அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
15
               

மாநாடு குழப்பத்திலே முடியவே, பார்த்திபன் கடுங்கோபங் கொண்டான். பார்வதியைச் சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான். சட்டம் சும்மா விடாதே என்று கருதிப் பயந்தான். வேடதாரிகள், மக்கள் பெயரைக் கூறிக் கொண்டு, பொதுநலத் தொண்டு என்று பெயர் வைத்துக் கொண்டு, ஏய்ப்பது இதுபோலத் தடுக்கப்படத்தான் வேண்டும் என்று பேசலாயினர். அம்பக் ஆறுமுகம், வெண்ணெய் திரண்டு வரும் சமயத்திலே தாழி உடைந்த கதைபோலாயிற்றே என்றெண்ணி விசனித்தான். பத்திரிகை நிருபர்கள் விதவிதமாகத் தலைப்புக்கள் கொடுத்துச் செய்திச் சித்திரங்களைத் தீட்டச் சம்பவம் வாய்ப்பு அளித்ததே என்றெண்ணி மகிழ்ந்தனர். ஆலாலசுந்தரர், “நான் ஆயிரம் தடவை சொன்னேன். வேண்டாம் வேண்டா மென்று. இந்தப் பார்த்திபன் என் சொல்லைக் கேட்கவில்லை. இவ்வளவும் இவனால் வந்த தொல்லை” என்று கூறி விசனித்தார். மாநாடு குழப்பத்திலே முடிந்ததால் பலருக்கு ஏற்பட்ட மனக் கஷ்டமே அதிகம். “விரிவாக விளக்கமாக முத்தமிழின் மணம் கமழ, வித்தகரின் உரைகள் மிளிர, புதிய தத்துவார்த்தங்கள் நிரம்பிய சொற்பொழிவு தயாரித்தேன். வீணாயிற்று” என்று கூறி அவர் விசாரப்பட்டார். “எத்தனை ஏடுகளைப் புரட்டினோம். என்னென்ன பாடல்களை இணைத்தோம். எப்படி எப்படிப் பொருள் விளக்கமுரைத்துள்ளோம். இப்படிப்பட்ட இனிய உரையை இதுவரை பெங்களூரிலே எவரும் கேட்டிருக்கவே முடியாதே. தமிழகத்திலேயே இவ்வளவு அருமையான விரிவுரையை நிகழ்த்தவல்லார் வேறு எவருளர்? பலருக்குப் படிப்பு உண்டு. பண்பாடு கிடையாதே! இலக்கண இலக்கியம் தெரிந்தோர் பலர் இருக்கின்றனர்! ஆனால், ரசம் கண்டு அனுபவித்ததை மக்கட்கு எடுத்துக் கூறிடும் வகை உணர்ந்தார் யாருளர்? கலையின் மேம்பாட்டினை மக்கள் உணரும் வாய்ப்பு தவறிவிட்டதே” என்று எண்ணி ஏங்கினார், கலாரசிகர் கனகசபேசர்.

லேடி டாக்டர் லலிதகுமாரி, மாநாட்டு விஷயமாகப் பார்வதி கூறியது கேட்டுச் சிரித்தாள். “பார்வதி ஒரு பெரிய சிறுக்கி. நீ ஒரு பெரிய மாநாட்டையே கலைத்து விட்டு வந்து விட்டாயே. எவ்வளவு தைரியமடி உனக்கு?” என்று கூறினாள். “இதற்கு ஒரு பாராட்டா? அவர்கள் மாநாடுகள் நடத்திப் பழக்கப்பட்டவர்களுமல்ல. மக்களோடு தொடர்பு கொண்டவர்களு மல்ல. ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டுமென்பதே தெரியாததால்தான் அந்தக் குழப்பம் உண்டாயிற்று” என்று பார்வதி கூறினாள். “இப்படியே எத்தனை காலம் பொதுநலத் தொண்டு, கட்சி வேலை என்று இருக்கப் போகிறாய்? பார்வதி! உலக மக்கள் அனைவரும் சுகம் பெற்ற பிறகுதான் கலியாணம் செய்து கொள்வது என்று ஏதாவது சபதமா?” என்று லேடி டாக்டர் கேட்டாள். “உனக்கு எப்போதும் கேலிதான் வேலை” என்று பதிலுரைத்தாள் பார்வதி.

வாய் கூறியது அவ்வளவுதான். ஆனால், மனமோ, கொடைக்கானலிலே குமார் முழக்கமிட்டது. அதைக் கேட்ட பார்த்திபன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினால் என்ன, நடத்தாமற்போனால் என்ன? குமார் விஷயத்திலே வெற்றி பெற்றுவிட்டான். குமாரின் புகழ் ஓங்குமோ என்று பயந்தான். குமார் இருக்குமிடம் தெரியாமற் போகுமாறு செய்துவிட்டான். எங்கு போனான் குமார்? அவன் தொழிலாளருக்காகத் திரட்டிய பெரும் பொருள் என்னவாயிற்று? என்பது தெரிய மார்க்கமே இல்லை. இதை எண்ணிப் பார்வதி விசனமுற்றாள். குமார், நம்பிக்கை மோசடி செய்யக் கூடியவனென்று பார்வதியால் நம்ப முடியவில்லை. பாட்டாளி மக்களிடம் அவன் காட்டிய அக்கறையை அவள் அறிவாள். பார்த்திபனைப் போலப் படாடோபக்காரனல்ல. தலைமைப் பதவி பெறச் சதி பல புரியும் நோக்கமே இல்லாத குமார். பொதுப் பணத்தைச் சூறையாடக் கூடியவனல்ல. தன் உயிரைக் கொடுத்தேனும், பாடுபடுபவருக்குப் பணிபுரிய வேண்டுமென்ற ஒரே இலட்சியத்திலே மூழ்கிய குமார் எங்கே சென்றுள்ளான். ஏன் தலைமறைவாக இருக்கிறான் என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்ற பார்வதி, பார்த்திபனுக்குத்தான் இந்த மர்மம் தெரிய வேண்டும். அவனிடம் வீணாக விரோதித்துக் கொண்டது தவறு. தந்திரமாக நடந்து கொண்டு பார்த்திபன் மூலமாக குமாரைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, பார்த்திபன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றாள்.

