அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
10
               

“வாடி சாப்பிட, மணி என்ன தெரியுமா?”

“பார்வதி, என்னைத் தொந்திரவு செய்யாதே. எனக்குப் பசியே இல்லை.”

“பசி இல்லையா! அடி! இந்த நிலைமட்டும் உலகிலே ஏற்பட்டுவிட்டால், சண்டை சச்சரவு எதுவும் இராது. பசியில்லையாம் பசி! ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் என்ற பாட்டி மொழி பொய்யா? எழுந்திரடி கண்ணல்ல வா! கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கு.”

“அப்பப்பா! உன் ரோதனை சகிக்க முடியவில்லையடி. எனக்குப் பசி எடுத்தால் சாப்பிடமாட்டேனா. நான் என்ன குழந்தையா, சோறு ஊட்ட வேண்டுமா, சந்தமாமா காட்ட வேண்டுமா! பசியில்லை, போடி என்று சொன்னால்...”

“உன்னைப் பத்தடி பிரம்பினால் கொடுக்கிறேனா!”

“அடித்தால் கூட பொறுத்துக் கொள்வேன்.”

“கடிப்பது மட்டும் கூடாதோ? உண்மைதான் கன்னத்துக்கு முன்னம் மருந்திட்டுக் கொண்டாயல்லவா?”

“கேலி செய்யாதே பார்வதி. எனக்கென்னமோ வாய் ஒரே கசப்பாக இருக்கிறது. சாப்பிடப் பிடிக்கவில்லை.

உத்தமியின் வாய்க் கசப்பின் காரணம் யாதோவெனப் பார்வதி உசாவினாள். பயனின்றி - சின்னாட்கள் வரை ஏதோ நோய்வகை போலும் என்றெண்ணினாள். ஆனால், கசப்புடன் குமட்டலும்; மயக்கமும் வந்திடக் கண்டாள்; உத்தமியின் விழியிலே நீர்த்துளிகள் தோன்றிடவுங் கண்டாள். பின்னரே பார்வதிக்கு உத்தமியின் வாய்க் கசப்புடன் உள்ளக் கசப்பும் உடனிருந்து வருவது தெரியவந்தது. இன்பத்தை அடைய எத்தனிக்கும் உத்தமிக்குச் சுவை கிடைத்ததுடன் சூலும் ஏற்பட்டது. வாய்க்கசப்பும் குமட்டலும், உணவு ஏற்றுக் கொள்ளாமையும், அவற்றின் அறிகுறிகளே. ஆரிய சமாஜத்தின் சீரிய ஏற்பாட்டினால் நாம் மணவினை முடித்துக் கொண்டதும், எப்படி எப்படி இருப்போம் தெரியுமோ? என்னென்ன விளையாட்டுகளிலே ஈடுபட்டு மகிழ்வோம் தெரியுமோ! நமது இன்பம் எவ்வண்ணமிருக்கும் தெரியுமோ! என்று கூறிக் கூறி நாணமும் சிறு நகையும் உடலை வளைத்து உள்ளத்தை நெகிழச் செய்திட, அந்நிலை எனும் வலையிலே அந்த நங்கையை நரசிம்மன் வீழ்த்திவிட்டான் - வாய்க்கசப்புக்குக் காரணம் அதுவே! உத்தமி மூன்று மாதக் கர்ப்பம்! கடற்கரைக் காதல் கள்ளங்கபடமறியா உத்தமியின் உள்ளத்தை ஒடியச் செய்து விட்டது.

அவளுடைய அணைப்பும் முத்தமும் கிடைக்கும் வரையிலே ஆரிய சமாஜத்தைப் பற்றியும், கலியாணத்துக்காகக் கிறிஸ்தவ மார்க்கத்தை விட்டு விலவி மீண்டும் இந்துவாக வேண்டுமன்றும், நரசிம்மன் கூறிக் கொண்டிருந்தான், உத்தமி மீள முடியாத அளவு தன்னிடம் சிக்கிவிட்ட பிறகு வேறு பாஷையிலே பேசலானான். “கிருஸ்தவ மார்க்கத்திலிருந்து விலகி, சுத்தி பெற்று இந்துவாக நீ மாறினால், உத்தமி ஒரு கஷ்டம் இருக்கிறது. நீ கிருஸ்தவ மார்க்கத்தைத் தழுவிக் கொள்ளும் முன்பு எந்த வகுப்பினளோ, அதிலேதான் சேர வேண்டும். நீயோ, எந்த வகுப்பிலே பிறந்தவள் என்து தெரியாதென்று கூறுகிறாய். இது ஒரு தர்மசங்கடமாகி விட்டது” என்று சாக்குக் கூறலானான். அது கேட்டு உத்தமி வடித்த கண்ணீர் உலரு முன்பு “உத்தமி! ஏதோ பிராமண குலத்தைச் சிலபேர் பழிக்கிறா. அவா, விஷயந்தெரியாதவாளென்று நான் நிச்சயமாய்ச் சொல்வேன். நேற்று என் மாமா ஆத்துக்குப் போயிருந்தேன். அவர் மகள், குமாரி குமுதினியின் நாட்டியத்தைக் கண்டேன். அப்படியே பிரமித்துப் போனேன். ஏதோ தேவலோகத்திலே அப்சரசுகள் ஆடுவாள்னு சொல்றாளே, அந்த அப்சரசுகள் தோற்றுவிடுவா எங்க குமுதினியிடம், பலே ஜோர்” என்று பேசினான்.

“குமுதினி, சின்னப் பெண்ணா?”

“ஆமாம், பதினேழு, பதினெட்டு வயதிருக்கும்.”

“அழகா இருப்பாளா?”

“அதையேன் கேக்கறே போ. மகா ரூபவதியா இருக்கா. அவமுகத்திலே லட்சுமிகளை தாண்டவமாடுவது.”

