அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றின்மேலிட்ட விளக்கு
7

நமது உரை கேட்கும்போது அவர்தம் அகமும் முகமும் மலருகின்றன!

நமது இலட்சிய முழக்கத்தை அவர்கள் எழுப்பும்போது, நாடி முறுக்கேறுகிறது, முகம் புதிய பொலிவு பெறுகிறது! உடல் புல்லரித்துப் போகிறது!!

அவர்களுக்கு, யார் எந்த அலுவல் பார்க்கிறார்கள், அலுவலர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் என்ன என்பதல்ல பிரச்சினை! தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியத்துக்கு, சென்ற ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு எந்த அளவு ஏற்றம் கிடைத்தது! முன்பு ஆதரவு தந்தவர்களைவிட இப்போது அதிகம் பேர் ஆதரவு தருகிறார்களா? முன்பு கழகத் தோழர் களுக்கு, பொது நிர்வாக அமைப்புகளில் - பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம்வரை - கிடைத்த இடத்தைவிட அதிகமான இடம் கிடைத்திருக்கிறதா! - என்ற இதிலேதான், தம்பி! அக்கறை, முழுக்க முழுக்க!!

அவர்களுக்கு எழுச்சி இதிலேதான் கிடைக்கிறது!!

அவர்கள் நமது இலட்சியத்துக்குத் துணை நிற்கிறார்கள் - நாம் அதற்காக நன்றியறிதலுடன் நடந்துகொள்ளவேண்டு மென்றால், அவர்களின் மனம் மகிழத்தக்க, எழுச்சி கொள்ளத் தக்க முறையில் நடந்துகொள்ளவேண்டும்.

திருப்பரங்குன்றம் மாநாட்டு மேடையில் அமர்ந்தபடி திரளான மக்களைக் கண்டபோது; என் உள்ளத்திலே, இந்த எண்ணந்தான் மேலோங்கி நின்றது.

பார்க்கும்போதே, முகம் மலருகிறதே!

பேச்சைக் கேட்கும்போதே மகிழ்ச்சியால் துள்ளுகிறார்களே!

நெருக்கிக்கொண்டு வந்தாகிலும், அருகே வந்து பார்க்க வேண்டும் என்று நாம் அமர்ந்திருக்கும் இடம் நோக்கிச் சொந்தத் துடன் பந்தத்துடன் வருகிறார்களே! என்னே இவர்தம் அன்பின் திறம்! எத்துணை பற்றுக்கொண்டிருக்கிறார்கள்!! எவ்வளவு நம்பிக்கையும் நட்புணர்ச்சியும் அவர்களின் இதயத்திலே பூத்துக் குலுங்குகின்றன!! இப்படிப்பட்ட மக்களின் நம்பிக்கைக்கும் நட்புக்கும் என்றென்றும் பாத்திரமாக இருப்பதன்றி, வாழ்க்கை யிலே நாம் பெறத்தக்க பேறுதான் வேறு என்னவாக இருக்க முடியும்!

நமது கழகம் ஏற்றம் பெறுகிறது என்பதனால், இத்தனை எழுச்சியும் மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்.

நிமிர்ந்து நடக்கிறார்கள்! நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்!!

நமக்குள்ளே, கலாம் விளைகிறது, அலுவலர்களுக் கிடையே அருவருப்புணர்ச்சி ஏற்படுகிறது, மாற்றார் பயன் படுத்திக்கொள்ளத்தக்க விதமாக அந்த நிலைமை செல்கிறது என்றால், தம்பி! இலட்சக்கணக்கான அந்த மக்களுடைய இதயம் படாத பாடுபடும்!!