மாநாடு குழப்பத்திலே முடிவதற்குக் காரணமாக இருந்தது போதாதென்று கேலி செய்யவும் துணிந்து பார்வதி வந்திருக் கிறாள் என்று நினைத்த பார்த்திபன் வேல் பாய்ந்த வேங்கைப் போலச் சீறினான். ஆணவமும் அட்டகாசமும் கொண்ட சொற்களை வீசலானான். வழியற்றவள், நிலை கெட்டவள் என்று பார்வதியைத் தூற்றினான். பார்வதி அவனுக்குப் பதிலுரைக்கவில்லை; கோபமும் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே பேசினாள். “மன்னிக்க வேண்டும்! நான் ஓர் ஏழை! என் மீது கோபித்துக் கொள்ளலாமா? தங்கள் சக்திக்கு முன்னால் நான் எம்மாத்திரம்?” என்ற சொற்களையே பதிலாக உரைத்தாள். அவளுடைய அமைதியான போக்கும் பணிவான பேச்சும், பார்த்திபனுக்குக் கோபத்தைக் கிளறிவிடவே உதவின. பதிலுக்குப் பதில் பார்வதியும் கோபமாகப் பேசியிருந்தாலாவது, ஆத்திரம் தீர அவளைப் பேசி ஒருவாறு திருப்தி பெறலாம். அவளோ அடக்கமே உருவானவள் போல இருந்திடக் கண்டான். அவனுக்கு அந்த நிலையின் காரணம் விளங்கவில்லை. கைகளால் தலையிலே அடித்துக் கொண்டான். மேஜையை ஓங்கிக் குத்தினான். கூண்டிலிட்ட புலிபோல உலவினான். மேலும் மேலும் வசைமொழி புகன்றான். பார்வதி இந்தக் கோபத்தைப் பொருட்படுத்தாதது கண்டு, அவனுக்கு அழுகையும் வரும் போலிருந்தது.

“கள்ளி! ஏதுமறியாத குழந்தை போல இருக்கிறாயே, உனக்கு என்ன ரோஷம் இல்லையா? நீ என்ன ஊமையா?” என்று கேட்டான். பார்வதிக்குக் கோபம் பிறக்க வேண்டும் என்பதற்காக அவன் பட்டபாடு கொஞ்சமல்ல.

“எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு...” என்று ஆரம்பித்த பார்த்திபனுக்கு, “என்னைக் கழுத்தைப் பிடித்து நெரித்து விடலாமா என்று தோன்றும்” என்று பார்வதி சிரித்துக் கொண்டே பதில் கொடுத்தாள்.

“உன்னை எந்தக் கழுதை தொடுவான்?” என்று தனக்கு இருக்கும் வெறுப்பைத் தெரிவித்துக் கொண்டான் பார்த்திபன். “என் சிறு விரல் மேலே பட்டால் ஜென்மமே சாபல்யமாகும் என்று கருதிய காலம் ஒன்று உண்டு” என்று பழங்காலத்தைச் சாட்சிக்கு இழுத்தாள், பார்வதி.

“உன்னை ஒரு உத்தமி என்று நான் நம்பிய காலத்தை மறந்துவிடு, அப்போது நான் ஒரு முட்டாளாக இருந்தேன்” என்றான் பார்த்திபன்.

“நான் எண்ணியது சரியாக இருக்கிறது” என்றாள் பார்வதி.

“என்ன எண்ணினாய்? என்ன சரியாக இருக்கிறது? என்று வெகுண்டு சிரித்தான் பார்த்திபன்.

“காதல் கொண்டவர்கள் பித்தம் பிடித்தவர்கள் போல, ஏதேதோ பிதற்றுவார்கள் என்று எண்ணியிருந்தேன். அது சரியாகத்தான் இருக்கிறது” என்று பார்வதி கூறினாள்.

“காதலா? எனக்கா? உன்போன்ற காதகியிடமா காதல்? காதலாம் காதல்! காலாடிகளுடன் கூடிக் கொண்டு கண்டபடி சுற்றித் திரியும் கள்ளியிடம் காதல் கொள்வதாம்! நான் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாது பேசுகிறாய். பார்வதி! நான் கொஞ்சமும் உன்னிடம் இரக்கம் காட்டப் போவதில்லை. நீ எவ்வளவுதான் காதல் காதல் என்று கூறினாலும் நான் கடுகளவு அன்பும் கொள்ளப் போவதில்லை” என்று வீரம் பேசலானான் பார்த்திபன்.

“விரக்தி மார்க்கத்திலே நீ இறங்கினால் நான் என்ன செய்ய முடியும்? இந்த உலத்திலே எனக்கு ஒரு வேலையும் கிடையாது. என் மீது அவ்வளவு கோபம் இருந்தால் என்ன? நானாக வலிய இங்கே வந்திருக்கிறேன். நீர் வாய் வலிக்கத் திட்டிய அவ்வளவையும் கோபமின்றிக் கேட்டுச் சகித்துக் கொண்டேன். இவ்வளவு பொறுமையாக நான் இருப்பதற்குக் காரணம் என்ன? காதல்! அந்தப் பாழாய்ப்போன காதலுக்குக் கட்டுப்பட்டே நான் ரோஷத்தையும் மறந்து நிற்கிறேன். நீர் என்னை உதாசீனம் செய்துவிட்டு ஊர் திரும்பினால், “என் உடலிலிருந்து உயிர் பிரிவது உறுதி. இது பற்றித் தங்கட்குக் கவலையில்லாமற் போகலாம். ஆண்களின் நெஞ்சமே அப்படித்தான். கொஞ்சுவாளோ என்று கெஞ்சிக் கிடப்பார்கள். ஆனால் தஞ்சமென்று வருபவர்களிடமோ நஞ்சுபோல நடப்பார்கள். உமது போக்கும் அதுவாகவே இருப்பின் நான் என்ன செய்ய இருக்கிறது?” என்று பார்வதி கூறினாள்.

