அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
3

அது அத்தனையும் "குப்பைகூளம்' - என்று கூறி இதோ தருகிறோம் கட்டித் தங்கம், கெட்டி முத்து என்று, இன்று முற்றிலும் மாறான பேச்சுப் பேசுபவரேல் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் என்ற கவிதா வாக்கியத்தைத்தான் பரிசாக அளிக்கவேண்டும்! வேறென்ன தரமுடியும்!!

இந்தத் தினாமூனாக்காரர்களைக் கேட்கிறேன், அட மடையர்களே! திராவிட நாடு வேண்டும் என்கிறீர்களே! அது கிடைக்கும் இடம் சட்டசபையா! குதிரைக்குக் கொம்பு இருந்தால், சட்டசபையில் திராவிடநாடு இருக்கும்!! - என்று பேசிவிட்டு, எப்படி? வெண்கலக்கடையிலே வேழம் புகுந்தது போலிருந்ததா பேச்சு? என்று பக்கம் உள்ளோரைக் கேட்டு பரவசமடையக்கூடும்!

அருமை! அருமை! தாங்கள் பேசிய உடனே, எனக்குக் கற்பனை சுரக்க ஆரம்பித்துவிட்டது; கவிதை வழியப் போகிறது, கலயம் கலயமாக என்று கூறி,

திராவிடநாடு திராவிடர்க்கென்று தேடிடும்
மதியிலிகாள்!!
திராவிடநாடு எலும்புக்கூடு எழுந்து நடவாது!!
எண்ணம் பலிக்காது!!

என்று பாடி மகிழக்கூடும்.

அதிலும், நம்மைவிட்டு நண்பர்கள் சிலர் விலகிவிட்டதால், புதிய துணிவுபெற்ற, போக்கிடமற்றவர்கள், மெத்தத் தெரிந்தவர் போல், ஏதேதோ பேசித் திரிகின்றனர்.

திராவிட நாடு சட்டசபையில் இல்லை!

சட்டசபை என்பது இந்தியப் பேரரசுக்கு உட்பட்டது. அதில் இருந்துகொண்டே, திராவிட நாடு கேட்டுப்பெற முடியும் என்பது வெறும் சூது.

பதவிப் பித்துக்கொண்டதனாலேயே, சட்டசபை நுழைய விழைகிறார்கள்.

பொதுமக்களை ஏய்த்திட, தமது பதவிப்பித்தை மறைத்திட, திராவிட நாடு பெறப் போகிறோம் என்று பசப்புகிறார்கள்! நாட்டினரே நம்பாதீர்கள்! நல்லோரே நம்பாதீர்கள்! - என்று பேசுகின்றனர்.

தம்பி! பதவிப்பித்தன் யார் என்பதற்கு ஒரு இலக்கணம் வேண்டுமா? நான் கண்டுபிடித்தது அல்ல! ஏ! அப்பா! என்னால் முடிகிற காரியமா அது!! தரப்பட்ட இலக்கணம்!

"கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக் காவு கொடுப்போரே பதவிப் பித்தர்கள்!''

பலே! பலே! இரத்தினச் சுருக்கமா இருக்கிறதே, என்கிறாயா? "இரத்தினம்', "மாணிக்கம்', "முத்து', "வைடூரியம்' என்றெல்லாம் போற்றத்தக்க அறிவுரைகள் ஊற்றுப் பெருக் கெடுத்து ஓடிவந்த வேளையில், நம்மை நாடி வந்த நல்லுரை இது!! நீர் நிரம்பிய ஆற்றினிலே, வாளையும் வராலும் துள்ளிடக் காண்கிறோம்! நீர் வற்றிப்போய், இங்கும் அங்கும் சேற்றுக்குழம்பு இருக்கும்போது, கெண்டைக் குஞ்சுகள்! தவளைக் கூட்டங்கள்! நண்டுகள்! நத்தைகள்! புழுக்கள்! பூச்சிகள்! இவை தாமே, இருக்க முடிகிறது! பாவலர் பாடிட, பாவையர் குடைந்து விளையாடிட, தீட்டிடத் தகும் அழகு என்று ஓவியர் கொண்டாடிட, கோலாகல மாகத்தான் ஆறு, கலகலவெனும் ஒலி எழுப்பியே, கண்டவர் களித்திடும் விதத்திலே களிநடமிடுகிறது - பிறகோ, வருவாய் குறைந்து, உள்ளது செலவாகி வறண்டு போகிறது! தெள்ளிய நீரினை அள்ளிப் பருகினால் போதும். கவலையும், களைப்பும் பறந்தோடியே போகும், கனிரசமும் இதற்கு ஈடாகாது என்றெல்லாம் பாராட்டத்தக்க விதமாகத்தான், ஆறு காட்சி தருகிறது. ஆனால் நீர் குறைந்துபோன பிறகு?

