அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
9

ஆணா, பெண்ணா? உடையைப் பார்த்தால் ஆடவன் போலிருக்கிறது. நடையோ நளினமுடையது போலிருக்கிறதே! முகத்திலோ ஆண்மை ஒளியை விடப் பெண்மையின் பொலிவு காணப்படுகிறது. குரலிலேயோ கோதையருக்குரிய பண் காணோம்! பெயரோ ஆணா பெண்ணா என்ற சந்தேகத்தைத் தீர்த்து வைக்கக் கூடியதாகக் காணோம்! சுந்தரம் - இருபாலருக்கும் இருக்கக் கூடிய பெயர்.

சிலரைக் கண்டால், இதுபோன்ற சந்தேகம் எழுவதுண்டு. ஆனால் இவ்விதம் சந்தேகிக்கிறோம் என்று தெரிந்தாலே அவர்கள் சீறுவர்; அது அவ்வளவு வேடிக்கையல்ல!

புத்திசாலியா முட்டாளா? அவனுடைய நிலையைப் பார்த்தால், அவனோர் மேதாவியாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. வீடே, பெரியதோர் படிப்பகம்! விலையுயர்ந்த புத்தகங்களுடன் அளவளாவுகிறான். அறிவும் ஆராயுந் திறனும் அளிக்கவல்ல அறிஞர் பெருமக்களின் சிறந்த நூல்களெல்லாம் அவனுக்கு மனப்பாடம். கிரேக்க நாட்டிலே கற்காலத்திலே கன்னியருக்குக் காதணி உண்டா, இல்லையா?

இன்றைய யானைக்கு மூதாதையாக இருந்த பேருருவத்திற்கு உடலிலே முள்ளிருந்ததா? ரோமமே முள் போலிருந்ததா? அனுமன் கடலைக் கடக்கும்போது, வாலின் நுனி கடலைத் தொட்டதா, அல்லது அலையின் திவலை வாலிலே பட்டதா? என்பன போன்ற சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள, அவனையே நாடுகிறார்கள். அவன் அவ்வளவும் அறிந்திருக்கிறான். ஆகவே அவன் புத்திமான் என்றே கருத வேண்டி இருக்கிறது! ஆனால் இதற்கு என்ன சொல்வது? இவன் காவி உடையிலே உலவும் கள்ளரைக் கடவுள் நெறி காட்டுவோர் என்று எண்ணுகிறானே!

மலர்முகவதியான தன் மகளுக்கு, ‘ஜாதகப் பொருத்தமும்’ ஜெமீன் பொருத்தமும் இருக்கிற காரணத்தைக் கொண்டு ஒரு மந்திமுக தொந்தி சொரூபனுக்கு மணம் செய்து வைக்கிறானே! மாகாளி கோயிலிலே மார்கழி மாத பூஜை செய்கிறேன் என்று கூறும் பூஜாரிக்குப் பக்தியோடு காணிக்கை தருகிறான். அது கஞ்சா கள்ளாக மாறுவது தெரியாமலிருக்கிறானே? இவனை முட்டாள் என்று கூறாதிருக்க முடியுமா? ஒரு விதத்திலே பார்க்கும்போது நிறைமதியாளனாகவும் தெரிகிறது. வேறோர் துறையிலே நோக்கினாலோ குறைமதியுடையோனாகக் காணப்படுகிறான்! இவனை எந்தப் பட்டியலிலே சேர்ப்பது? புத்திமான் பட்டியலிலா? அறிவிழந்தோர் அட்டவணையிலா? என்ற சந்தேகம், சிலரைக் காணும்போது ஏற்படுகிறது.

யோக்கியனா, அயோக்கியனா? அவனுடைய குடும்ப வாழ்க்கை, கோயில் சென்று வரும் கடமையைக் கொண்டிருக்கும் நேர்மை, எவரிடமும் பணிவாகப் பேசும் இயல்பு, எதற்கும் கோபமே கொள்ளாத சுபாவம், பாகவத சிரோமணிகளிடம் காட்டும் பரிவு. இவைகளைக் காண்போர், “ஆஹா! மகா உத்தமன்! யோக்கியன்!” என்று கூறுகின்றனர். இராமாயணக் கதாப் பிரசங்கவாரியார், அவரை, “சாட்சாத் இராமச்சந்திரருடைய கிருபா கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர்” என்று குளிர்ந்து கூறுவதையும் கேட்கிறோம்.

