாக இருந்தபோது, ஏழையரும் நடுத்தர வகுப்பினரும், அதில் உள்ளவர்களைப் பாசத்துடன் நேசித்தனர்! ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள் என்று பாராட்டினர். உயிரையும் இழக்கத் துணியும் விடுதலை வீரர்கள்! இவர்கள்போல, வீரமும் தியாகமும் நமக்கெல்லாம் ஏற்பட முடியுமா? முடியாது! முடியாது! எனவே, இவர்கட்கு நாம் தொண்டாற்றி மகிழ்விப்பது தேசியக் கடமை என்று கருதினர்.

தொண்டர்களைக் காணும்போதே அன்பு சுரக்கும்.

பாவம்! இந்தப் பிள்ளையாண்டானை அடி அடி என்று போலீஸ் அடித்தது - மண்டையை உடைத்தது - ஆனால், துளிக்கூடக் கலங்கவில்லை, இந்தத் தம்பி! - என்று நெஞ்சம் நெக்குருகக் கூறுவர்.

பெரிய அறிவாளி! நாடு இருக்கும் நிலையும் உலகம் போகிற போக்கும் உணர்ந்து பேசுகிறார். வெள்ளையர்களே திணறுகிறார்கள், பதில் அளிக்கக் முடியாமல் - என்று மதிப்புடன் பாராட்டினர் காங்கிரசின் தலைவர்களை.

காங்கிரஸ்காரர்களிடம், அன்பும் மதிப்பும் மிகுந்திருந்தது. அவர்களுடன் பழக, உறவாட, அனைவருக்கும் விருப்பம்.

இன்று அன்பு காட்டவும் மதிப்பளிக்கவும், காங்கிரசில் அதிகம் பேர் இல்லை.

காங்கிரசிலுள்ளவர்களிலே சிலரைக் காணும்போது, பொதுமக்களுக்கு வியப்பே வருகிறது! இவர்களெல்லாமா, காங்கிரசில்? பொருத்தம் துளியும் இல்லையே! என்று எண்ணுகின்றனர்.

தஞ்சைத் தரணியில் கள்ளுக்கடை நடத்தியவர் காங்கிர எம். எல். ஏ-யாகக் காட்சி தருவது காணும் பொதுமக்கள், மதிப்பும் அன்புமா கொள்ள முடியும்? வியப்படைகின்றனர்.

காங்கிரசிலுள்ள வேறு சிலரைக் காணும்போது, பொது மக்களுக்குப் பச்சாதாப உணர்ச்சி மேலிடுகிறது - சுயராஜ்யம்! சுயராஜ்யம்! என்று முழக்கமிட்டுக்கொண்டு உழைத்தான்; எவனெவனோ காங்கிரஸ் கட்சியின் தயவுபெற்று வாழ்கிறான் வளமாக; இவனையோ, பராரியாக்கிவிட்டு விட்டார்கள்; கவனிப்பாரில்லை! இந்த மந்திரி என்னோடு பெல்லாரிச் சிறையில் இருந்தார் - அதோ அவர் அலிபுரம் சிறையில் என் கொட்டடிக்குப் பக்கத்துக் கொட்டடியில்தான் இருந்தார் என்று, இவன் "சொந்தம்' கொண்டாடுகிறான் - அவர்களுக்கோ கண் தெரியவில்லை! கார் ஏறிப் போகிறார்கள், கனம்களாகி விட்டவர்கள், அது கிளப்பிவிடும் புழுதிதான், அவன் பெறும் பரிசு ஆக இருக்கிறது என்பதைக் கண்டு, இரக்கம் காட்டுகின்றனர்.

இன்னும் சிலர் உளர் காங்கிரசில் - அவர்களைக் கண்டால், வியப்பு, மதிப்பு, அன்பு, பரிவு, பச்சாதாபம் எனும் உணர்ச்சிகள் அல்ல, பயம் ஏற்படுகிறது, பொதுமக்களுக்கு.