“அவ புருஷனுக்கு என்ன வேலை?”

“என்ன வேலை வேண்டியிருக்கு அவனுக்கு? சதா சர்வ காலமும் அவளோடு சரசமாடிண்டிருந்தாலே போதும். வேறு வேலைக்குப் போகத்தான் மனம் வருமா?”

“ஒரு வேலையுமின்றிச் சும்மாவா இருக்கிறான்?”

“யார்?”

“குமுதினி புருஷன்”

“அட பைத்தியமே! அவளைக் கலியாணம் செய்து கொள்பவன் அவளிடம் சொக்கி விடுவான் என்பதைச் சொன்னேன். அவளுக்குத்தான் இன்னமும் கலியாணம் ஆகவில்லையே.”

“ஏழைவீட்டுப் பெண்ணா?”

“நல்ல கேள்வி கேட்டபோ. என்ஜினியர் வேதாந்தாச் சாரியின் மகள்ன்னா குமுது. வேதாந்தாச்சாரி யார் தெரியுமோ? ஜட்ஜு சடகோப்பாச்சாரியார் தம்பி! பெரிய இடம்ன்னோ? மாயவரம் பக்கத்திலே அவாளுக்குப் பெரிய மிராசு இருக்கு. மோட்டர் மூன்று அவா வீட்டிலே.”

“அழகு அந்தஸ்து எல்லாம் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஏன் இன்னமும் ஒரு இடம் ஏற்பாடாகவில்லை.”

“எப்படி ஆகும்? அவாளுக்குக் குமுதினியை, எப்படியாவது எனக்குத் தர வேண்டுமென்று எண்ணம். நான் என்ன செய்வேன்? அவா, கேட்கும்போதெல்லாம் முடியாது முடியாதுன்னு சொல்
லிண்டு இருக்கேன். உயிரை வாங்கறா” என்ற உரையாடல் மூலம், தனக்குக் கலியாண மார்க்கெட்டிலே கிராக்கி இருப்பதையும் கூறினான். கடைசியில் ஸ்ரீஜத் நரசிம்மனுக்கும், ஸ்ரீமதி குமாரி குமுதினிக்கும் விவாக சுப முகூர்த்தம் நடந்து விட்டது. வாய்க் கசப்பும், உத்தமிக்கு அதிகரிக்காமலிருக்குமா?

உண்மை தெரிந்த பிறகு, பார்வதி அதுபற்றி மேலும் விசாரிப்பது உத்தமியின் உள்ளத்திலே வேல் புகுத்துவதாகுமென்று கருதினாள். விஷயமோ வெளியே தெரியக்கூடாது. தெரிந்தால் மானம் போகும்; மூடி வைக்கவும் முடியாது. கரு வளர்ந்து கொண்டிருக்கிறது! இந்நிலையிலே, யாரிடமும் யோசனை கேட்கவும் முடியாது. என் செய்வார்கள். அந்த இளம் பெண்கள்? தற்கொலை தவிர வேறோர் வழியும் இல்லை என்றாள் உத்தமி! நம்பிக்கைக் துரோகம் செய்த நயவஞ்சகன் நரசிம்மனின் கொடுஞ் செயலை, மக்கள் மன்றத்திலே கூறி அவனைப் பழி தீர்க்கலாமென்றாலோ அச்செயல் இடருண் டாக்குவதுடன் உத்தமியையும் ஊராருக்குக் காட்டி கொடுப்பது போலாகி விடும். தேள் கடியால் தேம்பவும் பயந்து திகைக்கும் கள்வன் போன்று இருந்தது உத்தமியின் மனம். தனது நிலை அறிந்தால் ஆசிரியைத் தொழிலையும் அதிகாரிகள் பறித்துக் கொள்வார். அன்போடு தன்னை வளர்த்துப் படிப்பீந்து உதவிய பாதிரிமார்களும் பகைப்பர்! பிழைப்பும் மானமும் போய் இருப்பிடமின்றி அலையும் அபலையாக வேண்டி வருமோ என்றஞ்சி உத்தமி தீயில் வீழ்ந்த சேயானாள். பருவச் சேட்டை யினை அடக்க முடியாது இப்பாழ் நிலை பெற்றேன் என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். இனிமையாகப் பாடி இரையை மயங்கச் செய்யும் பறவை போல, நரசிம்மன் காதல் கீதம்பாடி கருத்தைக் கெடுத்த பிறகு கைவிட்டானே. என்னே அவனுடைய கல் நெஞ்சம் என்று கூறிக் கசிந்துருகினாள். இக்கதி தனக்கு நேரிடாமுன்னம் அவன் என்னென்ன கூறினான், எவ்வண்ணம் ஆடினான் என்பதை எண்ணியே, வஞ்சக நாடகத்தை அவன் எவ்வளவு திறம்பட நடித்தான் என்பது தெரிந்து தேம்பினாள். அவளுடைய கலக்கத்தையும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் நரசிம்மனின் நயவஞ்சகத்தைப் பற்றிச் சட்டை செய்யாமல், சமூகம், பழிக்குமோ என்ற பயமின்றி, கரு வளர்ந்து வந்தது. உட்புறத்திலே உலவும் கருவின் அறிகுறி வெளிப்புறத்தால் காண்போருக்கு விளங்கும் காலம் கடு வேகத்துடன் வந்தது.