“ஐயா! அந்த உருத்திராட்சப் பூனையின் பேச்சை எடுக்க வேண்டாம். அவன் பெயரைச் சொன்னாலே என் நெஞ்சம் வேகிறது. கொடுத்த தொகை 300. கணக்கிலே குறித்துக் கொண்டதோ 1300; வட்டி தொடர், வட்டி போட்டுக் கோர்ட்டிலே அவன் நிறைவேற்றிக் கொண்ட “டிகிரி தொகையோ” 3000; அதற்காக ஏலத்தில் எடுத்த என் நிலபுலத்தின் மதிப்போ 6000. அப்படிப்பட்ட அயோக்யனய்யா அவன்! ஏழைகளின் அழுகைச் சத்தமே அவன் ரசிக்கும் கீதம்! அவனால் பாழான குடும்பங்களும், சிதைந்த கருக்களும் கொஞ்சமா?” என்று வேறொருவர் வேதனையுடன், விழியில் நீர் ததும்பக் கூறுகிறார். யோக்கியனா, அயோக்கியனா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

அப்படிப்பட்ட சிலரைக் கண்டால். இது மட்டுமா ஆச்சரியம்! மைலாப்பூருக்கு மேதாவியாக இருப்பவன் திருவல்லிக்கேணியிலே ஞானசூன்யனாகக் கருதப்படுகிறான். வெள்ளிக்கிழமை வேதாந்தியாக வீற்றிருந்தவன் சனிக்கிழமை கிண்டிக் குதிரைப் பந்தய மைதானத்திலே பேராசைப் பிண்டமாகிறான்! வேலை செய்யும் கடையிலே ‘கள்ளன்’ என்று முதலாளியிடம் வசவு கேட்கிறான். வீட்டிலே ‘வசந்தா வளையல்’ செய்து தந்து விடுகிறான். கண்ணல்லவோ! ராஜா அல்லவோ என்று கொஞ்சுகிறாள் அவன் மனைவி. “புண்யவான்! உமக்குப் பூலோகத்திலே மட்டுமல்ல, சொர்க்கலோகத்திலேயும் திவ்யமான பதவி கிடைக்கும்.” என் வயிறார உண்ட பண்டாரம் வாழ்த்துகிறான். “ஏமாந்தவனாக நான் ஒருவன் கிடைத்துவிட்டேன். உனக்கு மூட்டை மூட்டையாக அரிசி கொடுக்க, கடனுக்கு, ஏண்டாப்பா! நீ வாழ்வாங்கு வாழமாட்டாய் என் தலையிலே மிளகா அரைச்சி ஊராரிடம் உத்தமனென்று பட்டம் வாங்கிவிட்டாய்” என்று, கொடுத்த கடனைத் திருப்பி வாங்க முடியாத அரிசிக் கடைக்காரர், அந்தக் “புண்யவானை”க் கண்டிக்கிறார். “பிள்ளை குட்டிக்காரன் நான்! என்னை ஏய்த்து நீ பாப மூட்டையைச் சுமந்து கொள்ளாதே” என்று சபிக்கிறார். ஒங்களுக்குப் போஜனம் செய்வித்த பாண்டுரங்கத்தின் பக்திப் பிரபாவத்தை ஊர் புகழ்கிறது.

தை மாதம், சித்திரையிலே ஊர் சிரிக்கிறது “அந்த அயோக்யன் செய்த வேலையைப் பார். நம்ம அரிசி மண்டி ஆறுமுகத்தைக் கெடுத்துவிட்டான்.” என்று பேசி, ஏசி, ஆகவே, யோக்யன், அயோக்யன், புண்யவான் பாபி, என்ற அடைமொழியும் வசை மொழியும் இன்னவருக்குத்தான் பொருந்தும் என்றும் சொல்வதற்கில்லை. புகழ்ச்சிக்குப் பாத்திரமானவனே இகழ்ந்தும் பேசப்படுகிறான், வேறோர் சாராரால்! தேன் இனிக்கும்; தேள் கொட்டினால் வலிக்கும், பால் வெண்மையாக இருக்கும்; பகலில் சூரியன் இருக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறுவதுபோல பாண்டுரங்கம் யோக்யன், பலராமன் அயோக்யன், சுந்தரன் சூதுக்காரன், கந்தன் கள்ளங் கபடற்றவன், மாசிலாமணி மேதாவி, மாடசாமி முட்டாள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

