அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
14
               

மாநாடு ஆடம்பரமாக ஆரம்பமாயிற்று. யானை குதிரையுடன் ஊர்வலம். தலைவர்களின் கழுத்து நோகுமளவு மலர் மாலைகள், தர்மகர்த்தாக்களும், மடங்களின் ஆட்களும், ஊர்வலத்திலே கலந்து கொண்டனர். ஆலாலசுந்தரருக்கு இந்த ஆடம்பர செலவு தான் தலையிலே வந்து விடியுமோ என்ற பயம் மேலிட்டு விட்டது. ஊர்வலத்தைப் போட்டோ எடுத்தனர். பத்திரிகையிலே அந்தக் காட்சி வெளிவருகிறபோது ஊரார் தனக்கிருக்கும் செல்வாக்கை எண்ணித் தன்னிடம் பெருமதிப்புக் கொள்வார்கள் என்ற பூரிப்புப் பார்த்திபனுக்கு. கலாரசிகர் கனகசபேசருக்கோ, இதுபோன்ற ஊர்வலக் காட்சிகளை எந்தெந்தப் புலவர் எப்படியெப்படி வர்ணித்திருக்கிறார்கள் என்ற ஆராய்ச்சி. ஆறுமுகத்திற்கு அன்று சரியான சந்தோஷம். பெங்களூர் மட்டுமல்ல. பல ஊர்களில் “தொழில்” நடத்த முடியும். இந்த ஒரு மாநாட்டு மதிப்பை முதலாக வைத்துக் கொண்டு என்ற எண்ணம் அவனுக்கு. ஊர்வலத்திலே முதலாளிமார்களின் அனுமதியின் பேரில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் இந்த ஆடம்பரத்தைக் கண்டு திகைத்தனர். நம்மிடம் அக்கறை காட்ட இவ்வளவு பணம் செலவாகிறது; நமது நிலையோ ஒன்றும் உயருவதாகக் காணோம் என்ற திகைப்பு அவர்களுக்கு. ஒரு புறம் வாத்தியகோஷம். மற்றோர் புறம் வீரமுழக்கங்கள். “முதலாளித்தும் ஒழிக! தொழில் அரசு ஓங்குக!” என்ற அலங்கார அட்டை வளைவுகள். மாநாட்டு வைபவம் ஒரு திருவிழா போன்று காணப்பட்டது.பார்வதி, மாநாட்டுப் பந்தலிலே, ஒரு மூலையிலே உட்கார்ந்து கொண்டு, நிகழ்ச்சிகளைக் கவனிக்கலானாள். பார்த்திபன், முன்பு இருந்ததைவிடச் சற்றுப் பருத்து இருப்பதைக் கண்டாள். ஆலாலசுந்தரர், களைத்து இருப்பது தெரிந்தது. கனகசபேசரின் முகம் கலை உணர்வைக் காட்டுவது போல மாறி மாறி மலர்வதும் குவிவதுமாக இருந்ததைக் கண்டாள். உள்ளூர தேவார பஜனைக் கோஷ்டியாரின் பாடலுடன் மாநாடு துவங்கிற்று. பிரார்த்தனை முடிந்த பிறகு தலைவர்களுக்கெல்லாம் ஆறுமுகம் மலர்மாலை சூட்டினான். மாநாட்டினர் கைதட்டிச் சந்தோஷத்தை தெரியப்படுத்தினர்.

“வெள்ளைக்காரர்கள் கூட அவருடன் பேச முடியாது. அவ்வளவு ஜோராக இங்கிலீஷ் பேசுவாராண்டா தலைவர்.”

“முகத்திலே களை பாருடா!”

“பக்கத்திலே ஒரு பெரியவர் இருக்கிறாரே, அவர் பெரிய ஜெமீன்தாராம். எத்தனையோ கோடி பணம் இருக்காம் அவரிடம்.”

“அவருக்குப் பக்கத்திலே இருப்பவர் பெரிய கவியாம். காளமேகம், கம்பன் போன்றவர்களைவிட மேலாம் இவர்.”

