அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
5

ஆனால், வடக்கு வஞ்சிக்கிறது தெற்குத் தேய்கிறது என்பதுபற்றிக் காங்கிரசாட்சிக் பாசீசமாகி வருகிறது என்பது குறித்து, வரிப்பளு, கடன் சுமை, விலை ஏற்றம் இவைப்பற்றிக் குழப்பமோ, மனமாற்றமோ ஏற்பட்டிருக்க முடியவே முடியாதே!

திராவிட நாட்டுக்காக வாதாடவேண்டாம் - எதிர்ப்புச் செய்வதைக்கூட நிறுத்திக்கொள்ளவேண்டாம் - சுவையும் பயனும் நிரம்பியதாக இருக்கக்கூடும்; ஆனால் பொதுமக்களை அலைக்கழிக்கும் ஆட்சி நடத்துகிறதே காங்கிரஸ் கட்சி; அதைக் கண்டிக்க, எதிர்க்க, பொதுமக்களை அதன் பிடியிலிருந்து விடுவிக்கவேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? வழுவலாமா?

தி. மு. கழகத்திலிருந்து விலகிக் காங்கிரசிலே சேர்ந்து விடுபவர்களுக்கு, அந்தச் சிக்கல் இல்லை! திராவிட நாடு மட்டும் தானே பிடிக்கவில்லை. அண்ணாதுரையும் பிடிக்கவில்லை. சரி! விட்டுவிடட்டும்! நட்டமில்லை!! ஆனால், ஆட்சிக் கொட்டுகிறது, மக்கள் துடிக்கிறார்கள்; அந்தப் பிரச்சினையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும், தன் கடமையை நேர்மையுடன் செய்திட வேண்டாமா?

எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழுந்தாலும், நான் ஆச்சரியப்படமாட்டேன், தம்பி! ஆனால், காங்கிரசாட்சியினால் ஏற்பட்ட விளைவு கேடுபாடுதான் என்ற பிரச்சினையிலேயும், சந்தேகம் ஏற்பட்டுத் தயக்கம் ஏற்பட்டால்தான், நிச்சயமாகத் திடுக்கிட்டுப் போவேன்.

அந்த முறையிலே பார்க்கும்போதுதான் நான் ஆதித்த னாரைப் பாராட்டுகிறேன். அவர், திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டிக்கிறார். ஆனால், அதேபோது - தமிழ்நாடு தனிநாடு என்று முழக்கமிடுகிறார் - வடநாட்டுப் பாசீசப் போக்கை எதிர்க்கிறார் - வடநாட்டுப் பேரரசின் பிடியிலிருந்து, தமிழ்நாடு விடுபடவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். எனவே அவர், திராவிட நாடு திட்டத்தை எதிப்பதைக்கூட, என்னைப் பொறுத்தவரையில், கண்ணியமான எதிர்ப்பு என்று கொள்ளுகிறேன்.

ஆனால், திராவிடநாடு திட்டத்தை எதிர்க்கத் தொடங்கி, வடநாட்டுப் பேரரசுமீது தொடுத்துவந்த எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு, காங்கிரசாட்சியினால் ஏற்பட்ட கேடுபாடுகளைக் கண்டித்து, அந்த ஆட்சியை ஒழித்தாகவேண்டிய கடமையையும் கைவிட்டுவிடும் போக்கிலே சிலர் நடந்துகொள்ளும்போதுதான் எனக்கு வியப்பாக மட்டுமல்ல, திகைப்பாகக்கூட இருக்கிறது.

திராவிட நாட்டுத் திட்டத்தை எதிர்ப்பது மட்டுமே தமது திட்டமாக்கிக்கொள்ளாமல், வடநாட்டுப் பேரரசின் பாசீச ஏகாதிபத்தியப் போக்கையும், நேர்மையுடன் கண்டிப்பவர்கள், நமது திட்டத்தை எதிப்பவர்கள் எனினும்கூட, பொதுமக்களைப் பாசீசப் பிடியிலிருந்து விடுவிக்கும் கடமையிலிருந்து தவறாத வர்கள் என்பதற்காக, நாம் பாராட்டக்கூடச் செய்யலாம்.