“அவனைப் பெரிய யோக்யனென்று நினைத்தேன். மகா அயோக்யனாக இருக்கிறானே! மடப் பயல்! இவனைப் போய் நான் ஒரு மேதாவி என்று இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்,” என்று பலர் பேசிடக் கேட்கிறோம். நாமே கூடப் பல தடவை சொல்லியுமிருக்கிறோம். ஏன்? காரணம் என்ன? இதுதான். இன்னவன் இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. உலகிலே நல்லவன் கெட்டவன் என்று பாத்திரங்களைச் சிருஷ்டிக்கும் நாடகாசிரியர் வேலையை நாதன் ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதன் நல்லவனாவதும், கெட்டவனாவதும், நிலைமையால்! அவனுடைய நிலைமையால் மட்டுமா? இல்லை! மற்றவர்களுடைய நிலைமைக்கும் அவனுடைய நிலைமைக்கும் தழுவுதலோ, மோதுதலோ, ஏற்பட்டுத் தீருவதால்! அவனுடைய நிலை, அவனாலேயே ஏற்படுகிறதா? அதையும் உறுதியாகக் கூற முடியாது! அவனாலேயும் ஏற்படுவது
முண்டு! அவனை அறியாமலேயே ஏற்படுவதுமுண்டு! அறிந்தும், அவனால் தவிர்க்க முடியாமல் போவதுமுண்டு! இதுவேயல்லாமல், பிறனால் ஏற்படுத்தப்படுவதுமுண்டு! வேறொருவன் வேண்டுமென்றே ஏற்படுத்துவது மட்டுமா? இல்லை! பிறருடைய நிலை மாறுவதால், தானாக இவனுடைய நிலை மாறுவதும் உண்டு! ஆக நிலை மாற்றம், மனிதனைக் கெட்டவனாக்கு வதற்கோ நல்லவனாக்குவதற்கோ காரணமாகிறது. அந்த நிலை மாற்றத்துக்கும் வேறு பல காரணங்கள் உள்ளன!

கமலா, எலியைக் கண்டாலே பயப்படும் பரம சாது! அப்பா அம்மா தவிர வேறு தெய்வமே வேண்டாமென்று இருப்பவள். குழம்புக்கு உப்பு எந்த அளவு போடுவது என்பது முதற்கொண்டு, குளிர் வந்துவிட்டது, கம்பளி எடுத்துப் போர்த்துக் கொள்ளட்டுமா என்பது வரையிலே, அன்னையைக் கேட்காமல், தானாக எதுவும் செய்ய மாட்டாள். துடுக்குத்தனமுடைய துரைச்சாணி, திருட்டுச் சுபாவமுடைய தங்கம், வறட்டு அகங்காரம் படைத்த வனிதா, முரட்டு மங்கா போன்ற எத்தனையோ பெண்களுக்கு, அவரவர் வீட்டுத் தாய்மார்கள், கமலாவின் குண விசேஷத்தைத்தான் உதாரணம் காட்டி உபதேசிப்பார்கள்.

“பெண்ணென்றால், அவளல்லவா பெண்! கமலாவின் காலைக் கழுவி ஒரு மண்டலம் அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். புத்தி வரும். தாயார் போட்ட கோட்டைத் தாண்டுகிறாளா அவள்” என்று கமலாவை புகழ்ந்தனர் பலர்; அது பாவாடைக்காரியாகக் கமலா இருந்தபோது! பிறகு? தாயார் கீறிய கோடு தாண்டாதிருந்த கமலா, வீட்டைத் தாண்டினாள்! வேலியைத் தாண்டினாள்! விபசாரியானாள்!! ஏன்? நிலைமாற்றம்! கமலாவின் கணவன் காவேரி, கண்ணை இமை காப்பது போல அந்தக் கட்டழகியைக் காப்பாற்ற வேண்டுமென்றுதான் கங்கணம் கட்டிக் கொண்டான். காலரா வருமென்று கண்டானா? காரிகை விதவையானாள்! இந்த நிலை மாற்றத்துக்குக் கமலா பொறுப்பாளியா? இல்லை! விதவை நிலை பெற்றாள், கணவன் மாண்டதால். ஆனால் மாறுதல் அது மட்டுமில்லையே. விதவை விபசாரியுமானாளே என்று ஊர் கேட்கும். இதோ அவள் உரைக்கிறாள், கேட்கட்டுமே.