அதுபோலத்தான், தம்பி! ஒரு கொள்கையிடம் எவருக் கேனும், பற்றுமிகுந்து, இருக்கும்போது, அதற்கான விளக்கம் கூற முற்படுவது, கூர்வாள் ஏந்திடும் வீரன். மாற்றார் இடையே பாய்ந்து செல்வதுபோன்றதுபோல இருக்கும்! வாதம் பிரமாத மாக இருக்கும்! உவமைகள் உருண்டோடி வந்திடும்! காரணங்கள் அடுக்கடுக்காகக் கிடைக்கும்!

மறுப்பரேல், கண்கள் கனலைக் கக்கும், வார்த்தைகள் வலிமைமிக்கனவாகும்! கடுமொழி கூறிடத் தோன்றும்!!

திராவிட நாடு எனும் கொள்கையிலே பற்றுக்கொண்ட நிலையில், அதற்கு ஆக்கம் தேடிட அரியதோர் வாய்ப்பாகச் சட்டசபை நுழைவினை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இதுகண்டு மனம் பொறாதார், சட்டசபையிலா திராவிட நாடு என்று கடாவினர்; கடுங்கோபம் பிறந்தது! பதவிப் பித்துக்கொண்டுதான், கழகத்தவர் சட்டசபை செல்லத் துடிக்கின்றனர் என்று கூறினர் - கூறினோர் சிறுமதியாளர்! என்று சினந்தெழத் தோன்றிற்று. அப்போது இதயத்திலிருந்து வெளிவந்த இலக்கண விளக்கம்தான்.

"கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக் காவி கொடுப்போரே பதவிப் பித்தர்கள்.''

எனும் பழமொழி!

அது அப்போது, அண்ணா! இப்போது, வேறு என்று கூறுகிறார்! தம்பி! நமக்கு, அந்த "அப்போது'தான் தேவை! "இப்போது' இருக்கிறதே, அது நமக்கு வேண்டாம்!

அப்போது திராவிட நாடு கொள்கையிலே நம்பிக்கை இருந்தது - அதனால் அப்படிச் சொன்னார்கள் - என்று கூறுவது கேள் தம்பி! நமக்கு இப்போதும் அந்தத் திராவிட நாடு கொள்கையிலே நம்பிக்கை இருக்கிறது - எனவே, நம்மைப் பொறுத்தவரையில், அப்போது வேறு, இப்போது வேறு என்பது இல்லை. எனவே, "அப்போது' - அதாவது திராவிட நாடு கொள்கையில் நம்பிக்கை உள்ள நிலையில் - கூறப்பட்டதுதான் இப்போதும் போதுமானதாக, அறிவு நிரம்பியதாக இருக்கிறது!! ஆகவே, தம்பி! சட்டசபை நுழைவு குறித்துப் பொச்சரிப்புக் காரணமாகவோ பொறுப்பற்ற தன்மையாலோ, எவர் என்ன கூறிடினும், இதோ, இஃதன்றி வேறோர் விளக்கம் நாம் அளிக்க வேண்டுவதில்லை - ஏனெனில், கொண்ட கொள்கையில் பழுது ஏற்படாத காலத்துக் கருத்து இது.

"உலகத்தின் அனுதாபத்தைப் பெறாமல் உலகின் எந்த மூலையிலும், அரசியல் நிலையை வேற்றுருக்கொண்டுவிடுவது எளிதல்ல.''

