அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
9
               

கேரள சுந்தரிகளுடன் நடனக் கலையின் நேர்த்தியைப் பார்த்திபன் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்தான். கனக சபேசர் அந்தச் சுந்தரிகளின் சுழலும் கண்களுக்குக் கெண்டையை ஒப்பிடுவதா, அதற்குரிய கவிதை என்ன, அந்தப் புலவரின் வர்ணனைக்கும் மற்றொரு புலவரின் வர்ணனைக்கும் உள்ள தார தம்மியம் என்ன, என்ற ஆராய்ச்சியிலே ஈடுபட்டு, அகமகிழ்ந்து கிடந்தார். ‘சாறு நமக்குச் சக்கை ரசிகருக்கு’ என்று பார்த்திபன் கூறிக் கொள்ளவில்லை. ரசிகர் கேட்கும் ஏடுகளைத் தருவித்துக் கொடுத்து விட்டான். அவர் கல்வியிலே கருத்தைகச் செலவிட்டார். பார்த்திபனின் அலுவலிலே ஒரு புள்ளி மட்டுமே பாக்கி. ஆனால், இருவரில் ஒருவருக்கும் அலப்புத் தோன்றவில்லை. அலுப்பு அந்த ஆடலழகிகளுக்குத்தான்! ரசிகரின் கண்கள், ஒருபுறம் தாக்க, ஆசிரியரின் கண்கள் மற்றோர் புறம் தாக்க, ஆடியும் பாடியும் ஆடலின் பொருளை விளக்கியும், பாடலுக்கேற்ற “பாவம்” தெரிந்திடச் செய்தும், இரு ரசிகருக்கும் மனம் கோணாது நடந்துகொள்ள அவர்கள் பட்டபாடு அதிகந்தான்!! காணக் காண ஆவல் அதிகமாகுமேயொழியக் குறையக் காணாமே. நமது நாட்டுக் கலைச் செல்வம் அபாரமானது. மாநிலத்திலே முதலிடம் பெற வேண்டியது; இல்லாமலா, நாதனே நர்த்தனக்கோலம் பூண்டார். நாராயணனே மோகினி வடிவெடுத்தார் என்று கூறிக் கனகசபேசர் பூரித்தார். “உண்மைதான்! ஆமாம்!! என்று பார்த்திபன் ஆமோதித்தான். வேறு பல ரசங்களை மனத்திலே ததும்ப விட்டுக் கொண்டு.

கதகளியின் பயனாக, கனவு யாவும் பலிதமாகாமல் போகுமே என்ற கவலையால் வாடிய குமரகுருபரர், கடிதம் பல எழுதினார், பார்த்திபனுக்கு. முதலிரண்டு கடிதங்களுக்குப் பதிலாவது கிடைத்தது; பிறகோ அதுவுமில்லை. தந்தியும் கொடுத்தார், ஜெயாவுக்கு ஜுரம் என்று. பார்த்திபனுக்குத் தெரியும், ஜெயாவுக்குக் காய்ச்சல் வருமென்று ஒரு ‘செக்’ கொடுத்தால் நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுண்டு. எனவே பார்த்திபன் கலையின் அணைப்பிலே இன்னும் சில நாட்கள் இருப்பது என்று துணிந்துவிட்டான். குருக்கள் இனிச் சும்மா இருக்கக் கூடாது என்று எண்ணி, மெள்ள ஆலாலசுந்தரருக்குக் கேரள நாட்டுக் கதையைக் கூறலானார். ஆலாலசுந்தரர், கேரளம் சென்றால் பார்த்திபன் அவவிடத்தை விட்டுப் புறப்பட்டு வருவான் என்பது குருக்களின் கருத்து. பார்த்திபன், கேரளத்திலே கதகளி நடனத்தைக் கண்டு காசு இழந்து வருகிறான் என்று கூறினால், ஆலாலசுந்தரரின் முகம் கடுக்குமேயொழிய கோரிய பலன் கிட்டாது. எனவே குருக்கள் அந்தச் செய்தியைக் கூறாமல், ஆலாலசுந்தரருக்குப் பிரியமான வேறொர் செய்தியைத் தந்திரமாகக் கூறினார். காசாசை பிடித்த அந்த லோபியின் சுபாவம் குமரகுருபரருக்கு நன்கு தெரியுமல்லவா?

“என்ன அநியாயம், தெரியுமோ? பாக்கு விலை ஏறிக் கொண்டே போகிறது.”