“ஒரு காரியம் செய் உத்தமி! ஆறு மாதத்திற்கு லீவ் எடுத்து கொள். இருவரும் வெளியூர் செல்வோம். பிறகு நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பார்வதி யோசனை கூறினாள். எதிர்த்துப் பேசியதன் விளைவால் வேதனையடைந்த உத்தமி, பார்வதியின் யோசனையைக் கேட்டதும், சிறு குழந்தைபோலத் தலை அசைத்தாள். சம்மதம் என்ற அவளுடைய பரிதாபத்தைக் கண்ட பார்வதி, உத்தமியை அருகில் அழைத்துத் தன் மீது சாய்ந்திருக்கச் செய்து, நெற்றியைத் தடவிக் கண்களைத் துடைத்து, “கண்ணே உத்தமி! கலங்காதே, நெடு நாட்களாகவே கன்னிப் பருவத்தை இப்படித் தான் ஆண்கள் சூறையாடியிருக்கிறார்கள். செல்வக் குடியிலே இது நடந்திருப்பின் பணம் என்னும் திரையிட்டுப் பக்குவமாக இதனை மூடிவிட்டிருக்க முடியும். பழியும் பயமும் அங்கே அண்ட அஞ்சும். நாமோ ஏழைகள்; நம்மைக் கண்டிக்கவும், இழிவாகப் பேசவும், சாஸ்திரங்களையும் சன்மார்க்கத்தையும் போதிக்கவும் பலர் முன்வருவார்களே யன்றி, இரக்கங் காட்ட ஒருவருமும் முன்வரமாட்டார்கள். ஆகையினால் நாமேதான் இதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். நீ பயப்படாதே பயந்து இனி என்ன ஆகும்? அந்தப் பாதகனின் செயலை மற. இனி ஆகவேண்டிய காரியத்தைக் கவனிப்போம். நீ முதலிலே, லீவ் கிடைக்கும்படி ஏற்பாடு செய்துகொள்” என்று பரிவுடன் கூறினாள். வலியுள்ள இடத்திலே அன்புடன் தடவிக் கொடுத்தால் வலி நீங்காவிட்டாலுங் கூட, ஓரளவு நிம்மதி இருப்பதுபோல், உத்தமிக்குப் பார்வதியின் பேச்சு எவ்வளவோ ஆறுதலைக் தந்தது. இந்தப் பார்வதியும் இல்லாவிட்டால் தற்கொலை தவிர வேறென்ன செய்து கொண்டிருக்க முடியும். அந்தப் பரிதாபத்துக்குரிய உத்தமியால்?

யாரையேனுங் கொட்டிவிட்ட பிறகு தேள் அவன் எப்படி துடிக்கிறான். என்ன மருந்து தேடுகிறான் என்பதைக் காண விரும்புகிறதா? வேலை முடிந்ததும் வேறிடம் செல்லும். அதுபோல, உத்தமியின் வாழ்வை வதைத்த அந்த வன்னெஞ்சன், அவள் என்ன கதியானாள் என்பதையும் எண்ணவில்லை; குமாரி குமுதினியிடம் குலவிக்கிடந்தான். அதுமட்டுமா? அவளிடம், தனது வீரதீரப் பிரதாபங்களைக் கூறுகையிலே, தன்னிடம் எந்த மாதும் மையல் கொள்வர் என்று பெருமை பேசி, உத்தமியின் கடற்கரைக் காதலையும் கூறினான். தனது நாயகனின் தீச்செயலைக் குமுதினி கண்டிக்கவில்லை. அது தன் கணவனின் திறமைக்கோர் அத்தாட்சி என்று எண்ணியதுடன், உத்தமியைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தீர்மானித்தாள்.

லீவ் கேட்க அன்று உத்தமி, தலைமை ஆசிரியை வீட்டிற்குச் சென்றிருந்தாள். பார்வதி மட்டும் வீட்டிலே ஏதோ படித்துக் கொண்டிருந்தாள். வீட்டருகே ஒரு அழகிய மோட்டார் வந்து நிற்பதைச் சாளரத்தின் மூலம் கண்ட பார்வதிக்கு பார்த்திபனோ என்ற பயம் பிறந்தது. அழகிய ஒரு பெண், மோட்டாரிலிருந்து இறங்கி அங்குமிங்கும் பார்த்து விட்டு, வீட்டிற்குள் நுழையக் கண்ட பார்வதி, யாரோ என்னவோ என்று தெரியாதவளாய், நாற்காலியைத் துடைத்து ஒருபுறம் போட்டு விட்டு, மரியாதையாக வந்தவளை வரவேற்றாள். வந்தவள், பார்வதியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உத்தமி என்பது நீதானே?” என்று கேட்டாள். “இல்லை, என் பெயர் பார்வதி. உத்தமி என் சிநேகிதி. இங்குதான் இருவரும் வசிப்பது, அவள் வெளியே போனாள். வந்துவிடுவாள். உட்காருங்கள்” என்று பார்வதி உபசரித்து விட்டு, “தங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள். “என் பெயர் குமுதினி” என்றுரைத்தாள் வந்தவள். மரியாதையை மட்டுப்படுத்திக் கொண்டு பார்வதி, “நரசிம்மனின் நாயகியா? இங்கே வந்த காரணம்?” என்று கேட்டாள். கேட்கும்போதே பார்வதியின் உள்ளம் பொங்க ஆரம்பித்தது. உத்தமி விஷயமாக நரசிம்மன் வம்பளக்க துணிந்துவிட்டான் என்பதறிந்து.

“ஆமாம்! அவருக்கு உத்தமி தெரியுமாம். நான் உத்தமியைக் காணவே இங்கு வந்தேன்.” என்று குமுதினி கூறினாள்.

