அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
8
               

“என் பெயர் உத்தமி!”

“பொருத்தமான பெயர்! என் பெயர் நரசிம்மன்.”

“நல்ல பெயர்தான், அதுவும்!”

“வக்கீல் வேலைக்குப் படிக்கிறேன்.”

“பேச்சிலிருந்தே அது தெரிகிறது. நான் ஒரு உபாத்தியாயினி.”

“என்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.”

“தங்களையா? நான் பெண்கள் பள்ளிக்கூடத்திலே, ஆசிரியை.”

இந்தப் பேச்சுடன், முதல் மாலை முடிந்தது. அதன் தொடர்ச்சி மறுமாலை ஆரம்பமாயிற்று, நரசிம்மனுக்கு. உத்தமிக்கோ, அன்று இரவே தொடர்ச்சி. வளர்ச்சி நடைபெற்று மங்களமான முடிவும் ஏற்பட்டது. அவனுடைய விழியும், மொழியும், உத்தமியின் மனதை மெழுகாக்கி விட்டன. கனிவுடன் பேசிய நரசிம்மன், உத்தமி அன்றிரவு கனவிலே பலமுறை சந்தித்தாள். பேசினாள். அன்றிரவு மட்டும் உத்தமியின் முகத்தை விளக்கொளியிலே யாரேனும் பார்த்திருந்தால், யூகித்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால், பார்வதிக்கு இதுவா வேலை? அவள், குமாரை எண்ணி ஏங்கிக் கிடந்தாள். உத்தமியின் மனதிலே, காதல் வித்து தூவப்பட்டது பார்வதிக்குக் தெரியாது. உணர்ச்சியற்ற ஒரு உருவம் உத்தமி என்று பார்வதி எண்ணிக் கொண்டிருந்தாள். உத்தமி மனதிலும் காதல் அலைமோதக் கூடும் என்று பார்வதி எண்ணவில்லை. பார்வதியின் இந்தத் தப்பெண்ணம் உத்தமிக்கும் பேருதவியாக இருந்தது. “மாலை வேளைகளிலே வெளியே செல்லும் நீ, மையிருட்டுக்குப் பிறகே வீடு திரும்புகிறாயே , என்ன விசேஷம்? அலங்காரத்தையே எனக்குப் பிடிக்காது என்று கூறிக் கொண்டிருந்த நீ, சீவிய தலையையே சீவுவதும், திருத்திய ஆடையையே திருத்திக் கொள்வதும், கண்ணாடி முன்பு அடிக்கடி நிற்பதும் ஏன்? இப்போது உனக்குத் திடீரென நாகரிகத்தின் மீது பற்று வரக் காரணமென்ன?” என்று பார்வதி கேட்டிருக்கலாம். உத்தமியும் ஒரு பெண்தான். அவள் உள்ளத் திலும் வாலிப வேகம் உண்டு. காதலுக்கு அவளும் பலியாகியே தீருவாள் என்று எண்ணியிருந்தால் - உத்தமி, உலகமறியாச் சிறுமி, ஊண் உறக்கமின்றி வேறார் சுகந்தேடாப் பாவை என்பது பார்வதியின் கருத்தாகையால், உத்தமியின் நடையுடையிலே புது சொகுசு கண்டும், சந்தேகங் கொள்ளவில்லை.

இதனால் உத்தமியின் காதல் தங்கு தடையின்றி வளரத் தொடங்கிற்று. கடற்காற்றுடன் கலந்து காதல் அவள் உள்ளத்தில் வீசலாயிற்று. மாலைகள் அவளுக்கு மனோகர வேளைகளாயின. எத்தனையோ கதைகளிலே, காட்சிகள் பலவற்றைப் படித்த உத்தமிக்கு நரசிம்மனின் காதல், கனவை நினைவாக்குவது போல் இருந்தது. மாசு மறுவற்ற வானத்திலே பூரணச் சந்திரன் பொலிவுடன் விளங்குவது போல நிம்மதியான தனது வாழ்விலே, நரசிம்மன் நிலவு போலானான் என்றெண்ணி மகிழ்ந்தாள். உத்தமியின் கண்களையும் கருத்தையும் கவர எப்படிப் பேச வேண்டுமோ, எவ்வண்ணம் நடிக்க வேண்டுமோ அவைகளைத் திறம்படச் செய்து, நரசிம்மன், உத்தமியை ஒருவார காலத்திலே அடிமையாக்கிக் கொண்டான். “மணி ஏழாகி விட்டதே, உத்தமி! நேரம்போனதே தெரியவில்லை. புறப்படுவோமா வீட்டுக்கு” என்று நரசிம்மன் கேட்க வேண்டியதாயிற்று, ஒரு வாரத்திற்குள், அவ்வளவு பூரணமான வெற்றியை, அந்த அவ்வளவு சீக்கிரத்தில் நரசிம்மன் பெற்றான். காதல், காதல் என்று ஏடுகளிலே படித்துப் படித்துப் பல்வேறு கருத்துக்களை மனதிலே திணித்துக் கொண்டிருந்த உத்தமிக்கு, நரசிம்மன் மேலும் பல காதற்கதைகள் கூறி, அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டான்.

