அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
21
               

“ஆயிரம் ஆண்டிகளைக் கொண்டு என்ன அற்புதம் செய்யப் போகிறான்?” என்று துப்பறியும் பிரமநாயகம் யோசிக்க முடியவில்லை. ஆண்டிகள் வேடத்திலே போலீசாரையே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து விட்டால். பார்த்திபன் எந்த விதமான காரியம் செய்வதானாலும் கடைசி விநாடியில் கூடத் தன்னால் அவனை தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே வீணாக, மூளைக்கு வேலை கொடுக்கவில்லை.

பார்த்திபனுடைய கடிதத்தை மதித்து ஆலாலசுந்தரம் பணம கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டு பிரமநாயகம், பழையபடி பண்டாரக் கோலம் தாங்கிக் கொண்டு, பார்த்திபனைச் சென்று கண்டு, “ஆயிரம் தயார்! உத்தரவை எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

“மிக்க சந்தோஷம். ஆனால் நீ செய்ய வேண்டிய காரியத்திலே, ஆரம்ப வேலைதான் முடிந்திருக்கிறது. முக்கியமான காரியத்தை இனிச் செய்ய வேண்டும். அதிலேதான் உன் முழுச் சமத்தும் தெரிய வேண்டும் என்று பார்த்திபன் கூறினான்.

“என் சாமர்த்தியத்தைப் பற்றி நீங்கள் சந்தேகிப்பதுதான் எனக்குச் சங்கடமாக இருக்கிறது. இருக்கட்டும், தூங்கிக் கொண்டிருக்கும் புலி போன்று இருக்கிறேன். எழுப்பிவிட்டுப் பார்த்தால்தானே தெரியும், என் விஷயம்? வீணாகப் பிரதாபத்தைக் கூறுவானேன். நீங்கள் எவ்விதமான காரியம் வேண்டுமானாலும் செய்யச் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை என்றால், காரித் துப்புங்கள்”என்று பிரமநாயகம் ரோஷம் கொண்ட பாவனையிலே பேசினார்.

பார்த்திபன் கொஞ்ச நேரமட்டும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் அவனுடைய நெற்றியிலே சுருக்கங்கள் தோன்றின. தலைகுனிந்து அங்குமிங்கும் உலவுவதும், பிறகு வெறி கொண்டவன் போல வானத்தை அண்ணாந்து பார்ப்பதும், பெருமூச்சு விடுவதுமாக இருந்தான். “இந்தப் பண்டாத்தை முழுவதும் நம்பிவிடுவது சரியாகுமா?” என்று சிந்தனை. அதனால் ஒருவிதமான சஞ்சலம்.

பார்த்திபனுடைய நிலைமையைப் பிரமநாயகம் உணர்ந்து கொண்டார். நெருக்கடியான இந்த நேரத்திலே, எவ்வளவு சந்தேகம் பிறந்தாலும் கடைசியில் தன்னைத்தான் துணை கொள்வான் என்பது தெரியும் பிரமநாயகத்துக்கு. எனவே பார்த்திபனிடம் சற்று முக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்.

பார்த்திபன் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டான். என்ன நேரிட்டாலும் சரி. இனி இந்தப் பண்டாரத்தைக் கொண்டு தான் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, “சரி! நாளை இரவு பத்துமணி சுமாருக்குப் பண்டாரக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு, இதே இடம் வந்து சேர். ஒரே கும்பலாகக் கொண்ட வராதே. பத்து இருபது பேர் கொண்ட சிறு சிறு பிரிவுகளாக வந்து சேரட்டும். போ, உடனே அந்த ஏற்பாட்டை முடித்துக் கொண்டு வந்து சேர், தாமதியாதே” என்று கூறினான்.

பிரமநாயகம், “இரவு பத்துமணிக்கு அவர்களை அழைத்து வந்துவிடுகிறேன். ஆனால், சாப்பாடு ஏற்பாடு ஒன்றும் செய்யக் காணோமே! அந்தப் பயல்கள் பசியோ பசி என்று கூச்சலிட ஆரம்பித்தால் பரமசிவன் கூடப் பயப்பட வேண்டியிருக்கும். நீங்கள் செய்கிற ஏற்பாடு எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆயிரம் பண்டாரங்களை அழைத்து வருவதென்றால் அதற்கு முன்ஏற்பாடாக இங்கே எத்தனை மூட்டை அரிசி இருக்க வேண்டும்? காய்கறி ஒரு பக்கத்திலே குவியலாக இருக்க வேண்டும். பருப்பும் பலகாரச் சாமானும் இருக்க வேண்டாமா? கட்டை காணோம், மூட்டை காணோம். இந்த நிலையிலே, அதுகளை அழைத்துக் கொண்டு வந்தால், யார் அதுகளுடன் மல்லிட முடியும்?” என்று கோபங் கொண்ட பாவனையிலே கேட்டார்.

