அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
4

"ஒரு நாட்டினுடைய சக்தி அதன் நிலப்பரப்பைப் பொறுத்து இல்லை, அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும்தான் இருக்கிறது! சிறிய நாடாகிய எகிப்து, பெரிய நாடுகளாகிய இங்கிலாந்தையும் அமெரிக்கா வையும் எதிர்த்துப் பேசியது! இப்போது இரஷ்யாவையே எதிர்த்துப் பேசுகிறது! அந்த வலிமையை அந்த நாடு பெற் றிருக்கையில், அதைவிட எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் திராவிடம் வாழமுடியாதா? வாழ முடியும். எனவேதான் நாம் திராவிட நாடு கேட்கிறோம்.''

"இம்மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், எவ்வித நன்மையும் மக்களுக்கு ஏற்பட வில்லை! விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது! இவர்கள் எதைத் தொட்டாலும் அது உருப்படுவதில்லை!அதை நடத்துவதற்கு இவர் களுக்கு ஆற்றல் இல்லை! போதுமான அதிகாரம் இல்லை! ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் நம்மைத் திட்டுவதுதான்! அழகேசன் பதவிக்கு வந்த பிறகு காங்கிரசுக் கமிட்டியிலிருந்து பல ஆயிரம் ரூபாய் கொடுத்துச் சில பத்திரிகைகளை விட்டு, நம்மைத் திட்டச் சொல்லுகிறார்கள்! முடிந்துபோன சகாப்தத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்! இதில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதற்கு நமக்கு மக்கள் மன்றம் நல்ல தீர்ப்பளித்து வருகிறது.''

திருப்பரங்குன்றத்திலே திரண்டு வந்திருந்தோர், திராவிட நாடு எனும் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டோர் - எனினும், ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்த காரணத்தினாலேயே எதையும் மறுக்கும் துணிவு பெற்றுவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பதனால், பொதுத் தேர்தலில், அதனை முறியடித்துக் காட்டுவதன்மூலம், உலகுக்கு, நமது கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்கள் துணை நிற்கின்றனர் என்பதை விளக்கித் தீரவேண்டும் என்ற உறுதியைப் பெற்றனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சி, எதைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறது என்பதனை விளக்கவே தொடக்கத்தில், அந்தக் கட்சி திரட்டி வைத்துக்கொண்டுள்ள பணபலம் பற்றியும், கொள்கையைப்பற்றிய கவலையற்று, எவரெவர், பெரிய புள்ளி களோ அவர்களைப் பிடித்திழுத்துத் தேர்தலில் ஈடுபடுத்தி, வெற்றியைக் கட்சிக்கு விருது ஆக்கிக்கொள்ளலாம் என்று திட்டமிடுவதையும் குறித்து எழுதினேன். ஏகாதிபத்தியத்தின் முன்னாள் எடுபிடிகளெல்லாம் இன்று பெரிதும் காங்கிரஸ் கட்சியிலே உளர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில காங்கிரஸ் தொண்டர்கள் இன்றும், தூய்மை வேண்டும், வாய்மைக்கு மதிப்பளிக்கவேண்டும். கொள்கை வழி நிற்போரையே, தேர்தலில் ஈடுபடுத்தவேண்டும் சுரண்டிப் பிழைப்போர், சுக போகிகள், வகுப்புவாதிகள், வல்லடி வழக்கினர் ஆகியோரைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று எண்ணுகின்றனர். மனம் குமுறுகின்றனர். இந்த மடல் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு செய்தி பார்த்தேன், ஆங்கில இதழில்.

விடுதலை இயக்கத்தை எதிர்த்து வெள்ளை யருடன் குலவிப் பலன் பெற்றவர்கள்.

பிற்போக்காளர்கள், வகுப்புவாதிகள், பிளவுப் போக்கினர்.

பர்மிட் லைசென்சு பெற்று இலாப வேட்டை யாடிக் காங்கிரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துவோர்.

