அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
4

“டைவர்சா? சார்! நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?” என்று சூடா கேட்டாள்.

“என்ன பேசுகிறேனா? உங்கள் டைவர்ஸ் கேஸ் விஷயமாகத்தான்” என்றார் பாரிஸ்டர்.

“என் டைவர்சா? என் அண்ணா, அப்படி கேஸ் இருப்பதாகவா சொன்னார்” என்று திகைத்துப் போய்க் கேட்டாள்.

“ஆமாம்! உங்க புருஷருக்கும் உங்களுக்கும் பிடித்தமில்லை; டைவர்ஸ்னு மனு தாக்கலாகி இருக்கிறது என்று சொன்னார்,” என்றார் பாரிஸ்டர்.

“அயோக்கியன்” என்று அக்னிப்பொறி பறக்கும் குரலிலே பேசினாள் சூடா.

“மன்னிக்க வேண்டும், மிஸ் உல்லாஸ்...” என்று பாரிஸ்டர் தமது நாசுக்கான பாஷையில் துவக்கினார். சீறினாள் சூடா. “உல்லாசும் கில்லாசும்! என்னய்யா இது! உளறிக் கொண்டிருக்கிறீர்? யாரை உல்லாஸ் என்று கூறுகிறீர். நான் சூடா! சூடாமணி!” என்று கூவினாள். திடுக்கிட்டுப் போனார் பாரிஸ்டர். வேலைக்காரன் கொடுத்த சீட்டை மறுபடியும் பார்த்தார். மிஸ் உல்லாஸ் எம்.ஏ., என்று தெளிவாக இருந்தது எழுத்து. ஆனால் அடுத்த விநாடி சீட்டைத் திருப்பிப் பார்த்தார். சூடாமணி என்று எழுதப்பட்டிருந்தது. “டே! ராஸ்கல்” என்று கூவினார் பாரிஸ்டர். வந்தான் வேலையாள். “மடையா! இந்தச் சீட்டு நேற்று, உல்லாஸ் என்றொரு அம்மாள் வந்தபோது அவர்கள் கொடுத்ததல்லவா? அதே சீட்டை இந்த அம்மாளிடம் கொடுப்பதா? இடியட்! நான் இவ்வளவு நேரம், இந்த அம்õள்தான் மிஸ் உல்லாஸ் என்று எண்ணிக் கொண்டு, டைவர்ஸ் கேஸ் விஷயமாகப் பேசினேன்” என்று கூறி, அவனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார்.

“கோபிக்க வேண்டாம் அம்மா! என் நண்பரெருவர் தன் தங்கை உல்லாஸ் என்பவர் டைவர்ஸ் கேசை நடத்தும்படிச் சொன்னார். நான் அந்த உல்லாசைக் கண்டதில்லை. நேற்று வந்தார்களாம். நான் இல்லை. இன்று இந்த மடையன், அதே சீட்டைத் தங்களிடம் தந்தான். நான் உங்கள் எழுத்தைக் கவனிக்கவில்லை. உல்லாஸ் என்ற எழுத்தையே பார்த்தேன். உங்களையே உல்லாஸ் என்று எண்ணிக் கொண்டு உளறினேன்.” என்று விளக்கமுரைத்தார்.

பாரிஸ்டர் விக்டர் எவ்வளவு பக்குவமற்றர் என்பதைக் கண்டறிய இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டது. இப்படிப்பட்ட அவசர புத்திக்காரனை எப்படி நம்புவது? இவன், கோர்ட்டிலே எப்படி வழக்கை வெற்றிகரமாக நடத்த முடியும்? ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்குப் பதில், வேறு ஏதேனும்கூட எழுதிக் கொடுத்துவிடக் கூடுமே என்று மேலும் பயந்த சூடாமணி, இந்தத் தொல்லையிலிருந்து எப்படி நீங்குவது என்றறியாது திகைத்தாள்.

