அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
6

“எவ்வளவு சம்பத்து இருக்கட்டும். என்ன பிரயோஜனம்? அழகான வர்ணக் காகிதத்தாலான பூப்போன்று என் வாழ்க்கை இருக்கிறது. பணத்துக்குப் பஞ்சமில்லை; பங்களாவிலே வாழ்கிறேன்! மோட்டாரில் சவாரி! கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆட்கள்! விதவிதமான நகைகள்! ஆடை அலங்காரங்களுக்குக் குறைவு இல்லை! சொகுசாக வாழ்கிறேன். ஆனால் சுகம் என்ன காண்கிறேன்? என்னை அவர் பணத்தால் அபிஷேகிக்கிறாரே தவிர, அன்பு துளியும் காட்டக் காணோம். அவரிடம் உள்ள ஜெமீன், அதன் சின்னங்களாக விளங்கும் மாளிகை, பூந்தோட்டம், வண்டி வாகனம், ஆள் அம்பு, இவற்றிலே ஓர் அங்கமாக நான் சேர்க்கப்பட்டிருக்கிறேனே தவிர அவர் என்னைத் தன் இருதய மாளிகையிலே குடியேற விடவில்லை. என் வாழ்வு கண்டு பொறாமைகூட அடைவார்கள் பலர். ‘அவளுக்கென்ன குறை! ஜெமீன் தாரணி!’ என்று பேசுவார்கள். ஆனால், என் மனத்திலே மூண்டு கிடக்கும் வருத்தம் அவர்களுக்கு என்ன தெரியும்? சொன்னால் மட்டுமென்ன நம்பவா போகிறார்கள்? ‘போடி கள்ளி! அவருக்கா உன் மீது அன்பு இல்லை! உயிரையே உன்மீது வைத்திருக்கிற காரணத்தால்தானே, உன்னை இவ்வளவு மேலான நிலையிலே வைத்திருக்கிறார்கள். சொந்த மனைவியைக் கிராம வீட்டிலே இருக்கச் சொல்லிவிட்டு, உன்னோடு நகரத்திலே சொகுசாக வாழ்கிறார். உன்னை நேசிக்கலாமா இவ்வளவு விலையுயர்ந்த நகைகளைத் தந்தார்’ என்று கேட்பார்கள். நான் இங்கே வெறும் சுமைதாங்கியாக இருப்பதை அவர்கள் அறிவார்களா? இந்தச் சத்தற்ற வாழ்க்கையைவிட என் பழைய வாழ்க்கையே மேல்” என்று சோகித்துக் கூறினாள் ஸ்வர்ணா.

இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூந்தோட்டம், அதன் நடுவே அழகான பங்களா, விதவிதமான வர்ண ஜாலங்களைத் தாங்கிக்கொண்டு, பாடியும் ஆடியும் பல விதமான பட்சிகள் இருந்தன அந்தத் தோட்டத்திலே. அந்த வட்டாரத்திலேயே மிக வனப்பு வாய்ந்தது என்று புகழப்பட்ட பங்களா, ஸ்வர்ணா வசித்து வந்த இடம்... அங்கே வாழ்ந்து வந்த ஸ்வர்ணா ஆயாசத்தோடு பேசினது கேட்டு, அவளிடம் பணிப்பெண்ணாக இருந்து தன் குருட்டுக் கணவனுக்குக் குறும்பிலே கைதேர்ந்த குழந்தைகளுக்கும் வாழ வழி வகுத்துத் தந்த வனஜா ஆச்சரியத்துடன், எஜமானியைக் கேட்டாள். “உங்களுக்கு ஏனம்மா வீண் விசாரம்? மஹாலட்சுமி போல இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன குறை? ஏதோ அவர் உங்களிடம் சிரித்துப் பேசுவதில்லை என்று வருத்தப்படுகிறீர். அவர் சுபாவத்தில் அப்படி இருப்பார். சிலதுகள் என் புருஷன் போல எப்போதும் விளையாட்டுத்தனமாக இருப்பதுண்டு. நீங்கள் வீணாக மனத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறீர்கள்” என்று ஆறுதல் மொழி கூறினாள். ஸ்வர்ணா திருப்தி அடையவில்லை.

ஸ்வர்ணாவின் வருத்தத்தைக் கண்டு வனஜா ஆச்சரியப்பட்டதுடன் கோபமுங் கொண்டாள். அவளுக்குத் தெரியும் ஜெமீன்தாரின் தயவைப் பெறுவதற்கு முன்பு ஸ்வர்ணா இருந்த வாழ்வின் இலட்சணம். பெயர்கூட அப்போது ஸ்வர்ணா அல்ல! சோற்றுக்குத் தாளம் போட்ட சொர்ணம், இப்போது ஸ்வர்ணாவாகி, உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கிறாள்.

