அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
5
               

“என்ன இருந்தாலும் பார்வதி எனக்கு நீ செய்த காரியம் பிடிக்கவில்லை.”

“எது பிடிக்கவில்லை?”

“நீ தப்பாக எண்ணிவிடாதே நீ ஏதோ மாநாட்டில் அந்தக் குமரனைப் பற்றிப் புகழ்ந்தது கேட்டு எனக்கொன்றும் பொறாமை இல்லை; அதற்காகச் சொல்லுகிறேன் என்று எண்ணிவிடாதே. உதவி நிதி திரட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தது தப்பு. முதல்தரமான முட்டாள்தனம்.”

“ஏனோ?”

“அவன் என்னதான் பேசினாலும் கையிலே காசில்லாத பேர்வழி”

“எனக்கு அது தெரியும். அவன் கையிலே காசும் இல்லை கருத்திலே தூசும் இல்லை.”

“பிரசங்கம் மாநாட்டிலே நடத்து பார்வதி. என்னிடம் வேண்டாம்.

“பிரசங்கம் உங்களுக்குத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. கையிலே காசு இல்லாவிட்டால் என்ன அவனுக்கு? என்னிடமும் கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே இனம்.”

“ஜோடி சேர்வதை நான் உணர்கிறேன்.’

“சேர்ந்தாலும் அது ஒரு பேரமாக இராது. அது என் சொந்த விவகாரம். பொதுக்காரியமாக இனிப் பேசுங்கள். அவன் நிதி வசூலித்தால் என்ன?”

“வசூலானதைத் தின்று ஏப்பமிட்டு விடுவானாம்.”

“ஒருநாளும் செய்யமாட்டான்”

“உலகமறியாது பேசுகிறாய். ஏட்டில் உள்ளதை எல்லாம் நாட்டிலே செய்துகாட்ட முடியாது.’

“உங்கள் ஏடு வேறு எண்ணம் வேறு; சொல் வேறு; செயல் வேறு; இது சகஜம் எனக்குத் தெரியும், அது.”

“நான் ஆரம்ப சூரனல்ல அது அவன்.”

“நீர் காரிய வீரர். நாளைக்குக் கமிட்டி கூட்டத்திலே குமார் நிதி வசூலிக்கக் கூடாது என்று நீர் தீர்மானம் நிறைவேற்றிவிடுமே என் முயற்சி தோற்றுவிடும். காட்டுமே அதிலே உமது தீர பராக்கிரமத்தை.”

“என்னைப் போருக்கு அழைக்காதே! உன் புன்னகைக்கு நான் பலியாகிவிடவில்லை.

“போக்கிரித்தனமாகப் பேசுகிறீர்! என் புன்னகை உம்மைப் போன்ற இமிடேஷன் வைரத்தைப் பெற உபயோகிக்கப்படவில்லை. உம்மை உண்மையான சமதர்மியாக்கும் முயற்சியே என் புன்னகை. அது பலிக்கவில்லை என்பது எனக்குப் புரிந்து விட்டது! அது கிடக்கட்டும். ஏழையை நம்பக்கூடாது என்று சொல்லக் காரணம்?”

“இது சொல்லவும் வேண்டுமா? காய்ந்த மாடு கம்பங் கொல்லையைக் கண்டதுபோல், பணத்தையே காணாதிருந்தவனிடம் ஏராளமான பணம் இருக்குமானால் சபலம் தட்டும். இவ்வளவு பணம் இருக்கும்போது நாம் ஏன் கொஞ்சம் சுகம் அனுபவிக்கக் கூடாது என்று ஆசை பிறக்கும். அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று தூண்டும் இச்சை மிகக் கெட்டது. பார்வதி!”

“சுருங்கச் சொல்வதென்றால், குமாரிடம் பணந்திரட்டும் பொறுப்பை ஒப்புவித்தால், அவன் கொள்ளையடிப்பான் என்று சொல்கிறீர்கள்.”

“நான் எப்பொழுதும் யாரையும், கடிந்துரைக்க மாட்டேன்.”

“ஆமாம்! அந்த நாசுக்கு வேறு யாருக்கு வரும்? சரி. மிஸ்டர் பார்த்திபா. விவாதத்திற்குப் பேசுவோம். ஏழைக்கு அந்த எண்ணம் வரக் காரணம் என்ன?”