"முத்தே! பூங்கொத்தே! சிட்டே! சீனிகற்கண்டே!'' என்று, தான்பெற்ற குழந்தையைக் கொஞ்சிடும் தாய், ஓர்நாள், குழந்தை உருகி உடல் கருகக் கண்டால், எப்படிப் பதறுவாளோ, அது போலத் தம்பி! எழிலுடன் ஏற்றத்துடன் எங்கள் கழகம் வளருகிறது என்று பெருமிதத்துடன் பேசி மகிழும் மக்கள், என்ன இது? ஏதேதோ பேசுகிறார்களே! இப்படி இப்படி நிலையாமே? இன்னின்னாருக்குள் கசப்பாமே? - என்று பிறர் பேசக் கேட்டாலோ நம்மில் சிலரே பேசிக்கொண்டாலோ துடிதுடித்துப் போகிறார்கள்!

புதுப்புனலாடிவந்த பூவை, வெண்ணுரையன்ன வண்ணச் சேலை உடுத்திக்கொண்டு, கார்நிறக் கூந்தலில் ஏறிவிட்ட ஈரத்தைப் போக்கிக்கொள்ள, அகில் புகையிடும்போது, அகில் மணம் கூந்தலை உலர்த்துவதுடன் மணமும் ஏற்ற, அந்த நறுமணம் நுகர்ந்தபடி, நங்கை இருந்திடும் வேளையிலே, நெருப்புப்பொறி கிளம்பி, ஆடையிலே விழுந்து, அது நெருப்பாகிவிடுமானால், எப்படித் துடிதுடிப்பாள் - ஏது செய்வது என்று தெரியாமல் பதறுவாள் - ஆடையைக் களைந்திட வகையும் மறந்து அலறுவாள் - நெருப்பை அணைத்திட இயலாது பதறுவாள் என்பதைத் தம்பி! ஒருகணம் எண்ணிப்பார்!! கழகத்திடம் தமது உயிரையே வைத்திருக்கும் பல இலட்சக்கணக்கான மக்கள் நிலை புரியும்.

கழக அலுவலர்களாகப் பல்வேறு இடங்களிலே உள்ள வர்கள், தமது சொல்லும் செயலும், மேலே குறிப்பிட்டுள்ள விதமான, பொறிபோன்றதாகிவிடாமல், பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மாநாட்டிலே மேலோங்கி இருந்தது.

விவரம் அறியாத குழந்தைகளை இடுப்பிலே வைத்துக் கொண்டு, இளமாதர்கள், குழந்தைகளுக்கு, நம்மைச் சுட்டிக் காட்டி, உறவுமுறை கூறி நிற்கிறார்களே! அந்தக் குழந்தைகளும் கலகலவெனச் சிரிப்பொலி கிளப்பி, நமக்கு இனிய இசையளிக் கின்றனவே, தம்பி! இதைப் பொருளற்றது என்றா எண்ணுகிறாய்! எல்லாக் கட்சிகளிலும் இந்த இன்ப நிலை, இருக்கிறது என்றா எண்ணுகிறாய்! இல்லை, தம்பி! நிச்சயமாக இல்லை! நொந்து கிடக்கும் ஒரு இனம் கப்பிக்கொண்டிருக்கும் துன்பத்தைத் துளைத்துக்கொண்டு, சிறு அளவு ஒளி வெளிவரும்போது, பெறக் கூடிய நிலை இது. வெறும் அரசியல் கட்சியின் பல நடவடிக்கைகளிலே ஒன்று அல்ல!!