“முன் காலத்திலே அரசர்கள், யுத்தத்திலே ஜெயித்த பிறகு தோற்ற மன்னனுடைய ஆடை அணிகளைத் தேவிமார்களிடம் காட்டுவார்களாம். அதுபோல் உன் கணவன் உத்தமியைப் போய் பார்த்துக் களிக்கும்படி உன்னை இங்கு அனுப்பினான் போலும். குமுதினி! நீயும் உத்தமி போலவே ஒரு பெண்தான்! அவளுடைய நிலைமையைக் கண்டால் எவர் மனமும் பதறும். அவளை எப்படியும் மணம் செய்து கொள்வதாக வாக்களித்து, வஞ்சித்து, பணத்தில் புரள வேண்டுமென்கிற பேராசையால், நரசிம்மன் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டான். இவ்வளவு கொடிய வனுக்குப் பெண்டான நீயோ, உன் கணவரின் கயமையால் கலங்கும் காரிகையைக் காண வந்திருக்கிறாய்! நன்று, நன்று! நட இந்த வீட்டைவிட்டு என் கோபம் அதிகரிக்குமுன்பு போய்விடு. நான் உத்தமி போலப் பொறுமையுள்ளவளல்ல. போ, வெளியே” என்று பார்வதி கூறினாள்.

குமுதினி, கோபங்கொள்ளவில்லை. வெளியே போகவும் முயலவில்லை. நாற்காலியிலே உட்கார்ந்து கொண்டு புன்னகை யுடன் “எனக்கென்ன தெரியும்? பழைய கதைகள் தெரிந்தாலுங் கூட அதற்காக நரசிம்மனைக் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று நான் சொன்னாலும் வீட்டிலே கேட்பார்களோ? ஆண்களுக்கு இது சகஜம் என்று கூறுவார்கள். நான் இங்கு வந்தது கூட உத்தமிக்கு ஏதேனும் உதவி செய்யலாம் என்பதற்காககத்தான். கேலி செய்யவா வந்தேன்? உன் சிநேகிதியின் துயர்கண்டு, நீ கோபிப்பது சகஜம், வருத்தப்படுவது முறைதான். ஆனால் ஒன்று யோசி, நரசிம்மன் செய்த குற்றத்திற்காக, எனக்குத் தண்டனை தருவதா? பார்வதி! உனக்கு இருக்கும் அளவு எனக்கு உத்தமியிடம் அன்பிருக்க முடியாது. என்றாலும், அவள் நிலைமையை நரசிம்மன் கூறினது கேட்ட பிறகு. எனக்கு பச்சாதாபமாகத்தான் இருக்கிறது. மேலால் என்ன செய்வது என்பதை யோசித்து இருவரும் கலந்து ஏதேனும் செய்யலாம். வீண் கோபத்தால் என்ன நடக்கும்? எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதன்படி செய்தாய் எல்லாம் சுபமாக முடியும்” என்று குமுதினி கூறினாள்.

“என்ன யோசனை?” என்று கேட்டாள் பார்வதி, கோபங் குறையாத நிலையிலே.

“எனக்கு ஒரு கீர்த்தி வாய்ந்த லேடி டாக்டர் தெரியும்” என்று மெள்ளக் கூறினாள் குமுதினி.

“அவளைக் கண்டு கருவைச் சிதைத்து விடலாம். அது தானே உன்னுடைய அருமையான யோசனை” என்று பார்வதி கேட்டாள். கோபம் வளரத் தொடங்கிய நிலையிலே குமுதினியால் பேச முடியவில்லை.

“அனுபவமா?” என்று வெடுக்கெனக் கேட்டாள் பார்வதி.

“நீ சுத்த அதிகப் பிரசங்கி, ஏதோ திமிராகப் பேசிக் காரியத்தைக் கெடுக்கிறாய். அவளும் நீயும் எக்கேடு கெட்டால் தான் எனக்கென்ன! உத்தமிக்கு இன்னும் மணமாகவில்லையே. ஊர் அறிந்தால் அவளைத் தூற்றுவதோடு எவனும் கலியாணத்துக்கு ஒப்புக் கொள்ளமாட்டானே, என்று நான் ஒரு யோசனை செய்தும் அவளுக்கு ஒரு பாதகமும் நேரிடாதபடி ஒரு காரியம் செய்ய நினைத்தால், நீ வள்ளென விழுந்து என்னைக் கடிக்கிறாயோ, லேடி டாக்டர் என்று நான் ஒரு யோசனை செய்தும் அவளுக்கு ஒரு பாதகமும் நேரிடாதபடி ஒரு காரியம் செய்ய நினைத்தால், நீ வள்ளென விழுந்து என்னைக் கடிக்கிறாயே, லேடி டாக்டர் என்று நான் பேச்சுத் தொடங்கியதும், கருவைச் சிதைக்கச் சொல்கிறேன் என்று நீயாகத் திடீரென்று நினைத்துக் கண்டபடி பேசுகிறாய். உன்னைப் போன்ற அவசர புத்தியுள்ளவளிடம் பேசுவதே மகா ஆபத்து. உத்தமிக்கு என்ன நேரிட்டால் எனக்கென்ன? நானே அவள் பள்ளிக்கூட அதிகாரிகளிடம் போய் விஷயத்தைச் சொல்லி, மானத்தை வாங்குகிறேன் பார். என் உதவியை நீ வெறுத்துத் தள்ளிவிடலாம். ஆனால் என் விரோதம் உங்களை லேசில் விடாது” என்று குமுதினி கோபமாகப் பேசினாள்.

பார்வதி யோசித்தாள். குமுதினி உண்மையிலேயே உத்தமிக்கு மேலும் கெடுதல் செய்துவிட்டால். என்ன செய்வதென்று வயந்து, இனிச்சற்றுப் பக்குவமாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, “குமுதினி! நீ லேடி டாக்டர் என்று சொன்னதும் நான் தவறாக எண்ணிக் கொண்டேன்” என்று கூறினாள்.

