அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
5

துணை ஆசிரியர்கள் என்ற பெயருடன் துரோகிகள் இருந்த விஷயத்தைக் கள்ளங் கபடமில்லாத சூடாமணி எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அந்தக் கபடன் கசங்கிய கண்களுடன், “கஷ்டகாலம்! போறாத வேளை” என்று உருகியபோது, ‘ஆஹா! இவ்வளவு உள்ளன்புடன் பேசும் இந்த உத்தமர்களின் உதவியை நாடாமல், சாதித் திமிர் பிடித்த சாஸ்திரி, வீண் பெருமைக்கார விக்டர், ஜம்பமடித்துக் கொள்ளும் சங்கரய்யர் ஆகியோரிடம் சென்று, காலத்தை வீணாக்கிக் கொண்டோமே, என்று கூடச் சூடா கருதினாள். துணை ஆசிரியர் என்ற பெயர், அவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு துளியும் பொருளுடையதல்ல என்பதைச் சூடா அறியாள். அவர்கள் ஆசிரியத் தொழிலுக்கான ஆற்றல் உள்ளவர்களுமல்ல. தேவருக்குத் துணையுமல்ல; கஷ்ட காலத்திலே யாருக்குத்தான் எடை போட்டுப் பார்க்க நேரமிருக்கும். எனவே சூடா, மிக உருக்கமாக, அவ்விருவரிடம், தன் மனக் கஷ்டத்தைக் கூறினாள். பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எப்படியாவது, தக்க ஏற்பாடு செய்து, தேவரை முதலிலே ஜாமீனில் வெளியே கொண்டு வர வேண்டுமென்பதை வற்புறுத்தினாள். அந்த நயவஞ்சகர்கள், அதே விஷயமாகவே தாங்கள் அந்தச் சமயம் பேசிக் கொண்டிருந்ததாகப் பச்சைப் புளுகுரைத்ததுடன், தேவரின் வழக்குக்காகச் செலவிடப் பொதுமக்கள் தாராளமாகப் பணம் தருவார்கள் என்றும், அதற்கான ஏற்பாடும் செய்யப் போவதாகவும் கூறி, ஆரம்ப ஏற்பாடுகளுக்காக மட்டும் ஒரு ஆயிரம் ரூபாய் தந்தால் போதுமென்று பசப்பி, சூடாவின் நகைகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டனர். தேவரைச் சிறையிலிருந்து மீட்பதற்கான நல்ல ஏற்பாட்டை அந்த நண்பர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் சூடா அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, வீடு திரும்பினாள்.
* * *

“காதலாம், காதல்!” என்று வாய்விட்டுக் கூறியபடி சாஸ்திரி தமது அறையிலே, உலவிக் கொண்டிருந்தார். பசியுடன், கூண்டுக்குள் உலவும் புலிபோல, ‘இவளுடைய காதலின் விளையாட்டு, என் குலத்தின் பெருமையை, குடும்பத்தின் கீர்த்தியைக் கெடுத்துவிட்டதை இவள் அறிவாளா? அந்தத் தடியனுக்குத்தான் அதுபற்றிக் கவலை இராது. அவன் பெரிய இலட்சியவாதி, இவள் என்னை இப்படி அலட்சியப் படுத்தினது தகுமா? படட்டும், பட்டால்தானே தெரியும் முட்டாளுக்கு?’ என்று முணுமுணுத்தார்.

“அந்த வாயாடி ஊரிலே, கண்டவர்களிடம் போய்க் கலகம்செய்வாள்; என் அண்ணன் இந்த ஆபத்துக் காலத்திலே ஓர் உதவியும் செய்யவில்லை என்று சொல்வாள்; ஊரிலே நாலு பேரிலே ஒருவராவது, அவன் சொல்வதைச் சரி என்பார்கள்; என்னை ஏசுõர்கள். அந்தச் சனியன், என்மீது, பலருக்கு வெறுப்பு வருகிறபடி செய்து வைப்பாள்” என்று எண்ணிப் பயந்தார். கொதிப்பும் பயமும், குறைய வழி தெரியவில்லை. சாய்வு நாற்காலியிலே படுத்துக் கொண்டார். மீண்டும் கண்களை மூடினார். உடனே கோர்ட், நீதிமன்றம், கூண்டிலே தேவர், எதிரே அழுத கண்களுடன் சூடா, பலர் தன்னைச் சுட்டிக் காட்டித் தூற்றுவது, – இவைபோன்ற காட்சிகள் தோன்றலாயின.

