அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
12

“சாஸ்திரிதான் கொள்ளை அடிச்சான்னு நீ எப்படித் தெரிஞ்சுண்டே” என்றார் வக்கீல் சங்கரய்யர்.

இந்தக் கேள்விக்குரிய பதிலில்தான் சூடாவின் கணவனது எதிர்காலம் அடங்கி இருக்கிறது. சாஸ்திரியைப் பற்றிச் சொல்லப் போன அனைத்தும், அவன் வீட்டில் அவள் கேட்டுக் கொண்டிருந்த விஷயங்களிலிருந்து அவளாக யூகித்துக் கொண்டவைதான்! மைக்கண்ணனது பேச்சும், சாஸ்திரியின் பதிலும் அப்படித்தான் தெளிவாகத் தெரிவித்தன. வக்கீலின் கேள்வி, விஷயத்தை நேராகவே தொட்டுவிட்டது. பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.

பாரிஸ்டர் விக்டரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது பதக்கம் பற்றி முன்பின் தெரியாத ஒருவன் கூறியதிலிருந்து விஷயத்தைச் சொல்ல நினைத்தாள்.

“அண்ணாதான் அதுக்குக் காரணம் என்று நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்று சொல்லத் தொடங்கியதும் வக்கீல் மறுபடியும் சென்று உட்கார்ந்து கொண்டார். பங்கஜத்துக்குக்கூட சூடாவின் மீது அருவருப்பு ஏற்பட்டது. என்றாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், “சூடா! சுருக்கமாகச் சொன்னாத்தானே நன்னா இருக்கும்?” என்றாள்.

சூடா காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ பிதற்றப் போகிறாள் என்ற எண்ணத்தோடு உள்ளே போனாள் பங்கஜா.

சுருக்கமாகவே, நீட்டி நிமிர்த்தியோ சூடா பதக்கம் தொடர்பான அனைத்தையும் சொல்லி இறுதியில் மைக்கண்ணனிடம் அதைக் கொடுத்ததையும், அவனை, அந்தப் பதக்கத்தோடு அண்ணன் வீட்டில் சந்தித்ததையும், அங்கே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைப் பற்றியும் ஒருவாறு சொல்லி முடித்தாள்.

சாஸ்திரி வீட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளையும், பதக்கம் தொடர்பானவைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட வக்கீலும், “சபாஷ் சூடா! மிகச் சாமர்த்தியமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறாய்! பாராட்டுகிறேன்! வரதன் என்றாயே, யார் அவன்? பதக்கத்தைப் பறித்துக் கொண்டு உன் அண்ணன் வீட்டுக்குப் போனவன் பெயர் என்ன? அவன் எங்கே இருக்கிறான்?” என்றார், மிடுக்குடன்.

“அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றாள் சூடா, பதட்டம் தணிந்த குரலில்!

“நான் ஒரு வக்கீல்தான் சூடா; துப்பறியும் நிபுணன் அல்லவே” என்று கூறினார் வக்கீல். “என்றாலும் முயற்சிக்கிறேன். போய் வா!” என்று கூறிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.
* * *

நாடக நடிகையாக இருந்து, பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு, ஜெமீன்தார் செல்லப்பனின் ஆசைநாயகியாகிவிட்ட ஸ்வர்ணா, நாகப்பதக்கம் காணவில்லை என்று ஜெமீன்தார் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், அந்த அதிர்ச்சியால் ஜெமீன்தார் தாக்கப்பட்ட அளவுக்கு, ஸ்வர்ணா தாக்கப்படவில்லை; காரணம், எண்ணத் தொலையாத அளவுக்குச் சொத்துடையவரின் ஒரு பொருள் காணமாற் போய்விட்டால் அதனால் அவர் குடி ஒன்றும் முழுகிப் போகாது என்பதை அவள் எண்ணிக் கொண்டதால்தான்.

ஆனால், நாகப்பதக்கத்தைக் காணவில்லை என்றதும், தான் அதனை எடுக்கவில்லை என்று கூறியது கேட்டதும், ஜெமீன்தார் ஏன், கொதிக்கும் எண்ணெய்பட்டவராகத் துடிக்கிறார்? கெம்பீரமான அந்த உருவம் ஏன் இப்படிக் கூனிக் குறுகிவிட்டது? முகம் கருத்துச் சுருங்கத் தொடங்கிவிட்டது எதனால்?