பார்த்திபன் சிரித்துக் கொண்டே, “பாழாய்போனவனே, சோறோசோறு என்று அலையாதே. அதற்கு வேற ஏற்பாடு செய்து விட்டேன். கவலைப்படாதே. அதோ, காட்டுக்குள்ளே இருக்கும் கோயில் இருக்கிறதே. பார்த்தாயல்லவா! அதுதான் சமையல் இடம். கோயிலிலே இருக்கும் தேவனே தவசிப்பிள்ளை. என் தபோ பலமே, அரிசி இன்றிச் சோறு. பருப்பின்றிக் குழம்பு கொண்டு வந்து சேர்க்கும், பஞ்சைப் பயலே, என்னைப் பார்த்தாலே உனக்குத் தெரியவில்லையா? நான் பஞ்சேந்திரியச் செட்டைகளையும் அடக்கிப் பிரமனையே பணி செய்பவனாகக் கொண்ட பார்த்திபன் என்பது; மூடா நாளை இரவு வந்து சேர். நடக்க வேண்டியதை நான் கவனித்துக் கொள்வேன். போ” என்று உத்தரவிட்டான்.

உள்ளே பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு பிரமநாயகம், பார்த்திபனுடைய தபோ பலத்தைத் தெரிந்து தாசனாகிவிடட்து போல நடித்துவிட்டு, “தெரியாத் தனத்தால் ஏதேதோ பேசிவிட்டேன். தெய்வத்தையே ஏவலனாகக் கொண்டுள்ள திவ்ய புருஷராகிய நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று பயபக்தியுடன் கேட்டுக் கொண்டு பாதத்தைப் பணிந்துவிட்டுச் சென்றார்.

குறிப்பிட்டபடி, மறு இரவு பண்டாரக் கூட்டம் வந்து சேர்ந்து விட்டது. வந்தவர்களுக்குச் சோற்று வாசனையே கிடைக்காததால், ஒரு பரபரப்பு உண்டாயிற்று. பார்த்திபன், “ஆயிரத்தொரு அன்பர்களே, அரை விநாடி வேறு எதைப் பற்றியும் மனத்திலே நினைக்காமல் அமலனைத் தியானம் செய்யுங்கள்” என்று உபதேச உத்தரவு பிறப்பித்தான். பிரமநாயகன் ஆச்சரியங்கூட அடைந்தார். ‘இந்தக் கள்ளன் எவ்வளவு நேர்த்தியாக நடிக்கிறான்? பாமரர் அவனிடம் மயங்கியதிலே என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?” என்று எண்ணிக் கொண்டு.

தியானம் முடிந்த பிறகு பார்த்திபன் மீண்டும் பேசலானான் “பக்தர்களே, உங்களிலே, நூற்றிலே ஒருவராவது, உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமம் என்று உத்தமமான நோக்கத் தோடு, இந்தத் தவக்கோலம் கொண்டிருப்பீர்கள். பெரும் பாலானவர்கள், கபட வேடதாரிகள் என்பது எனக்குத் தெரியும். அதனால் அதற்காக நான் உங்களைக் கோபித்துக் கொள்ள வில்லை. எக்காரணம் கொண்டு நீங்கள் காவி அணிந்திருந்தாலும் சரியே. காவி அணிந்தவர்களைக் கடவுள் சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்லும் தத்துவம் என்னுடையது. கபடம் நிறைந்தவர்களைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டாரே என்று யோசிக்க வேண்டாம். என்னுடைய தபோபலத்தால், உங்களுடைய கபடத்தைக் கருக்கித் தூளாக்கிக் காற்றோடு காற்றாகும்படி செய்து விடுகிறேன். பயப்படாதீர்கள்.

