அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
2

காட்டுத்தேவதைகளுக்குப் பூஜை போடும் கொள்ளைக் காரக் கூட்டம்போலல்லவா, மத்தியப் பிரதேசத்துக் கொள்ளைக் காரன் நடந்துகொண்டிருக்கிறான்!

இவனைத் தள்ளுங்கள்! தலைமறவாகக் கிடப்பவன் சட்டத்தை மதிக்காதவன்! போலீசுக்குத் தப்பித்திரியும் பேர்வழி! பிடிபட்டால், சுட்டுத்தள்ளுவார்கள். சமுதாயம் இவனைக் காறித் துப்பும்.

முந்திராவைத் தெரியுமல்லவா? பல நாட்கள், பத்திரிகை களிலே, அவனுடைய பெயர் அடிபட்டபடி இருந்ததே! படம்கூட வெளியிட்டார்களே, நினைவு இருக்கிறதல்லவா?

உருட்டுவிழி இல்லை; முறுக்கு மீசை இல்லை! கையிலே கட்டாரி இல்லை, கட்டுடல்கூட இல்லை! "நவநாகரிக'த் தோற்றம்! பார்வையிலே பாகு கலந்தளிக்கக்கூட முடிகிறது அவனால், சமுதாயத்திலே, அவனுக்குப் பளபளப்பான இடம்! மாளிகை வாசி! சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவன்!

ஆனால், சட்டம் எட்டிப் பிடிக்க முடியாத விதத்தில், ஏமாற்று வித்தைகள் பல நடத்தி, கோடிகோடியாகப் பொருள் ஈட்டினான்.

துரைத்தனத்தின் கண்களிலேயே மண்தூவிக் கோடி ரூபாய் பறித்துக்கொண்டான்! எனினும், அவனை அயோக்யன் என்றல்ல, சீமான் என்று அழைத்தனர். அக்கிரமக்காரன் என்று அல்ல, "அதிர்ஷ்டசாலி' என்று அழைத்தனர்! அவன் வணிகக் கோமான்! வியாபார தந்திரம் தெரிந்த நிபுணன்! - என்றெல்லாம் பாராட்டினர். அவனோ, வழிப்பறி நடத்திய கொள்ளைக் காரனைவிடக் கொடுமைகளைக் கூசாமல் செய்துதான் "கோடீஸ்வரன்' ஆனான்.

கத்தி காட்டினான் வழிப்பறிக்காரன் - இவன் புன்னகை காட்டினான், பொருள் பறிக்க!

காடு, வழிப்பறிக்காரனிடம் உறைவிடம், தொழிலிடம்! இவனுக்கோ நகரம் உறைவிடம்! அங்காடி தொழிலிடம்! பகற் கொள்ளைக்காரன் இவன் - பதறப்பதற வெட்டினானில்லை, பசப்பிப் பசப்பி ஏய்த்தான்!

இப்படிப்பட்ட பகற்கொள்ளைக்காரன், காங்கிரசின் தேர்தல் நிதிக்குப் பணம் கொடுத்திருக்கிறான்!!

பெற்றுக்கொண்டனர், காங்கிரஸ் தலைவர்கள் - கூசாமல், குமுறாமல்!!

முந்திரா ஊழல்பற்றிய விசாரணை நடந்தபோது, இந்த அக்கிரமம் அம்பலமாயிற்று!!

காங்கிரசின் தேர்தல் நிதிக்குப் பெரும் பொருள் கொடுத்து, ஆளவந்தார்களின் அன்புக்கு உரியவனாகிவிட்டதனாலேயே, முந்திரா, அக்கிரமச் செயலைத் துணிந்து செய்திடமுடிந்தது என்று ஆய்ந்தறிந்த அறிவாளர் அறிந்தனர்!! வழிப்பறி நடத்தியோ, மோசடி செய்தோ, இருட்டுச் சந்தை நடத்தியோ, இலாப வேட்டையாடியோ, பொருள் ஈட்டி னாலும், எமக்கு அதிலே என்ன பங்கு? என்று கேட்டுப் பெற்றிடும் போக்கிலே, நாட்டுக்குரியார் யாமே! - என்று நாப்பறை கொட்டும் காங்கிரஸ் நாயகர்கள் நடந்துகொண்டனர். நாடு அறியும் நல்லோர் மனம் பதறிற்று; நாமும் அறிவோம்.

