அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
3

பாரிஸ்டர் விக்டர், எப்படிப்பட்டவரோ திறமைசாலியோ அல்லவோ என்பதல்ல சூடாவின் சந்தேகம். ஜாமீனில் விடுதலை பெறுவதற்கு அப்படியொன்றும் பிரமாதன அறிவும் ஆற்றலுமுள்ள வக்கீல் தேவையில்லை. வழக்கின் விசாரணையின்போதுதான், கீர்த்தியுள்ள வழக்கறிஞர் வேண்டும் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறாள். எனவே, அது விஷயமாக அச்சம் கொள்ளவில்லை. ஆனால் தேவரிடம் தீராப்பகை கொண்ட தன் அண்ணன், பாரிஸ்டர் விக்டரை ஏற்பாடு செய்தார் என்பதறிந்ததும், இதிலென்ன சூது இருக்குமோ, எதிர்த்துக் கெடுப்பதற்குப் பதிலாகக் கூட இருந்தே கெடுக்கிறாரோ என்று அஞ்சினாள். துளியும் எதிர்பாராத நிலையிலே, இந்த ஆபத்து நேரிட்டதால் சூடாவுக்கு , யாரிடமும் சந்தேகமும், எதைக் கண்டாலும் கேட்டாலும் பயமும் உண்டாயிற்று. மருண்ட மங்கையின் மனம் ஒரு நிலையில் இல்லை. வக்கீல் சங்கரய்யர், கண்டிப்பாக வர முடியாது என்று கூறிவிடவே, வேறு வழியின்றி, சூடா தன் அண்ணன் வீட்டுக்கு ஓடினாள்.

கலியாணசுந்தர சாஸ்திரிகள் அந்த நேரத்திலே, இருந்த நிலைமை, அவருக்கொரு தங்கை உண்டு. அவள் கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். அதனால் அவள் கலங்கிக் கிடக்கிறாள் என்று யாரும் நம்பமுடியாதபடி இருந்தது. அவ்வளவு நிம்மதியாகக் காணப்பட்டார். சூடா உள்ளே நுழைந்தபோது, அவர் தமது நண்பருடன், இலக்கியச் சுவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் - கேட்டுக் கொண்டிருந்தார் என்று கூறலாம். பேசினவர், தமிழ் இலக்கியத்தின் சிறப்பை விளக்கப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தார். சாஸ்திரிகளோ, வடமொழி இலக்கியத்தின் வசீகரத்துக்கு இணை கிடையாது என்ற முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று கூறினார். “அவர் உள்ளே அவதிப்படுகிறார்! அநியாயமாக அவர்மீது வழக்கு தொடர்கிறார்கள்! கொஞ்சமேனும் இரக்கமின்றி, இங்கே அவர் இலக்கியத்தின் சுவை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாரே, எவ்வளவு ஈரமற்ற நெஞ்சு! இந்தப் பேச்சுக்கு வேறு நேரமா இல்லை” என்று எண்ணி ஏங்கினாள் அந்த ஏந்திழையாள். தமிழ் இலக்கியச் சுவையை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்த அன்பர் அதுசமயம் “சாஸ்திரிகளே! காதல் விஷயமாகத் தமிழ் இலக்கியம் தீட்டிக்காட்டிய ஓவியங்கள் போல, வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூறுவேன்” என்று கூறினார், சாஸ்திரிகள். எந்த மொழியிலே காதல் சித்திரம் அழகாகத் தீட்டியிருக்கிறார் என்பதிலே கவனம் செலுத்தவில்லை. அவருக்கு அந்தச் சொல்லே, கோப மூட்டிவிட்டது. சாதாரண சொல்லா அது! மகா பொல்லாதது! அந்த ஒரு சொல்தானே, சூடாமணியை, அவளுடைய உரிமை உலகிலிருந்து, வேறோர் உலகுக்குக் குடி ஏற்றிவிட்டது! ‘அண்ணா இஷ்டம்’ என்று எதற்கும் கூறிக் கொண்டிருந்தவளை, ‘அவர் கிடக்கட்டும்! அவருக்கு என்ன தெரியும்?’ என்று பேச வைத்தது; அவர் உள்ளத்திலே புயலை மூட்டிற்று! குடும்பத்திலே கொந்தளிப்பை உண்டாக்கிற்று. சட்டம், சம்பிரதாயம், கட்டுக்காவல் முதலியவற்றை உடைத்தெறிந்த வெடிகுண்டல்லவா அது. சனாதனத்தைச் சுக்கு நூறாக்கிற்றே அந்தச் சம்மட்டி. அண்ணனுக்கும் தங்கைக்கும் இருந்த வாத்சல்யத்தைக் கெடுத்த அந்தக் கொடுமொழியை, எந்தப் பாஷையிலே எழுதினாள் என்ன என்று எண்ணினார்.

