அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
8

இந்த நோக்கத்தை மறவாமல், நாம் நமது அமைப்பு விஷயத்திலே அக்கறை செலுத்தவேண்டும் என்பதைக் கூறவே இதனைச் சொன்னேன்.

திராவிடர் என்ற உணர்ச்சி நைந்துபோயிருந்ததுடன் இந்தியர் எனும் ஒரு போலி உணர்ச்சி ஊட்டப்பட்டு வந்த நிலையிலிருந்து வந்த சமுதாயத்தில், மிகச் சாதாரணமானவர்கள் எப்படியோ, இன உணர்ச்சியைப் புகுத்திவிட்டார்களே; ஒரு அரை டஜன் பேச்சாளர்கள், நாலு நாள் கூத்தாகிப் போகும் இவர்கள் முயற்சி என்றெண்ணிக்கொண்டிருந்தோம், இவர் களோ நாமே கண்டு மலைக்கத்தக்க விதத்தில் வளருகிறார்களே, நகரத்திலே மட்டுமே நயமாகிப் பேசி வளரமுடியும் என்று எண்ணியிருந்தோம். இவர்களோ பட்டிதொட்டிகளிலெல்லாம் பலம்பெற்று வருகிறார்களே எந்தப் பத்திரிகை இவர்கள் செய்தியை வெளியிடும், கருத்தினை எடுத்தரைக்கும் ஒளி இல்லையேல் உயிர் இல்லை என்பதுபோலப் பத்திரிகை உலகத் திருப்பார்வை விழாவிட்டால், இந்த இயக்கம் வாழாது, பட்டுப் போகும் என்று எண்ணிக்கொண்டோம், இவர்களோ, தமது இயக்கத்துக்கென்று ஒரு பத்திரிகை உலகத்தையே அமைத்துக் கொண்டார்கள். பணம் ஏது என்று பரிகாசம் செய்தோம், இவர்களோ, பேசுவதைக் கேளுங்கள் பணமும் தாருங்கள் என்று புதுமுறை வகுத்துக்கெண்டார்கள். "தேசிய கீதங்கள்', தோத்திரப்பாடல்கள் நம்மிடம் வண்டி வண்டியாக உள்ளன. அவைகளைக் கேட்கும் மக்கள் சொக்கிப்போவர்; இவர்களுக்கு ஏது அந்த வாய்ப்பு என்று பேசினோம். இவர்களோ, இயக்கப் பாடல்கள், இயக்கப் பாடகர், இயக்க நாடகம் என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். ஏ! அப்பா! பொல்லாத ஆசாமிகள்! இவர்களை இபபடியே வளரவிடுவது பேராபத்தாகிப்போகும்; கோட்டை போன்ற வீட்டுக்கு அமைந்துள்ள சுவரிலே, முளைத்து மூன்று இலைவிட்டு, வளர்ந்துவிடும் அரசு வேம்புபோன்ற செடி, பிறகு, அந்தச் சுவரினையே கலனாக்கிவிடுவதுபோலன்றோ இவர்களின் வளர்ச்சி நமது ஆதிக்கத்தைக் குலைத்துவிடும், இதனை ஒழித்தாகவேண்டும் என்று, காங்கிரசார் பலமான ஏற்பாடு களைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்கள், பல வழி களிலும், நமது வளர்ச்சியை அழிக்கத் திட்டமிடுகிறார்கள்.

எதிர்த்துத் தாக்குவதைவிட, உட்குழப்பம், சச்சரவு, மனக்கிலேசம் மூட்டிவிடுவதுதான், போர் முறைகளிலேயே, பயங்கரமானது.

ஆதிக்கத்திலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறையைத் திறம்படக் கையாளுகிறது.

