அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
11
               

ஆண்டாளின் எண்ணமெல்லாம் பரிதாபத்துக்குரிய உத்தமிக்கு ஊறு நேரிடாதபடி தடுக்க வேண்டும் என்பதுமல்ல, சமுதாயக் கோளாறுகளைத் தீர்க்கவும் நற்காரியம் செய்ய வேண்டும். என்பதுமல்ல. எப்படியாவது கோபங்கொண்டுள்ள தன் கணவனுக்குச் சாந்தி ஏற்பட்டுக் குடும்பத்தில் வேறு எவளாவது புகாதபடி தடுத்துத் தானே கிருகலட்சுமியாக வாழ வேண்டும் என்பதுதான். லேடி டாக்டரின் மனப்போக்கு, அவளுக்கு உத்தமியிடம் வளர்ந்து வந்த அன்பும், அவர்கள் இருவரும் கூடிக் கூடிப் பேசிக் கொள்வதும் ஆண்டாளுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களிடம் சம்பந்தம் கொள்வதா என்று சிந்திக்கலானாள்.

அந்தச் சிந்தனை அவளுக்குச் சஞ்சலத்தை வளர்த்தது. வர இருக்கும் ஆபத்தைத் தடுக்க வேண்டி வளர்ப்புப் பிள்ளையைச் சேர்த்துக் கொண்ட பிறகு தனக்கே குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்ற திகிலும் தோன்றலாயிற்று. காரியம் முடியட்டும் சும்மா இருந்துவிட்டுப் பிறகு உத்தமியோ லேடி டாக்டரோ கபடத்தை வெளிப்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் புகுந்து விட்டது. உத்தமியின் குழந்தை வளர்ந்த பிறகு தன் கணவனுக்கு எப்படியாவது தெரிந்து சொத்தை, உத்தமிக்கும் அவளுக்கு வேண்டியவர்களுக்கும் செலவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் குடையலாயிற்று. இதனால், கருவுற்றிராவிட்டாலுங் கூட ஆண்டாளுக்கு மயக்கமும் வரத் தொடங்கிற்று. எதிர்காலத்தை மிகவும் பாதிக்கக் கூடிய இந்தப் பெரிய விஷயத்திலே ஏன் அவரசப்பட்டு, தாறுமாறான செயல் புரியத் துணிந்ததை எண்ணித் திகைத்தாள். வேண்டாதவள் வயிற்றிலே வேதனைப் பிண்டமாக உள்ள அந்தக் கரு என் வயிற்றிலே உலவினால், மனம் மகிழ்ச்சியில் மூழ்குமே என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள். ஒட்டுச் செடி போல உத்தமியின் குழந்தையை பிராமண குலத்திலே சேர்க்கப் போகிறோம். இதனால் என்னென்ன அசம்பாவிதம் நேரிடுமோ என்று அஞ்சினாள். இந்த எண்ணம் உதித்தப் பிறகு வெகு விரைவாக அது வளரத் தொடங்கிற்று. விநாடிக்கு விநாடி விசாரம் வளர்ந்துக் கொண்டே சென்றது. ஏதாவதோர் முடிவுக்கு வந்தாக வேண்டும். இல்லையேல் காலமுழுவதும் கண்ணீர் விட வேண்டும் என்று அவளுக்குச் சதா யாரோ கூறுவது போலிருந்தது. தனக்கு உதவி செய்ய வந்த உத்தமியிடம் முதலிலே காட்டிய அன்பு மாறி, பொறாமை உண்டாயிற்று. “இந்தப் பாவிக்கு உண்டான கரு, எனக்கு ஏனோ உண்டாகக் கூடாது. அவளிடம் நான், குழந்தையை அல்லவா தானம் கேட்கிறேன். என் கணவனை மகிழ்விக்க, அவள் குழந்தையை இரவல் பெறுகிறேன்” என்று ஏதேதோ எண்ணினாள். அழவும் தொடங்கினாள். துக்கமெனும் வெப்பம் பெருமூச்செனும் ஆவியாகி, கண்ணீர்ப் பொழிந்தது. ஒருநாள் இவ்விதம் அழுது கொண்டிருந்த சமயத்திலே, வழக்கமாக வரும் கணவனைக் கண்டு, கண்களைத் துடைத்துக் கொண்டு சிரிப்பை வருந்தி வருந்தி அழைத்தாள். அசட்டுத்தனம் வந்து நின்றது.