“காதல்! மகாபெரிய காதல்! அது கிடக்கட்டும் பிள்ளைவாள்! அந்த இலக்கியக் காதலைப் படித்துப் படித்து, கொஞ்சம் புன்சிரிப்புக் காட்டத் தெரிந்தவனையெல்லாம் துஷ்யந்தனாக்கிக் கொள்ளும் சகுந்தலைகள் அதிகமாகிவிட்டார்கள்! கண்டது அவ்வளவுதான்!” என்று கூறினார். “தமிழிலே உள்ள காதலை நீங்கள் கண்டதில்லை. சாஸ்திரியாரே! காளிதாசனை விடச் சிறந்த முறையிலே காதலைத் தீட்டியுள்ளனர் தமிழிலே” என்று பழைய பாடத்தையே படிக்கலானார் பண்டிதர். எந்தக் காதலைப் பற்றி இவருக்குள் சர்ச்சை நடந்ததோ - ஏட்டுக் காதலைப் பற்றி இருவரும் வீட்டுக்கூடத்திலே பேசிக் கொண்டிருந்த அதேபோது - காதலை வெறும் எழுத்தாக, படித்து ரசித்திடும் வாசகமாக மட்டும் கொள்ளாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைத்துக் கொண்ட வனிதை, அங்கோர்புறம் அழுத கண்களுடன் நின்றிருந்தாள். அவளுடைய சோகத்தைத் துடைக்கத் துடிக்காமல், சொல்லம்பு வீசிக் கொண்டிருந்தார் சாஸ்திரியார். சொல்லம்பு தடுத்தாலொழிய, பேச்சு நிற்காது என்பதைக் கண்ட சூடா, சாஸ்திரிகளிடம் சென்று, தன் குறையைக் கூறலானாள்.

“பாரிஸ்டர் விக்டரையா இந்தக் கேசுக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்” என்று கேட்டாள் பயந்தவண்ணம்.

“யார் சொன்னது?” என்று வறட்டுக் குரலிலே கேட்டார் சாஸ்திரி.

“சங்கரய்யர்”

“அவனை எப்போது கண்டாய்?”

“நீங்கள் டெலிபோனில் பேசினபோது நான் அங்கேதான் இருந்தேன்.”

பேச்சு வளரவிடவில்லை சாஸ்திரிகள்; இடையிலே பண்டிதரிடம் பேசலானார்.

“ஆமாம், டெலிபோன் போன்ற ஏதாவதொரு சக்தி இருந்ததாகத் தமிழ் இலக்கியத்திலே தெரிகிறதோ?”

“டெலிபோன் என்ன, மகாபிரமாதமான சக்தியா?”

“வளையாதீர் பண்டிதரே! நேரடியாகப் பதில் கூறும். வடமொழி இலக்கியத்திலே, ஒரு ரிஷிக்கும் மற்றொரு ரிஷிக்கும் மானசீகமான தொடர்பு உண்டு, அதுபோலத் தமிழ் இலக்கியத்திலே உண்டா?”

இந்தக் கேள்விக்குச் சற்று விரிவாகப் பதில் கூற வேண்டுமென்று பண்டிதர் தீர்மானித்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய காவியங்களைத் துணைக்கு அழைக்கத் தொடங்கினார். சூடா இடைமறித்தாள்.

“விக்டர், அவ்வளவு பெரிய வக்கீல் அல்லவாமே!”

“ஆமாம்! ஆரம்ப திசைதானே! அரை வயித்தியனாவதற்குள் ஆயிரம் பேர் சாக வேண்டுமாமே!”

“அண்ணா! உங்களுக்கு எவ்வளவு நெஞ்சு வற்றிக் கிடக்கிறது. என் மனம் படும்பாடு பற்றித் துளியும் கவலையின்றிப் பேசுகின்றீரே! விக்டர், திறமையான வக்கீல் அல்ல என்று தெரிந்தும், ஏன், அவரை ஏற்பாடு செய்தீர்?”

“என்னடி இது! நீ என்ன வம்புக்கென்றே வந்திருக்கிறாயா? யார் அவனைத் தாம்பூலம் வைத்து அழைத்தார்கள்? ஒரு பத்திரிகை ஆசிரியர் சம்பந்தமான கேசிலே ஈடுபட்டால் தனக்குப் பேர் வருமென்று அந்த முட்டாள் எண்ணினான். ‘சரி’ என்று ஒப்புக்கொண்டேன். எனக்கு இருக்கிற வேலை தொந்தரவுக்கு, அவனைத் தேடிக் கொண்டுபோய், வக்கீலாக இருக்கும்படி ஏற்பாடு செய்ய நேரந்தான் உண்டா?”