அந்தப் பேச்சிலே பாகும் தெளிதேனும் கலந்திருந்ததோ என்னவோ, கோபமுற்றுக் குதித்துக் கொண்டிருந்த பார்த்திபன், அகலத் திறந்த கண்களுடம் நின்றான். பார்வதியின் கோபத்தை அவன் எதிர்பார்த்தவனே தவிர, மோகங்கொண்டு தன் பாதத்தைப் பணிவாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. குமாரிடம் முழு அன்பு வைத்திருந்தாள் என்ற சந்தேகத்துக்காகவே, சதிபுரியவும் தயாராக இருந்த பார்த்திபனுக்கு பார்வதி போக்கு மிக்க ஆச்சரியமாக இருந்தது.

“பார்வதி!” என்று தழுதழுத்த குரலிலே கூறினான். மேற் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல். ஒரு பெண்ணின் புன்னகை, ஆடவனின் மனதைப் படுத்தும்பாடு, அனுபவித்தவரே அறிவாரன்றோ! பிறர் என்ன கூறினும் அதன் முழுத் தன்மையைப் புரியவைக்க முடியாது.

“பார்வதி” என்று மீண்டும் கூவினான் பார்த்திபன்.

தாமரை மலர்ந்தது போன்ற முகத்துடன் விளங்கினாள் பார்வதி. முத்து வரிசை போன்ற அவளுடைய பற்கள் கொஞ்சம் வெளியே தெரியலாயின; மறுவினாடி பவளப்பெட்டிக்குள் சென்று பதுங்கி விட்டன. உடலெங்கும் ஒரே சமயத்தில் பனிக்கட்டி விழுந்தது போலாகி விட்டான் பார்த்திபன்.

“நடப்பது கனவா? பார்வதி! என்னிடம் உனக்கு உண்மையாகக் காதலா? கடுகளவும் இராது என்றுதானே எண்ணினேன்?”

“சூரியனுக்குத் தெரிகிறதா, தாமரை தன்னிடம் இலயித்தே மலருகிறது என்ற உண்மை? ஏன்? மேகத்துக்கு தெரியுமா மயிலின் நடனத்துக்குக் காரணம் தன்னிடம் அப்பறவை கொண்ட காதல் என்று? தங்களுக்கு என்ன தெரியும் என் தாபம்?”

“பார்வதி! நான் ஒரு முட்டாள். இதுநாள் வரை உன்னைத் தெரிந்து கொள்ளாமலிருந்து விட்டேன். உனக்குக் கேடு பல செய்தேன். உன்னைப்பற்றி மரியாதைக் குறைவாகவும் பேசினேன்.”

“பதியிடம் பக்திகொண்ட பாவையர் இவைகளைப் பொருட்படுத்தமாட்டார்கள்.”

“கண்ணே! உன் உண்மையான மனநிலையைத் தெரிந்துக் கொள்ளாமல் ஊரூராகத் திரிந்தேன். எங்கே சுகம் கிடைக்கும், எங்கு நிம்மதி கிடைக்கும். எங்கே ஆனந்தத்தை அணைத்துக் கொண்டு வாழலாம் என்று.”

“சுகத்தைக் கண்டீரோ?”

“ஆகா! இதோ!”

காதற் பேச்சு முடிந்தது. பார்த்திபன் “இதோ” என்று கூறிக் கொண்டு அடக்க முடியாத ஆவலோடு பார்வதியைத் தழுவிக் கொள்ள ஓடினான்.

“மன்னிக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டே அதே சமயத்தில் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு லேடி டாக்டர் லலிதகுமாரி நுழைந்தாள்.

ஒரு மங்கையைத் தழுவ ஆவலோடு ஒரு ஆடவன் செல்லும் நேரம் எப்படிப்பட்டது? அந்தச் சமயத்திலே அவனுடைய உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் உடல் பதைப்பும் எடுத்துரைக்கும் கவியும் உண்டோ? கலை கடுகாகவும் பாம்பு பழுதாகவும் தோன்றுமாம், அப்படிப்பட்ட சமயத்திலே! அந்த நிலைமையிலே இருந்த பார்த்திபன் கதவு திறந்து கொண்டு ஒரு மாது நுழைந்து ‘மன்னிக்க வேண்டும்’ என்று கூறுவது கண்டு, கொண்ட கோபம் கொஞ்சமல்ல! மன்னிக்க வேண்டுமாம். மன்னிப்பதாவது! மன்னிக்கவே முடியாத குற்றத்தைச் செய்து விட்டாள். இவளை மன்னிக்க வேண்டுமா! மடத்தனம் மிகுந்தவள். மலரின் மணம் அழைக்க அதன் அருகே சென்று, இதழை எடுக்கக் குனிகிறேன். குளவி கொட்டிவிட்டு என்னை மன்னிக்க வேண்டும் என்று வேறு கேட்கிறது! எவ்வளவு திமிர்! பழத்தைத் தின்னப்போகும் நேரத்தில் கைநழுவிக் கீழே வீழ்ந்த பழத்தை மந்தி எடுத்துக் கொண்டு கிளையிலே தாவி உட்கார்ந்து, ‘வருத்தம் வேண்டாம்! என்று கூறுவதா? வாழ்க்கையின் விருந்தைக் கொடுத்தாள். ஆனந்தத்தை அணைக்கப் போனேன். அக்கிரக்காரி தடுத்துக் கெடுத்தாள் இன்பத்தை! வீணையின் நரம்புகளை முறித்துவிட்டான் என்றெல்லாம் எண்ணினான் பார்த்திபன். அடக்கி அடக்கிப் பார்த்தும் அவனால் முடியவில்லை. “பார்வதி யார் இந்த மாது சிரோமணி?” என்று கோபமும் கேலியும் மிகுந்த குரலுடன் கேட்டான்.