ஓர் இரவு பார்வதிக்கு ஏக்கம் அதிகமாக இருந்தது. உத்தமிக்கோ தூக்கம் வரவில்லை. காதல் விஷயமாக ஏதேனும் பேசலாம் என்று உத்தமி ஆவல் கொண்டாள். குமார் உண்மையிலே கொள்ளைக்காரன், அல்லது அவனைப் பார்த்திபன் தொலைத்து விட்டானா, என்பது பற்றிப் பேசினால், மனத்திலே இருக்கும் பாரம் கொஞ்சம் குறையும், என்ற எண்ணம் பார்வதிக்கு. இருவரும், “இன்று காற்றே காணோம்! தூக்கமே வரவில்லை! படுக்கையிலே பூச்சிகள் உலவுகின்றன!” என்று கூறுவதும், படுக்கையிலே புரளுவதுமாக இருந்தனர். காற்று என்னவோ வழக்கம்போல்தான் வீசிக் கொண்டிருந்தது. கவலை எனும் குளவி இரு கன்னியரையும் கொட்டிக் கொண்டிருந்தது.

“ஒரு கதை சொல்லேண்டி” என்று உத்தமி பார்வதியைக் கெஞ்சினாள். பெருமூச்சுடன், “எந்தக் கதையை நான் உனக்குச் சொல்வது? பார்த்திபன் போட்ட பகல் வேடக் கதையைச் சொல்லட்டுமா? படுகிழமாகியும் என்னைக் கண்டதும் பல்லிளித்த ஆலாலசுந்தரரின் கதையைக் கூறட்டுமா? அதேவாத வீரன் குமார் காணாமற் போனதைக் கூறட்டுமா?” என்று பார்வதி கேட்டாள். “இப்போது இருக்கும் தலைவலியே போதும்; நீ உன் பழைய கதைகளைச் சொல்லி அதை அதிகமாக்காதே. என்னவோ புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறாயே, ஒரு கதை சொல் என்று கேட்டால், அந்த வாயாடிகள் வம்பர்கள் விஷயந்தானா கிடைத்தது உனக்கு?” என்று உத்தமி சலித்துக் கொண்டு கூறினாள்.

வேறு கதை என்னடி எனக்குத் தெரியும்? ரஷியப் புரட்சி நடந்ததைப் பற்றி சொல்லட்டுமா?”

“வேண்டாம்.”

“லெனின் கதை?”

“படித்திருக்கிறேன். நீ ஒன்றும் அளக்க வேண்டாம்.”

“நெப்போலியன் கதை?”

“நீ கதையே சொல்ல வேண்டாண்டி தாயே! படுத்துத் தூங்கு.”

“வந்தால்தானே தூங்க.”

கொஞ்ச நேரம் இருவரும் தூங்க முயன்றனர். “பார்வதி, பார்வதி” என்று உத்தமி கூப்பிட்டாள். பார்வதி தூங்கி விட்டாளா என்று தெரிந்துக் கொள்ள. தான் தூங்கி விட்டதாகக் காண்பிக்க வேண்டிய பார்வதி, உத்தமிக்குப் பதில் கூறாம÷லே இருந்தாள். சில நிமிடம் சென்றதும், உத்தமி உறங்கி விட்டாளா என்று தெரிந்து கொள்ள, “உத்தமி! உத்தமி!” என்று கூப்பிட்டாள். “ஏண்டி பார்வதி! தூங்கவில்லையா, நீயும் பாசாங்கா செய்தாய்? திருட்டுக்கள்ளி!” என்று சொல்லிக் கொண்டே, பார்வதியைக் குலுக்கினாள், இருவரும் சிரித்தனர்; எழுந்து உட்கார்ந்து கொண்டனர். ஜன்னல் கதவுகளை விரிய விரியத் திறந்தனர். தூக்கம் துளியும் இரக்கங்காட்டவில்லை- அந்த இளம் பெண்களிடம்.

“பார்வதி! நான் ஒரு கதை சொல்லட்டுமா?” என்று உத்தமி கேட்டாள். “சொல்லு, கேட்போம்” என்று பார்வதி சம்மதித்தாள். உத்தமி கதை சொல்லத் தொடங்கினாள்.

“பார்வதி! இது நிஜமாக நடந்தது. வெறுங்கதையல்ல செக்கோஸ்லோவேகியா நாட்டிலே லோகநாதன் என்றொரு வாலிபன்...”

‘உத்தமி, ஆரம்பமே அபத்தந்தானா? ஏண்டி! செக்கோஸ்லோவேகியா நாட்டிலே லோகநாதன் என்ற பெயர் உண்டா? கதையா இது?”

“லோகநாதன் என்று நான் சொல்லுகிறேன். அவன் பெயர் அந்த நாட்டுக்கு ஏற்றபடி லூகாஸ் என்றோ காமாஸ் என்றோ இருக்கும். கதை சொன்னால் குறுக்கே கேள்வி கேட்கக் கூடாது, தெரியுமா?”

“சரி, சொல்லடியம்மா, சொல்லு.”

