அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
12
               

“டாக்டர் லலிதகுமாரிக்கு உன் விஷயமாக விசேஷ அக்கறை இருப்பது எனக்குத் தெரியும். ஆகவே, நான் இந்தச் செய்தி தெரிந்ததும் பெங்களூர் போய்த்தான் தீர வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் பெங்களூர் வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று கூறிக் கொண்டே உத்தமியிடம் பார்வதி ஒரு விளம்பரக் கடிதத்தைக் கொடுத்தாள்.

இன்குலாப் ஜிந்தாபாத்!
அச்சுத் தொழிலாளரே,
முதலாளித்வ நச்சரவை நசுக்குங்கள்!
அச்சுத் தொழிலாளர் மாநாடு
உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!
தோழர்களே!

மாகாண அச்சுத் தொழிலாளர்களின் முதல் மாநாடு, பெங்களூரில் நடைபெறுகிறது.

தொழிலாளர் தலைவரும், “ரட்சகன்” பத்திரிகை ஆசிரியருமான தோழர் பார்த்திபன் தலைமை வகிக்க இசைந்துள்ளார்.

பிரசங்க பூஷணி ரோஸ் மேரி அம்மையார் மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.

கொடைவள்ளல் ஆலாலசுந்தரர் கொடி ஏற்று விழா ஆற்றுவார்.

கலாரசிகர் கனகசபேசர், ‘காலமும் காவியமும்’ என்னும் பொருள் பற்றிப் பேசுவார்.

கட்டணம் இல்லை! அனைவரும் வருக!! மாநாட்டுப் பிரதிநிதிகள் மாகாணம் பூராவிலிருந்தும் வருகின்றனர்.

இங்ஙனம்,
அச்சுத் தொழிலாளர்
மாநாட்டு வரவேற்பு கழகத் தலைவர்,
ஆறுமுகம் பிள்ளை.

என்று பல வர்ணங்களில் அச்சடிக்கப்பட்ட அந்தத் துண்டு விளம்பரத்தைப் படித்துவிட்டு, உத்தமி பார்வதியைப் பார்த்தாள் புன்னகையுடன். புன்னகையின் கொருள் விளங்கவில்லை, லேடி டாக்டருக்கு. பார்த்திபன் என்ற எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்த இடத்திலே தன் விரலை வைத்துக் கொண்டு, விழியால் லலிதகுமாரிக்கு உத்தமி விஷயத்தை விளக்கினாள்.

“ஓகோ!” என்று டாக்டர் கேலி செய்யவே, பார்வதி தலையை அசைத்துவிட்டு, “பார்த்திபன், இந்த மாநாடு கூட்டுவது புதியதோர் மோசடி செய்வதற்காக இருக்கும். அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நான் வந்திருக்கிறேனே தவிர உத்தமி எண்ணுகிறபடி, பார்த்திபனிடம் காதல் கொண்டல்ல. அவனுடைய மாயஜாலங்களும், மயக்கும் மொழிகளும் என்னை ஏமாற்றாது. அவன் இத்தனை நாட்களாக மலையாள நாட்டிலே கதகளி நடனம் காணச் சென்றிருந்தானாம், கலாரசிகர் கனக சபேசர் ஏடுகளிலே படித்துக் காட்டிய ரசங்களைக் காண. அவன் பல வீடு நுழைந்து மனோகரிகளிடம் பாடங் கேட்டானாம். அந்தப் பயிற்சி காலத்திலே. பூஜையிலே புலி புகுந்தது போலப் போய்ச் சேர்ந்தாராம், ஆலாலசுந்தரர். அவரையும் சரிப்படுத்தி, பாத்திபன் இங்கே இழுத்து வருகிறான்! கொடைவள்ளல் என்று பெயராம். தெருக் கோடியிலே பிச்சைக்காரன் வருவதைக் கண்டாலே கதவைத் தாளிட்டுக் கொள்ளும் லோபி ஆலால சுந்தருக்கு! இங்குள்ள மக்களுக்கு உண்மையிலே, ஆலால சுந்தரர் எப்படிப் பட்டவர் என்பது தெரியும். மாநாட்டிலே அவரைக் கர்ணனென்றும் குமணன் என்றும் புகழ்ந்து பேசுவார்கள். விஷயமறியாத மக்கள் உண்மைதான் என்று நம்புவார்கள்” என்று பார்வதி ஆத்திரத்துடன் கூறிவிட்டு, அச்சுத் தொழிலாளி ஆறுமுகம் பிள்ளை என்பவர் யார்? எங்கே இருப்பவர்? எப்படிப் பட்டவர்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று டாக்டரிடம் கூறினாள்.

