அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
2

திடீரென்று தேவர் கைது செய்யப்பட்டதும் சூடாவின் மனம் பட்டபாடு விவரிக்க முடியாததாகிவிட்டது. தேவரும் திகைத்து நின்றார்! தேன்மொழியாளுக்குத் தேறுதல் கூறும் விதமும் தெரியாது திகைத்தார்.

“சூடா! என்ன இது! சுத்தப் பைத்தியமாக இருக்கிறாயே!” என்று கூறிக் கொண்டே, சூடாவை, அனைத்துக் கொண்டார் தேவர். போலீஸ் இன்ஸ்பெக்டரின் கண்களிலேயும் கொஞ்சம் நீர் கசிய ஆரம்பித்தது. கண்ணீருக்கும் கடமைக்கும் கடும் போர் பல மூண்டதை கண்டவராதலால், ஒரு நிமிஷத்திலே சமாளித்துக் கொண்டு “மிஸ்டர்! நாம் இங்கே அதிகநேரம் தாமதிப்பதற்கில்லை” என்று கூறினார். இதற்கிடையே தேவரின் புத்தகசாலை சோதனை செய்யப்பட்டது. பல கடிதங்களும், சில அச்சுப் பிரதிகளும் போலீசாரால் எடுக்கப்பட்டன. போலீஸ் லாரியும் வந்துவிட்டது. தேவர் கண்களைத் துடைத்துக் கொண்டே, “நீ இப்படி அழுதால், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் கண்ணே!” என்று கூறினார். இன்ஸ்பெக்டரும், சூடாவை நோக்கி, “அம்மா! நீங்கள் என்ன பட்டிக்காடா? படித்தவர்களாயிற்றே! இப்படிப் புலம்புவானேன்? சந்தேகத்
தின் பேரில் எடிட்டரைக் கைது செய்திருக்கிறோம். நீதிமன்றம் இருக்கிறது. ஜாமீனில் வெளிவரலாம். இப்போது என்ன நேரிட்டுவிட்டது என்று இப்படிக் கதறுகிறீர்” என்று கூறினார்.

‘தேசவீரன்’ ஆசிரியர் தேவர் வீட்டின் முன்னே போலீஸ் லாரி வந்து நின்றுவுடனே ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. தேவரின் அரெஸ்டுக்கு என்ன காரணம் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். தேசத்திலே ஒருவிதமான கிளர்ச்சியும் இல்லாத நேரமானதால் தேவர் கைது செய்யப்பட்டது பொது மக்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தைத் தந்தது.

“பேனா பிடித்த கை சும்மா இராதப்பா.”

“அறப்போர் தொடுப்போம் - சிறையை உடைப்போம் - சுதந்திரத் தீயில் குளிப்போம் என்றெல்லாம் பேசுவது எழுதுவது என்றால் வேடிக்கையா? விளையாட்டா? பார், பாவம் ஆசாமி மாட்டிக் கொண்டான்.”

“செங்கோலுக்கு முன்பு சங்கீதமா?”

“இந்த வருஷ ஜாதக பலனே அப்படித்தான்! கீர்த்தியுள்ளவர்களுக்குக் கராக்கிரகவாசம் சம்பவிக்கும்; கிரஹக் கோளாறு அப்படியிருக்கு. இவர் என்ன செய்வார்” என்பன போன்ற வம்பளப்புகளும், “இவரை வைக்கப் போவதே இல்லையாம், நேரே நெடோலுக்கு அனுப்பப் போகிறார்களாம்” என்பன போன்ற வதந்திகளும் உலவத் தொடங்கின. ஒரு சிலர், தேச வீரனுக்கு ஜே! தேவருக்கு ஜே! என்று கோஷமிட்டனர். போலீசார் கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தனர். தேவரைப் போலீஸ் லாரியிலே ஏற்றினார் இன்ஸ்பெக்டர். லாரி வேகமாகக் கிளம்பிற்று. “ஐயோ! என் துரையே!” என்று அலறிக் கொண்டே சூடா கீழே விழுந்து புரண்டாள். “அசடே! எழுந்திரு” என்று மெள்ளக் கூறிக் கொண்டே சூடாவை ஒருவர் தூக்கி நிறுத்தினார். அவரைக் கண்டதும் சூடா, மேலும் வீறிட்டழுது கொண்டே, “அண்ணா! நான் என்ன செய்வேன். ஐயோ அண்ணா! இதென்ன அக்ரமம்?” என்று அலறினாள். அவர் ஏதும் பதில் கூறுமால், சூடாவை வீட்டினுள்ளே அழைத்துச் சென்று தாளிட்டு விட்டுக் கூடத்திலே இருந்த சாய்வு நாற்காலியிலே படுத்துக் கொண்டு கண்டகளை மூடிக் கொண்டார். “அண்ணா! அண்ணா!” என்று கதறினாள் காரிகை.