“கேள், அந்த லோகநாதன் என்பவன், வனிதாமணி என்ற ஒரு பெண்ணைக் காதலித்தான். இருவரும் சரியான ஜோடி. அவர்கள் சந்திக்காத நாட்களில்லை. சரசமாடாத மாலைகளில்லை. ஒருவரை ஒருவர் உயிர்போல நேசித்தார்கள். காந்தமும் இரும்பும் போல இருவரும் இருப்பது ஊராருக்குத் தெரியும். சரி, அவனுக்கு ஏற்றவள்தான். நல்ல பொருத்தமான கல்யாணம் என்று பந்துக்கள் பேசிக் கொண்டனர். மாடப் புறாக்கள் போல லோகநாதனும், வனிதாவும் வயலோரத்தில் வாய்க்கால் அருகிலேயும், குளத்தங்கரையிலும் கொய்யாத் தோப்பிலும், சந்தித்துப் பேசுவதும், சிரித்து விளையாடுவதுமாக இருந்தனர். இவ்வளவு இன்பமாக இருந்த அந்தக் காதலர்களுக்கு திடீரென ஓர் இடி ஏற்பட்டது. லோகநாதனின் தகப்பனார் ஒரு பெரிய பைத்தியம். கர்நாடகம், தன் மகனுக்குப் பிடித்தவர்களைக் கல்யாணம் செய்து வைப்போம் என்ற புத்தியில்லாமல், “மகனே! இதோ பார், வனிதா நல்ல அழகி, குணவதி, உன்னிடம் அன்புள்ளவள், குடும்பத்துக்கு ஏற்றவள். அடக்கமான பெண், மாடுபோல் உழைப்பாள். குழந்தைபோல் கொஞ்சுவாள், உனக்குப் பிரியமாக நடப்பாள். எல்லாக் குணமும் அவளிடம் பொருந்தி இருக்கிறது. ஆனால், அவளை நீ கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. மகாபாவம், தோஷம், அவள் உனக்கு முறையில்லை” என்று கூறிவிட்டான். கிழவன் தன் தலையிலே கல்லைப் போடுவதைக் கண்ட லோகன் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடினான் அழுதான். கும்பிட்டான். அந்தக் கிழவன் எதற்கும் மசியவில்லை. வனிதாவைக் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தான். பாவம்! லோகன் என்ன செய்வான்? இந்த உலகத்திலே நாம் ஏன் பிறந்தோம்? அதிலும் இப்படிப்பட்ட முரட்டு ஆசாமிக்குப் பிறந்தோமே, என்ன செய்வது? அந்த வனிதாவிடத்திலே நாம் ஏன் இவ்வளவு ஆசை வைத்தோம்? அவளோடு இவ்வளவு நேசமாக இருந்து விட்டு, இப்போது அவளைக் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினால் அவள் என்னை என்னவென்று நினைப்பாள்? எப்படி அவளுக்குத் துரோகம் செய்வது? பெண்பாவம் ஆகாதே? அவளைப் பார்த்தால் இப்படி இருக்கிறது இந்தக் கிழவனோ வனிதாவைக் கலியாணம் செய்துக் கொண்டால் நான் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து விடுவேன் என்று மிரட்டுகிறான்; பிடிவாதக்காரன், சொன்னபடி செய்துவிடுவான். இந்தச் சங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்? என்று எண்ணி லோகன் துக்கித்தான். வனிதாமணி பார்த்தாள். “சீ! நம்மால் அவருக்குக் கெட்ட பெயரும், தகப்பனாரின் விரோதமும் ஏற்படுவதா?” என்று நினைத்து, லோகனைச் சந்தித்து, “கண்ணா! எனக்கு நீரே உயிர், தங்களுக்கு நான்தான் உயிர், நம்மிருவரையும் பிரிக்க வேண்டுமென்று உம் தகப்பனார் தலைகீழாக நிற்கிறார். என்னால் உமக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்டது. என்னை மறந்து விடுங்கள் வேறோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு சுகமாக இருங்கள். நீங்கள் சுகமாக இருப்பதைப் பார்ப்பதே எனக்குப் போதும். அதுவே, எனக்குச் சந்தோஷம்” என்று கூறி அழுதாள். அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு லோகன், “என்ன வார்த்தை கூறுகிறாய் வனிதா! உன்னைத் தத்தளிக்கவிட்டு நான் வேறோர் பெண்ணை மணம் செய்து கொள்வதா? முடியவே முடியாது. கொஞ்சகாலம் பொறுத்துக் கொண்டிருப்போம். கிழவனின் மனம் இரங்காமலா போகும். பார்க்கலாம்” என்று சமாதானம் கூறினான். கிழவனின் மனம் மாறவில்லை; லோகனும் இணங்கித் தீரவேண்டியதாயிற்று; மணப்பந்தலிலே லோகன் அழுதான். அதே நேரத்தில் மல்லிகைச் செடிக்கு நீர் வார்த்துக் கொண்டே வனிதா அழுதாள். வனிதா வாழ வேண்டி இடத்திலே, கனகா குடிபுகுந்தாள்.