“சுபாவத்துக்குக் காரணம் கூற முடியுமா?”

“நான் உம்மைக் கேட்பது, ஏன் ஏழைகளுக்கு மட்டும் அந்தச் சுபாவம் வருகிறது என்பது. அது தெரியுமோ உங்கட்கு?”

“நான் மனோதத்துவம் படிக்கவில்லையே, பார்வதி.”

“அந்தச் சுபாவம் பணக்காரத்தன்மை ஒருபுறமும் வறுமை மற்றோர்புறமும் இருப்பதால்தான் உண்டாகும். பனியிலே, குளிர் உண்டாகிறது. வெயில், உடல் எரிச்சலைத் தருகிறது. வறுமையும் அப்படித்தான். அதை அனுபவிப்பவர்களுக்கு வேதனை ஊட்டி, அவர்களின் சுபாவத்தை மாற்றுகிறது. தர்மப் பிரபுக்கள் என்று சிலரும் தரித்திரப் பூச்சிகள் என்று பலரும் இருக்கும் வரையில் சுபாவமும் அந்தப் பொருளாதார நிலைக்கு ஏற்றபடி தான் அமையும். அது குமாரின் குற்றமல்ல. மேலும் குமாரின் சமதர்மப் பற்று எவ்வளவு ஆழமானது என்பதை நீர் அறிந்து கொள்ளவில்லை.”

“ஓகோ!”

“அறிந்து கொள்ளாததற்குக் காரணமும் உமது நிலைதான். நீர் மலை உச்சியிலே நிற்கிறீர். மந்தகாசமாக வாழ்கிறீர். அவன் ஏழ்மை என்னும் மடுவிலே உழன்று வாடுகிறான். உமக்கு அவன் காரல் மார்க்சின் தத்துவங்களை விளக்கும் ஓர் நடமாடும் உதாரணம். வேற என்ன கண்டீர். அவனைப்பற்றி?”

“அவன் ஒரு பாக்கியசாலி, பார்வதி; எந்த ஆடவனுக்கும் இம்மியளவு கூட மனம் இளகாத நீ அவனுக்காக இவ்வளவு பரிந்து பேசுவதைப் பார்த்தால்...” சொல்கிறீர்கள்.”

“அவனிடம் நான் காதல் கொண்டிருப்பதாக உமக்குத் தோன்றும்! ஆனால் உண்மை அது மட்டுமல்ல. இனம், இனத்தோடு சேரும்! இன இயல்பு சுலபத்தில் போகாது; சீமானின் சமதர்மப் பிரசாரம், ஓய்வுநேர உல்லாசம். ஏழைக்கோ அது ஒன்றுதான் வாழ்க்கைத் தோணி.”

“சமதர்மம் என்றால், சாவடியில் தூங்குபவனிடம் பொருளை வாரிக் கொடுப்பதல்ல.”

“சமதர்மம் அதுவாகுமா? அது சிங்காரச் சீமான்கள் தலைவர்களாகிவிட, மக்களை மயக்கும் தாலாட்டு, நீலாம்பரி இராகம்! அதுவும் நானறிந்ததே. ஆனால் உண்மைச் சமதர்மிகள் உங்கள் நீலாம்பரியை நிலையற்றதாக்கி விடுவார்கள். அந்த உறுதிதான் எனக்கு வழிகாட்டி.”

“லெனினுக்குச் சுவீகாரப் பெண்ணல்லவா நீ.”

“இனி உமக்கு லெனினும் பிடிக்காது. மார்க்சும் பிடிக்காது. சமதர்மப் பருவத்தை நீர் கடந்து விட்டீர். இனிச் சீமான்களின் இரட்சகராகலாம். பார்த்திபா, உன் பகல் வேடம் இவ்வளவு விரைவில் கலைந்து விடும் என்று நான் நினைக்கவில்லை.

“பார்வதி! இனி நமக்குள் பேச்சு முடிந்தது. எனக்காக நீ காத்துக் கொண்டிருக்கத் தேவையுமில்லை. குமரனை மணாளனாகக் கொண்டு...”

