அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
18
               

திக்கற்றோர் திருச்சபை என்ற பெயரைக் கேட்டதுமே பார்வதிக்கு அங்கு போகவேண்டுமென்றே ஆவலர் பிறந்தது. எத்தனையே சபைகள், எது எதற்கோ சபைகள் உள்ளன. ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு உள்ளெண்ணத்தோடு நடத்தப் பட்டு வருவது பார்வதிக்குத் தெரியும். திக்கற்றோர் சார்பாக ஒரு சபை இருப்பது கேட்டு அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை.

வறுமை எனும் தேள்கொட்டி, விஷம் ஏறி உருமாறிப் போனவர்களும் வாழும் வழி இழந்து பாழுங்கிணறு தேடும் பாரரிகளும் இராத்திரி ஏதாகிலும் பிச்சை கிடைக்காதா என்று ஏக்கத்தோடு பகல் பட்டினியாக இருப்பவர்களும், பெற்றோர் திடீரென்று இறந்து போனதால், வீதியிலே அலைய நேரிட்டவர் களும் விழி இழந்தோர் கரமில்லாதார், முடவர், ஊமை, பெருநோய் கொண்டோர் என்று திக்கற்றுக் கிடக்கும் பலருக்கு ஒரு திருச்சபை இருந்தாக வேண்டும் என்று பார்வதி பல சமயங்களிலே எண்ணியதுண்டு. அழகான செவ்வானம். அற்புதமான நிலவொளி, சிற்றாறு, சிங்கார மாளிகை, சிரித்திடும் முல்லை, கண்ணைப் பறித்திடும் ரோஜா. மாடமாளிகை, மணி மண்டபம், தவழும் குழந்தைகள், இளந்தளிர் எனும் பல்வேறு காட்சிகளைக் கண்டுகளித்த சமயங்களில் எல்லாம் இக்காட்சிகளைக் காண முடியாமல் எவ்வளவு பேர் குருடாகிக் கிடக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்வதி உள்ளம் குமுறுவது உண்டு. செல்வமும், சுகமும், அழகும் ஆனாந்தமும் நேர்த்தியும் நிம்மதியும் ததும்பிக் கிடக்கும் உலகிலே வறுமையும் வாட்டமும் சூழ்ந்துள்ள படுகுழியிலே வீழ்ந்து கிடக்கும் பராரி களைப் பற்றிய நினைப்புப் பார்வதிக்கு அடிக்கடி வருவதுண்டு. இந்த நினைப்புப் பார்வதிக்கு அடிக்கடி வருவதுண்டு. இந்த நினைப்பு வளரவளர அவளுக்குச் சிங்கார மாளிகைகளைக் கண்பதைவிடச் சிறு குடிசைகளைக் காண வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. அந்தக் குடிசைகளையும் அங்கே கூன் கொண்ட வாழ்க்கையைக் கொண்டுள்ளவர்களையும் காணக் காண உலகம் மிகமிகச் சீர் கேடாக இருக்கிறது என்ற கோபமும், இந்தக் கேட்டைக் களைய ஏதாவது செய்தாக வேண்டும் என்ற துடிப்பும் அதிகரித்தது. எனவேதான், பார்த்திபனின் பதட்டத் தால் உள்ளம் வேதனை அடைந்திருந்த அந்த நேரத்திலும் திக்கற்றோர் திருச்சபையிலே பேச வேண்டுமென்று அதன் செயலாளர் வந்தழைத்ததும், பார்வதி அங்குச் செல்ல இசைந்தாள்.

அந்தச் சமயத்திலே ஜெயாவைக் காண வேண்டுமென்ற ஏற்பாடு, குமார் விஷயமாகக் கொண்டிருந்த கவலை, முதலிய எதுவும் அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. இன்பமயமான இவ்வுலகிலே துன்பத்தின் பிரதிநிதிகளாக வாழும் அந்தத் தோழர்களைக் காண வேண்டும். அவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட வேண்டும். வாழ்க்கையின் கோட்பாடுகளை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவர்களைக் கண்டு பேசிய பிறகு அவர்களின் நிலைமை பற்றி நிம்மதியாக வாழுபவர்களிடம் எடுத்துக் கூறவேண்டும் என்ற இந்த எண்ணங்கள் பார்வதியை, லேடி டாக்டரின் வீட்ø விட்டு வேகமாக வெளியே இழுத்துச் சென்றன, ஊரின் கடைசிப் பாகத்துக்கு.

வண்டி இழுப்பவர்களும், வயற்காட்டாள்களும் குடியிருக்கும் பகுதி. குப்பைமேடுகளும் இடையிடையே வீடுகளும் இருந்த இடம். குடியர்களும், வெறியர்களும், கூவிக் கொண்டிருந்தனர். அங்கு பறை ஒலி ஒரு பக்கம், போதை கிளம்பும் கீதம் வேறோர் பக்கம், கட்டை கொண்டு மனைவியை அடிக்கும் கணவனும், கள்ளக் காதலுடன் கொல்லைச் சுவரேறிக் குதிக்கும் கள்ளியும் தகப்பனுக்கு அடங்காத தறுதலைகளும், தாயை வதைக்கும் தருக்கரும் அங்கு தர்பார் நடத்தினர்.