“முட்டாள், என்னை இப்படிச் சிக்க வைத்துவிட்டான், அம்மா! மன்னியுங்கள். நான் காலையிலே, தேவர் கேஸ் சம்பந்தமாகக் கவனம் செலுத்தினேன். ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்,” என்று பாரிஸ்டர் கூறினார். “என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்? அவரை ஜாமீனில் விடுதலை செய்வார்களல்லவா?” என்று சூடா கேட்டாள். ஆழ்ந்த சோகம் கப்பிய குரலில். பாரிஸ்டர், “செய்வார்களா என்ற கேள்விக்கு இடமில்லை,” என்று கூறினார். “விளங்கவில்லையே” என்று விசாரத்துடன் சூடா கேட்க, பாரிஸ்டர் விளக்கலானார். “அம்மா! இது ஒரு பெரிய காரியமல்ல! அரெஸ்டு செய்யப்பட்ட ஒரு ஆளை வெளியே ஜாமீனில் கொண்டு வருவது பெரிய பிரமாதமில்லை. அதை ஒரு சாதாரண வக்கீல்கூடச் செய்துவிடலாம். ஜூனியர்கள் கூடச் செய்துவிடலாம். அதிலும், தேவர் ஒரு பொறுப்புள்ள ஆசிரியர் - கீர்த்தி வாய்ந்தவர் - இதற்கு முன்பு எவ்விதமான தப்புத் தண்டாவிலும் சம்பந்தப்படாதவர். அவரை ஜாமீனில் விட முடியாது என்று கூற மாட்டார். அதிலும், விசாரணை நடத்துபவர் இருக்கிறாரே அவர் பெரிய குடும்பஸ்தர். ஆறு பிள்ளைகள்; மூன்று பெண்கள்! கருணையானவர் அவர். தேவரை ஜாமீனில் விடுவதற்குத் தடை சொல்ல மாட்டார். மேலும், மிகமிக அயோக்யனுக்குக்கூட நம்முடைய சாதுர்யத்தாலும், செல்வாக்கினாலும், ஜாமீனில் விடுதலை வாங்கித் தர முடியும். ஆகையால், தேவரை ஜாமீனில் விடுவிப்பது சிரமமான காரியமல்ல, மிகச் சுலபந்தான்” என்று பாரிஸ்டர் விளக்கிக் கொண்டே ஒரு சிகரெட் எடுத்தார். தைரியமூட்டும் இச்சொற்களைக் கேட்ட சூடாமணிக்குக் கொஞ்சம் களிப்பாகவே இருந்தது. நோய் குணமாகும் என்று கூறாத டாக்டரும் வழக்கு ஜெயித்துவிடலாம் என்றுரைக்காத வக்கீலும் உண்டோ! இது தெரியும் சூடாவுக்கு. என்றாலும், என்ன ஆகுமோ, எப்படி முடியுமோ என்று திகில்பட்டுக் கொண்டிருந்ததாள், பாரிஸ்டர் விக்டர், “பயப்படத் தேவையில்லை; ஜாமீனில் வெளிவருவது சுலபம். என்னால் அதனை மிகச் சுலபமாகச் செய்ய முடியும்” என்று கூறினபோது, ஆறுதலாக இருந்தது. ஆரம்பத்திலே பாரிஸ்டரிடம் கொண்டிருந்த அவநம்பிக்கையும் சிறிதளவு குறைந்தது. நெஞ்சிலே நின்றாடிய அந்தக் களிப்பு நேரிழையாளின் முகத்தை ஓரளவு பொலிவுறச் செய்தது. “பாரிஸ்டரே! அவரைப் போலீசார் திடீரென்று கைது செய்ததால், ஏற்பட்ட மனஅதிர்ச்சி என்னைப் பைத்யக்காரியாக்கி விட்டிருக்கும். நான் எப்போதும் இவ்விதமாகப் பயந்து சாகிறவளல்ல. கொஞ்சம் தைரியம் உண்டு. சில பல நெருக்கடிகளைச் சமாளித்திருக்கிறேன். ஆபத்துகளை அலட்சியப்படுத்தியிருக்கிறேன். என்ன நேரிட்டுவிடும்? இதற்குப் பயப்படுவதா? தலை போகுமா? என்ற பல்லவியை நான் அடிக்கடி பாடுவேன். அண்ணன் என்னைத் “துஷ்டப்பெண்” என்று கண்டிப்பதும் இந்தப் போக்கைக் கண்டுதான். ஆனால், அவர் அரெஸ்ட்டு செய்யப்பட்டவுடன், என் சுபாவமே மாறிவிட்டது. இதுவரை, சிரிப்பு விளையாட்டு எனும் திரையினால் மூடி வைக்கப்பட்டிருந்த பயங்காளித்தனம், திரையைக் கிழித்
தெறிந்துவிட்டு வெளியே வந்து தாண்டவமாடுகிறது. பாரிஸ்டரே! பத்திரிகையிலே அவர் எழுதிய பலப் பல வரலாற்றுச் சம்பவங்களை, வீரர் வாழ்க்கையைப் படித்திருக்கிறேன். அவ்வளவும், இன்றுள்ள என் மனவேதனைக்கு மருந்தளிக்கவில்லை” என்று கூறித் துக்கித்தாள் சூடா.

