அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
9

விடுதலைக் கிளர்ச்சிகளின்போது நடைபெற்ற நிகழ்ச்சி களை, ஏடுகளிலே படிக்கும்போது, தம்பி! நெஞ்சம் நெகிழ்கிறது. எத்தனை எத்தனை வீரச்செயல்கள்! என்னென்ன விதமான தியாகங்கள்!! விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது என்றால், விளக்க மாக, கேட்போர் மனத்திலே பதியத்தக்க விதமாகப் பத்து மாநாடுகளிலே பேசிவிடுவது மட்டும் என்றா எண்ணிக் கொள்வது! புள்ளி விவரங்களைச் சேகரித்து, மனப்பாடம் செய்துகொண்டு, அதனைப் பேச்சிலே கொட்டிக் காட்டி விடுவதனால் மட்டுமா, விடுதலை கிட்டிவிடும், காட்டாத காரணம் இல்லை! பேசாத பிரச்சினை இல்லை! மறுக்கொணாத வாதங்களைத் திறமையுடன் காட்டினோம். இதற்குப் பிறகும் விடுதலை கிடைக்கவில்லை என்றால், என்றுமே கிடைக்காது, எவர் முயன்றாலும் கிடைக்காது!! என்று கூறுபவர்கள், விடுதலை வரலாற்றில், இங்கும் அங்குமாக, கொட்டை எழுத்துக் களில், கோடிட்ட இடங்களைப் பார்த்துவிட்டு அரசியல் நடத்துபவர்கள். அரசமரத்தைச் சுற்றிக்கொண்டே அடி வயிற்றைத் தடவிப் பார்ப்பது என்பார்களே, அந்தப் போக்கினர்.

படித்தால் உடல் புல்லரிக்கிறது! உள்ளம், புயல் கொள்கிறது! கண்கள், குளமாகின்றன!!

உடலெங்கும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திட்ட நிலையில், குதிரை வீரர்கள், உடலைத் தூக்கி வந்து சந்தைச் சதுக்கத்திலே வீசி, பயத்துடன் இங்கும் அங்குமாகப் பதுங்கி கிடக்கும் மக்களைப் பார்த்து,

"இதோ உங்கள் வீரன்!
விடுதலை கேட்டானே வீணன்!
விடுதலை கிடைத்துவிட்டது!
இனி எமது ஆட்சிக்கு அடங்கி இருக்கமட்டான்!
எமக்கு வரி செலுத்தமாட்டான்!
எமது சட்டம் அவனைத் தொடாது!
அவன் விடுதலை பெற்றுவிட்டான்!
கேட்டான்; கொடுத்துவிட்டோம்!
நிறைய! சுடச்சுட! உடலெங்கும்
எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள், விடுதலை வீரன்
உடலில் ஏற்பட்டுள்ள பொத்தல்களை!!
விடுதலை வேண்டுமா, விடுதலை!!
தருகிறோம்! இதுபோல! தாராளமாக!!

என்று கேலிமொழி பேசிவிட்டு, இடி இடியெனச் சிரித்து விட்டுச் செல்கிறார்கள். நாட்டை அடிமைக் காடாக்கிய எதேச்சாதிகார வெறியர்கள்! கொடுங்கோலர்கள்!!

ஸ்பெயின் நாட்டுப் பிடியிலிருந்து, தன் நாட்டை விடுவிக்கும் வீரச் செயலில் ஈடுபட்ட, "ஜோரேஸ்' எனும் வீரனைப்பற்றிப் படிக்கும்போது, எவருக்கும் அடிமையாக இருக்கிறோம், உயிரும் இருக்கிறதே - என்று எண்ணத் தோன்றும்.

காடா, இது? அது நமது நாட்டிலல்லவா இருக்கிறது!

கல்லறையா இது? நமது வீடல்லவா, கல்லறை!!

சோளக்கொல்லைப் பொம்மைகள், அதோ வயலில் தெரிகின்றனவே, அவைகளா? சொல்லும் மதியிலி எவன்? அந்நியன் அடிபணிந்து, சொந்த நாட்டில் அவன் அரசு நடத்தக் கண்கூடும் கண்விழி பிதுங்கி வெளியே வரவில்லையே நமக்கு - நாமல்லவா, சோளக்கொல்லைப் பொம்மைகள்! சுட்டெரிக்க வேண்டும் நம்மை! விட்டுவைத்திருக்கிறார்கள், உலகிலே அவமானச் சின்னங்களாக உழலட்டும் என்று!!