ஏனெனில், அவர்கள் காணும் அந்தப் "பெரிய புள்ளி', எத்தகைய காட்டுத் தர்பார் நடத்தியவர்; எவ்வளவு பேர் களுடைய வாழ்வைக் குலைத்தவர் என்பதை அறிந்திருக் கிறார்கள். எனவே அச்சம் - அருவருப்பு எனும் உணர்ச்சிகளைத் தான், அப்படிப்பட்டவர்களைக் கண்டதும் பெறமுடியும்.

எதிர்த்தவன் வாழ்ந்ததில்லை. நினைத்ததை முடிப்பார்.

களியாட்டத்தில் மன்னன்! கற்றோரை மதிப்பதில்லை.

கட்டி வைத்து அடிப்பார். கொளுத்துவார்! கொடுமை செய்வார்!

கண்ணுக்கெட்டிய தூரம் அவர் வயல்!

காலிகள் கூட்டம் அவர் கட்டளைப்படி நடக்க!

அழகிகளை இழுத்து வருவார்; மஞ்சம் அல்லது சவக்குழி!!

இப்படி எல்லாம் எவர்களைப்பற்றி, ஊரில் குசு குசுவெனப் பேசிக்கொள்ளப்படுகிறதோ, அப்படிப்பட்டவர்கள் காங்கிரசில் புகுந்துகொண்டுள்ளனர். பயமாகத்தானே இருக்கும் பாமர மக்களுக்கு.

பூஜை அறைக்குள்ளே இருப்பதாலேயே, புலி சாதுவாகவா மாறிவிடும்!

கதராடை அணிந்துகொண்டதாலேயே, காதகர்கள் இரட்சகர்களாகவா மாறிவிடுகிறார்கள்!

தங்கப்பூண் போட்ட தடியால் தலையில் அடித்தால் வஎடுக்காமல், மகிழ்ச்சியா பிறக்கும்!

வாழ்வை அழிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் வந்தேமாதரம் பாடிவிட்டால், கொடுமைகளை மறந்துவிடவா முடியும்!

எனவேதான், நிலப்பிரபுக்கள், ஆலை அரசர்கள், வட்டிக் கடை வேந்தர்கள், வணிகக் கோமான்கள் - ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் - ஏழையை அழித்து ஏழடுக்கு மாடி கட்டிக்கொண்டவர்கள் - சுரண்டிப் பிழைப்போர் - சூதால் கொழுப்போர் ஆகிய வகையினர் காங்கிரசில் இடம்பெற்றது கண்டு, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது - அப்படிப் பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்களுடன் குலவிடும் காங்கிரசைப்பற்றியும் வெறுப்பு ஏற்பட்டது.

இப்படிப்பட்டவர்களின் கொட்டம் அடக்கப்படும் காங்கிரசாட்சியில் என்று நம்பினர்; ஏமாந்தனர்; அது மட்டுமா, பொதுமக்கள் திடுக்கிடத்தக்க விதத்தில், அப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களே காங்கிரசை நடத்திச் செல்லும் நாயகர் களும் ஆகிவிட்டதைக் காண்கிறார்கள்.

தம்பி! இந்த அச்சமும் அச்சத்துக்குக் காரணமாக உள்ள நிலைமையும் இன்னும் ஒரு ஐந்தாண்டுக்காலம் நீடிக்குமானால், மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப்பட்டு, பொதுமக்கள், பயத்தால் பீடிக்கப்பட்டு, மனம் மருண்டு, உணர்ச்சிகள் ஒடுங்கிப்போகும் நிலைமை ஏற்பட்டுப் போய்விடும். மக்களுக்கும் ஆளும் கட்சிக்கும் அன்புப் பிணைப்பு இருக்காது - அச்சந்தான் இணைத்து வைக்கும். சீறிவரும் வேங்கை எதிர்ப்பட்டால், வழிப்போக்கன் என்ன செய்ய முடியும்? எதிர்த்துத் தாக்கத் துணிவு ஏற்படாது - ஓடிவிடக் கால்வராது - பேந்தப்பேந்த விழித்தபடி, வெடவெட வென உடல் ஆட, நிற்பான் - புலிக்கு இரையாகிவிடப்போகி றோம் - தப்பிப் பிழைக்க வழி இல்லை என்ற எண்ணத்துடன். பொதுமக்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கிடக்கும் போதுதான், கொடுங்கோலர்களுக்குக் கொண்டாட்டம்.