பாரிஸ்டர் விக்டர் புன்னகையுடன், தமது பிரதாபத்தைக் கூறலானார். “கலங்க வேண்டாம்! கேசை என்னிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இனிக் கவலையை விட்டுவிடுங்கள். இந்தக் கேசை, நான் தூள் தூளாக்கி விடுகிறேன். தணலில் போட்டெடுத்த தங்கம்போல, இந்த வழக்கிலே சிக்கியுள்ள தேவர், வெற்றி வீரராக வெளிவரப் போகிறார்”, என்று பாரிஸ்டர் மேலும் தைரியமூட்டவே சூடா, அவரிடம், மரியாதை கலந்த அன்புடன், தன் வாழ்க்கை வரலாறு முழுவதையும் கூறி விடலாம் என்று எண்ணிக் கொண்டு, “என் கதையே துக்கம் சூழ்ந்தது. மேகத்திடையே மின்னல் போல சோகம் நிறைந்த என் வாழ்விலே, மகிழ்ச்சி சில சமயம் வீசும்; பிறகு மறையும்! பழைய சம்பவங்களை நான் விவரிக்கத் தொடங்கினால், நேரம் வீணாகும். சுருக்கமாகக் கூறுகிறேன். எனக்கு உலகிலே ஒரே நண்பர் - அவரே என் கணவர். பரம விரோதி ஒரே ஒரு ஆள், பாரிஸ்டரே! திடுக்கிடாதீர், என் அண்ணா இருக்கிறாரே சாட்சாத் சாஸ்திரியார், அவரைத் தான் குறிப்பிடுகிறேன். நான் தேவரைக் கலியாணம் செய்து கொண்டது, அண்ணாவுக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. எவ்வளவோ மிரட்டினார்! ஊரிலே அபவாதமே பிறக்கும் என்றார். நான் துளியும் அஞ்சவில்லை. தேவரின் மொழி எனக்கு இன்பம் மட்டுமல்ல, எல்லையில்லாத தைரியத்தையும் தந்தது. எதிர்ப்பு ஒரு துரும்பு என்றேன். உலகம், உதவாக்கரைக் கொள்கைகள் நெளியும் இடம் என்றேன். அபவாதம் என் அன்பரின் ஆதரவு எனும் கேடயத்தைத் துளைக்க முடியாது என்றேன். காதல் முல்லை மலர்ந்ததால், நான் அந்த மணத்திலே பரவசமாகி, ஜாதி குலம் ஆச்சாரம் என்று பேசிய என் அண்ணாவைச் சட்டை செய்ய மறுத்தேன். தேவரை என் கணவராகக் கொண்டேன்! இன்றும், நான் செய்தது தவறானது என்று நான் எண்ணவில்லை. எனக்கு உயிரளித்தார் தேவர். வாடிக் கிடந்தவளைத் தேடி எடுத்துப் புது உலகில் குடி ஏறச் செய்தார். மீண்டும் நரம்புகள் சரியாக்கப்பட்டதால், வீணையின் நாதம் கிளம்பிற்று என் இருதயத்தில்! அவருடைய அன்பெனும் ஆலாபனத்திலே நான் ஆனந்தமடைந்தேன். ஆனால் அதே கீதம் என் அண்ணாவுக்குக் கர்ண கடூரமாக இருந்தது - இருக்கிறது. என் கணவருக்குக் கட்டழகராகக் காட்சி தந்தவரை, என் எதிரிலேயே காட்டெருமை என்று அண்ணா வைதார். நான் அண்ணாவுக்குக் கண்ணிலே கோளாறு என்று எண்ணி, எதிர்த்துப் பேசாமலிருந்து விடுவேன். உங்கள் நேரம் பொன்னானது, என் கதையோ வளரும், இன்னமும் சுருக்கி விடுகிறேன். இந்த வழக்கைத் தாங்கள் தயவுசெய்து நடத்தும்போது, என் அண்ணாவின் யோசனைப்படி எதுவும் செய்யக் கூடாது என்று தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அவர் அடுத்துக் கெடுக்க இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினாள். பாரிஸ்டர், “அம்மா! இந்த வழக்கிலே சிக்கல் உண்டு. ஆனால் சிக்கலைப் போக்குவதிலே என் போன்றவர்களுக்குச் சிரமம் இராது,” என்று பழையபடி தன் பிரதாபத்தையே கூறினார்.