திராவிட நாடும் வேண்டாம் - வடநாட்டுப் பிடிபற்றிய கண்டனமும் எதிர்ப்பும் தேவையில்லை - காங்கிரசாட்சியின் கேடுபாடுகளையும் எதிர்க்கத் தேவையில்லை என்றால், தனிக் கொடியும் படையும், நடையும் எற்றுக்கு! இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவா? அதனைக் காங்கிரசுக்குள்ளே இருந்து கொண்டே நடத்திக்கொள்ளலாமே!! என்றுதான் எவரும் கூறுவர்.

விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர, மற்ற அனை வருக்கும், காங்கிரசாட்சியினால் விளைந்துள்ள கேடுபாடுகள் பற்றித் துளியும் ஐயப்பாடுகள் இல்லை! எப்படி இருக்கமுடியும்? தழும்புகள் இருக்கின்றனவே, தாக்கப்பட்டது நினைவிற்கு வராமலா இருக்கும்!

மற்றது கிடக்கட்டும் முதலில், நமது முதலமைச்சர் மறவாமல் கூறுகிற சோற்றுப் பிரச்சினையை பார்க்கச் சொல்லு, தம்பி! ஆட்சியின் இலட்சணம் தெரிந்துவிடும்.

1956ஆம் ஆண்டு
படி அரிசி - 54 காசு
1-வீசை புளி - 66 காசு
1-படி கொத்தமல்- - 1-12 காசு
மிளகாய் வற்றல் 1 வீசை - 1-86 காசு
துவரம் பருப்பு படி - -50 காசு
காப்பிக்கொட்டை வீசை - 6-09 காசு
சர்க்கரை வீசை - 1-22 காசு

தம்பி! 1947-லிருந்து காங்கிரசாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, 1947ஆம் ஆண்டு விலையைவிட இந்த விலை அதிகம். மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்து, வேதனை அதிகமாகிறது. விலைவாசி ஏறிவிட்டதைக் கண்டிக்கின்றன எல்லாக் கட்சிகளும். ஆகட்டும் பார்க்கலாம் என்கிறது காங்கிரஸ் அரசு! அதற்குப் பெயரே ஏழை பங்காளன்!

மூன்று ஆண்டுகள் உருண்டோடுகின்றன!

எத்தனையோ கண்டனக் கூட்டங்கள் - சட்ட மன்றப் பேச்சுகள் - மாநாடுகள் - தூதுக் குழுக்கள் - பத்திரிகைத் தலையங்கங்கள்! பலன்? தெரிந்துகொள்ளத்தான்வேண்டுமா, தம்பி! சரி! இதோ பாரேன் பலனை!! விலைவாசி விஷம்போல் ஏறுகிறது; வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்றுதானே மக்கள் முறையிட்டார்கள்! ஆகட்டும் பார்க்கலாம் என்றல்லவா காங்கிரஸ் அரசு அறிவித்தது! அறிவித்துவிட்டுப் பிரச்சினை யைக் கவனிக்காமலே இருந்துவிட்டதோ? இல்லை! இல்லை! கவனித்தது! கவனித்ததன் பலன்? கேள், தம்பி அந்தக் கூத்தை!!

1959ஆம் ஆண்டு
படி அரிசி - 1-12 காசு
புளி வீசை - 3-50 காசு
மிளகாய் வீசை - 5-00 காசு
துவரம்பருப்பு படி - 1-50 காசு
காப்பிகொட்டை வீசை - 8-50 காசு
சர்க்கரை வீசை - 3-25 காசு

எப்படி ஏழைபங்காளன் அருள்? விலையைக் குறைக்கச் சொல்- மக்கள் முறையிட்டார்கள். விலை மிக அதிகமோ என்று வினவினர் அரசினர். ஆம்! ஐயனே! படி அரிசி 54 காசு விற்கிறது!! என்று புலம்பினர்! பாலகா! அழாதே! கவனிக்கிறேன் என்று வாக்களித்தது காங்கிரஸ் அரசு. மூன்று ஆண்டுகள் ஓடின - படி அரிசி 54 காசாக இருந்தது 1 ரூபாய் 12 காசுகளாக உயர்ந்தது!