தம்பி! திராவிட முன்னேற்றக் கழகம், பொதுத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பல காரணங் களிலே இந்த அச்சத்தைப் போக்குவதும் ஒன்றாகும் - மிக முக்கியமானதுமாகும்.

நம்மை வீழ்த்தும் வலிவு, எதிர்க்கும் துணிவு, எவருக்கும் எழாது. எந்தக் கட்சிக்கும் கிடையாது என்ற எண்ணம் பிடித்துக் கொண்டால் அதைவிட ஆபத்து மக்களாட்சித்துறையிலே வேறொன்று இருக்க முடியாது.

மக்களாட்சி என்பது கட்சிகள் போட்டியிட்டு மக்கள் ஆதரவைப் பெற்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவது என்று முறை இருக்கும்போது, என்னைவிட்டால் நாடாளும் தகுதியும் உரிமையும் பெறத்தக்க வேறு கட்சிகளே இல்லை என்று ஆட்சிப்பீடம் ஏறிய கட்சிக்கு ஆணவ எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது.

ஆனால், பதினான்கு ஆண்டுகளாக உள்ள அரசியல் நிலைமை, காங்கிரசு கட்சிக்கு இந்த ஆணவத்தை உண்டாக்கி விட்டதுடன், "ஆலும் வேலும்' மட்டுமல்ல, "கோரையும் புல்லும்' கூட, ஆளும் தகுதி தம்மிடம் மட்டுமே அடைக்கலம் புகுந்து விட்டதாக ஆர்ப்பரிக்கும் நிலைமையை ஏற்படுத்திவிட்டது.

வர்ணாஸ்ரம முறைப்படி எப்படி வேதமோதவும் வேள்வி நடாத்தவும் பார்ப்பனருக்கே உரிமையும் தகுதியும் இருப்பதாக நெடுங்காலம் சொல்லப்பட்டு, செயல் புகுத்தப்பட்டு வந்ததோ, அதுபோல, இன்று காங்கிரசார் தம்மை, "ஆளும் ஜாதி'யாகக் கருதிக்கொள்கிறார்கள். பேசவும் செய்கிறார்கள்.

இதற்குக் காரணம், தொடர்ந்து அந்தக் கட்சியே ஆட்சியில் இருப்பது.

தொல்லை தரத்தக்க விதத்திலே ஆட்சி நடத்தும் அந்தக் கட்சியிடமிருந்து ஆட்சியைப் பறித்து வேறு கட்சியிடம் ஒப்படைக்கும் உரிமையும் ஆற்றலும் இருந்தும் பொதுமக்கள் அதனைச் செய்யத் தவறியது. காங்கிரசுக்குக் கண்மூடித் தர்பார் நடத்த இடமளிக்கிறது.

மக்களாட்சி மாண்புற நடக்கும் நாடுகளிலே நிலைமை இது அல்ல.

தவறு செய்தால், கொதித்தெழுந்து பொதுமக்கள் கவிழ்த்துவிடுவார்கள் என்ற அச்சத்துடன்தான், எந்தக் கட்சியும் ஆட்சியில் அமர முடியும்.

வாக்காளர்களை அணுகி ஓட்டுக் கேட்கும்போது காங்கிரசாருக்கு வாக்காளர்கள் பேருருவம்கொண்டோராகத் தெரிகின்றனர். அவர்தம் தயவைப்பெற்றாகவேண்டுமே என்ற உணர்வு இருக்கிறது. எனவே, பணிவும் பரிவும், குழைவும் கும்பிடும், தாராளமாக வருகின்றன. இதுகூட, மிகப் பெரிய எதிர்ப்பைத் தி. மு. கழகம் ஏற்படுத்தியிருப்பதனால்தான். இல்லையேல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைகூட, வாக்காளர் களிடம் பரிவு காட்டும் போக்கு இருக்காது.

