அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
3
               

பார்வதி, மிராசுதாரருக்கு மøனைவியாகச் சம்மதித்து அதற்காக நிபந்தனை கூறின பிறகு, வீட்டிற்கு சந்தோஷமாகத் திரும்பிய மிராசுதாரர், மாப்பிள்ளை போலக் காணப்பட்டார். பிறருக்கல்ல அவருக்கு அவர் எப்படித் தெரிந்தார்! நடையிலே புது முறுக்கு, கனைப்பிலே புது கம்பீரம் ஆடையைத் திருத்திக் கொள்வதிலே புதிய முறை. பேச்சும் சற்றுக் குஷியாக இருந்தது. நிலைக்கண்ணாடி முன் நின்றார் மீசையிலே சில நரைத்த மயிர்கள் இருக்கக் கண்டார். நாவிதனை மனதிற்குள் திட்டினார். குளிக்கும் அறை சென்றார். சதை கொத்துக் கொத்தாக தொங்குவதைக் கண்டார். அயம் என்றும் தங்கமென்றும் பவளமென்றும் முத்தென்றும் இந்தப் பயல்கள் செங்கல் தூளைத்தான் கொடுத்து நம்மை ஏய்த்து விடுகிறார்கள் என்று சித்த வைத்தியர்களைத் திட்டினார். மனைவியைக் கண்டார். இந்தச் சனியனை ஊருக்கு தொலைத்து விடுகிறேன். ஒரே வீட்டில் பௌர்ணமியும் அமாவாசையும் இருக்கலாமோ என்று மனதிற்குள் கூறிக் கொண்டார். தமயந்தியின் மஞ்சத்திலே படுத்தாரே தவிர பார்வதியின் உருவத்தையே அணைத்துக் கொண்டார், கனவில்.

மறுதினம் கலாரசிகர் கனகசபேசர் வந்தபோது ஆலால சுந்தரர் மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்றார். பார்வதி படித்தவள். பேச்சுக்காரி, நாமும் விஷயமறிந்தவன் என்று காட்டிக் கொள்ள வேண்டும்? அதற்குக் கனகசபேசர் உதவியாக இருப்பார் என்று எண்ணினார். இனிக் கனகசபேசரின் கலாப் பிரசங்கங்களைச் சரியாகக் கேட்டு விஷய ஞானம் பெறவேண்டும் என்று தீர்மானித்தார். ரசிகருக்கு மிராசுதாரரின் புதிய ஆர்வத்தின் காரணம் புலனாகவில்லை. செல்வ நிலையாமை, வாழ்வு நிலையாமை முதலியவற்றை விளக்கும் சில கவிதைகளை விவரிக்கத் தொடங்கினார். மிராசுதாரர், இன்பத்தைத் தரும் கவிதைகளே வாழ்க்கையிலே வளம் உண்டாக்கும் என்று விவாதிக்கத் தொடங்கினார். வழக்கத்துக்கு மாறாக, ஆலாலசுந்தரர் விவாதிக்கத் தொடங்கவே ரசிகருக்கு கொஞ்சம் சஞ்சலம் உண்டாக்கிவிட்டது. விவாதமே, விசாரந்தானே தரும். கலாரசிகர்களுக்கு. பேசும் வாய் உண்டே தவிர கேட்கும் செவி இராமே. கலையிலேயே மூழ்கிக் களிக்கும் ஏடுடையோருக்கு. கனக சபேசராகவேணும் இருக்கட்டும். வைரமணியாக இருக்
கட்டும். அவர்கள் வண்டி வண்டியாகத்தான் கொட்டட்டும் தங்கள் கல்வித் திறத்தை பார்வதியின் பேச்சுக்கு அவை ஈடாகுமா? அவள் போலப் பேச இவர்களால் முடியுமா? என்று ஆலாலசுந்தரர் கூறினார். இவர் மனத்தை இவ்வளவு கிளறிவிட்ட பார்வதி தனது ஜாகையிலே பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தாள்.