“தரகு வேலையோ, ஆரூடமோ உமக்கு வேண்டாம்.”

“பிச்சைக்காரச் சிறுக்கி, யாரடி தரகன்? இத்தனை வருஷங்களாக என் சொத்தைத் தின்றதுமின்றி, என்னை என் பங்காளவிலேயே வந்திருந்து திட்டவும் துணிந்துவிட்டாயா? கெட் அவுட், போ வெளியே.”

பார்வதி வெளியே போய்விட்டாள்! வேலால் தாக்குண்ட வேங்கைபோல் இருந்தாள். குமாரைக் காணவும் விரும்பவில்லை. விஷயம் தெரிந்தால் விபரீதமாகுமென்று, மலையடிவாரம் வந்தாள். அந்த நேரத்தில் எந்த ஊருக்கு இரயில் புறப்படுகிறதோ அந்த ஊர் போவது என்று. கோபமும் கவலையும் கொண்ட முகத்துடன் ஸ்டேஷனுக்கு வந்த பார்வதியை, மாநாட்டிலே கண்டவர்களில் சிலர், அங்கே சந்தித்து உபசாரம் செய்தனர். “மெட்ராசுக்குத்தானே!” என்று ஒரு தோழர் கேட்டார். “ஆமாம்” என்று பார்வதி சொல்லி முடிப்பதற்குள் டிக்கட் வாங்க ஓடினார். வண்டியும் வந்தது. டிக்கட்டைப் பார்வதியிடம் கொடுத்து, பணம் தர வந்ததையும் மறுத்துவிட்டுப் “பார்வதி அம்மைக்கு ஜே!” என்று சந்தோஷத்தால் கூவினான் அந்தத் தோழன். அந்தக் குரலுக்குத் துணையாகப் பல கிளம்பின.

இத்தகைய அன்பு கனிந்த உள்ளம் கொண்ட உத்தமர்கள் இருக்கும்வரையில், பார்த்திபன் போன்ற பகல் வேடக்காரரின் சூது பலிக்காது. பாட்டாளி மக்கட்கு, இனிப்பயமில்லை என்று எண்ணிப் பூரித்தாள். பார்த்திபனின் சுடுசொல் அவள் மனதைப் புண்ணாக்கிற்று. அதை ஆற்றும் மருந்தை அந்தத் தோழன் அளித்தான்.

புகையைக் கிளப்பிக் கொண்டு ரயில் கிளம்பியது. இரு கையையும் கூப்பி புன்னகையுடன் பார்வதி கும்பிட்டாள். அந்தத் தோழர்களும் பதிலுக்குக் கும்பிட்டனர். அவள் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் கிளம்புவானேன் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். கன்னத்திலே நீர் பட்டது கூடப் பார்வதிக்குத் தெரியவில்லை. சென்னை சென்று தன்னுடன் கல்லூரியில் படித்து, உபாத்தியாயினியாக இருந்து வந்த உத்தமி என்ற தோழியின் விடுதியிலே தங்கினாள். ஏதோ கவலையாக இருக்கிறாள் என்பதுதான் உத்தமிக்குக் தெரிந்தது. விவரம் கூறப் பார்வதி மறுத்துவிட்டாள்.

ஒருவாரம் ஓய்வும், உத்தமியின் உபசாரமும், பார்வதிக்கு மன நிம்மதியைத் தந்தன. ஆனால் அவள் திடுக்கிடவும், திகில் படவுமான செய்தியொன்று பத்திரிகையிலே கண்டாள்.

அபேதவாதியின் அதிக்கிரமம்!

50,000 ரூபாயுடன் ஆசாமி மறைந்தான்!

“குமார்” ஏழை பெயரைக் கூறி, அடித்த கொள்ளை!