“ஆண்டாள்! அழறயா? ஏன்? என்ன? உடம்புக்கு என்னடி?” என்று கேட்டார். கர்ப்பிணிகள் அழக்கூடாது என்று டாக்டர் கூறக் கேட்டதுண்டு. எனவே, ஆண்டாள் கண்களைக் கசக்கிக் கொள்வது அவருக்குப் பிடிக்கவில்லை. கண்களைத் துடைத்தார். கன்னத்தைக் கிள்ளினார். “கண்ணல்லவோ! எதற்காக அழுகிறாய்? வயிற்றை வலிக்கிறதோ?” என்று கனிவோடு கேட்டார். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு முத்தம் தந்தார் அவசர அவசரமாக. மீண்டும் கேட்டார், “என்ன உடம்புக்கு?” என்று ‘இவ்வளவு ஆசையும் எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷத்தால்தானே இவருக்கு உண்டாயிற்று? உண்மையைத் தெரிவித்தால் என்னை வெட்டிப் போடலாமா என்றல்லவோ அவருக்குத் தோன்றும்? ஐயோ! நான் என்ன செய்வேன்?’ என்று ஆண்டாள் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய கண்கள் பேசின. அவர் கண்டு கொள்ளவில்லை. அவளுடைய உதடு துடித்திடக் கண்டார். ‘ஆகா! ஆண்டாள் நல்ல அழகிதான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். அவள், மனத்திலே மூண்டு கிடந்தது அவருக்குத் தெரியாது.

“தெய்வீகமானது காதல்! இதன் சக்தியே அபாரம். அது மன்னனை மண்குடிசை முன்பும் மண்டியிடச் செய்யும் மாவீரனையும் பணிய வைக்கும்” என்றெல்லாம் கூறுகிறார்களே யொழிய, ஆடவர் உலகம் பெண்களிடமிருந்து எதிர்ப்பார்க்கும் குதூகலமும் குடும்ப வளர்ச்சிக்கான மார்க்கமும் கிடைக்கக் காணாமற்போனால் அவர்களுக்கு ஆயாசம் மேலிடுகிறது. ஆசை கருகி விடுகிறது, மோசமான நிலைமை ஏற்படுகிறது என்பதை ஆண்டாள் எண்ணினாள். ஏக்கத்திலே மூழ்கினாள்.

“ஆண்டாள்! என்ன செய்யறது சொல்லேன். வயத்தை ரொம்ப வலிக்கிறதோ?” என்று கேட்டார் கபடமறியாத கணவன் வெட்கத்தாலும், அச்சத்தாலும் ஆண்டாள் அனுமதிக்க வில்லை. இல்லை என்றால் வயிற்றைத் தடவி வலியைப் போக்கியிருப்பார், வாஞ்சையுடன்.

“குழந்தையாட்டம் அழுதுண்டே இருக்காதே, ஆண்டாள். பூரண கர்ப்பிணிகள் அழப்படாதுன்னு டாக்டர் சொல்றா. எதுக்கு நீ அழணும்?”

“என் ஜாதகத்தைப் பார்த்தீரோ?”

“ஜாதகத்தையா? இல்லையே, ஏன்?”

“நான் என்னத்தைச் சொல்வேன்? நேத்து ராத்திரி ஒரு கெட்ட சொப்பனம் கண்டேன். அதை நினைச்சாலே கர்ப்பம் கலங்கறது. அழுகையும் தானா வர்றது.”

“அடி பித்துக்குளி! சொப்பனத்தை எண்ணிண்டா அழறது. அடி அசடே! அப்படி என்னடி கண்டுட்டே பிரமாதமான சொப்பனம்?”

“அதை ஏன் கேக்கறேள்?”

“சரி, சொல்ல வேண்டாம்.”

“மனசிலே, அது இருந்துண்டு என்னமோ வேதனை பண்ணறதே.”

“அப்படின்னா சொல்லு. மனசு நிம்மதியாகும். நேக்கு இந்தச் சொப்பனங்களிலே நம்பிக்கை கிடையாது.”