கொஞ்சம் அழகும், அளவு கடந்த சாகசமும் இருக்கும் காரணத்தால், இவளைவிட அழகிகள், எவ்வளவோ ஏழ்மையிலே மூழ்கிக் கிடக்கிறார்கள், இவள் ஏன், எவ்வளவோ சலிப்படைந்தவளாகவும், எதையோ பறிகொடுத்துவிட்டவள் போலவும் நடக்கிறாள்” என்று எண்ணிய வனஜா, ‘அவள் வேறு எப்படி இருப்பாள்? கூத்தாடிச் சிறுக்கிதானே! சந்திரமதி வேஷம் போட்டுப் புலம்பினவள், அல்லியாகத் தோன்றி ஆர்ப்பரித்தவள், இன்னும் எத்தனையோ வேஷம் போட்டவள், இப்போது சோகமுள்ளவளாக நடிக்கிறாள்” என்று தீர்மானித்தாள். உண்மையிலே ஸவர்ணா நாடகக்காரிதான். ஆனால் அவளுடைய சோகம் நடிப்பல்ல! நாடக வாழ்க்கையை விட்டுவிட்டு ஜெமீன்தாரரின் ஆசை நாயகியாக ஸ்வர்ணா புதுவாழ்வு ஆரம்பித்தபோது இனிமேல்தான் தனக்கு உண்யைமான இன்பம் கிடைக்கும் என்று எண்ணினாள். ஆனால், இந்த வாழ்வும், கேவலம் நாடகந்தானோ என்று அஞ்சும்படியாகிவிட்டது.

நாடகக் கொட்டகையிலே இருப்பவர்கள், அந்தத் தகதகப்பான உடையையும் பளபளப்பான நகையையும் விறுவிறுப்பான பேச்சையும் கண்டும் கேட்டும், நடிகையின் வாழ்வு மிக ரம்மியமானதாக இருக்கும் என்றுதான் எண்ணிக் கொள்வர். ஆனால் நடிகர்களின் நிஜ வாழ்விலே உள்ள கஷ்ட நஷ்டம் அவர்களுக்கு என்ன தெரியும்? அதிலும் நடிகையின் வாழ்விலே உள்ள தொல்லைகளும் துயரமும், கொட்டகையிலே அமர்ந்து கைகொட்டி ஆரவாரித்து, சபாஷ் கொடுத்து ஒன்ஸ்மோர் கேட்டுக் களிக்கும் மக்கள் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? தரைக்கு வெளியே திரிலோக சுந்தரிதான். உள்ளே சென்றதும், எவ்வளவோ கஷ்டம்; வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பவருக்கு எப்படி நடிகரின் வேதனை தெரியவதில்லையோ, அதுபோலவேதான், பங்களாவாசியான ஸ்வர்ணாவின் சோகம் நிரம்பிய வாழ்வையும் வனஜாவால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஸ்வர்ணா தன் கஷ்டத்தை வேலைக்காரியிடம் சொல்லும்போது என் பழைய வாழ்க்கையே மேல் என்று கூறினாள். கூறினதும், அந்தப் பழைய வாழ்க்கை, அவள் மனக் கண்முன் கூத்தாடிற்று. அதோ அவன் நிற்கிறான். பவுடர் போட்டுக் கொள்ளாமல், இனிமேல் அர்ஜுனனாக வேண்டும். இப்போது காம்போதி கனகன், அதாவது, நடிகன், காம்போதி இராகம் பாடுவதிலே கெட்டிக்காரன். எனவே இராகத்தின் பெயர் அடைமொழியாக அமைந்தது. கனகன், அல்லியாகி நின்று கொண்டிருந்த சொர்ணத்தைக் கொஞ்சம் கோபத்தோடு பார்க்கிறான். காரணம், அன்று பகலிலே, பாட்டு வாத்தியாரிடம் பத்து நிமிஷத்திற்கு மேலாகவே சொர்ணம், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கனகம் கோபித்துக் கொண்டிருப்பது தெரியும், சொர்ணத்துக்கு. சமாதானப்படுத்த முயன்று, “தலைவலியோ?” என்றுகேட்டாள் வாஞ்சையுடன்.