என்ற கொட்டை எழுத்துத் தலைப்புகளின் கீழ், “கொடைக் கானலில் தீவிரவாதிகள் மாநாடு நடந்தபின், ஏழைகள், கஷ்ட நிவாரண நிதிக்காக ஏறக்குறைய ஐம்பதாயிரம் ரூபாய் வரை நன்கொடை வசூலித்த குமார் என்ற அபேதவாதி திடீரென்று எங்கோ ஓடிவிட்டான். நிதி வசூல் விஷயமாகக் குமாருக்கு உதவிசெய்த பார்த்திபன் என்ற தோழர் குமாரைத் தேடித் தேடி அலுத்துப் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக் கிறார். போலீசார் புலன் விசாரித்து வருகின்றனர்.”
இந்தச் செய்தி பார்வதியைத் தூக்கி வாரிப்போட்டது. பார்த்திபன் எச்சரித்ததற்கும், குமார் காணாமற் போனதற்கும் சரியாக இருக்கிறதே என்று திடுக்கிட்டாள். அந்த நேரத்தில் பார்த்திபனிடமிருந்து ஒரு தந்தி வந்தது.

“குமார் விஷயம் சொன்னபடி நடந்தது.”

பார்வதி, தந்தியைக் கசக்கிக் கீழே வீசினாள். “என்னவோ சூது நடந்திருக்கிறது. குமார் ஒருகாலும் மோசம் செய்திருக்க மாட்டான். நான் நம்பமாட்டேன்” என்று வாய்விட்டுக் கூறிக் கொண்டாள். கோபத்துடன் ஓர் கடிதம் எழுதினாள் பார்த்திபனுக்கு.

திருவாளரே!
தந்தி கண்டேன். பத்திரிகையிலும் செய்தி பார்த்தேன். குமாருக்கு இந்தப் பழியைச் சுமத்த யாரோ பாதகர் வேலை செய்திருக்கிறார்கள் என்றே நான் நிச்சயமாகக் கூறுவேன். ஏன்? உண்மையை மறைப்பானேன்? குமார் எங்காவது அடைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் - கொலையே நடந்துவிட்டு மிருக்கலாம். இரண்டிலே எது நடந்திருப்பினும் நீரே காரணம் என்று நான் கூறுவேன். இவ்வளவு விரைவில் நீர் வஞ்சகராகி அந்தத் துறையிலே இவ்வளவு பாண்டியத்தியம் பெறுவீர் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. உமது திறமையைக் கண்டு ஆல்கபோன் கூடப் பொறாமைப்படுவார்.
- பார்வதி

கடிதம் கண்டேன். காதற்பித்தம், குளறுகிறாய். பழைய நேசத்தை நினைத்து மன்னித்தேன். நீ பரிதாபத்துக்குரியவள்.
- பார்த்திபன்.

என்ற தந்தியைக் கொடுத்தான், பார்த்திபன், பார்வதிக்கு. பித்தம் பிடித்தவள் போலானாள் பார்வதி. பத்திரிகை வந்ததும் அவசர அவசரமாகக் குமார் விஷயமாக ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று பார்ப்பாள். ஒன்றும் வெளிவராதது கண்டு கோபங் கொள்வாள். “என்ன செய்கிறது போலீஸ் டிபார்ட்மெண்ட்” எனச் சலித்துக் கொள்வாள். உலகிலே நடைபெற்று வந்த வேறெந்த நிகழ்ச்சியையும் படிப்பது மில்லை. குமார்! குமார்!! - அவள் நெஞ்சத்திலே இந்த ஒரு எண்ணந்தான் ததும்பிக் கொண்டிருந்தது.