“டேய்! இது யாரு பாருடா?”

“ஒய்யாரக் குட்டிடா, ஓடி வந்த பட்டிடா.”

“குலுக்கி நடக்கிறா, கும்மாளம் போடுறா.”

இவையும் இவைகளைவிட ஆபாசமான “வரவேற்புரை” களும் பார்வதிக்கு வழங்கப்பட்டன.

திக்கற்றோர் திருச்சபையை நாடிச் செல்லும் வழியிலே நடைபெறும் இந்தச் சம்பவங்களைக் கண்டு சலித்துக் கொள்ள வேண்டாமென்று செயலாளர் பார்வதியை வேண்டிக் கொண்டார். பார்வதி, “எனக்கு என்ன சலிப்பு! அவர்களின் நிலை அப்படி இருக்கிறது. குற்றம் அவர்களுடையதல்ல” என்று கூறினாள்.

ஒரு சிறு கும்பல் கூடிவிட்டது. “டே! நம்மை எல்லாம் கிருஸ்தவராக்க இந்தப் பொம்பளையும் அந்த ஆம்பளையும் வாராங்க. அவர்களைச் சும்மா விடக்கூடாதுடா” என்று எவனோ ஒருவன் குண்டு வீசினான். அது வெடித்துவிட்டது. பலருக்கும் ஆத்திரம் பொங்கலாயிற்று. “நம்ம காளி, சாமுண்டி, சடையாண்டி முதலிய குலதெய்வங்களைக் குறை கூற எவளோ வந்திருக்கா. அவ இங்கே பேசக்கூடாது. கூட்டம் போட்டா, கழுதையைத் துரத்துங்க, நாய்களை ஏவுங்க, மலைப்பிஞ்சுகளை வீசுங்க” என்று வெளிப்படையாகவே ஒருவன் தூண்டத் தொடங்கினான்.

பார்வதி, திக்கற்றோர் திருச்சபையின் செயலாளரைப் பார்த்து, “இவர்கள் நாம் கிருஸ்தவ மதப் பிரசாரம் செய்யப் போவதாக எண்ணிக் கொண்டு ஏசுகிறார்கள். பாவம்! வேறே எந்த ஆஸ்தியும் இல்லாவிட்டாலும் இவர்களுக்கு இந்து மதப் பைத்தியமாவது இருக்கிறது” என்று கூறிவிட்டு, “உங்கள் திருச்சபை இருப்பது இவர்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டாள். “தெரியாது! இது இருக்குமிடம் இன்னம் இரண்டு மைல் போக வேண்டும்!” என்றார்.

“அப்படியானால், அது அடுத்த கிராமத்திலே என்று சொல்லுங்கள்” என்றாள் பார்வதி. “ஆமாம்! அரை மணி நேரத்திலே போய்விடலாம். ஏன்? ஆயாசமாக இருந்தால் இங்கே கொஞ்ச நேரம் தங்கலாம்! சிரமபரிகாரம் செய்துக் கொண்டு புறப்படுவோம்” என்று செயலாளர் வாஞ்சையுடன் கூறினார். அவனுடைய வாஞ்சனையைக் கண்டுமகிழ்ந்த பார்வதி, “அப்படி ஒன்றும் சிரமமில்லை. திருச்சபைக்கே போய்விடலாம்” என்று கூறினாள். இருவரும் சற்று வேகமாக நடந்தனர்.

ஊருக்கு வெளியே, ஒரு வெளி, அங்கோர் கட்டிடம், நெல் அரைக்கும் இடம். அங்குதான் திக்கற்றோர் திருச்சபையின் விசேஷக் கூட்டம் ஏற்பாடாகி இருப்பதாகச் செயலாளர் கூறினார். அந்த இடத்துக்கே வருவதற்குள், பார்வதி, அங்கு பல திக்கற்றோர் கூடியிருப்பார்கள். அவர்கள் விஷயத்திலே அக்கறை கொண்டவர்கள் வந்திருக்கக் கூடும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டாள். ஆனால் செயலாளர் குறிப்பிட்ட இடத்தருகே வரவரப் பார்வதிக்கு ஒரு கூட்டம் நடைபெறுவதற் குரிய அறிகுறி எதுவும் தென்படாதது ஆச்சரியத்தை முதலிலும் பிறகு சந்தேகத்தையும் தந்தது. “கூட்டம் எப்போது ஆரம்பமாகும்?” என்று கேட்டாள். “நாம் போன உடனே!” என்று தயக்கமின்றிச் செயலாளர் பதிலுரைத்தார். மேலும் கேள்விகளைக் கிளப்பித் தனது பயங்காளித்தனத்தைக் காட்டி கொள்ளக் கூடாது என்று பார்வதி கருதினாள்.