ஒரு திங்களுக்கு முன்பு, நான் எழுதிக்கொண்டிருந்தபோது, திடீரென மின்சார விளக்குகள் ஊரெங்கும் அணைந்துவிட்டன - ஒரே மையிருட்டாகிவிட்டது. ஓடிப்போய் ஒரு மெழுகுவர்த்தி கொண்டுவந்தான், எனக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி காணும் எண்ணம்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தம்பிகளிலே ஒருவன். அந்த மெழுகுவர்த்தியைக் கொளுத்தினான் - கப்பிக் கொண்டிருந்த இருளைக் கிழித்துக்கொண்டு. சின்னஞ்சிறு சிங்காரச் சுடர் எங்களை மகிழ்வித்தது. என்ன குளிர்ச்சி! எத்துணை மகிழ்ச்சி! மின்சார விளக்குக்கு உள்ள பளபளப்பு, இதற்கு நிச்சயம் இல்லை - ஆயினும், இருள் கப்பிக்கொண்ட போது, இதோ என்னால் முடிந்த அளவு நான் ஒளி தருகிறேன் என்று கூறுவதுபோலல்லவா மெழுகுவர்த்தி இருந்தது. நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சின்னஞ்சிறு திரி! அழகான ஒளி! எரிச்சலூட்டாத வெளிச்சம்!! ஒளியின் அளவு குறைவுதான் - வலிவுகூட அதிகம் இல்லை! காற்றடிக்கிறது, திரியினின்றும் கிளம்பும் ஒளி நடுக்கத் தோடு ஆடுகிறது! கையைத் திரைபோலாக்கி, அசையும் ஒளிக்குப் பாதுகாப்பளிப்பது, அணையவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. அவ்வளவு வலிவற்றது, பாவம், எனினும் தன்னால் முடிந்த அளவு இருளை ஓட்டுகிறது! அதனிடம் பேசவேண்டும்போலத் தோன்றிற்று போயேன்!!

தம்பி! மெழுகுவர்த்தி எரிவதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன் - சில விநாடிகள். சுடர் விடுகிறது, ஒளி தருகிறது. பயன் அளிக்கிறது! எவ்விதமாக என்பதைச் சொல்லவா, தம்பி! ஒளி அளித்துக்கொண்டிருப்பதால், மெழுகுவர்த்தி தன்னைத் தானே மாய்த்துக்கொள்கிறது! உருக்கிக்கொண்டே போகிறது! பார்த்துக்கொண்டிருக்கும்போதே கரைகிறது! ஒளியா தந்து கொண்டிருந்தது தம்பி! தன் உயிரையே தந்துகொண்டிருந்தது, அணு அணுவாக!! தன்னை மாய்த்துக்கொள்கிறது. இருளை விரட்ட ஒளிதர! நமக்குப் பயன் தருவதற்காகவே, தன்னைத் தந்துவிடுகிறது! ஒரு ஜாண் அளவு இருந்தது, கொளுத்தும்போது - பார்த்துக்கொண்டே இருக்கும்போது, சுட்டுவிரல் அளவுக்கு வந்துவிட்டது - உடலிலே மட்டுமல்ல, உயிரிலேயே, ஒரு பெருமளவு இழந்துவிட்டது - இருளகற்றும் தொண்டாற்றி. இன்னும் சிறிது நேரமானால் உருவமே இருக்காது - உயிரும் இருக்காது - ஒளி அளித்த மெழுகுவர்த்தி இருந்த இடம் வெற்றிடமாகிவிடும்! எனக்கென்னவோ அதனை அடியோடு மாண்டுபோகவிடக்கூடாது! என்று தோன்றிற்று. உருகி உடல் குறைந்துபோவதைக் கண்ணால் பார்க்கும்போதே மனம் ஏதேதோ எண்ணுகிறது - அது உருத்தெரியாமலாகிவிடும் கொடுமையைக் காண முடியாது - காணக்கூடாது என்று தோன்றிற்று. மின்சார விளக்குகள் திடீரென எரியலாயின - ஒளி தந்ததுபோதும், இருளகற்ற உன்னை நீ குற்றுயிராக்கிக் கொண்டதுபோதும் தியாகியே! திருவிளக்கே! உன்னை மடிய விட்டேன்! என்று கூறுவதுபோன்ற நிலை பெற்றேன். மெழுகு வர்த்தியை அணைத்து, கரத்தில் எடுத்து, வைத்துக்கொண்டேன். எனக்கு கவி பாடத் தெரியாது!!

தம்பி! தம்மைத்தாமே வருத்திக்கொண்டு, தமது வாழ்வைச் சிதைத்துக்கொண்டு, இருளகற்றி ஒளிதருவதுபோல, இனம் வாழக் கழகத்தை வலிவுள்ளதாக்க, தமது வலிவை எல்லாம் தந்து கொண்டிருக்கும், இலட்சக்கணக்கானவர்களின் இதயம் வாடாமல், நம்பிக்கை சிதையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, நம்முடையது என்ற உணர்ச்சியால், உந்தப்பட்டவனானேன், மாநாட்டிலே மக்கள் காட்டிய பேரார்வத்தைக் கண்டபோது.