“நான் உத்தமியின் கருøச் சிதைக்கும் கொடுஞ்செயலைப் புரியச் சொல்லவில்லை. பிறக்கும் குழந்தைக்குச் சுகமான, அந்தஸ்தான இடம் கிடைக்கும் வழியை கூறுகிறேன். பிராமண குலத்திலே, அந்தக் குழந்தை வாழவும், உத்தமி ஒரு தாயானாள் என்ற விஷயமே உலகுக்குத் தெரியாதிருக்கவும் வழி சொல்லு கிறேன். இதோ, பார்வதி! இக்கடிதத்தைப் படித்துப் பார்!” என்று கூறிக் கொண்டே குமுதினி, தன் மணிபர்சிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துப் பார்வதியிடம் கொடுத்தாள். கடிதத்தைப் படித்த பார்வதி ஒருவாறு விஷயம் தெரிகிறது என்று கூறினாள். புன்சிரிப்புடன், அக்கடிதம் வருமாறு:-

பெங்களூர்
அன்புள்ள குமுதினிக்கு!
லட்சுமிநாராயணன் அருளால் சகல சம்பத்தும் கடாட்சமும் கிடைக்க ஆசீர்வதித்து, ஆண்டாள் எழுதிக் கொண்டது. என்னுடைய சுகதுக்கத்திலே உனக்குள்ள விசேஷ அக்கறைக்காக நான் என்ன பிரதிப் பிரயோஜனம் செய்யப் போகிறேன்? என்னைவிட நீ வயதிலே சிறியவளானாலும் தீட்சணியமுடையவள். உன் கலியாணத்தின்போது நான் வந்திருந்த சமயம், நீ எனக்குச் சொல்லிக் கொடுத்த தந்திரத்தால், வீட்டிலே கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. என் புருஷர் நான் கர்ப்பவதியாக இருக்கிறேன் என்று சந்தோஷமாகவும், பெருமையோடும் இருக்கிறார். முன்பெல்லாம் முகத்தைச் சுளித்துக் கொள்வார். இந்த நாலு மாதங்களாகச் சிரித்துக் கொண்டு பேசுவதும், அன்பாக நடத்துவதுமாக இருக்கிறார். இரண்டாங் கலியாணம் என்ற பேச்சே கிடையாது. சுவர்ண விக்ரகம் போலக் குழந்தை பிறக்கும் என்று சொல்கிறார். அதுவும் ஆண்பிள்ளைதானாம்! அடி குமுது! என்னுடைய அந்த ஆனந்த வாழ்வு இன்னும் எத்தனை நாள் நடக்கும்? என் சூது தெரிந்து விடுமே! அப்போது என்ன செய்வது? அவர் எவ்வளவு நம்பிக் கொண்டிருக்கிறார். தெரியுமோ? லேடி டாக்டரிடம் காட்ட வேண்டுமாம். அவள் என் மானத்தை வெளிப்படுத்தி விடுவாளே. அப்போது என்ன செய்வது? லேடி டாக்டர் உனக்குத் தெரிந்தவள்தானாம். ஆகவே நீ பெங்களூர் வந்து அவளுக்கு. உண்மை கூறி என்னைக் காப்பாற்ற வேண்டும். இன்னும் இரண்டோர் மாதங்களுக்குப் பிறகு ஏதோ உடற்கோளாறால் கருச்சிதைந்து விட்டது என்று அவருக்குக் கூறிவிடலாம். அதற்கு லேடி டாக்டர் உதவி செய்ய வேண்டும். உடனே வர வேண்டுகிறேன். உன்னால்தான் இது முடியும். அசுவாரசியமாக இராதே. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு.

இப்படிக்கு,
ஆண்டாள்.

கடித்தைப் படித்த பிறகு பார்வதிக்கு, ஆண்டாள் தன் புருஷனை ஏமாற்றக் கர்ப்பிணியாக இருப்பதாக நடித்து வரும் விஷயம் தெரிந்தது. இவ்வளவு தந்திரமான ஏற்பாட்டைக் குமு
தினி, ஆண்டாளுக்குக் கற்றுக் கொடுத்ததை எண்ணி “ஏண்டி குமுதினி! நீ பலே கைகாரி போலிருக்கிறதே” என்று கூறினாள்.