"சட்டப்படி, குற்றமற்றதாக இருக்கலாம் - ஆனால், பெரிய தொழிலதிபர்களிடம் கைநீட்டிப் பெரும் பொருளை ஆளும் கட்சி பெறுவது, அறம் ஆகாது! அத்தகைய முறைகேடு நேரிடுவது, குடியாட்சியின் மாண்பினையே குலைத்துவிடும்'' என்று நீதிமன்றத்தினரே எடுத்துக் காட்டினர், டாட்டா எனும் வட நாட்டுக் கோடீஸ்வரரிடமிருந்து பெரும் தொகையைக் காங்கிரஸ், தேர்தல் நிதியாகப் பெற்றது குறித்து வழக்கொன்று தொடுக்கப்பட்டபோது.

"காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சிப்பொறுப்பு இருந்தால் மட்டுமே, எமது தனி உடைமைக்குப் பாதுகாப்பும், இலாபம் ஈட்டிக் குவிக்க நல்வாய்ப்பும் இருக்கும்; மேலும் காங்கிரசாட்சி அமைந்தால்தான் எஃகுத் தொழில் தேசிய மயமாகப்படாம லிருக்கும்; எனவே, எங்கள் தனிஉடைமையின் தற்பாதுகாப்புக் காகக் காங்கிரசாட்சி தொடர்ந்து இருக்கச் செய்வது, எமது கடமையாகிறது'' என்ற கருத்துப்பட, வழக்கு மன்றத்திலே, டாட்டா வணிகக் கோட்டத்தினர் எடுத்துரைத்தனர்.

தம்பி! காட்டில் மறைந்து திரியும் கொள்ளைக்காரனும், சட்டத்தை ஏய்த்துச் சுரண்டும் பகற்கொள்ளைக்காரனும், சர்க்காரிடம் சலுகைகள் பெற்றுக் கொழுத்துக் கிடக்கும் கோடீஸ்வரனும், கொட்டிக் கொடுக்கும், பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கிறோம் பொதுமக்கள் ஆதரவால்! - என்று பேசுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

ஒரிசாவில், ஒரு திங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் நடத்திய தில்லுமுல்லுகளைப் பல தலைவர்கள் எடுத்துக் காட்டினர் - படித்திடும் எவரும் பதறாமல் இருக்க முடியாது.

பத்துப் பதினைந்தே ஆண்டுகளில், ஒரிசா மாநிலத்திலேயே மிகப் பெரிய முதலாளியாகத் தொழிலதிபராக ஓங்கி வளர்ந்து விட்டுள்ள பட்நாயக் என்பவர் பணத்தைப் பல வழிகளிலும் ஈட்டி, வாரி இறைத்து, வெற்றியைத் தட்டிப் பறித்துக் கொண்டார். பொது மக்களின் நல்லாதரவை அல்ல; பெரும் பொருள் படைத்தோர் துணிந்து இறங்கினால், ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கித் தமக்கு "எடுபிடி'யாக்கிக்கொள்ள முடியும், என்பதைத்தான் ஒரிசாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"சட்டம் ஒரு கழுதை - பயந்து பின்னால் செல்பவர்களைக் காலால் உதைக்கும்; துணிந்து முன்புறம் சென்றாலோ, பயந்து ஓடும்'' என்று காலஞ்சென்ற கல்கி கூறினார்.

ஒரிசாத் தேர்தலில் சட்டம் குறுக்கிடுமோ என்ற அச்சமற்று, பட்நாயக் நடந்துகொண்டார்; வெற்றி கிட்டிற்று.

இந்தியத் துரைத்தனத்தின் பாதுகாப்புத்துறைக்கு அமைச்சர் கிருஷ்ணமேனன். இவர் நேருவின் நண்பர்; பட்நாயக்குக்கு மிகவும் வேண்டியவர்.