“ஆறுமுகம் கெட்டிக்காரப் பேர்வழிடா, எங்கெங்கேயோ இருந்து, யார் யாரையோ, அழைத்து வந்திருக்கிறான்.”

இப்படி மகாஜனங்கள் மாநாட்டைப் பற்றி மனம் போன போக்கிலே பேசிக் கொண்டனர். ஆடம்பரத்திலும் வெளி வேஷத்திலும் இவ்வளவு சுலபத்திலே ஏமாந்து போகும் இந்த மக்களைக் கொண்டு, எப்படிச் சமூக பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும் என்று பார்வதி ஏக்கம் கொண்டாள். அந்த நேரத்திலே ஆறுமுகம், மாநாட்டுக்கு வந்துள்ள தலைவர்களை மகாஜனங்களுக்கு அறிமுகப்படுத்தினான். “விளம்பரத்திலே குறிக்கப்பட்டவர்களிலே ஒரே ஒருவர்தான் வரவில்லை ரோஸ் மேரி அம்மையாருக்கு திடீரென ஜூரம் வந்துவிட்டதால் அவர்கள் வரமுடியவில்லை என்று தந்தி கொடுத்து விட்டார்கள். இது நமக்குப் பெரிய விசனம் கொடுக்கிறது என்றாலும், எல்லாம் நன்மைக்குத்தான் என்ற பழமொழிப்படி அந்த ரோஸ்மேரி அம்மையார் வராததினால் நமக்கு வேறு ஒரு நன்மை கிடைத்திருக்கிறது. அந்த அம்மையாருக்குப் பதிலாக அவர்கள் ஆற்ற இருந்த பணியைச் செய்ய வேறோர் அம்மையார் நமக்கு இன்று கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் சென்னைவாசி, அவர்களின் பெயர், பார்வதி, பி.ஏ., என்று ஆறுமுகம் சொன்னான். மேடையிலே விசேஷ பரபரப்பு ஏற்பட்டது. பார்த்திபன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான், மிரள மிரள. ஆலாலசுந்தரருக்கு உடலே ஆட ஆரம்பித்தது.

மேடையிலே ஒரு பெண்மணியையும் காணாததால் பார்வதி, பி.ஏ., யார் என்று தெரிந்து கொள்ள முடியாது மாநாட்டுக்கு வந்த மக்கள், “யார் பார்வதி? எங்கே?” என்று கேட்டனர். அம்பக் ஆறுமுகம், திடீரென இந்த வெடிகுண்டு வீசுவான் என்று ஒரு துளியும் எதிர்பாராத பார்வதி என்ன செய்வ தென்று தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கையில் கையிலே ரோஜா மாலையுடன் ஆறுமுகம், பார்வதி உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து மாலையைப் பார்வதி கையிலே கொடுத்து விட்டு, “பார்வதி அம்மையாருக்கு...” என்று பெருங்குரலிலே கூவினான். மகாஜனங்கள் “ஜே!! ஜே!!” என்று பெருங்கூச்ச லிட்டனர். பேசாமல் மேடைக்குச் செல்வது தவிர வேறு வழியில்லை பார்வதிக்கு. மேடையை நோக்கிப் புன்னகையுடன் நடந்து வரும் பார்வதியின் கையிலே ரோஜா மாலைதான் இருந்தது. ஆனால், கத்தியைக் கையிலே கொண்டு குத்த வருபவனைக் கண்டு பயப்படுவதைப் போல இருந்தது பார்த்திபனின் பார்வை.