“உமக்கு எதிலும் நம்பிக்கை கிடையாது. நான் கண்டது போல நீர் கண்டிருந்தா, தெரியும் உமக்கு?”

“சரி, சரி, நான் கர்ப்பமா இருப்பது போல் நீர் இருந்தா உனக்குத் தெரியும், அந்த வேதனைன்னு கூடப் பேசுவே போலிருக்கு. சரி, விஷயத்தைச் சொல்லு. என்ன சொப்பனம் கண்டே?”

“நேற்று மாலையே எனக்குக் கொஞ்சம் மயக்கம் இருந்தது. என்னமோ கிடக்குன்னு வழக்கம்போல சாப்பிட்டுப் படுத்துண்டேன்...”

“அதுதான் தப்பு. எப்போ மயக்கமோ, அப்போ சாப்பிடலாமோ? லங்கணம் பரம ஔஷதம்னு பெரியவா சொல்வாளே! சாப்பிடாம படுத்திருந்தா சொப்பனமே இருந்திராது.”

“பெரிய டாக்டர்தான். சும்மா இரும். கர்ப்பிணிகள் பட்டினியா இராத்திரியிலே படுக்கக் கூடாதுன்னு சகலரும் சொல்வா. அதனாலேதான். தூக்கம் வந்தது. பாதி ராத்திரி இருக்கும். யாரோ என் பக்கத்திலே வந்து படுத்தா.”

“என்னடி இது?”

“சொப்பனத்திலே.”

“அப்பா, நீ சொல்ல ஆரம்பிச்சதே நேக்கு ஒரே திகிலா போயிடுத்து.”

“படுத்தது ஆணா பெண்ணான்னுசரியாத் தெரியலே. யாரது, யாரதுன்னு நான் கேட்கக் கேட்க யாருன்னு தெரியலை யான்னு சொல்லிண்டே என் தாடையைப் பிடிச்சிக் கிள்ளிண்டு என்னென்னமோ கோணல் சேட்டைகளெல்லாம் செய்ய ஆரம்பித்தது அந்த உருவம்.”

“என்ன சேட்டை செய்தது?”

“சேட்டை செய்ததுன்னா, எல்லாம் நீங்க செய்வேளே சேட்டைகள், அதுபோலத்தான். நான் ஒரு திமிரு திமிரிண்டு எழுந்தேன். உடனே கலகலன்னு சிரிச்சிண்டு. “ஏண்டி, ஆண்டாள், என்னைத் தெரியல்லையா? நான்தான் உன் ஆத்துக் காரருக்கு முதல் ஆத்துக்காரியா இருந்தவான்னு சொல்லிற்று அந்த உருவம்.”

“அந்தச் சனியனா? உன் சொப்பனத்திலே வந்தா?”

“நடந்ததைக் கேளும். நான் பயந்துபோய், காலைத் தொட்டு நமஸ்காரம செய்துண்டு, “எங்கே வந்தேள்? என்ன வேண்டும் நோக்கு”ன்னு கேட்டேன். உடனே என் வயித்தைக் காட்டி, “உள்ளே இருக்கே, அது வேண்டும் அதை எடுத்துக் கொண்டு போகத்தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு, உம்ம முதல் சம்சாரம் சிரிச்சா, நேக்கு ஒரே அழெ வந்தது. ஐயையோன்னு கூவினேன். உடனே என் வாயை அவ மூடிவிட்டு, என்னை ஒரு பயங்கரமான பார்வை பார்த்தாள், “அடி ஆண்டாள்! உனக்குக் குழந்தை பிறந்தால் அடுத்த நாளே உன் புருஷன் உயிர் போய்விடும். ஜாதகப் பலன் அப்படியிருக்கு. குழந்தை பிறக்காவிட்டால் அவர் தப்புவார். அது தெரிந்துதான் பகவான் எனக்குத் குழந்தை இல்லாமலே செய்தார். இப்போது உன் வயிற்றிலே உலவுவது குழந்தையல்ல. நம்ம ஆத்துக்காரரின் உயிரைக் குடிக்கப் போகும் எமன். அதைக் கொன்றால் அவர் பிழைப்பார். அது பிழைத்தால் அவரைக் கொண்றுவிடும்” என்று கூறினாள்.

“இது என்னடி மகா பயங்கரமா இருக்கே! குழந்தை பிறந்தால் நான் சாவேனா? ஜாதகம் அப்படின்னா இருக்கு?”