அந்த இடத்துக்கும் வந்தனர் இவர்களை வரவேற்க ஆட்களைக் காணோம். திக்கற்றோர் சபையிலே ஆடம்பர வரவேற்பு இருக்க முடியாது. பாவம் ஏழைகள்தானே என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். கட்டிட வாயிலிலே வந்ததும் பார்வதி திடுக்கிட்டுப் போனாள். உள்ளே நாலைந்து பேரே இருந்தனர். அவர்களும், பிரசங்கம் கேட்கக் கூடியவர்களாகத் தெரியவில்லை! கையில் கம்பும் அரிவாளும் வைத்துக் கொண்டிருந்தனர். பயம் திடீரென்று அதிகரித்து.ஜுர வேகத்தில் முகம் வெளுத்து விட்டது. செயலாரைப் பார்த்தாள். அவன் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, “ஏனு கிலி? புலியா உள்ளே? இல்லை, உள்ளே போவோமே” என்று கூறினான். “கிலியா! இல்லையே” என்று தைரிய பாவனையுடன் பார்வதி பேசினாள்.

“குமாரின் காதலி கிலி கொள்வாளா? கோபலா! கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளு அந்தக் கள்ளியை!” என்று பார்த்திபன் உள்ளே இருந்து உரத்த குரலிலே கூவினான். “ஐயோ!” என்று பார்வதி அலறினாள். திகில் அளவு மீறிப் பிறந்தது. என் செய்வாள் பாவம்! வாதமிடத் தெரியும். விளக்க முரைத்திட அறிவாள்,மேற்கோள் தருவாள். அரிவாளும் கையுமாக முரடரும், அவர்களை ஆட்டிவைக்க ஆணவக்காரனும் இருந்த இடத்திலே, தேவை அவைகளல்லவே! அடிபடவும் அடி கொடுக்கவும் வெட்ட வரின் தடுக்கவும் கிட்டே வருவோரை விரட்டவும் வித்தையும் நெஞ்சுதியும் தேவை. புலி நுழைய வேண்டிய குகைக்குள்ளே புறா சென்று விட்டது!
பார்த்திபன் பிறப்பித்த கட்டளையின்படி கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளப்படுமுன்னம் தானாகவே உள்ளே சென்று விடுவதே யுக்தம் என்று பார்வதிக்குத் தோன்றிற்று. சாகசப் பேச்சினால் இனிப் பார்த்திபனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பது பார்வதிக்குத் தெரிந்து விட்டது. ஏனெனில், முன்பு அந்த வித்தையை அவன் பார்த்துவிட்டவன். எனவே, இம்முறை ஏமாறமாட்டான், அவன். துணிவுடன் சகல முன்னேற்பாடுகளுடன் நடந்து கொண்டிருப்பதைக் கண்ட போது பார்வதிக்குப் பயம் மிக அதிகமாயிற்று. திக்கற்றோர் திருச்சபை என்று சாக்குக் கூறி, வரவழைத்துத் தன்னைக் கொன்று போடவே, பார்த்திபன் தீர்மானித்திருக்கிறான் என்பது தெரிந்தது. கொலைக்கஞ்சாக் கொடியர்கள் குடிவெறியுடன் இருந்தனர். சுற்றிலும் வெட்டவெளியே. கூவினாலும் கோவெனக் கதறினாலும் உதவிக்கு வருபவர் எவரும் இல்லை. தப்பித்துச் கொள்ள முடியாத நிலைமையிலே பார்வதி சிக்கிக் கொண்டாள்.

“பார்வதி! உன்னுடைய அழகான சொற்பாழிவைக் கேட்க ஆவல் கொண்டுதான் உன்னை இங்கு வரவழைத்தேன்!”

“திக்கற்றோரின் நிலைமையைப் பற்றித் தேன்மொழியில் பேசுவாய், கேட்டு இன்பமுறலாம் என்றுதான் இங்கு அழைத்து வரச் சென்னேனன் . ஏன்? இப்படி மிரள மிரள விழிக்கிறாய்? ஓகோ! திக்கற்றவர்கள் படும் பாடு பற்றி நினைக்கும் போதே உன் நெஞ்சிலே துக்கம் வந்து அடைத்துக் கொள்கிறது போலும் இருக்கும். இருக்கும்! ஏழைகளைக் கண்டால்தான் உன் மனம் அனலிடு மெழுகாகுமே! சமதர்ம சுந்தரி அல்லவா நீ. மாஸ்கோவை மணம் செய்யும் மங்கையல்லவா?”

“அதோ பார் அவர்கள் சிரிக்கிறார்கள். என்னடா இது பிரசங்கம் செய்ய வந்த அம்மையாருக்கு, இவர் பிரசங்கம் செய்கிறாரே என்று.”