“ஜாமீன் மனு...” என்று முக்கியமான பிரச்னையைத் துவக்கினாள் சூடா.

“மறந்தே போனோம் இருவரும். ஜாமீனில் வெளி வருவது கஷ்டமல்ல. ஆனால் ஒரு விஷயம். இந்த வழக்கு நமக்குச் சாதகமாக வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். தேவரை ஜாமீனில் வெளியே கொண்டு வராமலிருப்பது நல்லது” என்று பாரிஸ்டர் பாணம் விடுத்திடவே, சூடா அலறினாள்.

பூந்தோட்டத்திலே உலவும் நேரத்தில் தென்றலும் வீச, மணமும் மந்தமாருதமும் அந்த அந்தி நேரத்திலே ஆனந்தம் தர, ஆடிப் பாடிச் செல்லும் கன்னியின் காலிலே திடீரென்று பாம்பு பின்னிக் கொண்டது போல, ஜாமீனில் வெளிவந்துவிடுவார் - தேவரைச் சிறையிலிருந்து பாரிஸ்டர் விடுவிப்பார் என்று நம்பிக் களிப்படைந்த காரிகைக்கு, பாரிஸ்டரின் பேச்சு, திடுக்கிடச் செய்தது. இவன் என்ன பித்தனா? புலம்பும் நம்மிடம் கேலி செய்கிறானா? என்று பலப் பல எண்ணித் துடிதுடித்தது, கண்களிலே கசிந்த நீரையும் துடைத்துக் கொள்ளாமல், இரு கை கூப்பி அவனை நமஸ்கரித்து, “ஐயோ! என்னைச் சோதனை செய்கிறீரா? ஏன் திடீரென்று எனக்குத் திகில் உண்டாக்குகிறீர்” என்று கூறித் தேம்பினாள். “ஐயோ! இதென்னம்மா, சின்ன குழந்தை மாதிரி அழுகிறீரே. நான் சொன்னது என்ன? ஏன் இதற்காக அழ வேண்டும்? நான்தான் கேஸ் நிச்சயம் ஜெயிக்கும் என்று கூறுகிறேனே, ஏன் பீதி! கவலை? ஜாமீன் விஷயமாக நான் அவ்விதம் சொல்வதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன,” என்று பாரிஸ்டர் தேம்பும் பாவைக்குத் தேறுதல் கூறினார். அந்தப் பாவி வக்கீல் சங்கரய்யரோ, வறட்டு அகங்காரத்தைக் காட்டினான். இவனோ, சலிப்புற்றான். சாஸ்திரியின் பேச்சின்படிஇவன் நடந்து கொள்கிறான் போலும். ‘சரி! இனி இவனிடம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது’ வேறு தகுந்த வக்கீலைக் காண்போம் என்று எண்ணினாள். தேவருக்கு ஆப்த நண்பர்கள் பலர் உண்டு. அவர்களிலே சிலரைக் கண்டு பேசி, அவர்கள் மூலமாக, இந்த வழக்கை நடத்துவது என்று தீர்மானித்து பாரிஸ்டரை நோக்கி, ஐயோ! என் சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகி விட்டது. என் கணவரை ஜாமீனில் கொண்டு வர முயற்சி செய்ய இஷ்டமில்லை உங்களுக்கு. என் அண்ணனின் துர்போதனைக்கு நீர் பலியாகிவிட்டீர். ஆகவே உம்மை நம்பிப் பயனில்லை. நான் போகிறேன். அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வராமல் இந்த ஜென்மத்தை வைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை” என்று கோபமாகக் கூறிவிட்டு. அந்த இடத்தை விட்டுச் சூடா கிளம்பினாள்.