இப்படிப்பட்டவர்களை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று பஞ்சாப் காங்கிரஸ் குழு ஒன்றில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நல்லவர்கள்! ஆனால், பாவம், காங்கிரசின் இன்றைய அமைப்பு முறையையும் போக்கையும் அறிந்துகொள்ளாதவர்கள்!! எனவேதான், சீலம் போதிக்கிறார்கள்! பாருக்கெல்லாம் பஞ்சசீலம் போதிக்கும் பண்டிதர் நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சிக்கு சீலம் எது என்பது தெரியாததாலா சீரழிவு ஏற்பட்டது. சீலம் நிரம்பத் தெரியும் பிறருக்கு எடுத்துரைக்கச் சொன்னால் நாள் கணக்கிலே கூறத் தெரியும்; ஆனால் செயலில் இல்லையே!

இவ்வளவு கடுமையான பத்தியம்கூட அல்ல, மிகச் சாதாரணமான ஒரு திருத்தம் கூறினார் சஞ்சீவ ரெட்டியார், காங்கிரசுக்குத் தலைவராக அமர்த்தப்பட்டிருப்பதனால். தொடர்ந்து பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தோர், இம்முறை தேர்தலில் ஈடுபடாமலிருப்பது நல்லது; இது என் யோசனை என்று கூறினார். எத்துணை பெரிய அதிர்ச்சி காங்கிரஸ் வட்டாரத்தில்! என்னென்ன விதமான பொருள் விளக்கங்கள்!!

யாருக்கோ சீட்டுக் கிழிக்க, சஞ்சீவியார் இந்தத் தந்திரத்தைக் கையாள்கிறார் என்பவர்களும்,

இவருக்குக் கோபால ரெட்டியார் மீது கோபம்; அவரை வீழ்த்தத்தான் இந்த விபரீத யோசனை என்று பேசுபவர்களும்,

தனக்கு இருந்து வந்த பதவியைப் பதைக்கப் பதைக்கப் பறித்துக்கொண்டவர்கள், ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்ற எரிச்சலின் விளைவு இந்த ஏற்பாடு என்றுரைப்போரும்,

இந்த யோசனை, பண்டித நேருவுக்கேகூட அல்லவா வேட்டு வைப்பதாக அமைகிறது என்று மிரட்டுவோரும்.

ஆக, இவ்விதமெல்லாம், மூலைக்கு மூலை எதிர்ப்புக் கிளம்பி, அதனால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்ற நிலைமை ஏற்பட்டு, இப்போது சஞ்சீவியார் நான் சும்மா ஒரு யோசனைதான் சொன்னேன்; அது விதி அல்ல; கட்டளை அல்ல! எல்லோருக்கும் அது பொருந்தும் என்றும் கூறிடவில்லை - என்றெல்லாம் நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது விளக்கம் அளித்தபடி இருக்கிறார்.

பதவி சம்பந்தப்பட்ட பிரச்சினை எழும்போது, இவ்வளவு பதைபதைப்பு ஏற்படுகிறது; இதனை உணராது, தேர்தலிலே ஈடுபடவே, இன்னின்னாருக்குத் தடை விதிக்கவேண்டும் என்று ஆர்வம் காரணமாகச் சிலர் கூறினால், எரிமலை நெருப்பைக் கக்குவதுபோலல்லவா, காங்கிரஸ் மேலவர்கள் எதிர்ப்பார்கள்!!

தூய்மை காத்திடும் பண்பினர் சிலர் காங்கிரசில் உளர் எனினும், அவர்தம் விருப்பம் நிறைவேறத்தக்க வகையில், தேர்தலில், வேட்பாளர்களைக் காங்கிரஸ் நிறுத்த முன்வராது. பணம் பெருத்தான்களைத்தான் பிடித்திழுத்து நிறுத்தி வைக்கும்.

இதை அறியாமலல்ல, நாம் பொதுத் தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பது.

எத்துணைதான் பணபலம் காங்கிரஸ் கட்சியிடம் குவிந்து கிடப்பினும், இந்தப் பதினான்கு ஆண்டு ஆட்சியினால், அக்கட்சி தேடிக்கொண்டுள்ள வெறுப்பும், பொதுமக்களின் மனக் கொதிப்பும், தம்பி! சாதாரணமானதென்று, தள்ளிவிடும் துணிவு, சர்வாதிகார வெறி பிடித்தலையும் காங்கிரசுக்குக்கூட இருக்க முடியாது.