பார்த்திபன் ஆவேசம் கொண்டவன் போலப் பேசினான். பண்டாராக் கூட்டத்திடம் பேசி, மனதை மயக்கி அவர்களைத் தன் இச்சைப்படி நடக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நாடகத்தைப் பார்த்திபன் நடத்துகிறான் என்பது பிரமநாயகத்துக்கு விளங்கிற்று. அந்த ஆயிரவர் உண்மையிலேயே பண்டாரங்களாக இருந்திருப்பின், அடிபணிவர், அரகரா கூறுவர். இப்படிப்பட்ட சிறந்த தலைவர் வெகு சீக்கிரத்திலே ஒரு மடம் கட்டிவிடுவார். அந்த மடத்திலே தங்களுக்கெல்லாம் இடம் கிடைத்துவிடும் என்று எண்ணிச் சந்தோஷித்திருப்பது. வந்தவர்களோ, கே.டி.கள் பண்டாரங்களாக உலவுவதையும், கள்ளர்கள் காவி உடையிலே இருப்பதையுங் கண்டு பண்டாரக் கூட்டத்தின் புரட்டுகளை அடக்கிப் பழக்கப்பட்ட போலீசார். எனவே அவர்களுக்குப் பார்த்திபனுடைய ஆவேசச் சொற் பொழிவு கேட்கக் கொஞ்சம் ஆத்திரம் உண்டாயிற்று. ஆனால் கமிஷனரின் உத்தரவு கடுமையானது. பண்டாரக் கோலத்தில் இருக்கும் பிரமநாயகம், எதை எந்த நேரத்தில் எப்படிச் செய்யச் சொல்கிறாரோ அதுபோல் செய்ய வேண்டும்; அவசரப்பட்டு நீங்களாக எதுவும் செய்துவிடக் கூடாது என்று கமிஷனர் உத்தர விட்டிருந்தார். ஆகையினால் அவர்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டிருந்தனர். “ஆண்டிப் பயல்கள் நமது பேச்சினால் மயக்கம் கொண்டவர்களாகி விட்டனர்” என்று எண்ணிக் கொண்டு பார்த்திபன் மேலும் பேசலானான்.

“ஆண்டிகளே! உங்களை நான் இன்று அழைத்தது விருந்தளிக்க, விருந்து காணோம். ஏதோ வீண்பேச்சு நடக்கிறதே என்று நீங்கள் வியாகூலப்படுகிறீர்கள்! கவலை வேண்டாம் இன்று மட்டுமல்ல. இனி என்னோடு எவ்வளவு காலம் இருந்தாலும் உங்களுக்கு விருந்து உண்டு. விளையாட்டு அல்ல! உங்களுக்கு என்னுடைய தபோவனத்திலே, அருமையான விருந்தளிக்கிறேன். அந்தத் தபோவனம் எங்கே இருக்கிறது என்று என்னைக் கேட்கிறீர்களா? நீங்கள் அந்த வனத்தைக் காணத்தான் போகிறீர்கள்! வழி தெரியக் காணோமே என்று வாடுகிறீர்களா? பாபம்! நான் காட்டுகிறேன் வழி, வாருங்கள்” என்று கூறிக் கொண்டு அவர்களை ஆரண்யத்திலே இருந்த ஆலயத்துக்கு அழைத்துச் சென்று, முன்பக்கத்திலே இருந்த பிரமாண்டமான நந்தியருகே அவர்களை இருக்கச் செய்து, “இங்கே தங்கி இறைவனைத் தொழுதபடி இருங்கள். நான் உள்ளே சென்று தேவனிடம் முறையிடுவேன். அவர் உள்ளம் கனிந்து, வழிவிடுமாறு நந்திக்கு உத்தரவிடுவார். நந்தி விலகி நின்று நாம் போய்ச் சேர வேண்டிய தபோவனத்திற்கான வழி தெரியச் செய்யும்.”

ஆண்டிக் கோலத்திலே இருந்த போலீசாருக்கு, “இவன் யாரோ தெரியவில்லை. புரட்டுக்காரன் என்று நாம் நினைத்தோம். இவன் பேசுவதைப் பார்த்தால், இவன் புரட்டனல்ல. யாரோ ஒரு பைத்தியக்காரன் என்று தோன்றுகிறது. தபோவனமாம். அதற்கு நந்தி வழிகாட்டுமாம். சுத்தப் பைத்தியக்காரப் பயல்! இவனைப் பிடிக்கவா கமிஷனரும், பிரபல பிரமநாயகமும் ஆயிரம் பேர்களை அழைத்துக் கொண்டு வரவேண்டும்? காதைத் திருகிக் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தால் பயல் சுருண்டு விழுவான் கீழே. இவனுக்காக இவ்வளவு பேரின் வேலை வீணாவதா?” என்று நினைத்தனர். பண்டார வேட மணிந்திருந்த பிரமநாயகமே, பணிவுடன் பார்த்திபனிடம் சென்று, “தேவன் அருள் பெற்ற குருநாதா, நந்தி விலகி வழிவிடும் என்று தாங்கள் கூறிய மொழியை இந்த ஆண்டிகள் நம்பவில்லை. நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று நினைக் கிறார்கள். ஆனால், நான் அறிவேன், தங்கள் தபோபலத்தை” என்று கூறினார்.