“அண்ணன்! அண்ணன் பேச்சைக் கேட்டிருந்தால், ஏன் இப்படிப்பட்ட ஆபத்து வருகிறது? நீயும் ஆடினாய். உன் இஷ்டப்படி அவனும் மனம் போன போக்கிலே நடந்தான். தலைக்குமேலே இடி. இப்போது, அதைத் தடுக்கும் சக்தி எனக்கு ஏது.” என்றார் அவர்.

“இப்படி எரிகிற நெருப்பிலே எண்ணெயை ஊற்றாதீர்.”

“வேண்டாம் அண்ணா! நான் என் கலக்கத்திலே ஒரு விநாடி என்னை மறந்து, உம்மிடம் கெஞ்சினேன். நீர் எனக்கு நேரிட்டுள்ள இந்த ஆபத்திலே பங்கு கொள்ள வேண்டாம். உமக்கேன் பாபம், இந்தத் தொல்லை? ஈரமுள்ள நெஞ்சினருக்குத்தானே ஏழையின் துயரைத் துடைக்கத் தோன்றும்? இரும்புப் பெட்டியை நிரம்ப, இருதயத்தைக் கழற்றிக் கீழே வீசிவிட்ட உத்தமராகிய உங்களிடம் முறையிட்டேனே நான், அது என் முட்டாள்தனம்.”

“இந்த மாதிரித் துடுக்குத்தனமாக பேச்சுப் பேசித்தானே, கெட்டுக் கீரைவழியானாய்! இன்னமும் கெடு. அவனை நம்பி நாசமாய்ப் போ.”

“அண்ணா! அவரைப் போலீசார் கைது செய்ததைக் கண்டாயிற்று. அந்தக் களிப்புப் போதாதா? ஏன் வீண் நேரம் போக்குகிறீர். நான் எக்கேடு கெட்டால் உமக்கென்ன. போய் உமது சுகத்துக்கான காரியத்தைப் பாரும். நான் நாசமானால் உமக்கு ஒரு நஷ்டமுமில்லை. உம்மோடு பேசவும் எனக்கு இஷ்டமில்லை.”

“பாழாய்ப்போன கூடப் பிறந்த தோஷம் வாட்டுகிறது. இல்லையானால், உன்னுடைய இறுமாப்புக்கு இதுதானா? இன்னமும் பல கேடுகள் வரத்தான் செய்யும் என்று நான் எண்ணிக் கொண்டு என் காரியத்தைக் கவனித்துக் கொண்டு இருந்திருப்பேன்.”

“இறுமாப்பு! எனக்கு இருப்பது இறுமாப்பு! கணவனைக் கைது செய்து போலீசார் அழைத்துப் போகக் கண்டு கதறிக் கிடக்கும் எனக்கு இருப்பது இறுமாப்பு”

“போதும் வாயை மூடு! அவனுக்கேற்ற வாயாடி தானே நீ!”

“அண்ணா! இனி அரை விநாடி கூட உமது முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. கோடி நமஸ்காரம் உமக்கு. வெளியே போங்கள்.”

“சூடா! என்ன திமிர் உனக்கு. என்னை வெளியே போ என்றா சொல்கிறாய்.”

“ஆமாம்! மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னைவிட்டுப் போகுமுன்பு வெளியே போய்விடு!”

“போக்கிரி”

“நயவஞ்சகனைவிடப் போக்கிரி நல்லவன்”

“அழிந்து போகப் போகிறாய்”

“அழியுமுன், உன்னை அம்பலத்தில் இழுத்து வைக்கிறேன்.”

“என்னையா?”

“ஆமாம்! பிரம்மஸ்ரீ கலியாணசுந்தர சாஸ்திரிகளைத்தான்!”