“க்ள்ளீ! ஏன் மரம்போல நிற்கிறாய்? உன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துத் தெரியவில்லை? உயிரை இழக்கப் போகிறதை உணரவில்லையா, அல்லது பயம், உன் உணர்ச்சியை போக்கி விட்டதா?”
“அடி பார்வதி! உனக்கு நான் எவ்வளவு சொகுசான வாழ்வு அளித்தேன்? என் பங்களாவிலே உனக்கு உணவு, என் பக்கத்திலே இருக்கும் உல்லாசம், மாலைகள், வரவேற்புகள், விருந்து, உபசாரம், இவ்வளவும் உனக்குத் தந்தேன். அரசனுக்கு அரசி மேல் ஆசை. அரசிக்கு ஆண்டி மேல் மோகம் என்பது போல், உன்னை நேசித்த என்னை வெறுத்துவிட்டு ஒரு உடுக்கையை விரும்பினாயே! என் பாதையிலே குறுக்கிடாதே. அழிவாய் என்று எச்சரித்தேன். கேட்டாயா?”

“எனக்கு அவமானத்தைத் தேடினாய். என் திட்டங்களைத் தகர்க்க ஏற்பாடு செய்தாய். ஊமையா நீ? பேச வாயில்லை? சாகசமாக நடந்து கொண்டால் நான் சாய்ந்துவிடுவேன் என எண்ணிக் கொண்டாயல்லவா? அந்த துஷ்டச் சிறுக்கி லேடி டாக்டரை விட்டு, என்னைக் கேவலப்படுத்தினாய். நீ எனக்குச் செய்திருக்கும் கேடுகள் பல. என் கனவுகளைக் கலைத்தாய். என் வாழ்வைக் குலைத்திட வேலை செய்தாய். பார்வதி! பார்த்திபனை நீ யார் என்று தெரிந்துக் கொள்ளவில்லை. நீ பிணமாகுமுன் நான் யார் என்பதைத் தெரிந்து கொள்.”

“அதோ தெரிகிறதே கோணிப்பைகள், அவைகளிலே உன் அங்கங்கள் வேறு வேறாகத் துண்டிக்கப்பட்டுப் போடப்படும்.”

“என்னை மோக வலையிலே வீழ்த்திய முகம், அதற்கு ததும்பும் உன் அங்கங்கள், அழுகிப் புழுத்துப் போகப் போகின்றன. ஆம், உன்னை அணைத்துக் கொண்டு ஆனந்தமாக வாழத்தான் நினைத்தேன். நீ அழிய அச்சாரம் வாங்கிக் கொண்டாய்.”

“சாகப் போகும் உன்னிடம் நான் ஏந் கோபத்தைக் காட்ட வேண்டும். ஒழிந்து போ. உனக்கும் - பரிபூரண ஓய்வு கிடைத்து விட்டது. எனக்கும் தொல்லை விட்டது என்று ஆகிவிடும்.”

“உன் கண்களை கட்டிவிடுவார்கள் - அது என் உத்தரவு - வாயிலும் துணியை அடைத்து விடுவார்கள். பிறகு அவர்கள் தங்கள் கடமையைச் செய்வார்கள். பார்வதி! பேசித் தொலை. ஏன் இப்படிச் சிலைபோல நிற்கிறாய்? கண்களினின்றும் வழியும் நீரைத் துடைத்துக் கொள்.”

“ஏன், என்ன சங்கதி, ஏன் இப்படி ஆடுகிறாய். பூங்கொடி போல்? கண்ணை ஏன் மூடுகிறாய்? அடடா, சாய்கிறாளே, மயக்கமா? ஓகோ, மூர்ச்சையாகி விட்டாள்.”

பார்த்திபன் கோபவெறியால் பேசிடக் கேட்ட பார்வதி மூர்ச்சையாகிக் கீழே விழுந்தபிறகே, அவன் தன்னுடைய பேச்சை நிறுத்தினான். அவனுடைய கையாட்களிலே ஒருவன் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து பார்வதியின் முகத்திலே தெளித்தான். ஒருவன் மேல் வேட்டியால் வீசினான், காற்று வருமென்று. மற்றவர்கள் “பீதி அடைந்துவிட்டாள்” என்று கேலி பேசினர்.

பார்த்திபன் இந்த நேரத்திலே தன் கைப்பெட்டியைத் திறந்து, பிராந்தி எடுத்து, மளமளவென்று இரண்டொரு முழுங்கு குடித்தான். பிறகே கொஞ்சம் உறுதி மீண்டும் வந்தது. பேச்சிலே பழைய மிடுக்குத் தோன்றிற்று. சிவந்த கண்களுடன் சீற்றமே உருவான பார்த்திபன். கீழே கிடந்த பார்வதி அருகே வந்தான். “இவள் மயங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்திலே இவள் கழுத்தின் மீது என் காலை வைத்து, என் ஆத்திரம் தீர மிதித்துத் துவைத்துச் சாகடிக்கலாமா என்றும் தோன்றுகிறது!”

