அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
10

மைக்கண்ணனிடம் பதக்கத்தைப் பறிகொடுத்து விட்ட பிறகு சூடாவுக்கு உலகமே இடிந்து தன் தலைமீது விழுந்து தன்னை நசுக்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.

இரக்கமெனும் ஒரு பொருள், இந்த உலகத்தை விட்டே ஒழிந்து போய்விட்டதோ, என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினாள். மனக்கண்ணில் தன் கடந்த கால அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காட்சி வடிவாகத் தெரியத் தொடங்கியது. அப்போதைய அவளது மனநிலையில் அவற்றையெல்லாம் சுவைத்து மகிழவோ, வாய்விட்டு அலறி அழவோ முடியவில்லை!

அடுத்து என்ன செய்வது? என்ன செய்யப் போகிறாய் சூடா? கணவன் சிறைக்கூடத்திலே சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். தோழி பங்கஜாவின் கணவன் வக்கீல் சங்கரய்யர், போலிக் கௌரவத்துக்கு வாழ்வைப் பலி கேட்கிறார். பாரிஸ்டர் விக்டரோ, மணவிலக்கு என்று சொல்லி பிண வழக்குக்கு ஆதாரம் கேட்கிறான். கூடவிருந்து குழிபறிப்பவர்கள் போல துணையாசிரியர்களோ, நகைகளைப் பறித்துக் கொண்டு விட்டதோடு சரி! தேவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தைவிடக் கொடுமையானதாகத் தெரிகிறது இது! வழியிலே சென்றவன் பதக்கம் என்றான்! பதக்கம் கண்டாய்! பதறிக் கொண்டிருக்கிறாய்! பறிகொடுத்தும் விட்டாய்!

எந்தப் பதக்கத்தால் இவ்வளவு தூரம் பதறிப் போயிருக்கிறாயோ, சூடா!, அந்தப் பதக்கமும் இப்போது கைமாறிவிட்டது.

என்ன செய்யப் போகிறாய்? கணவன் குற்றமற்றவன் என்று நிரூபித்துக் காட்டும் வழிகளைக் காண நீ என்ன செய்திருக்கிறாய்? இப்படியெல்லாம் நிரல்பட சூடாவினால் சிந்திக்க முடியவில்லையென்றாலும், முன்னும் பின்னுமாக வந்துபோன காட்சிகளைக் காண்பதினின்றும் சூடாவால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

இவ்வளவு கொடுமைக்குள் தன்னைத் தள்ளிவிட்டவர்களையெல்லாம் என்ன செய்வது? வாய் வலிக்கு மட்டும் திட்டித் தீர்க்கலாம்! பலன் கிடைக்கப் போகிறதா? பார்த்தா குற்றமற்றவன் என்று விடுதலையாகி வந்துவிடப் போகிறானா? வரப்போவதில்லை.

உலகத்தில் குற்றம் புரியாதவர்கள் என்று எவரையாவது தனித்துப் பிரித்துப் பார்க்க முடிகிறதா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குற்றவாளிகளாகத்தானிருக்கிறார்கள். குற்றங்களின் தன்மையும், முறையும் வேண்டுமானால் மாறியிருக்கலாம்! ஆனால் குற்றவாளிகளே அல்ல என்று எவரை ஏற்க முடிகிறது?

நான் கூடத்தான் குற்றம் செய்துவிட்டேன்! தேவரைக் காதலித்தது குற்றம்! கண் வீச்சுக்குப் பலியானது குற்றம்! துளசி பீடத்தருகே - அவரது கைகளின் அணைப்புக்கு என்னை ஈடுகொடுத்தது குற்றம்! தினம் தினம் சந்தித்தது குற்றம்! காதல் மொழிகளைப் பரிமாறிக் கொண்டது குற்றம்! கணவன் - மனைவியாக வாழ்வது என்று முடிவெடுத்தது குற்றம்! அந்த முடிவைச் செயல்படுத்தியதும் குற்றம்!

அண்ணாவின் பேச்சைக் கேட்காதது குற்றம். கடைசியாக வீடு தேடி வந்தவரை வெளியேறச் சொன்னதும் குற்றந்தான்!

குற்றங்களின் எண்ணிக்கை என் மேலும் வலுவானதாக ஏற்றப்பட்டிருக்கிறது. நான் ஒவ்வொருவரையும் குற்றவாளிகளாகக் கருதிக் கொண்டு, அதற்கேற்றார்ப் போலவே நிகழ்ச்சிகளைச் சமைத்துக் கொண்டு போகிறேனே! எவ்வளவு பெரிய முட்டாள் நான்!

“விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை! இதெல்லாம் வீணர்களது வயிற்றுப் பிழைப்புக்காகக் கட்டி வைக்கப்பட்ட பொய் மூட்டைகள்! சூழ்நிலையானது சில வேளைகளில் எதிர்பாராத நிகழ்ச்சிகளை உருவாக்கிவிடும்போது, உருவாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியின் பின்விளைவுகளால் பாதிக்கப்படுவோர் ‘விதி’ என்று கூறிவிடுகிறார்கள். எத்தனையோ முறை நான் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன்! விதி என்பதையும், அதன் இலக்குகள் பற்றியும்கூட யோசித்துப் பார்த்திருக்கிறேன். சூடா! எல்லாமே பைத்தியக்காரத்தனமான ஒரு ஏற்பாடாகத்தான் எனக்குத் தெரிகிறது. சாதாரண பைத்தியக்காரத்தனம் என்றுகூடக் கூறக் கூடாது. முற்றிய பைத்தியமாக இந்த நாட்டவரை எண்ணிக் கொண்டு, ஏற்படுத்தப்பட்டிருக்கும் பரிதாபகரமான - ஆனால் காலத்துக்கும் பயன் தந்து கொண்டிருக்கிற ஒரு செயல்!

தமிழ்நாட்டார்கூட, “சூடா! ஊழ் என்று கூறுகிறார்கள்! ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்று திருவள்ளுவரே கேட்கிறார் என்றால் பாரேன்! திருவள்ளுவரையே மாற்றிவிட்ட வலிமை இந்த விதிக்கு ஏற்பட்டு விட்டிருந்தாலும், அவர் சமாளித்துக் கொண்டு, “ஊழையும் உப்பக்கம் காண்பர் - உழைவின்றி தாழாது உஞற்றுபவர்” என்று பாடி வைத்திருக்கிறார்! முயற்சி ஒன்று இருந்தால் போதும். அதுவும் மனங்குலைந்து விடாத முயற்சி இருந்துவிட்டால் போதும்; ஊழினைக் கூட வெற்றி கண்டுவிட முடியும் என்று எடுத்துக்காட்டி விட்டார்! ஆனால் சூடா, கம்பர் பெருமான் இருக்கிறாரே, அவரையும் இந்த விதி விட்டுவிடவில்லை போலிருக்கிறது. கம்பராமாயணத்தில், ராமன் பின்னே போய்க் கொண்டிருக்கும்போது, அவன் விதி, அவனுக்கு முந்தி போய்க் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். விதியின் வேலை முடிந்துவிட்டது என்கிற பொருளில்
தான் அவர் அந்தக் கதையின் முடிவையும் காட்டியிருக்கிறார்.

என்றாலும் சூடா, நான் விதியை நம்ப மறுக்கிறேன்! முயற்சிக்கும் திறத்துக்கும் முதலிடம் கொடுக்கும்போது விதி தோற்றுவிடக் கூடும் என்றோ, விதியின் வலிவே குன்றக் கூடும் என்றோதான் நான் நினைக்கிறேன்.”

-என்று ஒருமுறை தேவர் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது சூடாவுக்கு. தேவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருப்பதை விதியென்று சொல்வதா? வீணர்களின் சதியென்று கூறுவதா? எல்லாமே சதிதான்! என் அண்ணன் ஆடிக் கொண்டிருக்கும் நாடகம்தான். இதெல்லாம் நாடகம் என்றாலும் சரி, வரைந்து கொண்டிருக்கும் ஓவியம் என்றாலும் சரி, எல்லாவற்றுக்குமே முடிவொன்று இருக்க வேண்டும். இல்லையா!