“ஜாதிகெட்ட நாரி! ஆச்சாரங்கெட்ட நீலி! குடும்பத்தைக் கெடுத்த குண்டுமணி!”

“என்றெல்லாம் நீர் தூற்றுவீர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவள் வேறு எவ்விதம் இருப்பாள்? அந்தக் காதகன், நயவஞ்சகன், குடி கெடுப்பவன், வேஷதாரி கலியாணசுந்தரத்தின் தங்கைதானே அவள் என்று உலகு கூறும்; கூறும் படிச் செய்வேன்.”

“சூடாமணி! ஏனடியம்மா! இப்படிக் கெட்டு அழிகிறாய்! வேண்டாமடி? என் மனசை நோக வைக்காதே?”
“ஓஹோ! சுருதியை இறக்கிவிட்டீரா? ஐயா! தேசோத்தாரகரே! உமது ஆலாபனங்களை ஏமாளிகளின் சபையிலே வைத்துக் கொள்ளும். எனக்கு வேண்டாம் உமது கீதம். என் கணவரை மீட்பதற்கான காரியத்தை நான் கவனிக்க வேண்டும். வெளியே புறப்படுகிறேன். வீடு பூட்டவேண்டும். தர்மசொரூபியான நீர் இந்தப் பாபாத்மாக்களின் வீட்டை விட்டு வெளியே ஏறும்.”
மாடப்புறாவைத் துரத்தித் துரத்திக் கொத்தவரும் வல்லூறு போலக் கலியாணசுந்தர சாஸ்திரி, தன் தங்கை சூடாவைச் சொல்லம்புகளால் தாக்கினார். அவளுடைய பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டார். எனவே சூடா, அவரை வெளியே போகும்படி கூறினாள். இந்தக் காரசாரமான பேச்சினால், கலியாணசுந்தர சாஸ்திரி ஓரளவுக்குக் களிப்புமடைந்தார். தங்கையின் வேதனையைக் காண எந்த அண்ணனுக்கு அகமகிழ்ச்சி இருக்கும் என்று கேட்பர். சாஸ்திரிக்கு, சூடா தங்கையாகப் பிறந்தாளேயொழிய, அவர் அவளைத் தன் பரம விரோதியாகவே கருதி வந்தார். அதற்குக் காரணம், அந்த அணங்கு, காதல் பெரிதென மதித்து இவருடைய கட்டுக ்காவலுக்கும் சட்டத் திட்டத்துக்கும் அடங்க மறுத்து, தேவரைக் கலியாணம் செய்துகொண்டதுதான். ‘ஏதோ அது அவாளவாளுடைய இஷ்டம். நாம் இத்யாதி காரியங்களிலே ஏதும் செய்வதற்கில்லை.” என்று அந்தச் சமயத்திலே சாஸ்திரி கூறினாரே தவிர, சூடா மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை அன்றே கொண்டுவிட்டார்.

சூடாவின் தாக்குதலுக்குப் பணிந்தவர் போலப் பாசாங்கு செய்து கொண்டே சாஸ்திரி அந்த வீட்டை விட்டு வெளியே போனார். உடனே சூடா, வீட்டைப் பூட்டிக் கொண்டு, வெறி பிடித்தவள் போல ஓட்டமும் பெருநடையுமாகப் பக்கத்து வீதிக்குச் சென்றாள், தன் சினேகிதி பங்கஜாவைக் காண. பங்கஜாவின் கணவர் பிரபல வக்கீல். அவரைக் கொண்டு, தேவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்ய எண்ணினாள். அந்த நெருக்கடியான நேரத்திலே பங்கஜா வீட்டிலே இல்லை. தாய்வீடு போயிருந்தாள். வக்கீல் சங்கரய்யா, சூடாவை வாஞ்சனையுடன் அழைத்து விவரம் விசாரித்தார்.

“கொள்ளை சம்பந்தமாகத் தேவர் கைது செய்யப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், என் அனுபவத்தைச் சொல்கிறேன் சூடா. இந்த லோகத்திலே யாரையும் நம்ப முடியாது. இன்னதுதான் நடைபெறும், இன்னது நடவாது என்று கூற முடியாது. எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ” என்ற தோரணையிலே பிரபஞ்ச விளக்கப் பேச்சைத் துவக்கினார், அந்தப் பிரபல வக்கீல். கணவன் கைது செய்யப்பட்டான் என்ற கலகத்தோடு கண்ணீர் ததும்பக் கருணையைத் தேடிக் கொண்டு அந்தக் காரிகை வருகிறாள். கைகூப்பி நிற்கிறாள். அந்தக் கண்ணியவானோ லோகலீலையை விவரிக்கிறார்! அவருக்கென்ன, அடிவயிற்றிலே நெருப்பு இல்லை. அவளுக்கு அது.