"இந்தியாவிற்கு விடுதலை எப்படிக் கிடைத்தது? நேருவே சொன்னார் - நாங்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், இந்தியாவிற்குத் திடீரெனச் சுதந்திரம் கிடைத்துவிட்டது; நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுவதற்குத் தயாராகக்கூட இருக்க வில்லை'' - என்பதாக!

"ஜெர்மனியைப் பாசிச வெறியன் என்று அழைத்துக் கொண்டிருந்த பிரிட்டன், உலகத்தின் முன் தன் முகத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிற்று.''

"1938-க்குப் பிறகுதான் இந்தியாவின் விடுதலைப் பிரச்சினை - ஒரு பிரச்சினை என்பதாக உலகத்தவரின் கண்களுக்குப் புலப்பட்டது.'' "1939ஆம் ஆண்டில், இந்தக் காங்கிரசார் எல்லாம் சட்ட சபைகளில் நுழைந்து, இந்தியாவின் விடுதலை குறித்துப் பேசினார்கள்.''

"ஜின்னாவின் பாக்கிஸ்தான் கோரிக்கை, நமது திராவிட நாடு கோரிக்கையைவிட "மாற்றுக் குறைந்தது; முஸ்லீம்கள் - அவர்கள் பல இனத்தவராயிருந்தாலும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்' என்றுகூறி, அவர்களுக்காகப் பாகிஸ்தான் கோரப்பட்டது.''

"அந்தக் கோரிக்கை எப்படி ஈடேறிற்று? தேர்தல்கள் நடைபெற்றபோது, முஸ்லிம் லீக் அதில் கலந்துகொண்டது. பஞ்சாபில் முஸ்லீம் லீக் மந்திரிசபை; வங்காளத்தில் பஸ்லுல்ஹக் தலைமையில் முஸ்லிம் லீக் மந்திரிசபை; சிந்து மாகாணத்திலும் லீக் மந்திரிசபை, மேலும் பல மாநிலங்களிலும் முஸ்லீம் லீகர்கள் சட்டசபை உறுப்பினராயிருந்து குரல் எழுப்பிக்கொண்டிருந் தனர். இப்படிச் சட்ட மன்றங்களில் முழங்கப்பட்டபோது பாகிஸ்தான் கோரிக்கை மேலும் வலுப்பெற்று, வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றது.''

"இன்று உலகத்தில் வளர்ந்துள்ள சூழ்நிலை - இது போன்றே பிரச்சினைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தா லன்றி வெற்றிபெறுவது கடினம் என்பதுதான்.''

"யாரைப் பதவிப் பித்தர்கள் என்று கூறலாம்? யார் பதவி பெறுவதற்குச் சகலத்தையும் விட்டுவிடுகிறார்களோ, அவர்களைத் தான் கூறலாம்.''

"உதாரணம் கூறவேண்டுமானால், நமது சென்னை மந்திரிகள் சுப்பிரமணியமும், ராஜாவும் கிடைப்பார்கள்.''

"தட்சிணப் பிரதேசம் வேண்டும்'' என்று பேசிக்கொண் டிருந்தவர்கள், மறுநாள் காலையில், "தட்சிணப் பிரதேசம் வேண்டுமா - மந்திரி பதவி வேண்டுமா?' - என்று அவர்கள் தலைவர் கேட்டதும், "எங்களுக்கு மந்திரி பதவிதான் வேண்டும்' என்று கூறிவிட்டார்களே - அவர்கள் "பதவிப் பித்தர்கள்' எனப்படுவோர்!

"கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக் காவு கொடுப்போரே "பதவி பித்தர்கள்!''

தனிமனிதர்கள் என்ற அளவிலே பதவிப் பித்துக்கு உதாரணமாக சுப்பிரமணியம், ராஜா ஆகியோரைக் குறிப்பிட்டேன்.

"கட்சி என்ற முறையில், நமது ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய கம்யூனிஸ்ட்டு கட்சியைக் குறிப்பிடலாம்.''