“என் கணவருக்காக இதைச் செய்யவில்லை! விக்டருக்காக செய்தீரா? பேஷ், அண்ணா! தயவு செய்து இனி இந்த விஷயத்திலே தலையிட வேண்டாம்”

“நடப்பது நடக்கட்டும்.”

“வேதனையடைந்த உள்ளத்திலிருந்து கிளம்பும் என் வார்த்தைகள்”... “என் குடும்பத்தை நாசமாக்கும் என்று சபிக்கப் போகிறாயா? சரி, செய்! சூடா! ஒன்று கேள்! நான், சுலபத்திலே கோபம் கொள்ளுவதில்லை. கோபம் வந்ததோ அது சுலபத்திலே அடங்குவதில்லை. புற்றுக்குள்ளே இருக்கும் பாம்பு, வெளியே வந்தால், நடமாடுபவருக்கு ஆபத்து! நீயோ, அதைக் காலால் மிதிக்கிறாய்!”

பாதகனிடம் பேசிக் கொண்டிருப்பதைவிடப் பதியை மீட்பதற்கான காரியத்தைக் கவனிப்பதே சரி என்று தீர்மானித்த சூடா, மேலும் ஒன்றும் பேசிக் கொண்டிராமல், அந்தக் கேடனின் வீட்டை விட்டுப் புறப்பட்டு, நேரே பாரிஸ்டர் விக்டரின் பங்களா சென்றாள். அவனிடம் சென்று, தன் நிலையைக் கூறி, அக்கரையாகச் கேசை நடத்தி, எவ்விதத்திலாகிலும், தன் கணவரை வெளியே கொண்டுவர வேண்டுமென்று வேண்டிக் கொள்வதென்று தீர்மானித்தாள். ஏழையின் கண்ணீருக்கு, பெண்ணின் அழுகுரலுக்கு இரங்காத பேயன், இருதயமற்ற சாஸ்திரி ஒருவன்தான் இருக்க முடியும்! மற்றவர்கள் யாராக இருந்தாலும், கருணை காட்டுவார்கள் என்று எண்ணி அண்ணன் மீது இருக்கும் கோபத்தை வெளியே காட்டவோ, பழிக்குப் பழி வாங்கவோ, வேறோர் சமயம் வரும், என்று மனதிற்குள் கூறிக்கொண்டு வேகமாக நடந்து, பாரிஸ்டரின் வீடு சென்றாள்.

‘பாரிஸ்டர் உள்ளே இருக்கிறார்!’ என்று அறிவிப்புப் பலகை இருந்தது. ஆனால் வேலையாள், “ஐயா! காபி சாப்பிடுகிறார். கொஞ்ச நேரம் உட்காருங்கள். இந்தச் சீட்டிலே உங்கள் பெயரை எழுதிக் கொடுங்கள்” என்று கூறினான். எங்கு போனாலும் இப்படிப்பட்ட தொல்லைதானா? என்று சலித்துக் கொண்டாள். அவளுக்கு உள்ள அவசரம் பாரிஸ்டரின் வேலையாளுக்கு என்ன தெரியும்? தெரிந்தால் மட்டுமென்ன? அவன் தன் வேலையை ஒழுங்காகச் செய்துதானே ஆக வேண்டும். வந்திருப்பது யார், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று விசாரித்து, “ஐயா”விடம் சொல்லுவதற்குத்தானே அவன் மாதம் இருபது பெறுகிறான். சாதாரண வக்கீல் வீடாக இருந்தால், கட்சிக்காரர் மடமடவென்று உள்ளே நுழையலாம். ஒரு பாரிஸ்டரின் மாளிகையிலே நடந்து கொள்ள வேண்டிய முறைகள் இல்லையா! வேலையாள்கூட, சூடா வந்திருக்கும் நிலையினால், அந்த அம்மையார், மிகுந்த கலக்கத்திலே இருப்பதைத் தெரிந்து கொண்டான். தெரிந்து கொண்டு அவன்தான் என்ன செய்ய முடியும்!