“பார்வதி! ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து தப்ப வேண்டுமானால், பெண்களுக்குத் தந்திரம் தெரிந்திருக்க வேண்டாமோ? அவர்களோ நம்மைச் சமமாகக் கருதுவதில்லை. அவர்கள் இன்பத்துக்குக் கருவியாகக் கருதுகிறார்கள். நான் வேறெதற்கும் பிரயோஜனமற்றவர்களென்பது அவர்களின் எண்ணம். அது மட்டும்தானா? பெண்களை ரம்பையே, ஊர்வசியே என்று புகழ்வதாலும், உன் மீதுதான் எனக்கு அளவு கடந்த பிரியம் என்று பேசுவதாலும், உன்னை நான் எப்போதும் கைவிட மாட்டேனென்று சத்தியம் செய்வதாலும் ஏமாற்றுகிறார்கள். முகத்திலே ஜொலிப்புக் குறைந்தால் தீர்ந்துவிட்டது. வேறு பெண்களிடம் ஆண்களுக்கு நாட்டம் பிறந்து விடுகிறது. வழக்கமாகச் செய்து கொள்ளும் அலங்காரங்களிலே கொஞ்சம் குறைந்தாலும் போதும். வேறு அழகிகளிடம் ஆண்களுக்கு மோசு பிறந்துவிடுகிறது? ஆகவேதான், பெண்கள், தந்திரத்தைக் கொஞ்சமும் தளரவிடாது இருந்தால் மட்டுமே, ஆண்களை அடக்க முடியும். என் சிநேகிதி ஆண்டாள் ஒரு குற்றமும் செய்பவளல்ல. நல்ல சுபாவம், அடக்கமானவள், ஏழைக் குடும்பம். அனந்தாச்சாரியார் என்ற வக்கீலுக்கு அவள் மூன்றாந்தாரமாகப் போய்ச் சேர்ந்தாள். அவளை மலடி, மலடி என்று திட்டுவதும், வேறு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று திட்டம் போடுவதுமாக இருக்கலானார். ஆண்டாள் என்ன செய்வாள்? அவளுக்கும் குழந்தை வேண்டுமென்று ஆசை தான்! அனந்தாச்சாரியாருக்குப் புத்தென்ற நரகத்திலிருந்து தன்னை மீட்டு ஒரு புத்ரன் தேவை என்று ஏதோ வேதம் கூறுகிறது என்ற எண்ணம். அதனால் குழந்தை தேவை என்ற ஆசை. ஆண்டாளுக்குக் குழந்தை என்றாலே, அபாரமான பிரியம். பெண்களுக்கு இது சகஜந்தானே? சீராட்டப் பாராட்டச் சிரித்து விளையாட, முத்தமிட்டு வளர்க்க ஒரு குழந்தை வேண்டும் என்று ஆண்டாள் ஆசைப்பட்டாள்; பிறக்கவில்லை. அவள் என்ன செய்வாள்? அவள் வேதனையுடன் இருந்தபோது, அந்த அனந்தாச்சாரி அவளை மலடி என்று வைவதும், இந்தச் சனியனுக்குப் புத்திர சந்தானம் உண்டாகாது, வேறோர் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று பேசுவதும், ஆண்டாளுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும். என்னிடம் சொல்லி அழுதாள். நான் பிறகு ஆண்டாளுக்கு ஒரு யுக்தி கூறினேன். நீ கர்ப்பமாக இருப்பது போலப் பாவனை செய் என்று சொன்னேன். அதை அனந்தாச்சாரி நம்பிவிட்டார். இப்போது லேடி டாக்டரிடம் காட்டச் சொல்கிறாராம். ஆண்டாள் பயந்து எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். பார்வதி, அனந்தாச்சாரியின் கொட்டம் அடக்கப்படவும், ஆண்டாளின் வாழ்க்கையில் வேதனை மூளாது தடுக்கவும், உத்தமியின் உபத்திரவம் தீரவும் இப்போது ஒரு வழி இருக்கிறது. லேடி டாக்டர் எனக்கு மிகவும் வேண்டியவள். பெண்களின் கஷ்டம் அவளுக்கு மிக நன்றாகத் தெரியும்; அவள் என் ஏற்பாட்டுக்கு இசைவாள். ஆண்டாள் லேடி டாக்டரின் விடுதியிலேயே தங்க வேண்டுமென்று ஏற்பாடு செய்துவிடலாம். அது சுலபம். ஒரு முறைக்கு இருமுறை நாடியைப் பார்த்துவிட்டு, “உடலிலே இரத்தம் குறைவு. பலவீனம் அதிகம். பிரசவம் கஷ்டமகா இருக்கும் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டும்” என்று டாக்டர் கூறிவிட்டால் அனந்தாச்
சாரி, சம்மதித்து விடுவார். நீயும் உத்தமியும் அங்குத் தங்கலாம். நல்லவேலையாக ஆண்டாளின் போலிக் கர்ப்பமும், உத்தமியின் உண்மைக் கர்ப்பமும் ஒரே கால அளவாக இருக்கிறது. உத்தமிக்குக் குழந்தை பிறந்ததும் அதை ஆண்டாளின் குழந்தையாக்கி விடலாம். இது தான் என் யோசனை. அனந்தாச்சாரிக்குப் புத்திர சந்தானம் இல்லாமற் போனால், சொத்து நரசிம்மனுக்கு வரவேண்டும். நரசிம்மன் அனந்தாச்சாரிக்கு நெருங்கிய பந்து, நமது, ஏற்பாட்டினால் நரசிம்மன் நயவஞ்சகத்தின் விளைவு அவன் அனுபவிக்கக் கருதும் சொத்தை நாம் அடைய முடியும். என்ன உன் யோசனை?” என்று குமுதினி கூறினாள்.

பார்வதிக்குக் குமுதினியின் புத்திக்கூர்மையும் உத்தமி யிடம் அவள் காட்டும் அன்பும், ஆச்சரியமாக இருந்தன. தலை மீது விழ இருந்த ஆபத்தை, இந்தத் தளிர்மேனியாள் தடுக்க முன்வந்ததற்கு வந்தனங் கூறினாள். உத்தமியைச் சரிப்படுத்தி விடுவதாக உறுதி கூறினாள். பெங்களூர்ப் பயணத்துக்குத் தேதியும் குறிப்பிட்டு விட்டாள். குமுதினி பார்வதியிடம் விடை பெற்றுக் கொண்டு போகும்போது பார்வதியை கட்டிக் கொண்டு கன்னத்திலே முத்தமிட்டாள்.

உத்தமிக்கு விஷயத்தைக் விளக்கிக்கூறி, இணங்க வைக்கப் பார்வதிக்குச் சற்று சிரமமாக இருந்தது? “இது மிக மானக்கேடு” என்றுரைத்த உத்தமிக்கு நரசிம்மனின் மானத்தைப் பறிக்க இதுதான் வழி என்று கூறினாள். பயம், சந்தேகம், சஞ்சலம் ஆகிய பலவற்றை ஓட்டினாள்.
பெங்களூரிலே லேடி டாக்டரின் “பிருந்தாவன்” பங்களாவுக்குள் மோட்டார், குமுதினி, உத்தமி, பார்வதி எனும் மூவரையும் கொண்டுபோய்ச் சேர்த்துங்கூட, உத்தமிக்கு நடப்பது நனவா கனவா என்று சந்தேகமாக இருந்தது? குமுதினியின் திறமையால் சகல ஏற்பாடுகளும் செவ்வனே நடந்தேறின. “பிருந்தாவனத்திலே” கர்ப்பிணி உத்தமியும், கர்ப்பிணி வேஷத்திலிருந்த ஆண்டாளும் தங்கினர்.