எந்தத் துறையிலும், கேடுபாடும், முறைகேடும், சீர்குலைவும் ஏற்பட்டுப் போய்விட்டிருக்கிறதேயன்றி, மக்கள் வளம் காண வழி கோலப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.

மற்ற மற்ற மாநிலங்கள் கிடக்கட்டும், இங்கு பச்சைத் தமிழர் ஆட்சியிலே, பள்ளிகள் பலப்பல ஆயிரமாம், விளக்குகள் சிற்றூர் எங்கணுமாம், கூறுகிறாரே பெரியார், என்பாய். ஆமாம், தம்பி! விளக்குகள் உள்ளன, புற இருளை அகற்ற! பள்ளிகள் உள்ளன அகத்து இருள் நீக்க! ஆனால் இருள் நீக்கப்பட்ட நிலை காண்கிறோமா? அல்லது இந்த விளக்கேற்றும் காரியத்தை, வேறொருவரும் செய்ததில்லையா? செய்ய இயலாதா? செய்திடும் செம்மலும், மாயமந்திரத்தாலா, மாகாளி பூசையாலா செய்து காட்டுகிறார் - இல்லையே, தம்பி! தைலம் தீர்ந்துபோன கட்டைபோல உடலுடையான் உழைக்கிறானே, அவன் சிந்தும் வியர்வைத் துளிகள் வெள்ளிப் பணமாகி வரியாகி, துரைத்தனத்தாரிடம் சேர, அதைக்கொண்டு, சிந்தியது சிதறியது சீரழிவுக்குப் பயன்பட்டது, சிதைந்துபோக, மிச்சம் இருப்பதைக்கொண்டு செய்யப்படும் செயலன்றோ! இதிலே, மார்தட்ட, உரிமை கொண்டாட என்ன இருக்கிறது!!

வயிறு காய்கிறது கிராமத்து மக்களுக்கு, அதற்கு வழி செய்யக்காணோம், வெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள். மின்சார விளக்குப் போட்டோம் என்று கித்தாப்புப் பேசு கிறீர்கள் என்று சட்டமன்றத்திலே, நான் கூறியபோது, அமைச்சர் களுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது; நமது தோழர்கள் அனைவருமே, நான் கூறியது முற்றிலும் உண்மை என்றனர் - அவர்களிலே சிலர் இப்போது விளக்குப்போடும் ஆட்சிக்குக் கொடி தூக்கும் தொண்டர்களாகிவிடத் துடிக்கிறார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்படுகிறது, நிலைமை அதுபோலானால், உள்ளபடி பரிதாபப்படவேண்டியதுதான். காட்டிலே தன்னிச்சையாக உலவிய அரிமாகூடச் சர்க்கஸ் காரனிடம் சிக்கினால், ஓடு என்றால் ஓடுகிறது, படு என்றால் படுக்கிறது! பார்க்கிறோமே!

அந்த நிலை, என்னை நிந்தித்துக் கிடப்போருக்கு ஏற்படக் கூடாது என்று மெத்தவும் விரும்புகிறேன். ஆனால், நண்பர்கள் என்னைக் கேட்கிறார்கள், அண்ணா! விலகியவர்களுக்குத் திராவிடநாடு தீது என்று புது எண்ணம் பிறந்திருக்கலாம் - இருக்கட்டும் - கனியே அழுகிப்போனால், புழு நெளிகிறது! அண்ணாதுரைக்கு அரசியலே தெரியாது என்று பேசலாம் - பேசட்டும், அதனால் குறையேதும் ஏற்பட்டுவிடாது - ஆனால் இதிலெல்லாம் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பது பற்றிச் சளைக்காமல் பேசுகின்றவர்கள்.

டில்லிப் பேரரசின் ஏகாதிபத்தியப் போக்கு,

அதனிடம் இங்குள்ள மந்திரிகள் காவடி தூக்கிடும் கேவலம்.