"போன பொதுத் தேர்தலுக்கு முன்வரை, "முதலாளிகளின் முதுகெலும்பை முறிப்போம்' என்று பேசி வந்தவர்கள், தேர்தல் நேரத்தில், "முதலாளிகளின் விரோதம் எதற்காக?' - என்று எண்ணினார்களோ, என்னவோ, "உள்நாட்டு முதலாளிகள் எங்கள் நண்பர்கள், அவர்களுக்கு நாங்கள் வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்புத் தருவோம்' என்று பேச முற்பட்டார்கள்.

"இப்படி, தேர்தலுக்கு முன்புவரை, முதலாளிகளை ஒழிப்போம் என்று பேசிவிட்டு, தேர்தல் நேரத்தில், சட்ட சபையில் சில இடங்களைப் பெறுவதற்கு உதவுவதற்காக முதலாளிகளின் பாதுகாப்பாளராக - பணியாளர்களாக மாறு கிறார்களே, அவர்கள், பதவிப்பித்தர்கள்!''

"எங்களிடத்தில், அப்படி ஒரு சிறு நெளிவை ஆதாரப் பூர்வமாக எவராலும் எடுத்துக் காட்ட முடியாதே!''

"நாங்கள் தேர்தலில் தோற்றாலும் வெற்றிபெற்றாலும், எங்கள் பரிசுத்தமான இதயம் நிலைக்கும்; அதுவே எங்களுக்குப் போதும்!''

தி. மு. கழகம் தேர்தலுக்காகத் திடீரென அமைக்கப்பட்ட கழகம் அல்லவே! தோன்றிய எட்டு ஆண்டுகளாகக் கழகம் மக்களுக்கு மகத்தான பணிபுரிந்திருக்கிறது. கொள்கைக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும். எந்த நேரத்திலும் கேட்டாலும் தந்து வந்திருக்கிறது.

"இந்த நேரத்தில் சிலர், சட்டப் பிரச்சினை ஒன்றையும் கிளப்பியிருக்கிறார்கள்.''

"தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்கள் எப்படி இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிக்காமல் பதவிப் பிரமாணம் செய்யமுடியும்? அப்படிச் செய்தால், அதை எப்படி ஏற்பது?'' - என்று சிலர் கேட்கின்றனர்.

"1939ஆம் ஆண்டிலும், 1946ஆம் ஆண்டிலும், ஆச்சாரி யாரும் - நேருவும், இன்ன பிற காங்கிரசாரும் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு விசுவாசம் தெரிவித்துவிட்டுத்தான் பதவி ஏற்றனர். அதனாலேயே, மன்னரை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று எவரும் கூறவில்லை; மன்னருக்கேகூடத் தெரியும் -"இவர்கள் நமக்கு உள்ளன்போடு விசுவாசம் தெரிவிக்கவில்லை' என்று!''

"அதுபோல நாம் இப்போது இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிப்பது என்பது எந்த வகையானது என்பதை நாடு நன்கறியமுடியும்.''

தம்பி! சட்டமன்றம் செல்வது பொறுப்புணர்ந்து தான் கொண்ட கொள்கைக்கு வலிவூட்டும் நோக்குடனேதான் என்பதைக் கொள்கைப் பற்றுள்ள எவரும் மறுக்க இயலாது என்பதற்குச் சான்று வேறு ஏதும் தேவையில்லை - கொள்கைப் பற்று இருந்தகாலை வெளியிடப்பட்ட இக்கருத்துரை ஒன்றே போதும்.