மேடை மீது பார்வதி வந்து அமர்ந்ததும் பார்த்திபன் பயந்து போனான் என்றாலும், அதை மறைக்க ஒரு பச்சைச் சிரிப்பைத் துணைக்கு அழைத்துக் கொண்டே, “என்ன ஆச்சரியம்! நான் காண்பது கனவா, நனவா? பார்வதி! அது என்ன எதிர்பாராத சந்திப்பு?” என்று கேட்டான். பார்வதியின் புன்னகைக்குப் பொருள் விளங்கவில்லை.பார்த்திபனுக்கு, ஆலாலசுந்தரரின் அகன்ற வாய் மூடவில்லை. கலாரசிகரின் கண் சிமிட்டல் ஓய்வில்லை. மாநாட்டினரின் கைதட்டலும் நிற்க வில்லை. பார்வதி மாநாட்டினரை வணங்கியபடி “என்னைக் கௌரவித்ததற்காக வணக்கம். இனி மாநாடு நடைபெற வேண்டும். ஆகவே, தயவு செய்து சத்தம் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டாள். மாநாட்டிலே இதற்கு ஒரு சந்தோஷ ஆரவாரம் கிளம்பிற்று.

“யாராவது பாடினால் கூச்சல் நிற்கும்” என்று பார்த்திபன் அம்பக் ஆறுமுகத்திடம் கூறினான். எவ்வளவோ கோபம், சோகம், என் செய்வான் பார்த்திபன்! கொடைக்கானல் மாநாட்டுக்குப் பிறகு பார்வதியைச் சந்திக்கிறான். இடையே எவ்வளவோ மாறுதல்கள். பார்வதி பொது வாழ்விலிருந்தே விலகிவிட்டாள். இனி வரவே முடியாது என்று எண்ணி இருந்த பார்த்திபனுக்குத் திடீரெனப் பார்வதி பெங்களூர் மாநாட்டிலே பிரவேசித்தது ஆச்சரியத்தையும் அச்சத்தையும் தந்தது. அம்பக் ஆறுமுகம் வேண்டுமென்றே பார்வதியை இங்கு அழைத்து வந்தானோ என்ற சந்தேகம் பிறந்தது. பார்வதி பழைய சுபாவத் தோடு இருக்கிறாளா என்று அறிய ஆவல் கொண்டான். கேட்ப தென்றாலோ பயம்! பார்வதியின் சொற்பொழிவிலே தன்னைக் கண்டித்து விடுவாளோ என்று திகில் கொண்டான். ஆலாலசுந்தர ருக்கு அந்தப் பழைய கதை நினைவுக்கு வந்தது. தனது காதலும் பார்வதியின் நிபந்தனையும் மனத்திலே குதிக்கத் தொடங்கின. ஒரு பெண்ணைக் கண்டு, இவர்கள் ஏன் இப்படி அஞ்சுகின்றனர் என்று மாநாட்டினரிலே சிலர் யோசிக்கலாயினர்.

இதற்குள் யாரோ ஒரு வாலிபனை இழுத்து வந்தான் ஆறுமுகம். வாலிபன் பாடினான். “வந்தாட்கொள்ளும் வடிவேலனே. வள்ளிலோலனே” என்ற முருகன் பஜனைக் கீதத்தை. அவன் உள்ளூர் பஜனைக் கூடத்திலே பாடகன். முருகன் வள்ளியிடம் கொஞ்சியதும், மன்மதன் பரமசிவனை மிஞ்சியதுமான பக்திப் பாடல்கள் தெரியுமேயொழிய, தொழிலாளர் குறைகள் பற்றியோ, சமதர்ம முறை குறித்தோ பாடல் ஏதுமறியான். அம்பக் ஆறுமுகம் உருவான தொழிலாளர் இயக்க அமைப்பு ஏற்படுத்தியிருந்தால்தானே இயக்கம் சம்பந்தமாகப் பாடத் தொண்டர்கள் இருக்க முடியும்! பார்வதி சிரித்தாள். அம்பக் ஆறுமுகத்தைக் கூப்பிட்டு “போதும் பாட்டு, நிறுத்தச் சொல் இது என்ன பஜனை மண்டபமா?” என்று கேட்டாள். பாடலும் முடிந்தது. அதற்கு ஒரு ஆரவாரமான கைதட்டலும் நடந்தது.