பதறி இருப்பார்கள் மக்கள்! ஆமாம்! ஆனால் அரசினர் கேட்டிருப்பார்களல்லவா, 1956ஆம் ஆண்டு வந்து முறையிட்டீர் களே விலை ஏற்றமாக இருக்கிறது என்று. இப்போது என்ன சொல்லுகிறிர்கள் என்று. என்ன சொல்லி இருப்பார்கள் மக்கள்! ஐயனே! அது பொற்காலம் படி அரிசி 54 காசுக்குக் கிடைத்தது - இப்போது 1-12 காசு விலை! என்று விம்மியிருப்பர்.

இந்த விலை ஏற்றத்தைக் கண்டிப்பதற்குக்கூடவா "மேஷ ரிஷபம்'' பார்க்கவேண்டும்! பொதுமக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும் கடமையை மறவாதவர் எவரும் எந்தப் பிரச்சினையிலே மனக்குழப்பம் இருப்பினும், இதிலே தெளிவும் திட்டவட்டமான போக்கும் பெற்று, இந்த நிலைக்குக் காரண மான காங்கிரசாட்சியைக் கண்டிக்கவேண்டுமல்லவா!

திருப்பரங்குன்றம் மாநாடு, மிகப் பெரிய கண்டனம் - காங்கிரசாட்சியின் போக்குக்கு.

மக்கள் பாடவில்லையே தவிர, முன்பு சுதேசமித்திரனில் வெளிவந்த பாடல், பலருக்கு நினைவிற்கு வந்தது - விலைவாசி ஏறிக்கொண்டேபோவது குறித்துக் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போது. பாடக் கற்றுக்கொண்டாகிலும் தம்பி! பலருக்கும் பாடிக் காட்டவேண்டிய, பாடல்:

புளி மிளகாய் தனியா! - இதற்கு
ஏழரை நாட்டுச் சனியா?
விலை குறைவது எப்போ? - இதை
விளக்கிச் சொன்னால் தப்போ?
மிளகாய் தனியா கூடி - வெளி
நாட்டுக்குப் போனதோ ஓடி!
புளியும் மலடியாச்சோ? - காய்த்துப்
பழுக்க மறந்து போச்சோ?
குழம்பின் மீது ஆவல் - வைக்கக்
கூடா தென்றே மூவர் -
அழும்பு எண்ணம்தானோ? - இந்த
அவல நிலையும் ஏனோ?
மக்களின் மீது வெறுப்பா? - இந்த
மூன்றுக்கும் இப்போ சிரிப்பா?
அக்கறை காட்ட வேண்டும்

விலைவாசி ஏற்றம் என்பது எங்கும் ஏற்பட்டுவிட்டுள்ள நிலைமை; இதற்காகக் காங்கிரசாட்சியைக் கண்டிக்கலாமா என்று கேட்போரும்,

விலைகள் ஏன் ஏற்றமாயின நின்றால், பணம் பெருத்து விட்டது, மக்களிடம் பணப்பழக்கம் அதிகமாகிவிட்டது, எந்தச் சாமான் என்ன விலை என்றாலும் கொடுத்து வாங்கும் சக்தி வளர்ந்துவிட்டது, அதனாலேயே விலையை உயர்த்தி விட்டார்கள் என்றும்,

பணப்புழக்கம் ஏன் அதிகமாயிற்று என்றால், தொழிலாளர் களும் ஊதியம் பெறுவோரும் முன்பு பெற்றதைவிட அதிக அளவு பணம் பெறுகிறார்கள் என்றும், விளக்கம் என்று எண்ணிக்கொண்டு, ஒரு நிலைமையை மற்றோர் நிலைமைக்குக் காரணம் என்று, தாமாகப் பொருத்திக் காட்டச் சிலர் முற்படுகின்றனர்.