தகப்பானாரின் பிடிவாதத்தை மாற்ற முடியாத லோகன் மணம் செய்து கொண்ட கனகா, நல்ல பெண்தான் என்றாலும் அவனுக்கு அவளிடம் கொஞ்சமும் பிரியம் இல்லை. அவளுக்கும் அதைப்பற்றிய கவலை இல்லை. குடும்பத்தை நடத்தி வருவதிலே, அக்கறை காட்டி வந்தாள்; லோகனுக்கு வேண்டிய உபசாரங்களைக் குறைவறச் செய்துவந்தாள். இவ்வளவும் அவனுடைய காதலைப் பெற வேண்டுமென்ற நோக்கத்துடனல்ல. அவனைப் பெற்றுவிட்ட பிறகு அவனுடைய அன்பு எதற்கு என்ற விசித்திரமான வாதம் புரிந்தாள் கனகா. வனிதாமணி, தனது காதலை மறக்க மறுத்துவிட்டாள். அவளுடைய குறுகுறுப்பான பார்வைக்கும், சுறுசுறுப்புள்ள சுபாவத்துக்கும் பலியான எத்தனையோ ஆடவர், லோகன் வேறு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டதால், தங்களுக்கு வனிதா கிடைப்பாளா என்று எண்ணி அவள் எதிரே நின்று இளிப்பர். ஆனால் வனிதா, மணமென்றால் தான் ஏற்கனவே, மணமாகிவிட்டதே. மணமென்றால் மேள தாளத்தோடு மாலை மாற்றிக் கொள்வதுதனா? மனம் ஒன்றுபட்ட பிறகு, மணமென்ற சடங்கு வேறு வேண்டுமா?” என்று கூறுவாள் அவளுடைய பிடிவாதத்தைக் கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர் வனிதாவின் போக்கு, லோகனுக்கு வருத்தத்தை அதிகப்படுத்திற்று. அவன் என்ன செய்வதென்று தெரியாது திகைத்துக் கொண்டிருக்ககையிலே கனகா கருவுற்றாள். ஒருபெண் குழந்தை பிறந்தது. ஆனால் கனகா இறந்து விட்டாள். அந்நாட்டு வழக்கம்போல் கணவன் துக்கம் காக்கும் சடங்கு நடைபெற்றது. சில வாரங்கள் , உற்றார் உறவினர், லோகனுக்கு ஆறுதல் கூறினர். துக்கம் கொண்டாடும் சடங்கின் கடைசி நாளன்று அந்த நாட்டுப் பழக்கத்தின்படி எல்லோரும் குடித்து விட்டு உருண்டனர். இந்தச் சள்ளை எப்போது முடியும் என்று காத்துக் கொண்டிருந்த லோகன், குடிவெறி கொண்ட பந்துக்கள், வீட்டிலே அலுத்துக் தூங்கிய பிறகு, நேரே வனிதாவின் வீட்டுக்குச் சென்றான், அவனைக் கண்டதும் வனிதா, கோவென அழுதாள். “கண்ணா! உமக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வரலாமா? கலியாணமாகி ஒன்றரை வருஷம் ஆகவில்லையே; இதற்குள் இந்த விபத்தா? உமது மனம் என்ன பாடுபடும்? அந்தச் சிறு குழந்தையின் நிலைமையை எண்ணினாலே, மனதிலே நெருப்பு விழுகிறது” என்று வனிதா கூறிக்கேட்ட பிறகே, லோகனுக்கு தன் வாழ்க்கையிலே உண்மையிலேயே பெரிய விபத்து நேரிட்டது என்ற கவனம் வந்தது. வனிதாவின் கண்ணீருக்குத் துணை வேண்டும் என்பதற்காக, லோகனும் சற்று அழுதான்; வனிதாவைத் தேற்றினான்.

“கனகா நல்லபெண், பாவம்! என் சாபந்தான் அவளைச் சாகடித்துவிட்டது.”

“உன் சாபமா? நீ ஒருவனுக்கு மறந்தும், தீங்கு நினைக்க மாட்டாயே,தேனே!”

“தீங்கு நினைக்கவில்லை; நான் இருக்க வேண்டிய இடத்திலே, அவள் உலவினது எனக்கு வேதனையாக இருந்தது.

கோபத்தால் காதகி, கள்ளி என்று கனகாவை நான் வைத துண்டு. அதன் பயனாகத்தான், பாவம் அவள் இறந்துவிட்டாள்.

“பைத்தியக்காரத்தனமான பேச்சு! வனிதா! வீண் வார்த்தை வேண்டாம். நாளைக் காலையிலே நான் உன் தகப்பனாரிடம் வரப்போகிறேன். பெண் கேட்க!”

“இதை என்னிடம் சொன்னால் எனக்கு வெட்கமாக இருக்காதா, கண்ணா!”

“வனிதா! நாமிருவரும் ஒருவருக்காக மற்றொருவர் சிருஷ்டிக்கப்பட்டோம். நாம் மணம் செய்து கொள்வதைத்தடுத்த என் தகப்பானாரும் இறந்துவிட்டார். நீ உலவ வேண்டிய மனையிலே இருந்த கனகமும் கல்லறை சென்றாள். நமது வாழ்வு இனிப் புதியதாக ஆரம்பமாகப் போகிறது. தரிசாகக் கிடந்த நிலத்திலே இனிப் பச்சைப் பயிர்! வறண்ட ஆற்றிலே இனிக் குளிர்ந்த நீரோட்டம்!”

“சரி, சரி! கனகாவுக்கு துரோகம் செய்த நான் இனி அவள் குழந்தையை, என் குழந்தைபோல் கவனித்துக் கொண்டால்தான் கனகாவின் ஆவி திருப்தி அடையும். அதற்காகவாவது, நான் உம்மைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.”

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா! பேச்சு கொஞ்ச நேரம்! பிறகு பழைய விளையாட்டுகள். வனிதா வாழ்வு துலங்கி விட்டது. லோகனுக்கும் அப்படியே!

மறுதினம் வனிதாவின் தகப்பனாரிடம் லோகனும், சில பெரியவர்களும் பெண் கேட்கச் சென்றனர். ஊர் முழுவதும் தெரியும் வனிதாவைத்தான் லோகன் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்று. இருந்தாலும் சம்பிரதாயப்படி பெண் கேட்கச் சென்றனர். லோகனுக்குப் பெண் தர கசப்பா, வனிதாவின் தந்தைக்கு! வாலிபன், உழைப்பாளி. ஏழைகளிடம் உள்ளன்பு கொண்டவன் லோகன். அவனுக்குப் பெண்தர மறுக்க முடியுமா? மனம் வருமா? ஆனால் அந்த முசுடு முணுமுணுக்க ஆரம்பித்தது கேட்ட லோகனின் மனம் பதறிற்று.

“ஏன் மாமா! என் தகப்பனார்தான் ஒரு கர்நாடகம் முறையில்லை என்று கூறி, முன்பு தடுத்துவிட்டார். நீங்கள் முணு முணுப்பது ஏன்? வனிதாவை எனக்குக் கலியாணம் செய்துதர இஷ்டம் இல்லையா?” என்று லோகன் சொஞ்சம் ஆத்திரத்துடன் கேட்டான்.