டில்லிப் பேரரசின் நிர்வாக ஊழல்களால் கோடி கோடியாகப் பணம் பாழாகும் கொடுமை, அதைத் தடுத்திடத் திறனின்றி, தத்துவம் பேசிக் கிடக்கும் நேருவின் கையாலாகாத் தன்மை,

ஐந்தாண்டுத் திட்டங்களில் தென்னகம் வஞ்சிக்கப் படும் கொடுமை,

அதனைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் எட்டு உருவாரங்களாக மந்திரிகள் இருக்கும் கேவலத்தன்மை,

வரிகள் வளர்ந்து மக்கள் வாட்டமடைவது,

அதனைக் குறைத்திட மனமின்றி, மமதை அரசாள்வது,

வரிச்சுமை பெரிதும் ஏழையின் முதுகிலேயே ஏற்றப் பட்டு அவன் முதுகெலும்பு முரிந்த நிலையில் நெளிவது,

பணக்காரர்கள் மேலும் பொருள் திரட்டிக் கொழுப்பது,

சுரண்டிப் பிழைக்கும் சுகபோகிக்கு, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்புப்பெறுபவர் காங்கிரசின் தேர்தல் நிதிக்காகப் பொருள் கொட்டிக் கொடுப்பது, முந்திராபோன்ற மோசடிக்காரனிடம் காங்கிரஸ் குலவிப் பணம் பெற்ற பாதகம்,

அதைக் கண்டித்தவர்கள்மீது பண்டிதர் பாய்ந்து விழும் அக்கிரமம்,

கடன்மேல் கடன் வாங்கி, எதிர்காலத்தைப் பயங்கர மானதாக்கும் கொடுமை,

கடன்பட்டுப் பெற்ற பொருளைக்கொண்டு வட நாட்டை வளமாக்கும் அக்கிரமம், விலைவாசி விஷம் போல ஏறியதால் ஏற்பட்டு உள்ள வேதனை,

அதனைக் கவனிக்காது மதோன்மத்தர்களாக மந்திரிமார் இருப்பதன் கேவலம்,

தென்னகம் தேம்பிக் கிடப்பதைக் கவனியாதிருக்கும் மடமை,

அதனால் மூண்டிடப்போகும் புரட்சியின் தன்மை,

என்றெல்லாம் பொறி பறக்கப் பேசுவார்களே - இப்போது காணோமே! ஏனண்ணா! ஒரு மணி நேரம் உன்னைத் தூற்றச் செலவிடட்டும் - ஒரு அரைமணி நேரமாகிலும், இதற்கு ஒதுக்கக் கூடாதா? காணோமே! காரணம் என்ன? காங்கிரசாட்சியைக் கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவா? அந்த பிரச்சினை யிலும் புத்தறிவு ஏற்பட்டுவிட்டதோ? என்று கேட்கிறார்கள். நானென்ன பதில் கூறமுடியும்?

காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலங்களைப்பற்றி, மிகக் காரசாரமாகக் கண்டித்தவர்கள், ஐயமில்லை! இப்போது, சித்தம் எப்படியோ தெரியவில்லை! ஆனால் வெளியே கேட்கும் சத்தம் அவ்வளவும், அந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும்? என்பது தான்!! பார்ப்போம் போகப்போக!

காங்கிரசாட்சி விளக்குப் போட்டது. ஒன்றே போதும், மீண்டும் மக்கள் ஆதரவைப்பெற என்று பேசுவோர் எவரெனினும், அவர்தம் திருப்பார்வைக்கு ஒரு தெளிவுரையை வைக்கிறேன் - தெளிவுரை தந்தவர்கள் இன்று சிந்தை திரிந்து போயிருக்கக்கூடும்!!

மந்திரி கனம் சுப்பிரமணியம் அவர்கள், இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தைப் பிரரேபித்துப் பேசுகையில் குறிப்பிட்டார் - "இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலு மில்லாத அளவு சென்னை மாநிலத்தில்தான் 2,500 கிராமங் களுக்கு மின்சார வசதி தரப்பட்டிருக்கிறது' - என்று!