பாதுகாப்புத்துறைக்கு ஜீப் மோட்டார்கள் தேவை; இதற்கான "ஒப்பந்தம்' பட்நாயக்கின் யோசனைப்படி பம்பாயில் உள்ள மகேந்திரா கம்பெனிக்குத் தரப்பட்டதாம்! அந்த மகேந்திரா கம்பெனியினர், பாதுகாப்புத் துறைக்காகத் தயாரிக்கப் பட்டிருந்த ஜீப் மோட்டார்களில் நூறு மோட்டார்களை, இலவசமாக, ஒரிசா தேர்தலுக்குக் கொடுத்தனராம். ஒரிசாவில், மூலை முடுக்கெல்லாம், ஓடிக்கொண்டிருந்த, புத்தம் புதிய ஜீப் மோட்டார்களைக் கண்டு, பொதுமக்களே மலைத்துப் போயினர்; மாற்றுக் கட்சிகள் மருண்டு போயின! தேர்தல் முடிந்ததும், ஜீப் மோட்டார்கள், திரும்பவும் கம்பெனிக்கு அனுப்பப்பட்டுப் பழுதுபார்க்கப்பட்டு, மெருகு ஏற்றப்பட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்படுமாம்!!

சட்டப்படி பார்த்தால், மிகப் பெரிய குற்றம்.

அறமுறைப்படி பார்த்தால், சகிக்க முடியாத அக்கிரமம்.

ஆயினும், துணிந்து செய்தனர்; சட்டம் வாய் பொத்திக் கிடந்தது; அறம், மாண்டுதான் ஆண்டு பதினான்கு ஆகி விட்டனவே! பாவம், அறம் என்ன செய்ய முடியும்!!

ஒரிசாவில் நடைபெற்றது, ஒத்திகை! பட்நாயக் முறை பொதுத் தேர்தலின்போது எல்லா மாநிலங்களிலும் புகுத்தப் படும் - என்று வெளிப்படையாகவே சில காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். அவர்களைவிட "ஆபத்தானவர்கள்' அந்த யோசனையை, உள்ளத்திலே மறைத்து வைத்துக்கொண்டு, உதட்டிலிருந்து ஜனநாயகத் தேன் துளியைச் சொட்ட விடுபவர்கள்!!

கோர்வாலா என்பவர், நிர்வாகத்துறை நிபுணர். அவருக்குக் காங்கிரஸ் கட்சியிடம் மனமாச்சரியம் ஏற்பட எந்தக் காரணமும் இல்லை - எதையும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த எரிச்சல்காரர் அல்ல; எதிர்க்கட்சி நடத்திடுபவருமல்ல. துரைத்தனம் தூய்மையாக நடத்தப்படாவிட்டால், பொது மக்களின் வாழ்வு குலையும் என்ற எண்ணம் கொண்டவர்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டும் போக்கைக் கோர்வாலா மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மக்களாட்சி முறைப்படி நடத்தப்படும் தேர்தல் பணச் செலவின்றி நடைபெறாதுதான்; பெரும் அளவு பணம் தேவைப் படத்தான் செய்யும்; ஆனால், அந்தப் பணம், எந்த முறையில், எவரெவரிடம் திரட்டப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான், நேர்மை நிலைக்குமா என்பது இருக்கிறது. இலட்சக்கணக்கிலும், பல்லாயிரக் கணக்கிலும், பெரிய புள்ளிகளிடம், காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டுகிறது. அந்த விதமாகத் தேர்தல் நிதி திரட்டினால், பிறகு அந்தப் பெரிய புள்ளிகளைப் பாதிக்கத்தக்க திட்டங்களை, எப்படி காங்கிரசாட்சி மேற்கொள்ள முடியும்? சமதர்மம்பற்றி இனிக்க இனிக்கப் பேசலாமே தவிர, செயல்பட முடியுமா? - என்று கோர்வாலா, கேட்கிறார். பதில் உண்டா? இல்லை!!

