அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
19
               

மார்க்கசகாய பாதிரியாரைக் கன்னத்திலடித்துக் கடுமொழி புகன்று நின்ற பார்த்திபனும் அவன் சகாக்களும் அடுத்த கணத்திலே திகைத்தனர். அதே நேரத்தில் போலீஸ் படை, அவர்களை நெருங்கி வந்து கொண்டிருக்கக் கண்டனர். எனவே, பழி வாங்கும் எண்ணத்தைவிடத் தப்பினால் போதும் என்ற பயம் அவர்களுக்கு அதிகரித்தது. குழப்பத்தோடு அவர்கள் ஓடலாயினர். ஓடுபவர்களைப் போலீசார் துரத்தினர். துப்பாக்கி பேசத் தொடங்கிற்ற. ஓரிருவர் தவிர மற்றவர்கள் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிலே பார்த்திபனும் ஒருவன்.

பார்வதியைச் சூதாக ஓரிடத்திற்கு வரவழைத்துக் கற்பழிக்கவும் கொலை செய்யவும், உதவிக்கு வந்த மார்க்கசகாய பாதிரியாரைக் கொல்லவும் முயன்றதாகப் பார்த்திபன் மீதும் அவனுக்கு உடந்தையாக இருந்ததற்காகக் கூலியாட்கள் மீதும் குற்றப்பத்திரிகை தயாராகிவிட்டது.

வழக்கு விசாரணை நடந்த சமயம், ஜெயாவின் வாக்குமூலம் வாங்கப்பட்டபோது, பார்த்திபனுடைய தூண்டுதலால், குமார் தொழிலாளர்களுக்கென்று சொல்லித் திரட்டிய பெரும் பொருளைக் கொண்டு எங்கோ ஓர் இரகசியமான இடத்திலே வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், சரியா சமயம் பார்த்துப் புரட்சி நடத்த இரகசியத் திட்டம் இருப்பதாக வும், தனக்கு இந்த விஷயத்தைப் பார்த்திபனிடம் பகையை கொண்டதனால் ஒருவன் கூறியதாகவும் கூறினாள். ஆனால் ஜெயாவுக்கு இந்தத் தகவலைக் கூறிய ஆளும் கிடைக்கவில்லை. இரகசிய வெடி மருந்து இருக்குமிடத்தின் துப்பும் தெரியவில்லை பார்த்திபன், மூடிய வாயைத் திறக்கவுமில்லை.

பத்திரிகைகளுக்கு புதிய விருந்து கிடைத்துவிடவே பத்தி பத்தியாக இரகசிய வெடிமருந்துச் சாலையைப் பற்றிய பலவிதமான யூகங்களைக் கிளப்பி எழுதலாயின. அரசாங்கமும் விசேஷபரபரப்புடன், துப்பறிபவர்களையும் போலீசையும் நாடெங்கும் அனுப்பி வைத்தது.

இந்த எதிர்பாராத செய்தி கேட்டுப் பார்வதி திடுக்கிட்டுப் போனாள். குமார் இருக்குமிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுக்குப் பதிலாக, எங்கே அந்த விஷயம் தெரிந்து விடுகிறதோ என்ற திகில் பிடித்துக் கொண்டது. ஆவேசமே உருவான குமாருக்கு அநீதியை ஒழிக்க, பலாத்காரமான முறை களையும் கையாள வேண்டுமென்று எண்ணம் இருந்ததை அவள் அறிவாள். அந்தப் போக்கையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பார்த்திபன், சூழ்ச்சி செய்ததை எண்ணும்போது பார்வதியின் மனம் பதறிற்று. குமார் பிடிபட்டால் பணம் எடுத்துக் கொண்டான் என்ற குற்றத்தோடு, சர்க்காரைக் கவிழ்க்க இரகசியமாக ஆயுதங்களைச் சேகரித்த பெருங்குற்றமன்றோ சாட்டப்படும். தண்டனை? ஆம்; தூக்குமேடையன்றோ! அந்தோ ஏழைகளின் தோழனாக எண்ணற்ற மேடைகளிலே ஏறி, அவர்கள் உய்யும் வழிகளைக் கூறுவான். நாட்டின் நலிவு தீரும் என்று எண்ணினோம். ஆனால் தூக்குமேடையன்றோ அவனைக் கூவி அழைக்கின்றது? காண வேண்டும் காண வேண்டும் என்ற நினைப்புக் கூடாது இனி. குமார் இனி யார் கண்களிலும் படக்கூடாது. உலகிலே அவன் நடமாட முடியாது. சர்க்கார் சுழல் விழியிலே அவன் சிக்கிவிட்டால் சாவு அவனுக்கு நிச்சயம்.