பார்த்திபன், நந்திக்கருகே கூட்டத்தை இருக்கச் சொல்லி விட்டு, கோயிலுக்குள்ளே, மூலஸ்தானம் சென்றான், தேவனைத் தொழ. போகுமுன், அனைவரும் அரகர, சிவசிவ என்று பஜித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளை யிட்டான். ஆண்டிகளின் அரகர சிவசிவ சத்தம் அரனையும் செவிடனாக்கிவிடும் போலிருந்தது. உள்ளே ஓடினான் பார்த்திபன். ஐந்து நிமிடங்களாயின. அரகர சிவசிவா என்று பஜிதத்படி அனைவரும் நந்தியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்த நிமிஷத்திலே ஆச்சரிய சம்பவம் நடைபெற்றது. பார்த்திபன் கூறியபடியே நந்தி விலகிற்று.

நந்தி விலகக் கண்டதும், ஆண்டி வேடம் பூண்டிருந்த போலீசார் கொஞ்சம் ஆச்சரியமடைந்தனர். ‘இந்தக் கள்ளன் சாமானியனல்ல. பெரிய ஜாலவித்தைக்காரன். இவன் மனிதனை மிருகமாக்குவான்! மிருகத்தை மனிதனாக்குவான்! இவனைப் பிடிக்க இவ்வளவு ஆட்கள் தேவைப்படும் என்று துப்பறியும் பிரமநாயகம் எண்ணியதிலே தவறு இல்லை. இந்தப் பாவி நம்மை என்னென்ன செய்வானோ?” என்று பயந்தனர்.

நந்தி விலகியதும் பண்டாரக் கோலத்தில் இருந்த பிரமநாயகம் பயப்படவில்லை. ஆனால், மிக்க ஆவலோடு, நந்தி விலகிய இடத்திலே தெரிந்த சுரங்க வாயிலைக் கூர்ந்து கவனித்தார். உள்ளே ஒரே இருள். கோயிலின் உள்ளே ஓடோடிச் சென்றார். பார்த்திபன் விக்கிரகத்தின் கால்களைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அடியற்ற நெடும் பனைபோல் அவன் முன் வீழ்ந்து கும்பிட்டு,“அற்புத புருஷரே! ஆண்டவனின் அருமைத் தூதரே! இது கலிகாலம். இக்காலத்திலே கடவுள் ஏது, இருள் ஏது என்று கசடர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கண்டால் தெரியும், உமது மகத்துவம், நான் முதலிலே, என்னைப் போல ஒரு சோற்றுச் சாமியார் என்றே தங்களை நினைத்தேன் இப்போது நந்தி விலகிடக் கண்டேன். என் தவறை உணர்ந்தேன். அபசாரம் செய்த என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன். உமது பொன்னடி போற்றினேன்” என்று கூறினார். கூறிவிட்டு அ விக்கிரகத்தின் தாளை வணங்கும் பாவனையாகத் தொட முயல்கையில் பார்த்திபன், அவரை ஆசீர்வதிப்பவன் போலத் தலையைத் தடவி தூக்கி நிறுத்தி, விக்கிரகத்தின் பாதங்களை அவர் தொட ஒட்டாமல் தடுத்துவிட்டான். இந்தச் சூட்சுமத்தைத் துப்பறிபவர் தெரிந்து கொண்டார், என்றாலும் அதை வெளிக்குக் காட்டாமல், பார்த்திபனுடைய மகிமையைக் கண்டு பரவசமானதாகவே பாசாங்கு செய்தார்.

“சரி, என்னுடைய சீடர்களுடன் இனிப் பூலோக கைலாயம் என்ற புனிதபுரிக்குப் போக வேண்டும். இங்கே கிடைக்கும் பழைய கந்தைகளை எண்ணெயில் தோய்த்துத் தீவர்த்தியாக்கிக் கொள், சுரங்கமொன்று தெரியும், நந்தி விலகிய இடத்திலே, அச்சுரங்கத்தினுள்ளே போனால், சாலோக சாமீப சாரூகப பலøப் தரக்கூடிய, பூலோக கைலாயம் போய்ச் சேரலாம். அங்குச் சென்ற பிறகு, என்னுடைய மற்ற அற்புதங்களைக் காட்டுகிறேன்” என்று பார்த்திபன் கூறிட, பண்டாரங்களுக்கு ஆண்டி வேடத் துப்பறிவோன், குருவின் கட்டளையைக் கூறினான். சிலர், தீவர்த்திகள் பிடித்துக் கொண்டனர். ஒவ்வொருவராக, உள்ளே இறங்கினர். எல்லோரும் இறங்கிக் கொஞ்ச தூரம் சென்ற வாயிலில், நந்தி பழையபடி வந்து நின்றுவிட்டது.