மாற்றான் பிடியில் சிக்கிய நாட்டிலே மான உணர்ச்சி பீறிட்டெழும் நிலை பெற்றவர் கூறுவரன்றோ இதுபோலக் கூறினர், விடுதலைக்காகப் போராடிய நாடுகளிலே, உலவிய வீரர்கள் - தியாகிகள்!!

அடிமைத்தனத்தை எதிர்த்துப் போரிடாமல், மாற்றான் அடிபணிந்து, வாழ்வு நடத்தும் தகப்பனை, மகன் சுட்டெரித்து விடுவதுபோலன்றோ பார்த்தான்! "தர்பார்' தயவால், வாங்கிவந்த பொன் இழைத்த ஆடையைத் தகப்பன் தருவான், மகளிடம் அதைக் கண்ட, அவர்களுடைய அண்ணன் கண்களில் பொறி பறக்கும்!

"அணிந்துகொள்ளம்மா, அணிந்துகொள்! ஆசையோடு, அப்பா வாங்கிவந்தார், உன் அழகுக்கு அழகு செய்ய!''

விலையுயர்ந்த ஆடை - வேலைப்பாடு மிக்கது.

கொடுத்த விலை கொஞ்சமல்ல! உடன்பிறப்பே! இந்நாட்டு மக்களின் மானத்தைப் பறித்தெடுத்து, மண்டியிட்டபடி மாற்றான் முன்வைத்து, அதற்காக அவன் தந்த கூலியை - கோடிப் பொன்னைக்கொண்டு வாங்கி வந்திருக்கிறார், வண்ணச்சேலை!

எண்ணம், உயர்வானது!!

என் நாடு அடிமைக்காடு என்று சொல்பவன், யார்? பார் என் மகளை! பளபளப்பான ஆடை! பட்டத்தரசிபோன்ற எடுப்புடன் இருக்கிறாள்! அடிமை என்று எவனோ உளறுகிறானே!

அடிமைக்கு ஏது அலங்கார ஆடை!

என் மகளைப் பார்! நாடு, அடிமைப்படவில்லை!! என்பதை நடமாடிக் காட்டுகிறாள் - என்றல்லவா, தங்கையே! நம் அப்பா! அறிவிக்க எண்ணம் கொண்டிருக்கிறார்!!

என்று கேலி பேசுகிறான் - கேட்போர் துடிதுடிக்க - பூவை அந்தப் பொன்னாடையைக் கிழித்தெறிய, குடும்பம் வாழ வேண்டுமே என்ற பொறுப்புக்காக, மாற்றானை அண்டிப் பிழைக்கும் நிலைக்குச் சென்ற தந்தை, மாரடைத்து மாண்டுப்போக!!

விடுதலை வரலாறுகளையும் படித்துவிட்டு, திராவிட மாவது தனிநாடாவது என்று பேச, தம்பி! நெஞ்சழுத்தம் மிக மிக அதிகம் வேண்டும் - தோல் மிகமிகத் தடித்திருக்கவேண்டும் - அறிவு அடியோடு அழிந்துபோயிருக்கவேண்டும்.

பார்மெச்ச வாழ்ந்ததற்கு வரலாற்றுச்சான்று இருக்கிறது! வகைகெட்ட நிலையில் உள்ளோம், இதற்குச் சான்று தேடத் தேவையில்லை. இந்த இரு காரணங்களைவிட, விடுதலை தேவை என்பதற்குக் காரணம் தேடவும் வேண்டுமோ! தன்னாட்சி இல்லாததால்தானே, சிங்களச் சீமையிலே நம்மவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவது குறித்து, கண்ணீர் வடிக்கவும் கை பிசைந்துகொள்ளவும் மட்டுமே, நம்மால் முடிகிறது. அமைச்சர்கள் என்போர் ஒரு அறிக்கைமூலம் கூடக் கண்டனம் தெரிவிக்க வழி இல்லை. நமக்குத் துளியும் சம்பந்தமற்றவர்களின் பிடியாக இந்தியப் பேரரசு இருப்பதால் தானே, சிங்களத்திலே கொடுமை புரியும் திருமதி. பண்டார நாயகாவைக் கண்டிக்கவேண்டிய பண்டித நேரு, மாம்பழம் அனுப்பி வைக்கிறார், அம்மையார் தின்று சுவை கண்டு மகிழ! இவர் மாம்பழம் அனுப்புகிறார்; அம்மையார் மங்குஸ்தான் பழம் அனுப்புகிறார்கள்! சிங்களம் சென்று செக்குமாடென உழைக்கும் நம்மவர்களோ, வெறியரால் தாக்கப்படுகிறார்கள்; அவர்களின் குடிலிலே நேருவின் திருஉருவப்படம் வேறு இருக்கிறது!