“கோழைத்தனம்! வீண் மனப்பிராந்தி!” என்று தனக்குள் கூறிக்கொண்டு, மன நிம்மதிக்õக பகவத் கீதை படிப்பது என்று தீர்மானித்து அதை எடுத்தார். பாண்டவர் யார்? கௌரவர் யார்? பந்துக்கள்! ஒரு கொள்கைக்காகத்தானே யுத்தம் நடைபெற்றது. அவர்களுக்குள் சூடாமணி என் தங்கைதான். ஆனால், எனக்குப் பங்கம் தேடியவளாயிற்றே! தங்கை என்று பச்சாதாபப்படுவதா? இந்தச் சந்தர்ப்பத்திலே கூடாது. என்னைக் கொடுமை செய்தாள் இப்போது அவள் அனுபவிக்கட்டும் அல்லலை – என்று சமாதானம் கூறிப் பார்த்தார் மனம், சாந்தி அடையவில்லை; நாலைந்து பேருடன் டெலிபோனில் பேசினார், சிந்தனையை வேறு பக்கம் திருப்ப. ஆனால் ஒவ்வொருவரும், தேவரின் அரெஸ்ட்டு விஷயமாகவே பேசத் தொடங்கவே, சலிப்புடன் மீண்டும் கிதையிலே கவனம் செலுத்தலானார்.

‘அம்மா! கொஞ்சம் மெதுவாக நடவுங்கள்”

“யார் நீ! என்னிடம் என்ன வேலை உனக்கு?”

“தேவரின் சம்சாரம்தானே நீங்கள்?”

“ஆமாம்! நீ யார்?”

“நான் யார் என்று கூறக் கூடாது. நான் தேவரின் நண்பன்; அதுமட்டும் தெரிந்தால் போதும் தங்களுக்கு. நான் தங்களிடம் இரகசியமாகப் பேச வேண்டும் அவர் விஷயமாக.”

“அவர் விஷயமாகவா! என்ன?”

“கொள்ளை சம்பந்தமான சில ஆதாரங்கள் வீட்டிலே இருக்கின்றனவே! அவற்றைக் கண்டுபிடிக்கப் போலீசார் மறுபடியும் வரப் போகிறார்கள். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”

“கொள்ளை சம்பந்தமாக ஆதாரங்கள். யாரய்யா நீ? தேவர் நிஜமாகவே கொள்ளையிலே சம்பந்தப்பட்டவர் என்று கூறுகிறீரா? நீரா தேவருக்கு நண்பர். ஒருபோதுமில்லை! நான் உன் முகத்தைக் கண்டதே கிடையாது! உண்மையிலே தேவருக்கு நீ நண்பனென்றால் ஒரு தினமாவது வீட்டிற்கு வந்திருப்பாயே.”

“அம்மா! உங்களுக்குத் தேவரின் இரட்டை வாழ்க்கை தெரியாது அவர் உங்கள் கண்ணுக்கு ஒரு பிரியமான நாயகராகவும், திறமையுள்ள ஆசிரியராகவும் காட்சி அளித்திருப்பார். அவருடைய வேறோர் உருவம் என் போன்ற அவருடைய நண்பர்களுக்குத் தெரியும்.”

“நீ பேசுவது அவ்வளவும் மர்மமாக இருக்கிறது. ஏதோ வஞ்சமாகப் பேசுகிறாய் என்று தோன்றுகிறது. உன்னோடு பேசிக் கொண்டிருக்க எனக்கு இஷ்டமில்லை.”