அம்பக் ஆறுமுகம் மாநாட்டைத் துவக்கித் தரும்படி ஆலாலசுந்தரரைக் கேட்டுக் கொண்டான். ஆலாலசுந்தரர் அதுவரை ( திருவிழாக்கள் தவிர) அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதில்லை. பேசியே பழக்கமில்லை. நாவிலே ஓர் விதமான பிசின் ஒட்டிக் கொண்டது! தொண்டையிலே வறட்சி! கைகால்கள் உதறின! கண்களிலே மிரட்சி! கஷ்டப்பட்டுச் சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு காகிதச் சுருளை எடுத்தார். பிரித்தார், மடித்தார், மறுபடியும் பிரித்தார். ஏதோ பேச வாய் திறந்தார். எதையோ கூறினார். மாநாட்டிலே ஒரே சிரிப்பு, கேலி, சீட்டிகை அடிப்பதும்கை கொட்டுவதுமாகி விட்டது. அம்பக் ஆறுமுகம் கும்பிடுகள் போட்டான். “கூச்சலிடாதீர். சீமான் ஆலாலசுந்தரர் நேற்றெல்லாம் ஜுரத்தால் கஷ்டப்பட்டார். அதனால்தான் சிரமப்படுகிறார்” என்று சமாதானம் கூறினான். அதையே சாக்காக வைத்துக் கொண்டு ஆலாலசுந்தரர், காகிதச் சுருளை ஆறுமுகத்தினிடமே கொடுத்து படிக்கும்படி கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார். இதற்குள் முகம் முழுவதும் வியர்வை மயமாகிவிட்டது.

ஆறுமுகம் ஆலாலசுந்தரரின் சொற்பொழிவைப் படித்தான் பாதியிலே மாநாட்டிலே சலிப்பு உண்டாகி விட்டது. ஏன் உண்டாகாது? தங்களின் குறைகளைத் தீர்க்க ஏதாவது வழி கூறமாட்டார்களா, முதலாளித்தனத்தால் விளையும் கேடுகளைக் கண்டிக்க மாட்டார்களா என்று மாநாட்டினர் ஆவலோடு கூடியிருக்க, ஆலாலசுந்தரரின் சொற்பொழிவோ, “மனிதனாகப் பிறந்தவர் யாவரும் ஏதாவதொரு கஷ்டம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். கவலை என்பது எல்லோருக்குமே உண்டு. கஞ்சிக்கு உப்பில்லை என்பதும் கவலைதான் பாலுக்குச் சீனியில்லை என்பதும் கவலைதான். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடைவதே சிலாக்கியமான வழி. பாடுபடாமல் உலகிலே யாருமே இருக்கவில்லை. தெய்வங்கள் கூடப் பாடுபட்ட வண்ணந்தான் இருக்கின்றன” என்று இருந்தது. ஏன் மக்களுக்குக் கோபம் வராது?

மாநாட்டினரின் மனப் போக்கை தெரிந்து கொண்டான் ஆறுமுகம். எனவே காகிதச் சுருளையில் எழுதி இருந்ததைப் படிக்காமல் தன் சொந்தச் சரக்கை வீசினான். உங்களின் கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்பதே என் நோக்கம். தொழிலாளர்களுக்கு ஒரு தர்ம ஆஸ்பத்திரி வைக்கப் போகிறேன். தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளுக்கு இலவசப் படிப்புக்கு என்னாலான ஒத்தாசை செய்யப் போகிறேன்” என்று ஆறுமுகம் ஆலாலசுந்தரர் கனவிலும் எண்ணாததை எல்லாம் கூறினான். மாநாட்டினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆலாலசுந்தரருக்கு ஜே! ஜே! என்று ஆரவாரம் செய்தனர். ஆலாலசுந்தரர் கைகளைப் பிசைந்து கொண்டார். ஆறுமுகத்தின் சட்டையைப் பிடித்திழுத் தார். பார்த்திபனை நோக்கினார். இடையே பார்வதியைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு“ காட்டினார்.