தீவர்த்திகளின் ஒளியினால், சுரங்கம் ஒருவாறு தெரிந்தது. சிவ நாம பஜனையுடன் ஊர்வலம் போல ஓராயிரம் ஆண்டிகளும் சென்றனர். வளைந்தும், சில இடங்களிலே அகன்றும், வேறு சில இடங்களிலே குழிகள் நிரம்பியும் மற்றும் சில இடங்களிலே சற்றுச் செங்குத்தாயும் இருந்தது, சுரங்க வழி. எவனோ ஒரு சிற்றரசன் காலத்திலோ, அல்லது காடட்ரசன் காலத்திலே அச்சுரங்கம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்; இதை எப்படியோ பார்த்திபன் தெரிந்து, தன்னுடைய காரியத்துக்குப் பயன்படுத்திக் கொண்டான் என்பதைப் பிரமநாயகம் யூகித்துக் கொண்டான்.

ஆண்டி வேடப் போலீசாருக்குக் கிலியும் தைரியமும் மாறி மாறி வந்தன. என்ன ஆகுமோ, யாது நேருமோ என்ற கிலி! என்ன ஆவது? நாம் ஆயிரம் பேர் இருக்கிறோமே, இவன் என்ன செய்ய முடியும்? பிரமநாயகம் ஆழம் தெரியாமலா காலை நுழைப்பார்! அவனுடைய மாயாஜாலங்களெல்லாம் பிரமநாயகத்திடமா பலிக்கும் என்ற நம்பிக்கை.

சுரங்க வழியாக நெடுந்தூரம் சென்றதும், கொஞ்ச தூரத்தி லிருந்து ஏதோ சத்தம், இரும்பு அடிப்பது போல, உரத்த குரலில் யாரோ பேசுவது போலக் கேட்டது. மேலும் கொஞ்சம் தொலைவு சென்றதும், தீ நாற்றம்! போலீசாருக்கு நரகலோக நினைவு வரலாயிற்று. இந்தப் பாவி, ஏதாவதொரு பயங்கரமான நரகலோகத்தைத் தயாரித்து வைத்திருக்கிறானோ? பிரமநாயகம், பண்டாரக் கோலத்திலே இருந்தாலும், நாமும் ஆண்டிகளல்ல என்பதையும் அறிந்துக் கொண்டு, எல்லோரையும் ஏக காலத்திலே அழித்துவிட இந்தப் பயங்கரமான பாதையிலே புக வைத்தானோ? சுரங்கத்திலே சுடுநாற்றமடிக்கிறது. விதவிதமான சத்தம் கேட்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை. நெருப்புக் குழிகளிலே தள்ளி விடுவானோ? நீர்நாய்களை ஏவிக் கடிக்கச் செய்வானோ? என்னென்ன இம்சைகள் நடக்குமோ? தெரிய வில்லை. முடிச்சவிழ்ப்பவனையும், கள்ளச் சாவிக் காரனையும் கன்னத்திலே இரண்டு அறை கொடுத்து அடக்கி விடுவது நமது வழக்கம். கன்னம் வைக்கிற கள்ளனை, முதுகுத்தோல் உரிய அடி கொடுத்து அடக்கிவிட்டிருக்கிறோம். ஊர்ப் போக்கிரிகளின் முட்டிகளைத் தட்டி அவர்களை மூலையில் உட்கார வைத்து விடுவது நமக்குத் தெரியும். இவன் அப்படிப்பட்டவனாக இல்லையே என்று பயந்தனர்.

இவ்வண்ணம் பயத்தோடு நடந்து சென்றவர்களை மேலும் கிளி கொள்ளச் செய்வதுபோல, ஒரு சம்பவம் நேரிட்டது. பலவிதமான சத்தங்கள் ÷ட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று நின்று விட்டன. ஒரே அமைதி, அந்த அமைதியைக் கண்டு ஆச்சரியமடைந்து ஆண்டிக் கூட்டம் அச்சங் கொள்ளும் படி, சுரங்க வழியிலே, திடீர் திடீர் என்று பல உருவங்கள் தோன்றலாயின. ஒவ்வொரு உருவத்தின் கையிலும் ஈட்டியும் வேலும் மின்னிக் கொண்டிருந்தன. பாதையின் அடியிலே படுத்துக் கொண்டிருந்த உருவங்கள் காலடிச் சத்தம் கேட்டதும், மின்சார வேகத்தில், எழுந்து நின்ற காட்சி, தைரியசாலியைக், கூடக் கோழையாக்க கூடியதாக இருந்தது. பாதையை அந்த உருவங்கள் அடைத்துக் கொண்டு வரக்கூடாது. அனுமதி இல்லை என்று கூறுவதுபோல் இருந்ததது, அக்காட்சி உருவங்கள் வாய் திறந்து ஏதும் பேசவில்லை. இதுகண்ட ஆண்டிக்கூட்டம் அலறிற்று.