“இதோ சீட்டு. இதிலே உங்கள் பெயரை எழுதிக் கொடுங்கள்” என்று அன்பும் மரியாதையும் கலந்த குரலிலே கூறினான். அவன் தந்த சீட்டிலே, சூடா, தன் பெயரை எழுதிக் கொடுத்தாள். பூனைபோல மெதுவாக உள்ளே சென்றான் வேலையாள். மறுநிமிஷம் வந்தான். “இப்போதுதான் காப்பி சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்” என்று கூறினான். “காப்பி சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும்?” என்று சூடா கேட்டாள். காப்பி சாப்பிடுவது என்றால், வெறும் காப்பி சாப்பிடுவது என்று அர்த்தமில்லையம்மா! பாரிஸ்டரின் பழக்கம், காப்பியைக் கோப்பையிலே ஊற்றுவார் முதலில்! கொஞ்சம் சூடு அதிகமாக இருக்கும். சரி, ஆறட்டும் என்று எண்ணி, அதுவரையில் சும்மா இருப்பதா என்பதற்காக ஒரு ‘வில்ஸ்’ பற்ற வைப்பார். அந்தப் புகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதா என்று சிகரட் பிடித்தபடி பேப்பரைப் பார்ப்பார். அதிலே ஏதாவது ‘ரேஸ்’ விஷயம் கிடைத்துவிட்டதோ, அவ்வளவுதான். காப்பி ஆறி விடுவது தெரியாது, மறுபடி காப்பி சூடாக்க வேண்டும். ஆக அரைமணி நேரமாவது பிடிக்கும். சில நாட்களிலேயே ஒரு மணியுமாகும்.” என்று கூறிக் கொண்டிருக்கையிலே, மணி அடித்தது. “சார்” என்று கூவிக் கொண்டே உள்ளே ஓடினான் வேலையாள். “யார் வெளியே?” என்று பாரிஸ்டர் கேட்டார். சீட்டை நீட்டினான் வேலையாள்.

“முட்டாள்! முன்னமேயே சொல்லக் கூடாதா? அப்படிப்பட்டவர்களையா காக்க வைப்பது” என்று கண்டித்தார் பாரிஸ்டர். ஓடினான் வெளியே. “அம்மா வாருங்கள்,” என்று அழைத்தான். அவன் வெளியே சென்றதும் பாரிஸ்டர், நிலைக் கண்ணாடிமுன் நின்று, கொஞ்சம் முகத்தைத் துடைத்துக் öõண்டு, மற்றொரு ‘வில்ஸ்’ எடுத்தார். சூடாவும் உள்ள நுழைந்து, பாரிஸ்டருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு நிற்க பாரிஸ்டர், சூடா நமஸ்கரித்ததைக் கவனியாமல், ஒரு சோபாவைக் காட்டி, “உட்காருங்கள்! மிஸ் உல்லாஸ்!” என்று கூறினார். சூடாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது! உல்லாஸ்! மிஸ் உல்லாஸ்! இதென்ன, பாரிஸ்டர் பிதற்றுகிறாரே! ஒருவேளை அவர் தமாஷ் பேச்சுக்காரராக இருப்பாரோ என்று எண்ணினாள்.

“நீங்கள் நேற்று மாலையும் வந்தீர்களாம்,” என்று பாரிஸ்டர் பேச்சைத் துவக்கினார்.

“நானா?” என்று கேட்டாள் சூடா, திகைத்துப் போய்.

“சிகரெட்...” என்று கூறிக்கொண்டே, சிகரெட் டப்பியை மரியாதையுடன், சூடாமுன் காட்டினார் பாரிஸ்டர். “இதேது! இவன் பித்தன் போலிருக்கிறதே” என்று எண்ணித் திகிலடைந்து, சூடா, ‘வேண்டாம்’ என்று தலையை அசைத்தாள். பாரிஸ்டர், ‘சாரி’ என்று அதற்கோர் மரியாதைப் பேச்சு உதிர்த்துவிட்டு, “உங்க பிரதருக்கு, ‘வில்ஸ்’ இருந்துவிட்டால் போதும்! உலகிலே வேறு எதுவும் வேண்டாம் என்பார்” என்றார். திகைப்புக்கு மேல் திகைப்பாக இருக்கிறதே என்று சூடா எண்ணினாள். அண்ணா சிகரெட் பிடித்து, நான் பார்த்ததில்லையே! இதென்ன இந்தப் பாரிஸ்டர், இப்படிச் சொல்கிறாரே! ஒருசமயம், அண்ணா, இரகசியமாகச் சிகரெட் பிடிப்பவர் போலும் என்று எண்ணி ஒருவாறு சமாதானமடைந்தாள்.