அசோக் மேத்தா கூறினார், பம்பாய் அமைச்சராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது, பெரிய தொழிலதிபர்களை நயத்தாலும் பயத்தாலும் மயக்கியும் மிரட்டியும் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டினார் என்று.

பெரிய தொழிலதிபர்கள் எவரும் பணம் தந்ததில்லை என்றா மொரார்ஜி தேசாய், பதிலளித்தார்? இல்லை! மிரட்ட வில்லை! மயக்கவில்லை! தாமாக முன்வந்து, காங்கிரஸ் மீது உள்ள பக்தியினால் பணம் கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்!

புத்திக்கூர்மை இருக்கிறது பதிலில், ஆனால், இதயசுத்தி இருக்கிறதா?

சில நாடகங்களில் காண்கிறோமல்லவா, கூரிய கட்டாரியை முதுகுப்புறம் அழுத்திக்கொண்டே, இன்று முதல் படைத்தலைவர் இட்டதுதான் சட்டம்! யோகாப்பியாசத்தில் நான் ஈடுபடப்போவதால், இன்றுமுதல், அரச அலுவலை, என் அன்புக்குரிய படைத்தலைவர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிடுகிறேன் - என்ற பிரகடனத்தை மன்னனைக் கொண்டே பிரபுக்களுக்குப் படித்துக் காட்டச் செய்யும் படைத் தலைவனை!! அதுபோல, அதிகாரபலம், அதனால் மூட்டக் கூடிய அச்சம், எழச்செய்யக்கூடிய ஆசை, இவைகளைக் காட்டிக் காங்கிரஸ் அமைச்சர்கள், கனதனவான்களை, காங்கிரஸ் பக்தர்கள் என்று அறிவிக்கச் செய்கிறார்கள். இது நாடறிந்த உண்மை!! வேறொன்று; பணம் அதிகம் இல்லாவிட்டாலும், அதை ஈடுசெய்யத்தக்க விதமான தந்திர புத்தி படைத்த சிலர், சீமான்களாகிக்கொண்டிருக்கும் நிலையிலுள்ளவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் திருப்பார்வை நமது பக்கம் விழ வைக்கத் தந்திர முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.

தம்பி! இது நடைபெற்ற ஒரு சம்பவம்! ஊரையும் பேரையும் மட்டும் கேட்காதே.

"அவருக்கு, நமது கழகத்தின்மீது மிகுந்த பற்றுதல்.''

"அவருக்கா? சிவப்பழம் என்கிறார்கள். நம்மை நாத்திகர் என்று தூற்றுகிறார் என்கிறார்கள்.''

"வெளியே அப்படித்தான் தெரிவார்; பேசுவார்; ஆனால், உள்ளூர அவர், முழுக்க முழுக்க நம்மவர்.''

"என்னவோ அப்பா! என்னால் நம்பமுடியவில்லை!''

"யாருமேதான் நம்பமாட்டார்கள். ஆனால் நான் சொல்வது உண்மை என்பதை, நீங்களே பார்க்கத்தானே போகிறீர்கள் - இன்று. கூட்டம் முடிந்ததும், விருந்து அவர்வீட்டிலேதான்!!''

"அவருடைய வீட்டிலா? ஏனப்பா, அப்படி ஏற்பாடு செய்கிறாய்? நமது கட்சியில் உள்ளவரல்லவே, அவர்!''

"நம்ம வீட்டிலேதான் விருந்து, என் கண்டிப்பான உத்தரவு - என்று கூறிவிட்டாரே.''

"அவர் யாரப்பா, நமக்கு உத்தரவு போட?''

"உத்தரவு என்று நான் தவறுதலாகச் சொல்லிவிட்டேன். வேண்டுகோள்!''

தம்பி! எனக்கும், ஒரு ஊரில் கூட்டம் ஏற்பாடு செய்து, என்னை அழைத்துப்போக வந்திருந்த கழகத் தோழருக்கும், நடைபெற்ற உரையாடல், மேலே குறித்திருப்பது.