குமார் காணாமற் போய்விட்ட, பார்வதியின் மனதை மட்டும் கலக்கிடவில்லை. பாட்டாளி உலகையே ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது “எவனாவது கள்ளனிடம் சிக்கி விட்டானோ? காட்டு வழியாய்ப் போய்த் துஷ்ட மிருகங்களிடம் அகப்பட்டு இறந்தானோ! உண்மையிலேயே மோசம் செய்துவிட்டானோ!” என்று பலப்பல எண்ணிப் பலவிதமாகப் பேசினர் பாட்டாளி மக்கள். “ஏழைகளின் கஷ்டத்தைப் பற்றிக் கண்ணீர் விடுவதும் கர்ச்சிப்பதும் கடைசியில் இந்த மாதிரி கொள்ளை அடிக்கத் தான்” என்று முதலாளிகளின் ஏஜண்டுகள் தொழிலாளரிடையே தூபமிட்டனர். பல தொழிலாளர் சங்கங்களிலே, “வரவு செலவு கணக்கு வெளியிடு’ என்ற கோஷம்! “அதற்காக வசூல் தொகை எங்கே? அந்த விழாவுக்கு ஏன் அவ்வளவு செலவு?” என்ற கேள்விகள். சங்கத்தைச் சுயநலத்துக்குப் பயன் படுத்துபவர்கள் யாரார் என்று சோதனைகள். கண்டனங்கள் பிறந்தன. சங்கமும் வேண்டாம். இந்தச் சங்கடமும் வேண்டாம் என்ற சலிப்புப் பேச்சு பரவிற்று. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தோழர்கள், நிபந்தனையும் பேசாது தொழிலுக்குத் திரும்பினர். தொழிலாளர் தலைவர்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. பார்த்திபன் ஒருவன்தான், மேடைமீது பேச அனுமதிக்கப்பட்டு வந்தான். “எப்படியும் உங்கட்குத் துரோகம் செய்தவனைக் கண்டுபிடித்து கூண்டிலடைப்பேன். கவலைப்படாதீர்கள். முதலாளி உலகம் நமது நிலைமை கண்டு பரிகாசந்தான் செய்யும் என்ன செய்வது!” என்று போதித்தான். புண்பட்ட மனத்துடனிருந்த தோழர்கள் துயரத்தையும் மறந்து பார்த்திபனுக்குப் பூமாலை சூட்டுவர். “தீவிரமான பேச்சைப் பேசுவது எளிது; ஆனால், பார்த்திபனைப் போல் தொழிலாளருக்குத் துயரம் வருகிறபோது, முன்வந்து வழிகாட்டும் தலைவர்கள் கிடைப்பது கஷ்டம்” என்று பத்திரிகைகள் எழுதின. பார்வதி படித்து விட்டு, “பார்த்திபன், முதலாளி உலகத்துக்குத் தரகனாகி விட்டான்” என்று தீர்மானித்தாள்.
வாரங்கள் போயின; மாதங்கள் மறைந்தன; ஓராண்டு கழிந்தது; குமாரைப் பற்றிய தகவலே காணோம். பார்வதியின் மனம் உடைந்து விட்டது. பொதுவாழ்விலும் வெறுப்புண்டாகி விட்டது. ஏதேனும் வேலைக்குப் போகத் தீர்மானித்தாள். “சிங்கார புரி பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே டைப்பிஸ்டு வேலை காலியாகிறது” என்று உத்தமி சொன்னாள். சோகத்தையும் மறந்து, பார்வதி சிரித்துவிட்டு “எனக் கேற்ற இடந்தானடி உத்தமி” என்று சொல்ல, கேலிக்குப் பேசுகிறாள் என்று உத்தமி நினைத்தாள். அடுத்த வாரம் பார்வதி டைப்பிஸ்டு ஆனாள். பைத்தியக்காரச் சாலையிலே ஒவ்வோர் நாளும், அங்கே காணும் காட்சிகளை உத்தமியிடம் கூறுவாள். ஒரே சிரிப்பு உத்தமிக்கு. “நீ சிரியடி உனக்கெக்க ஒரே குஷி! அங்கு வந்து அந்தக் கண்றாவியைப் பார்த்தால்தானே தெரியும்?” என்று கூறுவாள், பார்வதி. “ஒரு சங்கீதப் பித்தன் இருக்கிறான். அவன் என்னமாப் பாடுகிறான் தெரியுமா? பாடிக் கொண்டே இருப்பான்.” உடனே “டே சரியாகப் பத்துக் கீர்த்தனம் தெரியாத பசங்களெல்லாம் வித்வான்களாயிட்டிங்களா? தாளம் தெரியுமாடா, உங்களுக்கு? வேதாளந்தானே தெரியும். உங்க கூட்டத்திலேயா நான் சேருவேன். அபசுரக் குடுக்கைகளே! தூ, எனக்கு வேண்டாம் உங்கள் உறவு, போங்கடா வெளியே” என்று இரும்புக் கம்பிகளைப் பார்த்துப் பேசுவான். “போடுடா துரிதகாலத்திலே, கால் இடம் வை. உம்! பார்ப்போம்” என்பான் ஒரே அமர்க்களந்தான். ஒரு குஸ்தி பயில்வான் தெரியுமா. தலைகீழாய் நிற்பான் அரை மணி நேரம். முண்டாவைத் தட்டித் தட்டிக் காட்டிக் கொண்டே “இரும்புடா இது, வெறுங் கறியல்ல! எத்தனை ஆயிரம் தண்டால், பஸ்கி போட்டிருக்கேன். எவ்வளவு தெருச்சண்டை கண்டேன். ஒரு பயல் வருவானா என்கிட்ட, கன்போட்ஜாக் முடியாதென்று சொல்லி ஓடிவிட்டானே! காமாவுக்குக் கடுதாசி போட்டேன். பதிலே கிடையாது; பாரேன், எண்ணு. எத்தனை பஸ்கி போடுகிறான் பார்!” என்று பேசுவான். பஸ்கி போட்டபடி! மற்றும் பலரகம். அடி! உத்தமி பெரும்பாலானவர்களின் மூளை குழம்பியதற்குக் காரணம் வறுமை! பைத்தியக்காரச்சாலை அதன் விளைவு! கோர்ட்டு, போலீஸ், சிறை, தூக்குமேடை போல், பைத்தியக்காரச் சாலையும், வறுமையயை ஒழிக்காததால் இருக்க வேண்டி நேரிட்ட இடங்கள், மூலத்தை முறியடிக்காமல், மேல் பூச்சு இவைகள், பலிக்காது!” என்று கூறுவாள்.