அதிலும், தி. மு. கழகம், வயலிலே கதிர் காணட்டும், அந்த நேரமாகச் சென்று அறுத்துத் தள்ளிவிடலாம் என்று எண்ணும் அரசியல் வெட்டுக்கிளிகள் அல்ல. நாள்தோறும் பொது மக்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, ஆட்சியின் போக்கை விளக்கியபடி உள்ள இயக்கம். எனவே, ஆட்சியை ஏற்றுள்ள கட்சி, எந்தக் கொடுமை செய்தாலும், தவறு இழைத்தாலும், உடனுக்குடன், பொதுமக்கள் அறிந்துகொள்கிறார்கள். அறிந்து கொள்வதால், ஆட்சியின்மீது கோபம் கொள்கிறார்கள். கோபம் கொண்டுவிட்டிருப்பார்களே, அதனால் ஓட்டுக் கொடுக்க மறுத்தால் என்ன செய்வது என்ற அச்சத்தால், வாக்காளர் களிடம், கெஞ்சுகிறார்கள், கொஞ்சுகிறார்கள், காங்கிரஸ் கட்சியினர்.

எனினும், இந்தக் குழைவும் பணிவும், "ஓட்டு'க் கேட்கும் போதுதான்.

ஆடியும் பாடியும் ஆயிரத்தெட்டுச் சுவை காட்டியும், ஜாதிச் சொந்தத்தையும் சமயச் சொந்தத்தையும் எடுத்துக் காட்டியும் ஓட்டுகளைப் பறித்துக்கொண்ட பிறகோ, இனி 5 ஆண்டுகள், இந்த மக்களைப்பற்றி என்ன கவலை, இவர்கள் என்ன செய்துவிட முடியும்! என்ற எண்ணம் தோன்றுகிறது. துணிவு பிறக்கிறது. எந்த வாக்காளர் முன்பு பணிவுடன் நின்றார் களோ, அவர்களைப் பிறகு ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். பார்க்க நேரிடினும், வாக்காளர் சிறிய உருவாகத் தெரிவர்; வெற்றி பெற்ற காங்கிரஸ்காரர் கெம்பீரக் கோலம் கொள்வர்.

ஆட்சி நடத்தும்போதும், விழிப்புடனிருந்து, தவறுகளைக் கண்டிக்கவும், பொதுமக்களின் துணைகொண்டு தண்டிக்கவுமான வலிவுடன் எதிர்க்கட்சிகள் இருப்பது மக்களாட்சி மமதையாட்சி யாகிவிடாமல் செய்திடும் தடுப்பு முறையாகும்.

பிரிட்டனில், கட்சிகள் இடம்பெறும் வகையினைக் கவனித்தால் இது தெரியும்.

மக்கள் நம்மை மட்டுமல்ல, நமது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, நல்வழிப்படுத்த, வேறு பலரையும் குறிப்பிடத் தக்க அளவில் அனுப்பி இருக்கிறார்கள் என்ற உணர்வு ஆளும் கட்சிக்கு ஏற்படத்தக்க விதமாகவே, பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருக்கிறது.

1945ஆம் ஆண்டு தொழிற்கட்சி அமைச்சர் அவை அமைத்தது; 393 உறுப்பினர்கள் கொண்டிருந்ததால்.

ஆனால், எதேச்சாதிகாரத்துடன், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்குடன் இங்கு காங்கிரஸ் கட்சி நடந்துகொள்கிறதே அவ்விதம் தொழிற்கட்சி நடந்துகொள்ள முடியாது; ஏனெனில் தவறுகளைக் கண்டறிய, தடுத்து நிறுத்த, எதிர்க்கட்சியாக கன்சர்வெடிவ் கட்சி இடம்பெற்றிருந்தது. அந்தக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 213.

1950ஆம் ஆண்டிலேயும் தொழிற்கட்சிதான் ஆட்சி நடத்திற்று. அப்போது எண்ணிக்கை 315! கன்சர்வெடிவ் எண்ணிக்கை 297!

பலம் குறைக்கப்பட்டது; எதிர்க்கட்சியின் பலம் வளர்ந்து காணப்பட்டது. 1951ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, நிலைமையே மாறிவிட்டது; கன்சர்வெடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தது; 321 உறுப்பினர்களுடன்.