கூலி உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளன; ஆனால், அதைவிட வேகமாகவும் அதிக அளவிலும் விலைகள் ஏறிவிட் டிருக்கின்றன. எனவே, கூலி உயர்வு ஏற்பட்டுப் பணபுழக்கம் அதிகமாயும், பாட்டாளிகளால் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களைக்கூடப் போதுமான அளவு பெறமுடியவில்லை; தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பணப்புழக்கம் பொருள் உற்பத்தியும் ஒரே சீராக இருந்திருந்தால், நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்காது. அத்துடன், உற்பத்தி பெருகப்பெருக, முந்திராக்கள் வளர்ந்தால், கள்ளச்சந்தையும் கொள்ளை இலாபமும் தானே வளரும்; வளரும்போது ஏழையின் வயிற்றில்தானே அடிப்பார்கள்! இப்போது நடப்பது இதுதான், இதைக் கட்டுப்படுத்தவேண்டு மென்றால், கள்ளச் சந்தைக்காரர்களிடம் கனிவு காட்டும் போக்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சியினருக்கு இருத்தல் கூடாது. முந்திரா தரும் பணம், இந்தத் தூய்மையையா காட்டுகிறது? டாட்டா வணிகக் கோட்டம் அள்ளிக் கொடுக்கும் நன்கொடை, எதன் பொருட்டு?

உலகெங்குமே விலைவாசி ஏற்றம் இருக்கிறது, இங்கு மட்டுமல்ல என்று, வாதாடி பொறுப்பைத் தட்டிக் கழித்து விடவும் முனைகின்றனர். இதன் உண்மையையும் அறிந்து கொள்ளவேண்டுமல்லவா?

ஷெனாய் என்றோர் பொருளாதாரப் பேராசிரியர் இருக்கிறார். அவர் பதவிப்பசி கொண்டதால் ஆளும் கட்சியைப் பகைத்துக்கொண்டவரும் அல்ல; எதிர்க்கட்சி நடத்துவதால் ஏதேனும் பேசித் தீரவேண்டிய நிலையில் உள்ளவர் என்றும் எள்ளி நகையாடிட முடியாது. பொருளாதாரத்துறை நிபுணர் என்ற நிலையில், கருத்தளித்து வருபவர்.

"பணப்பெருக்கமும் விலைவாசி ஏற்றமும் எல்லா நாடுகளிலும் உள்ளன என்று ஒரு தவறான வாதம் பேசப்பட்டு வருகிறது.

1955ஆம் ஆண்டு நிலைமையிலிருந்து 1959ஆம் ஆண்டு நிலைமைவரை 27 நாடுகளின் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பார்த்ததில் எல்லா நாடுகளிலும் பணப்பெருக்கமும் விலை ஏற்றமும் ஏற்பட்டுவிட்டன என்பது பொய்யுரை என்று விளக்கமாகத் தெரிகிறது.

பெல்ஜியம்
ஜெர்மனி
ஜப்பான்

இம்மூன்று நாடுகளிலும், விலை ஏற்றம் 100-க்கு 1 என்ற அளவில்தான் இருக்கிறது; இங்கோ, 100-க்கு 33 என்ற அளவு விலை ஏறிவிட்டிருக்கிறது.

பிரான்சு
இத்தாலி

எனும் இருநாடுகளில், விலைஏற்றம் இல்லை! சில குறிப்பிட்ட பண்டங்களின் விலை விழுந்தே இருக்கக் காண்கிறோம்.

கனடா
அமெரிக்கா
இங்கிலாந்து

ஆகிய நாடுகளிலே விலை ஏற்றம் 100-க்கு 2 என்ற அளவுதான்!''

பொருளாதார நிபுணர் ஷெனாய், இந்த உண்மையைச் சுட்டிக்காட்டி, இங்கு, விலைவாசிகள் கண்மண் தெரியாமல் ஏறி இருப்பதைக் கண்டிக்கிறார்.

ஆட்சியிலுள்ளோர் என்ன செய்கின்றனர்?