திருப்பரங்குன்றம் மாநாட்டிலே குழுமிய கொள்கை மறவாக் கோமான்களுக்கு, இப்படி இலக்கணம் பேசத் தெரியாம லிருக்கலாம்; ஆனால், அவர்கள் கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்காகக் காவு கொடுக்கும் போக்கினரல்ல! ஆகவே தான், இலக்கணம் கூறினோர், கொண்ட கொள்கையைவிட்டுச் சென்றுவிட்டாரெனிலும், இவர்கள் கொள்கையுடன் இணைந்து விட்டோம் என்பதை எடுத்துக்காட்ட எழுச்சியுடன் கூடினர் - எவரும் கண்டு வியக்கத்தக்க விதத்தில்! கொள்கைக்காக வாதாடியவர்களே இன்று அதனை இழந்து பேசுவது, காது குடையும் அளவு கேட்கிறது - மணம் பதறத்தான் செய்கிறது - எனினும், எதிர்ப்புரைப்போருக்கு; மறுப்புரைப்போருக்கு, எரிச்சல் மூட்டுவோருக்கு, ஏளனம் பேசுவோருக்கு, அழித்து விடுவோம், ஒழித்துவிடுவோம் என்று ஆர்ப்பரிப்பவர்க்கு, பதிலளிப்பதும் காலக்கேடு என்று உணர்ந்து, மாநாட்டில் திரண்டு வந்திருந்து தமக்குள்ள கொள்கைப் பற்றினை நாடறியச் செய்தனர். மற்ற நேரங்களில், மாநாடுகளில் கலந்துகொள்வது மகிழ்ச்சிக்குரியதாக இருந்திருக்கும் - இம்முறை, களிப்புப் பெற மட்டுமல்ல திராவிட நாடு திராவிடருக்கே எனும் கொள்கைக்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும் கடமையை மற்றவர்க்கு உணர்த்தவும் கூடினர்.

அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று ஒருவர் பேசினால், ஒழித்துவிட்டுத்தான் உறங்கச் செல்வேன். என்று மற்றொருவர் பதிலுரைப்பது, கடினமுமல்ல, அதற்கு அளவற்ற அறிவும் தேவையில்லை.

இழிமொழி பேசுவோருக்குப் பதில் மொழி, அதனினும் இழிந்ததாகப் பிழிந்தெடுத்துத் தருவது என்பதும் இயலாதது மல்ல, எவரிடமும் பாடம் கேட்கவும் தேவையில்லை - அறிவின் தரம் எவ்வளவுக்கெவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு ஆபாசநடை மிகுதியாகக் காணப்படும்.

யானை துரத்திக்கொண்டு வந்தால், அச்சத்துடன் ஐயையோ! என்று அலறுவர்; பன்றி பாய்ந்தோடிவரின் அருவருப்புடன், ஐயையோ! என்று கூறியபடி ஒதுங்கிக் கொள்வர்.

பொது மாநாட்டிலே கூடிய பொறுப்புமிக்கோர் மறுப்புரை கூறிடவோ, வெறுப்புரை பேசிடவோ, நாராச நடை மொழிந்திடவோ விரும்பும் போக்கினரல்லர். நம்மையும் நமது கொள்கையையும், கழகத்தையும் அழித்திடப்போவதாக, முன்பு சிலர் முழக்கமிட்டபோது, இன்று அதே செயலில் தம்மைச் சிக்க வைத்துக்கொண்டவர்கள், கழக எதிர்ப்பாளர்களை எத்தகைய சூடான சொற்களால் தாக்கினர் என்பதை, மாநாட்டிலே கூடியிருந்தோர் மறந்துவிடவில்லை; மறந்துவிடக்கூடியதாகவும் அமைந்ததல்ல, அந்தச் சொற்கள்!! சொற்களா? தீப்பொறிகள்!! அதனைக் கூச்சத்துடன்தான் நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது - நமது நாக்குக்குப் பழக்கமற்ற சரக்கு ஆதலால்,

வெத்து வேட்டெத்தனை நாள்? வீணாகிப் போகாதீர்! திருந்தித் தமிழ்த்தாயை, திராவிடத்தை வாழவைப்பீர் இல்லையெனில், நீரல்ல; இன்னுமொரு கூட்டம் சூழ்ந்து வருமென்றாலும் தூளாக்கிப் போட்டிடுவோம்.

எப்படித் தம்பி! வீரம்! தூளாக்கிப் போட்டுவிடுவோம் எதிர்த்து வரும் கூட்டத்தை என்கிறார்!

அதுசரி, அண்ணா! இன்னுமொரு என்ற வார்த்தைக்குப் பக்கத்தில், எழுத்தற்ற இடம் இருக்கிறதே, அது என்ன அச்சுப் பிழையா? என்றுதானே கேட்க எண்ணுகிறாய். தம்பி! அச்சுப் பிழை அல்ல! பிழை என்னுடையது! எனக்குத் துணிவில்லை, அந்த இழிமொழியை எடுத்துக்காட்ட - எனவே விட்டொழித்தேன்.