இன்று எந்தச் சிங்களத்திலே இந்தக் கொடுமை இழைக்கப் படுகிறதோ, அங்கு கரிகாற்பெருவளத்தான் வெற்றிகண்டு, பிடிபட்ட சிங்களக் கைதிகளைக்கொண்டு வந்தல்லவா, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று வரலாறு தெரிவிக்கிறது. கல்லணை அமைந்த இனம் இன்று, கங்காணியின் சவுக்கடியைப் பெற்றுத் துடிக்கிறது. விடுதலை ஏன் வேண்டும்? இப்போது என்ன குறை? என்று கேட்கச் சிலர் உளர்; அவர்கள் பெரிய இடத்திலும் அமர்ந்துவிட்டுள்ளனர்.

முன்னோரே! மூதாதையரே! உம்மோடு சேர்ந்து இங்கு இருந்துவந்த, பொன்னும் மணியும், புவியாளும் திறனும், இன்னின்னவை என்று யாமறிய, இலக்கியம் ஏன் படைத்து விட்டுச் சென்றீர்கள்! கொற்றம் இழந்துழலும் எமக்கு, முன்பு, ஏற்றம் மிகுந்திட நம் இனத்தார் வாழ்ந்தார்கள் என்பதறிவிக்கும் இலக்கியம் இன்றும் இருப்பது, எமை வெட்கித் தலைகுனிந்து விம்மிடச் செய்கிறதே. வீடிழந்து மாடிழந்து விழிமட்டும் இழவாமல், எல்லாம் இருந்தபோது எழில்மாடமதை, ஓவிய மாய்த் தந்தொருவர், உன் வீடு! காண்பாய்! என்றால், மனம் என்ன பாடுபடும்! அக்கணமே, விழியேனும் போய்விட்டால், வேதனை எழாதே என்று எண்ணிடவும் தோன்றுமன்றோ, இன்று நம்மிடம் இருக்கும் இலக்கியம் பலப்பலவும், இது போன்ற நிலையையன்றோ நமக்கெல்லாம் உணர்த்துகிறது, அந்தோ! கவியொன்று பார்த்திட்டேன், ஆங்கிலமொழியதனில் நினைவிற்கு வருகிறது - நம் நிலையை அறியச்செய்யும் தன்மையது.

அணிந்து அகமகிழ
அணிகலன் தந்தாள்
அன்னை; சென்றாள்
கொடுத்தது அஃதெனில்
கொண்டு சென்றதோ
அரிதாம் விரம்! வெற்பு! அந்தோ!
மண்ணோடு மண்ணாய் ஆனது அஃதும்.
அணிகலன் விட்டுச்சென்ற அன்னை
அதனை அன்றே மண்ணுக்காக்கி
எனக்கென வீரம் விடுத்திடின், அம்ம!
ஏற்றம் பெற்றே வாழ்ந்திருப்பேனே!

இதுபோன்றன்றோ வரலாற்றிலே புதைந்துகிடக்கும், புகழொளிதரும் மணிகளை நம்மிடம் கொடுத்துவிட்டு, அஞ்சா நெஞ்சினையும் அறிவாற்றலையும், ஆன்றோர், தம்முடன் எடுத்தேகினர்.

அஞ்சா நெஞ்சுடை விடுதலை வீரர்கள், கொடுங்கோலர் களின் கொடுமை அதிகமாக அதிகமாக, கிளறிவிடப்பட்ட தழலென்றாயினர்.