“அவர் காலமானபோது எனக்கு வயது இருபது! அவருடைய தம்பியின் வயது... வயது கிடக்கட்டும். ஆண்களின் சேட்டைக்கு வயது குறுக்கிடுகிறதா என்ன! அவர், என்னைத் தாய் வீடு செல்லவிடாமல் தடுத்தார். ஊரார் அவருடைய அன்பு குடும்பப் பொறுப்பை உணரும் தன்மை என்பன பற்றிப் புகழ்ந்தனர்! நான் கூடத்தான் கொஞ்சம் மகிழ்ந்தேன்! அவர் பாரத பாடத்தை அனுஷ்டிப்பார் என்று நான் கண்டேனா? குனிந்த தலை நிமிராமல் நான் இருந்தேன். அவரோ பாயும் விழிகளைத் தடுக்காமல் இருந்துவிட்டார்! ஜாடை காட்டலானார். காணாதவள் போலிருந்தேன்! வற்புறுத்தலானார்! தகாது என்று தடுத்தேன்! அவ்வளவுதானே என்னால் செய்ய முடியும்! வீராதி வீரர்கூட, ஆயுதம் இழந்துவிட்டாலும், எதிரியின் படைபலம் அதிகமாகி விட்டாலும் சரணாகதி அடைகிறார்கள். நான் சாமான்யமான பெண்! கூடுமான அளவு தடுத்தேன். வேறு என்ன செய்ய முடியும்! என்னமோ சொல்வார்களே, தபோபலத்தாலே சுட்டுச் சாம்பலாக்குவது, கல்லாகச் சமைத்துவிடுவது என்று, அதைப் போலச் செய்ய முடியுமா என்னால்! அவ்வளவு தபோபலம் இருந்தால், தாலியைக் காப்பாற்றிக் கொண்டிருக்க மாட்டேனா! அவருக்கு இரவு பத்து மணிக்கு மேலே மார்வலி எடுக்கும், அண்ணிதான் ‘வெந்நீர் ஒத்தடம்’ தர வேண்டும். வெந்நீர் ஒத்தடம் தரும்போது, அவர் வலி தாளாமல் என்னை அணைத்துக் கொள்வார்! விலகினால் குற்றம், விலகாவிட்டாலோ, விபரீதம் முற்றும்! இந்த வேதனை எனக்கு!
மெல்ல விஷயத்தை என் தாயார் காதுக்கு எட்ட வைத்தேன். அது தெரிந்துவிட்டது அவருக்கு! அவ்வளவுதான். வீட்டைவிட்டுத் துரத்தினார். தண்டனை தந்ததாக அவர் நினைத்துக் கொண்டார், விடுதலை பெற்றதாக நினைத்துக் கொண்டு நான் வீடு வந்து சேர்ந்தேன். புதிய விருந்து வந்ததென்று பக்கத்து வீட்டு பாலு எண்ணிக் கொண்டான்! அது என் குற்றமா? என் மனத்தை என்ன செய்ய முடியும்? ஓயாமல் பாடுவான், உருக்கமாகப் பக்திப் பாசுரங்களை. என் தாயாருக்கு நான் ஒரே மகள். என்கதி இதுவாகவே, அவளுக்குப் பாப விமோசனத்திலே பற்று அதிகமாகிவிட்டது. அம்மாவைப் பாலு பாசுரத்தால் வென்றான், பார்வையாலும் எண்ணாலும் என் விதவைத்தனத்தைக் கொன்றான். பாலுவின் போர் முறைக்கும், என் கணவரின் தம்பி கையாண்ட முறைக்கும், எவ்வளவோ வித்யாசம்!பாலிலே மோர்த் துளி தெளித்தான் பாலு. அவர், பால் செம்பைக் கீழே உருட்ட வரும் பூனை போன்றவர்! பூனையை விரட்டி விட்டேன். மோர்த்துளி தெளிக்கப்பட்டதைக் கண்டு கொள்ளக்கூட முடியவில்லை.

பாலுவின் தந்திரத்தைக் கேளுங்கள். என் தாயாருக்குப் பக்திப் பாசுரம் பிடிக்கும். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு,

“ஆற என்னைத் தழுவாயோ?
அணிமார்பில் சேர்க்காயோ”
“குழல்கோதி முடிக்காயோ
கொஞ்சிமுத்தம் தாராயோ?”
“செம்பவழ இதழினிலே
சேர்த்திடாயோ என்இதழை.”