“குமார்! யார் உன்னை இந்தத் தவறான பாதையிலே புகுத்தியது? பார்த்திபன் ஒரு பாசாங்குக்காரன் என்பதை நீ தெரிந்துக் கொள்ளவில்லையா? அவன் சட்டம், சமாதானம், சாந்தி, கட்டுப்பாடு, ஒழுங்கு, அமைதி என்றெல்லாம் அரண் அமைத்துக் கொண்டு பேசி வருகிறானே. அவன் உன்னை வெடிகுண்டுகள் தயாரிக்கும் விபரீதச் செயலிலே புக வைத்ததன் கருத்து என்னவென்பதை ஏன் நீ யோசித்துப் பார்க்கக் கூடாது? உன்னைச் சிக்கவைக்க. சாகடிக் அவன் செய்த சதியல்லவா இது? தனக்கு எது சரியான சந்தர்ப்பம் என்று தோன்றுகிறதோ அந்த நேரமாகப் பார்த்து, உன்னைக் காட்டிக் கொடுத்துச் சர்க்காரின் தோழனாகிச் சன்மானம் பெறுவதற்குத்தானே பார்த்திபன் இதுபோலச் செய்திருப்பான். கள்ளங்கபடமில்லாத நீ அவனுடைய வலையிலே வீழ்ந்தாய். என்ன செய்வது?” என்று பார்வதி, எண்ணி ஏங்கினாள்.

இதற்கு இடையில் உத்தமிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும், உத்தமியைப் பாதுகாக்கும் கடமையையும் லேடி டாக்டர் லலிதகுமாரியே ஏற்றுக் கொண்டார். உத்தமியும் அவருக்கு உதவியாக அவருடனேயே இருந்தே விட்டாள். ஆகவே பார்வதிக்கு அந்தக் கவலை தீர்ந்தது. இப்பொழுது அவளது கவலையெல்லாம் குமாரைப்பற்றித்தான்.

குமாரின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியிலே வெற்றி சுலபத்தில் கிடைக்கவில்லை. வெற்றி கிடைக்கவே முடியாது என்று சில அதிகாரிகளும், பெரும்பாலான மக்களும் எண்ணத் தொடங்கினர். சந்தேகித்தவர்களைப் போலீசார் விசாரித்து, தமது வேலை வீணாவதைக் கண்டு சலித்துக் கொண்டனர்.