“கொள்ளை கொலை முதலிய குற்றங்களைச் செய்யக் கூடியவரா அவர்” என்று சூடா உருக்கமாகக் கூறினாள். வக்கீல் குரலை உயர்த்தினார். “அதென்ன சூடா அவ்விதம் பேசுகிறாய்! உனக்கு உத்தமானந்தரைத் தெரியுமோ?” என்று கேட்டுப் பதிலை எதிர்பாராமலேயே, ‘பெயர் உத்தமானந்தர். ஊர் பூராவும் அவரைப் போல உபகாரி, யோகி கிடையாது என்று புகழ்ந்தது. தேவாம்சம் பெற்றவர் என்று பலரும் கொண்டாடினர். அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்? நம்ம பங்கஜம்கூட அவரைப் பூசை செய்வாள். படம் வாங்கி வைத்துக் கொண்டு. அப்படிப்பட்டவர் மீது என்ன வழக்கு வந்தது தெரியுமோ?” என்று கேட்டார். கனைத்தார், புன்சிரிப்புடன்; அவரே பதிலுரைத்தார். “அப்படிப்பட்ட யோகி பத்து வயதுச் சிறுமியைப் பலாத்காரப் புணர்ச்சி செய்ததாகக் கேஸ். அவரா அப்படிப் செய்வார் என்று ஊரார் கூறினர். போலீசிலேயோ மறுக்க முடியாத சாட்சிகள்! என்று நடந்தது தெரியுமோ? ஆறு வருஷம் சிட்சை” என்று கூறி முடித்தார்.

“ஏற்கெனவே திகிலோடு இருக்கும் எனக்கு, உங்கள் பேச்சு, மேலும் பயத்தை மூட்டுகிறதே” என்று கூறிக் கதறினாள் சூடா. வக்கீல் கடகடவெனச் சிரித்து விட்டு, “அசடே! அழாதே! எதற்கு அதைச் சொன்னேன் தெரியுமோ? எப்படிப்பட்ட யோக்யர் மீதும் எப்படிப்பட்ட குற்றமும் சுமத்தப்படலாம். சில சந்தர்ப்ப சாட்சியங்களால், நிரபராதிகளுக்குங்கூடத் தண்டணை தரப்படக் கூடும். ஆகையாலே, குணவானான உன் கணவன் மீது, கொள்ளை அடித்ததாகக் குற்றம் சுமத்தப்படுவது கேட்டு நான் திடுக்கிடவில்லை என்பதைக் கூறவே உத்தமானந்தர் கதையைச் சொன்னேன். முழு விவரமும் கேள். கீழ்க் கோர்ட்டிலே இப்படித் தீர்ப்புக் கிடைத்தது. நான் விடுவேனா? மேல் கோர்ட்டுக்குப் போனேன். ஆறு நாள் விசாரணை! பிராசிக்யூஷன் தரப்பார், மலைமலையாகக் குவித்தார்கள், சாட்சிகளை! தவிடுபொடியாக்கினேன்! ஜட்ஜ் அதுவரை அப்படிப்பட்ட ஆர்குமெண்ட்டைக் கேட்டதுமில்லை! ஆறு வருஷம் போட்டாரல்லவா, கீழ்க் கோர்ட்டிலே, ஜட்ஜு கீழ்க்கோர்ட் தீர்ப்பை ரத்து செய்தார். உத்தமானந்தர் விடுதலை செய்யப்பட்டார். என் பல வெற்றிகளிலே நான் இந்தக் கேசைத்தான் முதல்தரம் என்று கருதுவது வழக்கம். கீழ்க்கோர்ட்டிலே உத்தமானந்தரைத் தண்டித்தாரே சப்-ஜட்ஜு, அவரே பிறகு உத்தமானந்தரின் சிஷ்யரானார். எதற்காக இதைச் சொல்கிறேனென்றால், உன் கணவன் மீது கொண்டு வரப்படும் கேஸ் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், பயப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உனக்குத் தைரியம் கூறத்தான் சொன்னேன். கண்களைத் துடைத்துக் கொண்டு கவலையை இங்கேயே வீசி எறிந்து விட்டு வீட்டுக்குப் போ. உன் கணவனுக்கு ஒரு ஆபத்தும் வராதபடி பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்.” என்று வக்கீல் உறுதி கூறினார்.