இனி நம்மைக் கேட்பார் இல்லை என்று கன்சர்வெடிவ் கட்சி நடந்துகொள்ள முடியுமா? அதுதான் இல்லை! ஏனெனில், ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சியாக தொழிற்கட்சி, 295 உறுப்பினர்களுடன் அமர்ந்திருந்தது. எனவே, ஆளுங்கட்சி அடக்க ஒடுக்கத்துடன்தான் நடந்துகொள்ளவேண்டும்!

1955ஆம் ஆண்டுத் தேர்தலில், தொழிற்கட்சி 277 உறுப்பினர்களுடனும், கன்சர்வெடிவ் கட்சி 345 உறுப்பினர் களுடனும் பாராளுமன்றத்தில் இருந்தன.

1959ஆம் ஆண்டு கன்சர்வெடிவ் கட்சி 365 உறுப்பினர் களுடன் ஆட்சிப் பொறுப்பேற்றது; தொழிற்கட்சியினர் 258 என்ற அளவுக்கு வந்துவிட்டனர்.

தொழிற்கட்சிக்குள் மூண்ட தத்துவச் சண்டைகளும், இடம் பிடிக்கும் போட்டிகளும் அந்தக் கட்சியை இளைக்க வைத்துவிட்டன.

எனினும், இப்போதும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆளுங்கட்சி நடந்துகொள்ள முடியாது - எதிர்க் கட்சிக்கு, தட்டிக் கேட்கக்கூடிய அளவு வலிவும் எண்ணிக்கையும் இருக்கின்றன.

இந்த நிலைமையினால்தான், பிரிட்டனில் ஆளும் ஜாதி என்ற ஆணவம் கொள்ளத்தக்கவிதமான போக்கில், எந்தக் கட்சியும் நடந்துகொள்ள முடியவில்லை. மக்களாட்சியின் மாண்பும் கெடவில்லை.

மக்களாட்சி என்பதன் பொருள்; ஆட்சியை மக்கள் அமைக்கிறார்கள் என்று இருக்கவேண்டுமேயன்றி ஆட்சி மக்களை அவமதிக்கும் சக்தியாக மாறுகிறது என்று இருத்தல் கூடாது.

இதைக் கவனித்துப் பார்க்கும் எவரும், 1962ஆம் ஆண்டுத் தேர்தல், கட்சிக்குள் ஏற்படும் கடுமையான போட்டி என்பதல்ல, மக்கள், மக்களாட்சியைச் சரியான முறையிலே அமைக்கிறார் களா இல்லையா என்பதற்கான சோதனை என்பதை உணருவார்கள், உணருபவர்கள், அடுத்து வரும் தேர்தலின்போது பொதுமக்கள் ஆற்றவேண்டிய கடமை நிரம்ப இருக்கிறது; ஆளும் ஜாதியாகிவிட்டோம் என்று ஒரு கட்சி ஆணவம் கொண்டிடும் ஆபத்திலிருந்து நாட்டை மீட்கவேண்டும் என்பதை அறிந்து, அதற்கேற்ப நடந்துகொள்வார்கள்.

மக்கள் இந்தக் கடமையை உணர்ந்து செயலாற்றத் தூண்டுவதும் துணை நிற்பதும் தி. மு. கழகத்துக்கு உள்ள கடமையாகும்.

இதனை நன்கு உணர்ந்தே நமது கழகத் தோழர்கள் மெத்த ஆர்வத்துடன், பொதுத் தேர்தலில் நாம் ஈடுபடுவது என்ற தீர்மானத்தை வரவேற்றனர்.

இவ்விதமான, நாட்டின் நிலைமையை மாற்றிடத்தக்க செலாற்றுவதிலே, நமது தோழர்கள் கொண்டுள்ள நல்லார் வத்தைக் குலைத்திடக்கூடிய, குழப்ப நிலை, கசப்புணர்ச்சி, எதிலும் எவரிடமும் காரணமற்ற ஐயப்பாடு, எரிச்சல், எவரோ திட்டமிட்டுத் தமது நிலையைத் தகர்க்கிறார்கள் என்ற அருவருப்புணர்ச்சி ஆகியவவை நம்மிடையே சில காலமாக ஏற்பட்டுவிட்டதனால் செயலாற்றுவதிலே ஓர் தளர்ச்சியும் தயக்கமும் அவ்வப்போது தலைதூக்கிடக் காண்கிறேன்; கவலை கொள்கிறேன்.