“என் இஷ்டத்தை யார் கவனிக்கப் போகிறீங்கள்? நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்துதான் முடிவு செய்து விட்டீர்களே ஒப்புக்குத்தானே என் சம்மதத்தைக் கேட்க வந்தீர்கள். என்னைக் கேட்கவே வேண்டாம்; அவள் உண்டு, கலியாணம் செய்து வைக்கும் பாதிரியும் உண்டு. போ, போ, வனிதாவை இழுத்துக் கொண்டுபோ, நான் தடுத்தால் நிற்கவா போகிறது கலியாணம் என்று கிழவன் கூறினான்.

“மாமா! வேடிக்கை பேச்சு இருக்கட்டும். என்னிடம் என்ன குறை காண முடியும்? நான் வனிதாவுக்கு ஏற்றவனல்லவா?” என்று லோகன் கேட்டான்.

“தம்பி! உக்கென்னடா குறை கூற முடியும். தங்கமான குணம். தயாள சிந்தனை, எல்லாம்சரி. ஆனால் இந்தக் கிழவனின் வாயை மட்டும் கிளறாதே. ஏதேனும் சொல்லிவிடப் போகிறேன் என்று கிழவன், மறுபடியும் பழையபடி இழுப்புடன் பேசினான்

“இதோ பார்! மாமா! உமக்கு இஷ்டமில்லாவிட்டால், எனக்கு வனிதா வேண்டாம்” என்று கோபத்தோடு லோகன் கூறினான். கிழவனுக்குக் கோபம் பிறந்து விட்டது. “உங்கள் இரண்டு பேருடைய நன்மையையும் உத்தேசித்தே சொல்கிறேன். வனிதாவைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டாம்.” என்றான் கிழவன்.

“ஏன்?” என்று இடிமுழக்கம்போல் லோகன் கூறினான்.

“இருவரும் ஒரேவிதமான சுபாவக்காரர். சேர்ந்து வாழ முடியாது. சக்கிமுக்கியாகிவிடும். வாழ்க்கையிலே சண்டையும் சச்சரவுமாக இருக்கும். நான் சொல்ல வேண்டுமென்று நினைத்ததைச் சொல்லி விட்டேன். இனிமேல் உன் இஷ்டம், அவள் இஷ்டம்; எனக்கொரு நஷ்டமும் இல்லை. கஷ்டம் உங்களுக்குத்தான்” என்று கிழவன் கூறினான். லோகன் சிரித்த சிரிப்பு, சமயற்கட்டிலிருந்த வனிதாவின் செவிக்குச் சங்கீதமாக இருந்தது.

“என்னமோ என்று பயந்தேன்; எங்கள் இருவரின் சுபாவமும் ஒரேவிதமாக இருக்கிறது என்பதுதானா, உங்கள் குற்றச்சாட்டு! வேடிக்கைதான் மாமா” என்று கூறிவிட்டு மணம் நிச்சயமாகிவிட்டது என்று தீர்மானித்து, லோகன் வீடு சென்றான். திருமணத் தேதியும் குறிப்பிடப்பட்டது. இடையே வனிதா லோகன் மனைக்குச் சென்றே வசிக்கலானாள்; வழக்கந்தான்! வனிதாமணி, வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த வீட்டிற்குள் ஒளி வீசலாயிற்று. ஒழுங்கும், அழகும், ஆனந்தமும் அந்த வீட்டிலே ஏற்பட்டன. அக்கறையுடன் வனிதா குழந்தையைக் கவனித்தாள், வேலைக்காரரிடம் அன்புடன் நடந்து கொண்டாள். அந்த வீட்டுக்கே புதிய களை பிறந்தது. இன்பக் கனவு இன்றல்லவோ உண்மையானது என்று லோகன் பூரித்தான். வனிதா குடி வந்தது அவனுக்கு குதூகல முண்டாக்கிற்று. வனிதா! வனிதா! என்று ஓயாமல் கூறினான். அவள் வேலை செய்யும்போது கூடவே வேலை செய்வான்! அவள் குழந்தைத் தாலாõட்டினால், அவனும் கூடச் சேர்ந்து ஆட்டினான். அன்று மாலைவேலை முடிந்து வனிதா கூடத்திலே வந்து உட்கார்ந்தாள். “கண்ணே!” கொஞ்சினான் மாந்தோப்பிலேயும், மடுவருகேயும், மானெனக் குதித்தோடி வந்து, லோகனின் கழுத்தை இறுக்குவது போலத் தவழுவிக் கொண்டு, மரக்கிளைகளிலே உள்ள பட்சிகள் பயந்தோடும்படி, முத்தமிட்ட வனிதா, அன்று லோகனை முத்தமிட மறுத்து விட்டாள். அவன் எவ்வளவோ கெஞ்சினான். அவள் கொஞ்சமும் சம்மதிக்கவில்லை. “முடியவே முடியாது. அவள் கோபித்து என்னைச் சபிப்பாள்” என்று கூறினாள்.