“லேடி டாக்டர் லலிதகுமாரி” என்று பார்வதி பதில் கூறினாள். மகிழ்ச்சியோடு, தப்பினோம், பெரிய ஆபத்திலிருந்து, மலை மீதிருந்து மடுவிலே விழ இருந்தோம். பின்புறமிருந்து கூந்தலைப் பிடித்திழுத்துக் காப்பாற்றி விட்டாள். நஞ்சு கலந்த பாலைப் பருக இருந்த சமயம், பாத்திரத்தைக் கீழே தட்டி உயிரைக் காப்பாற்றி விட்டாள். அக்கிரமக்காரனின் அணைப்பினின்றும் தப்புவித்தாள் லலிதா என்ற சந்தோஷம் பார்வதிக்கு. ஆகவேதான் பார்த்திபன் கேட்டதற்குப் பார்வதி மகிழ்வோடு பதிலுரைத்தாள். அவளுடைய மகிழ்ச்சி பார்த்திபனுக்குக் கோபத் தீக்கு விசிறியாயிற்று. “எனக்கொன்றும் நோயில்லையே!” என்று கூறினான். கெம்பீரம் கலந்த கேலி என்ற நினைப்பிலே. லலிதகுமாரிக்குப் பல பார்த்திபன்கள் தெரியுமல்லவா? எனவே, அவள் பார்த்திபனுடைய துடுக்குத்தனத்தையும் கர்வத்தையும் தலை மீது அடிப்பது போலக் கூறினாள். “டாக்டருக்குத் தெரியுமல்லவா, பார்த்த உடனே! தங்களைக் கண்டவுடனே நான் தெரிந்து கொண்டேன் கடுமையான நோய் இருக்கிற தென்பதை” என்று.

“அது என்ன வியாதியோ?” என்று மறுகேள்வியைப் பூட்டினான் பார்த்திபன்.

“திமிர்வாத நோய்” என்று தீவிரமாகப் பதிலளித்தாள், லலிதா. பார்த்திபன் மேலும் பேசுவதற்குள் மளமளவென்று லலிதா, “இந்தத் திமிர்வாத நோய் கொண்டவர்களுக்குத் திடீர்க் கோபம் வரும். கண்களிலே தீ பறப்பது போலிருக்கும். உடல் அடிக்கடி பதறும்; உள்ளம் குமுறும்; நெஞ்சு உலரும். நோயின் குறிகள் நான் சொன்னவை. ஒரே மருந்துதான் இருக்கிறது. இந்தத் திமிர்வாதம் போக, அது என்னிடமேதான் இருக்கிறது” என்று கூறினாள்.

கடுங்கோபம் கொண்டான் பார்த்திபன். பெருங் குரலோடு பேசலானான். “எனக்கா திமிர்? எனக்கா? என்னை யாரென்று நினைத்துக் கொண்டு பேசுகிறாய்? பார்வதி! உன் முகத்துக்காகச் சும்மா இருக்கிறேன்” என்றான்.

“இல்லாவிட்டால்?” என்று குத்தலாகக் கேட்டாள் லலிதா.

“கழுத்தைப் பிடித்து வெளியிலே தள்ளியிருப்பேன். போலீசிலே ஒப்புவித்திருப்பேன்” என்று பார்த்திபன் கூறினான். பார்வதி இந்த எதிர்பாராத நிலைமையைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாது பதைக்கலானாள். லலிதகுமாரி, பார்த்திபனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சிரித்தாள். பார்த்திபன் அவள் சிரித்ததைப் போலவே சிரித்துக் காட்டினான் கேலிக்கு!!

லலிதகுமாரி, “பேஷ்! சபாஷ்! ஜோராக இருக்கிறதே. பபூன் வேஷத்துக்குப் பொருத்தமாக இருக்கும்” என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தாள். மறுபடியும் அவளை தடுத்து, “இது என்ன விபரீதம்? கொஞ்சம் கோபத்தை அடக்குங்கள், லலிதகுமாரி என் சிநேகிதி. லலிதா, இவர் என் நண்பர். நான் இருவரையும் நண்பர்களாக்க வேண்டுமென்று நினைத்திருக்க, நீங்கள் காரணமின்றி ஒருவரை ஒருவர் கண்டபடி பேசிக் கொள்கிறீர்களே” என்று கூறினாள். பார்த்திபன் சாய்வு நாற்காலியிலே உட்கார்ந்து, பார்வதியைப் பார்த்து, “இதுபோல நான் அவமானப்பட்டதே கிடையாது. என் காலை மிதித்தவர்களின் தலையை மிதிப்பதுதான் என் வழக்கம்” என்று கூறினாள். கண்களைத் திறந்து பார்த்திபன், “என் வழக்கம் என்ன தெரியுமா...?” என்று கோபமாகக் கேட்டான். “தெரிந்து தான் இங்கே வந்தேன்” என்று தீர்க்கமாகப் பதிலுரைத்தாள் லலிதா. “தெரிந்துதான் வந்தாயா, எதை?” என்று கேட்டான் பார்த்திபன்.