“அவரை ஜாமீனிலே....” என்று துவக்கினாள் சூடா. அழுகை மேற்கொண்டு பேசவிடாது செய்துவிட்டது.

“இப்போது புறப்படுகிறேன்” என்று கூறினார் வக்கீல். தமது உடையை அணிந்து கொண்டார். சட்டப் புத்தகங்களைப் புரட்டிச் சில குறிப்புகள் சேகரித்தார். “ஆபீஸ் போகிறேன். அங்கிருந்து நேரே சம்பந்தப்பட்ட அதிகாரியைக் காண்கிறேன். தேவரை ஜாமீனில் அழைத்து வருகிறேன். நீ வீணாக விசாரப் படாதே” என்று மறுபடியும் சூடாவுக்குத் தைரியம் கூறிவிட்டுப் புறப்படச் சித்தமானார். டெலிபோன் மணி அடித்தது. உள்ளே சென்றார். கூடத்திலே இருந்த சூடாவுக்குச் சில சொற்களே காதில் விழுந்தன.

“ஹலோ...”

“நமஸ்காரம், சாஸ்திரிகளா...”

“போறாத காலம், இருந்தாலும்...”

“ஆமாம், சகவாசதோஷம் கூடாது. பெரியவர் வார்த்தையை மதிக்கத்தான் வேண்டும்.”

“கூடத்திலே இருக்கா.”

“ஆத்திரத்திலே பேசி இருப்பாள்.”

“அசடு! உம்மையா வெளியே போகச் சொன்னா”

“நன்னாயிருக்கு, ஏன் இப்படி இவாளுக்குப் புத்தி போச்சி.”

“ஆமாம், முதலிலே செய்ய வேண்டிய காரியம். தேவரை ஜாமீனில் கொண்டு வருவதுதான். அதற்காகத்தான்...”

“என்ன? என்ன? வக்கீல் விக்டரை ஏற்பாடு செய்தாச்சா? இங்கே...”

“சாஸ்திரியார்! இங்கே...”

“உம்ம இஷ்டம், விகடர் யோக்யர். நல்லவர். கெட்டிக்காரர். அதைப் பற்றி இப்போ பேச்சில்லை. இங்கே உம்ம தங்கை சூடா வந்திருக்கா, என்னை இந்தக் கேஸை நடத்தணும்னு கேட்டுண்டிருக்கா, நானும்...”

‘செச்சே! அதென்ன அப்படிப் பேசறேள். விக்டருக்கு நான் என்ன ஜுனியரா, அவனோடு சேர்ந்து வேலை செய்ய? அவனை ஏற்பாடு செய்திருந்தா, நேக்குத் திருப்திதான்.”

“சரி, சரி! விக்டருக்குப் பல பேர் தெரியும்னு நீர் சொல்றது ரொம்பச் சரி! அவரே நடத்தட்டும் கேசை.”

டெலிபோனைக் கீழே சற்றுக் கோபத்தோடு வைத்துவிட்டு, வக்கீல் சங்கரய்யர், கூடத்திற்கு வந்தார். சூடாவைக் கண்டு.

“சூடா! மன்னிக்கணும். நான் இந்தக் கேசுக்கு ஆஜராவதற்கில்லை” என்று கொஞ்சம் கண்டிப்பாகக் கூறினார். டெலிபோன் அறையிலிருந்து வெளிவந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சூடா, “டெலிபோன் மூலமாக என் அண்ணா, என்ன சொன்னார்? என்னவோ விக்டர், வேண்டாம். சரி, என்று காதில் பட்டது” என்று கேட்டாள். “உன் அண்ணா, இந்தக் கேசுக்கு, பாரிஸ்டர் விக்டரை ஏற்பாடு செய்திருக்கிறாராம்,” என்று கூறினார் வக்கீல் வெறுப்புடன்.