பார்வதிக்கு விஷயம் புரிந்துவிட்டது. இதுதான் தக்க சமயம் என்று யோசித்து எழுந்து நின்று, “மகாஜனங்களே! ஆலாலசுந்தரர் இவ்வளவு உதவிகளைச் செய்யப் போவதாகப் பேசுகிறாரே யொழிய, செய்வாரா செய்யமாட்டாரா என்று சந்தேகப்பட வேண்டாம். இதே மேடையிலே 5000 ரூபாய் நன்கொடையாக இந்த ஊர் தர்ம வைத்தியசாலைக்குத் தரப் போகிறார்” என்று கூறிவிட்டு உட்கார்ந்தாள்.

மேடையிலிருந்த தர்ம வைத்தியசாலை அதிகாரி துள்ளிக் குதித்தெழுந்து, ஆலாலசுந்தரரின் கரங்களைப் பிடித்துக் குலுக்கி விட்டுக் கண்களிலே ஒத்திக் கொண்டு, “மகாஜனங்களே! ஆலாலசுந்தரரே கலிகாலக் கர்ணன். கர்ணன் கூட இவர் முன் என்ன செய்ய முடியும்? கர்ணன், கேட்டவர்களுக்கே தானம் கொடுத்தான். ஆலாலசுந்தரரோ, நாங்கள் கேட்கா முன்பே 5000 ரூபாய் நன்கொடை தருகிறார். இப்படிப்பட்ட உத்தம குணம் படைத்தவருக்கு நமது மனமார்ந்த வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஆகவே ஆலாலசுந்தரருக்கே ஜே, ஜே, ஜே என்று மூன்றுமுறை ஜே சொல்லுங்கள்” என்று உற்சாகத்தோடு கூவினார். மாநாட்டுக் கொட்டகை அதிர்ந்தது. மக்களின் கோஷத்தினால்!

ஆலாலசுந்தரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பார்வதியைப் பிடித்திழுத்துக் கழுத்தை நெரித்து விடலாமா என்று தோன்றிற்று. “படுபாவி! இப்படி என்னைப் பாடுபடுத்து கிறாளே! ஒன்றா இரண்டா? ஒரு நூறா இரண்டு நூறா? ஐந்து ஆயிரத்தை நான் எப்படிக் கொட்டி அழுவேன்? என்று எண்ணினார். ‘சீ! பயம் என்ன? எழுந்து சொல்லிவிடுவோம். அது முழு மோசடி. நான் ஒரு காசு கூடத் தரமுடியாது. தருவதாகச் சொல்லவில்லை. நினைத்ததே இல்லை. ஆறுமுகம் சரடு விட்டான். அநியாயக்காரி அதற்குமேல் அடுக்கிவிட்டாள்’ என்று கூறவேண்டியதுதான் என்று தீர்மானித்து, எழுந்திருக்கப் போகும் சமயம் பார்த்திபன், அவரைப் பிடித்திழுத்து உட்காரவைத்து, இரகசியமாகக் கூறினான். “நிலைமை மோசமாகி விட்டது. பேசாமல் 5000 ரூபாய்க்குச் செக் எழுதி கொடுத்து விடுங்கள். இப்போது ஜனங்கள் இருக்கிற நிலைமையில் பணம் தர முடியாது. ஆளுக்கொரு கல் எடுத்துப் போட்டுக் கொன்று விடுவார்கள். அவ்வளவு ஆத்திரம் உண்டாகும்” என்று கூறினான். “எல்லாம் உன்னால் வருகிற வம்பு” என்று ஆலால சுந்தரர் சோகத்தோடு கூறி துக்கம் மேலிட்டவராய், நாற்காலியில் சாய்ந்து விட்டார்.