“நேக்கென்ன தெரியும்? குங்குமமும் மஞ்சளும் பூசிக் கொண்டு அவள் குலுங்கக் குலுங்கச் சிரிச்சுண்டு சொன்னா. நேக்குப் பயத்தாலே உடல் வியர்த்துப் போச்சு. கைகூப்பி நமஸ்காரம் செய்து, “அம்மா! நேக்கு இம்மாதிரி கஷ்டம் வரச் சொல்லாதே. உனக்குக் கோயில் கட்டி நமஸ்கரிக்கிறோம்”னு கெஞ்சினேன். என்னாலே என்னடி செய்ய முடியும்? உன் வயத்திலே அந்தக் கரு வளர வளர, அவர் உயிர் கொஞ்சம் கொஞ்சமா போயிண்டே இருக்கு. இதை என்னாலே தடுக்க முடியாது. ஒரு வழிதானிருக்கு. உன் கருவை நான் சிதைத்து விடுகிறேன். பிறகு உன் புருஷன் தப்புவார்னு சொன்னா.”

“நீ என்ன சொன்னே?”

“என்ன சொல்வேன்? புருஷனைவிடப் பத்தினிகளுக்கு வேறே என்ன வேண்டும்? நான், “கரு போனாலும் போகட்டும் அவர் தப்பினால் போதும்னு” சொன்னேன். உடனே அவ என் வயித்தைப் பிடிச்சு ஒரே அழுத்து அழுத்தினா. எனக்கு உயிரே போவது போலிருந்தது அடுத்த வினாடி நான் விழிச்சிண்டேன்.”

“சனியன்! இவ்வளவும் சொப்பனந்தானே!”

“சொப்பனந்தான். ஆனால் கர்ப்பம் கலைந்து போயிருக்கே!” என்று கூறி, ஆண்டாள் தேம்பினாள். அவரும் தன்னையறியாமல் இரண்டோர் துளி கண்ணீர் விட்டார். அந்த நேரத்தில் டாக்டர் லலிதகுமாரி அங்கு வந்தாள்.

ஆண்டாள் அழுது கொண்டிருப்பதையும், அவளருகே அமர்ந்து கொண்டு அவள் புருஷன் கலங்குவதையும் கண்ட லேடி டாக்டர் லலிதகுமாரி ஒன்றும் புரியாதவளாய், “ஏன் என்ன சமாசாரம்? ஏன் இரண்டு பேரும் அழுகிறீர்கள்? ஏதாவது விபத்தா?” என்று மடமடவென கேட்கலானாள்.

ஒரு பெண்ணின் எதிரில் அழுவது கேவலம் என்று கருதிக் கொண்டு ஆண்டாளின் கணவன் கண்களைத் துடைத்துக் கொண்டு விசாரத்துடன், “சிகசாரப்பலன் யாரைத்தான்சும்மா விட்டுவிடும்? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று கதை போலாயிற்று. என்ன செய்வது? கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்று கூறினார்.

“கிரகசாரமாவது பரசாரமாவது! நீங்கள் பேசுவது எனக் கொன்றும் புரியவில்லையே” என்று டாக்டர் கேட்க, சோகத்துடன், கனவில் முதல் மனைவி வந்ததும், ஜாதகப்பலனைக் கூறியதும், ஆண்டாள் அலறியதும், கருச்சிதைந்ததுமான விஷயத்தை ஐயர், சாங்கோபாங்கமாகக் கூறி முடித்தார்.

இடையே ஏதும் பேசாமல் லலிதகுமாரி, அந்தப் புனை சுருட்டைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, ஆண்டாளை உற்று நோக்கியபடி, “பாபம்! ஆண்டாளின் ஆசை அவலமாகிவிட்டதற்காக நான் வருந்துகிறேன். இனி, இங்கே தங்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆண்டாளை அழைத்துக் கொண்டு, திவ்ய சேத்திரங்களுக்குப் போய்விட்டு வாருங்கள்” என்று அனுதாபத்துடன் கூறினாள். ஐயர் ஆண்டாளுக்குக் தைரியம் கூறிவிட்டு மறுதினம் இராகுகாலத்திற்குப் பிறகு, வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். இதற்குள் லலிதகுமாரி, பில் தயாரித்துக் கொடுத்தாள். பணம் மறுதினம் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு, அவர் போய்விட்டார்.