“எனக்குங் கூடத்தான் விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாத உன்னோடு பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை; நேரமுமில்லை; ஆனால் அவருக்காக உன் அசட்டுக் குணத்தைக் கண்டும், உன்னோடும் பேச வேண்டியிருக்கிறது. கோபிநாதர் கோவில் கொள்øயிலே அவர் பங்குக்குக் கிடைத்த பதக்கம் ஒன்று, படமெடுத்தாடும் நாகம் போன்ற உருவிலே இருப்பது உம்மிடம் தந்தாரே, அதை என்னிடம் தர வேண்டாம். என்னைத்தான் நம்பமுடியாது என்று கூறுகிறீர். என்னிடம் தராவிட்டால் பாதகமில்லை; அதை உடனே, வேறு எங்காவது பத்திரப் படுத்து. அது போலீசில் சிக்கிவிட்டால், தேவருக்குத் தண்டனை நிச்சயமாகும்.”

“பதக்கமா? என்னிடம் இல்லையே!”

“வீட்டிலே, அவர் எங்காவது ஒளித்து வைத்திருப்பார்.”

“கிடையாதே! இருக்க முடியாதே! அவர் கொள்ளையிலே சம்பந்தப்பட்டவராக இருந்தால்தானே, நீ சொல்வது சாத்தியமாக இருக்க முடியும்!”

“அம்மா! எனக்கு வருகிற கோபம் இருக்கிறதே, நீயும் உன் தேவரும் எங்கேடாகிலும் கெட்டுப் போங்கள். எனக்கென்ன என்று கூறிவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தூண்டுகிறது. இருந்தாலும் அவருடைய முகத்துக்காகப் பார்க்க வேண்டி இருக்கிறது. என்னிடம் பசப்பிக் கொண்டிருக்க வேண்டாம். கொள்ளையிலே அவர் ஈடுபட்டது உமக்குத் தெரியும்; பதக்கமும் உம்மிடம் இருக்கிறது. அவருடைய நன்மையைக் குறித்துச் சொல்கிறேன். அதை எங்காவது, பத்திரப்படுத்தி வையும்.”

வீடு திரும்பும்போது, ஒரு சிறு குறுக்குச் சந்திலே, தன்னை வழிமடக்கி, முகத்தின் ஒரு பகுதியை மூடிக்கொண்டு ஓர் ஆசாமி, பேசக் கண்டு திகைத்தாள் சூடா. மேலே கண்டபடியான உரையாடல் நடந்ததும், சூடா திடுக்கிட்டுப் போனாள். தேவர் உண்மையாகவே கோபிநாதர் கோவில் கொள்ளையிலே சம்பந்தபட்டவர் என்றும், அந்தக் கோவிலிலே களவாடப்பட்ட பதக்கம், தன் வீட்டிலே இருப்பதாகவும், முகமூடி மனிதன் கூறிவிட்டுச் சரேலெனச் சென்று விடவே, திகிலால் துரத்தப்பட்ட சூடா, மிக வேகமாக வீடு சென்று கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு பெட்டிகளை ஒவ்வொன்றாகச் சோதனை செய்ய ஆரம்பித்தாள். அந்த முகமூடிக்காரன் குறிப்பிட்டபடி ஏதாவது பதக்கம் இருக்கிறதா என்று பார்க்க இரண்டோர் பெட்டிகளைப் பார்க்கையிலே, “ சே, எவனோ பித்தன், எவனோ உளவாளி! அவன் பேச்சைக் கேட்டு பதக்கத்தைத் தேடுகிறேனே, நான் ஓர் முட்டாள். அவராவது, கொள்ளையிலே சம்பந்தப்படுவதாவது என்று எண்ணிக் கொண்டேதான் தேடினாள். ஆனால், இடையிடையே பலதடவை தேவர், கோவில் சம்பந்தமாகப் பேசியவை, அவள் நினைவிற்கு வந்தபோது, அவள், உடலும் உள்ளமும் ஒருங்கே நடுக்கமெடுத்தது. ஏனெனில் தேவர் கோவில்களிலே உள்ள பொருள், பக்தி என்ற பெயருடன், சமூகக் கொள்ளைக்காரர்கள் தரும் இலஞ்சம் என்றும், கோவில்களிலே காணப்படும் பொருள், மக்களிடமிருந்து களவாடப் பட்டவை என்றும், அவற்றைக் கொள்ளையடித்தாவது-- மீண்டும் மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றும் கூறினதுண்டு. கேவலம்பணத்தாசைப் பிடித்து, சொந்த சுகத்துக்காகத் தேவர், ஒரு சிறு துரும்பையும், அபகரிக்க மாட்õர். பிறரை வஞ்சிக்க மாட்டார். அவ்வளவு தூய்மையானவர்தான். ஆனால், கொள்கை காரணமாக ஒருவேளை இந்தக் கொள்ளையிலே சம்பந்தபட்டாரோ – என்று நினைத்தாள். நினைத்ததும், பயத்தால், அவள் நடுநடுங்கிப் போனாள். பரபரப்புடன் மேலும் பல பெட்டிகளைக் கொட்டிக் கொட்டிக் கவிழ்த்துச் சாமான்களை, ஒவ்வொன்றாக எடுத்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மார்பு படபடவென அடித்தது.

