அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
7

“உன் புருஷன் கோயிலிலே கொள்ளை அடித்தபோது கிடைத்த பதக்கமொன்று வீட்டிலே இருக்கும். அதை ஜாக்கிரதையாக மறைத்துவிடு. இல்லையேல், தேவர் குற்றவாளி என்பதற்கு அதுவே தக்க ருஜுவாகிவிடும்” என்று அறிமுகமாகாத ஆள் சொன்னதைச் சூடா, நம்பவில்லை. எவனோ ஏதோ உளறுகிறான் என்றே கருதினாள். ஆனால் வீட்டிலே அந்தப் பதக்கம் ஒரு பேழையிலே இருக்கக் கண்டு அலறினாள். பதக்கம் இருந்தது கண்டு சூடா அலறிய அதேபோதுதான், ஜெமீன்தாரரின் காதற்கிழத்தியாகிச் செல்வத்திலே புரண்டும் சுகம் கிடைக்காது கவலைப்பட்ட சுவர்ணாவிடம், ஜெமீன்தாரர், பதக்கம் காணாமற்போய் விட்டதைக் கூறினார்.

“பதக்கம், அதிக வேலைப்பாடுடையது. விலை அமோகமாக இருக்கும். எப்படி, யார் களவாடியிருப்பார்கள். போலீசை வரவழைக்கலாமே” என்று தீர்மானமாக ஜெமீன்தார் கூறிவிட்டார். “ஏன்?” என்று சுவர்ணா பல தடவை கேட்டுப் பார்த்தும் பதில் கிடைக்கப் பெறாமல் ஓய்ந்துவிட்டாள். ஜெமீன்தாரருக்குக் கவலையை விடத் திகிலே அதிகமாகிவிட்டது. இதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், சுவர்ணா திகைத்தாள்.

பதக்கத்தை எங்கே ஒளித்து வைப்பது? ஒளித்து விடுவதா? அல்லது அழித்தே விடுவதா? யாரிடமாவது தந்து வைப்பதா? யாரை நம்புவது? என்று எண்ணியபடி, சூடா, பதக்கத்தை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தேவர் மாசற்றவர் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அவர் மீது போலீசார் பாய்ந்தது அக்ரமம் என்று எண்ணினோம். ஆனால் இந்தப் பதக்கம் இவருக்கு ஏது? எப்படிக் கிடைத்தது? வழியே போனவன் சொன்னதற்கும், இங்கே இது இருப்பதற்கும் பொருத்தமாக இருக்கிறதே! என் கணவன் கள்ளன்தானா? நீதியும் நியாயமும் நேர்மையும் நாணயமுமே, மக்களின் பூஷணங்கள் என்று ஊருக்கு உபதேசம் செய்து, உத்தமரென்றும் சத்தியவானென்றும் பெயரெடுத்த என் நாதருக்கா இந்தக் கெடுமதி தோன்ற வேண்டும்? எந்தப் பாவி அவர் மனதிலே இப்படிப்பட்ட கெட்ட எண்ணத்தைத் தூவினானோ தெரியவில்லை? எவனுடன் கூடி இவர் இந்தக் கதிக்கு ஆளானாரோ தெரியவில்லை? ஐயோ! நான் என்ன செய்வேன்? அவர் கள்ளன் என்பதற்கு என் உள்ளங்கையிலேயே ருஜு இருக்கிறதே! பாழும் பதக்கமே! என் பிராணநேசரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டாயே! உன்னைத் தொட்டார்; அவர் கெட்டார். ஏனோ உன்னிடம் அவருக்கு இந்த ஆசை பிறந்தது?