கழகத் தோழர் குறிப்பிட்டவர், பெரிய புள்ளியாகிக் கொண்டுவருபவர்! அதற்கான அறிகுறிகள் இருந்தன! அலுவல்கள் அப்படி! நிலபுலம் உண்டு! தொழில்கள் பலப்பல! அவருடைய அரசியல் என்பது, மொத்தமாக ஒரு வாரத்துப் பத்திரிகையை, ஒரு புரட்டுப் புரட்டிவிட்டுப் பழைய பேப்பர்க் காரனுக்கு எடை போட்டுக் கொடுக்கும் அளவிலும் வகையிலுந்தான் இருந்தது.

அமைச்சர்கள், திறப்புவிழாக்களுக்கு வருகிறபோதெல்லாம், அடக்க ஒடுக்கத்தையும், பற்று பாசத்தையும் காட்டிக்கொள்ளும் விதமாக, மேடைக்குப் பக்கம் அமருவார்! அமைச்சரின் உரையின் அருமையை உணர்த்தக் கையொலி எழுப்புவார்! கதர்மாலை போடுவார்! கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனவே, அவருக்கு நமது கழகம் என்றால் உயிர் என்று தோழர் சொன்னபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

கூட்டம் நடைபெற்றது; அவர் மேடை அருகில் இல்லை.

மாலை போட்டார்கள் எனக்கு; அவர் பெயரால் அல்ல; அவருடைய கம்பெனியின் பெயரால்!! பொருளும் விளங்கிற்று; என் நண்பனுடைய திகைப்பும் தெரிந்தது.

விருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

வீட்டுக்கு வெளியே வரவேற்று நின்றார், பெரிய புள்ளி!

கதராடை! கட்டுக்கட்டாக விபூதி! கனிவான பார்வை - ஆனால், அதிலே ஓர்விதமான கம்பீரம் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருந்தது!!

"இவர்தான். . .'' என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர்.

"நம்ம கழகம் என்றால் உயிர்! இந்தக் கூட்டம் நடத்தக்கூட இவருடைய உதவி, நிரம்ப!'' - என்றார் மற்றோர் கழகத்தோழர்.

"அப்படியா?'' என்றேன் யான். அசை! பொருள் இல்லை!!

"அதெல்லாம் நம்பாதீர்கள். நான், காங்கிரஸ் கட்சி. கழகம் நல்லதோ கெட்டதோ, எனக்குத் தெரியாது. ஊருக்குப் பெரியவன் என்ற முறையில், நமது ஊருக்கு வருகிற "பெரிய மனிதர்களை' வரவேற்று உபசரிப்பது, என் கடமை. எங்கள் குடும்பத்தில் இது, தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. கிருபானந்தவாரியார் நம்ம வீட்டில்தான் தங்குவார்! கிட்டப்பா கூட ஒரு தடவை இங்கு வந்து தங்கி இருந்ததைப் போன வருஷம், கே. பி. சுந்தரம்மாள் இதே இடத்திலே நின்றுகொண்டுதான் சொன்னார்கள்! கம்யூனிஸ்ட் கந்தசாமியும் இங்கு வருவார்! வேறு எங்கே போவார்கள்? எங்கே வீடே ஒரு குட்டிப் பார்லிமெண்டு! என் கடையிலே கணக்கு வேலை பார்க்கிறானே கபாலி அவன், கழகம்! இன்று கூட்டத்துக்கான வேலையிலே பாதி அவன் தலையிலேதான் விழுந்தது. "என்னமோடா அப்பா! மாடுபோல உழைக்கிற ஜென்மம் நீ. இப்படி உயிரையே வைத்திருக்கிறாய் கழகத்தின்மீது. கழகம் உனக்கு என்ன வாரிக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை' என்று நான்கூடக் குத்தலாகப் பேசுவேன் - பயல் சளைக்கவேமாட்டான் - முதலில் கடமை, பிறகே உரிமை என்பான். கெட்டிக்காரன்!'' என்று பேசிக் கொண்டே போனார்.