"வெற்றியூர் செல்கையிலே வேதனை உமக்களிக்கும் பாவியேன் ஆகிவிட்டேன்.''

"காடும் மலைவனமும் கடக்கக் கலங்காத காதலியே! என் அரசி! பேசும்மொழிப் பொருளும், என்ன? கூறிடுவாய்.''

"நாடு மீட்டிடவே நடைபோடும் என் அன்பே! நானும் உடனிருந்து பாடுபட இயலவில்லை.''

போர்முனையே பூங்காவாய், கொண்டவளே, கோகிலமே! அருகில் நீ இருக்க, மாமலையும் கடுகாகி, மாவீரம் பெறு கின்றேன்! ஊணும் உறக்கமுமே உத்தமி! நீ மறந்து, உடனிருந்து உழல்கின்றாய், வாழ்த்துகிறேன் அரும்பேறே!

பாதை முழுவதும் கடந்து பட்டொளி வீசிடும் நம் மணிக்கொடி பறந்திடும் காட்சியினைக் காண்பதற்கு கண் உண்டு; வலிவில்லை. நின்னோடு வந்திடும் நிலையும் எனக் கில்லை! நெஞ்சமதில் வீரம் மாறவில்லை, மாறாது. ஆயின் நடந்திடவும் இயலாது, இனி என்னால், ஊர்ந்தேனும் வந்திடுவேன், உன்பாதம்பட்ட வழி. உயிரும் பிரிந்திடும் உணர்கின்றேன் இவ்வேளை.

"ஐயையோ என் செய்வேன்; ஆவி துடிக்குதடி! கை கோத்து உலவிடுவார், காதலர்கள்; இயற்கை அது. களம்நோக்கிப் பாய் கின்றோம் கலங்காமல், நாளெல்லாம் பூச்சூடி மகிழ்ந்திடவும், புதுப்புனலில் ஆடிடவும் பூவையர்க்கு விருப்பம் எழும். மாற்றாரின் கணையன்றோ மலராக நினக்களித்தேன்! கொட்டும் குருதியிலே குளித்திடவன்றோ அழைத்தேன்.''

குற்றுயிராய் இருக்கையிலும் கொள்ளை இன்பம் காணு கின்றேன், மெச்சி எனை நீங்கள் பேசுவது கேட்டு, இன்று, ஆருயிரே! இதனையும் நான் இழந்திடுவது எண்ணித்தான் இறப்பதற்கு அஞ்சுகின்றேன். எனக்காகப் பயணத்தை நிறுத்தாதீர், என் ஆணை! களம் நோக்கிச் சென்றவனைக் கண்ணீர் தடுத்தது, அந்தக் கண்ணீரைச் சொரிந்தவளோ காதகி அவன் மனைவி என்றென்னை வையம் இகழ்ந்திடும், நான் தாளேன், உம்முடனே இருக்கின்றேன், என்றெண்ணிப் புறப்படுவீர்! உள்ளத்தில் உறைபவளே! என்பீரே, மறந்தீரோ! நோய்கொண்ட உடலது தான் சாய்ந்திங்கு இருந்துவிடும், ஆவி இருக்குமிடம், அன்பே! உன் இதயம்தான்! தாவிச் சென்றிடுவிர், தடையாக எனைக் கருதி, தளராதீர், தயங்காதீர்! மாற்றாரை வீழ்த்திடுவான் மணவாளன் என்றெண்ணி, மணமேடை மலரணையாய்க் கொண்டிங்கு இருந்தபடி, வாழ் வீச்சும் வேல் வீச்சும் வல்லமையும் கண்மூடிய நிலையில் கண்டு களித்திடுவேன்; போய்வாரீர்.''

தம்பி! நாடு மீட்டிடும் கடுமையான போரில் ஈடுபட்ட மாவீரன், களம்பல செல்கிறான், காதலி உடன்வர! அவளோ வீரம் செறிந்த முத்தழகை விளக்கொளியில் கண்டல்ல, போர் முனையில் கண்டு கண்டு பெருமகிழ்ச்சி கொள்கின்றாள். ஆரணங்குக்கு வந்துற்ற நோய், அவள் உயிர் குடிக்கும்போதும், அஞ்சாமல், விடைகொடுத்து அனுப்புகிறாள்.