“தலைவலி அல்ல. தலைவிதி!’ என்று வெறுப்புடன் பதில் சொன்னான் அர்ஜுனனாகிக் காதல் மொழி பேச வேண்டிய கனகன். அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் சிநேகம் உண்டாக்க வேண்டிய கிருஷ்ணன் வேடம் தாங்கிக் கொண்டிருந்த கேசவன், அந்தச் சமயத்திலே வேஷத்திற்கு முரணான வேலையில் இறங்கி, “பக்கிரி, அர்ஜுனனாகப் போட்டால் பேஷாக இருக்கும்” என்று கூறினான். அந்தப் பேச்சு தனக்கும் பாட்டு வாத்தியாருக்கும் இடையே கயிறு கட்டக் கூறப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்ட சொர்ணம், “பக்கிரிக்கு அர்ஜுனன் வேஷம் போடுவதனால் நம்ம பார்வதிக்குத்தான் அல்லி வேஷம் போட வேண்டும்” என்று கூறினாள்; கோபத்தையும் மறந்து கனகன் சிரித்தான். ஏனெனில் பார்வதிக்குக் கம்பெனியில் தாடகை பூதகி போன்ற கோர நடிப்புகளே தரப்படுவது வழக்கம். இந்தச் சிறு சச்சரவுக்குப் பிறகு அர்ஜுனனாகி விடுகிறான் கனகன். திரைக்கு வெளியே சென்று பாடுகிறான், “தேவ மனோஹரியே” என்று. இது போன்றதொல்லைகளைச் சொர்ணம் அனுபவித்ததுண்டு. ஜனகன் வேடத்தில் தோன்றினவன், சீதையாக வந்தபோது தன்னை, இராமன்போல ஆலிங்கனம் செய்து கொள்வது கண்டு, “தந்தையே! தங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்” என்று கூறிக் கொண்டே, அவன் பிடியிலிருந்து விலகினாள் சொர்ணம். ஜனகன் வேடத்தையும், சொர்ணத்தின்மீது கொண்ட காமத்தையும் ஏக காலத்திலே தாங்கித் தத்தளித்த நடிகன், திரைக்கு உள்ளே போனதும், மானேஜர் முன் இழுத்துச் செல்லப்பட்டான்.

“தங்கவேல்! உனக்குக் கணக்குத் தீர்க்கப்படுகிறது. நாளை காலையிலே நீ கம்பெனியை விட்டு நின்று விடலாம்.”

“ஏன் சார்! நான் செய்த தவறு என்ன!”

“நீ ஒரு தவறும் செய்யவில்லையப்பா! இந்தக் கம்பெனி மகா மோசமான கம்பெனி. நீ வேறு நல்ல கம்பெனியைப் பார்த்துக் கொண்டு போய்ச் சேரலாம் என்று தான் கூறுகிறேன்.”

“நான் யாரிடமும் இந்தக் கம்பெனியைப் பற்றிக் குறைவாகப் பேசவில்லையே, சார்!”

“நீ பேசினதாக நான் சொல்லவில்லையே! இந்தக் கம்பெனி உனக்கு ஏற்றதல்ல. ஜனகனுக்கும் சீதைக்கும் காதல் கட்டம் நடத்தும் கம்பெனி ஏதாவது இருந்தால் அதிலே போய்ச் சேர்”

“என்ன சார்! நீங்கள் பேசுவதே புரியவில்லையே,” - இந்தப் பேச்சுக்குப் பிறகு மானேஜர், நடிகரின் கன்னத்திலே ஒரு அறை கொடுத்துப் புரியவைத்தார். ஜனகனுக்குச் சீதை மகள்! ஜனகன் வேஷம் போடுபவன் சீதையாக நடிப்பவளை ஆலிங்கனம் செய்து கொள்ளக் கூடாது என்ற சில விஷயங்களைச் சொன்ன அன்று முதல் ஜனகன் சீதைக்கு முதல் தரமான விரோதியானான். இது போன்ற தொல்லைகள் பல பட்டதுண்டு. அந்தச் சமயத்திலெல்லாம், பிச்சை எடுக்கலாம். அடிமை வேலை செய்யலாம்; இந்த நாடகத் தொழில் மட்டும் கூடாது என்று சலித்துக் கொண்டதுமுண்டு. தொல்லையும் துயரமும் நிரம்பிய அந்த வாழ்க்கையிலே சொர்ணா உழன்று கொண்டிருந்த அதே சமயத்திலே கம்பெனியோ, ஊராருக்குச் சுவரொட்டிகள் மூலம், அவளை அறிமுகப்படுத்திய விதமோ, வேடிக்கையாக இருந்தது.

அவளுடைய புன்னகை - ஓர் புது விருந்து!