கூட உட்கார்ந்து சாப்பிடவில்லை! அது அமைச்சர்கள் வருகிறபோது செய்வார்போலிருக்கிறது, "அமைச்சர்கள் சம்மதித்தால்!'

தம்பி! மற்ற விவரம் சலிப்பை உண்டாக்கும்; பாடம் என்ன என்பதைக் கேள். . . அவர், கழகத்தாருடன் கனிவாக இருக்கிற "சேதி' கிளம்பியதும், உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலே பேச்சு! மாவட்டம்வரை பரவிற்று! மந்திரிகளின் காதுக்கே சென்றதாம்! விளைவு என்ன தெரியுமோ? அமைச்சர் அந்த ஊருக்கு வந்த போது, பக்கத்திலே இவர்!! ஆமாம்! காங்கிரசுக்குத் "தூண்' ஆகிவிட்டார்! தேர்தலுக்கும் தயாராம்!!

இப்படிப்பட்ட தந்திர முறை தெரிந்த செல்வவான்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!! எவரையும் காங்கிரஸ் கட்சி, பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை!!

தஞ்சைத் தரணியில் நடைபெற்ற "சம்பவம்' ஒன்று கூறுகிறேன், தம்பி! இன்றைய காங்கிரஸ் முகாமில் உள்ளவர் களின் இயல்பு விளங்கிவிடும்.

கள்ளுக்கடை மறியல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். தூய கதருடையும் அதனினும் தூய்மை யான இதயமும்கொண்ட தொண்டர்கள், கள்ளுக்கடை மறியல் செய்கிறார்கள்.

குடிகாரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள்.

கடைக்காரனிடம் மன்றாடுகிறார்கள்.

ஊரெங்கும் ஒரே பரபரப்பு!

"யார் பெத்த பிள்ளைகளோ பாவம், இப்படிப் படாத பாடு படுகிறார்கள், பாழாய்ப்போன குடியை ஒழிக்க'' என்று மூதாட்டி களெல்லாம் கூறி வாழ்த்தினர்.

"பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - ஆனால், பானையைப் பார்த்தால், விட மனம் வரமாட்டேன் என்கிறதே! நல்ல பிள்ளைகள்! நம்ம காலிலே வீழ்ந்தே கும்பிடுகிறார்கள். நல்லதுதான் சொல்கிறார்கள் - குடி, குடி கெடுக்கும், விட்டுவிடு! வீடு விளங்கும்! நாடு வாழும்! என்றெல்லாம் சொல்கிறார்கள். உருட்டி மிரட்டிப் பார்த்தால்கூட அசையமாட்டேன்கிறார்கள். பரிதாபமாகத்தான் இருக்கிறது'' என்று குடிகாரனேகூட பச்சாதாபம் காட்டுகிறான்.

அப்படிப்பட்ட நேரத்திலே, கள்ளுக்கடை நடத்தி, கனவான் ஆகிக்கொண்டுவந்த ஒருவர், கடுங்கோபம் கொண்டார்!

அவர், தம் வீட்டுப் பிள்ளை பீடி குடித்தானென்று கேள்விப்பட்டால்கூட, அலறித் துடித்து அடித்து மிரட்டி "ஆகுமாடா பயலே இந்தக் கெட்ட காரியம்? கேவலமல்லவா? பீடி பிடித்தால், மார்பு உலர்ந்து, இருமல் ஏற்பட்டு, ஈளைகட்டி ஆளையே உருக்கித் தள்ளிவிடுமே! உனக்கேன்னடா இந்தக் கெடுமதி?'' என்று கொதித்துக் கூறி இருப்பார்; கோல்கொண்டு தாக்கியிருப்பார். ஆனால், குடிகெடுக்கும் குடிமூலம் கொள்ளை அடிக்கிற காரணத்தால் குடிக்கவேண்டாம் என்று கெஞ்சுகிற மறியல் தொண்டர்கள்மீது கோபத்தைக் கக்குகிறார்! காட்டுக் கூச்சலிடுகிறார்! பேயாட்டமாடுகிறார்! குடிகாரர்களுக்குப் போலீஸ் பாதுகாப்புத் தருகிறார்.