"பயல்கள் நாத்திகர்கள்! கடவுள் நம்பிக்கையற்றவர்கள்'' என்று பழி சுமத்தினர் - பக்தர்களும் பாமரமக்களும் பதை பதைப்பார்கள், பகை கொள்வார்கள் என்று. நாமோ, ஐயா! நாங்கள் நாத்திகரல்ல; ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உள்ளத்துறையும் உண்மையை உரைத்தோம்; உள்ளபடி இவர்கள் நாத்திகம் பரவக்கூடாது என்ற நோக்கமுடையவர் களானால் நமது விளக்கத்தைக் கேட்டுப் பாராட்ட அல்லவா வேண்டும்? பாராட்டினார்களா? இல்லை! பயம்கொண்டனர்! பாவிப் பயல்கள்மீது இந்த பழிபோட்டுத் தலைவாங்கலாம் என்று பார்த்தோம், இடம் கொடுக்கவில்லையே என்று எண்ணிக் கை பிசைந்துகொண்டனர்.

இவர்கள் வகுப்புவாதிகள்; வகுப்புத்துவேμகள்; பார்ப்பன விரோதிகள் என்று நம்மைப்பற்றிச் சொல்லி, பகைமூட்டப் பார்த்தனர். ஐயா! நாங்கள் சில முறைகளை, நடவடிக்கைகளை, தத்துவங்களை, நம்பிக்கைகளை, ஏற்பாடுகளைக் கண்டிக்கிறோம், நீக்கவேண்டும் என்கிறோம்; ஒரு வகுப்பின்மீதோ, தனிப் பட்டவர்கள்மீதோ, பகையுமில்லை துவேஷமும் இல்லை! என்று விளக்கமளித்தோம். மகிழ்ந்தனரா? இல்லை! மற்றோர் பழிசுமத்தலாயினர், பார்! பார்! பார்ப்பனருக்கு அடிமைகளாக்கி விட்டார்கள் என்று கூறத் தலைப்பட்டனர்.

தம்பி! இப்படியே ஒவ்வொன்றாக அலசிப்பார்த்தால் தெரியும். இருபத்துநான்கு மணி நேரமும் என்ன பழி சுமத்தலாம்? எத்தகைய எதிர்ப்பு மூட்டலாம்? என்று அலைகிறார்கள், மாற்றார் என்பது.

நமது கழகத்தவர்கள் பொதுமக்களுடன், இடையறாத தொடர்புகொண்டவர்கள். எனவே எப்போதும், பொது மக்களுடைய பார்வையில் பட்டவண்ணம் இருக்கிறார்கள். நமது நோக்கமும் நடத்தையும், இன்று அந்த மக்களுடைய அன்புப் பார்வையைப் பெற்றளிக்கிறது.

மணம் கமழும் மல்லிகை நிரம்பிய பூக்குடலையை, ஒருவர் நம்மிடம் காட்டி, "ஐயா! இதை ஒரு ஐந்துநிமிடம் வைத்துக் கொண்டிருங்கள், வீட்டிலே, மாலை தொடுக்க "நார்' மறதியாக வைத்துவிட்டு வந்துவிட்டேன், எடுத்துக்கொண்டு ஓடோடி வந்துவிடுகிறேன்' என்று சொன்னால், மகிழ்ச்சியுடன் சம்மதிக் கிறோம் - மூக்சைத் துளைக்கும் வாடை அடிக்கும் ஏதேனும் பொருளுள்ள மூட்டையைக் கொடுத்து "சற்று பார்த்துக் கொள்ளுங்கள், இதோ சடுதியில் வந்துவிடுகிறேன்' என்றால், "சரி' என்றா சொல்கிறோம்? இல்லையல்லவா? மனித இயல்பு அது.

தம்பி! நமது நோக்கமும் நடவடிக்கையும், மக்களின் அன்புத் தொடர்பை நமக்குப் பெற்றளிக்கின்றன. இதே தொடர்பு, நமது செயலிலும் சொல்லிலும் வெறுப்பூட்டும் நெடி கொண்டதாகிவிட்டால், நிலைக்குமா? நிலைக்காது! அன்புப் பார்வை மறையும்; அலட்சியப் பார்வை, கோபப் பார்வை, வெறுப்புப் பார்வை கிளம்பும்.