என்று கொட்டை எழுத்துக்களிலே விளம்பரம் இருக்கும். அதை விளக்க, புன்னகை பூத்த முகத்துடன் சொர்ணத்தின் படம் இருக்கும்!

ஒரு படத்திலே அவளுடைய இரு கண்கள் மட்டும் காணப்படும். நீர்த் துளிகளுடன், அதற்குப் பக்கத்திலே கொட்டை எழுத்துக்களிலே,

சோகரச திலகம் சொர்ணாபாய் இன்று
சந்திரமதி வேடத்தில் தோன்றுவாள்,
கல்மனமும் கரையும்.

என்று விளம்பரம் காணப்படும்.

உல்லாசி, சல்லாபி, ஜாலக்காரி, சிரிப்புக்காரி, பேச்சில் முதல்தரம் என்றெல்லாம் விளம்பரம் இருக்கும்.

“உன் மீது நான் கொண்ட காதல்...” என்று கூறுவான் காதலன் - அதாவது காதலன் வேடதாரி. சொர்ணம் காதலியாக நடிக்கும்போது ஒரு கடைக்கண் தாக்குதலை நடத்துவாள். காதலன் வேடம் தாங்கியவன் தாங்க முடியாத பொறுமை அடைவான், கொட்டகையிலே, அந்தக் கடைக்கண் வீச்சுக்கு அவ்வளவு அப்ளாஸ் கிடைக்கும். பொறாமை, சஞ்சலம், சச்சரவு, வஞ்சனை என்ற பல வண்டுகள் கொட்டும் மலர்வனம், நாடக உலகு. அதிலே வசித்து வந்த சொர்ணத்தை, இரவுகளிலே இளவரசியாகவும், பகலிலே பாட்டு வாத்தியாருக்கும் பல நடிகருக்கும் இடையே கிடந்து வாடும் பரிதாபத்துக்குரியவளாகவும் இருந்து வந்தவளை, ஜெமீன்தார் செல்லப்பர் ஸ்வணாவாக்கினார். நடிகர் உலகிலிருந்து விடுதலை வாங்கித் தந்தார். அட்டைப் பங்களாவிலே, காகிதப் பூஞ்சோலையிலே உலவிக் கொண்டிருந்தவளை, நிஜமான பங்களாவிலே, நேர்த்தியான பூந்தோட்டத்திலே வாழச் செய்தார். ஆனால் சொர்ணமாக இருந்தபோது கண்ட சந்தோஷங்கூட ஸ்வர்ணாவாக இருந்த காணவில்லையே என்று அவள் வாடினாள்.

“சொர்ணம்! ஊர் முழுவதும் உன் புகழ்தான்.” என்று மானேஜர் சொல்வார். எந்த மானேஜர்? சம்பளம் ஒரு ஐந்து ரூபாய் அதிகம் தரவேண்டும் என்று கேட்டால் முகத்தைச் சுளித்துக் கொண்டு செலவு அதிகமான கணக்கைக் கூறும் அதே மானேஜர்தான்! ஆனால் அவருடைய பாராட்டுதல், ஒருவிதமான களிப்புத் தரும்! “வள்ளியென்றால் வள்ளியேதான்.” என்று புகழ்வான். முருகனாகக் காட்சி தரும் கனகனை, திரைக்கு உள்ளே “வெவ்வெவ்வே!” என்று கேலி செய்வாள் சொர்ணம். ஆனால் மனதிலே ஒருவிதமான ஆனந்தம் பிறக்கும். இங்கு ஒரு துளி களிப்பும் இல்லை. ஜெமீன்தாரிடம் கம்பீரம், தாராளம் இருந்தது. அன்பு இல்லை. அவர் அவளை அணைத்துக் கொள்ளாமலில்லை. ஆனால் ஆலிங்கனம் உடலை உடல் பின்னிக் கொள்வதாக மட்டுமிருந்ததே தவிர, இரு உள்ளங்களும் தழுவுவதாக இல்லை. அபூர்வமான அலங்காரத்துடன் தோன்றுவாள். அவரும், அவளை உற்றுப் பார்ப்பார். ஆனால் அழகான ஓர் சிலையைப் பார்த்துக் கொண்டு நிற்கும் பட்டிக்காட்டானுடைய பார்வை போலவே இருக்கும், அவருடைய பார்வை! முத்தங்கள் கூடத்தான் தருவார்! சத்தம் இருக்கும், சுவை இராது! அவைகளைப் பெற்றுக் கொள்ளும்போது, ஸ்வர்ணாவுக்கு ஏதோ ஓர் நிழலை முத்தமிடுவது போலிருக்குமேயொழிய சுவை இருப்பதில்லை. கடற்கரையிலே உலவச் சொல்வார்கள். களிப்பு இருப்பதில்லை. நாடகங்களுக்குக் கூடச் செல்வதுண்டு. ஸ்வர்ணா கொஞ்சம் உரக்கச் சிரித்தால், ஜெமீன்தார் கோபமாகப் பார்ப்பார். சிரிப்பு மறைந்துவிடும். அவள் ஓர் அழகான பதுமை; அவர் ஒரு கெம்பீரமான உருவம். இதுவே அவர்கள் தொடர்பின் தன்மையாக இருந்தது. அவர் ஜெமீன்தாரராக இருந்தாரே யொழியக் காதலராக இல்லை. அவருடைய இருதயம், எங்கே, என்று அவள் தேடினாள். அவர் தன் இரும்புப் பெட்டியின் சாவியை அவளிடம் கொடுத்தார். இருதயத்தைத் தொட அனுமதிக்கவில்லை. இருக்கிறதா, இல்லையா என்றுகூட அவளால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையிலே அவள், தன் பழைய வாழ்க்கையே மேல் என்று எண்ணினதிலே ஆச்சரியம் என்ன இருக்க முடியும்! சொர்ணம் பசியுடன் போராடினாள். வெற்றி பெற்றுப் பசியை விரட்டி அடித்தாள். தன் திறமையால் ஸ்வர்ணாவும் பசி

