அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
13
               

அச்சுத் தொழிலாளர் மாநாட்டுச் செயலாளர் என்று கூறப்பட்ட ஆறுமுகம் என்பவனைக் கம்பவுண்டர் அழைத்து வந்து பார்வதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான். ஆறுமுகத்தின் நடையுடை பாவனையே ‘அம்பக்’ என்ற பட்டம் அவனுக்கு உரித்தானது என்று காட்டிற்று.

ஆறுமுகத்தைக் கண்டதும், பார்வதிக்கு அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பது விளங்கிற்று என்ற போதிலும் அவனுடன் பேசி, மேலும் பல தகவல்களைத் தெரிந்துக் கொள்ள விரும்பினாள். எப்படி எப்படிப் பேசுவார்களோ அதற்கேற்றபடி பேசுவதுதான் ஆறுமுகத்தின் வாடிக்கை. அதன்படியே அன்றையப் பேச்சு இருந்தது. பார்வதி, பல விஷயங்களைப் பற்றிப் பேசினாள். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்குத் தெளிவு உண்டு என்பதைக் காட்டிக் கொள்ள எண்ணினான், ஆறுமுகம் “தொழிலாளர்கள் விஷயத்திலே அக்கறை காட்டுபவர்களிடம் எனக்குப் பெருமதிப்புப் பிறப்பதுண்டு. பெங்களூருக்கு ஒரு காரியமாக வந்தேன். இங்கு அச்சுத் தொழிலாளர் மாநாடு நடைபெறப்போவதாக அறிந்து மகிழ்ந்தேன். இதனை யார் நடத்துவது என்று விசாரித்தேன். தங்கள் பெயரைக் கூறினார்கள். உடனே தங்களைக் காண வேண்டுமென்று விருப்பப்பட்டேன். தங்களுக்கு வேறு எத்தனையோ வேலையிருக்கும். நான் தங்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டேன்” என்று பார்வதி சம்பிரதாயமான உபசார மொழி புகன்றாள்.

ஆறுமுகம் மிக அலட்சியமாக, “ஒருவர் மதிக்க வேண்டும். புகழ வேண்டும் என்பதற்காக நான் ஒரு காரியமும் செய்வதில்øல். தொழிலாளர் பாவம். வாயில்லாத பூச்சிகளாக இருக்கிறார்களே, ஏதோ நம்மாலான உதவியைச் செய்வோம் என்ற கருத்தோடு தான் இந்த மாநாட்டை ஆரம்பித்தேன். உண்மையிலேயே, எனக்கு வேலை அதிகந்தான் என்றாலும், மாநாடு விஷயமாக யாரோ ஒரு மாது பேச விரும்புகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், போய்ப் பேசிவிட்டுத்தான் வர வேண்டும் என்று தோன்றிற்று. உங்களுடைய ஒத்துழைப்பும் மாநாட்டுக்கு வேண்டும்” என்று ஆறுமுகம் கூறினான். பிறகு இந்த உரையாடல் நடக்கலாயிற்று.

“பார்த்திபனைத் தங்கட்கு எவ்வளவு நாட்களாகத் தெரியும்?”

“கொஞ்ச நாடகளாகத்தான் ஏன்?”

“ஒன்றுமில்லை. தொழிலாளர்களின் மாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்களே, அவரைத் தங்கட்கு அதிகமாகத் தெரியும் என்று எண்ணினேன்.”

“இதிலென்ன இருக்கிறது? தலைமை வகிக்க யாரை அழைத்தால் என்ன? பொம்மை போல உட்கார வேண்டியது தானே? சகல காரியத்தையும் நான் கவனித்துக் கொள்ளப் போகிறேன். ஒப்புக்குத் தலைவர். இந்தப் பார்த்திபனிடம ஒரு பத்திரிகை இருப்பதால் அந்த ஆளை மாநாட்டுக்குத் தலைவனாக இருக்கச் செய்தால், பத்திரிகையிலே மாநாட்டுச் செய்தி அதிகமாக வெளிவருமல்லவா? அதற்காகத்தான் பார்த்திபனை இழுத்தேன்.”

“நல்ல தந்திரசாலி நீர். ஆனால் பார்த்திபனை நீர் உபயோகப்படுத்திக் கொள்ள விரும்புவது போலப் பார்த்திபனும் தன்னுடைய சொந்த விளம்பரத்துக்கு அந்த மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்...?”

“விரும்பட்டுமே, நமக்கென்ன நஷ்டம்?”

“நமக்கு ஒன்றுமில்லை. தொழிலாளரின் பெயரைக் கூறிக் கொண்டு, இப்படி ஒரு விளையாட்டுக் கூடாதே என்று கூறினேன்.”

“இதிலே விளையாட்டு என்ன இருக்கிறது? நான் தொழிலாளர் தோழன். பார்த்திபன் வேறு எவனோ, எந்தக் காரணத்துக்காகவோ மாநாட்டுக்கு உதவி செய்கிறான். அந்த உதவியை நான் தொழிலாளரின் நன்மைக்குத் தானே பயன் படுத்தப் போகிறேன்.”

“அது சரி, எல்லோரும் தங்களைப் போலவே நல்ல குணமுடையவர்களாக அமைவார்களா?”

“மகாநாட்டிலே தாங்களும் கலந்து கொள்ள வேண்டும். அன்று தங்கள் பெயருடன் ஒரு புது விளம்பரம் வெளியிட உத்தேசம்.”

“அதெல்லாம் வேண்டாம். நான் மாநாட்டுக்கு வருகிறேன். பேசுவதிலே எனக்குப் பிரமாதமான பயிற்சி கிடையாது. என் பெயரை விளம்பரப்படுத்த வேண்டாம்.

“பெண் தொழிலாளர்களைப் பற்றித் தாங்கள் ஒரு சிறு பிரசங்கம் செய்ய வேண்டும்.”

“எனக்குப் பிரசங்கம் செய்ய தெரியாது.”

“நான் சில குறிப்புகள் தருகிறேன். அதை வைத்துக் கொண்டு பேசிவிடலாம்.”

“தங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம். நான் மாநாட்டுக்கு வருகிறேன்.”

“ஆறுமுகம் இந்தப் பேச்சுக்குப் பிறகு நன்கொடையை எதிர்ப்பார்த்து நின்றான். கிடைக்கும் குறி காணாததால் வீண் வேலையாக முடிந்தது என்று சிரமப்பட்டான். ஒரு கப் காப்பி தான், அவன் கண்ட பலன்.