பிறகு லிலிதகுமாரி, ஆண்டாளிடம் சென்று, “ஏன் இந்தச் சூது?” என்று கடுகடுத்த முகத்துடன் கேட்டாள். “நேக்கு ஒப்பலே” என்று சாதாரணமாக ஆண்டாள் பதில் கூறினாள். “எது பிடிக்க வில்லையம்மா உனக்கு? தாலி கட்டின புருஷனை ஏய்த்து வாழ்வது பிடிக்கவில்லையா? கர்ப்பிணி என்று பொய் கூறியது பிடிக்கவில்லையா? ஆண்டாள்! நீ பெரிய ஜாலக்காரி! அந்த அசட்டுப் பேர்வழியை ஆட்டிப் படைக்கிறாய். கொஞ்சமாவது புத்தியுள்ளவனிடம் இது போல எவளாவது செய்ய முயன்றால் தெரு சிரித்துவிட்டிருக்கும், இந்நேரம். எப்படியோ போகட்டும் நீ உத்தமியை நம்பவைத்து மோசம் செய்த காரணம் என்ன?” என்று லலிதா கேட்டாள்.

“சூத்ரா வீட்டுக் குழந்தையை என் குழந்தேன்னு கூறி, எங்க ஆத்திலே வளக்கறது மகா பாபகாரியம்னு நேக்கு பயமாயிடுத்து அதுக்காகத்தான் அவரிடம் சொப்பனம்ன்னு கதை சொன்னேன் நீ இப்போ அதுக்கு ஏன் பிரமாதமா கோபங்கொள்றே? நான் வேணுமானா நூறோ, இருநூறோ தந்துடறேன்” என்றாள் ஆண்டாள்.

“மோசக்காரி! சாதி அகம்பாவம் பிடித்தவளே! உன் நூறையும் இருநூறையும் குப்பையிலே போடு” என்று கோபமாக கூறிவிட்டு, லலிதா விஷயத்தை மெள்ள உத்தமியிடம் உரைத்ததோடு, திகிலடைந்த அவளுக்குத் தேறுதல் கூறி உத்தமிக்குப் பிறக்கும் குழந்தையைத் தான் வளர்த்துக் கொள்வதாக வாக்களித்தாள்.

மனைவியின் பேச்சை மெய்யென நம்பிய ஐயர் ஆண்டாளுக்கு அதிகமான போஷணைகள் செய்யத் தொடங்கினார். திராட்சையும் கமலாவும், சாத்துகுடியும் பிறவும் கூடை கூடையாக வந்தன. புதிய புதிய டானிக்குகள் கருச் சிறைந்ததே என்று கவலைப்பட்டு ஆண்டாள் துரும்பாக இளைத்து விடுவாளோ என்று பயந்த ஐயர், அவள் மனம் நிம்மதியாக வேண்டுமென்று கருதி, சரசமாடவும் தொடங்கினார். எனவே, ஆண்டாளுக்கு நஷ்டம் இல்லை, இலாபந்தான்!!

ஊருக்குப் போயிருந்த பார்வதிக்கு இவ்விஷயம் சூட்சசமாகத் தெரிவிக்கப்பட்டது. பார்வதியும் வந்து சேர்ந்தாள். ஆண்டாளின் துரோகம் பார்வதிக்கு ஆச்சரியமூட்டவில்லை. மாறாக, சந்தோஷமே தந்தது. “அந்தச் சாதி வெறி பிடித்த குடும்பத்திலே, உத்தமியின் குழந்தை வளருவது சமுதாயத்துக்கு நட்டம். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டோ, அது நேரிடாமற் போனதற்காக அகமகிழ்கின்றேன்” என்று கூறினாள்.

உத்தமியும் தேறுதல் அடைந்தாள். லேடி டாக்டரின் சிகிச்சைச்சாலை அவளுக்கு ஒரு சிறந்த போதனைக் கூடமாக விளங்கியது. லேடி டாக்டர் போலவே தன் வாழ்வையும் துன்புற்றோரின் தொண்டிற்காகப் பயன்படுத்துவது என முடிவு செய்து கொண்டாள்.