“பைத்யக்காரி! அவசரக்காரி! போக்கிரி” என்று மனத்திற்குள் கூறிக் கொண்டே அந்த அறையிலே பாரிஸ்டர் உலவினார். சில விநாடிகளின் விசாரம் நிறைந்த சூடாவை மறந்தார். அவர் மனக்கண் முன்பு, மதுக் கிண்ணமும் கையுமாக ஓர் மைவிழியாள் நின்றாள். அந்தக் காட்சி இன்பத்திலே ஈடுபட்ட விக்டர், வழக்கு, நீதிமன்றம் முதலியவற்றை மறந்தான். அவளுடைய அதரத்திலே அன்றலர்ந்த ரோஜாவின் கவர்ச்சி இருந்தது. கடை சிவந்து காதுவரை வளர்ந்த அவளுடைய விழி, அவனை, எங்கெங்கோ அழைத்தது. இந்தப் பயனற்ற கட்டை புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் கரங்களால், அவளுடைய கூந்தலைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, ஒரே ஒரு முத்தம், கொடுக்கச் சமயம் கிடைக்காதா? சகல சுகத்தையும் அந்த ஒரு நொடிக்காகத் தந்து விடலாமே என்று எண்ணினான். அடுத்த விநாடி அந்த மைவிழியாள் திடுக்கிட்டுத் திரும்புவது போலிருந்தது. ஆடம்பரமான உடையும், அட்டகாசமான நடையும் கொண்ட ஆடவனொருவன், அவள் அருகே வந்து நின்றான். மதுக்கிண்ணத்தை அவள் மிக மரியாதையுடன் அவனிடம் தந்தாள். அவனோ மிக அலட்சியமாக அதை வாங்கிக் குடித்தான், கனைத்தான், சரேலென வெளியே போய்விட்டான். மலர்க்கொடி அசைந்து செல்வதுபோல, அந்த மனோகரியும் அவன் சென்ற பக்கம் நடந்தாள் - மறைந்தாள். பாரிஸ்டர் விக்டர் இந்தக் காட்சியைக் கண்டு பெருமூச்செறிந்தார்.
* * *

“பயல்! தலைக்கால் தெரியாமல் ஆடினான்!”

“நேக்குத் தெரியுமே! அந்த அற்பனின் வாழ்வு அஸ்தமிக்குமென்று நன்னாத் தெரியும். சாம்பு! போன சனிக்கிழமை என்ன நடந்தது தெரியுமோ? என் மனம் அந்தப் பயல் போலீசிலே சிக்கிக் கொண்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பிறகுதான் குளிர்ந்தது. ஏ.பி. நியூஸ் ஒன்று வந்தது. அதை நான் சிரமப்பட்டு மொழி பெயர்த்துக் கொடுத்தேன். ப்ரூப் போனதும், என்னைக் ‘கூப்பிட்டனுப்பினான்; போனேன். “ஓய்! நீர்தானா ட்ரான்ஸ்லேட் செய்தது” என்று கேட்டான். ‘ஆமாம்’ என்றேன், மரியாதையுடன். “உம் மண்டையிலே களிமண்ணா இருக்கு?” என்றான் சாம்பு! என் மனம் துடியாய்த் துடித்தது. எனக்கு வந்த கோபம், அவனைக் கடித்து மென்று கீழே உமிழ்ந்து விடலாமா என்று தோன்றியது. என்ன செய்வது? பொறு மனமே பொறு என்று என்னை நானே அடக்கிக் கொண்டு நின்றேன். என்னடா, இவ்வளவு துடுக்குத்தனமாகத் திட்டினோம். அதைக் கேட்ட பிறகும் அவன் நிற்கிறானே, என்று நினைத்தானா? எடிட்டர் என்றால் நம்மை அவன் வீட்டு வண்டிக்காரன் போலவா நடத்த வேண்டும்? “மரம் போல நிற்கிறீரே ஓய்! பத்து வரி இல்லை, இது. இதை மொழிபெயர்க்கத் தெரியவில்லை. சப் எடிட்டர் என்று பெயர் இருக்கிறது” என்று மறுபடியும் கண்டித்துவிட்டு, அந்தக் காகிதத்தைச் சுருட்டி வீசினான், என் முகத்தின் மீது”

“ஏன்? என்ன தவறு எழுதினீர்?”

“என்ன தவறாகத்தான் இருக்கட்டுமே! சாம்பு! மிருகத்தை நடத்துவது போலவா நடத்துவது?”

“அது சரி! அப்படித்தான் சர்வாதிகாரம் செய்தான்.”

“சர்வாதிகாரமா? வெறி பிடித்து அலைந்தான் என்று சொல்லும். அன்றைய தினம் பகவானே! இந்தப் பாவிக்கு நீதான் தண்டனை தர வேண்டும் என்று மனம் நொந்து சொன்னேன்; சரியாகப் பத்தாம் நாள் பார்த்தாயா, வேலைக்கு ÷லையும் போச்சு, கேசும் கிளம்பிடுத்து.”