லலிதகுமாரி, கம்பவுண்டரைக் கூப்பிட்டு, “உனக்கு அச்சுத் தொழிலாளி ஆறுமுகம் பிள்ளை தெரியுமா?” என்று கேட்டாள். ஆனால் எனக்குச் சிநேகிதமில்லை. எப்போதாவது பார்ப்பதுண்டு...” என்று கம்பவுண்டர் இழுத்துக் கொண்டே போனான். தனக்குத் தெரிந்தவர்தான் ஆறுமுகம் பிள்ளை என்பதைக் காட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை என்பது அவன் பேச்சுத் தோரணையினாலேயே தெரிந்தது. லேடி டாக்டர், பார்வதியைப் பார்த்து, “மற்ற விஷயங்களை நீயே கேட்டுக்கொள்” என்றுரைத்தாள். பார்வதி, துண்டு விளம் பரத்தைக் காட்டி, “இந்த மாநாடு சம்பந்தமாக அவரைச் சில விஷயம் விசாரிக்க வேண்டும். அதற்காகத்தான் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன்” என்று கூறினாள்.

“அவரையாவது துவரையாவது. அவன் எனக்குத் தெரிந்தவன் என்று சொல்லிக் கொள்ளவே நான் வெட்கப் படுகிறேன். நீங்கள் அவனை அவ்வளவு மரியாதையாக அவர் இவர் என்று சொல்லுகிறீர்களே. ஆறுமுகம் சுத்த அம்பக் பேர்வழி, பெங்களூரிலே அவனுக்கு அம்பக் ஆறுமுகம் என்று தானே பெயர். புளுகுதான் அவனுக்குப் போசனம்! மோசம் செய்வதுதான் மோட்சம் அவனுக்கு! பெரிய பகல் வேடக்காரப் பயல்; குடிகாரன். அவன் அச்சுத் தொழிலாளர் மாநாடா நடத்தப் போகிறான். மச்சுத் தொழிலாளர் மாநாடு கூட நடத்துவான். யாரோ பாவம் நல்ல மனுஷர்களை, இங்கே இழுத்து வந்து அகப் பட்டதைச் சுருட்டப் போகிறான். உங்களுக்குப் பார்த்திபரோ, மற்றவர்களோ தெரிந்திருந்தால், உடனே தந்தி அடித்து விடுங்கள். இந்தப் பயலை நம்பி, பெரிய மனுஷர்கள் வந்து மனக்கஷ்டம் அடையக் கூடாது பாருங்கோ” என்று கம்பவுண்டர் கூறினான்.

பார்வதி சிரித்துவிட்டு, “இனம் இனத்தோடுதான் சேரும்! ஆறுமுகம் வயிற்றைக் கழுவ மோசடி செய்பவன். இந்தப் பார்த்திபன் முதலியவர்களுக்கு அந்த நிலைமை இல்லை என்றாலும், அவர்கள் அம்பக் ஆறுமுகத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களல்ல. இது இருக்கட்டும். நான் இந்த ஆறுமுகத்தைப் பார்த்துப் பேச வேண்டும். எங்கே போனால் பார்க்கலாம்?” என்று கேட்க, கம்பவுண்டர், “நீங்க ஒரு வேடிக்கை! அவனைப் பார்க்க நீங்க போவதா, ரொம்ப இலட்சணம். வாடா கழுதேன்னா வருவான். அவனைப் பார்க்கறதுக்குப் போகணுமா? அவன் சுத்த மட்டமான பேர்வழிங்க. என்னமோ மாநாடு கூட்டறான்னு மதிச்சிடாதீங்க. அம்பக் ஆறுமுகத்தைக் கேட்டால்லோ தெரியும். ஆளின் யோக்கியதை” என்று கூறிவிட்டு மறுதினம் ஆறுமுகத்தை அழைத்து வருவதாகச் சொன்னான்.

“சேற்றில்தானே தவளை இருக்கும்! தவளைக்கும் சேறுதானே கிடைக்கும். அதுபோலத்தான், அம்பக் ஆறுமுகத்திற்கு ஏற்ற ஆள்தான் பார்த்திபன்! பார்த்திபனுக்கு ஏற்ற ஆள்தான் ஆறுமுகம். ஆனால் இந்த இரண்டு வேடதாரிகளுமாகக் கூடிக் கொண்டு, அச்சுத் தொழிலாளரைக் கெடுப்பதா? சீச்சீ! இது மகா கேவலம். ஏழைத் தொழிலாளரின் வெள்ளை உள்ளத்தை இப்படிக் கபடர்கள் கொள்ளை அடிக்கின்றனர். இதுமகா துரோகம்” என்று பார்வதி பரிதாபத்துடன் பேசலானாள். “பழைய பைத்தியம் இன்னும் அவளுக்கு விடவில்லை” என்று உத்தமி டாக்டருக்குக் கூறினாள். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பைத்தியம்” என்று கூறிவிட்டு லேடி டாக்டர் சிரித்தாள்.