அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
14

எந்த இன்ஸ்பெக்டர் கஜபதி நாயுடு, தேவரின் வீட்டுக்குள் புகுந்து, சூடா கதறிக் கதறி அழும்படியாக சந்தேகத்தின் பேரில் தேவரைக் கைது செய்து கொண்டு போனாரோ, அதே இன்ஸ்பெக்டரே, சிறை வாயிலுக்குச் சென்று தேவரை வரவேற்றார். இன்ஸ்பெக்டரின் சார்பில் ஒருவர் தேவருக்கு மாலையிட்டார். பெரிய மனிதர் என்ற பட்டியலிலே இடத்தைப் பதித்துக் கொண்டிருந்த பலரும் கூடவந்து மாலையிட்டு மரியாதை தெரிவித்துக் கொண்டார்கள்.

கைது செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டவுடனேயே, காரியுமிழ்ந்து, “சீ, இப்படிப்பட்ட மோசக்கரனா அவன்?” என்று நாலு பேர் காதில் விழும்படியாகவே பேசியவர்கள்கூட, “தேவர் நிரபராதி - குற்றவாளி அவர் அல்லர்” என்று போலீசுத் தரப்பில் கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டவுடனேயே, விழுந்தோடிச் சென்று வரவேற்றனர், அதுவும் முன்னணியிலிருந்து.

உயர்வும் சரி, தாழ்வும் சரி, அது ஒருவனை அடைவதற்கு, அவனவன் மேற்கொள்ளும் காரியங்களே காரணங்களாயமைந்துவிடும் என்று குறள் கூறும் கருத்துக்குக் கோணம் கோணம் அலசி ஆராய்ந்து அரிய பல கட்டுரைகளை தேசவீரன் பத்திரிகையிலே எழுதியிருக்கிறார் தேவர். என்றாலும் தனக்கு இப்படியொரு அபவாதம் ஏற்படும்படியாகத்தான் என்ன செய்தோம் என்பதை, சிறையிலடைப்பட்டிருந்த நேரத்திலே யோசனை செய்ததுண்டு. தன்னுடைய கூடாநட்பே கூட இதற்குக் காரணமாக இருக்குமோ என்றுகூட அவர் யோசித்திருக்கிறார். பணியாற்றுவதற்குக்கூட, பொருத்தமான மனமொத்த இடமாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தமது பணிபுரியும் இடத்தைத் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ளாததாலேயே இந்த இடர்களைச்சந்திக்க நேர்ந்ததென்றும் முடிவு செய்து வைத்திருந்தார். அந்த முடிவை, அவர் மேற்கொண்டபோதுதான், சிறை அதிகாரிகள், அவரிடம் வந்து அவர் குற்றமற்றவர் என்று போலீஸ் தரப்பு கருதுவதாகவும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று, கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களையெல்லாம் கேட்டால், தேவருக்கே அதிர்ச்சி ஏற்படுமென்றும் கூறி, சிறைக்கதவைத் திறந்துவிட்டு விட்டார்கள்.

சுதந்திரப் பறவையாகப் புறப்பட்ட தேவர், சிறைவாயிலுக்கு வரும்போதே அவர் வியப்படையும் அளவுக்குப் பெருங்கூட்டமே கூடியிருந்தது. இன்ஸ்பெக்டரே தன்னை வரவேற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சூடாவுக்குக்கூட முதலிடம் கிடைக்கவில்லை. நெருக்கி முன்னேறிய கூட்டம் சூடாவைப் பின்னே தள்ளிவிட்டது. என்றாலும், தன் கண் முன்னாலேயே தேவருக்கு ஏற்படுத்தப்படும் சிறப்பை, பெருமையாக அவள் மனம் ஏற்றுக் கொண்டுவிட்டதால், தான் பின்னாலே தள்ளப்படுவதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஆயினும், ஒருவாறாக வான் பிளக்க எழுந்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே வரவேற்பு வைபவம் கோலாகலமாக முடிவுற்ற பிறகு, தேவரின் கண்கள் தேடுவதைப் போலவே, இன்ஸ்பெக்டரின் கண்களும் அலைந்து திரியத்தான் செய்தன சூடாவைத் தேடி!