ஒவ்வோர் நாளும் கோர்ட்டிலே வேலை முடிந்ததும், வக்கீல் “பிருந்தாவனம்” வருவார், ஆண்டாளிடம் பேசவும், அவள் உடல்நலத்தைப் பற்றி லேடி டாக்டரிடம் விசாரிக்கவும். அவருக்குத் தெரியாது. பிருந்தாவனத்திலே தயாராகிக் கொண்டு வரும் லீலை. சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு குமுதினி பெங்களூரை விட்டுப் போய்விட்டாள். ஆண்டாளும் உத்தமியும் ஆப்த நண்பர்களாயினர். ஒருவருக்கொருவர் உதவி செய்யவே உலகிலே பிறந்தவர்களல்லவா!

உத்தமியுடன் சில வாரங்கள் பார்வதி இருந்தாள். பிறகு சென்னை செல்ல வேண்டிய அவசியம் நேரிட்டது. உத்தமியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று ஆண்டாளும் லேடி டாக்டரும் உறுதி கூறினர். கர்ப்பிணி வேஷத்திலிருந்த ஆண்டாளுக்கு அனந்தாச்சாரியார் உபசாரமுரைக்கும் போதெல்லாம் வேறோர் அறையிலே, உண்மையிலேயே கர்ப்ப வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த உத்தமிக்கு லேடி டாக்டர் லலிதகுமாரி உபசாரம் செய்வாள்.

உத்தமி, ஓரளவு தனது துக்கத்தை மறந்து இருக்கலானாள். தன்னிடம் வைத்தியத்துக்கு வருவோரின் வரலாறுகளை, லலித குமாரி உத்தமிக்கும் கூறுவாள். பொழுதுபோக்க.

“எவ்வளவோ செல்லமாக வளர்க்கிறோம். வீட்டிலே ஒரு குறையும் கிடையாது. குழந்தை மட்டும் என்னவோ நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே வருகிறது. என்னென்னமோ டானிக்குகளைக் கொடுத்துப் பார்த்தேன். கொஞ்சம் கூடப் பயன் ஏற்படவில்லை” என்று சொல்லி தாய், தன் மகளைக் கொண்டு வந்து லேடி டாக்டரிடம் காட்டுகிறாள். லேடி டாக்டர் அந்த நோயாளியின் உடலைப் பரிசோதிப்பதற்கு முன்பாக, உள்ளத்தைப் பரிசோதிக்கிறாள்.

“உட்காரம்மா! உட்காரு! வைத்தியச்சாலையில் பல வேர் வந்துகொண்டும் போய்க் கொண்டும் இருக்கத்தான் செய்வார்கள். இங்கு வெட்கப்படலாமா? உட்கார்” என்று கூறிவிட்டு “குழந்தைக்கு என்ன வயது?” என்று தாயை கேட்கிறாள். “பத்தொன்பது முடிந்து இருபதாம் வயது ஆரம்பமாகுதுங்க” என்று தாய் பதில் கூறிவிட்டு முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். பெண்ணின் முகத்திலோ சோகம் கப்பிக் கொள்கிறது. லேடி டாக்டர், மிருதுவான குரலில், “புருஷன் இறந்து மூன்று வருஷம் ஆகியிருக்குமா?” என்று கேட்கிறாள். நோய் கண்டவள் விதவை என்பதறிந்து, “மூணாவது திவஷம் இன்னும் மூணுமாதத்திலே வரப்போவு துங்க” என்று நீர் தளும்பும் கண்களுடன் தாய் பதில் கூறுகிறாள். எந்த டானிக் தான் என்ன பலன் தர முடியும், இந்த இளம் விதவைக்கு என்ற எண்ணம் பிறக்கிறது லேடி டாக்டருக்கு. பெருமூச்சுடன், ஏதோ டானிக்கின் பெயரை எழுதிக் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு லலிதகுமாரி, உத்தமியிடம் சென்று கூறுவாள்; “இப்போது வந்து சென்றாளே ஓர் அழகிய பெண், அவளைப் பீடித்திருக்கும் நோய் எனக்குத் தெரியும். பருவம் பாழாக்கப்படுவதால் படரும் பாழான நோய். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உண்பதும் உறங்குவதும் உயிர் வாழப் போதும். ஆனால், உள்ளம் மகிழ்ச்சியை அல்லவா உணவாகக் கேட்கிறது! பால்ய விதவையான அந்தப் பெண்ணுக்குச் சந்தோஷம் எப்படி இருக்க முடியும்? விசித்திரமான நிலைமை இது, உத்தமி. அந்தப் பெண்ணின் நோய் போக வேண்டுமானால் அவளுக்கு நான் மருந்து கொடுத்தும் பிரயோஜனமில்லை. சமூகத்திலே உள்ள பித்தம் தெளி மருந்திட வேண்டும். அப்போதுதான் அபலைகளை அலைக்கழிக்கும் அந்தக் கொடிய நோய் ஒழியும்” என்று கூறுவாள். உத்தமிக்கு லேடி டாக்டரின் சிகிச்சைச் சாலை ஒரு சிறந்த அறிவு வளர்ச்சிப் பள்ளிக் கூடமாக இருந்தது!