‘திருப்புகழ் இருக்கிறதே, அது திவ்யமான ஒரு கலை‘ என்று கனகசபேசர் பேச்சைத் தொடங்கினார். “முருகேச பக்தி ரசம் அதிலே நிரம்ப இருக்குமாம்” என்று ஆலாலசுந்தரர் வழி மொழிந்தார். நீண்ட நேரம் பேச வேண்டுமென்ற நினைப்புடனே கனகசபேசர், ஒரு முறை கனைத்துத் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு கூறலானார். “திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலிவாலே ஒருத்தரை மதிப்பதிலை உந்தன் அருளாலே.” “மிராசுதாரரே இதன் பொருள் மிக அழகுள்ளது. அபூர்வமான கருத்துடையது. கேளும்” என்றார். இதைக் கேட்க ஆலாலசுந்த
ரருக்கு மனமில்லை. பார்வதி பொழிந்த பதனி அவருக்கு பாடல்களும் அவைகளுக்குமுள்ள பொருளும், இரண்டாவது மூன்றாவது தரமானது என்ற எண்ணத்தைத் தந்து விட்டது. சலிப்பை அடக்கிக் கொண்டு கனகசபேசர் திருப்புகழுக்குக் கூறிய விருத்தியுரையைக் கேட்டுக் கொண்டிருந்தார். “போதும்” என்று கூற மனம் தூண்டிற்று. நிலைமை இடம் கொடுக்கவில்லை.
இந்தச் சமயத்திலே வந்தான் ஒரு பணியாள்; கடிதமொன்று தந்தான். பிரித்தார்; கையெழுத்தைக் கண்டார். கலாரசிகரை இன்று போய் நாளை வா என்றார். உள் அறைக்கு விரைந்து சென்றார். படித்தார் கடிதத்தை கடிதம் பார்வதி அனுப்பியது என்று கூறவும் வேண்டுமோ?

தாசி தமயந்திக்கு 10,000
குமாருக்கு 5,000
மோட்டார் டிரைவருக்கு 2,000
கடைக் கணக்கருக்கு 5,000
வியாபார ஏஜெண்டுக்கு 10,000
நகரசபைக்கு 50,000
எழைப்பிள்ளைகள் இலவசபடிப்புக்கு 50,000
அனாதை ஆசிரமத்துக்கு 20,000
விதவை சகாய நிதிக்கு 50,000

வேறு உமது இஷ்டப்படி!

இது பார்வதி அனுப்பிய பட்டியல், அதைப் பார்த்து மொத்தத் தொகையை கூட்டிப் பார்த்ததும்,மிராசுதாரரின் தலை சுழன்றது. இவ்வளவு பணத்தை இறைத்து இவளைப் பெறுவதா? என்று மனதிலே ஓர் எண்ணம் தாக்கிற்று. ஒரு முடிவுக்கும் வரமுடியாமால் பட்டியலைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதும், பார்வதியின் போட்டோவைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதுமாக அன்றெல்லாம் அவதிப்பட்டார். தமயந்தி வீட்டுக்கும் போகவில்லை.

“பார்வதியை மறுபடியும் பார்க்கக் கூடாது பார்த்தால் அவளுடைய சிரிப்பு என் சொத்தைச் சூறையடிவிடும். அவள் வற்புறுத்தினால் நான் தடை சொல்ல முடியாது. அவள் இந்த ஊரை விட்டுப் போகிறவரையி“ல நந்ன இங்கு இருக்கக் கூடாது. எவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது-? அதை இப்படிப் பாழாக்குவதா? கூடாது. முடியாது.” என்று மிராசுதாரரின் சுபாவம் அவருக்கு எடுத்துரைத்தது. விடியுமுன் ரயிலேறினார். கொடைக்கானலுக்குப் பார்வதி கிளறிய வெப்பத்தைத் தணித்துக் கொள்ள குளிர்ச்சியைத் தேடி மட்டும் கொடைக்கானல் போனாரா? இல்லை. ஆரஞ்சுப் பழ சீசன். அங்கிருந்தபடி அந்த வியாபாரத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையுந்தான் அவரை மலையுச்சிக்கு அனுப்பிற்று.

பார்வதியின் புன்னகையின் பொருள் பார்த்திபனுக்குத் தெரியாது. “ஏது, பார்வதி கிழவனுக்குக் குஷி பிறந்து விட்டதே. கொடைக்கானலுக்கு சீசனுக்கு போயிருக்கிறாராம்” என்று அவன் அவளிடம் சொன்னபோது பார்வதி சிரித்தாள்.