“சூடா! இந்தக் கதையை நான்தான் எழுதியிருக்கிறேன். படித்துப் பார்! இதன் பாத்திரங்களுக்கு இவை இவை குண விசேடங்கள்! இவையெல்லாம் இப்படி இப்படி இயங்க வேண்டும் என்பது என் முடிவு. ஆனால் சூடா, என் முடிவு இதுதான் என்று உன்னிடம் கூறாமல், இதனை முடித்துக் கொண்டு என்று நான் உனக்குக் கட்டளையிட்டால், உனக்கிருக்கும் எழுத்தாற்றலைக் கொண்டு, கதையினைத் தொடர்ந்து எழுத முடியும்! ஒரு வகையான முடிவையும்கூட உன்னால் உருவகப்படுத்தி விட முடியும்! ஆனால், சூடா நான் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருக்கும் திட்டவட்டமான முடிவைப் போலவோ, அல்லது முடிவை ஒட்டியோ உன்னாலும் கொண்டு வர முடியும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், நானாக முடிவு இப்படி இருக்க வேண்டும் என்று கூறாதவரையில்! உன் முடிவோடு என் முடிவு ஒட்டியதாக இருக்க முடியாது. ஆகவே சூடா, யார் எந்தக் கதையை அல்லது காவியத்தை, அன்றி ஓவியத்தை வரைகிறார்களோ, அவரவர்களே அதனை முடிக்கும்போதுதான் சரியான முடிவு தோன்ற முடியும். இல்லையா சூடா!” என்று ஒரு சமயம் தேசவீரன் பத்திரிகையில் வெளிவந்த தொடர்கதை ஒன்றைப் பற்றி தன்னிடம் தேவர் வாதித்துக் கொண்டிருந்தது அப்போது சூடாவின் நினைவுக்கு வந்தது.

தேவருக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கும் தன் அண்ணன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்ததாலும், தன் அண்ணன் மனது வைத்தாலன்றி, இப்போதைய தனது நிலைக்குச் சரியான முடிவு கிடைக்காது என்றும் எண்ணினாள். பம்பரக் கயிறு சாஸ்திரியின் கையில் இருக்கும்போது பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதில் பயனில்லை என்று முடிவு கொண்டாள்! தனது முடிவு சரியானதுதானா? பல முறையும் எடுத்தெறிந்து பேசிவிட்ட தன் அண்ணனிடம் மறுபடியும் போவது முறைதானா? உதவி செய்வானா அவன்? எந்தெந்த கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தாலும், சாஸ்திரியைச் சரணடைவது தவிர வேறு வழி எதுவும் தென்படவில்லை சூடாவுக்கு.

பதக்கத்தைப் பறித்துச் சென்ற பாதகன், கொண்டு போய் புதிதாக என்னென்ன கேடுகளையெல்லாம் உண்டாக்கப் போகிறானோ என்று நினைத்ததும் இருப்புக் கொள்ளவில்லை அவளுக்கு.

உடனே ஓடிப் போய் தன் அண்ணனின் காலில் விழுந்து நடந்தவைகளையெல்லாம் மன்னிக்கும்படிக் கேட்டு, தன் கணவனையும் அவர் சொல்படி நடக்கச் செய்வதாக உறுதியளித்து, வழக்குக்கு உதவி செய்யும்படிக் கேட்க வேண்டும் என்று துடித்தாள்.

அந்தத் துடிப்பு ஏற்பட்டவுடனே அவளால் அங்கே எதற்காகவும் அமர்ந்திருக்க முடியவில்லை. அழுது அழுக்கேறி இருக்கும் தன் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. கலைந்து கிடக்கும் கூந்தலைக்கூட கோதி முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்க முடியவில்லை.

ஒரு வெறி பிடித்த நிலையில் அவள் அப்போது இருந்தாள்; வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே போக வேண்டும் என்பதுகூட அவளுக்குத் தோன்றவில்லை - எழுந்து ஓடத் தொடங்கினாள்.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடி சாஸ்திரி வீட்டையடைந்து, கூடத்துக்குள் நுழைய முனையும்போது அவளை இன்னோர் அதிர்ச்சி தாக்கித் தகர்த்தது.

தன்னிடம் ஏமாற்றி, வெற்று உபசார வார்த்தைகளைக் கூறி, பதக்கத்தைப் பறித்துக்கொண்ட மைக்கண்ணன் அங்கே நிற்பதைக் கண்டு பதறினாள்! அது மட்டுமல்ல, மைக்கண்ணன், “சாஸ்திரியாரே! பயப்பட வேண்டாம்! மேலதிகாரிகள் என்னை இது விஷயமாகத் துப்பறிய அனுப்பினர். நானும் மோப்பம் பிடித்து இங்கு வந்து சேர்ந்தேன்! உம்மைக் கைது செய்யவில்லை; காப்பாற்ற!” என்று அவன் திரும்பக் கூறக் கேட்டதும், தானும் தன் வாழ்வும் எங்கோ அதல பாதாளத்துக்கு இழுத்துச் செல்வது போன்ற நிலை அடைந்தாள் சூடா.