என்றெல்லாம் பாடுவான்! இவைகளுடன் ‘கண்ணா! மணிவண்ணா! கார்நிறத்தழகா!’ என்று இணைத்துத்தான் இருக்கும், இது இறைவனைப் பற்றிய பாசுரம் என்பதை விளக்க. ஒரு இளமங்கைக்கு, இறைவனைப் பற்றி எண்ணம் ஏற்படுமா? ஆறத்தழுவுவது, இதழ் இதழில் கூடுவது என்பதெல்லாம்! இவ்விதமான பாடல்கள் என் செவியில் வீழ்ந்தபடி இருந்தால், பக்தியா பெருக்கெடுக்கும்! நான் வீழ்ந்தேன்! இப்போது சொல்கிறேன் வீழ்ந்தேன் என்று. அப்போது ‘வாழ்ந்தேன்’ என்றுதான் எண்ணினேன். நன்றாகக் கவனமிருக்கிறது; முதல் தடவை ஒரு துளசிச்செடி அருகேதான், அந்த விநாடி என் கண்ணுக்குச் சுந்தரரூபனாகத் தெரிந்த பாலு என்னைத் தழுவிக் கொண்டு, முத்தம் தந்தான்! முத்தம் தரச் சொன்னான். தந்தேன்! இப்போது நினைத்துக் கொண்டால்கூட வேடிக்கையாக இருக்கிறது! நான் முத்தம் தந்தேனே, இப்போது சத்தம் இல்லை- அவ்வளவு திகில்! இதழும் கூடின, சத்தமின்றி.

பிறகு பாலுவைப் போருக்கிழுத்தான், முருகன்; அவனும் பிறகு தோற்க வேண்டியதாயிற்று! துரைசிங்கத்திடம், அவன் துரத்தி விட்டபிறகுதான் நான் பொதுவானேன்! இதுதான் என் சுயசரிதை.”

கமலா, இவ்விதம் கூறும்போது தீர்ப்பளிக்க முன் வருவீர்கள். சிலர் ‘ஐயோ பாவத்தோடு’ நின்று விடுவீர்கள். வேறு சிலர், “இதெல்லாம் வெறும் சாக்கு” என்பீர்கள். ஏதாகிலும் கூறுங்கள். ஆனால் உங்களிலே எத்தனை பேரால், பாலு, முருகன், துரைசிங்கம் போலாகாமலிருக்க முடியும்! எத்தனை கமலாக்களை இப்படிப் பட்டவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்? எத்தனையோ கமலாக்கள் உண்மைக் கதையை உரைத்ததில்லை. கமலா, மிக நல்லவளாக இருந்து கெட்டவளானாள். அதற்குக் காரணம் நிலை மாற்றம். நிலை மாற்றமே அவளால் ஏற்பட்டதல்ல!
“அவன் எவ்வளவோ முயன்றான். குட்டிக்கரணம் போட்டான். கமலா கொஞ்சம்கூட இடங்கொடுக்கவில்லை. என்னிடம் அவளுக்குப் பிராணன்!” என்று பெருமையாகப் பாலு பேசின சமயத்திலே, “மகா கெட்ட கழுதை, இந்தக் கமலா! இங்கே பதிவிரதை வேஷம் போட்டுக் காட்டினா. இப்போது பாலுப் பயலுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் ஆடுகிறாள்” என்று முயன்று தோற்றவன் ஏசிக் கொண்டிருந்தான். பாலுவுக்குக் “கற்பகம்”, அவனுக்குக் ‘கெட்ட கழுதை!’ எல்லாம் அந்த ஒரே கமலாதான்!

முருகன் வெற்றி முரசு கொட்டினபோது, பாலுவுக்கு, அவனுடைய கற்பகம், கள்ளியானால்! “அடடா! அந்தக் கள்ளி கமலா என்னென்ன தளுக்குச் செய்தா தெரியுமோ? மகாபாவம், மகாதோஷம், ஆண்டவனுக்கு அடுக்காது, ஊர் அறிந்தால் தூற்றும், என்று பசப்பிக் கொண்டிருந்தாள். அவளும் நானும் சினேகமான பிறகும் கூட, “என்னமோ பூர்வத்திலே ஏற்பட்ட பாசந்தான் நம்மைச் சேர்த்து வைத்தது” என்று வேதாந்தம் பேசினான். கடைசியிலே அந்தக் கள்ளி, முருகனை... சேச்சே, இப்படிப்பட்ட இழிகுணம் கொண்டவளைக் கொஞ்சநாள் நேசித்ததுகூட நமக்குக் கேவலம். என்னமோ நம்ம போறாத வேளைதான், அந்தச் சனியனிடம் கொஞ்சநாள் சிக்கிச் சீரழிந்தோம். அவ, மாமியார் வீட்டிலே இருந்தபோது, ‘மச்சினனை’ வலையிலே போடப் பார்த்தவதானே!” என்று, பாலு பழிக்கத் தொடங்குகிறான். இவ்விதமே அவ்வப்போது அவரவர்கள் தத்தமது நிலைமைக்குத் தக்கபடி நியாயம் பேசினார்கள் - பேசுவார்கள்.

ஒருவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்பதற்குப் பொதுவான அளவுகோலானது உண்டா? இவ்விதம் இருப்பதுதான் நல்லவன் என்பதற்கு இலட்சணம். இப்படி இருப்பது கெட்டவன் என்பதற்கு அடையாளம் என்று ஒரு நிர்ணயமாவது உண்டா? இல்லையே. அவரவர் ஒவ்வொருவகையான அளவுகோல் தயாரிக்கிறார்கள்; அந்த அளவுகோலினால் அளந்து பார்க்கிறார்கள். மற்றவரின் தராதரத்தை, அவர்கள் உபயோகிக்கும் அளவுகோலாவது எந்தக் காலத்திலும் ஒரே விதமானதாக இருக்கிறதா? கிடையாது! இந்த நிலையிலே, இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படி அறுதியிட்டுக் கூற முடியும்?

இந்த உண்மையைச் சிறைக்குச் சென்று இருந்தபோது, தேவர், அங்கு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த பலருடன் பேசிப் பேசித் தெரிந்து கொண்டார். பல நாட்களாகப் பலரும் புகழ்ந்து பேசும் ஒரு தூரதேசத்துக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி? அந்த நாட்டிலே பல விஷயங்களை விசாரித்துத் தெரிந்து கொள்வதிலே ஆவல் பிறக்குமோ, அவ்விதமான ஆவல் தேவருக்கு ஏற்பட்டது. சிறைச்சாலைக்கு ஏன் வரவேண்டி நேரிட்டது. என்ன குற்றம் செய்தாய்? யாருடைய வஞ்சனையினாலாவது இங்கே வர நேரிட்டதா? அல்லது உண்மையில் நீ குற்றவாளிதானா என்று அந்தக் கைதிகளை விசாரித்துக் கொண்டிருந்தார் தேவர். இந்த விசாரணையிலே ஈடுபடும் நேரத்திலே சில வேளைகளில் தேவருக்குத் தன் வழக்குப் பற்றிய கவனங்கூட இல்லாமற் போவதுண்டு. அவ்வளவு சுவாரஸ்யமான கதைகள், மனதை உருக்கும் சம்பவங்கள், அங்கே கேள்விப்பட்டார். இதனாலே, தேவருக்கு கேஸ் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஜாமீனில் வெளி வரப்போவதைவிட, அந்த ஏற்பாடுகளைச் செய்யும்படி தன் நண்பர்களுக்குத் தெரிவித்துவிட்டுச் சில நாட்கள் சிறைச்சாலையிலே பலர் கூறும் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்று கூடத் தோன்றிற்று. ஆனால் வெளியில் சூடா தவித்துக் கொண்டிருப்பாளே என்பதை நினைக்கும்போது மட்டும் சிறைச்சாலையிருந்து தப்பித்துக் கொண்டாவது ஓடிவிட வேண்டுமென்று தோன்றிற்று.

உண்மையாகவே சூடா, தவித்துக் கொண்டுதான் இருந்தாள். அண்ணன் காட்டிய துரோக சிந்தனை, பாரிஸ்டரின் பைத்யக்காரத்தனம், வழிப்போக்கனின் வம்பளப்பு, வீட்டிலே பதக்கம் கிடைத்ததால் உண்டான திகைப்பு, அதை எப்படியோ தெரிந்து கொண்டு, மைக்கண்ணன் வீடு வந்து மிரட்டிப் பதக்கத்தை அபகரித்துச் சென்ற கொடுமை, பதக்கம் கோயில் கொள்ளையிலே சம்பந்தப்பட்டது என்று கூறப்பட்டதால் வந்த திகில், ஆகிய ஒவ்வொன்றும், தாக்கித் தாக்கிச் சூடாமணியைத் திகைக்கச் செய்தது.