‘பணம் வாழ்க்கைக்கு ஒரு கருவியேயொழிய அதனைப் பிரேமைக்குரிய பொருளாகக் கொள்ளுதல் கூடாது; பணப்பித்தம் கூடாது; வெறும் அலங்காரங்களுக்கும் ஆடம்பரத்துக்கும் பணம் தேடிக் கொண்டு கிடப்பவனின் வாழ்வு, பாழ்படும், பணம் பணமென்று பிணமாகும்வரை அவன் அலைந்து திரிய வேண்டியவனாவானேயொழிய - வாழ்க்கையிலே இன்பம் காண மாட்டான்’ என்றெல்லாம் என்னிடம் பேசுவாரே, அவரா இந்தப் பாழும் பணத்தாசை கொண்டார்? சேச்சே! நான் ஓர் துஷ்டை! காக்காய் உட்கார்ந்தது பனம்பழம் விழுந்தது என்பது போல, இந்தப் பதக்கம் இங்கே இருப்பதாலேயே, அவர் களவாடினார், கோயில் கொள்ளையிலே சம்பந்தப்பட்டார் என்று எண்ணவும் தொடங்கினேனே, எவ்வளவு இழிகுணம் எனக்கு? அவராவது, இந்த அற்பப் பணத்துக்காக, அக்ரமத்திலே ஈடுபடுவதாவது! பதக்கம் அவரிடம் வேறு யாராவது தந்திருக்கக் கூடாதா என்ன? மேலும், இது கோயில் பதக்கம் என்று ஏன் கூற வேண்டும்? எவனோ வழிப்போக்கன் சொன்ன வார்த்தை வேதமா? வேதமே பொய் என்பர் என் நாதன்! எவனோ வெறியன், எப்படியோ, இந்தப் பதக்கம் இங்கு இருப்பதைத் தெரிந்து கொண்டு, என்னை மிரட்டினான் - என்று பல பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தாள் சூடா. ஒரு விநாடி தேவர் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பார் என்று தோன்றும்; மறுவிநாடி அவர் ஒருபோதும் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்று தோன்றும். இருவகை எண்ணங்களுக்கிடையே சிக்கிய சூடாவின் மனம் குழம்பிவிட்டது. அவர் கள்ளனாக இருந்தாலும், அவரைக் காப்பாற்றித்தானேயாக வேண்டும். அதற்காகச் செலவிட வேண்டிய நேரத்தை இப்படிப் பாழ்படுத்துகிறேனே, நான் ஓர் முட்டாள். முதலிலே இந்தப் பதக்கத்தை என்ன செய்வது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். பேழைகளைப் பழையபடி ஒழுங்காக வைத்துவிட்டு யோசிக்கலானாள்.

“முட்டாளினும் முட்டாள்; நீ வடிகட்டின முட்டாளடா?” என்று வண்டிக்கார வரதன், அபேஸ் ஆறுமுகத்தை நோக்கிச் சொன்னான். ஆறுமுகம், “டேய், தடியா! நான் ஒன்றும் முட்டாள் இல்லை. சமயா சந்தர்ப்பம், இடம், பொருள், ஏவல் என்பார்களே அது தெரிந்து நடப்பவன்; உனக்குத் தெரியாது, அந்த விஷயம்,” என்று கூறிவிட்டுக் காரக் கறித்துண்டைக் கடித்துக் கொண்டே பேசலானான். “வரதா! எனக்கு அபேஸ் ஆறுமுகம் என்று பேராச்சே, ஏன் தெரியுமேல்லோ உனக்கு! இந்த ஆறுமுகத்தின் கண்ணிலே எது பட்டாலும் சரி, தீர்த்துவிடணும்னு நினைச்சா, என்ன ஆகும்? தீர்ந்துவிடும்; அப்படிப்பட்ட அபேஸ் ஆறுமுகத்தை அடிமுட்டாள் நீ, வடிகட்டின முட்டாளுன்னு சொல்றே” என்று கூறினான். இருவருக்கும் போதை ஏற ஆரம்பித்தது; பேச்சும் வளர்ந்தது.

“அப்படின்னா, கையிலே கிடைச்சதை வச்சிக்கத் தெரியாம இருக்கிறதுக்கு பேரு புத்திசாலித் தனமா? டே! உங்க அப்பன் உன்னை இந்த இலட்சணத்துக்குப் படிக்கக் கூட வைச்சானே,” வரதன் சொன்னான் இது போல். வாயாடவா தெரியாது ஆறுமுகத்துக்கு. “அண்ணே” என்று அழைத்தான் வரதனை. அந்த மரியாதை வார்த்தை போதையின் விளைவு! “அண்ணே! ஆறுமுகத்தை நீ அப்படி ஒண்ணும் இலேசான ஆசாமின்னு நினைக்காதே. காரணமில்லாத ஒரு காரியமும் செய்ய மாட்டான்” என்றான்.