யுடன் போராடினாள் - இருதயப் பசி - அன்புப் பானம் வேண்டினாள்.

ஆனால் அதிலே வெற்றி பெறவில்லை. ஆகவேதான், அவள் வனஜாவிடம் தன் வேதனையைக் கூறிக் கொண்டிருந்தாள். அதே சமயத்தில் ஜெமீன்தார் செல்லப்பர் அங்கு வந்தார். அவர் வந்ததை ஸ்வர்ணா, வனஜா அவசரமாக எழுந்து சென்றது மூலம் தெரிந்து கொண்டாள். ஆயிரமாயிரம் சுவரொட்டிகளிலே பொறிக்கப்பட்டு, பல்லாயிரம் ரசிகர்களைப் பரவசப்படுத்திய அதே புன்னகைதான் ஸ்வர்ணா முகத்திலே தவழ்ந்தது. அவர் ரசிகரல்லவே! ஜெமீன்தாரரல்லவா! அவர் அந்தப் புன்னகையைக் கவனிக்கவில்லை. செடியிலே கிடந்து வாடிவிடும் மலர் போலாயிற்று அந்தப் புன்னகை.

“ஸ்வர்ணா! இருப்புப் பெட்டியை இன்றாவது நேற்றாவது திறந்தாயா?” என்று ஜெமீன்தார் கேட்டார். அவருடைய குரலிலே பயமும் கோபமும் கலந்திருப்பது கண்ட ஸ்வர்ணா திகிலுடன் ‘ஏன்?’ என்று சம்பந்தமற்ற பேச்சுப் பேசினாள்.

“இரும்புப் பெட்டியிலிருந்த பதக்கம் - நாகப் பதக்கம் - காணோம்,” என்றார் ஜெமீன்தார்.

“பதக்கமா? ஐயோ!” என்று பதறினாள் ஸ்வர்ணா.

“நீ...” என்று ஆரம்பித்து, மேலே ஒன்றும் பேசாமல், உட்கார்ந்து கொண்டார் செல்லப்பர்.

“அந்தப் பதக்கத்தைத்தான் நான் அணிந்து கொள்வதே கிடையாதே. நான் அதைப் பார்த்தே பல நாளாகிவிட்டன. நேற்றுப் பெட்டியைத் திறந்தபோது கூடக் கவனிக்கவில்லை” என்று கூறிக் கொண்டே, உள்ளே போகக் கிளம்பினாள் ஸ்வர்ணா.

“பெட்டியை நன்றாகப் பார்த்தாகி விட்டது. பதக்கம் அங்கே இல்லை. யாரோ களவாடிவிட்டார்கள்” என்று கூறினார் ஜெமீன்தார். ஒவ்வொரு வார்த்தையும் கொதிக்க வைத்த எண்ணெயை மேலே ஊற்றுவது போலிருந்தது.

அதே சமயத்திலேதான், சூடா, தேவரின் பேழையிலே, பதக்கம் இருக்கக் கண்டு, ஐயோ!” என்று பதறிக் கொண்டிருந்தாள்.