அப்படிப்பட்ட ஒரு வெறுப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காகப் பலபல பழிகள், புகார்கள், அவிழ்த்து விடப்படுகின்றன. ஒவ்வொன்றும், நாம் கடக்கவேண்டிய நெருப்பாற்றை உண்டாக்குகிறது.

வெறுப்புணர்ச்சியே மாற்றார்கள் பழிபோட்டு, மூட்டி விடுவதிலே முயன்று தோற்றுப்போகவே, நமக்குள்ளாகவே, ஒரு பிரிவைத் தூண்டிவிட்டு மற்றோர் பிரிவின்மீது பழி கூறவைத்து, பழி கூறுபவர்களுக்குப் பக்கத்துணை நின்று, பரிவு காட்டி, பிளவுமூட்டும் காரியத்தை இந்த மூன்றாண்டுகளாகத் திட்ட மிட்டுச் செய்து வருகிறார்கள்.

கழகத் தோழர்கள், குடும்பப் பாசத்தோடு, கொள்கைப் பற்றுடன், தோளோடு தோள்சேர நின்று பணியாற்றுவதைக் காணும்போது, காங்கிரசாருக்கு கடுகடுப்பாகிறது; இந்த வலிவான அணிவகுப்பு வளருகிறதே என்ற கிலி ஏற்படுகிறது. எத்துணை தோழமை, இவர்களிடம்! ஒருவருக்கொருவர் துணை நின்று பணியாற்றி வருகிறார்களே!! ஒரு துளியும் இவர்களுக்குள் போட்டி, பொறாமை, பகை மூளவில்லையே, என்றெல்லாம் எண்ணிப் பயம் கலந்த துக்கம் கொள்கிறார்கள். நமது ஒற்றுமை அவர்களுக்குத் திகைப்பை உண்டாக்குகிறது. ஆதிக்கம் அழிக்கப் பட்டுவிடும் என்ற அச்சம் அவர்களைப் பிடித்து உலுக்குகிறது.

ஆனால், நமது தோழர்களிடையில், காரணத்துடனோ காரணமின்றியோ, தோழமை கெடத்தக்க, கட்டுப்பாடு குலையத் தக்க, பகை மூண்டிடத்தக்க நிலை ஏற்பட்டு, கழகத் தோழர்கள் ஒருவரை ஒருவர் தூற்றவும் எதிர்க்கவும் தொடங்கினால்; காங்கிரசாருக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியாக இருக்கிறது! பயம் நீங்கி, மகிழ்ச்சி பிறக்கிறது. பயல்கள் பிளவு பட்டுவிட்டார்கள்; இனி அணிவகுப்புக்கு, அழிவுதான் என்று எண்ணுகிறார்கள். நமக்குள் பிளவு ஏற்படுவதிலேதான் காங்கிரசுக்குப் புது வலிவு கிடைக்கும் என்பதற்குக் காரணம் அதிகம் கூறத் தேவையில்லை.

சடுதியிலே உணர்ச்சிவயமாகக்கூடியவர்களை, சிறிதளவு தந்திரம் தெரிந்தவர்கள், தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது, எளிதான காரியம்!! தூண்டுபவர்களுக்குச் சுவையாகக்கூட இருக்கும்! எருதுமீதுள்ள புண்ணை காக்கை கொத்தும்போது, பார், தம்பி! என்ன சுறுசுறுப்புடன் காகம் இருக்கிறது என்பது தெரியும். பழத்துண்டு வீசினால்கூடப் பயந்து பயந்து வரும், கொத்தும், அகப்பட்டவரையில் எடுத்துக்கொண்டு பறந்தோடிப் போகும். மாட்டின்மீது உள்ள புண்ணைக் கொத்தும்போது, அப்படி அல்ல, மாடு வாலைச் சுழற்றிச் சுழற்றி அடிக்கும். தப்பித்துக்கொள்ள இப்படியும் அப்படியும் பறந்திடும். ஆனால், மீண்டும் வந்து, கொத்தும். அதற்கென்னவோ அந்தக் காரியத்தில், அத்துணை உற்சாகம், சுவை!!