உண்மைதான்; சென்னை மாநிலத்திற்கு இந்த ஐந்தாண்டுத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி இதுவரை 2,500 கிராமங்களுக்கு மின்சார ஒளி கிடைத்திருப்பதுதான்! "அடுத்து வரும் ஆண்டுகளிலும், ஆண்டொன்றுக்கு 1000 கிராமம் வீதம் மின்சார ஒளிபெறும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"கிராமங்களுக்கு மின்சார ஒளி தரப்பட் டிருப்பதனாலேயே நாட்டு மக்களின் பொது வருவாய் அதிகரித்து, கஷ்டங்கள் நீங்கி, வாழ்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லையே! மின்சார ஒளி கிராமங்களுக்கு மிக அவசியமாகத் தேவையான வசதிகளுள் ஒன்று; ஆனால் அது மட்டுமா மக்களின் தேவை?

"தமிழ் நாட்டின் இன்றைய தேவை. கிராமங்கள்தோறும், வீடுகள்தோறும் மின்சார விளக்கு வேண்டுமென்பதல்ல; மக்களுடைய பொது வருவாய் அதிகரித்து வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டுமென்பதுதானே!''

"அதைப்போலவே, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத் திலும் சென்னையைப் பொறுத்தவரை, கிராமங்களுக்கு மின்சார வசதி செய்வதும், வைத்திய வசதி, அடிப்படைக் கல்வி, குடிசைத் தொழில் இவற்றை அதிகரிப்பதும்தான்'' என்று கூறப்படுகிறது.

"நோய் போக்க - வைத்திய வசதியும், அறியாமை நீங்க அடிப்படைக் கல்வி வசதியும் அவசியந்தான்; மிக மிக அவசியந் தான்; நோயைப் போக்கிக்கொண்டு மனிதன் வாழ்வதற்கு, உணவே கிடைக்கவில்லை என்றால், "அவனுக்கு நோய் போக்க வசதி செய்கிறேன்' என்கிறது சென்னை அரசாங்கம்!

"ஒரு ரூபாய் வைத்திருக்கிறான் ஒருவன்; அவனுக்குப் பசி கடுமையாக இருக்கிறது; அவன் தனது பசியை நீக்க, அந்த ரூபாயைக்கொண்டு உணவுப் பண்டம் வாங்குவானா? அல்லது "வீட்டிலே கொளுத்தி வைத்தால் "கம்'மென்று மணக்கும்' என்று கருதி ஊதுவத்தி வாங்குவானா? "ஊதுவத்தி வாங்குவேன்' என்கிறார் சுப்பிரமணியம் - தனது வரவு செலவுத் திட்ட சொற்பொழிவின் மூலம்! மனிதனே, சோறின்றிச் சாகும்போது "அந்த மனிதனுக்கு மருந்தும் கல்வியும் தருகிறேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்!

"தென்னாட்டில், மந்திரி சுப்பிரமணியம் அவர்கள், கிடைக்கிற மின்சாரத்தைக்கொண்டு மக்களின் பொது வருவாய் அதிகரிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய காரியங்களைச் செய்யாமல், கிராமங்களுக்கு "வெளிச்சம்' போட்டுக்கொண்டிருக்கிறார்; ஆனால் வடநாட்டிலோ கிடைக் கின்ற மின்சாரத்தைக்கொண்டு அந்த நாட்டு மக்களின் பொது வருவாயை அதிகரிக்கும் வகையில், புதுப்புதுத் தொழிற்சாலை களை உருவாக்கி வருகிறார்கள்; வடநாடு தொழில் வளம் மிகுந்த நாடாக வேகமாக வளர்க்கப்படுகிறது; தென்னாடு விவசாயத்தை மட்டும் நம்பிக்கிடந்து தேயுமாறு செய்யப்படுகிறது.''

"விவசாயத்தை மட்டும் நம்பிக் கிடக்கும் ஒரு நாடு வளருமா? நாளாவட்டத்தில் தேய்ந்துதான் போகும்! ஏனெனில், விவசாயத்தின் அளவு மாறக்கூடியதல்ல; வளரக்கூடியதல்ல.''

"இந்த நாட்டில் மக்கள் பெருக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதையும் மனதில்கொண்டு சற்றுக் கவலையோடு சிந்திப்பவர்களுக்கு, "நாம் வளர முடியாத விவசாயத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் எதிர்காலச் சந்ததியினருக்கு வாழ்வளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறோம்' என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.''