லேடி டாக்டர் ஒரு கடிதத்தைப் பார்த்திபன் எதிரிலே வீசி எறிந்து, “போதுமா பார். உன்னைப் பற்றித் தெரிந்துதான் இங்கு வந்திருக்கிறேன் என்பதற்கு சாட்சி” என்று கூறிவிட்டு வெற்றிக் களை முகத்திலே துலங்க உட்கார்ந்தாள். நடுங்கும் கையுடன் கடிதத்தை எடுத்தான் பார்த்திபன். பார்வதி, “என்ன கடிதம்? லலி! என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே லலிதாவின் தோளைப் பிடித்துக் குலுக்கினாள். கடிதத்தின் இரண்டோர் வரிகளைப் படித்ததும், பார்த்திபனுடைய முகம் மாறிவிட்டது. பயத்தோடு லலிதகுமாரியைப் பார்த்தான். பார்வதிக்குப் பதில் கூறாமல் உட்கார்ந்திருந்த லலிதகுமாரி, “இப்போது தெரிந்து கொள், நான் வந்த காரணத்தை. முழுவதும் படி. உனக்கு வெட்கமாக இருந்தால் என்னிடம் கொடு நானே படிக்கிறேன்” என்று கூறினாள். கடிதத்தைக் கசக்கிக் கீழே வீசி விட்டு பார்த்திபன், “எவளோ ஒரு ஊர் பேர் தெரியாத சிறுக்கியின் உளறல் கடிதம்” என்று கூறினான். கடிதத்தைப் பார்வதி எடுத்தாள், படிக்க. பார்த்திபன் பாய்ந்தோடினான். “அது ஒரு துஷ்டையின் தூற்றல் கடிதம். இப்படிக் கொடு” என்று கேட்டபடி பார்வதி தரவில்லை. பிரித்துப் படிக்கப் பார்த்தாள்.

சீமான் பார்த்திப துரைக்கு!
எவ்வளவுதான் நீங்கள் என்னை மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன். பெண்களின் சுபாவமே அதுதானே! அவர்களாக ஒரு ஆடவனிடம் அன்பு காட்டுவது கஷ்டம். ஆனால், எப்படியோ அந்த அன்பு ஏற்பட்டு விட்டால், பிறகு அதே ஆண்கள் எவ்வளவு துரோகம் செய்தபோதிலும், கொடுமை செய்தாலும் அடித்தாலும், உதைத்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். அது அவர்கள் வழக்கமாகி விட்டது. உத்தமி என்றும், பத்தினி, சதி என்றும் கதைப் புத்தகங்களிலே எழுதப்பட்டிருக் கிறதே. அந்தப் பெண்கள் எல்லாம் புருஷர்களிடம் எவ்வளவு இம்சை அடைந்தவர்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. நீங்கள் பத்துப் பேருக்குச் சொல்லக் கூடியவர்; பெரிய மேதாவி; தலைவர்; பத்திரிகைக்கு எடிட்டிர். என்னிடம் தாங்கள் காட்டிய அன்பைக் கண்டு ஏமாந்து போனேன். கடைசி வரையிலே கைவிடுவதில்லை என்றும், என்னையன்றி வேறொருத்தியை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றும் எவ்வளவோ சொன்னீர்கள். நான் உங்கள் இஷ்டத்திற்கு இணங்கும் வரையில் ஏதேதோ பேசிவிட்டுப் பிறகு என்னைவிட்டுப் பிரித்தீர்கள். மலையாள நாட்டுக்குச் சென்ற பிறகு என்னை மறந்தீர்கள். அங்கு தாங்கள் எவளெவளுடனோ கூடிக் குலாவினீர்கள் என்று கேள்விப் பட்டேன். ஒரு அழகான முகத்தைக் கண்டாலே போதும் இந்த ஆண்களுக்கு, முகத்திலே அசடு வழியும். நெஞ்சு படபடக்கும். ஆகவே நீங்களும், மலையாள நாட்டுக்கு ஏதோ நாட்டியக்கலை விஷயமாகக் கண்டுவரப் போனீர்கள். அந்த நாட்டியத்திலே இலயித்துப் போய் என்னைக் கைவிட்டு விட்டீர்கள். நீங்கள் எத்தனை பெண்களிடம் கூடிக் குலாவினாலும், திரும்பி இங்குதானே வருவீர்கள் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். அங்கு யாரோ ரோஸ் என்பவளோடு கூடிக் கொண்டு திரிந்தீர்களாம். திரிந்தால்தான் என்ன? ஏதோ மோகம் முப்பது நாள், ஆசை அறுபதுநாள் என்று சொல்வார்களே அதுபோலக் கொஞ்சகாலம் அவளோடு இருந்துவிட்டு மறுபடியும் உங்களையே நம்பிக் கொண்டிருக்கிற என்னிடம் வந்து சேருவீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது என் ஆசையிலே மண் விழுந்து விட்டது.

என்னை ஒரு துளியும் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தும் நான் ஏன் வலிய உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன் என்று கேட்பீர்கள். ஏதோ இஷ்டம் இருந்த வரையிலே சிநேகமாக இருந்தேன். இஷ்டம் இல்லை இப்போது. ஆகவே வருவதில்லை. இதற்கு ஒரு கேள்வியா? உலகத்திலே இதுபோல நடப்பது சகஜந்தானே! இதற்கு ஒரு பெண், அதிலும் தாசி, கோபிக்கலாமா என்று கேலி செய்வீர்கள். ஆனால், நான் உங்களிடம் கெஞ்சிக் கூத்தாடப் போவதில்லை. கூத்தாட வேண்டிய அவசியமுமில்லை!! உங்கள் இரகசியம் என் உள்ளங் கையிலே அடங்கிக் கிடக்கிறது. மிரட்டுவதாக எண்ண வேண்டாம். இத்தனை நாளில்லாமல் இப்போது நான் மிரட்டுவேனா? நாலு நாட்களுக்கு முன்பு ஒரு ஆளைக் காண நேரிட்டது. அவன் எனக்குக் கூறியுள்ள இரகசியங்களை நான் வெளியே தெரிவித்து விட்டால் பிறகு தெரியும் உங்கள் நிலைமை கூண்டேறி நிற்க வேண்டும். உங்கள் பணம், படிப்பு, பட்டம் முதலிய எதுவும் தடுக்காது. அவ்வளவு பெரிய இரகசியம் என்னிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. உமது உயிருக்கே உலை வைக்கக் கூடிய இரகசியம். யாரார் இன்று உங்களைப் புகழ்கிறார்களோ அவர்களே ஆளுக்கொரு கல்லெடுத்து வீசுவார்கள். உங்கள் தலைமீது.