நமது கழகம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்து, விலைவாசிக் கண்டன நாள் நடத்தியபோது, காங்கிரஸ் கட்சியினர், கேபேசின ர் - கலகம் செய்கிறோம் என்றனர் - கலங்கமாட்டோம் என்று வீறாப்புப் பேசினர் - விலைகளைக் குறைக்க வழி என்ன என்று ஆராயவில்லை, செயல்படவில்லை. ஏன்? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை எதிர்ப்பு எழும்பினாலும், அச்சப்படத் தேவையில்லை, ஆட்சியிலிருந்து நம்மை அகற்றக்கூடிய வலிவு எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை; எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகி வந்தாலும் அது நடவாது என்ற எண்ணம் ஏற்பட்டு ஆணவம் உண்டாகிவிட்டது.

ஆளும் கட்சிக்கு ஆணவம் பிடித்துக்கொள்வது அதன் அழிவுக்குத்தான் வழி அமைக்கும். எனவே, ஆர்ப்பரிக்கட்டும் ஆணவத்தால் என்று கூறி, நம்பிக்கையோ, மகிழ்ச்சியோ பெறுவது தவறு. ஏனெனில், ஆளும் கட்சிக்கு ஆணவம் பிடித்திருப்பதுபோலவே, எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது; காங்கிரசை வீழ்த்துவது முடியாத காரியமாகி விடுமோ என்ற பயம் பிடித்துக்கொள்கிறது. பொதுமக்களோ, காங்கிரசே எந்தத் தந்திர முறைகளையாவது கண்டுபிடித்து, மீண்டும் பதவியைப் பிடித்துக்கொள்ளும், நாமேன் அதனுடைய பகையைத் தேடிக்கொள்வது; மனம் குமுறுகிறது, என் செய்வது!! என்ற நிலையில், பீதியே அடைகின்றனர்.

மக்களாகப் பார்த்து மக்களாட்சி அமைக்கிறார்கள்; அந்த உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, என்பது தத்துவம் - எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது அதனை அழகுற எடுத்துரைக்கும் கவிதா வாக்கியம். ஆனால், நடைமுறை? மக்கள் நடுங்கிக் கிடக்கின்றனர், நாடாள முற்பட்ட காங்கிரஸ் கட்சியை நீக்கும் வலிவற்று; வகையற்று.

இங்கிலாந்து நாட்டிலே ஒரு மன்னன் - கோனாட்சி என்பது முறுக்கேறியிருந்த நாட்களில்,

அவன்கூட, மக்களாகத் தமக்கென உறுப்பினரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற உரிமை வழங்கினானாம்.

அந்த உரிமை வழங்கிய மன்னன் வெளியிட்ட அறிக்கை என்ன தெரியுமா, தம்பி!

மடாலயத்துக்கு அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் - தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள், மடாலயத்தில் உள்ள துறவிகள். இவர்களுக்கு மன்னன், உரிமை தருகிறான், அதிபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள, அதற்கான அறிக்கை இதோ!

"மடாலயத்துத் துறவிகளே! தேர்தல் நடத்திக் கொள்ளும் உரிமையை உமக்கு அளிக்கிறேன்! நீவிர், கூடி, தாரளமாகத் தேர்தலை, நடத்தி ஒருவரை மடாலய அதிபர் ஆக்கிக்கொள்ளலாம்.

அந்த உரிமை உமக்கு அளிக்கிறேன்.

ஆனால், ஒரு நிபந்தனை. என் கணக்கராகப் பணிபுரியும் ரிச்சார்டு என்பவனைத் தவிர வேறு எவரையும், மடாலய அதிபராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது. என் கட்டளை!''

பணக்கோட்டை கட்டிக்கொண்டு பாதுகாப்பும் வலிவும் தேடிக்கொண்டுவிடும் கட்சிகள், இந்த மன்னன் தேர்தல் நடத்திக்கொள்ளும் உரிமையை வழங்கி, அதேபோது, இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறானே, அதுபோல, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் உரிமையை மக்களுக்குத் தருகிறார்கள் - தந்துவிட்டு, ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக்கொள்ள ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுகிறார்கள்.