மாற்றாரை நோக்கி மாவீரன், பாய்ந்து சென்றபடி இருக்கிறான். அவன் காதலி உயிர் இழக்கிறாள்!! எதிரியின் தாக்குதலால் உடலில் குருதி கொட்டுகிறது; தன் இல்லக்கிழத்தி மடிந்த சேதி கேட்டு, மாவீரனின் இதயத்திலிருந்து குருதி பீறிட்டுக் கிளம்பி, கண்ணீராகிறது.

தென் அமெரிக்க நாட்டிடையே புயலெனக் கிளம்பி விடுதலைப் போர் நடத்தி, வெனிசூலாஸ், பொலீவியாபோன்ற நாடுகளை, ஸ்பெயின் நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுவித்த சைமன் பொலீவர் என்னும் மாவீரன் வரலாற்றைப் படிப்போர், துடித்தெழுவர் - அத்துணை உள்ளம் உருக்கும் நிகழ்ச்சிகள் உள்ளன.

என்றோ நடைபெற்ற நிகழ்ச்சிகள் கிடக்கட்டும், இன்று மட்டும் என்ன, வீரத்துக்கும் தியாகத்துக்கும் பஞ்சமா? பல்வேறு நாடுகளிலே காண்கிறோம் விடுதலை வீரர்கள் வெற்றிபெற, இரத்தம் கொட்டுவதை.

நமது நாட்களிலே நடைபெற்றுக்கொண்டிக்கும் அல்ஜீரியா விடுதலைப் போரிலே இதுவரை பத்து இலட்சம் பேர் உயிரிழந்தவர் என்று அல்ஜீரிய சுதந்தர சர்க்கார் அதிபர் அப்பாஸ் கூறுகிறார். இல்லை! இல்லை!! இதுவரை 1,20,000 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று பிரான்சு அரசு கூறுகிறது.

பிரான்சு அரசு கூறும் கணக்குப்படியே பார்த்தாலும் பயங்கரம் தெரிகிறதல்லவா? இரத்தம் ஆறாக ஓடுகிறது என்பது புரிகிறதல்லவா?

படையுடன் படை மோதிக்கொள்கிறது, அல்ஜீரியாவில்!

நாம், திராவிட நாடு பெற, அறநெறி, உள்ளத்தை மாற்றுவது, உலகினர் நமது உரிமையை உணரும்படி செய்வது என்று திட்டமிட்டுப் பணியாற்றுகிறோம்.

வீர வரலாறு படித்தவர்கள், எழுச்சியைப் பெற்றவர்கள், நாடு மீட்டிட இன்னுயிர் ஈந்திடவேண்டிய வேளை எப்போது கிடைக்கும் - நமது பங்கினை எப்போது செலுத்துவது என்றே எண்ணுவர்.

இங்கோ, திராவிடர் எனும் இனம் குறித்தும் திராவிட நாடு எனும் அமைப்புப்பற்றியுமே விளக்கம் அளித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கூட்டத்திலேயே, இருக்கிறோம். இந்த கூட்டத் திலேயே விளக்கம் பெற மறுப்போர் இருந்தால்கூடப் பரவாயில்லை, விளக்கம் பெற்றோரே மறந்துவிடும் கண்றாவிக் காட்சியைப் பார்க்கிறோம். விளக்கம் அளித்துக்கொண்டு வந்தவர்களே, விளக்கம் இல்லையே என்று பேசிடும் விந்தையும் நடக்கிறது.

திராவிட நாட்டின் எல்லை என்ன? என்று கேட்பவர் களுக்கு, நான் செல்ல ஒரு மோட்டாரும் நாலு லாரி நிறையக் கல்லும் இருந்தால், ஒரு சுற்றுச் சுற்றி எல்லையைக் குறித்துக் காட்டுவேன் என்று பதில் அறைந்தது எப்படி வீரமாக, விவேக மாக, அரசியலாகக் கொள்ளப்பட்டதோ, அதுபோலவே, அதே அறிவினர், எல்லையாவது மண்ணாவது! ஏது திராவிடம்? எதற்குத் திராவிடம்? என்று குரலெழுப்பி, இதிலே, உள்ள வீரத்தை வெண்பா ஆக்கு, ஆற்றலை அகவலாக்கு என்று பேசுகிறார்கள்.