“நீ இதையெல்லாம் பார்த்து, உன் மனதை வேறு குழப்பிக் கொள்ளாதே.வேலையில்லாத நேரத்திலே ஏதாவது கதைப் புத்தகத்தைப் படித்துத் தொலை ஏண்டி, பார்வதி நீ ஏன் இப்படி ஊரார் விஷயமாகவே எண்ணி எண்ணி உன் மனதைக் குழப்பிக் கொள்கிறாய்? உலகிலே அக்கிரமமும் அநீதியும் இன்று நேற்றா முளைத்தன? அது நெடுநாளைய நோய். எந்த மருந்துக்கும் கட்டுப் பட்டதில்லை; மருத்துவர்களே மனம் மருண்டார்கள். நீயோ பேதை, உன்னாலா உலகைச் சீர்திருத்த முடியும்? போடி, போ, ஏதோ உழைத்தோம், வாழ்ந்தோம். நம் வரையிலே நாணயமாக நடந்து கொண்டோம் என்ற அளவிலே நமக்கு இலட்சியம் இருக்க வேண்டும். மழை பெய்யும்போது ஊருக்கெல்லாம் குடை பிடிக்க முடியுமா?” என்று உத்தமி புத்தி கூறுவாள்.

“உத்தமி! உன்னுடைய வாழ்க்கை இலட்சியம் எவ்வளவோ மேல்! இந்த உலகிலே நாணயம் என்பது பற்றிக் கனவிலும் எண்ணாமல் தன் வாழ்வு தவிரப் பிறிதொன்றையும் கருதாதுள்ள பேயர்கள் கோடிகோடி மானைத் தின்று புலி கொழுப்பது போல ஏழையின் உழைப்பை உறிஞ்சி முதலாளி கொழுக்கிறது யாருக்குத் தெரியும்? ஈவு இரக்கம், தயவு தாட்சண்யம் என்பவைகளை படுபாதாளத்திலே போட்டு விடுபவர்கள்தான், நாலு அடுக்கு ஐந்து அடுக்கு மாடியிலே உலவுகிறார்கள். நமக்கென்ன என்று இருக்க இந்த உண்மையை உணர்ந்த பிறகு. எப்படியடி மனம் இடங்கொடுக்கும்? தொட்டிலிலே தூங்கும் பாலகனைப் கொட்டிடத் தேள் போனால், தேளை அடிக்கா திருப்பது நியாயமா?” என்று பார்வதி வாதிடுவாள்.

“உன்னோடு யாரடி பேசுவார்கள்? நீ ஊர் சுற்றியவள். போய்ப் படு” என்று உத்தமி கூறிவிடுவாள். ஆனால் இரவு வெகு நேரம்வரை பார்வதியின் பேச்சுத்தான், உத்தமியின் மனத்திலே மிதக்கும்.