பார்த்திபன் பெருங்குரலிலே சிரித்துவிட்டு, அக்கூட்டத் துக்கு முன்னால் சென்றான். ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்பவன் போல நின்று கொண்டு, “பயப்படாதீர்கள். இவை பதுமைகள்!! பாவிகளை மட்டுமே இவை பாதையிலே வழி மறிக்கும்!!” என்று கூறிவிட்டு ஒரு சிறு குழலெடுத்து ஊதினான். அந்தச் சத்தம் கேட்டதும், எவ்வளவு வேகமாகப் பதுமைகள் தோன்றினவோ, அதே வேகத்திலே மறைந்தன. பாதை பழையபடி காணப்பட்டது. பதுமைகள் மறைந்தும், பண்டாரக் கூட்டத்துக்குப் பயம் மறையவில்லை. அச்சத்தோடு தான் நடக்கலாயினர். நடக்கும் போதுதான் தெரிந்தது. எந்தப் பதுமைகள் திடீரென எழுந்து நின்று மறைந்தனவோ, அதே பதுமைகளே பாதையிலே பத்துக் கிடந்தன. படிக்கட்டுகள் போல! அவைகளின் மீது கால் வைத்து நடக்கும்போது திடீரென மீண்டும் அவை எழுந்து நின்றால் தங்கள் கதியாதாகும் என்பதை நினைக்கும்போது, ஊர்வலக்காரரின் உள்ளம் குலுங்கிற்று, பயத்தால்.

பார்த்திபன் கைதேர்ந்த கபடன் என்பது தெரிந்தது. ஜாக்கிர தையாகவே நடந்துவந்த பிரமநாயகம், பதுமைக் காட்சியைக் கண்ட பிறகு பார்த்திபன், சகல தந்திரங்களையும், தெரிந்து நடந்திருக்கிறான். பலமான முன்னேற்பாடுகளோடு திட்டத்தை வைத்திருக்கிறான். ஆகவே மேலும் ஜாக்கிரதையாக இவன் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும். தவிர ஆயிரம் பேரிருக்க அச்சம் ஏன் என்று அசட்டையாக இருக்கக் கூடாது. நாம் சிறிதளவு தவறினால் பார்த்திபன் தப்பித்துக் கொள்வது மட்டுமல்ல். சதியாலோசன மர்மம் கண்டுபிடிக்க முடியாது தாகிவிடும என்பது மட்டுமல்ல. ஆயிரம் போலீஸ் வீரர்கள் அநியாயமாகச் சாக நேரிடும் என்பதை உணர்ந்தார்.

பாதையிலே கிளம்பிய காலடிச் சத்தத்தைக் கேட்டு சுரங்கத்திலே இருப்பவன் குமாரோ, வேறு யாரோ, ஏதோ ஓர் விசையைத் திருக, அந்த விசையினால் இயங்கும்படி அமைக்கப் பட்ட பதுமைகள் பாதையிலே அதுவரை படிக்கற்களாக இருந்தவைகள் எழுந்து நின்றன. இதுதான் சூட்சுமமேயொழிய, மந்திர சக்தியுமில்லை. மகத்துவமும் இல்லை என்பது பிரம நாயகத்துக்குத் தெரிந்தது. என்றாலும் எப்படிப்பட்ட தந்திரக்காரனுடைய மூளை போட்டியிட வேண்டியிருக்கிறது என்பதையும் இச்சம்பவம் உணர்த்திற்று. முன்பிருந்ததைவிட, அதிக ஜாக்கிரதையுள்ளவரானார் பிரமநாயகம்.

ஒரு பெரிய கதவு தானாகத் திறந்தது. உள்ளே ஊர்வலம் நுழைந்தது. சில நூறுபேர் அங்கு பலவிதமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். ஒருபுறத்திலே பட்டரை, மற்றோர் புறத்திலே உலைக்கூடம்! வேறோர் இடத்திலே மரச்சாமான்கள். இன்னுமோர் பக்கத்திலே விதவிதமான ஆயுதக் குவியல்கள்! ஒரு தொழிற்சாலையைக் கண்டனர். நந்திதேவன் காட்டிய சுரங்கத்துள், ஆச்சரியமடைந்தனர். ஆயிரம் ஆட்களும், உள்ளே வந்து சேர்ந்து பிறகு, கதவு தானாகவே மூடிக் கொண்டது.

“பூலோக கைலாயம் இதுதான். நான் சிருஷ்டித்த பூலோக கைலாயம்” என்று கூவினான் பார்த்திபன், பெருங்குரலிலே. “இந்தக் கைலாயத்திலே மான் இல்லை. ஆனால் மழு இருக்கிறது. முப்புறமும் மட்டுமல்ல, எதிர்ப்புறமும் எரிக்கவல்ல, சிவனார் கூட்டம் இங்குண்டு. இனி நீங்கள் அந்தச் சிவனார் கூட்டத்தவராகி விட்டீர்கள்” என்று கூறினான்.