“எழுப்புங்கள் கள்ளியை! ஒருவேளை பாசாங்குகூடச் செய்வாள்! முகத்திலே ஒரு செம்பு தண்ணீரைக் கொட்டு.”

“இவ்வளவு இளவயதிலே எவ்வளவோ சுகமாக வாழ வேண்டியவள். தன்னுடைய வீண் பிடிவாதத்தால், மடியப் போகிறாள்! அழகியாயிற்றே. படித்திருக்கிறாளே. அபலையாக இருக்கிறாளே என்று ஏதோ இவளைக் காப்பாற்றுவோம் என்று கருணைக் காட்டினால், இவள் நமக்கு உபதேசம் செய்வதும், நம்மிடமே வம்புக்கு வருவதும், நமக்கே ஆபத்துத் தேடுவதுமாக அல்லவா ஆகிவிட்டாள்.”

“கண்ணைத் திறக்கிறாளா! பார்வதி! ஏன் பார்வதி, என்ன மிரளுகிறாய்? நினைவா, கனவா என்று பார்க்கிறாயா? கண்களை நன்றாகத் துடைத்துக் கொள். நினைவுதான், கனவல்ல.”

“பேசுவது பார்த்திபன், குரல் தெரியவில்லையா, பார்த்திபன். ஆமாம்! உன்னிடம் மரண வாக்குமூலம் பெற வந்திருக்கிறேன். எழுந்திரடி, ஏமாற்றுச்சிறுக்கி! வேண்டாம், வேண்டாம், படுத்துக் கொண்டுதான் கிட, சில நிமிஷங்களிலே சாகப் போகிறவள்தானே, எப்படிக் கிடந்தால்தான் என்ன?”

பார்த்திபனுக்கு கோபம் குடிவெறியும் கூட்டாகி விட்டதால், மேலும் ஆபாசப் பேச்சு வழிந்து வரத் தொடங்கிற்று. பார்த்திபனால் கூலிக்கு அமர்த்தப்பட்ட அக்கொலை பாதகர்கள் காரியத்தை சீக்கிரம் முடித்து விட்டு ஓடிவிட வேண்டும் என்று கூறினர். ஒரு முறை கண்களைத் திறந்த பார்வதிக்கு மறுபடியும் மயக்கம் மேலிட்டது. அதே சமயத்திலே அவளுடைய கைகால்களைக் கட்டி வாயில் துணி அடைத்து விட்டனர். அரிவாளால் வெட்டுமுன், உயிரைப் போக்கிவிடுவது நல்லது என்று ஒருவன் யோசனை கூறினான். வெட்டியே உயிரைப் போக்கலாமே என்றான் மற்றொருவன். விஷம் கொடுத்து விட்டிருக்க வேண்டும் என்றான் வேறொருவன். கல்லைக் காட்டிக் கிணற்றிலே போட்டுவிட வேண்டும் என்றான் இன்னொருவன்.

பார்த்திபனோ, குடித்துக் கொண்டே இருந்தான். திகிலைக் கிளப்பிவிட்டதால் அந்தத் திகிலை அடக்க குடிப்பதுதான் தக்க வழி என்று அவன் எண்ணினான். அதிகம் குடித்து வெறி ஏறிவிட்டால் நிலைமை தவறி ஏதேனும் தாறுமாறாகப் பேசியோ, செய்தோ, தங்களுக்கு ஆபத்து உண்டாக்கி விடுவானோ என்னவோ என்று அந்த முரடர்கள் பயந்தனர்.

இதற்கிடையில் பார்வதிக்கு மயக்கம் கொஞ்சம் தெளிந்து கண்களைத் திறந்தாள். எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை. வாயிலே துணி அடைந்திருக்கக் கண்டாள். நிலைமை அவள் நினைவுக்கு வந்தது. என் செய்வாள்? தன்னைக் கொன்று விடப் போகிறார்கள் என்பது தெரிந்ததும் அவளுக்குண்டான திகைப்பு விவரிக்கத்தக்கதன்று. “ஆகட்டும், காரியத்தை முடித்து விடுங்கள், இதோ, ஆளுக்குக் கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறிப் பார்த்திபன் கொலைகாரர்களுக்குத் குடிவகை கொடுத்தான். அவர்களும் ஆனந்தமாகக் குடித்துக் கொண்டே பாவம் புண்யம், நரகம், மோட்சம் விதி முதலியன பற்றிக் குளறலாயினர்.

“நெருப்புக் குழியிலே தள்ளுவார்களாம். பத்துத் தலைப் பாம்புகள் அதிலிருந்து கிளம்புமாம்.”

“சுத்தக் கட்டுக்கதை, மிரட்டுவதற்காக எவனோ கட்டி விட்டான்.”