விழிப்புற்ற மக்கள், உதயசூரியனைக் கண்டு, வாழ்வுக்கு வளம் தேடும் வாய்ப்புக் கிடைத்தது என்று நடந்திடும் உழவன்போல, நடை போடுகின்றனர்.

மாநாட்டில் நான் கண்ட மக்களுக்கு, ஒரு கட்சியை எப்படி ஒருவர் மனத்துக்கும் ஒருகுறையும் வராமல், முறைகள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் திருப்திதரத்தக்க விதமாக அமைத்துக்கொண்டு நடத்திச்செல்வது என்பதுபற்றிய எண்ணத்தைவிட, திராவிடம் அடிமைப்பட்டிருக்கும் கொடுமையை நாம் உணர்ந்திருக்கும் அளவுக்கு மற்றவர்கள் ஏன் இன்னமும் உணரவில்லை, திராவிடத் தனிஅரசு அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்பட்டதுபோல ஏன் மற்றவர் களுக்கு ஏற்படவில்லை - மற்றவர்களும் தாய்த்திருநாட்டின் விடுதலைக்காகத் துடித்தெழு இன்னும் எவ்வளவு பணியாற்ற வேண்டும். எம்முறையில் பணியாற்றவேண்டும் என்பதுபற்றியும்,

திராவிட நாடு திராவிடருக்கு எனும் இலட்சியத்துக்கு நாட்டு மக்களின் பேராதரவு பெருகி இருக்கிறது, வளர்ந்தபடி இருக்கிறது என்பதை உலகுக்கும் ஊராள்வோருக்கும் எடுத்துக் காட்ட இந்தப் பொதுத் தேர்தலில் எப்பாடு பட்டாகிலும் வெற்றிபெற்றாகவேண்டுமே என்பதிலேயும்

மக்களாட்சியின் பயனும் தரமும் தக்க அளவிலும் விதத்திலும் கிடைக்கவேண்டுமென்றால், கேடுபாடுகள் முறைகள் கொண்டதான நிர்வாகத்தை, அச்சமின்றி, கூச்சமின்றி, 14 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திக்கொண்டுவரும் காங்கிரஸ் கட்சிக்குத் தக்க பாடம் கற்பித்தாகவேண்டும் என்பதிலும், இருந்தது.

கட்சியை நடத்திச் செல்பவர்கள், இந்த எண்ணத்துக்கு முதலிடமும் முக்கியமான இடமும் கொடுத்து, காரியமாற்ற வேண்டும் என்ற விருப்பமே மக்களிடம் மேலோங்கி இருந்தது.