"பயப்படாதீங்கடா! எல்லாம் பொடிப்பயலுங்க! ஏலே டே! எவனாச்சும் என் கடை வாசற்படியை மிதிச்சி கும்பிடு போட்டா, தொலைச்சிடுவேன் தொலைச்சு. குடி குடியைக் கெடுக்குமாமா? புதுசாக் கண்டுபிச்சானுக! காந்தி சொன்னாராம் காந்தி! கொண்டாங்கடா உங்க காந்தியை! கேட்கிறேன். குடிகெடுதலா! அப்படின்னா காப்பி, டீ, கொக்கோ, ஓவல் இதெல்லாம் கெடுதல் இல்லையான்னு கேட்கறேன்? சொல்லச் சொல்லு பதில்! முடியுமா? அட பாலைத்தான் எடுத்துக்கொள்ளேன். என்னவாம் அது? பசுவோட இரத்தமல்லவா? அதை மட்டும் குடிக்கலாமா குடம் குடமா?''

இவ்விதமாகவெல்லாம் பேசிக் காங்கிரஸ் தொண்டர்களை ஏசிக் கடையை இலாபகரமாக நடத்திக்கொண்டு வந்தார். காங்கிரஸ் தொண்டர்களோ துளியும் தளர்ச்சியடையவில்லை. கடை முதலாளியின் ஏவுதலால் குடியர்கள் எச்சிலைத் துப்புவார்கள்! எதிரே நின்று ஏசுவார்கள்! ஆபாசமாக நடந்து கொள்வார்கள். இவர் இடி இடியெனச் சிரிப்பார்! சபாஷ் பட்டம் கொடுப்பார்! அது மட்டுமா? அந்த வீரச் செயலுக்குப் பரிசாக ஒரு மொந்தையோ இரண்டோ இனமாகக்கூடத் தருவார்!

அப்படிப்பட்ட அறம் அறிந்த நாட்டுப்பற்று மிகுந்த நல்லவர்!!

இதனாலெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் அடங்காதது கண்டு வெகுண்டார். மூளை வேகமாக வேலை செய்தது; ஒரு திட்டம் தீட்டினார்!

ஒருவனைப் பிடித்து, உள்ளே ஊற்றி, தன் யோசனையைச் சொன்னார். அவன் எடுத்தான் சவுக்கு! ஓடினான் கள்ளுக்கடை நோக்கி ஓங்காரக் கூச்சலிட்டபடி!

கடைமுன்னால் மறியல் நடத்திக்கொண்டிருந்தனர் காங்கிரஸ் தொண்டர்கள் - அவர்கள்மீது வீசினான் சவுக்கு!

"சண்டாளப் பசங்களா! எனக்கா துரோகம் செய்யத் துணிந்துவிட்டிங்க! குடிகாரன் குடிகாரன்னு, நீங்க யாரைச் சொல்கிறீங்களோ, அவங்களெல்லாம், என்னோட பக்தனுங் களாச்சே! என் பக்தனுங்களுக்கு ஒரு கெடுதல் வந்தா, நான் பார்த்துகிட்டா இருப்பேன்! பார், உங்களை என்ன பாடு படுத்தறேன் என்று. படுத்துத் தூங்கும்போது, பாம்பா வந்து கடிக்கப்போறேன்! வாயிலும் மூக்கிலும் இரத்தமா வடிஞ்சி, ஐயோன்னு மாண்டுவிடப் போறிங்க! என் சாபம் பொல்லாதது! நான் யார் தெரியுமா? தெரியுமடா நான் யாருன்னு? நான் தாண்டா, மதுரை வீரன்!'' - என்று கொக்கரித்தான். ஆவேசம் வந்ததுபோலப் பாசாங்கு செய்து.

சவுக்கடிப்பட்டனர்; சாபம் பெற்றனர்; எனினும், சளைக்கவில்லை.

மதுரை வீரனாக நடக்கச் சொல்லிக் காங்கிரஸ் தொண்டர் களுக்குச் சவுக்கடி வாங்கிக்கொடுத்த தூயவர். மேலவர் இன்று தம்பி! காங்கிரஸ் எம். எல். ஏ.யாகிவிட்டார், பரிசுத்தமாகி விட்டார்!!