“அப்படித்தான் நரகத்திலே தள்ளினால்தான் நமக்கென்னடா? நாம் செத்துப் போன பிறகுதான் இது நடக்கும்; அப்போ பார்த்துக் கொள்வோம். இருக்கிற வரையில் சுகமா இருக்க வேண்டும்.”

“அவ்வளவேதாண்டா.”

கொலைகாரர்கள் தெளிவாக மேற்கொண்டு பேச முடியாதபடி, போதை ஏறிவிட்டது.

“பார்வதியைக் கழுத்தை முறித்துக் கொன்றுவிடுங்கள் முதலில். பிறகு துண்டுதுண்டாக வெட்டி அடையாளம் தெரியாதபடி செய்துவிடலாம்” என்றான் பார்த்திபன்.

“தொரே! ஆபத்து வரா÷ பார்த்துக்கோங்கோ. நாங்க இதுபோலப் பல வேலை செய்திருக்கிறோம். ஆனாலும் இந்தப் பொம்பளையைப் பார்த்தா, ரொம்ப அழகாகவும், பெரிய இடத்துக் குட்டியாகவும் தெரியுது. வம்பிலே மாட்டி விடடு விடாதீங்க” என்று ஒரு போதைக்காரன் சொன்னான், பார்த்திபனைப் பார்த்து.

ஆளுக்கு ஐந்நூறு வீதம் ஆறு பேருக்குத் கொடுத்து அழைத்து வந்திருக்கிறான் பார்த்திபன். அரிவாளைத் தீட்டிக் கொண்டு அவர்களிலே ஒருவன் இதுபோலப் பேசவே பார்த்திபனுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று.

“வேலை ஆகட்டும். எனக்குத் தெரியும் நீங்கள் யார் என்று; ஆபத்து ராதபடி பார்த்துக் கொள்ள மாட்டேனா? சீக்கிரம் முடியுங்கள் நான் இதற்கெல்லாம் தகுதியாக முன்னேற்பாடுகள் செய்யாமலா இருப்பேன்” என்று பார்த்திபன் கூறிவிட்டு மனதிற்குள்ளாக அவர்களை திட்டினான்.
“எல்லாம் ஐயா, பார்த்துக் கொள்ளுவாரு ஆகட்டுண்டா” என்றான் மற்றொருவன். அவர்களிலே அதிக தைரியசாலியான ஒருவன், “அடே என்னப்பா, இந்தக் காரியத்துக்கு இவ்வளவு யோசனை? கோழிக்குஞ்சை முறிச்சுப் போடறதுபோல ஆக வேண்டிய காரியம். இதுக்கு இவ்வளவு பிரமாதப்படுத்துறீங்க?” என்று கூறினான்ன.

கொலைகாரர்களுக்குத் தலைவனாகவிருந்தவன், அதாவது திக்கற்றோர் திருச்சபையின் செயலாளனாக நடித்துப் பார்வதியை அங்கே அழைத்து வந்தவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றிற்று. விபரீதமான ஆசை உண்டாயிற்று. பார்வதியை கொன்று போடுமுன்பு, அவளை ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆசை தோன்றிய மறுவினாடி வெறியாகிவிட்டது. எப்படியாவது தன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்துவிட்டுத்தான் அவளைக் கொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டான். தங்கள் தலைவன் தலையைச் சொறிவதும் மேலும் கீழும் பார்ப்பதும், உலாவுவதும் பார்வதி அருகே சென்று நிற்பதும், பெருமூச்சுவிடுவதுமாக இருக்கக் கண்ட மற்றவர்கள், இதேது இவருக்கே பயம் பிறந்து விட்டதா என்று யோசித்தனர். பார்த்திபனோ, சீக்கிரம் õகரியத்தை முடித்தாக வேண்டும் என்று துரிதப்படுத்தினான். தன் மனத்திலே எழுந்த எண்ணமோ, பிறரிடம சொல்லக் கூடிய தல்ல என்றாலும் எப்படியும் மனத்திலே தோன்றிய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமலிருக்க அவனுக்கு இஷ்டமில்லை. என்ன யுக்தி செய்து, தன் எண்ணத்தை முடித்துக் கொள்வது என்று யோசிக்கலானான்.

உயிரைப் போக்கத் தன்னைச் சுற்றி ஆட்கள் இருப்பதைப் பார்வதி உணர்ந்தானே தவிர, கொலை செய்ய வந்தவர்களிலே ஒருவனுக்கு அவளைக் கூட வேண்டுமென்ற வெறிபிடித்துக் கொள்ணட விஷயத்தை அவள் அறியாள். அவளுக்குத் பாதி உயிர் போய்விட்டது.

“நீங்கள் யாவரும் தோட்டத்துப்பக்கம் போயிருங்கள். நான் காரியத்தை முடித்துவிட்டுக் கூப்பிடுகிறேன்” என்று காமபெறி பிடித்தவன் கூறினான்.