நாட்டுப் பிரிவினைபற்றியும், நாட்டுப் பிரிவினை உணர்ச்சி மெள்ளமெள்ள ஆந்திர கேரள கர்நாடகப்பகுதிகளிலும் பரவி வருகிறது என்பது குறித்தும், காங்கிரஸ் ஆட்சி என்பது முதலாளித்துவ பாசீச ஆட்சியாக மாறி வருவதாலும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கு கங்காணியாகி இருப்பதாலும் அதனை முறியடித்தாகவேண்டும் என்பது குறித்தும், பேசிய போதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும், மக்கள் காட்டிய எழுச்சி மிக்க ஆர்வம், அவர்கள் எண்ணம் எது என்பது குறித்து அழுத்தமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கட்சி நல்ல முறையில், எவருடைய மனத்துக்கும் குறையின்றி நடத்திச் செல்லப்படவேண்டும் என்பதிலே, தம்பி! எனக்கு இருப்பதுபோன்றே, மக்களுக்கும் நிரம்ப அக்கறை இருக்கிறது, ஆனால் கட்சியின் நடைமுறையில் குறை இருப்பதைக் கண்டு குமுறியோ கொதித்தோ, அதை நீக்குவதற்கு உள்ள வழிபற்றித் தாம் கொண்டுள்ள கருத்தன்றி வேறெவர் கருத்தும் மேலானதுமல்ல; தேவையானதுமல்ல என்று எண்ணிக் கொண்டும், குறைகளை வேண்டுமென்றே குவித்துவைத்துக் கொண்டு யாரோ சிலர் பயன் அடைகிறார்கள் என்று தாமாகக் கருதிக்கொண்டும், அச்சம் தயை தாட்சணியமின்றிப் பேசுவ தாகவும் எழுதுவதாகவும் கருதிக்கொண்டு, தம்மை ஒத்தவர்களை, கூட்டுத் தோழர்கள்பற்றிக் கேவலமான கருத்துகளைப் பரப்புவதும், காதைப் பிடித்திழுத்துக் கன்னத்தில் அறைந்து தலையில் குட்டினாலன்றி, மரமண்டைக்குப் புத்தி வரவே வராதே என்று எண்ணி, காட்டுப்போக்கில் நடந்துகொள்ளும் பழங்கால ஆசிரியர்கள்போல, இடித்து இடித்துச் சொன்னா லொழிய, இவர்கள் திருந்தமாட்டார்கள் என்று கருதும் போக்கை மேற்கொண்டும் நடந்துவருவது, கசப்புணர்ச்சி பரவவும் பகை உணர்ச்சியாகிவிடவும், எதிர்ப்பாளர்களுக்கு நம்மையும் அறியாமல் உடந்தையாகவும்தான் பயன்படுமேயன்றி, திருத்தம் கிடைத்திட வழிகோலாது.

அதுவரையில் எவருமே துணிந்து செய்யாத, அறுவை ஒன்றினை, ஆற்றலுள்ள ஒரு மருத்துவர் மேற்கொண்டார். வெற்றிகரமாக அறுவை நடத்தினார். மருத்துவர் பலரும் மேதை சிலரும் கூடி, அவருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.

இதுபோலத் துணிந்து இதுவரையில் எவருமே செய்ததில்லை!

எனது 40 ஆண்டு அனுபவத்தில், இப்படிப்பட்ட சிக்கலான ஒரு அறுவையை நான் கேள்விப்பட்டதே இல்லை; இவர் நடத்திக் காட்டினார்; வியப்படைகிறேன்; உலகம் பாராட்டுகிறது.

பலரும் பாராட்டினார்கள்; அற்புதமான முறையில் அறுவை நடத்திய மருத்துவரை.

அவர் நன்றி கூறும்போது "அறுவை வெற்றிகரமாக நடந்தேறியது, ஆனால் நோயாளிதான் பிழைக்கவில்லை'' என்று அறிவித்தாராம்!

திருத்தங்கள் தேவை; திருத்தப்பட்ட நிலையில் ஒரு அமைப்பு நின்று நிலைத்து வளரத்தக்க உயிரூட்டம் பாழ்படாத முறையில்.

தம்பி! எனக்குக் கழுத்தின் பின்புறத்தில், இரண்டு மூன்று ஆண்டுகளாகச் சதை சிறு அளவுக்கு உருண்டு காணப்படுகிறது; அது மெள்ள மெள்ள வளர்ந்தும் காணப்படுகிறது. அதைக் காணும் நண்பர்கள் கவலை தெரிவித்தனர். எனக்கும் அது என்னவோ ஏதோ என்ற கவலை உண்டு. டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம் அவர்கள் என் உடற்கூறு நன்கு அறிந்தவர். அவரிடம் காட்டவேண்டும், கருத்தறியவேண்டும் என்ற ஆவல் எழும்; உடனே அவர் பார்த்துவிட்டு, இது மிக ஆபத்தானது, உடனே இதை அகற்றவேண்டும். ஆறு திங்களாவது படுக்கையில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டால் கவலையும் கிலியும் அதிகமாவதுடன், வழக்கமாகச் செய்துகொண்டு வரும் பணியினைச் செய்வதற்கும் குந்தகம் ஏற்பட்டுவிடுமே என்றெண்ணிக் கொண்டே, பல திங்கள் காலத்தை ஓட்டி விட்டேன்; பிறகு ஒரு நாள் அவரிடம் சென்று காட்டினேன்.