அதுபோன்றே, சிலர், கிளறிவிடுவதில், குத்திவிடுவதில் மிகுந்த சுறுசுறுப்பாக இருப்பார்கள்; சுவை பெறுவார்கள்.

இருவர், நெடுநாட்களாக நண்பர்கள், களங்கமற்ற முறையில் நேசம் இருக்கிறது; அங்காடிப் பக்கத்தில், அந்தி சாயும் நேரத்தில், அளவளாவுகிறார்கள், சில விநாடிகள்; பிறகு பிரிகிறார்கள் வேறு அலுவல் இருப்பதறிந்து என்று வைத்துக்கொள்.

இரண்டே நிமிடத்தில், நான் குறிப்பிடுகிறேனே குத்திக் கிளறி மகிழ்பவன், அப்படிப்பட்டவன் முயன்றால் பல ஆண்டு நேச உணர்ச்சிக்கே, பழுது உண்டாக்கிவிட முடியும் - விலைமிக்க பட்டுத் துணியில் ஒரு சொட்டு மையைத் தடவிவிட்டால் அந்தத் துணியின் அழகு மாய்வதுபோல!!

பக்குவமான பேச்சு - பதறாத போக்கு - ஏதுமறியாதவன் போன்ற நடிப்பு இவை இருந்தால் போதும்.

நான் காட்டிய இரு நண்பர்கள், பேசிப்பிரிகிறார்கள் - மகிழ்ச்சியுடன்.

கிளறுபவன், அதில் ஒருவனை அணுகி, அதிகம் ஏதும் பேசத் தேவையில்லை; மிகச்சாதாரணமான முறையில்,

"ஏம்பா! எப்போது மறுபடியும் நீங்கள் நண்பர்களா னீர்கள்?'' என்று கேட்டால் போதும்.

தூக்கி வாரிப்போடும் அவனுக்கு, "என்னய்யா இது, எங்களுக்குள்ளே என்னவோ பகை இருந்ததைப்போலவும், அது இப்போது நீங்கியதுபோலவும் ஒரு கேள்வி கேட்கிறாயே முட்டாள்தனமாக!'' என்று அவன் கூற, கிளறிவிடுபவன், ஏதுமறியாதவன்போல நடித்தபடி, "பகையில்லையா! உங்களுக் குள்ளே கடுமையான விரோதம் இருந்ததாக அல்லவா நான் எண்ணிக்கொண்டேன். ஆச்சரியமாக இருக்கிறதே! நீ, சொல்கிறாய் எங்களுக்குள் பகையே ஏற்பட்டதில்லை என்று. ஆனால் இவ்வளவு நேரம் உன்னிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினானே அவன், காதால் கேட்கமுடியாத ஆபாசமான வார்த்தைகளால் அல்லவா, உன்னை ஏசினான் - இந்தக் காதால் கேட்டேனே!'' என்று விஷம் தூவ, "என்னைத் திட்டினானா! உனக்கென்ன பைத்தியமா! என்னையா என் நண்பன் திட்டி னான்? என்ன சொன்னான்? எங்கே? எப்போது?'' என்று அவன் பதறிக் கேட்க, கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பவன், மிகவும் பரிவு கொண்டவன்போல நடித்தபடி, "வேண்டாம். தம்பி! எப்படியோ ஒன்று, சினேகமான இருக்கிறீர்கள், அதைக்கெடுக்கலாமா, வேண்டாம். என்னவோ புத்திகெட்டு, ஆத்திரத்திலே உன்னைக் கேவலமானப் பேசிவிட்டிருக்கிறான் போகட்டும் விட்டுத்தள்ளு. அதை நான் விவரமாகக் கூறி, உன் மனத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது. நேசம் முறிந்துவிடும்'' என்று கூறிவிட்டு, மேற்கொண்டு எதுவும் கூறாது, போய்விடுகிறான் என்று வைத்துக்கொள். தம்பி! என்ன ஆகும் தெரியுமா? திகைப்பு! சந்தேகம்! புகும்!! அடுத்த முறை நண்பனைப் பார்க்கும்போது, இது நினைவிற்கு வரும் - கேட்கலாமா வேண்டாமா? என்ற எண்ணம் குடையும்; அதனால் வழக்கமான முக முலர்ச்சி குறைந்து போகும்; அதைக் கண்டு அந்த நண்பனுக்குச் சந்தேகம் எழும் - என்ன ஒரு மாதிரியாக இருக்கிறானே! எப்போதும் போலக் கலகலப்பாகக் காணப்படவில்லையே. ஏதாகிலும் சங்கடமோ? கோபமோ? நம்மிடம் அலட்சியமோ? அடிக்கடி நாம் பண உதவி கேட்கிறோம் என்பதால், நமது நேசத்தைக் குறைத்துக்கொள்ளப்பார்க்கிறானோ என்றெல்லாம் எண்ணு வான் இருவரும் குழம்புவர்! - கிளறியவன் வைத்த வேட்டு நேசத்தை முறித்திடும் - கிளறியவன் இருவரின் மதி தடுமாறிய நிலையை எண்ணி மகிழ்ந்துகொண்டிருப்பான்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுவதைக் கண்டிருப்பார்கள்.

வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், கிளறிப் பகை மூட்டி, வலிவைச் சிதைத்து, பயன்பெற எண்ணித் திட்டமிட்டு வேலை செய்கிறவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்து மிக மிக அதிகமல்லவா?

உறுமல் கேட்கும்போதே கிலி கொள்வார்கள் - ஓடி விடுவார்கள். ஆனால் புலி உறுமுவதற்குப் பதிலாகப் புள்ளினம் போல இசை எழுப்புகிறது என்றால், இத்தனை இனிய குரலெழுப்பும் இந்தப் பிராணி எவர்க்கு என்ன தீங்கிழைக்கும்! என்று நம்பி, அருகே சென்று, அழிவைத் தாமே தேடிக்கொள்ள நேரிடுமன்றோ!

கிளறிக் கலகமூட்டிப் பகை வளர்ப்போர், உறுமும் புலியாக இருக்கமாட்டார்கள் - குரல் புள்ளினம்போன்றதாக இருக்கும், செயலோ இரத்தவெறிகொண்டதாக இருக்கும்.

ஒரு பெரிய இயக்கத்தை மாற்றார்கள் திகைக்கத் தக்க அளவுக்கு வளர்த்தான பிறகு, இந்தப் பேராபத்துச் சூழாமல், பாதுகாத்து நிற்கும் பெரும் பொறுப்பு, ஏற்படுகிறது.

அதிலும் நம்முடைய கழகத்தைப் பொறுத்தவரையில் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க அல்ல, கிளறிவிட்டும் பகை வளர்க்கப் பலரும் துடியாய்த் துடிக்கின்றனர்.

தோலோடு பழம் இருக்கும்போது, நாம் கையாள வேண்டிய பக்குவத்தைவிட, தோல் உரித்தான பிறகு அதிகமான பக்குவம் தேவைப்படுகிறதல்லவா!

செய்திகள் பரப்புவோர், நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தருவோர்கூட, ஒருஅமைப்பிலே இருக்கக்கூடிய நேசத் தொடர்பு களுக்கு ஊறு ஏற்படுத்தமுடியும்.

அரசியல் அமைப்புகளுக்கு மட்டுமல்ல - குடும்பம் - தொழிலிடம் - மன்றம் எதிலும்.