அகில உலகிலேயே ஏற்பட்டுவிட்ட அறிவுப் பஞ்சத்தைப் போக்கத் தம்மை அர்ப்பணித்துக்கொள்பவர்கள்போன்ற போக்கில், விழியையும் மொழியையும் ஆக்கிக்கொண்டு, திராவிடம் எப்படி வாழும், பிரிந்தால் என்று கேட்டு, புதியதோர், சிக்கல் நிரம்பிய பிரச்சினையை உண்டாக்கிவிட்டதாக எண்ணி மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் இந்தப் பேச்சைக் கேட்டவர்கள் "வடவரின் அடிவருடிகளன்றி, மற்ற எவரும், திராவிடம் பிரிந்தால் வாழுமா என்று கேட்கமாட்டார்கள். அடிவருடிகளை எவரும் மதிக்கவும் மாட்டார்கள்! என்று பேசியதைக் கேட்டவர்கள்தான்!! இளநீர் இருக்கும் தென்னை யிலே கள்ளும் பெறுகிறார்கள். முத்து உறங்கும் கடலிலேயே நத்தை உலவக் காண்கிறோம். சிலருடய மனம் இதுபோல, எதையும் கொள்கிறது; நாக்கு எப்படியும் பேசுகிறது என்பதன்றி, வேறென்ன!!'

இந்தியாவில் தென்னாட்டு மாநிலங்களுக்கு எதிராக வட நாட்டு மாநிலங்கள் ஒன்று திரண்டு, தென்னாட்டின் நலன் களுக்கு விரோதமாக அவர்கள்மீது குதிரை ஏற ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்கிறது என்பது யூகிக்கக்கூடியதே!

இப்படி வடநாடு தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்து மானால் தென்னாடு - வடநாட்டின்மீது போர் தொடுப்பது - இந்தியாவில் ஒரு உள் நாட்டுப்போர் மூளுவது இயற்கையே!

என்று கூறியவர், டாக்டர் அம்பேத்கார். வடநாடு தென்னாடு என்று பேசுவதே அறிவீனம் என்று பேசும் புத்திக் கூர்மையுள்ள புதிய போக்கினர், டாக்டர் அம்பேத்காரையும் ஒரு பிடி பிடிப்பார்களோ என்னவோ! என்ன தெரியும் அவருக்கு! அவர் ஒரு வக்கீல்! வாதாடுவார்! அதுவே தவிர, எது நடக்கக்கூடியது, எது நடைபெற முடியாது என்று யூகித்தறியும் அறிவாற்றல் அவருக்கு ஏது? என்றும் பேசுவார்களோ, என்னவோ, யார் கண்டார்கள்.

நமக்குத் தம்பி! டாக்டர் அம்பேத்கார் போன்றவர்களுக்குக் கூட, அவ்வளவாக அறிவாற்றல் கிடையாது. என்று கூறும் "நோய்' கிடையாது!!

அவர்போன்றார்கள் வரலாற்று ஆசிரியர்கள், கூறியுள்ள கருத்துகள் நமக்கு நம் பாதையில் ஒளி விளக்குகளாக உள்ளன. அந்தப் பாதையில், எழுச்சிமிக்கவர்கள் ஏறுநடைபோடுகிறார்கள்!!

நாகர்நாடு ஒரு தனிச் சுதந்திர நாடாகும். அது இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட ஒரு மாநிலமாக இருப்பதை நாகர்கள் விரும்பவில்லை. "நாங்கள் இந்தியாவினின்றும் முற்றிலும் வேறுபட்ட தனித்தேசிய இனமாகவே தொடர்ந்து இருக்க விரும்புகிறோம். இதுவே எங்கள் அடிப்படைக் கோரிக்கை.''

"இந்தியக் குடியுரிமையை ஏற்க நாங்கள் மறுப்பதன் காரணமாக, இந்தியக் குடியரசுடன் எங்களைப் பலவந்தமாகப் பிணைக்கும் நோக்குடன், இந்திய ஆயுதப் படையினர் கடந்த சில ஆண்டுகளாகவே எங்கள்மீது ஏவிவிடப்படுகின்றனர். அந்த ஆயுதப்படையினர் எங்கள் நாட்டு ஆண் - பெண் - சிறார் ஆகிய அனைவரையும் எதிர்த்துக் கொடூரச் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.''