“எடிட்டர் தேவர் கேஸ் விஷயமாகக் கொஞ்சம் பாயின்ட் பார்க்க வேண்டியிருந்தது காலையிலே என்றார் பாரிஸ்டர். சூடாவுக்கு முகத்திலே கொஞ்சம் தெளிவு பிறந்தது. “ஏதோ இந்த அளவு அக்கறை காட்டுகிறாரே பாரிஸ்டர்,” என்று, “நானும் கேஸ் சம்பந்தமாகத்தான் வந்திருக்கிறேன்” என்றாள் சூடா. பாரிஸ்டர் புன்சிரிப்புடன், “தெரியும் உங்க பிரதர் முன்பே சொல்லிவிட்டார்” என்றார். அண்ணனும் சொல்லி இருக்கிறார். பாரிஸ்டரும் லா பாயின்ட் பார்த்து வைத்திருக்கிறார். அக்கரையாகத்தான் வேலை செய்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் விளையாட்டுக்காரர் போலிருக்கிறது. என்னை மிஸ். உல்லாஸ், என்று கூப்பிட்டாரே, சிறுபிள்ளைத்தனமாக என்று சிந்தித்தவண்ணம் சூடா இருந்தாள்.

“என்ன யோசனை! கேஸ் ஜெயிக்குமா என்றா?” என்று பாரிஸ்டர் கேட்டார். “ஆமாம்” என்று கூறும் பாவனையிலே சூடா தலை அசைத்தாள். “கொஞ்சம்கூடப் பயப்பட வேண்டாம். நான் ஜெயித்துத் தருகிறேன்.” என்றார் பாரிஸ்டர். முகமே ஜ்வலித்தது சூடாவுக்கு. இதிலே ‘கஷ்டமே கிடையாது. இரண்டே பாயிண்ட் கூற வேண்டும். உங்க புருஷர் கோயில் பக்கமே போவதில்லை. பாயின்ட் நெம்பர் ஒன்!” என்று ஆரம்பித்தார், பாரிஸ்டர். கோயில் பக்கமே போகாதவர் மீது கோயில் கொள்ளை சம்மந்தமாகக் கேஸ் தொடுத்ததை உடைக்க இது சரியான ஆதாரந்தான் என்று எண்ணிய சூடா அகமகிழ்ந்து, பாரிஸ்டர் விக்டர், புத்தி கூர்மை உள்ளவர்தான் என்று சந்தோஷப்பட்டு, மேலும் அவருக்குச் சில ‘பாயின்ட்’ தருவதற்காக “கோயில் பக்கம் போகாதது மட்டுமில்லை; கோயிலிலே உள்ள முறையே தவறு என்று கூறுவதுண்டு” என்றாள்.

“பேஷ்! பாயின்ட் நெம்பர் ஒன்றுக்கு இது புதிய பலன் தருகிறது. இந்த பாயின்ட் தீர்ந்ததும் நம்பர் 2. இதுவும் சுலபமாக நிரூபிக்கக் கூடியது’ என்று கூறி முடிப்பதற்குள், சூடா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு இருந்தாள். அவள் மீது வெடிகுண்டு வீசப்படுவது போலிருந்தது பாரிஸ்டரின் பேச்சு. “கோர்ட்டிலே நான் கூறப் போகும் இரண்டாவது பாயின்ட். உங்கள் புருஷர் ஓயாத குடிகாரர் என்பது” என்றார். “என்ன, என்ன?” என்று அலறினாள் சூடா. என்ன செய்வது! சொல்லித் தான் ஆக வேண்டும். கேஸ் ஜெயிக்க வேண்டுமென்றால் அவர் குடிகாரர் என்று ருஜுப்படுத்தியாக வேண்டும். வேறு வழியில்லை” என்று வாதாடினார் பாரிஸ்டர்.

“என்ன சார் இது! என் கணவர் குடிகாரரா? இது என்ன வேடிக்கை” என்று அச்சத்துடன் அணங்கு கேட்டாள். அந்த அச்சம் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி பேசலானார் பாரிஸ்டர். “அவர் குடிகாரர். கோயிலுக்குப் போகாதவர் என்ற இரண்டு பாயின்ட்டிலேதான் கேசே இருக்கிறது. கோர்ட்டுகளிலே இப்போதெல்லாம் இந்த மாதிரியான கேஸ் சம்மந்தமாகக் கொஞ்சம் கண்டிப்பாக இருக்கிறார்கள். குடிகாரர் என்று கோர்ட் முன்னிலையிலே கூறினால் மானக்குறைவாக இருக்குமே என்று யோசித்துப் பயனில்லை. இந்த இரண்டு பாயின்ட்டைச் சொன்னால்தான், உங்களுக்கு டைவர்ஸ் கிடைக்கும்” என்றார் பாரிஸ்டர்.