“அதெல்லாம் ஒரு யட்சணியின் உதவியப்பா” என்று மாந்திரீகப் பிரியர் கூற, “யட்சணியாவது, பட்சணியாவது. அந்தத் திருட்டுப் பயல் எங்கேயாவது சாமியார் வேடத்திலே உலவிக் கொண்டிருப்பான். பண்டாரப் பயல்களை எல்லாம் பிடித்து வந்து சவுக்கடி கொடுத்தால் உண்மை வெளிவந்துவிடும்” என்று வேறொருவர் கூற. “யார் கண்டார்கள்? அவனிடம் ஏதோ ஒரு பச்சிலை இருக்கிறதாம். அதனால்தான் யார் கண்ணிலும் படாமல் இருக்க முடிகிறதாம்” என்று இன்னொருவர் கூற, இப்படி ஊரார் பலவிதமாகப் பேசிக் கொண்டனர், உண்மை இருக்குமிடத்திற்கு வெகு தொலைவிலே நின்று கொண்டு. நயத்தாலும் பயத்தாலும் பார்த்திபனிட மிருந்து இரகசியததைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. போலீஸ் என்ன செய்கிறது? என்று எழுதினார் ஒரு பத்திரிகாரியர். துப்புத் துலக்காததற்குக் காரணம் துருப்பிடித்த மனப் போக்குள்ளவர்கள் துரைத்தனத்தை நடத்துவதுதான் என்ற பொது விவகாரத்திலே புகுந்தார் வேறோர் ஆசிரியர், மேனாட்டுத் துப்பறிபவரை வரவழைத்தால் விஷயம் விளக்கப் பட்டு விடும் என்று சிலர் கூறினர். அது தேசிய கௌரவத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று தீப்பொறி தீடடினர். தேசிய எழுத்தாளர்.

ஊர் இவ்விதமிருக்கச் சிறையிலே பார்த்திபன் உறக்கமிழந்து கிடந்தான். குமாருக்குக் சுருக்குக் கயிறு விழும், அவன் கிடைத்து விட்டால். அவன் கிடைக்க வழி காட்டுவதற்குத் தனக்கே தெரியும். புரட்சிக்காரர்களைப் பிடித்து தருவதற்கு இசைந்தால் தன் மீது தொடரப்பட்ட வழக்கு வாபசாகி விடுமா என்ற யோசனை அவனுக்கு. குமார் பிடிபட்டாலும் தப்பினாலும் பார்த்திபனுடைய வழக்குத் தனியாக நடைபெற்று, அதற்கான தண்டனை தரப்பட வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கூறினர்.

“மந்திரி சபையின் மந்த புத்தியினாலேயே சதிச் செயல் புரியும் ஒரு கும்பலைக் கண்டுபிடிப்பது அசாத்தியமாகி விட்டது. இந்தக் கட்சியைத் தொலைத்துவிட்டு எங்கள் கட்சிக்கு ஆட்சி உரிமையை மக்கள் தந்தால் வெடிகுண்டு வீரர்களை அவர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தாலும் சரி, நாங்கள் கண்டபிடித்துத் தக்க தண்டனை தந்து நிர்மூலமாக்குவோம். எங்களால் முடியும். இந்த ஏமாளிகளால் முடியாது” என்று ஆட்சியை இழந்த அசியல் கட்சிப் பிரசாரகர் ஆளும் கட்சியைத் தாக்கிப் பேச இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

“சதி செய்பவர்களை எங்களால் கண்டுபிடிக்க முடிய வில்லை. தங்களால் முடியும் என்று மக்களால் மட்டந்தட்டப் பட்ட கும்பல கூறுகிறது. இப்படிக் கூறுவதால் தங்கள் மேதாவித் தனத்தை நிரூபிப்பதாக அந்தக் கும்பல் எண்ணுகிறது. இந்தக் கும்பலின் சவடால் பேச்சினால் ஏதாவது நிரூபிக்க முடியுமானால் அது இதுதான். சதிகாரருக்கும் இந்தக் கும்பலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. ஆகையினால் தான் நாங்கள் கண்டுபிடிப்போம் என்று அந்தக் கூட்டம் மார்தட்டு கிறது” என்று ஆளும் கட்சியைச் சார்ந்த பிரசாரகர் பேசினார். அதிகாரிகளுக்குள் போட்டியும், துவேஷமும் கூத்தாடலாயிற்று. வெடிகுண்டு வீசாமுன்பே விபரீதங்கள் விளையலாயின. புலியைக் காணா முன்பே கிலி பிடித்துக் கொள்வது போல.

குமாரின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தேன் தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்த பிரபல துப்பறியும் நிபுணர் பிரமநாயகம் ஒரு நாள் நடுநிசியிலே, முதலமைச்சரைத் தனியாகச் சந்தித்துப் பேசிõனர், இது விஷயமாக.