“என்னடா, வேதாந்தம் பேசறே! எல்லாருக்கும் கிடைக்குமா உனக்குக் கிடைச்ச சான்சு. என்னமோ சொல்வாங்களே, கிட்டே வந்த சீதேவியை எட்டி உதைச்சானாம்னு. அதுமாதிரியான காரியத்தைச் செய்துவிட்டு மகா பெரிய மேதாவி மாதிரி, காரணத்தோட செய்தேனுன்னு கதை அளக்கிறே. ஆறுமுகம்! நீ ஆயிரம் சொல்லு. நான் ஒப்பமாட்டேன். உனக்குக் கிடைச்ச சான்சு எனக்குக் கிடைச்சிருந்தா, அந்தப் பொருளை நான் விட்டிருக்க மாட்டேன். ஆமாம், உனக்குப் பேருதான் இருக்கு அபேஸ் ஆறுமுகம்னு! ஆனா, காரியத்திலே சுத்த சூன்யமா இருக்கிறே” என்று வரதன் பிடிவாதமாகப் பேசினான். பேச்சுக்கிடையிடையே பானம் நடக்கவே பேச்சு முடியவுமில்லை; வார்த்தைகள் மட்டுமல்ல, நினைப்புங்கூட வளைந்து வளைந்து வெளிவந்தது.

“இப்ப நமக்கு என்ன நஷ்டமாயிடிச்சி. ஒரு இரண்டு மனி நேர வேலைக்கு இருநூறு கிடைச்சுது. போதாதா? நீ நாளெல்லாம் நாயாட்டம் பாடுபட்டா என்ன கிடைக்கும். நாலணாக் கிடைக்குமாடா நாலணா? இருநூறு ரூபாயடா நமக்கு. டே, வரதா! நான்தாண்டா கலக்டரு! அவனுக்குக்கூட ஏதுடா அம்மாஞ் சம்பளம்? கவர்னரும் நானும் ஒண்ணுடா, தெரியுமா? அவருக்குக்கூட கிடைக்குதோ இல்லையோ தெரியலே. ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபா சம்பளம்!” என்று ஆறுமுகம் கூறினான்.

“இரண்டாயிரம் மூவாயிரம் பெறக் கூடிய பொருளை முட்டாளாட்டம் விட்டுட்டு, இருநூறு கிடைச்சுதுன்னு வெக்கமில்லாமே சொல்றியேடா? எல்லாம் சொல்வாங்க. கெண்டையைப் போட்டு வராலை இழுன்னு; நீ என்னடான்னா, வராலைக் காட்டிக் கெண்டையை வாங்கிக்கிட்டே. இது யாரு செய்கிற வேலை! முட்டாள் செய்கிற வேலைதானேடா, அது” என்று வாதாடினான் வரதன்.
“அண்ணே, கொஞ்சம் நிதானிச்சுப் பேசு. அந்தப் பொருளு ஆயிரம், இரண்டாயிரம், அஞ்சாயிரம் கூடப் பொறும். ஆனா, நாம்ப என்ன செய்யப் போறோம். எடுத்துக்கிட்டுப் போயி அந்த மொடா வயித்தன் இருக்கானே, மார்வாடி, அவன்கிட்டே தரணும். அந்தப் பய நமக்கு நியாயமான விலையா தருவான்! டே, ஆறுமுகம்! இந்தப் பச்சைக்கல் நல்லா இல்லை. இந்தச் செவப்புக் கல்லு வெளுத்துப் போச்சி; வெள்ளி மேலே முலாம் பூசியிருக்குன்னு புளுகுவான். புளுகிவிட்டு, ‘ஆறுமுகம்! இனிமே நான் திருட்டு நகையே வாங்கறது இல்லைன்னு சத்யம் செய்துவிட்டேன். இதை வாங்கிட்டா, போலீசுக்கு வாடை அடிக்கும், வம்புவரும். கோர்ட்டும் கையுமா இருக்கணும். நம்பள்க்கு நகை வேண்டாம்’னு சொல்வான், ‘சேட்! சேட்! அப்படிச் சொல்லிடாதே சேட்!’ என்று நாம்ப கெஞ்சணும். கொடுத்ததை கொடுன்னு கேக்கணும். அவன் அஞ்சஞ்சு ரூபாய் உயர்த்தி ஒரு நூறு ரூபாய் கொடுக்கறதுக்குள்ளே நம்ம மனசு படபடன்னு துடிக்கும். ஏண்டாப்பா அம்மாங் கஷ்டம்? இப்ப நமக்குக் கஷ்டமில்லை; நஷ்டமில்லை. போலீசிலே இருக்கிறவனுங்க நம்ப மேலே, மூச்சுக்கூட விட முடியாது. பொருளா இருக்கு நம்மகிட்ட. இல்லை! பணம் இருக்கு இருநூறு. இப்பச் சொல்றா முண்டம்! யாரு முட்டாளுன்னு உன் தலையிலே இருக்கிற பேனை எடுத்துக் கேளு. உனக்கென்னடா தெரியும் இந்த ஜால்ஜுலு எல்லாம். மாட்டு வாலை உடைச்சிக்கிட்டுக் கிடக்கிற மடப்பய, பூட்டை உடைக்கிறவங்கிட்டப் பேசறான். மகா பெரிய வீரன் மாதிரி” என்றான் ஆறுமுகம். கோபம் அவனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாக ஏறிக் கொண்டிருந்தது. வரதனுக்குக் கண்ணும் கழுத்தும் சாய ஆரம்பித்துவிட்டது. கலயம் காலியாகிவிட்டது.