“என் அண்ணன், இதிலே சம்பந்தப்படுவதையே நான் விரும்பவில்லை. தயவு செய்து, நீங்களே இந்தக் கேசை நடத்த வேண்டும். விக்டர், செக்டர், யாரும் வேண்டாம். அவர்களுக்கு அக்கறை இருக்குமென்று என்னால் நம்ப முடியவில்லை” என்று மன்றாடினாள் சூடா.

“சூடா! எப்போதும் மரியாதையைக் கெடுத்துக் கொள்கிற வாடிக்கை எனக்குக் கிடையாது. ஆயிரம் வருவதானாலும் சரி, போவதானாலும் சரி! எப்போது இந்தக் கேசை நடத்த ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறாரோ, அதே க்ஷணம் எனக்கு அதிலே வேலை கிடையாது. என்னமோ உன் அண்ணா, பாரிஸ்டர் என்றால் ரொம்பப் பிரமாதம் என்று எண்ணிக் கொண்டு என்னைச் சாமான்யமான வக்கீல் என்று பாவித்து இந்தக் காரியம் செய்திருக்கிறார். அவராகக் கூப்பிட்டு, நான் பாரிஸ்டர் விக்டரை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்ட பிறகு, நான் அந்தக் கேசைத் தொடக்கூடாது. என் மரியாதைக்குப் பங்கம்,” என்று கூறினார் சங்கரய்யர்.

“என் அண்ணாவை நான் அரைமணி நேரத்துக்கு முன்புதானே கண்டபடி பேசினேன்.”

“சொன்னார்! வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னாயாம்.

“ஆமாம்! அப்படியிருக்க அவர் பார்த்து ஏற்பாடு செய்யும் வக்கீலை நான் எப்படி நம்புவது.”

“அதற்கு நான் என்னம்மா செய்வது? நான் சாதாரண வக்கீல், பி.ஏ.பி.எல்; விக்டர் பாரிஸ்டர்! பாரிஸ்டர் என்றால் என்ன? பிராந்தி விஸ்கி சாப்பிடத் தெரியும்! சீமைக்குப் போய் நம் தேசத்துப் பணத்தைப் பாழாக்கியவன் என்று அர்த்தம். அந்தப் பாரிஸ்டர், உன் அண்ணாவுக்குப் பிரமாதமாகத் தென்படுகிறார்.”

“தயவு செய்து, என் பொருட்டு,”

“சங்கரய்யர் ஒரு தீர்மானத்துக்கு வந்தாச்சி என்றால், சர்வேஸ்வரனாலேகூட அதை மாற்ற முடியாது.”

“என் அண்ணா விஷயம் தெரியாது உங்களுக்கு.”

“ஏன் தெரியாது? பேஷாகத் தெரிகிறதே! இந்தச் சிக்கலான கேசுக்கு, அந்தப் போதைக்காரனை வக்கீலாக வைத்ததிலிருந்தே, உன் அண்ணா முட்டாள் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. என்னை வேண்டுமானாலும் கேள், இதுவரையிலே, வாய்தா வாங்கினது தவிர, பாரிஸ்டர் விக்டர் ஒரு கேசாவது ஜெயித்ததுண்டா? விரலை மடக்க முடியுமா? போன மாதம் புவனகிரி முதலியார் கேசுக்கு ஆஜரானான். என்ன நடந்தது. பூஜ்யம். போன வாரத்திலே, என் கட்சிக்காரனாக இருந்த எ.சி. செட்டி கேசை நடத்தினான். என்ன நடந்தது தெரியுமோ, குட்டிச் சுவராக்கினான். விக்டர் ஒரு விடியா மூஞ்சி! அவனையா இப்படிப்பட்ட கேசுக்கு ஏற்பாடு செய்வது? அவனைவிட நன்றாக, என் குமாஸ்தா வினாயக முதலி கேஸ் நடத்துவானே”

“இவ்வளவு தெரிந்திருந்தும், நீங்கள் என்னை இது சமயம் கைவிடலாமா?”

“நான் என்னம்மா செய்வது? விக்டர் ஏற்பாடாகி விட்ட பிறகு, நான் இந்தக் கேசை நடத்துவது எப்படிச் சாத்தியமாகும். போ! அந்த ஆள் ஜாதக பலன் எப்படி இருக்கிறதோ, யார் கண்டார்கள்.”