அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
13

போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜபதி நாயுடு, கோயில் கொள்ளை சம்பந்தமான எல்லா தஸ்தாவேஜிகளையும் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தார். தேசவீரன் பத்திரிகை ஆசிரியர் தேவர் மீது குற்றம் சுமத்தத்தக்க ஆதாரங்களை மறுபடியும் படித்துப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டருக்குக்கூட, தேவர் மீது ஒருவித பக்தி உண்டு. அவர் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறார் என்பதற்காக அல்ல; நாடு, மக்கள், மொழி, இனம் என்பதற்காக இரவு, பகல் பாராது மழை, வெய்யில் கருதாது பாடுபடுகிறாரே என்பதற்காக! பொதுத்தொண்டு என்று கூறி, கிடைத்தவரையில் சுருட்டிக் கொண்டு, ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கக் கற்றுக் கொண்டிருக்கும் நம்நாடு அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், பேச்சும் மூச்சும் கடமை கடமையென்றே அலைந்து கொண்டிருக்கிறாரே, அதற்காக!

மேடையேறி பேசக் கற்றுவிடுவதனாலேயே ஒருவன் அரசியலில் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டு விடுகிறான்! தொடராகக் கூட அல்ல; விஷயங்களை நிரல்படக்கோத்து எடுத்துத் தரும் பாங்குகூட அற்றவர்கள், மேடைக்கு முன்வந்து நின்று நான்கு வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டுப் போய் விடுவதனாலேயே பெரிய பேச்சாளர் என்ற பட்டத்தை ஏந்திக் கொண்டு, அதிகார எந்திரத்தை எந்தெந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறார்கள் சில பேர்! தேவர் அப்படி அல்லர்! தேர்ந்த பேச்சாளி! எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்து அணுவளவும் பிறழாது, அது பற்றிய விளக்கங்களை எத்தனை எத்தனை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுவார்! நுண்ணறிவுவோடு நூலறிவும் நிரம்பியவர் அவர்! எந்த ஒன்றைப் பற்றியும் தீவிரமான சிந்தனைக்குப் பின்னர், சரியான வழியில் செயல்படுபவர் அவர்! இதெல்லாமாகச் சேர்ந்துதான் அவர்மீது, இன்ஸ்பெக்டருக்கு மதிப்பை உண்டாக்கி வைத்திருந்தது.

கோபிநாதர் கோயிலிலே கொள்ளை நடந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும், எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தாரோ அந்த அளவுக்கு, அதனை நடத்தியவர் தேவர்தான் என்றும், அதற்கு இவை இவையெல்லாம் ஆதாரங்கள் என்றும் தகவல் கிடைத்தபோதும் அதிர்ச்சி அடையத்தான் செய்தார்!

கஜபதி நாயுடு முதலில் நம்பத்தான் இல்லை. தேவரா? என்ற வினாக்குறியை விடுத்துவிட்டு திகைத்து நின்றார். நின்று? ஆதாரங்கள் அடுக்கடுக்காக எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்போது திகைப்பும், தயக்கமும் எத்தனை நேரத்துக்கு நீடித்திருக்கும்?

வேதனையுடன் சென்றுதான் கைது செய்தார். கைது செய்யும்போது கூட அவருக்கு கலக்கமாகத்தான் இருந்தது. ஆதாரங்கள் யாவும் பொய்யானதாக இருக்கக் கூடாதா? என்றுகூட மனத்திற்குள் நினைத்துக் கொண்டார்.

இப்போது அந்தப் பரிவுணர்ச்சி முற்றிலும் மறைந்துவிட்டது. ஆதாரங்களிலும், சாட்சியங்களிலும் இருக்கின்ற ஓட்டை, உடைசல்கள் மூலம் தேவர் தப்பித்துவிடக் கூடாதே என்பதற்காகக் கவனத்துடன் பரிசீலனை செய்து கொண்டிருந்தார்.