“ஏன்?” என்று பார்த்திபன் கொஞ்சம் கோபத்தோடு கேட்டான்.

“ஏனா? அவளை நான் கொல்வதை நீங்கள் நேரிலே பார்த்தால், பயந்து கூவிவிடுவீர்கள். ஒருவேளை மயங்கிக் கீழே விழுந்து மண்டை உடைய நேரிட்டாலும் நேரிடலாம். சிலருக்கு இம்மாதிரிச் சம்பவத்தைக் கண்டால் பைத்தியம் ஏற்படுவது முண்டு” என்று அவன் கூறி, பார்த்திபனையும், கொலைகாரர் களையும் தோட்டத்துப் பக்கம் அனுப்பிவிட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டான். கொஞ்சம் “தாகசாந்தி”யும் செய்து கொண்டான். பார்வதி அருகே சென்றான். அவளுடைய அழகையும், இளமையையும் கண்டான். எப்படிப்பட்ட அருமையான பொருள். இதைப் பாழாக்கி விடுவதா என்று சிரித்தான். வாயிலிருந்து துணியை முதலிலே எடுத்தான். “ஆ!” என்று அலறினாள் பார்வதி.

“கூவாதே, கூவினால் கோபம் வரும் எனக்கு” என்று குரூரமாகக் கூறிவிட்டுக் கைகால்களில் இருந்த கட்டுகளையும் அவிழ்த்து விட்டான். பார்வதி மெள்ள எழுந்து நின்று அவனை வணங்கினாள்.

“ஐயா, என் மீது இரக்கம் கொண்டதற்காக என் வந்தனம் நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை” என்று பார்வதி பணிவாகக் கூறினாள்.

“ஆமாம், நாம் எதிர்பாராதது எத்தனையோ நடக்கிறது. விநாடிக்கு விநாடி நான் முதலிலே திக்கற்றோர் திருச்சபைக்கு வரவேண்டுமென்று கூப்பிட்டபோது நீ இதை எதிர்பார்த்தாயா? எங்கோ பிரசங்கத்துக்குப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இங்கே வந்தாய். என்ன கண்டாய்? உன்னைக் கொலை செய்ய நாங்கள் இருந்ததை. இதை நீ எதிர்பார்த்தாயா?”

“கொலை செய்யும் நோக்கம் உங்களுக்கு இல்லை. ஏதோ நீங்கள் அந்தப் பார்த்திபன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, இதை செய்ய ஒப்புக்ö காண்டீர்கள்.”

“ஆமாம், எங்களுக்கு நீ என்ன குற்றம் செய்தாய்? உன்னை முன்பின் அறியமாட்டோம். உனக்கும் அந்த ஆளுக்கும் என்னமோ பகை. எங்களிடம் கூறி, அவன் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வந்தான். இந்தக் காரியம் முடிந்த பிறகு அவனை “பைசல்” செய்யும்படி வேறு யாராவது கூறி, அதற்கு ஏற்ற காணிக்கை கட்டினால் அவனையும் தீர்த்து விடுவோம்.

“மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. உங்கள் வரையிலே நான் உறுதியாகக் கூறுவேன். நீங்கள் கொலை செய்யவே மாட்டீர்கள்.”

“பைத்தியமே, நானா கொலை செய்யமாட்டேன்?’

“ஒருகாலும் செய்யவே மாட்டீர்கள். செய்தாயிருந்தால், தந்திரமாக ஏதோ பேசி, அவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு என் கட்டுக்களை அவிழ்த்திருப்பீரா? ஐயா உமக்கு நமஸ்காரம் உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கெல்லாம் பெரும் புண்ணியம். என் தந்தைபோல் நீர் இனிமேல், என் உயிரைக் காப்பாற்றினீர்!”

“உன் தந்தையா? சேச்சே, நான் என்ன அவ்வளவு வயதான வனாகவா தெரிகிறேன். நான் உன் மாமன்.”

தன்னைக் காப்பாற்றிடவே கட்டுக்களை அவிழ்த்தான் என் எண்ணிய பார்வதிக்கு, விஷயம் புரியும்படி வார்த்தையாட லானான். அம்முரடன். பச்சோடு விட்டானா? செயலிலும் இறங்கிவிட்டான். பார்வதியின் கையைப் பிடித்திழுத்துக் கட்டியணைத்துக் கொள்ள முயன்றான். பார்வதி, ‘ஓ’வென அலறியபடி, அவன் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டு இங்கு மங்கும் ஓடினாள். தெருப்பக்கம் போக விடாதபடி அவன் தடுத்து விட்டான். புறக்கடைப் பக்கம் போவதிலே பலன் இல்லை. அங்கே பார்த்திபனும் அந்தப் போக்கிரிகளும் இருந்தனர்.
இதைவிட மரணம் மேல் என்று பார்வதி எண்ணினாள். கூவினாள். அவனைக் கும்பிட்டாள். இங்குமங்கும் ஓடினாள்.