உள்ளூர இலேசாக ஒரு சிறு கவலையும் இருந்தது - உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப்போகிறேன். கான்சர் என்கிறார்களே அந்த விதமாக ஏதாவது இருந்து தொலைக்குமோ என்ற கவலை. அது அல்ல என்றார், மனத்துக்கு ஒரு நிம்மதி வந்தது. ஆனால் "உருண்டை' கரையவில்லை; வளர்ந்தபடி இருக்கிறது. வலி இல்லை; வலி இல்லாவிட்டால் கவலை இல்லை; வலித்தால்தான் உடனே கவனிக்கப்படவேண்டும் என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் அப்படிக் கூறுவதைக் கேட்டுக் கேட்டுச் சாதாரணமாக நீர் கோத்துக்கொள்வதாலோ, நீண்ட நேரம் தூக்கமின்றி இருப்பதாலோ, நெடுந்தூரம் பயணம் செய்வதாலோ, கழுத்து நரம்புகள் வலித்தால் உடனே எனக்கு உருண்டையால் அந்த வலியோ என்ற சந்தேகம் தோன்றும். ஆனால், சாதாரணத்தைலத்தேய்ப்பு அல்லது நீர் கோர்த்துக் கொண்டது போக்கும் மருந்து உட்கொள்வது எனும் மருத்துவம் செய்தால், வலி போய்விடுகிறது அல்லது குறைகிறது. அப்போது ஒரு தைரியம்! உருண்டைக்கும் கழுத்தில் ஏற்பட்ட வலிக்கும் சம்பந்தம் இல்லை என்று.

வேறோர் மருத்துவர் - அவர் நரம்பு சம்பந்தமான வியாதிபற்றி நிரம்ப அறிந்தவராம் - அவரிடம் காட்டச் சொன்னார்கள்.

அவர் அழுத்திப் பார்த்தார் உருண்டையை - வலிக்கிறதா? என்றார் - இல்லை! அழுத்தும்போது உருண்டை இல்லா விட்டாலும் வலிக்கத்தானே செய்யும் அந்த அளவு வலிமட்டுமே இருப்பதாக என் எண்ணம்.

அவர், இதை அறுவைமூலம் நீக்கிவிட்டாலும் நீக்கி விடலாம், இல்லை அப்படியே விட்டு வைத்து, பிறகு மேலும் வளருகிறதா என்று பார்த்து, என்ன செய்வது என்று யோசித் தாலும் தவறில்லை - என்று கூறினார்.

இப்போதும் அந்த உருண்டையும் இருக்கிறது. அது என்ன? அதற்கு என்ன செய்வது? என்ற எண்ணமும் எழுகிறது. எனினும், என் வேலைகளைக் குந்தகப்படுத்திக்கொள்ளவில்லை; என் வேலைகளைக் கெடுக்கும் அளவுக்கு, அது தொல்லையாக இல்லாதிருக்கும்போது அதைப்போய் அறுத்துக்கொள்வானேன் - அறுத்துக்கொள்வதனாலே, வேறு ஏதாகிலும் புதுத் தொல்லை வந்து தொலைக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

எனக்குத் தம்பி! அறுவை முறை எதெதற்குப் பயன்படும், என்னென்ன நேர்த்தியான முறைகள் உண்டு என்பதுபற்றிய அக்கறை மட்டுமே மேலோங்கி இருந்தால், இந்த மூன்றாண்டுக் காலம், நான் இதே வேலையாகத்தான் இருந்திருக்கவேண்டும். கவனிக்காததால் பெரிய கெடுதல் ஏற்பட்டுவிடுமே என்று கூறக் கூடும், ஏற்படாது என்ற நம்பிக்கை. ஏற்படாத வரையில், நாம் செய்ய முடிகிற வேலைகளைச் செய்யாமல் இருக்கக்கூடாது என்ற எண்ணம்!