"எங்கள் நாட்டில் எந்த ஒரு இந்தியனுக்கும் ஒரு அங்குல நிலமும் சொந்தம் கிடையாது.''

"இந்தியாவுக்கும் நாகநாட்டுக்குமிடையே எந்தவிதச் சிக்கலான பிணக்குக்கும் இடமில்லை. சரித்திரம் சம்பந்தப்பட்ட ஆண்டான் - அடிமை முறைக்கான கேள்வியே எழவில்லை. இரு நாடுகளுக்குமிடையே பொதுவானதொரு மரபு கிடையாது; கலாச்சாரத்தில்கூடப் பொதுமை கிடையாது.''

அமெரிக்க ஏடான "நியூயார்க் டைம்ஸ்' இதழில் பிசோ எழுதியுள்ள இந்தக் கடிதம் வெளியாகியுள்ளது.

அவர் தம் கடிதத்தில், தம்மை, "நாகர்களின் தேசிய கவுன்சில் தலைவர்' என்று தெரிவித்து, நாகர்களுக்கான தனிச் சுதந்திர நாடு கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் பிசோ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

"நாகர் வாழும் பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக எப்பொழுதும் இருந்ததுமில்லை; இருக்கவுமில்லை. நாங்கள் புதிதான ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதற்காகப் போராட வில்லை. தொன்றுதொட்டு இருந்து வரும் மனிதகுல வரலாற்றின் அடிப்படையில், எங்கள் தேசிய உரிமையைத் தொடர்ந்து நிலை நாட்டிக்கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.''

"நாகர்கள் தூய்மையான ஜனநாயகத்தை அனுபவித்து வருகிறார்கள். எங்கள் நாட்டில் வீடோ நிலமோ இல்லாத குடும்பத்தை எங்கும் காண முடியாது. அது சாதிகளற்ற சமுதாயத்தைக்கொண்ட ஒரு நாடாகும். அங்குள்ள மக்கள், பாதுகாப்புக்காகப் போலீஸ் உதவியையோ, இராணுவ உதவியையோ நாடுவதில்லை.''

"படித்த நாகர்களில் 90 சதவிகிதத்தினர் கிறிஸ்துவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் நல்ல கல்வியறிவைப் பெற்றிருக்கின்றனர்.''

நாகர் நாடுபற்றி, அந்நாட்டுத் தலைவன், வழிகாட்டி கூறிடும் இக்கருத்தைப் பார்க்கிறோம், நமக்கும் நாட்டுப்பற்றுச் சுரக்கிறது.

யார் அந்தச் பிசோ? என்று கேட்டுத் தமது அறிவின் மேம்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக்கொள்வோர் தாராள மாகச் செய்யட்டும், நமக்கு நாகர் நாட்டுத் தலைவன் பிசோ போன்றவர்களின் கருத்துரை, பாடம் அளிக்கிறது. நாம் மேற்கொண்டுள்ள பாதை, சரியானதுதான் என்று உணர்த்து கிறது. அது போதும் நமக்கு, அந்த உணர்ச்சி கொந்தளிக்கும் உள்ளத்தினர் கூடிய பேரவைதான் திருப்பரங்குன்றம் மாநாடு.

திருப்பரங்குன்றத்தில் கூடீனீர்களே, அப்படியானால் சைவத்தை ஆதரிப்பதாகத்தானே பொருள்? - என்று கேள்வி எழுப்பி, மடக்கிவிட்டேன்! மடக்கிவிட்டேன்! என்று கூவி மகிழட்டும்; நமக்கு அவர்களின் போக்குக்கான காரணம் புரிகிறது; எனவே கவலை எழவில்லை.