கழக எதிர்ப்பாளர்களைக் கடுமொழியால் தாக்கும் போக்கு நம்மிலே, மிகச் சிலருக்கே உண்டு. அவர்கள் அப்போக்குக் கொண்டதற்குக் காரணமும், நம்மைவிட அவர்கட்கு கொள்கைப் பிடித்தம் அவ்வளவு அழுத்தமானது என்பதனால் அல்ல, அவர்களின் "பாணி' அது! பணியும் அஃதே! பிணி என்றும் கூறலாம்!!

"பாணி' கிடக்கட்டும் தம்பி! இன்று அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகூடக் கிடக்கட்டும், கொள்கைப்பற்றுக்கொண்டிருந்த நாட்களில் அவர்கள், எத்துணை அழுத்தந் திருத்தமாக, வாதாடி னார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சிகொள்வோம் - நன்றிகூடச் செலுத்திக்கொள்வேன், என்னைப் பொறுத்த வரையில். உன்னைத்தானே அண்ணா! இழிவாக ஏசுகிறார்கள் என்று ஆயாசத்துடன் கேட்கிறாய், தம்பி! எனக்கு, முப்பொரு முறை நான் கூறியபடி, பட்ட கடனைத் தீர்ப்பதுபோன்று, மனத்துக்கு ஒரு நிம்மதியே ஏற்படுகிறது, அவர்கள் ஏசும்போது. எத்துணைப் புகழாரம் சூட்டினார்கள் - விதவிதமான மலர்களைத் தொடுத் தெடுத்து!! நான், அவர்களுக்கு என்ன தர முடிந்தது? தம்பி! என்று தழதழத்த குரலில், அன்பின் காரணமாக, அந்தஸ்து காரணமாக அல்ல, அழைத்தேன்! அது ஒரு பிரமாதமா! ஆயிரம் பேர், அவர்களை "அண்ணாச்சி' என்று அழைக்கும்போது, நான் தம்பி என்று அழைத்ததுகூட ஒரு தவறு என்று எண்ணுகிறார் களோ என்னவோ! போகட்டும்; பகை உள்ளம் உலைக்கூடம் போன்றிருக்கும் - தீப்பொறிதான் வெளிவரும், நான் வியப்படைய வில்லை; வெகுண்டிடவும் மாட்டேன்! இந்த இயல்பு இறந்து பட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனக்கிருக்கும் மகிழ்ச்சியெல்லாம், ஏற்புடைய கொள்கைக்கு எண்ணிலடங்காதார், அதற்கும் அஞ்சாதார், அணிவகுத்து நிற்கின்றார், ஐயப்பாடெழுப்பியும் ஆர்ப்பரித்தும் எதிர்த்தும் சிலர், அன்று நாங்கள் சொன்னதெல்லாம் அபத்தம், அநியாயம்! இன்றே உரைக்கின்றோம். இது உபநிஷதம் என்றே விந்தைப் பேச்சுதனை வீசிடும் இவ்வேளையிலும்!

நீண்ட மனக்குழப்பத்திற்குப் பிறகு, அறிவாளர் சிலர், தெளிவு பெற்றனர்; ஏமாளிகளாகவே நீவிர் இன்னும் இருக்கின்றீர்! இதிலே மகிழ்ச்சிகொள, மார்தட்ட என்ன உளது? என்றும் கேட்டிடச் சிலர் உண்டு, அறிவேன், தம்பி. அறிவேன்! அன்னார்க்கொன்றுரைப்பேன்!

கூக்கூ! கூக்கூ! என்று கூவிடாமலே புறாவும் அக்கா அக்கா! வென்றழைக்கும் கிளியுமாகுமா!!

கூகூ! கூகூ! என்று கூவிடும் கிளி!

அன்னை, "மாடப்புறாவே!
மாமரக்குயிலே!
பச்சைக்கிளியே பாகே!''
என்று அழைத்திட்டாலும்,
குழவி, அம்மா! அம்மா!
என்றே இசைக்கும்,
அறியீரோ நீவிர்!!