நான் கூறுவதற்கு சரியான சாட்சியும் என்னிடம் இருக்கிறது. நீர் நமது பழைய நட்பை மனத்திலே எண்ணி, ஒரு பெண்ணை ஏய்ப்பது ஆண்மகனுக்கு அழகல்ல, நீதியல்ல என்பதை உத்தேசித்து, பழையபடி என்னுடன் சிநேகமாகி என்னை ரிஜிஸ்ட் கலியாணம் செய்து கொண்டால் இரகசியத்தை வெளியே சொல்ல மாட்டேன். உங்களுடைய தீர்மானமான பதிலை, பதினைந்து நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். பதில் வராவிட்டால், எனக்கு இரகசியத்தைக் கூறிய ஆளுடன், நான் பெரிய அதிகாரிகளைச் சந்தித்து பேசி உம்மைச் சந்திக்கு இழுக்கப் போகிறேன். இது சத்தியம். வீண் மிரட்டல் என்று எண்ண வேண்டாம். உங்கள் இரகசியத்தை எனக்குக் கூறி, என்னை இக்கடிதமும் எழுதச் சொன்னவர் மூலமாகத்தான் நீங்கள் பெங்களூரில் ஊரை ஏமாற்றப் போயிருக்கிற விஷயம் தெரிந்தது. என்ன இரகசியம், என்ன ஆபத்து, ஏன் இவள் அப்படி மிரட்டுகிறாள் என்று யோசித்துக் கொண்டே பொழுதை ஓட்டி விட்டு பிறகு ஆபத்திலே சிக்கிக் கொள்ள வேண்டாம் எனக்கு உண்மையிலேயே உங்கள் இரகசியம் தெரிந்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளச் சூட்சுமமாக இரண்டு வார்த்தைகள் எழுதுகிறேன். இதிலிருந்தாவது தெரிந்து கொள்ளும், எனக்கு உங்கள் இரகசியம் தெரிந்துதான் இருக்கிறது என்பதை “குமார் - வெடிகுண்டு.”

இப்படிக்கு
ஜெயா.

கடிதத்தைப் பார்த்ததும், பார்வதி பயந்து போனாள். குமார்! வெடிகுண்டு! இரகசியம்! பார்த்திபனுக்கு ஆபத்து! இது என்ன புதிர் என்று திகைத்தாள்.

“பார்வதி! யாரோ ஒரு பைத்தியக்காரி எழுதிய கடிதத்தைக் கண்டாதிகில் கொள்கிறாய்?” என்று பார்த்திபன் கேட்டுவிட்டுச் சிரித்தான். ஆனால், சிரிப்பிலேயும் கூடத் தெரிந்தது. அவனும் திகில் அடைந்திருந்தது. பார்வதி, லலிதகுமாரியை நோக்கி “ஆமாம், இந்தக் கடிதம் எப்படி உனக்குக் கிடைத்தது?” என்று கேட்டாள்.

“அது ஒரு வேடிக்கை பார்வதி! பார்த்திபன், லலிதபவன், பெங்களூர் என்ற விலாசமிட்டுக் கடிதம் வந்தது. இந்த விடுதியின் பெயர் லலிதபவன். தபால்காரன் லலிதா என்ற பெயரைக் கண்டதும் என்னிடம் கொடுத்துவிட்டான். எனக்கு வந்த கடிதம் என்று எண்ணிக் கொண்டு நானும் தவறுதலாகப் பிரித்தேன். ருசியாக இருந்ததால் படித்தேன். பார்த்திபன் விஷயமாக இருக்கவே உன்னிடம் தர நினைத்தேன். நீ இங்கு வந்திருக்கிற விஷயம் தெரிந்து இங்கு வந்தேன்” என்றாள்.
“நல்ல வேலை செய்தாய்” என்று புன்சிரிப்புடன் கூறி விட்டுப் பார்வதி, பார்த்திபனை நோக்கி, “குமார் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குமார் விஷயமாகக் கிடைத்த தகவல் திகிலூட்டக் கூடியதாக இருந்ததால் பார்வதி திகைக்க லுற்றாள். குமாருக்கும் வெடிகுண்டுக்கும் என்ன தொடர்பு? குமார் -வெடிகுண்டு. இவைகளுடன் பார்த்திபனின் பெயர் இணைத்துப் பேசப்படும் காரணம் என்ன? ஒருவேளை, பார்த்திபன் குமாரை வெடிகுண்டினால் கொன்று விட்டிருப்பானோ? ஜெயா கூறும் இரகசியம் இதுதானோ? உன் உயிருக்கே ஆபத்து விளையும் இரகசியத்தை வெளியிட்டால் என்று ஜெயா கடிதம் எழுதியிருப்பதன் பொருள் இதுதானா? அநியாயமாகக் குமார் இறந்தானா? என்றெல்லாம் பலப்பல எண்ணினாள் பார்வதி. பார்த்திபன் மர்மத்தை விளக்கிக் கூறும்படி கேட்கவில்லை.