“எங்கே குமார்?” என்று கேட்டான், வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி, அவன் ஓடினான் குமாரை அழைத்துவர. ஆயிரம் ஆட்களையும் சிறுசிறு பிரிவுகளாக்கி, அமரச் செய்தான். பிரமநாயகம் பார்த்திபன் பக்கத்திலே, கைகட்டு வாய் பொத்தி நின்றிருந்தார். பார்த்திபன், சுறுசுறுப்புடன், இங்குமங்கும் வேலை செய்பவர்களிடம் பேசுவதும், உத்தரவுகள் பிறப்பிப்பதுமாக இருந்தான். சில நிமிஷங்களிலே இராணுவ உடையிலே ஒரு வாலிபன் வந்து நின்றான், பார்த்திபன் எதிரில், ஆண்டவன் எதிரிலே பக்தன் நிற்பது போலிருந்தது, வாலிபன் பார்த்திபனிடம் நின்ற தன்மை.

“குமார்” என்று கூறிக் கொண்டே அந்த வாலிபனைத் தழுவிக் கொண்டான் பார்த்திபன். குமாரின் கண்களிலே நீர் தளும்பிற்று.

“இவ்வளவு காலம்... இந்த இருட்டு உலகில்...” என்று விம்மினான்.

“வீரக் கோட்டத்திலே நின்று விம்முபவன் கோழை! குமார்! நான் உன்னை அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை. வெளியே உள்ள வெறி உலகிலே வேலை அதிகமாக இருந்தது. இருந்தாலும் என் அம்புகள்...” என்றான்.

“ஆம். அம்புகள் கிடைத்தன. அவைகளிலே கண்டபடியே இங்கு காரியத்தை என்னால் கூடுமான வரையிலே செய்து வைத்திருக்கிறேன்” என்று குமார் கூறிட, பார்த்திபன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, “உணர்ச்சியே உருவாக வந்தவனல்லவா நீ. உன் இலட்சிய உலகு, தோன்றப் போகிறது. நீ பட்டபாடு வீணாகாது. என் திட்டமும் பாழாகாது. முட்டாள்கள் சிலர் என்னை முறியடிக்க முயன்றனர். தெரியுமா உனக்கு? சிறையிலே கூடத் தள்ளினர். உனக்குத்தான் வெளி உலகத் தொடர்பே இல்லையே. உனக்கெப்படித் தெரியும்...?” என்று கூறிவிட்டு, ஆயிரம் பேரைக் காட்டி, “இவர்களுக்கு உணவும் உடையும் அளிக்க ஏற்பாடு செய்!” என்று உத்தரவு பிறப்பித்தான்.
“உணவுக்குக் குறைவில்லை. நீங்கள் போன மாதம் கோயிலிலே குவித்த மூட்டைகள், இன்ன ஓர் ஆயிரம் பேருக்கும் உணவாகும்” என்று களிப்புடன் கூறினான். குமார்.

“ஒரு பெரிய பாசறைஅ போர்க்கழகமல்லவா. இங்கே நிறுவியிருக்கிறார்கள்!” என்று பிரமநாயகம் ஆச்சரியப்பட்டார். பார்த்திபன் குமாரை நோக்கி, “சரி போய் அவரை அழைத்து வா, இந்த வீரர்களைக் காணட்டும்” என்று கூறினான். குமார் விரைந்து சென்றான்.

அவன் திரும்புவதற்குள் பார்த்திபன், பிரமநாயகத்தை நோக்கி, “ஆண்டி! என் கைலாயத்துக்குள் பிரவேசித்து விட்டாய். இனி உண்மையை உரைக்கலாம் என்று எண்ணுகிறேன். இங்கே நீங்கள் காண்பது, சாதாரணமான சந்நியாசி மடமல்ல. இது வீரர்கள் கோயில், போர்தான் இங்கு பூஜை! துப்பாக்கியும் வெடிகுண்டும் இங்கு தேவனுக்கு நைவேத்தியச் சாமான்கள். இந்தக் கோயிலின் நிர்மாணகர்த்தா, மூல புருஷனை இனித்தரிசிக்கப் போகிறீர்கள். நான் இதற்கு உற்சவ மூர்த்தி, குமார் இக்கோயிலின் பிரதம பூசாரி. நீங்கள் இனி இக்கோயிலுக்குத் திருப்பணி செய்து கொண்டிருக்க வேண்டும். இது என் உபதேசம். உபதேசம் இங்கு, உத்தரவாக இருக்கும்” என்று கூறிச் சிரித்தான்.

பயத்தால் பாதி உயிர் போய்விட்டது. ஆண்டிக் கோலங் கொண்டிருந்த போலீசாருக்கு. பிரமநாயகத்தாலும் தலையை அசைக்க முடிந்ததே தவிரப் பேச முடியவில்லை. அச்சத்தைவிட அவருக்கு ஆச்சரியம் அதிகமாக இருந்தது. அது நாவை அடக்கி விட்டது.