கைது செய்யப்படும்போது ஏற்றியது போலவே, இப்போதும் தேவர் போலீஸ் வானிலேயே ஏற்றப்பட்டார். அப்போதுõன் இன்ஸ்பெக்டரின் பார்வையில் சூடா புக முடிந்தது. மிகுந்த ஆரவார மகிழ்ச்சிப் பெருக்கோடு, அவரையும் அழைத்து வண்டியிலேற்றி தேவரின் அருகே அமர வைத்தார் இன்ஸ்பெக்டர். “மன்னித்து விடுங்களம்மா. உங்களை அன்று பிரித்த நான், மீண்டும் சேர்த்து வைக்கப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்றார்.

சூடா, விழிகளாலேயே நன்றி தெரிவித்தாள் இன்ஸ்பெக்டருக்கு. ஆயினும் தேவரும் சூடாவும் பிரிந்தவர் கூடினால் என்ற சொற்றொடருக்கு இதுவரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளையெல்லாம் கடந்து இலக்கியம் படைத்துக் கொண்டார்கள், உணர்ச்சிகளால்!

போலீஸ் வான் தேவரின் வீடு சேர்ந்ததும், இன்ஸ்பெக்டர் முதலில் இறங்கி, தேவரையும் சூடாவையும் இறங்க உதவி செய்து உள்ளே அழைத்துச் சென்றார்.

தேவர் வீட்டுக்குள் நுழையும்போது அது எந்த அளவு அலங்கோலத்தோடு இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் கொண்டு, அந்த அளவுக்கு சூடா பாடுபட்டிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டார்.
உள்ளே சென்று அமர்ந்ததும், இன்ஸ்பெக்டர், தேவரிடம், “இந்த அம்மாள் எடுத்துக்கொண்ட பெரு முயற்சியினால்தான் இந்த வழக்கு திசை மாறிப் போயிற்று” என்று கூறிவிட்டு, சூடாவைப் பார்த்தார்.

சூடா நாணமடைந்து, தலை கவிழ்ந்தவள், தான் அங்கே இருப்பது நாகரிகமாகாது என்றெண்ணிக் கொண்டு, உடனே புறப்பட்டாள். அதற்குள், ஒவ்வொருவராக தேவருக்கு வாழ்த்துக் கூறுதல் என்ற பெயரை வைத்துக் கொண்டு அங்கே வரத் தொடங்கினார்கள். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.

“அன்றைக்குச் சங்கரய்யர் வந்து விவரங்களைக் கூறியதும் எனக்கே அதிர்ச்சியேற்பட்டுவிட்டது மிஸ்டர் தேவர்! உடனே ஓடினேன் பேட்டையின் பக்கம். ஆறுமுகத்தையும் வரதனையும் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியுமாகையால், முதலில் ஆறுமுகத்தை வளைத்துப் பிடித்தேன். குடிகாரனை நம்பியதால் அவருக்கு இவ்வளவு பெரிய கேடு வந்து சூழ்ந்தது என்று அவர் என்னிடம் சொல்லும்போது எனக்கே சிரிப்பு வரத்தான் செய்தது. நிரம்பிய போதையிலிருந்த ஆறுமுகத்திடம், கொள்ளையில் சம்பந்தப்பட்ட கல்யாண சாஸ்திரியும், ஜாமீன்தார் செல்லப்பரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொய்யைச் சொன்னவுடனேயே, அவன் உண்மைகளையெல்லாம் கக்கத் தொடங்கிவிட்டான்.

கல்யாண சாஸ்திரி அவனை நேரில் வந்து அழைத்து, அவனுக்கு ராஜயோகம் வந்திருப்பதாயும், இனி அவன் அந்த இழிந்த வாழ்க்கை வாழத் தேவையில்லையென்றும் சொல்லி, கோயில் தொடர்பான எல்லா விவரங்களையும் கூறினாராம்.

கோயில் குருக்கள், கோயிலின் கருவறையைக் களவாட தடையெதுவும் இல்லாத அளவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டாராம். அவரது துணை ஆசிரியர்கள் இருவரும் செல்ல வேண்டியது என்றும், அவர்களுக்குத் துணையாக ஆறுமுகம் செல்ல வேண்டியது என்றும் ஏற்பாடாம்.

கொள்ளையடிக்கப் பட்டுவரும் பொருள்களில் பெரும் பகுதியும் ஜமீன்தார் செல்லப்பருக்கும், கல்யாண சாஸ்திரிக்கும் என்று ஏற்பாடாம். ஒருபகுதி துணையாசிரியர்களுக்கும், இன்னொரு பகுதி ஆறுமுகத்துக்கும் என்று பேசிக் கொண்டார்களாம்.

பழகிப் போன பழக்கம் ஆகையால், ஆறுமுகம் உடனே ஒப்புக்கொண்டிருக்கிறான். என்றாலும், துணை போவதைவிட, தனக்குத் துணையாக அவர்கள் வந்தால் போதுமென்றும் கேட்டுக் கொண்டானாம். ஆறுமுகத்தின் நாணயத்தில் இருந்த நம்பிக்கைக் குறைவால், அவன் மற்றவர்களுக்குத் துணைபோனால் போதும் என்று சொல்லி விட்டாராம் சாஸ்திரி.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜமீன்தார் செல்லப்பரும் அங்கு வந்தாராம். ஏதாவது வழக்குக் கிழக்கு என்று வந்தால், தன் சொத்து முழுவதையும் செலவு செய்தாவது அவனைக் காப்பாற்றுவதாகச் சொன்னாராம்.

இன்னும் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், நாளை நடுநிசிக்கு வந்து தன்னை அழைத்துப் போவதாகவும் கூறிவிட்டு இருவரும் புறப்பட்டுப் போய்விட்டார்களாம்.

ஆறுமுகத்துக்கு உண்மையிலேயே ராஜயோகம்தான். அவனுக்குத் தரப்பட்ட பங்கினை, அவன் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருந்ததால், இவ்வளவு பெரிய சதியினை நடத்திக் கொண்டிருந்த சாஸ்திரியே, அதற்கும் ஒரு வழி செய்து வைத்திருந்தார். குறிப்பிட்டபடியே, குருக்கள், கோயில் பணியாட்கள் இவர்களது உதவியோடு கொள்ளை நடைபெற்று முடிந்து, சாஸ்திரியின் வீட்டிலேயே பங்கு பிரிக்கப்பட்டுவிட்டது.

ஜெமீன்தார் செல்லப்பர் புறப்பட்டுப் போன பின்பு, அவனுக்குச் சில நகைகளைக் கொடுத்தாராம் சாஸ்திரி. அதனை அவன் கையில் வைத்துக் கொண்டு புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாஸ்திரி கேட்டாராம். “ஆறுமுகம், இவைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறாய்” என்று. ஏதோ ஒரு தொகையை அவனுக்குப் புரிந்த அளவுச் சொல்லி இருக்கிறான்.

“இரண்டாயிரமா? ஆறுமுகம்! மூவாயிரம் ரூபாய் ரொக்கமாய்த் தருகிறேன். நகைகள் உன்னிடம் இருக்க வேண்டாம். தொல்லைகள் ஏதாவது வந்துவிடும்” என்று சொன்னாராம் சாஸ்திரியார். அவனுக்கும் அது சரியென்றே பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு குடிபோதை வேறு ஏற்றப்பட்டிருந்தது.

மூவாயிரத்தையும் பெற்றுக் கொண்டு, அவன் புறப்பட்டு வீடு புறப்படும்போது வேறு, அவனுக்கு அளவுக்கும் மீறி மது வழங்கப்பட்டிருக்கிறது.

பணத்தைக் கையில் கொடுத்து, துணையாக யாரையாவது அனுப்பட்டுமா என்று சாஸ்திரி கேட்டிருக்கிறார். துணையா, ஆறுமுகத்துக்கா என்று கேட்டுவிட்டு, தள்ளாடிக் கொண்டே புறப்பட்டிருக்கிறான் ஆறுமுகம்.

“அவன் வீடு சென்று சேர்வதற்குள், சாஸ்திரியின் முன் ஏற்பாட்டின்படி ரூபாய் ஆறுமுகத்திடமிருந்தே பறிக்கப்பட்டு விட்டது என்பதை அவனேகூட அறியவில்லையாம்!” என்று சொல்லிவிட்டுச் சிறிது நிறுத்தினார்.

யார் யாரோ ஏழெட்டுப் பேர் அங்கே வந்திருந்தார்கள். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, வீட்டின் கதவைத் தாழிட்டுக் கொண்டுவந்து மீண்டும் அமர்ந்தார் தேவர்.

‘நல்லதொரு நாவலுக்கு வேண்டிய கருவையே சாஸ்திரி உருவாக்கி இருக்கிறாரே’ என்று கேட்டுவிட்டு, ‘அப்புறம்’ என்று கேட்டு நிறுத்தினார் தேவர்.

சிறிது தூரத்தில் சூடாவும் வழிந்த விழிகளுடன் நின்றுகொண்டிருந்தாள். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.

“பல கொள்ளைகளுக்கும், கொடுமைகளுக்கும் இந்தப் போதை பயன்பட்டிருக்கிறது. எனவேதான் ஆறுமுகம் மறுநாள் விடிந்ததுமே தன் பணம் கொள்ளை போனதை உணர்ந்திருக்கிறான். தெரிந்து கொண்டதும் ஓடிப்போய் சாஸ்திரியிடம் சொன்னதும், “பரவாயில்லை ஆறுமுகம்! பணம்கூட உன்னிடத்திலிருக்க வேண்டாம் என்று பகவான் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. போனால் போட்டும். உனக்கு ஏதாவது எப்போதாவது செலவுக்கு வேண்டுமென்றால் என்னிடம் வந்து கேட்டு வாங்கிக் கொள் என்று கூறி வெறுங்கையுடன் அனுப்பிவிட்டாலும், எப்போதாவது ஒரு ஐந்து பத்து என்று சென்று கேட்டு வாங்கிக் கொள்வானாம்.

“சில நாட்களுக்கு முன்பு, தலையங்கம் எழுதுவது எதைப் பற்றி என்ற தகராறு ஏற்பட்டவுடன் அவர் மூளை சுறுசுறுப்படைந்திருக்கிறது. கொள்ளைப் பழியை உங்கள் மீதுபோட்டு, ஒழித்துக் கட்டிவிட்டால், தங்கை சூடாவால் ஏற்பட்ட அவமானமும் தீரும், தனக்கும் ஒரு தொல்லை விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். உடனேயே செயல்படத் தொடங்கி, ஆறுமுகத்தைக் கூப்பிட்டனுப்பி, தன் திட்டத்தைக் கூறியிருக்கிறார். காசுதானே அவனுக்குப் பிரதானம்! மற்றெல்லாவற்றையும் இனி அந்த அம்மாவே சொல்வார்! என்று கூறி விட்டு இவர்களுக்குத் தெரியாததை மட்டும் நான் கூறிவிடுகிறேன் என்று கூறவிட்டு, தொடர்ந்து, ஆறுமுகத்தை ஒரு வியாபாரியாக வேடம் போடச் செய்து, செல்லப்பர் வீட்டுக்கே அழைத்துப் போனார் சாஸ்திரி. அங்கே மாறுவேடத்தில் அவனைக் கண்டதும் அடையாளம் புரிந்துகொள்ள முடியவில்லை ஜெமீன்தாருக்கு” என்று கூறினார்.

தொடர்ந்து ஜெமீன்தார் வீட்டில் நடந்தவைகளையும், சூடா வீட்டில் கொண்டு போய் நாகப்பதக்கம் சேர்க்கப்பட்டது பற்றியும், அதை அறிந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மைக்கண்ணன், அதை அபகரித்துச் சென்றதும், அதைக் காட்டி சாஸ்திரியிடம் அவன் பணம் பறிக்க முயன்றது பற்றியும் கூறிவிட்டு, “மைக்கண்ணன் கெட்டிக்காரன்! போலீஸ்காரனாக இருந்தானல்லவா! கற்பனையாகவே சொல்லியிருக்கிறான். கொள்ளையிட்ட ஆறுமுகத்தைக் கைது செய்துவிட்டதனால், அவன் உண்மைகளை முன்னதாகவே தெரிவிக்கத்தான் போலீஸ் தடயத்தையே எடுத்துக் கொண்டு வந்து காட்டுவதாகவும் கூறி, உடனே ஊரைவிட்டு ஓடிப் போய் விடும்படிச் சொல்லி, அவன் பங்குக்கு வேறு ஐயாயிரம் பறித்துக் கொண்டு போயிருக்கிறான் என்று விளக்கினார்.