பார்த்திபனோ முதலில் ஏற்பட்ட திகிலை விரட்டிவிட்டு எதற்கும் துணிந்தவனாகக் காணப்பட்டான். மனச்சஞ்சலமே துளியுமற்றவன் போலச் சிகரெட்டு எடுத்து சாவதானமாகப் பற்றவைத்து, ஒய்யாராமாக அதைப் பிடித்துக் கொண்டே சாய்வு நாற்காலியிலே அலங்காரப் பொம்மை போல வீற்றிருந்தான். துக்கமும், பயமும் துளைத்திட நின்ற பார்வதி, “குமார் எங்கே? அவர் உயிருக்கு ஆபத்து நேரிடவில்லையே?” என்று பார்த்திபனைக் கேட்டாள். கண்களிலேயே நீர் தளும்பிற்று பார்வதிக்கு. பார்த்திபன், “நான் ஒரு பத்திரிகை ஆசிரியன். ஆரூடக்காரனல்லவே” என்று பதிலளித்தான். ‘கடிதம் கிடைத்தால் என்ன, என் தலை போய்விடுமா? நான் எந்த எதிர்ப் புக்கும் அஞ்சமாட்டேன். என்னை யாரும் அசைக்க முடியாது” என்று பார்த்திபன் கூறவில்லையேயொழிய, அவனுடைய பார்வையும் பேச்சின் தன்மையும் அவன் மனப் போக்கை எடுத்துக் காட்டிவிட்டன. ஜெயாவின் கடிதத்தை எப்படியாவது பார்வதியிடமிருந்து பறித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். சமயத்தை எதிர்நோக்கியபடியே இருந்தான்.

“குமார் எங்கே இருக்கிறார்?”

“பார்த்திபா! பழைய சிநேகத்துக்காவது பதில் கூறு. குமார் எங்கே?”

“ஒரு பெண் உன் எதிரிலே நின்று கெஞ்சுகிற பரிதாபத்தைப் பார்த்தாவது பதில் சொல்லக்கூடாதா? குமார் உயிரோடு இருக்கிறாரா?”

“அவன் இரக்கமற்ற காதகன் பார்வதி! ஏன் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாய். வா! ஜெயாவிடம் போவோம். அவளோடு சேருவோம். இவனை ஒரு கை பார்ப்போம்” என்று லிலிதாகுமாரி கூறினாள். பார்த்திபன் பார்வதியின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்த ஆணவத்தைக் கண்டு, ஆத்திரங் கொண்டு.

புருவங்களை நெறித்தான்; புன்சிரிப்புடன் லலிதகுமாரியைப் பார்த்தான் ஒருமுறை; சிகரெட் நுனியிலே சேர்ந்த சாம்பலைக் கீழே தட்டினான்; மீண்டும் அதனைப் பிடிக்கத் தொடங்கினான். பார்த்திபன், அவ்வளவு அலட்சியமாக இருந்தான்!

பார்த்திபன், எதனால் இவ்வளவு தைரியமானான்? ஜெயாவின் கடிதத்தைக் கண்டு முதலிலே பயந்தவன், பிறகு எப்படித் திகிலை நீக்கிக் கொள்ள முடிந்தது? உண்மையிலே ஜெயா எழுதிய கடிதம் மிரட்டல் என்று கருதுகிறானோ? ஜெயாவின் கடிதம் பிறரிடம் சிக்கியது தெரிந்தும், அவ்வளவு அலட்சியமாக இருக்கக் காரணம் என்ன? பார்வதிக்கும் லலிதகுமாரிக்கும் இந்தப் பலத்த சந்தேகங்கள்?

“நாங்கள் போக வேண்டியதுதானா?” என்று கேட்டாள் பார்வதி.

“நாடகம் முடிந்துவிட்டால், போகலாம்” என்று நையாண்டி செய்தான் பார்த்திபன்.

“கூத்தாடுவது அவளல்ல! உன் மண்டைப் புழு கூத்தாடு கிறது!” என்று கடிந்துரைத்தாள் லலிதகுமாரி. சிரித்துவிட்டுப் பார்த்திபன், “பார்வதி மாநாட்டிலே வீரரசம் சொட்ட நடித்துக் காட்டினாய். இங்கே லலிதா வருவதற்கு முன்னம் காதல் ரசத்தைக் கொட்டி சிருங்கார நாடகம் நடத்தினாய். இதோ இப்போது சோகரசம் சொட்டுகிறது. இன்னும் ஏதாகிலும் நடிப்புத் தெரிந்தால் நடக்கட்டும். இல்லையானால் போய்வா. உன் நாடகத் திறமையை நான் மெச்சுகிறேன். நவரச மல்லிகா என்ற பட்டம் சூட்டுகிறேன்” என்று கூறினான். அடக்கி வைத்திருந்த கோபம் மெள்ள மெள்ள வெளியே வரத் தொடங்கிற்று. அவசர அவசரமாக மற்றொரு சிகரெட்டைப் பற்ற வைத்துப் பிடித்தான். மௌனமாகப் பார்வதி இருக்கக் கண்டான். “ஏன் மிஸ் பார்வதிபாய்! ஏதாகிலும் பரிசு, மெடல் கிடைக்குமென்று எதிர்பார்த்து நிற்கிறாயா? தேவையானதைக் கேள். தருகிறேன்” என்றான்.

“லலிதா! எவ்வளவு அருமையான கட்டத்திலே நீ புகுந்தாய் தெரியுமா? அந்த அழகான இதழை நான் சுவைக்க இருந்த நேரத்திலே...” என்று கூறிக் கொண்டே பார்த்திபன், நாடகத்தில் ராஜபார்ட் போலப் பாட ஆரம்பித்தான் மெல்லிய குரலிலே.

“சீ! துஷ்டா! பெண்களிடம் வீரம் பேசும் பேடி நீ. பார்வதி! வா, போவோம். இவனுக்கு அழிவுகாலம் நெருங்கிக் கொண்டி ருக்கிறது. ஆணவம் கண்களை மறைக்கிறது. பழிபாவத்துக்கு அஞ்சாதவன். பாவையரின் உள்ளத்தை வேக வைப்பவன். பாமரரை வஞ்சிப்பவன்” என்று கூறிப் பார்த்திபனைக் கண்டித்து விட்டு, லலிதா சோர்ந்து கிடந்த பார்வதியை அணைத்தபடி நின்றாள்.