“தங்களுடைய நித்திரையைக் கெடுத்துவிட்டேன்.”

“குமார் கெடுத்துவிட்டான் என்று கூறுங்கள். அந்த விஷயம் விளக்கப்பட்டாலொழிய எனக்குத் தூக்கம் ஏது?.”

“எனக்குத் தெரிந்த வழிகளை எல்லாம் உபயோகித்துப் பார்த்தாகி விட்டது. பயனில்லை.”

“மிஸ்டர் பிரம்மா! நீங்கள் கைவிரித்துவிட்டால், நான் ராஜினாமா செய்துவிட்டு ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று ஜெபம் செய்யப் போகவேண்டியதுதான். வேறு மார்க்கம் கிடையாது. கட்சியும் கடைகட்ட வேண்டிவரும்.”

“குமார் பிடிபடாவிட்டால் நேரிடக்கூடிய விளைவுகளை நான் யோசித்துப் பார்த்தேன். என் செய்யலாம்? இருள் நீங்க வில்லையே!”

“வெட்கக்கேடு மிஸ்டர் பிரம்மா! ஒரு சர்க்கார் சாதாரண சதிகாரன் ஒருவனைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகிற தென்பதும், சர்க்காரைக் கவிழ்ப்பதற்காகவே ஒருவனால் இரகசிய வெடிகுண்டுகள் தயாரிக்கப்படும் இடம் ஒன்று இந்நாட்டில் இருக்கிறதென்பதும் எவ்வளவு அவமானம் என்பதை உணராமல் “என்ன செய்யலாம்” என்ற கையாலாகாதவன் பேச்சா என்முன் பேசுவது?”

“எனக்கு அந்த வெடிகுண்டு சாலையைக் கண்டுபிடித்துப் புகழ்பெற வேண்டுமென்ற எண்ணம் இல்லை என்றோ நினைக் கிறீர்கள்? யாருக்கும் கீர்த்தி பெறுவதிலே ஆவலிருக்கத்தான் செய்யும்? ஆசை இருக்கிறது. ஆனால் என்ன செய்வது? முடிய வில்லை” என்றார் பிரமநாயகம்.

“அதெல்லாம எனக்குத் தெரியாது. இவை விஷயமாக வெற்றி பெறக்கூடிய ஆள் எனக்குத் தேவை. உம்மால் முடியா விட்டால் வேறு ஒருவர் உமது இடத்திலே வரவேண்டியதுதான் வேறு வழியில்லை” என்று முதல் அமைச்சர் சற்றுக் கடினமாகப் பேசினார். துப்பறியும் பிரமநாயகம் கோபம் கொள்ளவில்லை. மாறாகப் புன்சிரிப்புடன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே, “நான் ராஜினாமா செய்து விடுவதாகத் தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். அதற்குத் தங்கள் அனுமதி தேவை” என்று கூறினார். முதலமைச்சர் பதில் ஏதும் கூறாதிருந்தார். துப்பறியும் பிரமநாயகம் சில வினாடிக்குப் பிறகு ஒரு வெடிகுண்டு வீசினார்.

“பார்த்திபன் சிறையிலிருந்து விடுதலையடைய உத்தரவிடுவீர்களா? அவனை விடுதலை செய்யவாவது உத்தரவளியுங்கள். அல்லது என்னை ராஜினாமா செய்வதற்காவது அனுமதி தாருங்கள். இரண்டும் தங்களுக்கு இஷ்டமில்லாவிடில் பிறகு தங்களுக்குத் தோன்றும் புத்தியின்படி நடக்கும் உரிமை தங்களுக்கு உண்டு” என்றார் அ பிரமநாயகம். முதலமைச்சருக்குத் தூக்கிவாரிப்போட்டது போலாகிவிட்டது.