நேற்றுவரையில் யோக்யனாக இருந்தவன், இன்றைக்குச் சட்டத்தின் முன் எவ்வளவு பெரிய மோசடிக்காரனாக ஆகிவிடுகிறான்! ஆகிவிடுகிறானா அல்லது ஆக்கப்படுகிறானா என்பதெல்லாம் வேறு விஷயங்கள், இன்றைக்கு சட்டத்தின் முன்னே அவன் குற்றவாளியாகக் கொண்டுவரப்பட்டு விட்டான்!

நேற்றைய பசு - இன்றைக்குப் புலி; இன்றைய பசு - நாளைக்கு? உண்மைப் பசு எது? தோல் போர்த்த புலி எது? கண்டறிய முடியாதவாறு திறமை செயல்பட்டிருக்கிறது. கண்டறிவதுதான் தன் கடமை! அதற்காகத்தான் அரசு ஊழியம்! இந்த வகையிலே ஓடிக்கொண்டிருந்தது கஜபதி நாயுடுவின் எண்ண ஓட்டங்கள்.

அப்போது டெலிபோன் மணி அடித்தது. எண்ண இழைகள் அறுபட்டதும், இன்ஸ்பெக்டரின் கை இயந்திரம் போல ரீசிவரை எடுத்தது. ‘யெஸ் பிளீஸ்’ என்ற வார்த்தைகளை உதிர்த்தன அவரது உதடுகள்.

எதிர்த் திசையிலிருந்து “இங்கே நான் வக்கீல் சங்கரன் பேசுகிறேன். இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா? என்ற ஒலி கேட்டது. ‘நான்தான் பேசுகிறேன். என்ன விஷயம்’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘முக்கியமான ஒரு விஷயம். நேரில் பேச வேண்டும்’ என்றார் சங்கரய்யர். ‘வாருங்கள் பேசலாம்!’ என்று சொல்லிவிட்டு ரிசீவரை வைத்தார் கஜபதி நாயுடு.

வக்கீல் நம்மைத் தேடிக் கொண்டு வருவானேன்? சங்கரய்யர் பிரபலமான வக்கீல்! முன்போர்முறை உத்தமானந்தர் மீது போடப்பட்ட பலாத்காரப் புணர்ச்சி தொடர்பான வழக்கில் கீழ்க்கோர்ட் அவருக்கு ஆறு வருடம் சிட்சை அளித்திருந்ததையே, இந்த வக்கீல் மேல்கோர்ட்டில் ஆஜராகி, கேசையே உடைத்துத் தள்ளிவிட்டார்! இப்போது எதற்கு இங்கு வரவேண்டும் என்பன போன்ற எண்ணங்களுக்கு இடையே, கைகள் தாமாகப் பைல்களைப் புரட்டிக் கொண்டிருக்க, கண்களை மூடி, யோசனையில் மூழ்கத் தொடங்கிவிட்டார்!

“நமஸ்காரம் இன்ஸ்பெக்டர்!” என்ற குரல் கேட்டு, விழிகளை திறந்த கஜபதி நாயுடு, எதிரே சங்கரய்யர் நின்று கொண்டிருந்ததைக் கண்டு, பதில் வணக்கம் செய்துவிட்டு, அமரச் சொன்னார்.
சங்கரய்யர் அமர்ந்து கொண்டே, ‘கொஞ்சம் தனியா பேசணும்; டைம் இருக்கோ!’ என்றார். ‘இங்கேயே நீங்கள் எதையும் பேசலாம்! விஷயத்தைச் சொல்லுங்களேன்’ என்றார் இன்ஸ்பெக்டர்.
“நம்ம தேவர் கேஸ் விஷயமா சில விஷயங்களைச் சொல்லணும்” என்ற உடனேயே, இன்ஸ்பெக்டர், “எல்லாம் ரெக்கார்டு ஆயிட்டுதே; இன்னைக்கோ நாளைக்கோ கேஸ், பைல் ஆயிடுமே” என்றார்.

“எனக்குக் கிடைத்த சில விஷயங்களை உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். தெரியப்படுத்த வேண்டியது என் போன்றவர்களது கடமை.”

“சொல்லுங்கள்!”