என்ன அண்ணா! புறாவும் குயிலும் கிளியும் குழவியும், எப்படி எப்படிக் குரலெழுப்பும் என்பது யாருக்கும் தெரியா தென்றா, கூறவந்துவிட்டாய் என்று கேட்டுவிடாதே தம்பி! நான் கூறுவது. வேறொர் உண்மையை விளக்க! எப்படி, குயிலும் கிளியும் புறாவும் குழவியும், தத்தமக்கு இயற்கையாக அமைந்துள்ள ஒலியையே மொழிந்திடுமோ, அதுபோலத் திராவிடர் திராவிட நாடு என்றுதான் முழக்கமெழுப்புவார்கள் - அது இயற்கை அந்த இயற்கையின்படிதான் நாம் நடந்துகொள்வோமே தவிர, ஒரு மாற்றமும் ஏற்படாது - என்பதை விளக்கத்தான், தம்பி, இதனைக் கூறினேன்.

திராவிடநாடு இலட்சியத்தை அண்ணாத்துரை கைவிட்டு விட்டான் என்று யாரோ கதைத்தனராம் - ஓராண்டுக்கு முன்பு. விடுவார்களா, பேச்சையும் மூச்சையும் அர்ப்பணிப்பவர்கள். பிடித்தார்கள் ஒரு பிடி, என்னைக் குறைவாகப் பேசியவர்களை. எனக்கு எத்தனை பெரிய துணை இருந்தது என்று ஏக்கத்துடன் காட்டிட அல்ல, அதனை இதுபோது எடுத்துரைப்பது, திராவிடர், திராவிட நாடு என்று முழக்கமெழுப்புவது இயற்கையின் பாற்பட்டது என்ற பேருண்மையை, அதனை உரைத்தோரே உளம் குழம்பிப்போயிருக்கும்போது, அவர்கள் தெளிவுபெற அவர்களுக்குத் தருவது முறையல்லவா, அதனால்.

பித்தம் போக்கும் கஷாயம் தயாரிக்கும் மருத்துவருக்கு, பித்தம் மேலிட்டுவிட்டால், அதே கஷாயத்திலே ஒரு முழுங்கு தரமாட்டோமா, அதுபோல என்று வைத்துக்கொள்ளேன்!

திராவிட நாடு எனும் கொள்கை தீதானது என்று பேசிடும் காங்கிரசாருக்கு, அதிலும் குறிப்பாக ஆளவந்தார்களைப் பிடித்துக்கொண்ட பித்தத்தைக் குறைக்கத் தயாரிக்கப்பட்ட கஷாயத்திலே, இதோ ஒரு முழுங்கு.

"இப்போது ஒருவர், நான் போகுமிட மெல்லாம் பேசுகிறார் - "அண்ணா திராவிட நாட்டுப் பிரச்சினையைக் கைவிட்டுவிட்டார்' என்று! நான் அவருக்குத் தெரிவிப்பதெல்லாம், புறா - "கூக்கூ' என்று கத்தும் வரையில், கிளி - "அக்கா, அக்கா' என்று அழைக்கின்ற வரையில்; குயில் - "கூகூ, கூகூ' என்று கூவுகின்ற வரையில்; குழந்தை "அம்மா, அம்மா' என்று சொல்லுகின்ற வரையில், நாங்களும், "திராவிட நாடு திராவிடருக்கே' என்று சொல்லிக் கொண்டேதான் இருப்போம்! இயற்கையில் ஒருவேளை மாற்றம் ஏற்பட்டாலுங்கூட, எங்கள் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பதனை தெளிவாக அவர்கள் அறிதல்வேண்டும்.

"பிரிந்தால் திராவிட நாடு வாழுமா - என்கிறார்கள்! இப்போது ஒன்றாக இருப்பதனால் ஆபத்து வராமலா இருக்கிறது? சீனாக்காரன் 40 ஆயிரம் சதுர மைல்களைப் பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறான்; நமது ஆட்சி என்ன செய்கிறது? "விட்டேனா பார், விட்டேனா பார்' என்கிறது! இதனால் நமக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது!