அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
11

மதியாதார் வாயிலை மிதியாதிருப்பதே மானங்காக்கும் வழி என்பதை அறியாதவளா சூடா? இல்லை. சூழ்நிலை சில நேரங்களில் எத்தகைய முன் அனுபவங்களையும் முரண்படச் செய்து விடுகிறது. தன் வாழ்க்கையிலேயே அதனைப் பலமுறை கண்டிருக்கிறாள். இப்போது தன் கணவரது வாழ்வில் அது விளையாடிக் கொண்டிருக்கிறது!

வழக்காம் வழக்கு! வழக்கு மன்றத்திலே குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்கள் வீட்டிலே வந்து நான் நிற்கிறேனே! இதற்குப் பெயர் விதியா? சூழ்நிலையா? எதுவாகவுமிருந்து விட்டுப் போகட்டும்!

அதோ! அந்த வம்புக்காரன் ஒரு பம்பரம்! வரதன் ஒரு பம்பரம்! யார் அந்த ஜெமீன்தார்? அவனும் ஒரு பம்பரமா? அல்ல பம்பரக் கயிறா? சிந்தனைத் தடுமாற்றத்தோடு ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தாள் வீதியில், வக்கீல் சங்கரய்யர் வீட்டுக்கு! தன் தோழி ஊரிலிருந்து வந்திருப்பாள்; விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறலாம்; அவளது உதவியுடன் உடனே விடுதலைக்கு ஏற்பாடு செய்யலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்து கொண்டிருந்தாள்.

பல சந்தர்ப்பங்களில் நம்பிக்கைகள் பொய்த்துப் போவதுண்டு. எதிர்பார்ப்பவை, சில நேரங்களில் எதிர்பார்ப்பதைப் போலவே நிறைபெற்று விடுவதும் உண்டு. முன்னதைத்தான் இதுவரையிலே சூடா அனுபவித்திருக்கிறாள். இப்போது?

எதிர்பாராத வகையில் வாசலிலேயே நின்று யார் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜா. தேவருக்கு விடுதலையே கிடைத்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது சூடாவுக்கு.

இந்த முறையும் அவள் கணவன் தனக்கு உதவ மறுக்க முடியாது என்ற நம்பிக்கை பிறந்தது. தேவரது நிலைமை பற்றி ஏற்கெனவே, தன் கணவன் மூலம் கேள்விப்பட்டிருந்த பங்கஜா ஒரே ஒரு ‘அச்சச்சோ’வுடனேயே பிரச்னையிலிருந்து விடுபட்டுவிட்டாள்.

யாருக்காகவோ காத்திருந்த அவள் முன்னே அலங்கோலமான நிலையில் சூடா வந்து நின்றதும் ஒரு கணம் பதறிப் போனாள். அடுத்த கணமே நிதானமடைந்தாள். தேவரைப் பற்றிய நினைவும் வந்து அமர்ந்து கொண்டது.

இரண்டு படிகள் கீழே இறங்கி வந்து சூடாவை அணைத்துக் கொண்டாள் பங்கஜா. “கேள்விப்பட்டேன். சூடா! நானே உன் வீட்டுக்கு வரவேண்டும் என்றுதான் இருந்தேன். உள்ளே போகலாம்!” என்று ஆறுதலாகச் சொல்லி வைத்தாள்.

தீச்சூடுகளின் கொடுமைக்கு மட்டுமே இதுவரையில் தன்னை ஒப்படைத்திருந்த சூடாவுக்கு இந்த ஆறுதல்மொழிகள் இன்பத் தேனாய் இனித்தது. என்றாலும் இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமையின் பளுவைத் தாங்க மாட்டாதவைகளாக அவள் கண்கள் ‘பொல பொல’வென்று நீரைப் பொழியத் தொடங்கிவிட்டன.

ஹாலில் வந்து அமர்ந்த உடனேயே சூடா “பங்கஜம்! என் நிலைமையைப் பார்த்தியா!” என்று தொடங்கினாள். விம்மலும் கூடவே தொடங்கியது.

“எல்லாம் நேக்குத் தெரியும் சூடா! நான்கூட ஆத்துக்காரன்டே சண்டை போட்டேன். இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே நீங்க சூடாவைக் கைவிட்டிருக்கக் கூடாதுன்னு சொன்னேன்!” என்றாள்.

அந்த வார்த்தைகள் இதமாக இருந்தன. “அதெல்லாம் போகட்டும் பங்கஜம்! இப்ப உன் ஆத்துக்காரர் எங்கே?” என்றாள். கேள்வி தடுமாற்றத்தோடு வந்தாலும், குரலில் பதட்டம் இருக்கக் கண்டாள் பங்கஜம்.

“கோபிநாதர் கோயில்லே, காமகோடி பீடம் பிரசன்னமாகி இருக்கார். இன்னைக்கு சாயரட்சை புறப்பட்டு திருத்தணிக்குப் போறாராம். அதனாலே அவரைப் பார்த்து சேவிச்சுண்டு வரப் போயிருக்கார். இப்ப வந்துடுவார்!” என்றாள் பங்கஜம்.

“பங்கஜம்! நான் அவசரமாக அவரைப் பார்க்கணும். அவர் வந்து, அவர்கிட்டே சொல்றதுக்குள்ளே காரியம் எப்படி எப்படியோ நடந்துடுமே, என்ன பண்றது” என்றாள் சூடா.

“என்கிட்டே சொல்லேண்டி சூடா! அவர் வந்ததும் நான் சொல்லிடறேன்.”

“பைத்தியமே! நீ சொல்லிப் புரியவைக்கிற விஷயமா அது? இப்பவே நான் அவரைப் பார்க்கணும். கோபிநாதர் கோயில்லே கொள்ளை அடிச்ச கொடியவன் யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேண்டி! நான் கண்டுபிடிச்சுட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

“உட்கார், சூடா! ரொம்பவும் பதட்டமா இருக்கே! முக்கியமான விஷயம்தான்! இப்ப வந்துடுவார். யார் அந்தத் கொடியவன்? என்கிட்டே சொல்லக் கூடாதா?” என்றாள் நளினமாக.

“யாரு அது! சூடாவா! வாம்மா! என்னடி பங்கஜம்! உன்கிட்டே சொல்லக் கூடாதுன்னு எதை மறைக்கிறா சூடா?” என்று கேட்டுக் கொண்டே வந்த சங்கரய்யர், கோட்டைக் கழற்றி பங்கஜத்திடம் கொடுத்து விட்டு அருகே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

வக்கீலின் குரல் கேட்டு எழுந்து நின்ற சூடா, அவரைப் கண்டவுடனேயே மறுபடியும் கண்களில் நீரைக் கொட்டிவிட்டாள்.

“ஏண்டி இப்படி அழுது தொலைக்கிறே! உன் அண்ணன் - அந்த சாஸ்திரிதான் எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிக்கிட்டிருக்கான்னா, நீ அந்த விக்டரைக்கூட வழக்காட வேண்டாம்ன்னு சொல்லிட்டியாமே” என்று தொடங்கினார் சாவதானமாக!

சூடாவின் இதயத் துடிப்பு நின்றுவிடும்போல இருந்தது. தன் இதயத்திலிருப்பவைகளை உடனே இறக்கி வைக்காவிட்டால், அது வெடித்துச் சிதறி விடுமோ என்று அஞ்சினாள். அந்த அவசரம் அய்யருக்குப் புரியுமோ! “ஏண்டி சூடா! பாரிஸ்டர் விக்டரை நீ ஏன் கேஸ் நடத்த வேண்டாம்னு சொன்னியாம்!” என்றார் மறுபடியும்.

‘வக்கீல் வாழ்க்கையே இப்படித்தானா?’ - என்று கோபம் குமுறிக் கொண்டு வந்தது. வந்து? கோபத்தைக் கொட்ட முடியுமோ! பணக்காரன் அடிக்கும் கொள்ளையைப் பற்றியும், கோலாகல வாழ்க்கையைப் பற்றியும் வாய் வலிக்கப் பேசித் திரியும் வஜ்ரவேல், எவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தானோ; அவனே எதிரில் வரும்போது மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல் இளித்து நிற்பதுதான் உலக நியதியாயிற்றே! பேசிய பேச்சில் நூறில் ஒரு பங்கையாவது அவன் எதிரில் கொட்டிக் காட்ட முடிகிறதா? மனித வாழ்க்கை முறை, அந்த வகையில் அமைக்கப்பட்டிருந்ததால்தான் உலகப் பிரச்னைகளில் முக்காலே மூன்று வீசம் தானாகத் தீர்ந்து போய்விடுமே!

“வந்து... அந்த விக்டர்...” என்று நா தழுதழுக்க பதில் சொல்லத் தொடங்கினாள் சூடா. ‘அதுதான் நானே சொன்னேனே, அந்த விக்டரைவிட அவன் குமாஸ்தா மேலுன்னு! இருந்தாலும் கேசை அவனே நடத்தணும்னு உன் அண்ணன் நினைக்கிறபோது, நீ ஏன் அதைத் தடுக்கணும்னுதான் நான் கேட்கிறேன்” என்றார் குறுக்கிட்டு.

பங்கஜத்துக்குக்கூட கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. அவளே பேச்சில் குறுக்கிட்டாள்: “நீங்க அதைப் பற்றியெல்லாம் எதுக்கு அலட்டிக்கிறேள். சூடா, கொள்ளைக்காரன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாளாம்! அதைச் சொல்லத்தான் ஓட்டமா ஓடிவந்திருக்கா. அதைக் கேட்காமே...” என்றாள் சற்றுக் கடுமையான குரலில்.

இதைக் கேட்டவுடனேயே சங்கரய்யர், நாற்காலியை விட்டுத் துள்ளி எழுந்தார்! “அப்படியா சூடா! என்னடி பைத்தியம் நீ! அதையில்லியோ முதல்லே சொல்லி இருக்கணும்! யாருடி? யார் அவன்! சொல்லு” என்று சூடாவின் அருகில் வந்து நின்று கொண்டார்.

தன் அண்ணன் வீட்டில் கேட்ட செய்திகளில் எந்தப் பகுதியை முன்னே சொல்வது? எதனை அப்புறம் சொல்வது என்ற திகைப்பும் தவிப்பும் சில வினாடிகள் வரையில் அவளைப் பேச விடவில்லை.

“சொல்லேண்டி! ஏன் பிரம்மிச்சு நின்னூட்டே” என்றார் சங்கரய்யர்! “என்னடி சூடா! என்கிட்டே அவ்வளவு பரபரப்புக் காட்டினே! இப்போ, தயங்குறியே” என்றாள் பங்கஜம்.

எந்த ஒன்றை, எவரிடம் சொல்லிவிட வேண்டும்; சொல்லி, தன் கணவனின் விடுதலைக்கு வழி விட வேண்டும் என்பதற்காக, ஓடோடி வந்தாளோ, அந்த ஒன்றை, அந்த ஒருவரிடம் சொல்ல முடியாமல் தவித்தாள் சூடா.

சூடா என்ன செய்வாள்? பாவம்! சொல்லத்தான் நினைக்கிறாள்; முடியவில்லை. உணர்ச்சிகள் ஒரேயடியாகச் செயல்படத் தொடங்கும்போது, அறிவு முடக்கம் ஏற்பட்டுவிடும் என்ற கருத்தை அப்போது நிரூபித்துவிட்டாள் அவள்.

“என்ன சூடா! உனக்குச் சித்த பிரமைப் பிடிச்சுண்டுடுத்தா?” என்ற கேள்வியைக்கூட சங்கரய்யர் கேட்டுவிட்டார். அவருக்கென்ன தெரியும், சூடாவின் மனம் படும்பாடு?

“இப்போ என் அண்ணா வீட்டிலே இருந்துதான் வரேன். அங்கே... அங்கே...” முடிக்க முடியாமல் மீண்டும் குழம்பினாள். “அங்கே என்னடி! உன் ஆம்படையான் சாஸ்திரியின் காலைக் கட்டிப் பிடிச்சுண்டு, என்னை மன்னிச்சுடுங்கோ”ன்னு கேட்டுக்கிட்டிருந்ததைக் கண்டியா! பைத்தியக்காரி! விஷயத்தைச் சொல்லேண்டி” என்றார் மீண்டும்.

தனக்குப் பைத்தியம் பிடித்துவிடவில்லையே என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவள் ஆளாகி இருந்தாள். விழிகளில்கூட மிரட்சி ஏற்படத் தொடங்கியது.

“நீதான் அந்தக் கொள்ளையை நடத்தினவ மாதிரி இருக்கயேடி! உன் அண்ணன் வீட்டிலே என்ன நடந்தது? நீ அவனை வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னதுபோல் அவனும் சொன்னானா?” என்றார் வக்கீல். இப்போது அவருக்குக்கூட கொஞ்சம் கோபம் வந்துவிட்டது.

“என் அண்ணாதான் அந்தக் கொள்ளையை நடத்தினதுன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் தடுமாற்றத்தோடு. அவளது நிலை பரிதாபத்துக்குரியதாக ஆகிவிட்டது என்பதை வக்கீல்புரிந்து கொண்டார். இனி தன் வக்கீல் வேலை மூலமாகத்தான் அவளிடமிருந்து விஷயங்களைக் கிரகிக்க வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டார்.