“எவள் கோபித்துக் கொள்வாள்?” என்று லோகன் கேட்டான். “கனகா” என்று பதிலுரைத்தாள் வனிதா. “கனகா இறந்துவிட்டாள். ஆனால், நமது கலியாணம் முடிந்த பிறகுதான் அவளுடைய ஆவி இந்த வீட்டை விட்டுப் போகும். கலியாணம் ஆகும்வரை இங்கேயேதான் ஆவி அலைந்துக் கொண்டிருக்கும். ஆதனால் இப்பொது ‘முத்தம்’ கொடுத்தால் தோஷம்” என்று வாதாடினாள் வனிதா. லோகனுக்கோ, பிரமாதமான கோபம் வந்தது. “ஒரு முத்தம் தருவாயா, மாட்டாயா? என் மீது ஆசை இருக்கிறதா, இல்லையா? ஒரே ஒரு முத்தம் தர இத்தனை பிகுவா?” என்று கேட்டான். அந்தப் பைத்தியக்காரி முடியவே முடியாது என்று கூறிவிட்டாள். “சரி! என் மனதுக்கு நீ வேதனையை உண்டாக்கினாயல்லவா? உன் மனத்தை நான் புண்ணாக்குகிறேன் பார்” என்று கூறி விட்டு லோகன் வெளியே சென்றான். வீடு திரும்பும்போது, குடித்துவிட்டு வெறியுடன் வந்தான். வனிதா சிரித்தாள். இப்படியும் ஒருவன் உண்டா என்று. ஒவ்வோர் நாளும் லோகன் இதுபோலவே செய்ய ஆரம்பித்தான். வனிதாவுக்கு வேதனை உண்டாயிற்று. “ஒரு முத்தம் கொடு, பிறகு நான் பழையபடி இருப்பேன்” என்றான் அவன். “அதுதானே முடியாது” என்றாள் அவள்.

ஒருநாள் லோகன், யாரோ சிறுக்கிகளையும் வீட்டிற்கே அழைத்து வந்து அவர்களோடு சேர்ந்து குடித்துக் கூத்தாடினான். வனிதாவால் கோபத்தை அடக்க முடியவில்லை. “நான் எவ்வளவோ அடக்கமாக, தக்க காரணம் சொல்லியும் ஒரு முத்தம் தர முடியாது என்பதற்காக இவன் இவ்வளவு ஆட்டம் ஆடுகிறான். இவனோடு நாம் வாழ முடியாது. நம் அப்பா சொன்னது சரியாக முடிந்தது. இனி இந்த வீட்டிலே நமக்கு வேலை இல்லை. அப்பாவிடம் போனால் காரி உமிழ்வார். எக்கேடேனும் கெடுவோம்.” என்று எண்ணி அழுதுகொண்டே அவள், அத்தை வீடு போய்விட்டாள், லோகனுக்குத் தெரியாமல்அன்றிரவு வழக்கபடி லோகன் குடிக்க மறுபடியும் வெளியே சென்றான் . விடியற்கதவை வீடு வந்தான். வீட்டிலே வனிதா இல்லை. “வனிதா! வனிதா!” என்று கூவினான். அங்குமிங்கும் தேடினான் யார்யரையோ கேட்டான் புலம்பினான். “என்னைப் போல் ஒரு முட்டாள் உண்டா? ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா? அவளுக்கு என் மேல் உயிர். எனக்கும் அப்படித்தானே ஒரே ஒரு முத்தத்திற்காக இத்தனை அமளியா? என் கண்மணி எங்கே போனாளோ? அவள் எனக்கு முத்தமே தர வேண்டாமே, அவள் வந்தால் போதும்” என்று கூறினான், ஓடினான் அவளைத் தேடி. அதே சமயம் வனிதா “என்னைப் போலப் பைத்தியக்காரி உண்டா? நான் கலியாணம் செய்து கொள்ளப் போகும் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தால்தான் என்ன? வீண் பிடிவாதம் செய்தேன். அதனால்தானே அவர், இப்படியானார். சீ! கனகாவாவது, ஆவியாவது? அதுவெல்லாம் கட்டுக்கதை! இதற்காகக் காதல் வாழ்வு கெடுவதா?” என்று தீர்மானித்து லோகனின் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒரே சாலையிலே சந்தித்தனர். அவனைக் கண்டதும் லோகன், “வனிதா!” என்று கூவினான். அவள் பாய்ந்தோடி வந்த தழுவிக் கொண்டாள்; ஒன்று, இரண்டு மூன்று என் கணக்கின்றி முத்தமிட்டபடி இருந்தாள். இருவரின் இதழ்களும் சந்தித்தபோது இருவரின் கண்ணீரும் கலந்தன.

“கண்ணே ! கலியாணம் முடியும் வரையில் நீ எனக்கு முத்தமே தரவேண்டாம் நீ வீடு வந்தால் போதும்” என்றான் லோகன்.

“முத்தம் நித்தநித்தம் தருவேன் கண்ணா! நான் ஒரு முட்டாள். இவ்வளவு சுவையுள்ள இதழை, இத்தனை நாள் சும்மா விட்டு வைத்தேனே” என்றாள் அவள். சில தினத்திற்குப் பிறகு கல்யாணம் நடந்தது. இருவரும் சுகமாக வாழ்ந்தார்கள். இவ்வளவுதான் கதை” என்று கூறி முடித்தாள் உத்தமி.

“சரியான பைத்தியங்கள் இரண்டும்ட. இது ஒரு கதையாம் கதை” என்று பார்வதி கூறினாள்.

“போடி! இதை அவர் சொன்னபோது எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா?” என்று அவசரத்திலே இரகசியத்தை வெளியிட்டு விட்டாள், உத்தமி.

“அது யாரடி, அவர்! ஓகோ! உத்தமி...! விழுந்து விட்டாயா வலையிலே! யாரடி அவர்?” என்று பார்வதி கேட்டாள். “ஒருவருமில்லை - கூறமாட்டேன் - நீ கேலி செய்வாய்” என்ற வழக்கமாக பேச்சுகளுக்குப் பிறகு உத்தமி தனக்கும் நரசிம்மனுக்கும் காதல் உண்டாகியிருப்பதைக் கூறிவிட்டு. “அவர் ஒரு பிராமணர்” என்றுரைத்தாள்.