குப்புசாமி வாந்தி எடுக்கிறான் திடீரென்று ஒரு நாள். காரணம் தெரியாது திகைக்கிறான். களைப்பு மேலிடுகிறது. காப்பி குடித்தால் களைப்புப் போகும் என்று எண்ணுகிறான். கந்தசாமி நடத்தும் காப்பிக் கடை சென்று காப்பி குடிக்கிறான்.

தம்பி! இவை நிகழ்ச்சிகள்.

இதையே கிளறிப் பகைமூட்டும் போக்குக்குப் பயன்படுத்த எண்ணினால், எதையும் கூட்டத் தேவையில்லை, குறைக்கத் தேவையில்லை, சிறு மாற்றம் செய்து வெளியிட்டால் போதும்.

கந்தசாமி நடத்தும் காப்பிக்கடை சென்று காப்பி குடித்தான். குப்புசாமி வாந்தி எடுத்தான்.

இப்படி வெளியிட்டாலே போதும், கந்தசாமி கடைக் காப்பி குடித்ததால்தான், குப்புசாமி வாந்தி எடுத்தான் என்று பொருள்கொண்டு, கந்தசாமி கடையையே பலரும் வெறுத்துப் பேசத் தொடங்குவார்கள்.

செய்திதான்! கருத்துரைகூடத் தரப்படவில்லை.

நடந்தவைதாம்! இட்டுக்கட்டி எதையும் சொல்லவில்லை.

என்றாலும் எது முதலில் நடந்தது, எது பிறகு நடந்தது என்பதை மட்டும் வேண்டுமென்றே, எடுத்துக் காட்டாமல், இதனால் இது நடந்தது; அதாவது, கந்தசாமியின் கடை காப்பி குடித்ததால் வாந்தி வந்தது என்ற பொருள்கொள்ளும்படி, புகார் எழும்படி, பழி ஏற்படும்படி, செய்தி வெளியிடப்பட்டால் விபரீதம் ஏற்படுகிறது.

ஒரு அரசியல் கட்சியில், அதிலும் விடுதலை இயக்கத்தில் கிளறிவிட்டுப் பகைமூட்டும் செயலைச் செய்திடும் வாய்ப்புகள் அதற்காகவே அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு ஆயிரம் கிடைக்கும்.

அத்தனைக்கும் இடம் தராததாக உள்ளம் பக்குவப் பட்டாகவேண்டும்.

ஏன்தான் சிலர் இதுபோலெல்லாம் செய்யவேண்டுமோ என்று எண்ணி ஆயாசப்படுகிறாய். தம்பி! இது காலத்தின் கூறு! நாம்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பயிற்சி பெற வேண்டுமே தவிர, அவர்களின் இயல்புகளை நாம் மாற்றும் காரியத்தில் ஈடுபட்டுப் பயனில்லை.

உலகிலே காணக்கிடக்கும், பல்வேறு நெருக்கடியான பிரச்சினைகள் குறித்து உலகப் பெருந்தலைவர்கள் நேச முறையில் கலந்து பேசினால் போர்ப் போக்கு மாறும் என்ற நல்ல நோக்கத்துடன், சில தினங்களுக்கு முன்பு சோவியத் தலைவர் குருஷேவும் அமெரிக்கத் தலைவர் கென்னடியும், வியன்னா நகரில் சந்தித்தனர்.

பல இதழ்கள் படங்களை வெளியிட்டன - இன்னின்னது பேசினார்கள் என்ற தகவலை வெளியிட்டன - அறிக்கைகள் வெளியிட்டன.

நியூயார்க் ஹெரால்டு டிரைப்யூன் எனும் அமெரிக்க இதழ் இரு தலைவர்களும் என்னென்ன உண்டு களித்தனர் என்ற பட்டியலைத் தந்தது.

பேசும் பிரச்சினைகளை மற்றவர்க்கு அறிவிப்பது. கருத்துத் தெளிவுபெறப் பயன்படும்; அவர்கள் சாப்பிட்டதைச் சொல்லிப் பயன்?