அமைச்சர்கள், அதிகாரிகள் புடைசூழச் சென்று ஓட்டு கேட்கும்போது, ஊரைச் சீராக ஆள்வதுபற்றித் தாமே பேசும் போது, உமக்கு உற்ற குறை எதுவெனினும் போக்கும் திறம் எமக்கன்றி வேறு எவர்க்குண்டு என்று எக்காளமிடுகையிலே, ஏழை எளியவர் நிமிர்ந்து நின்று, "நன்று! நன்று! உமது தற்பெருமை! நாடாள நீவிர் வந்த நாள் தொட்டு, நாங்கள் கண்டது வேதனையன்றி வேறென்ன? ஒரு காரியமாவது ஒழுங்காகச் செய்ததுண்டா?'' என்றா கேட்கமுடியும். குமுறலை அடக்கிக்கொண்டு, கூனி, கோணி நின்று, உமக்கல்லால் வேறு எவர்க்குண்டு எமை ஆளும் உரிமை என்றன்றோ கூறிவிட வேண்டிவரும். இந்நிலையில், எளியவர்கள், தமது மனச்சாட்சி யின்படி நடந்துகொள்ள வழி ஏது? மக்களாட்சியின் மாண்பு செயல்முறையால் சிதைக்கப்பட்டுப் போகிறது - பெரும்பாலும்.

இந்திய துணைக்கண்டம் மிகப்பெரிய நிலப்பரப்பு - இங்கு எல்லா மாநிலங்களிலும், அமைப்புகளைக்கொண்டு, ஒரு கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபடுவது என்றால், எளிதான காரியமுமல்ல; அத்தகைய அமைப்பினை விரைவிலே ஏற்படுத்திக்கொள்வதும் இயலாது.

விடுதலை பெற்றளித்த வீரர் குழாம் என்ற விருதுடன், காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்திலே குதித்தது - வெற்றி அதனைத் தேடி வந்தது. எதிர்ப்போர்கள் கிளம்பினர். கனதனவான்கள், வணிகக் கோமான்கள், குலத்தலைவர்கள், பட்டதாரிகள், பெரும் பண்ணைகள் - இப்படிப்பட்டவர்கள்!

நாடு மீட்ட நல்லவர்களே நாடாளவேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர் - பேழையுடையாரை ஏழையர் உலகு தோற்கடித்தது.

மகாராஜாக்கள் - பூபதிகள் - மிட்டாமிராசுகள் - ஆலை அரசர்கள் - வணிகக் கோமான்கள் - பலரும் மண் கவ்வினர்.

ஜரிகைக் குல்லாய்களைக் காந்திக் குல்லாய் தோற்கடித்தது.

இதனைக் கண்டதும் ஏழையர் வெற்றித் திருநடன மிட்டனர்; வேதனை தீர்ந்தது என்று எண்ணினர், வேளை வந்தது புதுவாழ்வுபெற என்று நம்பினர்.

எமது தோழர்கள், ஏழை பங்காளர்கள், காந்தி சீடர்கள், தியாக சீலர்கள், இந்தக் காங்கிரசார்! இவருக்குத்தான் எமது "வாக்கு' - இதயம்!! இவரை எதிர்த்திட, எவர்க்கே இயலும்? அரண்மனையின் அலங்காரப் பொம்மைகள், மாளிகை மதோன்மத்தர்கள், இராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ கோலாகல எனும் விருது படைத்தோர்கள் என்போரெல்லாம், உருண்டனர் கீழே, தேர்தலில் தோற்று! - என்று எக்காள மிட்டனர். ஏழையர் - திட்டமிட்டனர். தோற்றவர்கள்.

காங்கிரசில் சேர்ந்துகொண்டனர் - சேர்த்துக்கொள்ளப் பட்டனர். காங்கிரஸ் ஈட்டி வைத்திருந்த தியாகம், இந்தச் சீமான்களுக்கு கேடயமாக்கப்பட்டது.

தண்டி யாத்திரையின்போது, தரைக்கும் படுக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்துகொண்ட வெறியர்கள்; வெள்ளை நிறம் கண்டாலே வீழ்ந்து கும்பிட்ட அடிமைகள், கதர்த்துணி என்றாலே கோணித்துணி, சாணித்துணி என்று இகழ்ந்து பேசிய அகந்தையினர் அனைவரும், காந்தி கட்சியின ராயினர்!!