பார்வதி, தன் தோழியின் முதுகைத் தட்டிக் கொடுத்து, “ஏண்டி உத்தமி, குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படு என்ற பழமொழிப்படி பிரம்ம குலத்தவரையே வலை போட்டுப் பிடித்து விட்டாய்! கெட்டிக்காரிதான். பூனைபோல இருக்கிறாய். காரியமோ பிரமாதமானதாக இருக்கிறதே!” என்று கூறிக் கேலி செய்தாள். உத்தமி உண்மையிலேயே, பார்வதி தன்னைப் பாராட்டுகிறாள் என்று எண்ணிக் கொண்டாள். ஒரு வினாடியிலே அந்த எண்ணத்தைப் பார்வதி ஒழித்துவிட்டாள்.

“உத்தமி! எப்படியடி, அவனிடம் நீ சிக்கிக் கொண்டாய்? குலப் பெருமையைக் கூறி உன்னை ஏய்த்துவிட்டானா? நான் பார்ப்பனன், ஆகவே வக்கீல் வேலையிலே, வண்டி வண்டியாகப் பணம் குவியும் என்று கூறி உன் மனத்தை மயக்கி விட்டானா? எதைக் கண்டு நீ இச்சை கொண்டாய்? இன்சொல்லைக் கேட்டா? என்று பார்வதி கேட்கவே, உத்தமி, “ஏன் நானாகத்தான் அரிடம் அன்பு கொண்டேன். காதலுக்கு ஏதடி சாதி?” என்று கேட்டாள். “உண்மைதான்; காதலுக்கு சாதி கிடையாதுதான். ஆனால், மற்றொரு விஷயம் தெரியுமோ உனக்கு? காதலுக்குக் கண்ணும் கிடையாது, கண்ணிருந்தால், நீ அந்தக் கனபாடிக் கூட்டத்திலே நம்பிக்கை வைத்திருப்பாயோ! ஆனால் பாவம், தேனிலே விழுந்த ஈ போலானாய்! அவனுடைய பாகுமொழி உன்னை மயக்கிவிட்டது” என்று பார்வதி கூறினாள். அவள் பேச்சு, வெறும் கேலியாக உத்தமிக்குத் தோன்றவில்லை. பரிதாபமும் அவள் குரலிலே தோய்ந்திருப்பது கண்டு, உத்தமி ஓரளவு திகில் கொண்டாள். மாதர் சுதந்திரம் - மனமொத்த காதல் - கலப்பு மணம் - என்பன பற்றி, அடிக்கடி பேசும் பார்வதி, காதலையும் கலப்பு மண நோக்கத்தையும் ஏன் கண்டிக்கிறாள்? நரசிம்மனிடம் என்ன குற்றம் காண முடியும்? என்று எண்ணினாள்.

உத்தமியின் உள்ளத்தைத் தெரிந்து கொண்டவள் போலப் பார்வதி பேசலானாள். “உத்தமி! என் கருத்தும் சுபாவமும் உனக்கத் தெரியும். நான், சாதி ஒழிந்த, சமரசம் நிலவ வேண்டும். காதல் மணமும் கலப்பு மணமும் ஓங்க வேண்டும் என்னும் கொள்கையுடையவள். பெண்களின் சுதந்திரத்தில் பெரு நம்பிக்கை வைப்பவள். காதலை மறுப்பவளல்ல! கலியாணம் என்பது, கட்டுப்பாட்டின் விளைவாக இருத்தல் கூடாது என்று கூறுபவள் ஆனால் நீ அந்த நரசிம்மனைக் காதலிப்பதை நான் சரியான காரியமென்று கூறமாட்டேன். என் மொழியைக் கேட்டு நடக்கும் நிலையில் நீ இருப்பாயானால் நிச்சயமாக, நீ அந்த நரசிம்மனைக் கலியாணம் செய்து கொள்ளக்கூடாதென்று கட்டளையிடுவேன்.” என்று சொன்னாள்.

திடுக்கிட்ட உத்தமி, “பார்வதி! உனக்கு நரமசிம்மனைத் தெரியாதே! நீ அவரைக் கண்டதுமில்லையே. அவரிடம் உனக்குத் துவேஷம் வளரக் காரணம் என்ன?” என்று கேட்டாள். “நான் நரசிம்மனைக் கண்டதில்லை. அவன் சொர்ண, காந்த ரூபனாக இருக்கலாம். அவனுடைய குணம் கூடத் தங்கமாக இருக்கக்கூடும். அவை பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவனுடன் வாழக் கருதும் உனக்கல்லவா அந்தக கவலையெல்லாம்? இன்று சமுதாயம் உள்ள நிலையிலே, நீ எந்த நரசிம்மனைக் காதலிக்கிறாயோ, அவனுடைய குலத்தின் இயல்பு உள்ள நிலையிலே, நீ கனவு காணும் அந்தக் கலப்பு மணம், கலக்க மணமாகவே முடியும் என்பது என் எண்ணம். நீயோ என் வாதத்தைக் கேட்டுச் சிரிப்பாய் என்பது திண்ணம். பரிசோதனை பல புரிய காதல் ஒரு வீண் விளையாட்டல்ல. நெருப்புடன் விளையாடக் கூடாது. எனவே, திடீரென உனக்குக் காதல் மயக்கம் உண்டாகியிருந்தால், சற்று ஆர அமர, உன் நிலையையும், அவன் நிலையையும் யோசித்து ஒப்பிட்டுப் பார். அவனுடைய நடிப்பை மட்டும் கவனித்து விடாதே. நினைப்பு என்ன என்பதையும் கண்டு கொண். வீணாக வாழ்க்கையிலே, விசாரத்தைத் தேடிக் கொள்ளாதே” என்று பார்வதி பேசக் கேட்ட உத்தமி, “ஏண்டி பார்வதி! தாய்க் கிழவிகளைப் பற்றி நாவல்களிலே படித்திருக்கிறேன். உன் பேச்சு, அந்தக் கிழங்கள் பேசுவது போலிருக்கிறதே. குலமாம், சாதியாம்! காதல் எனும் பரிசுத்தத் தீயின் முன்பு இந்தப் பேதம் பஸ்மீகரமாகும். வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறாயே, வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் காதலைப் பற்றிப் பேசிவந்த உனக்கு நான் ஒரு பார்ப்பனரைக் காதலராகப் பெற்று இருப்பது தூக்கி வாரிப் போடுவானேன். அதை நீ கண்டிக்கலாமோ? யாராவது கேட்டால், கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ ஏதோ நவநாகரிக நங்கை என்று நான் நினைத்தேன். நீ சுத்தப் பழைய பசலி; கர்நாடகம்” என்று கூறிக் கேலி செய்தாள்.