உண்டு! அந்தச் செய்தி மூலமாகவே, அந்த இதழ் தனக்குச் சரியென்றுபட்ட சில எண்ணங்களை எடுத்துக் காட்டிற்று.

விருந்து, முதலில் குருஷேவுக்கு, கென்னடி வைத்தாராம்.

ஈரல் சமைத்து வைக்கப்பட்டிருந்ததாம் - பிரான்சு நாட்டு முறைப்படி!

பொருள் உண்டோ? உண்டு என்கிறார் இதழில் எழுதியவர்.

பிரான்சு நாட்டு உணவு முறையில் தயாரிக்கப்பட்ட ஈரல் கறி படைத்ததன்மூலம், "நான் பிரான்சு நாடு மேற்கொண்டுள்ள முறைகளை ஆதரிக்கிறேன். உம்மைச் சந்திப்பதற்கு முன்பு பிரான்சு நாட்டுத் தலைவரைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் - அதைக் கவனப்படுத்துகிறேன்' - என்று கென்னடி, குருஷேவுக்கு அறிவித்தாராம்!

அடுத்தது, மாட்டிறைச்சி; அது பிரிட்டனில் செய்யப்படும் பக்குவப்படி தயாரிக்கப்பட்டதாம்.

அதனை அளித்ததன் பொருள் "நாம் கூடி, உலகப் பிரச்சினைகளைப்பற்றி பேசுகின்றோம். இங்கு, பிரிட்டிஷ் முதல்வரும் இருந்திருக்கவேண்டியது முறை. பிரிட்டன் கையாளும் பக்குவத்தைத்தான் நான் விரும்புகிறேன். இதை அறிவிக்கத்தான் இந்தப் பண்டம்'' என்று குருஷேவுக்கு கென்னடி அறிவித்தாராம்!!

பிறகு, ஒரு அமெரிக்க முறைப் பண்டம். அந்த முறை 1952ஆம் ஆண்டு, சமையற்கலையில் புகுத்தப்பட்டதாம்; அதனை அளித்தற்கு, ஒரு அரசியல் விளக்கம் உண்டென இதழில் எழுதப் பட்டிருக்கிறது.

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக, அயிசனவர் 1952இல் அமர்ந்தார். அவர் வேறு கட்சி - கென்னடி வேறு கட்சி! என்றாலும், "நாம் கூடிப் பேசும் பிரச்சினைகளில், அயிசனவர் கட்சிக்கும் என் கட்சிக்கும் உடன்பாடு இருக்கிறது என்பதைக் காட்டவே, அயிசனவர் பதவி ஏற்ற 1952ஆம் ஆண்டு சமையற் கலையில் புகுத்தப்பட்ட புது முறையில் செய்யப்பட்ட இந்தப் பண்டம் தந்திருக்கிறேன்'' என்று தெரிவிக்கிறாராம், கென்னடி.

எப்படித் தம்பி! இதழின் வேலைத் திறம்!!

பிறகு குருஷேவ் கென்னடிக்கு விருந்தளித்தார்.

அந்த விருந்திலே, முழுக்க முழுக்க அமெரிக்க நாட்டு "பாக' முறைப் பண்டங்கள் இருந்தனவாம்.

பொருள் உண்டோ? "நிரம்ப'' என்கிறார் கட்டுரையாளர்.

"எங்களால்தான் முடியும் நேர்த்தியான வகைகளைச் செய்திட - என்று பேசிக்கொள்கிறீர்களே - எதையும் சாதிக்கும் திறமை சோவியத்துக்கு உண்டு - சாப்பிட்டுப் பாரும், இவை யாவும், உங்கள் நாட்டுச் சமையல் முறைப்படி எங்கள் நாட்டவர் தயாரித்தவை, தரம் எப்படி என்பதை அறிந்துகொள்ளும்!!'' என்று குருஷேவ், கென்னடிக்கு அறிவிக்கிறாராம்.

தம்பி! இருவரும் ஒருவருக்கொருவர், விருந்து நடத்தியதில், அதிகமாகச் சாப்பிட்டவர், கென்னடிதானாம்!!