“ஜெமீன்தார் வூட்லே அபேஸ் பண்ணேன். அந்தப் பாப்பாத்தி வூட்லே பொன்னாட்டமா கொண்டு போய் வைச்சுட்டேன். இங்கிருக்கிறத அங்கே கொண்டு போய் வைக்கிறதுக்கு இருநூறு ரூபா! உள்ளங் கையிலே அடங்கிப் போற பொருள். என்னைப் போயி, என்னா சொன்னேடா நீ? டே வரதா! உன்னைச் சும்மா விடலாமா? டே! என் காசுலே கள்ளுத் தண்ணி குடிச்சுகிட்டு, என்னையே முட்டாளுன்னு திட்டறே” என்று துவக்கிய ஆறுமுகம், குரலையும் படிப்படியாக உயர்த்திவிட்டான். வசைமொழியும் ஆபாசத்தின் எல்லைக்குச் சென்றுவிட்டது. வரதன் விடுவானா? ‘யாருடா உன்னைக் கள்ளு வாங்கிக் குடுக்கச் சொன்னாங்க? ஏண்டா டேய்! என்னாடா எண்ணிக்கிட்டே என்னை? உன்னாட்டம் அகப்பட்டதை அபேஸ் பண்றவனடா நா? இப்பக் கூடத் தெரியுமா! ஒரு பேச்சுச் சொன்னா, உன்பாடு என்ன ஆகும் தெரியுமா?” என்று மிரட்டினான்.

“என்னடா ஆகும்? தலை போயிடுமா?”

“தலை போவுதோ, உன் முதுகுத்தோல் போகுதோப் பாரேன், தைரியமிருந்தா.”

“யாருக்குடா தைரியமில்லே! பேடிப் பையா! போன சனிக்கிழமை பொன்னன் அடிக்க வந்தப்போ பொம்பளை மாதிரி ஓடி ஒளிஞ்சுக்கிட்டது யாருடா? நானா, நீயா?”

“இப்ப நீ என்னடா சொல்றே.”

“நீ யாருடா என்னை முட்டாள்ன்னு சொல்ல?”

இந்தப் பாணியிலே வளர்ந்துவிட்டது வம்பு. இந்த இரு குடியரும் உளறிக் கொண்டிருந்ததைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான், என்ன தான் குடித்தாலும் நிதானமே தவறாதவன் என்று பேரெடுத்த மைக்கண்ணன். இந்தப் பேச்சிலே, இடையிடையே வெளி வந்த ஆயிரம், ஐயாயிரம், பச்சை சிகப்பு, மார்வாடி என்ற பதங்களிலிருந்து, பயல் ஏதோ நகையை “அபேஸ்” செய்திருக்கிறான், என்று யூகித்துக் கொண்டான். சரி, இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டான், மைக்கண்ணன்; மாஜி போலீஸ்காரன். அதாவது, போலீஸ் வேலையிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டவன், ஒரு திருட்டு வழக்கிலே சம்பந்தப்பட்டதற்காக. கொஞ்சம் தந்திரசாலி. ஊரிலே இருந்த ஆறுமுகங்களை அறிந்தவன். எனவே, அருகே சென்று அவர்களின் பேச்சிலே கலந்து கொண்டான்.

“ ஆறுமுகம் முட்டாளல்ல ! காரணமின்றி எதுவும் செய்பவனல்ல” என்று ஆரம்பித்தான் மைக்கண்ணன்.

“கேளடா, கேள்! உன்னைப் போல வண்டியோட்டியல்லடா. நம்ம மைக்கண்ணு. போலீசிலே இருந்த ஆசாமி என்று மைக்கண்ணனை ஆதரித்தான் ஆறுமுகம். குடுவையை நிரப்பினான். குபுகுபுவென்று உண்மையைக் கக்கத் தொடங்கினான் ஆறுமுகம்.