“பேஷ்! அருமை! அருமை! லலிதா நீ கூட ஒரு பிரசங்கியாகி விடலாம். பார்வதியைத் தோற்கடித்து விட்டாயே! எவ்வளவு வீரம், தீரம், கெம்பீரம்! இப்படித்தான் பேச வேண்டும்” என்று கூறிக் கேலி செய்து கொண்டே பார்த்திபன், ஒரு சிகரெட்டை எடுத்து லேடி டாக்டரிடம் நீட்டி, “உனக்குப் பரிசு! முதல்தரமான சிகரெட்” என்று கூறினான்.

அந்தப் பேச்சு முடிவதற்குள் லேடி டாக்டரின் பூட்சு அணிந்த கால், பார்த்திபனுடைய மார்புக்கு வெகு சமீபத்திலே பாய்ந்தது! ஒரு நிமிடம் திகைத்தான் பார்த்திபன். உடனே சமாளித்துக் கொண்டு, “லலிதா! மஞ்சத்திலே இதுபோலச் செய்திருந்தால் நான் கொஞ்சமும் சஞ்சலமடைந்திருக்க மாட்டேன். இப்போது மட்டும் என்ன? எனக்கு ஒருவிதமான இன்பமாகத்தான் இருந்தது” என்று கூறினான். இனி அங்கிருப்பது தகாது என்று இருவரும் தீர்மானித்து அறையை விட்டு வெளியே செல்லக் காலடி எடுத்து வைத்தனர்.

“ஒரு நிமிஷம், உயர்குணச் சீமாட்டிகளே! ஒரு நிமிஷம் நில்லுங்கள். அந்தக் கடிதத்தைக் கொடுங்கள். அது எனக்கு வந்தது” என்று கேட்டான்.

“தர முடியாது” என்றாள் பார்வதி.

“ஓகோ! அதிலேதான் என் மர்மம் எழுதப்பட்டிருக்கிறது. அதைத் தருவாயா? அதைக் கொண்டுதானே என் உயிரைத் தொலைக்க முடியும். உன் காதலன் குமாரையும் பெற முடியும். அப்படிப்பட்ட அருமையான மந்திர ஓலையை இழக்க உனக்கு மனம் வருமா? சரி! உன்னிடமே இருக்கட்டும் அந்தக் கடிதம். ஜாக்கிரதையாகப் பெட்டியிலே வைத்துப் பூட்டிவிடு! எங்காவது போய்விடப் போகிறது” என்று கூறினான். அவன் பேச்சு அர்த்தமற்ற உளறலாக இருப்பது கண்டு பார்வதியும் லலிதகுமாரியும் சிரித்தனர்.

“கடிதம் ஓடிவிடுமா?” என்று கேட்டனர்.

“ஓடுமா என்றா கேட்கிறீர்கள்? முட்டாள் சிறுக்கிகளே! அது ஓடிப்போய் நெடுநேரமாகி விட்டது. உங்களுக்குத் தெரிய வில்லை” என்று கூறினான் பார்த்திபன்.

“என்ன, இவனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. பார்வதி! கடிதம் உன்னிடம் இருக்கிறதல்லவா? என்று கேட்டாள் லலிதா.

“இதோ!” என்று கூறிக் கொண்டே கடிதத்தைப் பார்வதி லலிதாவிடம் கொடுத்தாள்.

“ஓடிவிட்டதாம் ஓடி” என்று கூறிக் கொண்டே கடிதத்தைக் காட்டினாள் பார்த்திபனுக்கு. உரத்த குரலிலே அவன் சிரித்தான். பார்வதி “ஆ!” என்று அலறினாள். லலிதகுமாரியின் கரத்திலே இருந்த கடிதத்திலே ஒரு எழுத்துக் கூட இல்லை. லலிதகுமாரியும் இந்த அதிசயத்தைக் கண்டாள். ஒன்றும் புரியவில்லை. கடிதத்தை அவன் எடுத்துக் கொண்டது தந்திரமாக இருந்தாலும், வேறு ஒரு வெறுங் காகிதம் பார்வதியிடம் இருக்கக் காரணம் என்ன மந்திரமா? என்று திகைத்தனர் இருவரும். பார்வதியும் லலிதகுமாரியும் அந்தக் கடிதத்தை மாறி மாறிப் பரிசோதித்துப் பார்த்தனர்.

“திகைக்க வேண்டாம் தோழியர்களே! ஜெயா அனுப்பி வைத்த கடிதமேதான் உங்களிடம் இருப்பது; அதனை எடுத்துக் கொண்டு வேறு வெறும் காகிதத்தை நான் தந்துவிடவில்லை. கடிதம் இருக்கிறது உங்களிடமே. ஆனால் அதிலே அவள் எழுதினாளே அவை ஓடிவிட்டன. “சூ! மந்திரகாளி! மாயக்காளி! ஓடிப்போ!!” என்று மந்திர உச்சாடனம் செய்தேன். எழுத்துக்கள் மாயமாக போய்விட்டன. அவ்வளவுதான் இனி நீங்கள் போகலாம். ஏமாற்றமடைந்த ஏந்திழைமார்களே! என் பாதையிலே குறுக்கிட்டுப் பாழாக வேண்டாம். புத்தியோடு பிழையுங்கள்” என்று உபதேசகர் போலப் பேசினான் பார்த்திபன்.

“கடிதம் இல்லாமற் போனாலென்ன? ஜெயாவிடம் போவோம் வா” என்று கூறிப் பார்வதியின் கரத்தைப் பற்றி இழுத்தாள் லலிதா.

“ஏன்! கடிதத்திலே இருந்த எழுத்து மறைந்தது போல, ஜெயாவும் மறைந்து போய்விட்டால்...?” என்று கூறிக் கொண்டே சிரித்தான் பார்த்திபன்.