“அஜீர்ணமாம் இந்த அம்மாளுக்கு! ஏன் இருக்காது? எத்தனை தடவை மருந்து கொடுத்தாலும், எப்படி அஜீர்ணம் ஒழியும்? இவள் புருஷன் பெரிய செல்வவான். ஊரை மிரட்டு வான். வீட்டிலேயோ ஒடுக்கந்தான். காரணம் தெரியுமோ? இந்தச் சுந்தரியைக் கலியாணம் செய்து கொண்ட பிறகுதான் அவனுகுச் சுக்கிரதிசை பிறந்ததாம்! அப்படி ஒரு பைத்தியக்கார எண்ணம் அவனுக்கிருப்பதால், அவள் இஷ்டத்திற்கு மாறாக நடப்பதில்லை; அவளுக்கோ உண்ண வேண்டிய அளவு தெரிவ தில்லை. ஊரிலே விற்கும் பலகாரங்கள் வந்துவிடுகின்றன. பிரதி தினமுமு“ உண்டு உருளுகிறாள். பிறகு வயிற்றுவலி என்கிறாள். வயிற்றுவலி போக இரண்டு ஜிலேபியைப் பாலிலே தோய்த்துச் சாப்பிடலாம் என்று கூறுவாள். அதுவும் நடக்கும். பிறகு அஜீர்ணம் வராமலிருக்குமா? மருந்து தரும்போது கூட மறக்காமல் இதைக்கேட்டுக் கொள்கிறாள். “என்ன வகையான ஆகாரம் சாப்பிடலாம்? பிஸ்கட் சாப்பிடலாமா? பழம் எது நல்லது? என்று கேட்கிறாள். மருந்துகூட இனிப்பாக இருக்க வேண்டுமாம். இப்படிப் பணம் மிகுந்திருப்பதால் பாழாகும் பேர்வழிகள் நடமாடும் இதே இடத்திலே வறுமையால் வடி வதங்கி வயிறு ஒட்டிப்போய், பிறகு எதைத் தின்றாலும் ஜீரணம் செய்து கொள்ள முடியாத அளவுக்கு உடல் உறுப்புகள் கெட்டுவிட்டவர்களும், என்னிடம் மருந்துக்கு வருகிறார்கள். தர்மத்துக்கும். நான் என்ன செய்வேன்? எனக்கு நன்றாகக் தெரிகிறது. அந்த அஜீர்ண நோய்க்காரியிடம் உள்ள பொருள் வசதியிலே கொஞ்சம் அந்த ஒட்டிய வயிறுகளுக்குப் போய்ச் சேர்ந்தால் இருவருக்கும் ஒரு நோயும் வராது. ஆனால், நான் அதைச் சொன்னாலும் உலகம் கேட்குமா?” என்று, மருந்து தேடி வரும் மாதரின் வரலாற்றைக் கூறுவதிலேயே மகத்தான அறிவையும் கலந்துரைப்பாள் லேடி டாக்டர். உத்தமிக்கு லலிதகுமாரியின் அறிவுக்கூர்மை ஆச்சரியமாகத் தோன்றிற்று.

“வயது இருபத்திரண்டுதான். இதற்குள் ஐந்து குழந்தைகள், ஏன் இந்தப் பெண்ணுக்கு க்ஷயரோகம் வராது சொல்லும். என்னால் முடியாது. மதனப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கூறிவிட்டேன்” என்று ஒரு நோயாளியைப் பற்றி உத்தமியிடம் கூறுவாள்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. உங்க பெண்ணுக்கு நோய் போக வேண்டுமென்றால் காலையிலே முட்டைப் பால் சாப்பிடத்தான் வேண்டும்” என்று டாக்டர் லலிதகுமாரி வைத்தி யத்துக்காக தன் மகளை அழைத்து வந்த ஒரு பெண்மணியிடம் கூறினாள்.

“அய்யய்யோ! நாங்கள் சைவமாச்சே, அந்நிய பதார்த்தம் சாப்பிடக்கூடாதுங்களே.”

“அப்போ, இந்த நோய்க்குத் தெரிந்திருக்கணும். இவங்க சைவர்களாச்சே, முட்டைப்பால் சாப்பிடக்கூடாதே. நாம் இவர்களிடம் போகக் கூடாது என்பது.”

“டாக்டரம்மா! கேலி செய்யாதீங்க, நாங்க தொண்டை மண்டல முதலியாரச்சே, பரம்பரையா, சைவம், நீச்சநாத்தமே பிடிக்காது.”

“ஏனம்மா, இங்கே என்ன சைவாளுக்கு ஒருவிதமான மருந்து, மத்தவாளுக்கு வேறுவிதமான மருந்துன்னா இருக்கு?”

“இதென்ன கர்மகாண்டமா போச்சி. நாங்க அசைவ பதார்த்தத்தைச் சாப்பிடுவது தெரிஞ்சா, எங்க பந்துக்கள் சாதியை விட்டு எங்களைத் தள்ளி வைப்பாங்களே.”

“என்னை என்னம்மா செய்யச் சொல்றே. வேணும்னா எங்க சாதியிலே வந்து சேர்ந்துடுங்க.”

“டாக்டரம்மா! நேரமாவுது. ஒரு காரியம் செய்யுங்கோ மருந்தோடு மருந்தா, நீங்களே ஆஸ்பத்திரியிலே இருந்தே முட்டைப் பாலை அனுப்பிடுங்க. அப்போ ஒரு வம்பும் வராது.”

“சைவமா இது? சரி, செய்கிறேன். சிவ சிவன்னு சாப்பிட்டுக் கொண்டு வாங்க. பிறகு சேவல் கூட முட்டையிடக் கூடாதான்னு தோணும் உங்களுக்கு! முட்டைப்பால் அவ்வளவு ருசியா இருக்கும். உடம்புக்கு நல்லது.”

இதுபோலச் சைவமும் நோயும் கொண்டவர்களுக்கு மதியும் மருந்தும் கலந்து லேடி டாக்டர் லலிதகுமாரி கொடுத்து வரக்கண்ட உத்தமிக்கு, டாக்டரிடம் அன்பும், மதிப்பும் அதிகரிக்கலாயிற்று. ஆனால் ஆண்டாளுக்கோ?