"பெருகி வளரக்கூடிய தொழில்கள் எல்லாம் தென்னாட்டில் இல்லை - வடநாட்டில்தான்; இந்த நிலையினால், கூரிய சிந்தனை உள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம் - தென்னாட்டின் எதிர்காலத்தை!''

"திராவிட நாட்டின் விடுதலையை நாமாகவே பெற்றாலும் பெறலாம்; அல்லது வடநாட்டுக்காரர்கள் தாமாகத் தந்தாலும் தந்துவிடலாம்!''

"தாசிகள் பற்றிய கதைகள் நீங்கள் நிரம்பப் படித்திருக்க லாம் - தாசி, ஒருவனிடத்தில் பணம் இருக்கும் வரையில்தான், "என்னைத் தழுவிக்கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லா விட்டால் நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது?' "ஈருடலும் ஓருயிரும்' என்பதுபோலப் பேசுவர்; ஆனால், அவனிடமிருந்து பணம் பூராவும் பறிபோன பிறகு, "அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு' என்ற நிலைமைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து நெட்டித் தள்ளி விடுவார்கள்; அதைப்போலவேதான் ஏகாதிபத்தியங்களும்!

"இன்று வடநாட்டு ஏகாதிபத்தியம், வடநாட்டைத் தொழில் வளமிக்க நாடாக்கி, அந்தத் தொழில் வளர்ச்சியினால் உற்பத்தியாகும் ஏராளமான பொருள்களுக்குத் தென்னாட்டை "மார்க்கெட்' ஆக்கித் தென்னாட்டு மக்களின் செல்வத்தைச் சுரண்டி, நாளாவட்டத்தில் அவர்களை ஓட்டாண்டியாக்கிவிடும்; அப்போது இனியும் தென்னாடு வடநாட்டுடன் ஒட்டிக்கொண் டிருப்பதனால் பயனில்லை'' என்று தெரிந்ததும், தென்னாட்டிற்கு "விடுதலை'' வழங்க முன் வரலாம்.

"அதுவரையில் - நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசிபோல, "நாம் எல்லாம் பாரத புத்திரர்களல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே?' - என்பர். நாம் ஓட்டாண்டிகளான பின், நீங்கள் ஏன் வட நாட்டுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்?'' என்று பேசுவர் - தாசிபோல!

"எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் வட நாட்டு ஏகாதிபத்திய அணைப்பினின்றும் விலகிக்கொள்ள வேண்டும் என்று தி. மு. கழகம் கூறுகிறது; அப்போதுதான் இந்த நாட்டு விவசாய, தொழிலாள, பாட்டாளிவர்க்க மக்கள் நலம் பெற்று, நல்ல பல திட்டங்கள் தீட்டி, தொழில் வளர்த்துச் செல்வம் பெருக்கிச் சுதந்திரத்துடன் வாழ முடியும்.''

ஓட்டாண்டிகளாகிவிடுமுன்பு, விடுபடுக! வாழ்வு பெறுக! என்றுதான், தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, திருவிடத்தாருக்குத் தெரிவிக்கிறது.

திராவிட நாடு கற்பனை என்ற எண்ணம், ஊட்டப்பட் டிருக்கலாம் - விவரமறியாதார் எவரேனும் எழுதிய ஏடு படித்த தால்; அல்லது திராவிடநாடு கொள்கைக்காகக் பரிந்து பேசும் நாம், எந்த ஏடும் படிக்காதவர்கள் என்ற எண்ணம் உள்ளே புகுந்திருக்கலாம்.

எல்லைபற்றிச் சந்தேகம்; இனம் குறித்து ஐயப்பாடு; நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதுபற்றிய அச்சம் பெரும் படை பலத்துடன் உள்ள பேரரசின் தாக்கும் சக்தியைப் பக்கம் நின்று பார்த்ததால் ஏற்பட்ட பீதி; இவை எல்லாம் எழக்கூடும், எவருக்கும். குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் மனத்தில்; கூடிப் பணியாற்றிய இடம் வெறுப்புக்குரியதாகத் தோற்றமளிக்கலாம்; ஒட்டு இல்லை உறவு இல்லை என்ற உறுதி பிறந்திருக்கலாம். மனம்தானே! சிந்தையை அடக்கியே சும்மா இருப்பது அரிது!!