பார்த்திபனைப் பார்வதி புன்சிரிப்புடன நோக்கியபடி “5000 ரூபாயை தர்ம வைத்தியசாலைக்காரரிடம் கொடுத்து விடுவது தானே” என்று கூறினாள். ஆலாலசுந்தரருக்கு ‘செக்’ எழுதிக் தருவது தவிர வேறு வழியில்லை. 5000 ரூபாய்க்குச் ‘செக்’ கிடைத்ததும், ஆனந்தக் கூத்தாடினார் தர்ம வைத்திய சாலைக்காரர். ஆரம்பமே இவ்வளவு மோசமாக இருக்கிறதே. போகப் போக என்னென்ன நடக்குமோ என்று பயந்த பார்த்திபன், ஏதேதோ பேச வேண்டுமென்று எண்ணியதை மறந்து மனக் குழப்பத்துடன் அச்சுத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் பற்றியும் பொதுவாகத் தொழிலாளர்கள் அனுவிக்கும் தொல்லைகளையும் ஒருவாறு விளக்கிப் பேசிவிட்டுத் தொழிலாளர் தோழன் என்ற புதுக்கட்சியைத் துவக்கிச் சட்ட சபைகளைக் கைப்பற்றி பல புதிய சட்டங்களை உண்டாக்குவதே தனது நோக்கமென்றும் கூறிவிட்டு மிக விரைவாகவே தனது பிரசங்கத்தை முடித்துக் கொண்டான்.

ஆலாலசுந்தரரைச் சிக்க வைத்தது போலப் பார்த்திபனை யும் சிக்க வைக்க வேண்டுமென்று கருதிய பார்வதி, “தலைவரின் அரிய பெரிய சொற்பொழிவைப் பாராட்டுவதை நான் ஒரு பெருமையாகக் கருதுகிறேன். நமது மாநாட்டுத் தலைவர், சொல் வேறு செயல் வேராக நடப்பவரல்ல. அச்சுத் தொழிலாளர் படும் கஷ்டங்களை அழகாக அவர் எடுத்துக் கூறியதைக் கேட்டு இன்புற்றீர்கள். அதைவிட இன்பமான ஒரு செய்தி கேளுங்கள். தோழர் பார்த்திபன் “ரட்சகன்” என்று ஒரு பத்திரிகை நடத்துகிறார். அந்தப் பத்திரிகாலயத்திலே அச்சுத் தொழிலிலே உள்ளவர்க்கெல்லாம் இன்று முதல் இரட்டிப்பு மடங்காகச் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். இந்தப் பெருங் குணத்தை நான் பாராட்டுகிறேன்” என்று கூறினாள். மக்கள் “ஜே” கோஷமிட்டனர். மாநாட்டு நடவடிக்கைகளைக் கவனித்து வந்த பத்திரிகை நிருபர்கள் பார்வதியின் பேச்சைக் குறித்துக் கொண்டனர்.

பார்த்திபன் பதிலேதும் கூறவில்லை. பார்வதி பழி வாங்குகிறாள் என்பதும். அதிலிருந்து தப்புவது கஷ்டமான காரியம் என்பதும் பார்த்திபனுக்குத் தெரிந்தது. என் செய்வான்? திருடனைத் தேள் கொட்டினால் என்ன செய்ய முடியும்? பணம் போகட்டும். கவலையில்லை. இந்தப் பார்வதியை மாநாட்டிலேயே எப்படியாவது அவமானப்படுத்த வேண்டுமென்று துடித்தது. பார்த்திபனுடைய மனம். அதற்காக என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான். குழம்பிப் போயிருந்த அவனுக்குச் சுலபத்திலே ஒரு வழியும் தோன்றவில்லை. பார்வதி முன்னேற்பாட்டுடன் வந்திருக்கிறாளோ, என்னவோ, ஆறுமுகமே பார்வதியின் கையாளோ என்னவோ, எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டார்கள் என்று எண்ணிப் பயந்தான்.