“சூடா! ஒரு பகற்கொள்ளைக்காரன், பச்சைக்கல் மூக்குத்தியை, பதினாறு ஆயிரம் ரூபாய் செலவிலே மீனாட்சி கோவிலுக்குத் தந்திருக்கிறான்.”

“பச்சைக் கல்லா?”

“ஆமாம்! அபூர்வமான பச்சை! அரச குமாரிகளுக்கு ஏற்றது. ஆனால் சிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.”

“யார் செய்த கைங்கரியம்?”

“சொன்னேனே ஒரு பகற்கொள்ளைக்காரன் தந்தது என்று.”

“உங்களுக்கு எப்போதும் கேலிதான். யாரோ அம்பாள் கிருபையால் ஐஸ்வரியம் பெற்றிருப்பார். அதை மறவாது, அம்பாளுக்குக் காணிக்கை செலுத்தி இருப்பார்.”

“அடி, பைத்தியக்காரி! உன் அண்ணன்கூட அந்தக் கைங்கரியம் செய்வதனைப் புகழ்ந்துபேசி இருக்கிறார். ஊர் முழுவதுமே புகழ்கிறது. எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதிவிட்டன. “தேசவீரன்” மட்டுந்தான் உண்மையை உரைத்திருக்கிறது. என்ன தலைப்புக் கொடுத்தேன் தெரியுமா?

மகன் பிச்சை எடுக்க, மாதா பச்சைக்கல் பெற்றாள்.

என்று கொடுத்திருக்கிறேன்; தர்மம் செய்தவன் தனவந்தனான கதையும் விளக்கி இருக்கிறேன். அவன் செய்த மோசடிகள் பலவற்றைச் சாடையாகக் காட்டியிருக்கிறேன்”

“உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை. அனாவசியமாகப் பலருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறீர்கள்.”

தேவருக்கும் தனக்கும் இதுபோன்ற பேச்சு பலமுறை நடந்ததுண்டு. அப்போதெல்லாம், அவருடைய கண்டிப்பான போக்கினால் பலருடைய விரோதம் அவர் மீது பாயும் என்று பயந்து, தான் அவரை எச்சரித்தது அவள் நினைவிற்கு வந்தது. ஒருவேளை கொள்ளையிலே சம்பந்தப்பட்டவர்தானோ? – இந்த எண்ணம், சூடாவின் மனத்தினாலே சுறுசுறுப்பாக உலவத் தொடங்கிற்று. இருக்காது – அவர் கோவில்களிலே உள்ள முறைகளையும், கோடீஸ்வரர்கள் ஏழைகளைக் கவனியாமல், கோவில் கைங்கரியம் செய்யும் போக்கையும் கண்டிக்கக் கூடியவரே தவிர, கேவலம், கொள்ளை அடிக்கும் போக்கினரல்ல என்று அவளாகத் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டிருக்கையில், ஒரு புத்தகத்தினுள்ளேயிருந்து, பதக்கம் – படமெடுத்தாடும் நாகத்தின் உருவிலே இருந்த பதக்கம் – கீழே வீழ்ந்தது. சூடா, மயங்கிக் கீழே சாய்ந்தாள், அடக்க முடியாத திகிலால் தாக்கப்பட்டு!