கள்ளுக்கடைகளை அடைத்தாகவேண்டும் என்று சட்டம் பிறக்கிற வரையிலே அதிலே அடித்துத் திரட்டவேண்டியதைத் திரட்டிக்கொண்டார்! கள்ளுக்கடை நடத்தச் சட்டம் இடம் கொடுக்காது என்று ஏற்பட்ட பிறகு கதர்க்கடையின் தயவு பெற்றால் ஆளவந்தார்களின் அன்பும் ஆதரவும் கன கச்சிதமாகக் கிடைக்கும் என்பதைக் கண்டுகொண்டார்; காங்கிரஸ்காரராகிவிட்டார்!!

அன்று அப்படி நடந்துகொண்டோமே என்ற அச்சம் அவருக்கு இல்லை; அன்று நமது கட்சியை, தொண்டர்களை இழிவுபடுத்தியவரை எப்படி மனம் ஒப்பி, நமது கட்சியிலே நடுநாயகமாக்கிக்கொள்வது என்ற வெட்கம் காங்கிரசின் தலைவர்களுக்கு இல்லை! ஏன்?

பெரியபுள்ளி! நிறையப் பணம்!! தேர்தலில் வாரி இறைப்பார்! வெற்றி கிடைக்கும் கிடைத்தால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று கொண்டாடலாம் என்று ஒரு நப்பாசை பாவம், காங்கிரசாருக்கு!!

உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாவம் வேதனை இருக்கிறது - இருந்து? அவர்களுக்குக் காங்கிரசிலே இடம் ஏது? தொண்டு செய்யவேண்டிய நிலையே இல்லாதபோது தொண்டர்கள் எதற்கு? இப்போது இளைஞர் காங்கிரசல்லவா தேவைப்படுகிறது! காங்கிரஸ் தொண்டர்களல்லவே!

தம்பி! காங்கிரசுக்கு ஒரே நோக்கம் - தேர்தலில் வெற்றி பெறுவது. அதற்காக, எவரெவர் கிடைத்தாலும், முன்பு அவர் எப்படி நடந்துகொண்டவராக இருப்பினும். பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொண்டு, அவருடைய பணத்தைக்கொண்டு ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கிக் கட்சி வெற்றி பெற்றது என்ற விருதுபெறவேண்டும் - இதுதான், நோக்கமாகி விட்டது.

அண்ணா! நாம் தேர்தலில் ஈடுபடுவதும், சொந்த இலாபம் கருதித்தானாம்! கொள்கை பரப்ப அல்லவாம்! சட்டசபையிலா! திராவிடநாடு கிடைக்கும், அடப் பைத்தியக்காரர்களா! தூக்கு மேடை ஏறி அல்லவா திராவிடநாடு பெறமுடியும்!! என்று கேட்கிறார்கள் என்று கூறுகிறாய் - தம்பி! புரிகிறது!!

கூறுபவரில் இருவகையினர் உளர்.

ஒருவகையினர், நெடுநாட்களாகக் கூறிவருபவர்கள் - பரம்பரை ஆண்டிகள் என்று வைத்துக்கொள்ளேன் - ஒரு பேச்சுக்குச் சொல்லி வைத்தேன். அவர்கள் உண்மையிலேயே "பிரபுக்கள்.' அந்தஸ்தில்!

இன்னொரு வகையினர், எரிச்சலால் பேசுபவர் - பஞ்சத் தால் ஆண்டிகள் என்று வைத்துக்கொள்ளேன்.

எவராக இருப்பினும், அவர்தம் இந்தப் பேச்சுக்கு, ஏச்சுக்கு, நான் பதில் தேடித் தொல்லைப்படவேண்டியதில்லை. அறிவுத் தெளிவும், அபாரமான துணிவும் கொண்டவர்கள், "அருளிய' பதில், ஏராளமாகக் கைவசம் இருக்கிறது!!