“வாடி முட்டாளே, நேரமாகுதுவா. ஆசையாக எனக்கொரு முத்தம் கொடு. அதிலே நான் சொக்கிப் போனால் ஒருவேளை நீ உயிர் தப்பினாலும் தப்பலாம்” என்று காமவெறியன் கூறினான்.

தோட்டத்திற்குச் சென்றிருந்தவர்கள் பார்வதியின் கூக்குரலைக் கேட்டு, “சரி, காரியம் நடக்கிறது” என்று கருதிக் கொண்டனர்.

“என்னைக் கொன்றுவிடு. உயிர் போகட்டும். என்னை வெட்டிப்போடு” என்று பார்வதி முரடனிடம் சொன்னாள். அவனோ சிரித்துக் கொண்டு, “சாவதற்குப் பயப்படாதவள் சும்மா என்னிடம் கொஞ்சநேரம் சரசமாட ஏன் பயப்படுகிறாய்? வா, நான் என்ன புலியா, சிங்கமா ஏண்டி? உனக்கு மேலே பாசாங்கு காட்டினவளை எல்லாம் நான் பார்த்திருக்கிற÷ன்” என்று கூவிக் கொண்டே பார்வதியைப் பிடித்து இழுத்தான். பார்வதி அவனிடமிருந்து திமிறிக் கொண்டு அவனைச் சுவர்ப் பக்கமாகத் தள்ளினாள். போதை மிகுதியால் அவன் கரகரவெனச் சுழன்று சென்று சுவரிலே பலமாக மோதிக் கொண்டான். அதே சமயம் தெருக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஆவேசம் கொண்டவள் போலப் பார்வதி ஓடிச் சென்று, கதவின் தாøத் தள்ளிக் கதவைத் திறந்தாள். கீழே வீழ்ந்த குடியன், “ஓடிவிடவா பார்க்கிறாய்?” என்று கூவிக் கொண்டே எழுந்து, அவள் தலைமயிரைப் பிடித்து இழுத்தான். வெளிப்பகத்திலிருந்து கதவைத் திறந்து விட்டனர் சிலர் பார்வதி, “ஐயோ” என்று அலறியபடி வெளியே பாய்ந்தாள்.

“பயப்படாதே குழந்தாய்!” என்று அன்பாகக் கூறிப் பார்வதியைத் தன் மார்பிலே சாய்த்துக் கொண்டு நின்றார் மார்க்கசகாய பாதிரியார்.

மார்க்கசகாய பாதிரியார், அந்த வட்டாரத்துக் கிருஸ்தவத் தொண்டர். தலைவர் என்று அழைக்கப்படுவதற்கு ஏற்ற பண்புகளுடன் விளங்கிய அவர், தம்மை எவரும் தொண்டர் என்று அழைப்பதே, பெருமையுடைத்து என்று பெருங்குணத் துடன் கூறுவார்.

பார்வதி சேரியின் பக்கம் சென்றபோது சிலர், கிருஸ்தவப் பிரசாரத்திற்காகத்தான் போவதாக எண்ணிக் கொண்டு ஏசினார்கள் என்று முன்னம் கூறினோம். ஏசினர் பலர் என்றாலும், இரண்டொருவர், முரடர்களால் அந்த அம்மைக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தனர். அவர்கள் தாம் மார்க்கசகாய பாதிரியாரிடம் யாரோ இளமங்கை கிருஸ்தவப் பிரசாரம் செய்யச் சேரிப்பக்கம் போகிறார்கள். கலகம் விளையும் வாடை அடிக்கிறது என்று கூறினார்கள். ஓட்டமும் பெருநடையுமாகப் புறப்பட்டார் பாதிரியார், போலீசுக்கு. போலீஸ் புறப்படுவதற்கு முன்பு கிளம்பினார், சைக்கிளில். பாதி வழியிலே சைக்கிள் கெட்டுப் போக÷ அதை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டு மேல்மூச்சு வாங்க ஓடினார், பார்வதி சென்ற பாதை வழியாக. சரியான சமத்திலே வந்து சேர்ந்தார். பார்வதியைக் காப்பாற்றினார்.

தங்கள் ஏற்பாடுகளைக் கெடுத்துவிட்ட பாதிரியைப் பார்த்திபனும் அவன் ஆட்களும் சூழ்ந்து கொண்டனர். பார்த்திபன் பாதிரியாரின் கன்னத்திலே ஓர் அறை கொடுத்து விட்டு உரத்த குரலிலே சிரித்துக் கொண்டு, “ஒரு கன்னத்திலே அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டும்படி உங்கள் ஏசு சொன்னாரல்லவா?” என்று கேட்டான். பாதிரியார் பதில் ஏதும் கூறவில்லை. புன்சிரிப்புடன் பார்த்திபன் எதிரே நின்றார்.