பெருமூச்சை உதிர்த்துவிட்டு, இன்ஸ்பெக்டரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் தேவர். இன்ஸ்பெக்டர் செல்லப்பரும், சாஸ்திரியாரும், துணை ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். பல நகைகள் மீட்கப் பட்டுவிட்டன. வெளியூருக்கும் கொஞ்சம் போய்விட்டிருக்கிறது. இரண்டொரு நாட்களில் அவையும் மீட்கப்படும் என்று கூறிவிட்டு, மைக்கண்ணன் நாகப் பதக்கத்துடன் தலைமறைவாகி விட்டிருப்பதையும் சொன்னார்.

“ரொம்பவும் நன்றி இன்ஸ்பெக்டர்?” என்று எழுந்து இன்ஸ்பெக்டரைக் கட்டித் தழுவிக் கொண்டார். “நீங்கள் எவ்வளவோ பேச வேண்டியிருக்கும். நான் போய் வருகிறேன். அப்புறம் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் கஜபதி நாயுடு. வாயில் வரையில் வந்து வழியனுப்பிவிட்டு, மீண்ட தேவர், சூடாவை வாரி அப்படியே தழுவிக்கொண்டார்.

பல நிமிடங்கள் வரையில் ஒருவர் வாயிலிருந்தும் ஒரு சொல்கூட வெளிப்படவில்லை. வெகுநேரத்துக்குப் பிறகு தேவர், ‘ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறாய் சூடா! உன்னால்தான் நான் மீண்டேன் என்று கூற வேண்டும்!’ என்று சொல்லிவிட்டு இதழோடு இதழ் சேர்த்தார்.

“இல்லவே இல்லை. பங்கஜத்தின் கணவர் சங்கரய்யரால்தான்!” என்றாள் அவள். “சரி, இருவராலும்தான்” என்றார் தேவர்.

வெளியே கதவு தட்டப்பட்டது. சூடா சென்று கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சங்கரய்யரும் பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

மரியாதையுடன் வணங்கி, வரவேற்று, “நாங்களே அங்கு வர இருந்தோம். அதற்குள் நீங்களே...” என்றாள் சூடா. அதற்குள் வாசல் பக்கம் வந்துவிட்ட தேவரும் கைகூப்பி வணங்கி, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

“நன்றியாவது ஒண்ணாவது தேவர்! ஏதோ போறாத வேளை இப்படியொரு அபகீர்த்தி ஏற்பட்டது. மனசில் வைச்சுக்க வேண்டாம். இதோ பாருங்க. சாஸ்திரியே கழுவாய் தேடிண்டுட்டான். அவன் சொத்தையெல்லாம் சூடாவுக்கு எழுதி வைச்சுட்டான். நானே எழுதினேன். ‘தேசவீரன்’ பத்திரிகைக்கூட இனி நீங்களே நடத்தணுமாம்! உங்க இஷ்டம் போல இருந்திடலாமாம்!” என்று சொல்லி, வைத்திருந்ததை தேவர் முன் நீட்டினார் வக்கீல்.

தேவரின் கண்களில் நீர் மல்கி நின்றன. “ஆண்டவன் தான் அவ்வப்போது அவதாரங்கள் எடுப்பார் என்று புராணங்கள் போதிக்கின்றன. மனிதர்கள்கூட அவதாரமெடுப்பதுண்டா?” என்று வாய்விட்டே கேட்டார் தேவர் வக்கீலைப் பார்த்து.

“புரிகிறது! சாஸ்திரிகூட இப்படியெல்லாம் ஆக முடியுமா? சூடாவுக்குச் சொத்து தருவதா என்றுதானே கேட்கிறீர்கள்! பாருங்களேன்! வயதான காலத்தில் அந்த ஜெமீன்தாரின் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போகணும்! எல்லாம் கிரகதோஷம்தான்!” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

“எங்கேயும் போகக் கூடாது! இன்று எங்க ஆத்திலேயே சாப்பிட்டுத்தான் போகணும்” என்று குறுக்கே வந்து நின்றாள் சூடா. தேவரின் முகமும் மலர்ந்தது.

விருந்து தயாராகிக் கொண்டிருந்தது, அடுக்களையில். அதுபோலவே, மனித அவதாரங்களைப் பற்றிய கற்பனையும் சமைந்து கொண்டிருந்தது தேவரின் இதய உலையில்.

முற்றும்

(திராவிடநாடு - 1945)