“அண்ணே! இதைக் கேளண்ணேன். ஒரு பெரிய இடத்திலே இருந்து ஒரு பதக்கத்தை அபேஸ் செய்யச் சொன்னார் ஒரு பெரிய ஆசாமி” என்று ஆரம்பித்தான் ஆறுமுகம்.

“முடியவில்லையா?” என்று கேட்டான் மைக்கண்ணன்.

“என்னாண்ணேன்! நான் நோட்டமிட்ட காரியத்திலே எப்பண்ணேன், தவறி இருக்கேன். மேலும், அந்த ஆசாமியே, அந்தப் பெரிய இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அவரும் அந்த ஜெமீன்தாரும் பேசிக்கிட்டிருக்கிற நேரமாகப் பாத்துப் பூனை மாதிரி உள்ளே நுழைஞ்சேன். சிங்கமாட்டம் காரியத்தை ஜெயிச்சிகிட்டேன்.” என்றான் ஆறுமுகம்.

“சபாஷ்டா ஆறுமுகம்! நீ போய் ஒரு காரியத்தை முடிக்காம திரும்புவாயா? எமன் போய் உயிரை கொண்டாரத் தவறினாலும் தவறுவான்; அபேஸ் ஆறுமுகம் போனா, காரியம் தவறுமா? வரதா! என்னமோ, வானா மூனான்னு சொன்னியே ஆறுமுகத்தை, உன்னாலே முடியுமா இதுபோலச் செய்ய” என்று பேசி ஆறுமுகத்தைத் தட்டிக் கொடுத்தான் மைக்கண்ணன். போக்கிரிகளுக்குக் கொஞ்சம் “தண்ணி” போட்டுவிட்டுத் தட்டிக் கொடுத்தால் உண்மையைக் கொட்டிவிடுவார்கள் என்று சப்-இன்ஸ்பெக்டர் சகலண நாயுடு பல தடவை செய்த உபதேசம், மைக்கண்ணனுக்கு அந்தச் சமயம் நன்றாகப் பயன்பட்டது.

“அண்ணே! உன்கிட்டே சொல்லாமே யாரிடம் சொல்லப் போகிறேன்! ஆனா நம்ம தொழில் விஷயமா நம்ம சம்சாரத்திடங்கூட நான் மூச்சுவிட மாட்டேன். உன்கிட்டே சொல்லாமே இருக்கலாமா? நீ கூடப் பொறந்த பொறப்பு மாதிரி எனக்கு. நம்ம கலியாண சாஸ்திரி இருக்காரேல்லோ, அந்த ஆசாமி இந்தச் சொர்ணா இருக்காளே, டிராமாக்காரி, அவளை வைச்சிக்
கிட்டு இருக்கிற ஜெமீன்தார் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு. போயி, அவர் வீட்டிலே இருந்து ஒரு பதக்கம் - அதன் அடையாளம், இருக்கிற இடம், திருட்டுச்சாவி அவ்வளவும் நமக்குக் கொடுத்தாரு. கொடுத்து விட்டு ஜெமீன்தார்கூட உட்கார்ந்து என்னமோ கதை பேசிக்கிட்டே இருந்தாரு. இருந்தாரா?