“உத்தமி! இதைக்கேள், எனக்குப் பார்ப்பன குலத்தவர் நாகரிகமோ, நவயுக நடையுடை பாவனைகளோ, தெரியாதவர்களென்ற எண்ணம் கிடையாது. அந்தக் குலத்தவர்தான் அவைகளைத் திறம்படச் செய்வர். சமரச ஞானம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தெரிவது மட்டுமா? சமரசஞான போதகர்களாகவும், அவர்கள் திகழ்வர். ஆனால் எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடும். அதற்குக் காரணம், கொஞ்சம் யோசித்தால் தெரிந்துவிடும். அவர்கள் தங்கைளை உயர்குலமென்று சமுதாயம் ஒப்புக் கொள்வதால் சுகபோகிகளாக வாழ முடிகிறது. உழைக்க வேண்டிய நிர்ப்பந்தமின்றி வாழ முடிகிறது. மற்ற குலத்தவன் தன் முன்பு மண்டியிட்டு நிற்கவும், சாமி என்று அழைக்கவும், மோட்சத்திற்கு வழிகாட்டுங்கள் என்று வேண்டிக் கொள்ளவும், அதற்காகப் பணம் தந்து மரியாதை செலுத்தவும், நிலைமை இருக்கக் கண்டபின், அவர்கள் அதை இழக்க இசைவார்களா? கள்ளனுக்குக் கூடத் தனக்குக் கிடைத்த பொருளை இழந்துவிட மனம் வருவதில்லையே! கொண்ட கணவனைக் திண்டாட விட்டுக் கொல்லைப் புறத்தின் வழியாகக் கள்ளப் புருடனைச் சேர வருபவளை அந்தச் சோர நாயகன், ‘அவனைப் பார்த்துச் சிரித்தாயாமே? இவனுடன் பேசினா யாமே? என்று அதிகாரம் செய்து ஆர்ப்பரிப்பானாம். கணவனுக்குத் துரோகம் செய்த அந்தக் காதகி அன்புடனிருக்கும் புருஷனை ஆட்டிப் படைக்கும் அந்த அடங்காப்பிடாரி சோர நாயகனுக்கு அடங்கி ஒடுங்கி நடப்பாளாம். அதுபோல இருக்கிறது சமுதாயம். எந்தக் குலம், செருக்குடன் வாழுகிறதோ, அதனிடம் பயபக்தியுடன் பாடுபடும் கூட்டம் அடங்கி நடக்கிறது. மற்ற யாரை வேண்டுமானாலும் மரியாதைக் குறைவாகவும், மமதையுடனும், நடத்தும் பேர்வழிகள், அந்தப் பார்ப்பனக் குலத்திடம் மட்டும் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொள்வதை நீ கண்டதில்லையா? இவ்வளவு உயர்வை எப்படி அந்தப் பார்ப்பன இனம் விட்டுவிடும்! அதை யோசித்தே நான் சொல்லுகிறேன், நீ அந்த நரசிம்மனிடம் நம்பிக்கை கொள்ளாதே என்று. இது என் கருத்து. உன் கருத்தோ, இந்நேரம் பாலில் மோர்த்துளி பட்டது போல் திரிந்துவிட்டிருக்கும். தெளிவு இருக்காது. கண் நெளிவுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு மனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வருவது எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். என்றாலும் என் சிநேகிதி என்பதற்காக இவ்வளவும் கூறினேன். இனி உன் இஷ்டம்” என்று கூறினாள்.

உத்தமி நரசிம்மனுக்காகப் பரிந்து பேசியதுடன் அவனிடம் குலச்செருக்கோ, சாதி அகம்பாவமோ, ஒரு துளியும் கிடையாதென்றும், சமரசத்திலே அவனுக்கு மிக்க வேட்கை உண்டென்றும், அவனுடைய காதல் தூய்மையானதென்றும், எடுத்துக் கூறினாள். பித்தம் தலைக்கேறிவிட்டது என்று பார்வதி தீர்மானித்தாள். கிருஸ்துவ மார்க்கத்தை விட்டுவிட வேண்டும் மென்றும், பிறகு கலியாணம் செய்து கொள்ளத் தடையில்லை என்றும் நரசிம்மன் கூறினதாக உத்தமி கூறினாள். பார்வதி ஏற்பாடு பூராவும் நடந்தேறி விட்டது. இனி உத்தமியைத் தடுக்க முடியாது என்று தீர்மானித்தாள். உத்தமி, பார்வதிக்குப் பார்ப்பனனிடம் அனாவசியமான வெறுப்பு இருப்பதாலேயே, அம்மாதிரி பேசினாள் என்று தீர்மானித்தாள். நரசிம்மனோ, ஆரிய சமாஜிகளை நேசம் பிடித்து, சுத்தி மார்க்க சூத்திரங்களைக் கேட்டறிந்தான்.