“பாக்கு விலை ஏறிவிட்டது ஒரு பிரமாதமான விஷயமா? ஓய்! குருக்களே, ஏதோ பெரிய பூகம்பம் ஏற்பட்டு விட்டாற்போல அலறுகிறீரே இதற்கு. எந்தச் சாமானின் விலைதான் ஏறவில்லை?”

“மிராசுதாரவாளுக்கு, வீசை நாலு ரூபாய்க்கு விற்றால் தான் என்ன? நாற்பது விற்றால்தான் என்ன? நம்மைப் போன்றவர்களுக்குச் சொல்லுங்கோ, ஒரு வாரத்திற்குள்ளே பாக்கு விலை, ஒன்றுக்கு இரண்டாகி விட்டது. யாரோ ஒரு சேட், 5000 மூட்டை பாக்கு ஸ்டாக் செய்து வைத்திருந்தான். மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் இலாபமாம். 5000 மூட்டைக்கு என்ன இலாபம் கிடைத்தது பாருங்களேன்.”

இந்தப் பேச்சு நடந்ததும் ஆலாலசுந்தரம் கணக்குப் போட்டார். தலையை அசைத்தார் 5000 ஙீ 50 என்று பெருக்கினார்! 2,50,000 என்பதை எண்ணினார். அவரால் தாங்க முடியவில்லை. இவ்வளவு பெரிய தொகையை எவனோ ஒருவன் அடித்துக் கொண்டு போவது. அடடா! மார்கட்டிலே விலை ஏறப்போவது தெரிந்து, நாம் அந்தப் பாக்கு மூட்டைகளை ஸ்டாக் செய்திருந்தால், இலாபம் நமக்குக் கிடைத்திருக்குமே என்று எண்ணிப் பெருமூச்செறிந்தார். அந்தப் பெரும் பணம் தன் கையிலிருந்து யாரோ வழிப்பறி கொள்ளைக்காரன் அடித்துக் கொண்டு போய்விட்டதாகவே எண்ணி ஆயாசமடைந்தார். போனது போகட்டும். இப்போதாவது ஒரு ‘சான்ஸ்’ பார்க்க வேண்டாமா? என்று யோசித்தார்.

“பாக்கு விலை இன்னமும் ஏறுமோ?” என்று கேட்டார்.

“ஆமாம், அதனால்தான் அரைவீசை வாங்கிவரச் சென்றவன் இரண்டு வீசையாக வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். நான் என்ன பித்துக்குளியோ! அந்தச் சேட்தான் மலபார் போயிருக்கானாமே!” என்று குருக்கள் கூறினார்.

“மலபாருக்கா?” என்று கேட்டார் மிராசுதாரர்.

“ஆமாம், அங்குதானே பாக்கு விசேஷம். மலிவு அங்கு ஏராளமாக வாங்கப் போயிருக்கான் மார்வடி. நம்பவாளுக்கு ஏது இந்த யோசனை?” என்று பரிதாபப்பட்டார் குருக்கள்.

“யோசனையில்லாமலென்ன? நம்ம போறாத வேளை, பாக்கு ஸ்டாக் செய்த பிறகு விலை இறங்கிவிட்டால் என்ன செய்வது என்று பயமிருக்கு பாருங்கோ. நூறு இருநூறா? இலட்சக்கணக்கிலே நஷ்டம் வருமே. மார்க்கெட் விழுந்து விட்டால்” என்று மிராசுதாரர் கூறினார்.
“ஆமாம் நஷ்டத்தை எதிர்பார்த்துத்தானோ ஒரு வியாபாரம் ஆரம்பிப்பா? இலாபம் வந்தால் இலட்சக் கணக்கில் வராதோ? அந்தச் சேட்டுக்கு 5000 மூட்டைக்கு மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் எவ்வளவு இலாபம் கிடைத்தது பாருங்களேன்” என்று மந்திர உச்சாடனம் செய்தார்.

அன்றிரவு 5000 ஙீ 50 என்ற பெருக்கலேதான் ஆலாலசுந்தரருக்கு! அதன் பலனாக, ஒரு புதிய ரெயில்வே அட்டவணைப் புத்தகம் வாங்கிவிட்டார். மலையாள நாட்டுக்குச் செல்லத் தீர்மானித்து விட்டார். குருக்கள் தனது திட்டம் நிறைவேறுவது கண்டு களித்தார்.