பார்வதி பேசத் தொடங்கினாள். அவளது சொற்பொழிவிலே சுவையும் அறிவும் இசையும் மொழியும் போலப் பிணைந்திருந்தன. போர் வீரன் தனது வெற்றியை எடுத்துரைப்பது போலப் பேசலானாள். பார்வதியின் சொற்பொழிவைக் கேட்டு ஜனங்கள் தம்மை மறந்து இருந்தனர். அதற்கு முன்பே அவ்வளவு உருக்கமாகப் பார்வதி பேசியதைப் பார்த்திபன் கேட்டதே இல்லை. பார்வதியின் சொற்பொழிவிலே மக்கள் இலயித்திருப்பதைக் கண்டு அடக்க முடியாத அளவு பொறாமை மூண் விட்டது பார்த்திபனுக்கு. எனவே, மேசை மீதிருந்த மணியை அடித்தான், பேச்சை முடித்துக் கொள்ளச் சொல்லி, பார்வதி, “மணியோசை! மகாஜனங்களே! என் பேச்ச நீண்டு விட்டது. நிறுத்திக்கொள் என்று மணியை அடிக்கிறார் தலைவர் நான் இரண்டு நிமிஷத்திலே நிறுத்திக் கொள்ளப் போகிறேன்” என்று சொன்னதுதான் தாமதம். பலர், “இன்னும் ஒரு மணிநேரம் பேச வேண்டும். பார்வதி அம்மையாருக்கு ஜே” என்று கூவினர். பார்வதி வெற்றிச்சிரிப்புடன் பார்த்திபனை நோக்கினாள்.

“பார்வதி! போதும் உன்னுடைய விளையாட்டு” என்று கோபமாகக் கூறினான். பார்வதி கெம்பீரமான குரலிலே, “தலைவரே! மகாஜனங்களுக்குக் கூறுங்கள். அவர்களல்லவா என்னைப் பேசச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்? நான் என்ன செய்வேன்?” என்று கேட்டாள். பார்த்திபன் எழுந்து நின்றான். “மகாஜனங்களே! மணி இப்போது பன்னிரண்டு. எனக்கு அவசரமான வேலை இருப்பதால் மாநாட்டைச் சீக்கிரமாக முடித்துவிட விரும்புகிறேன்” என்று கூறினான்.

“தாங்கள் அவசரமாகப் போய்விட வேண்டுமானால் சென்று வாருங்கள். பார்வதி அம்மையார் பேசட்டும்” என்றுரைத்தனர் மாநாட்டினர்.

“இது என்னை வேண்டுமென்றே அவமானப் படுத்துவதாகும்.”

“பார்வதி பேச வேண்டும்.”

“முடியாது! நான் மாநாட்டுத் தலைவன். இனி ஒரு நிமிஷம் கூடப் பார்வதி பேச அனுமதிக்கப் போவதில்லை.”

“பார்வதி அம்மை பேசத்தான் வேண்டும். போ வெளியே! போ! போ!”

“இதுதான் ஒழுக்கமா? இதுதான் மரியாதையா? ஆறுமுகம் ஜனங்களை அடக்கப் போகிறாயா, இல்லையா?”

“டே! அம்பக் ஆறுமுகம் போடா, வெளியே! நீயும் போ!”

“மாநாட்டை நான் கலைக்கப் போகிறேன்.”

“ஒரு ஆள்கூட வெளியே போக வேண்டாம். பார்வதி அம்மையார் பிரசங்கத்தைக் கேட்போம். தலைவர் போகட்டும் வெளியே.”

“நான்சென்ஸ்! இது காலிப்பயல்களின் கூட்டம்! மரியாதை தெரியாத மடைப்பயல்கள் கூட்டம்.”

“யாரடா மடையன்? மடைப்பயலே! போட வெளியே! யாரடா காலிப்பயல்? போடா வெளியே!”

“போலீஸ்! போலீஸ்!”

மகாஜனங்களின் பேரிரைச்சல், தலைவரின் தத்தளிப்பு. போலீஸ் பிரவேசம் ஆகிய இலட்சணங்களுடன் மாநாடு கலைந்தது.