மைக்கண்ணனோ, பதக்கத்தைப் பெற்றுக்கொண்டு வெற்றிக்களிப்புடன் வேகமாக நடந்தான். எவ்வளவு அபூர்வமான நகையாக இருந்தாலும் அதற்கும் குறிப்பிட்ட ஒரு விலை உண்டு. அவ்வளவுதான் அதைக் கொண்டு அடைய முடியும். மேற்கொண்டு கிடைக்காது. ஆனால் இந்தப் பதக்கமோ அப்படிப்பட்டதல்ல! இது எவ்வளவு விலைபெறுமோ அதைவிடப் பதின்மடங்கு பொருளை வாங்கித் தரவல்லது! விற்கக் கூடத் தேவையில்லை. காட்டியே பொருள் பெறலாம்.!
ஆண்டவனுக்கு அணியாக இருந்த ஆபரணம்! எப்படியோ பிறகு ஜெமீனில் குடி ஏறினாய்! பிறகு தேவரின் பேழையில் தூங்கினாய். இப்போது என்னிடம் இருக்கிறாய்! உன்னைக் கொண்டு என்னென்ன வேடிக்கை காட்டுகிறேன் பார்” என்று எண்ணிக் கொண்டே மைக்கண்ணனின் மூளை வேகமாக வேலை செய்தவண்ணம் இருந்தது. திடீரென்று ஒரு யோசனை உதித்தது. முகம் மலர்ந்தது! ‘அதுதான் சரி; ஆசாமி அப்படியே நடுநடுங்கிப் போகிறான் பார்!’ என்று மெள்ளக் கூறிக் கொண்டே, மைக்கண்ணன், சாஸ்திரியார் வீடு சென்றான். ‘யாரது? என்ற சமாச்சாரம்? எனக்கு முன்பின் தெரியாத ஆளாக இருக்கிறாய்! அனாவசியமாக நேரத்தைச் செலவிட என்னால் முடியாது? வேலை அதிகம்!’ என்ற அட்டவணைப் பேச்சுக்கள், மிஞூகக்க அகம்பாவத்தோடு சாஸ்திரிகளால் வீசப்பட்டன. மைக்கண்ணன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பிறகு பாணத்தை ஏவினான். “சார்! நான் ஓர் போலீஸ் கான்ஸ்டபிள்” என்றான். சாஸ்திரி சாந்தசொரூபியாக, “என்னப்பா, விசேஷம்! உட்கார்!” என்றார். “சாவகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. இரண்டொரு கேள்விகள் கேட்டுவிட்டுப் போக வந்தேன். மேலதிகாரிகள் உத்திரவு” என்றான் மைக்கண்ணன். சாஸ்திரியாருக்கு கொஞ்சம் பயம் பிறந்தது. மறுநிமிஷம் போய்விட்டது. தேவர் வழக்குச் சம்பந்தமாக ஏதாகிலும் விசாரிக்க வந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டு, “உட்காரப்பா உட்கார். உங்களுக்கு உதவி செய்ய நான் எப்போதுமே காத்துக் கொண்டிருக்கிறேன். தேவர் விஷயமாகத் தானே துப்பு விசாரிக்கிறீர்?” என்று கேட்டார். மைக்கண்ணன் சிரித்துக் கொண்டே, “என்ன சார்?தேவர் மீது வழக்குப் போட்டாகிவிட்டது. இனிமேலேயா துப்பு விசாரிப்போம். இது வேறோர் வழக்கு” என்றான். கொஞ்சம் வயிற்றைக் கலக்கிற்று சாஸ்திரியாருக்கு. “என்ன வழக்கு?” என்று கேட்டார். “ஒரு ஜெமீன் வீட்டில் களவு நடந்திருக்கிறது” என்று மைக்கண்ணன் கூறினான். சாஸ்திரியாரின் முகம் வெளுத்தது. மைக்கண்ணன், சிரித்தபடி “சாஸ்திரியாரே! பயப்பட வேண்டாம். மேலதிகாரிகள் என்னை இது விஷயமாகத் துப்பறிய அனுப்பினர். நானும் மோப்பம் பிடித்து இங்கு வந்து சேர்ந்தேன். உம்மைக் கைது செய்ய அல்ல, காப்பாற்ற!” என்று கூறினான்.