“குறைஞ்சது ஐந்து வருஷம் தீட்டிவிடுவார்,”

“சந்தேகமா என்ன? கோயில் கொள்ளை கேஸ் சாமான்யமான விஷயமா? அதிலும் இவனோடு சேர்ந்து வேலை செய்ததாக யாரார் அரெஸ்டானார்கள் என்ற லிஸ்டைப் பாரேன்! கருப்புக் குல்லாக்கள், சும்மா விடுவாளோ இவனை. கருப்புக் குல்லாய் என்ற உடனே எனக்கு அன்று நான் மொழி பெயர்த்த விஷயம் கவனம் வருகிறது. என்ன தவறு கண்டுபிடித்து விட்டான் தெரியுமோ? ‘பிளாக் மார்க்கெட்’ என்ற தலைப்புக்கு நான் கருப்பு மார்க்கெட் என்று எழுதிவிட்டேன். இதுதானப்பா பெரிய தவறு! இதற்காகத்தான் என் மண்டையிலே களிமண்ணா இருக்கு என்று கேட்டான். அவன் மண்டையிலே புழு இருந்தது, நேக்குத் தெரியும்னு அவனுக்குத் தெரியாது.”

“கிடக்கிறான், தள்ளடா அவன் பேச்சை; யாரோ வருகிற சப்தம் கேட்கிறது.”

“தேசவீரன்” பத்திரிகையில் தேவருடன் வேலை பார்த்து வந்த துணை ஆசிரியர்கள், சாம்பு, சதாசிவம் எனும் இருவர், தேவருக்கு நேரிட்ட விபத்தைக் கேள்விப்பட்டுத் தங்கள் விரோதத்தைக் கக்கிக் கொண்டிருந்தனர். அன்று வரையில் அவன் முன் பூனைபோல் நடந்து கொண்டிருந்த அப்புலவர்கள், வழுக்கிக் கீழே விழுந்தவனின் கழுத்திலே கால் வைத்து நசுக்கும் கயவராயினர். அவர்கள் மனத்திலே அதுவரை தூங்கிக் கொண்டிருந்த துவேஷமும் பொறாமையும், விழித்தெழுந்து வெறியாட்டமாடின. தேவர், தேச வீரன் பத்திரிகை ஆசிரியராக நியமிக்கப்படுவதற்குப் பல வருஷங்களுக்கு முன்பிருந்தே அங்கே துணை ஆசிரியர்களாக வீற்றிருந்து, தொந்தி பெருத்தவர்கள், சாம்புவம், சதாசிவமும். அவர்களின் சாரமற்ற நடையும், தவறு நிரம்பிய மொழிபெயர்ப்பும் பல தடவை, தேவருக்குக் கோபமூட்டியதுண்டு. ஆனால் அந்தக் கயவர்கள் பேசிக் கொண்டது போலச் சர்வாதிகார மனப்பான்மையால் அல்ல; பத்திரிகையின் தரம் கெட்டுவிடக் கூடாதே என்ற கவலையால்! எந்தத் தேவரை இவர்கள் ஈனத்தனமான முறையிலே கண்டித்தனரோ, அதே தேவரின் பெரு முயற்சியினாலேதான், துணை ஆசிரியர்களின் நிலையும் சம்பள விகிதமும் உயர்ந்தது. செய்ந்நன்றியையும் கொன்றுவிடும் மாபாவிகள். இங்ஙனம் ஆபத்தில் சிக்கிக் கொண்ட தேவரைப் பற்றிப் புறங்கூறிக் கொண்டிருக்கும் அதே நேரத்திலே பாரிஸ்டர் விக்டரின் பைத்தியக்காரப் போக்கைக் கண்டு பயந்து, தக்கவரிடம் சென்று உதவி தேடலாம் என்று புறப்பட்ட சூடா, ஆசிரியருக்கு ஆபத்து நேரிட்டதே என்று பதை பதைத்துத் துணை ஆசிரியர்கள் உதவி செய்ய முன்வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு, சாம்புவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். காலடிச் சத்தம் கேட்டு சதாசிவம், வருவது யாரென்று பார்க்கச் சென்றான். சோகமே உருவெடுத்து நடந்து வருவதுபோல், சூடா வரக் கண்டு, அந்தச் சூதுக்காரன், கண்களைக் கசக்கிக் கொண்டு “போறாத வேளை! கிரஹசாரம்” என்று கூறினான் உருகுவது போல்!