பொருள் என்ன என்றால், "கிடைத்ததை விடமாட்டோம், பெறுவதும் பெரு அளவுதான். இது அமெரிக்க முறை'' என்பதை அறிவிக்கும் நோக்கமாம் கென்னடிக்கு.

இப்படி, விருந்துக்குத் தத்துவங்களை இணைத்துவிடும் போக்கிலே, அந்த இதழ் எழுதிற்று.

ஆனால், கவனித்தனையா; இதிலே, இழிவுபடுத்தும் முறை, மனத்தை புண்ணாக்கும் நோக்கம் தலைகாட்டவிடவில்லை.

அப்படி, இழிவுபடுத்தவேண்டுமென்றால், குருஷேவைக் கண்ட உடனே கென்னடி "வருகிறீர்களா! மிருகக்காட்சிச் சாலைக்குப் போகலாம்! ஒரு பெரிய கரடி வந்து சிக்கிக்கொண்ட தாம். பிடித்து அடைத்துப் போட்டிருக்கிறார்கள்!'' என்று கேட்டார். அதற்கு குருஷேவ், "போகலாம்! ஆனால், அங்கே யானை இருக்குமே, இப்போதுதான் அதனிடமிருந்து தப்பிப் பிழைத்தோம், இதற்குள்ளாகவா அதனிடம் மாட்டிக்கொள்வது என்ற பயம் உமக்கு உண்டாகுமே என்றுதான் பார்க்கிறேன்'' என்று பதிலளித்தார் என்று இதழ் எழுதியிருக்கலாம்.

கரடி, சோவியத் நாட்டுக்கு உவமையாகக் கூறப்படுவது. எனவே, அதைக் கேலி செய்வது, மறைமுகமாகச் சோவியத்தைக் கேலி செய்வதாக அந்தப் பேச்சுக்குப் பொருள் ஏற்பட்டு, குருஷேவுக்கு மனச்சங்கடம் உண்டாகியிருக்கும்.

அதுபோலவே, யானை, அயிசனவர் கட்சிக்குச் சின்னம். அந்தக் கட்சியிடம் கென்னடிக்கு மிகுந்த பயம் என்று கென்னடி யைக் குருஷேவ் கேலி செய்வதாகவும் பொருள் ஏற்பட்டுவிடும்.

இந்த அளவு போதும், "மூட்டிவிட!'

எனவே, தம்பி! மூட்டிவிடுவோரின் நோக்கம் தெரிந்து நாம் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றவேண்டும்.

வெறும் தேர்தலுக்காக மட்டுமே, நமது கழகம் என்றால், ஒருவர் பகைத்துக்கொண்டால் புதிதாக ஒன்பது பேருடைய நட்புக் கிடைக்கும் என்றுகூட எண்ணிக்கொண்டு, காரியத்தைக் கவனிக்கலாம்; அல்லது தேர்தலிலே பாதகமே ஏற்படினும்கூடப் பேராபத்தாகிவிடாது என்று துணிவுடன் இருக்கலாம். ஆனால், நாம் நடத்திச் செல்வது, விடுதலை இயக்கம்! இதிலே, கட்டுக் கோப்புக் கெடவிடலாகாது! மனமுறிவுகள் எழக்கூடாது. நாளுக்கு நாள் நேசத் தொடர்புகள் வலிவும் பொலிவும் உள்ளனவாக இருத்தல்வேண்டும்.

திருப்பரங்குன்றத்திலே நான் கண்டு களிப்படைந்தது, கழகத்திடம் தம்மை ஒப்படைத்துவிட்டுள்ள உத்தமர்களிடம் நிலவும், இந்த உணர்ச்சிப் பெருக்குத்தான்.

அதுதான் நாம் திரட்டியுள்ள கருவூலம். அதுதான், விடுதலைக் கிளர்ச்சிக்குத் தேவையான படைக்கலம்.