ஸ்வர்ணாவினால் இவைகளைப் பற்றி எண்ணிக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நாகப் பதக்கம் - சமீபத்திலேதான் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. ஜெமீன்தார் அதனைக் கொடுக்கும்போதே, ஸ்வர்ணாவிடம் சொன்னார்! “ஸ்வர்ணா, இது மிக உயர்ந்த ஒரு பதக்கம்!” இதோ, இந்த நாகத்தலையின் உச்சியிலே ஜொலிக்கிறது பார்! இதுதான் மாணிக்கம் என்று கூறப்படுவது. நல்லபாம்பின் நஞ்சுதான் இப்படி கண்ணாடிக் கல்லாக மாறி இருக்கிறது. விலை மதிப்பே கிடையாது இதற்கு. இந்தக் கண்களில் இருக்கிறது பார் சிகப்புக் கல் - அசல் இரத்தினம் இது. இந்த இரண்டு கற்கள் மட்டுமே இருபதாயிரத்துக்கு மேல்! தலையின் விளிம்பைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருக்கும் வெள்ளைக் கற்கள் அனைத்தும் வைரமாகும். கல் ஒன்று கால் லட்சமாகிறது. எவ்வளவு பத்திரமாக இதனை வைத்திருக்க வேண்டுமோ, அவ்வளவு பத்திரமாக இது இருக்க வேண்டும். உன்மேல் உள்ள காதலால்தான் நான் இதனை உன்னிடம் கொடுத்து வைக்கிறேன். பத்திரம், பத்திரம்” என்று பல தடவைகள் சொல்லிவிட்டு, அவள் கையில் கொடுத்தார்!

அடுத்த வேளை உணவுக்கே, வழி என்ன என்ற ஏக்கத்திலிருந்த ஸ்வர்ணா, ஜெமீன்தாரின் தொடர்பு கிடைத்த பிறகுதான் வயிற்றின் நிரந்தரப் பசியைப் போக்கிக் கொண்டாள். வயிற்றுப் பசியை மட்டுமே தணிக்க முடிந்த ஜெமீன்தாரால், அவளது மனப்பசியைத் தணிக்க முடியவில்லை!

தன்னால் தணிவிக்கப்படுகிறதா இல்லையா என்றெல்லாம்கூட அவர் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. ஸ்வர்ணாவின் அழகு அவரை அவளிடத்தில் அடைக்கலமாக்கி வைத்திருக்கிறது; அவளது வறுமைக்கோலம் அவளை, அவரிடத்திலே குடியேறச் செய்திருக்கிறது. அவ்வளவுதான்!
ஸ்வர்ணா, எந்த நேரத்திலும் தன்னை விட்டு விலகி விடக்கூடும் என்பதை அவர் நினைத்துப் பார்ப்பது உண்டு! இவள் போனால் இன்னொருத்தி! எத்தனையோ மலர்கள்!! என்கிற முறையிலே, அவளை, அவரால் மதிப்பிட முடியவில்லை. சுவர்ணாவின் இடத்தில் அவளுக்கு முன்பு, எத்தனையோ பேர் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்! அதிகமாகப் போனால் ஓர் ஆறு மாதம்! பைங்கிளிகள் பறந்து போய்விடும்! ஸ்வர்ணா விதிவிலக்கு. ஐந்து ஆண்டுகளாக இருக்கிறாள். இருக்கிறாள் என்று மட்டுந்தானே கூற முடியும்? எனவே இல்லாமற் போய்விடுவாளோ என்ற நிலை ஏற்படாமலிருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து வைத்திருக்கிறார்! அந்த ஏற்பாடுகளில் ஒன்றாகத்தான் நாகப் பதக்கம் என்றும் அவளிடம் கூறினார். அதன் மதிப்பையும் கூறி, அது இருக்க வேண்டிய பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துக்காட்டினார்.

எனவே, அவ்வளவு சிறப்புக்குரிய அந்தப் பதக்கம் காணவில்லை என்று கூறக் கேட்டவுடன், உண்மையிலே பதைத்துத் துடிக்க வேண்டியவள் ஸ்வர்ணா. இருக்க வேண்டிய அளவுக்குப் பதைப்பு இல்லை அவளிடம். எல்லப்பன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு, ஏகாம்பரம் பதறித் துடித்தானா? ஏன் அப்படி? எல்லப்பனுக்கும் ஏகாம்பரத்துக்கும் இருந்த தொடர்பு அதுபோல், எல்லப்பனை அடுத்து, தன்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுமே போலீஸ் படை என் அச்சம்!

அப்படித்தான் துடித்தார் செல்லப்பர், பதக்கம் காணவில்லை என்றவுடனே! “இப்பொழுது என்ன வந்துவிட்டது என்று இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். பொருட்கள் களவு போவது இயற்கை என்பதால்தானே, களவாடியவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ்காரர்களை வைத்திருக்கிறார்கள்” என்றாள் ஸ்வர்ணா.

“போலீஸ்” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே ஜெமீன்தாருக்கு நாடி ஒடுங்கியது. “ஆமாம்! போலீசுக்குச் சொல்லிட வேண்டியதுதான்! ஆனால் ஸ்வர்ணா...” என்று எதையோ சொல்ல வாயெடுத்தார். “ஆனாலாவது, கோனாலாவது! பல லட்சம் என்றீர்கள். அதனாலேயே நான்கூட அதனை அணியாமல், பெட்டியிலே கொண்டுபோய் வைத்தேன்! வைத்த அன்றைக்குப் பார்த்ததுதான் அதனை! அப்புறம் அதுபற்றி மறந்துகூடப் போய்விட்டேன்! போசாமல் போலீசுக்குப் போன் செய்யுங்கள்” என்றாள்.

“கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது ஸ்வர்ணா! நம் தேசவீரன் பத்திரிகை முதலாளி சாஸ்திரி இருக்கானே, அவனிடம் இதுபற்றி முதலில் சொல்ல வேண்டும்” என்றார் பதட்டத்தோடு.
“என்ன! அந்த டம்பாச்சாரி சாஸ்திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தமாம்! நீங்கள் பேசாமல் இருங்கள்! என் நகையைக் காணவில்லை என்று நானே போன் செய்கிறேன்” என்றாள். கூறிவிட்டு, போன் இருக்குமிடத்துக்கும் நகரத் தொடங்கினாள்.

“இரு ஸ்வர்ணா! அவசரப்படாதே! யோசித்துச் செய்ய வேண்டும்! உன்னிடம் பதக்கம் கொடுத்ததாகவே நீ நினைக்க வேண்டாம்! அது காணாமற்போய் விட்டதென்றும் நீ கவலைப்பட வேண்டாம்! பதைப்பையும், கவலையையும் என்னிடம் விட்டுவிடு’ என்று எழுந்து சென்றுஅவளது கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார் செல்லப்பர்!

ஸ்வர்ணாவால் எப்படி சும்மா இருக்க முடியும்? பல லட்சம் பெறுமானம் என்றார்! எவ்வளவு பத்திரமாக இருக்க வேண்டுமோ! அவ்வளவு பத்திரமாக அது இருக்க வேண்டும் என்றார். இப்போது காணாமற் போய்விட்டது என்றதும் துடியாய்த் துடித்தார்! போலீசுக்குத் தகவல் தருவது என்றதும் தயங்குகிறாரே! ஏன் என்ற சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு!

“ஏன்! போலீசுக்குச் சொல்ல எதற்குத் தயக்கம் காட்ட வேண்டும்? எதற்காகச் சாஸ்திரியை இதிலே இழுக்க வேண்டும்.” என்றாள் சற்றுக் கோபமாகவே. அதற்குள் டெலிபோன் மணி அடித்தது. ஸ்வர்ணாவே எழுந்து சென்று ரிசீவரைக் கையிலெடுத்து, ‘ஹலோ’ என்றாள்.

“நான் சாஸ்திரி பேசுகிறேன்! யார் பேசறது அங்கே?” என்ற குரல் கேட்டு, இந்தாங்க! நீங்க எதிர்பார்த்த சாஸ்திரி பேசறாராம்!” என்று ரிசீவரைக் கீழே வைத்துவிட்டு, வந்து அமர்ந்து கொண்டாள்.

சாஸ்திரி பேசுகிறார் என்றதும், பாய்ந்தோடி சென்று ரிசீவரை எடுத்துக் கொண்டார் செல்லப்பர். கைகள் நடுங்கின; ரிசீவரைப் பிடிக்கக்கூட பலம் இல்லையோ என்று நினைக்கும்படி இருந்தது அந்தக் காட்சி! ஸ்வர்ணாவுக்கு அது வேடிக்கையாகவும், அதே நேரம் ஆத்திரமாகவும் இருந்தது.
“ஹலோ! நான்தான் பேசுறேன்! என்ன விஷயம்!” என்றார் செல்லப்பர் போனில்.

“நான் சாஸ்திரி பேசுகிறேன்! உடனே உங்களைச் சந்திக்க வேண்டும்! நீங்கள் இங்கே வருகிறீர்களா? நானே அங்கு வரட்டுமா?” என்று குரல் கேட்டது எதிர்ப்பக்கமிருந்து.

“நீங்களே வாருங்கோ சாஸ்திரியாரோ!”

“சரி! வீட்டிலேயே இருங்க! இதோ வந்துடறேன்.!!”

ரிசீவரை வைத்துவிட்டு, ஸ்வர்ணாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஜெமீன்தார். “என்ன சொன்னான் அந்த சாஸ்திரி!” என்றாள் ஸ்வர்ணா. “இங்கே இப்போ வர்ரானாம்!” என்றார் அவர். “பதக்கம் சம்பந்தமாக நீங்க எதுவும் சொல்லலையே!” என்றாள் அவள். “அவன்தான் இங்கே வர்ரானே! நேரிலேயே சொல்லிடலாம்” என்று கூறினார். “ஸ்வர்ணா! கொஞ்சம் எலுமிச்சம் பழம் ஜூஸ் பிழிஞ்சு எடுத்துக்கிட்டு வா!” என்றார்.

ஸ்வர்ணா உள்ளே போனாள், ஜூஸ் பிழிந்து எடுத்து வர. அதே நேரத்தில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏழெட்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களுடன் உள்ளே நுழைந்தார்.