எனக்கு எது கவலையை மூட்டுகிறதோ, அஃது நமது இயக்க வளர்ச்சி நமது ஆதிக்கத்துக்கு ஓர் அறைகூவலாகும் என்று அறிந்து கலக்கத்துடன் உள்ள மாற்றார்களுக்கு, மகிழ்ச்சி யைத் தரத்தானே செய்யும். அவர்கள் இந்தச் சூழ்நிலையை உண்டாக்கக்கூடத் திட்டமிடுகிறார்கள்; ஏற்பட்டுவிடும் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமானது ஆக்கிக்கொள்ளவும் முடிகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளாக நாம் நடத்திவரும் இயக்கம், பல்லாயிரக்கணக்கானவர்களிடையே, பல்வேறு நிலையான, அளவுள்ள வகையுள்ள தொடர்புகளை ஏற்படுத்திவிட்டது. அது இயற்கை. அந்தத் தொடர்புகளிலே, காரணத்தோடு சில வேளை களிலும் காரணமற்றுப் பல வேளைகளிலும், நெருக்கடிகள், முரிவுகள், மாச்சரியங்கள் ஏற்பட்டுவிடுவது உண்டு.

என்னைப் பொறுத்தவரையில், என் சொல்லாலோ செயலாலோ அப்படிப்பட்ட நெருக்கடிகள், முரிவுகள், மாச்சரியங்கள் ஏற்படக்கூடாது என்பதிலே மிகமிகக் கவலை கொண்டுதான் இத்தனை ஆண்டுகளாக நடந்துகொண்டு வந்திருக்கிறேன். என்னையும் அறியாமல் எவருக்கேனும் இடர்ப் பாடோ, மனத்தாங்கலோ, இழப்போ ஏற்பட்டுவிட்டிருக்கு மானால், அந்த அளவுக்கு, நான் எனக்கென்று வகுத்துக் கொண்டுள்ள வேலை முறையில் தோல்வி கண்டதாக எண்ணி என்னை நானே நொந்துகொள்வேனேயன்றி, பிறர்மீது கோபப் படுவது என் இயல்பு அல்ல.

ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய, மிக முக்கியமானது, தொடர்புகளில் ஏற்படும் நெருக்கடிகள், மனச்சங்கடத்தை, கோபத்தை மூட்டிடினும்கூட, இயக்கத்திற்கு ஊறு நேரிடத்தக்க முறையிலும், எதிரிகள் ஏளனம் செய்து நம்மை முறியடிக்கக் கூடிய வகையிலும், நமது சொல்லும் செயலும் இருத்தல் ஆகாது.

கழகத்தின் காரியத்தைக் கவனித்துக்கொள்ள அமையும் அலுவலர்களிடையே உள்ள தொடர்புகளில், எவருக்கேனும், எரிச்சல், கோபம், சங்கடம் ஏற்பட்டுவிட்டால், கொள்கை காரண மாக ஈர்க்கப்பட்டு, கழகத்திடம் தம்மை ஒப்படைத்துள்ள இலட்சக்கணக்கான மக்கள், என்ன செய்ய முடியும்! அது அவர்களுடைய பிரச்சினைகூட அல்லவே!!

கழக அலுவர்களிடை - எந்த முனையில் இருப்பினும் சரியே - கசப்புணர்ச்சி எழுமாயின், அருள்கூர்ந்து அவர்கள், தம் மனக்கண்ணால், கழகத்தில் தம்மை ஒப்படைத்துவிட்டுள்ள இலட்சக்கணக்கானவர்களைக் கண்டு, அவர்கள் நம்மிடம், கழகத்திடம், கொள்கையிடம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஊறு நேரிடத்தக்க முறையில், நாம் நடந்துகொள்ளலாமா என்பதைத் தான் உணரவேண்டும்.

நம்மைக் கண்டதும் அவர்களின் கண்கள் களிநடமிடுகின்றன!