என் உடற்கூறு, உள்ளப்பாங்கு இரண்டையுமே கூறிவிட்டேன்.

ஒரு மகிழ்ச்சி எனக்கு; இந்த "உருண்டை' ஒரு தொல்லை என்று எண்ணிக்கொண்டல்லவா இருந்தேன் - அப்படி இல்லை - அதுவும் எனக்காக வாதாடுகிறது, நன்றி!!

இப்படி நான் கூறுவதால் தம்பி, உடலையாகட்டும் அல்லது அமைப்பையாகட்டும், அது எந்தக் குறைகளுடன் வேண்டுமாயின் இருந்து தொலைக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும் என்று கூறுவதாக நினைத்துக்கொள்ளாதே. நிச்சயம் கவனிக்கவேண்டும்.

ஆனால், இப்படி நடைபெற்றால் என்ன ஆகியிருக்கும் என்பதை எண்ணிப்பார்!

"தெரியுமா விஷயம் ஆசாமிக்கு, பெரிய வியாதி!''

"யாருக்கு, அண்ணாவுக்கா?''

"அண்ணனாவது தம்பியாவது! சொல்லேன், அண்ணா துரை என்று அவனுக்குத்தான்.''

"என்ன? என்ன?''

"கழுத்திலே ஒரு உருண்டை - கட்டியல்ல. என்னென்னவோ நோய்கிருமிகள் கூடுகட்டிக்கொண்டுவிட்டன.''

"நோய்க்கிருமிகளா?''

"ஆமாம்! ஆமாம்! உள்ளே என்னென்ன வியாதி உண்டாகும் விஷப்பூச்சிகள் இருக்கிறதோ யார் கண்டார்கள்? கழுத்தே வீங்கிவிட்டது. ஆசாமியால் படுக்கவே முடிவதில்லை யாம். ஒரே வலியாம்.''

"யாருக்கும் சொல்லக் காணோமே.''

"மறைத்து வைத்திருக்கிறான்.''

"ஏன்?''

"அப்படி ஒரு விஷ உருண்டை இருப்பது வெளியே தெரிந்தால் நாலு பேர் அவனைக் கிட்டே சேர்ப்பார்களா? அதனால்தான் மறைக்கிறான்.''

"தொத்து நோயா; அது.''

"ஆமாம், கொடிய தொத்து நோய்.''

"உனக்கு எப்போது தெரியும்?''

"இரண்டு மூன்று நாட்களாக! தெரிந்தது முதல் நான் அவனோடு முன்புபோலப் பழகுவதுகூடக் கிடையாதே!''

இப்படிப் பேசப்பட்டால் என்ன நிலைமை ஏற்படும்?

என்னைப்பற்றிப் பலரும் பயத்துடனோ அருவருப்புடனோ பேசவும் எண்ணவும் முற்படுவர்.

அது தம்பி! நோயைத் தீர்க்கும் மருந்தாகுமா?

அந்தப் பேச்சு என் காதுக்கே வருகிறது என்று வைத்துக் கொள் - அல்லது இதிலெல்லாம் தயவென்ன தாட்சணிய மென்ன, நேரிலேயே சொல்லுவோம் என்ற போக்கிலே, என்னிடமே வந்து சொல்லிவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள். என்ன ஆகும்? எனக்கு உள்ளபடி கிலி ஏற்படும்! படுத்த படுக்கையாவேன்!!

அதுபோலத்தான், தம்பி! ஒரு அமைப்பைத் திருத்தும் வழி, அருவருப்பை, இழிவை, பகையை அதற்குச் சேர்த்துக்கொடுப்பது அல்ல.

ஆபிரகாம் லிங்கன் சொன்னார், "கைகொடுத்து உதவும் நல்லவர்களே, குற்றம் குறையை எடுத்துரைக்கவேண்டியவர்கள்'' என்று.