நாடு மீட்டிடும் நற்பணியில் ஈடுபட்டாகவேண்டும் என்பதனையும், அப்பணி புரிகிறீர்கள் என்பதனாலேயே, எமது ஆதரவை இந்த வகையிலே தருகிறோம் என்பதனையும், நாம் உணரத்தக்க விதமாக மாநாடு குன்றின்மேலிட்ட விளக்கென அறிவொளி பரப்பி நின்றது. அந்த ஒளி பட்டதால் நமது உள்ள மெலாம் உவகைப் பொன்னோவியமாயிற்று! என்னகம் - தென்னகம் - இதுவே பொன்னகம் என்று உணர்ச்சியுடன் முழக்கினர். விழிப்புற்ற மக்களின் வீர உணர்ச்சி வீண்போனதாக வரலாறு கூறவில்லை, வீணர்களே அந்த உணர்ச்சியை மதிக்க மறுப்பர்!

அஞ்சிக் கிடந்தனர் ஆப்பிரிக்க நாட்டு நீக்ரோக்கள் - ஆளப்பிறந்தவர்கள் ஆங்கிலர் - அவர்களின் அறிவாற்றலும் அழிக்கும் சக்தியும் மிகப்பெரிது - அதை எதிர்த்து நிற்க முடியாது - ஆண்டவன் நம்மை அடிமைகளாக இருக்கவே படைத்துவிட்டான் என்று எண்ணினர். கொடுமை பல கண்டனர்; பலர் கொட்டினர் குருதி; அந்தக் குருதியினைக் கண்டபின்னர், மற்றையோர் உறுதிபெற்றனர்; உறுதி பெற்றதும், நிமிர்ந்து நின்றனர்; நின்று காணும்போதுதான் தெரிந்தது, தம்மை அடக்கி ஆளும் வெள்ளையர், தம் அளவு பேருருவம் கூடப் பெற்றவர்கள் அல்ல; துப்பாக்கிமீது நின்றுகொண்டு, மெத்த உயரமானவர்கள் போலத் தம்மைக் காட்டிக்கொள்கிறார்கள் என்ற உண்மை. இதுகண்டு ஆப்பிரிக்க மக்கள் இடிஇடி எனச் சிரித்தனர்; அந்தச் சிரிப்பொலி சிறைகளைத் தூளாக்கிற்று; தளைகளை நொறுக்கிற்று; விடுதலைக்கொடி இன்று பல நாடுகளிலே பறக்கிறது!!

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா! என்று குன்றம் அழைத்தது; கூடினர் மறக்குலத்தோர்! ஒளி கண்டு ஓடின காடுதனில் பதுங்கி வாழும் மிருகங்கள்போலுள்ள எதிர்ப் புணர்ச்சிகள்.

உணவு, உறைவிடம், ஊதியம் தருவதாக நான் கூறவில்லை.

பசி, தாகம், களம் நடத்தல், போர், மரணம் - இவையே நான் அளிக்க உள்ளவை. உதட்டளவில் நாட்டுப்பற்றுக் கொண்டோன் என்னைப் பின்தொடரவேண்டாம். உள்ளத்தில் நாட்டுப்பற்று உள்ளவர் என்னுடன் வருக!

இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் காரிபால்டி கூறினான் இம்மொழி. அம்மொழி கேட்டுத் திரண்டது ஓர் அணிவகுப்பு. இன்று திருவிடம் ஒரு காரிபால்டியைக் கொண்டில்லை என்று கூறட்டும் - தவறில்லை - ஆனால் அம்மாவீரன் ஆணை கேட்டு ஆற்றலுடன் போரிட்டு வெற்றிபெற்ற வீரர்போன்றோர், இங்கு இல்லை என்று மட்டும் கூறாதீர். திருப்பரங்குன்றம் மாநாடு கண்டவர்கள், அங்ஙனம் கூறத் துணியார். திராவிட நாட்டைத் திராவிடர்க்காக்கும் தீரப்படையொன்று உண்டு, என்பதை திருப்பரங்குன்றம் மாநாடு காட்டிற்று. எங்கிருந்து கிடைத்தது இந்த எழுச்சி நிலை! தம்பி! எல்லாம் உன் வீரத்தின் விளைவு! எழுச்சியின் பலன்! உழைப்பினில் விளைந்த உயர்வு! வாழ்த்து கிறேன் உன்னை! வளர்க நின் ஆர்வம்! வெல்க திராவிடம்.

அண்ணன்,

6-8-1961