“பார்த்திபனை விடுதலை செய்வதா? உமக்கென்ன மூளைக் கோளாறாகிவிட்டதா? மிஸ்டர் பிரம்மா! இது என்ன பேச்சு? எனக்கு ஒன்றும் புரியவில்லையே, பார்த்திபனை விடுதலை செய்தால், மறுவிநாடி என் வீடு, தீக்கிரையாகும். மக்களின் மனக் கொதிப்பு என்னைச் சும்மாவிடுமா, மேலும் அந்த அயோக்கியனை, நம்மை இவ்வளவு பெரிய நெருக்கடியிலே சிக்க வைத்த காதகனை, ஏழைத் தொழிலாளரை ஏய்த்தவனை, ஒரு பெண்ணைக் கொலை செய்யத் துணிந்த பேயனை விடுதலை செய்வதா? சட்டம், சட்டம் என்று பேசுவார்களே, அது என் ஆட்சியிலே செத்துவிட்டது என்று பிரகடனம் செய்யவா? புத்திக்கம் நியாயத்துக்கும் என் ஆட்சியிலே இடமில்லø என்று உலகுக்கு அறிவிக்கச் சொல்கிறீரா? மிஸ்டர் பிரம்மா! உம்மைத் தவிர வேறு யாரிடமிருந்தாவது இந்தப் பேச்சு வந்திருப்பின் அவர்களை நான் பித்தர் விடுதிக்கு அனுப்பியிருப்பேன்.” என்று முதலமைச்சர் ஆத்திரத்துடன் பேசினார். பிரமநாயகம், முதலமைச்சரின் கோபப் பேச்சுக்குக் குறுக்கே நிற்கவில்லை. ஆத்திரம் அந்தப் பேச்சினால் அடங்கிவிடட்டும் என்று இருந்து விட்டார். முதலமைச்சர் கூண்டிலிட்ட புலிபோல் தமது அறையிலே உலவிக் கொண்டு, “பார்த்திபனை விடுதலை செய்வதாம்! விடுதலை! பார்த்திபனை! மகாபெரிய மேதாவி. அவனை விடுதலை செய்யச் சொல்கிறார்” என்று கூறி, உரத்த குரலிலே சிரிக்கத் தொடங்கினார்.

“நீங்கள், யானை வேட்டையைப் பற்றிய கதை படித்த துண்டா?” என்று கேட்டார் துப்பறிபவர். தணலைப் கிளறி விட்டது போலிருந்தது அந்தக் கேள்வி. “என்ன மிஸ்டர் பிரமநாயகம்! இன்று என்ன உமது மூளை இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறது! யானை வேட்டைக்கும் நாம் பேசிக் கொண்டிப்பதற்கும் என்ன சம்பந்தம்? நாம் ஏதோ உயிர்ப் பிரச்சனையைப் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் என் மந்திரி சபையின் எதிர்காலமே இந்தப் பிரச்சினையைப் பொறுத்திருக் கிறது என்று தலைப்பாடாக அடித்துக் கொள்கிறேன். இந்த நேரத்திலே நீர் சிறு பிள்ளைபோல விøளாயடுகிறீர். விகடம் செய்கிறீர். யானை வேட்டை பற்றியும், பூனை விளையாட்டுப் பற்றியும் பேச உமக்கு வேறு சந்தர்ப்பமோ, ஆளோ கிடைக்க வில்லையா? சரி, சரி, நீர் நாளைய தினம் இங்கே வாரும், ராஜினாமாவுடன்” என்று கூறிப் பேட்டி முடிந்துவிட்டது என்பதைத் தெரிவித்துவிட்டார். துப்பறிபவர் சாவதானமாக எழுந்தார். சட்டைøய் சரிப்படுத்திக் கொண்டார். அறையை விட்டுப் கிளம்பி, வாயிற்படி அருகே வந்து நின்றார். முதலமைச்சரைப் பார்த்து, “பழகின யானையைக் கொண்டுதான் காட்டு யானைகளை வேட்டைக்காரர், பிடிப்பது வழக்கம்” என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.