அந்தச் சமயத்திலேதான் என் வேலையை நடத்தணும்னு ஏற்பாடு; அதன்படியே, கொஞ்சம் வயிறு வலிக்குதுன்னு வேஷம் போட்டேன். நான்தான் பெரிய வியாபாரியாச்சே - அப்படின்னுதானே ஐயரு சொல்லி வைச்சாரு அந்த ஜெமீன்தாரனிடம். அவன், வயிறு வலிக்கு மருந்து கொடுத்துவிட்டுக் கொஞ்சம் “ரெஸ்டா” இருங்க சார்னு, என்னை உள் அறையிலே படுக்கச் சொன்னான். நான் ரெஸ்ட் வாங்கப் போனேன்! படுத்தேன். பழையபடி ஜெமீன்தாரும் ஐயரும் பேச ஆரம்பித்ததும், “நைசா” உள்ளே புகுந்து சந்தடி செய்யாமே, ஐயர் சொன்ன பெட்டியைக் கண்டுபிடித்து பதக்கத்தை அபேஸ் செய்து விட்டேன். ஐயரும் ரொம்பக் கெட்டிக்காரன், என் வேலை முடிஞ்சது தெரிஞ்சதும், போவோம் சார்னு கூப்பிட்டுகிட்டாரு. இரண்டு பேரும் கிளம்பிவிட்டோம். அந்தத் தடியன் கை எடுத்துக் கும்பிட்டான் என்னை. ஒரு வேலை முடிஞ்சுதா? இரண்டாவது, ஐயர் என்ன சொன்னாருன்னா, ‘ஆறுமுகம்! நீ இப்போ செய்த காரியம் போறாது; இந்தப் பதக்கத்தை, என் தங்கை வீட்டிலே கொண்டு போய், தெரியாமே, உள்ளே ஏதாவது ஒரு பெட்டியிலே வைத்துவிட வேணும்னு சொன்னாரு. சரி, இந்தச் சனியன் பிடிச்ச நகை நம் கைவிட்டுத் தொலையறது நல்லதுன்னு அந்தக் காரியத்தையும் முடிச்சேன். இரண்டுக்குமா இருநூறு கொடுத்தாரு ஐயரு. இந்த மடப்பய சொல்றான், பதக்கத்தை நான் எடுத்துக்கிட்டு இருக்கணுமாம். மைக்கண்ணண்ணே! அந்த நகை நம்மகிட்ட இருந்தா, நமக்குத்தானே ஆபத்து! இப்ப சட்டி சுட்டுது - கைவிட்டதுன்னு ஆயிடுத்து’ என்று ஆறுமுகம் தன் கதையை விளக்கிக் கூறினான்.

சூடா வீட்டில் நகையை ஒளித்ததுமின்றி, நகை இருப்பதாகச் சூடாவுக்கே கூறும்படியும், தனக்கு ஐயர் சொன்னதையும், சொன்ன வண்ணம் தான் செய்ததையும் ஆறுமுகம் கூறினான். மைக்கண்ணன் இந்தச் சேதியைக் கேட்டு மிகச் சந்தோஷமடைந்து மேலும் சில குடுவைகளை நிரப்பி ஆறுமுகத்துக்குத் தந்துவிட்டுத் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றான். நேராகச் சூடா வீடு சென்று கதவைத் தட்டினான். அதே நேரத்திலேதான் சூடா, பதக்கத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள். கதவு தட்டப்படுவது கேட்டுத் திகிலுற்ற சூடா, பதக்கத்தை மடியிலே மறைத்து வைத்துக் கொண்டு ஓடிச் சென்று கதவைத்திறந்தாள். மைக்கண்ணன் ஒரு அசட்டுப் புன்சிரிப்புடன், சூடாவைப் பார்த்து, “தாங்கள்தானே சூடா” என்று கேட்டான். “ஆமாம், நீங்கள் யார்?” என்று கேட்டாள் சூடா.

“நானா? நான் ஒரு பைத்தியக்காரன். யாராக இருக்கட்டும். ஒரு பெண்ணுக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் அவர்கள் அழைக்கா முன்பே ஓடிச்சென்று உதவி செய்பவன்” என்று மைக்கண்ணன் பதிலுரைத்தான்.

“ஐயா! இது என்ன நாடகப் பேச்சாக இருக்கிறது. யார் என்று கேட்டால் முழநீளம் பேசுகிறீர்” என்று கொஞ்சம் கண்டித்தாள் சூடா. மைக்கண்ணன் கலகலவென்று சிரித்துவிட்டு, “பெண்ணே! நீ கொஞ்சம் தைரியசாலிதான்!” என்றான்.

“என்னய்யா இது? முன்பின் தெரியாத ஆசாமி, வாயில் வந்தபடி பேசிக் கொண்டு நிற்கிறாய். போலீசைக் கூப்பிடுகிறேன் பார்!” என்று மிரட்டினாள் சூடா.

“போலீசையா? கூப்பிடு. நீ கூப்பிடாவிட்டாலும் போலீஸ் தானாக இங்கே வரத்தானே போகிறது” என்று கூறினான் மைக்கண்ணன். சூடாவுக்கு நடுக்கம் பிறந்துவிட்டது. அவளையுமறியாமல், கரம் மடியின் பக்கம் சென்றது. மைக்கண்ணன் யூகமுள்ளவன். எனவே, அதிகாரக் குரலிலே, ஆனால் புன்சிரிப்புடன், “கொடு!” என்றான்.

“எதை? எதை?” என்று குளறினாள் சூடா.

“பதக்கத்தை எடு” என்று மிரட்டும் குரலிலே கூறினான் மைக்கண்ணன்.