“இப்போது நீங்கள் நான் சொல்லப் போவதனைக் கேட்டு திடுக்கிடுவீர்கள். நீங்களும், உங்கள் இலாகாவினரும் கொஞ்சம் சிரமப்பட்டால், கொள்ளை வழக்கு திசை திரும்பிப் போய்விடும்.”

“அப்படியா! தேவர் குற்றவாளி அல்ல என்று நீங்கள் எடுக்கும் முடிவிலிருந்து பிறக்க வேண்டும். எனக்கு நீங்கள் முதலில் ஒரு உதவி செய்ய வேண்டும். அதாவது நம் ஊர் கேடிப் பட்டியலைப் பார்வையிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும். உடனிருந்து உதவி செய்ய வேண்டும்.”

“விஷயத்தைச் சொல்லாமல் இப்படிக் கேட்டால்?”

“உதவி செய்வதாகச் சொல்லுங்களேன்”

“உங்கள் விளக்கத்தைப் பொறுத்துச் சொல்ல வேண்டியதல்லவா அது?”

“சொல்கிறேன் இன்ஸ்பெக்டர்! நீங்கள் திடுக்கிடக் கூடிய செய்தி! திகைப்புடன் கேட்க வேண்டிய செய்தி அது. அதாவது கோயில் கொள்ளை வழக்கில் தேவர் மீது வழக்குப் போட, எவர் எவர் உங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் மீதே நீங்கள் சந்தேகப்பட வேண்டியிருக்கும் நிலைமை.”

என்றதும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த கஜபதி நாயுடு, நிமிர்ந்து உட்கார்ந்தார். விழிகள்கூட அகல விரிந்தன.

மெல்ல சிரித்துக் கொண்டே அவர், ‘இதுகூட உத்தமானந்தர் கேஸ் என்று நினைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். இகழ்ச்சிக் குறிப்பு தொனித்தது அவர் குரலில்.

“நான் தேவர் விஷயமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் உள்ள கேடிகளின் பட்டியலைத் தந்தால் நான், முதலில் என் யூகங்களை உறுதிபடுத்திக் கொண்டு, உங்களுக்கு விளக்கம் தரமுடியும்.” என்றார் சங்கரய்யர்.

விஷயம் புரிந்த ஒரு வக்கீல், பிரபலமானவர் இவ்வளவு தூரம் சொல்வதால், ஏதாவது புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், ஒரு போலீஸ்காரரை அழைத்து, ரெக்கார்டு அறையிலிருந்து, குறிப்பிட்ட பைலைக் கொண்டு வரக் கூறினார்.

போலீஸ்காரன் பைலைக் கொண்டு வந்து கொடுத்ததும், முதலில் கஜபதி நாயுடுவே ஒரு முறைப் புரட்டி விட்டு, அதை வக்கீலிடம் நீட்டியபடியே “இந்தப் பட்டியலிலிருந்து சிலரைக் குறிப்பிடப் போகிறீர்கள்” என்றார்.

“பட்டியலைக் கேட்கிறேன் என்கிறபோதே, உங்கள் யூகம் அப்படித்தானே இருக்க முடியும்?” என்று சொல்லிக் கொண்டே புரட்டத் தொடங்கினார் வக்கீல். புரட்டிக் கொண்டே, “இன்ஸ்பெக்டர், கல்யாண சாஸ்திரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இப்போது போலீஸ்காரர் யாராவது இருக்கிறாரோ?” என்றார்.

“ஏன், ஒரு போலீஸ்காரர்கூட இந்தக் கொள்ளையில் பங்கேற்றிருக்கிறார் என்று கூறப் போகிறீர்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுவிட்டுச் சிரித்தார். “நீங்கள் திறமைமிக்க வக்கீல் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக உங்கள் திறமையை, போலீசுத் துறையின் மீதே களங்கம் கற்பிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்றார் கஜபதி நாயுடு. தொடர்ந்து ‘தேவர் வழக்குச் சம்பந்தாக புலன் விசாரணையின் ஒரு பகுதியாக சிலர் போய் வந்திருக்கக் கூடும்” என்றார்.

“நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது இன்ஸ்பெக்டர்! நாம் முதன் முதலாக யாரையும் ஒருவனைக் குற்றவாளிதான் என்று தீர்மானித்து விடுவதில்லை. முதலில் சந்தேகப்படுகிறோம்; சந்தேகத்துக்குரிய தடயங்களுக்கு ஆதரவாக விஷயங்களைத் தேடுகிறோம். புலனாய்வில் கிடைக்
கின்றவைகளைக் கொண்டுதான் வழக்கு என்று தொடர்கிறோம். இல்லையா!” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் சட்டென்று, கேடிப் பட்டியலின் மீது கண்ணோட்டத்தை நிறுத்தி, “இன்ஸ்பெக்டர்! இந்த ஆறுகமும், வரதனும் எப்படிப்பட்டவர்கள் என்று கொஞ்சம் கூற முடியுமா?” என்று கேட்டார்.

“பெயர் எந்தப் பட்டியலிலிருக்கிறது என்று தெரிந்து கொண்ட பின்னரும், ஒரு புகழ்பெற்ற வக்கீல் கேட்கும் கேள்வியா இது?” என்று கூறிவிட்டு, பட்டியலை வாங்கி இன்ஸ்பெக்டர் கவனித்தார்.

ஆறுமுகம், வரதன் இவர்களைப் பற்றிய விவரங்களையும், அவர்கள் ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்த குற்றங்கள் பற்றியும் கண்டறிந்து கொண்டு, இன்ஸ்பெக்டர், “ஏன் வக்கீல், இவர்கள்தான் இந்தக் கொள்ளையை நடத்தினார்கள் என்று கூறுகிறீரா? எனக் கேட்டுவிட்டு குற்றவாளியின் முகத்தைக் கூர்ந்து கவனிப்பதுபோல், வக்கீலின் முகத்தையும் ஆராயத் தொடங்கினார்.

முகத்தின் மேலும் கீழும் பார்வையைக் செலுத்திக் கொண்டே கஜபதி நாயுடு, “நீங்கள் தேவரை நிரபராதியாக்க முயற்சிக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“உண்மைதான் இன்ஸ்பெக்டர்! தேவர் நிரபராதிதான் என்பதை என் வரையில் முடிவுக்கு வந்துவிட்டேன். என் முடிவின் பக்கம் இனி உங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் முயற்சிக்கிறேன்!” என்று கூறிவிட்டு, இன்ஸ்பெக்டரின் மிக அருகில் நெருங்கி அமர்ந்துகொண்டு, காதோடு காதாக சில விஷயங்களைச் சொன்னார்.

சங்கரய்யர் சொல்லச் சொல்ல, இன்ஸ்பெக்டரின் விழிகள் விரியத் தொடங்கின. உண்மையாகவா! அப்போது முதலில் அவர்களைக் கைது செய்துவிட்டால் முக்கால் பகுதி விஷயம் வெளியாகிவிடும். இல்லையா?” என்றார் மகிழ்ச்சி பொங்க. “நான் தேவர் மீது நல்ல நம்பிக்கையுடையவன்! அவரது அறிவாற்றலையும், நாட்டுப்பற்றையும் பாராட்டுபவன்! இப்படி ஒரு வழக்கு அவர் மீது வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கேள்விப்பட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்தவன் நான்தான்! நல்ல தகவல்களைத் தந்தீர்கள்!” என்று தொடர்ந்து கூறிக் கொண்டே எழுந்தார்! “சரி, விரைவில் உங்களைச் சந்திக்கிறேன், விடை கொடுங்கள்!” என்று கூறினார்.

“நன்றியுடன், நம்பிக்கையுடன் செல்கிறேன்! மாலையில் நானே வந்து சந்திக்கிறேன்” என்று கூறி இடம் விட்டகன்றார் சங்கரய்யர்.

அவர் போனதும், இன்ஸ்பெக்டர் பரபரப்படைந்தார். ஜவான்கள் செயல்படத் தொடங்கினர். போலீஸ் வேன் ஒன்றில் ஏறிக் கொண்டனர் அனைவரும்; வேன் புறப்பட்டது.