குமாரும் மற்றொருவனும் - கொஞ்சங் குள்ளமாக ஒருவன் - வந்து சேர்ந்தனர். அவனைக் கண்டதும் பார்த்திபன் சற்று மரியாதையாக நடக்கலானான்.

வந்தவனைக் கண்டதும் பிரமநாயகத்துக்கு அவருடைய வாழ்க்கையிலே என்றுமே ஏற்பட்டிராத ஆச்சரியம் உண்டாயிற்று.

வந்தவன் ஒரு ஜப்பானியன்!

எவ்வளவோ ஆச்சரியகரமான சம்பவங்களைக் கண்டு, பழக்கப்பட்டிருந்த பிரமநாயகம் பிரமித்துப் போனார். பார்த்திபன் ஒரு கொள்ளைக் கூட்டத்தைத் தயாரித்திருக்கிறான். கள்ள நோட்டுகள் வெளியிடுகிறான். காமக்கூத்துக் கழகம் வைத்திருக்கிறான் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தால், அவர் அதிசயப்படமாட்டார். சுரங்கத்திலே சுறுசுறுப்புடம் ஆயுதங்கள் செய்து குவிக்கப்படுவது கண்டபோது கொஞ்சம் ஆச்சரியமடைந்தனர் என்ற போதிலும், இந்த ஆயுதச சாலையில் மூலவராக ஒரு ஜப்பானியன் இருப்பான் என்று பிரமநாயகம் எதிர்பார்க்கவே இல்லை.

ஜப்பானியன் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டான். தமிழகத்திலே பிறந்து வளர்ந்தவன் போல வணக்கம் செலுத்தினான். பார்த்திபன் பற்களெல்லாம் வெளிய தெரியும்படி சிரித்தான். ஆயிரவரை, ஜப்பானியனுக்குக் காட்டி, “நமது புனித படைக்குப் புது ஆட்கள்!” என்று பெருமையுடன் கூறினான்.

“பார்த்திபா! உன் அறிவும் ஆற்றலும் ஆயிரம் என்ன? ஆயிரம் ஆயிரம் பேரைக் கூட நமது புனிதப் படைக்குக் கொண்டு வரக் கூடியதுதான். திறமைக்கும் புத்திக் கூர்மைக்கும், ஏற்றபடியான நிலைமை விரைவிலே கிடைக்கும். இது ஆண்டவன் தீர்ப்பு. நான் கேவலம், அந்தத் தீர்ப்பைத் தெரிவிக்கும் தேவதூதன்” என்று கூறிவிட்டு, ஆயிரவரை அன்புடன் பார்த்து, “அன்பர்களே! புதனிப் படை வீரர்களே! உங்களை நான் வரவேற்கிறேன். உங்களைப் போல இன்னும் பலரும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களுக்கு நான் தலைவனல்ல. தாசன், புனிதப் படைக்குத் தலைவன் தேவன். மானிடர் எவருமல்லர்! இதை முதலிலே தெரிந்துக் கொள்ளுங்கள். நான் தேவனால் இங்கு அனுப்பப்பட்டவன். எதற்கு? இந்தப் பரத கண்டத்தைப் பரங்கிகளிடமிருந்து விடுவித்து, பரிபாலனத்தை உமது தேச மக்களிடம் கொடுக்க, ஆசியாக் கண்டத்திலே அனாதி காலந்தொட்டு, ஆண்டவனுடைய ஆசீர்வாத பலத்தால், ஜொலித்துக் கொண்டிருந்த பரத கண்டம் இன்று சீரழிந்து விட்டது. இந்தத் தேசத்துச் செல்வம், சீமைக்குப் போய் விட்டது. இது உங்கள் காந்தி சொன்னதுதான். இப்படி இம்சையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை விடுதலை பெறச் செய்யும் நோக்கமே இப்புனிதப் படைக்கு. இதிலே சேர்ந்துள்ள நீங்கள் நவபாரத வீரர்கள். இந்துஸ்தான தீரர்கள்!! உங்களை நான் பாராட்டுகிறேன்” என்று வாழ்த்தினான்.

பார்த்திபனுடைய சதியாலோசனையைக் கண்டறிய வந்த இடத்திலே ஜப்பானியச் சதியே வெளியாவது கண்ட பிரமநாயகத்தின் மனம் படபடவென அடித்துக் கொண்டது. பார்த்திபன் ஊரை ஏய்த்து வைத்திருக்கிறான். என்று யூகித்த பிரமநாயகம், ஜப்பானியனின் நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு தந்திரம் செய்தார்.

“ஐயா! என் சந்தேகம் போக்க வேண்டும். எங்கள் நாடு விடுதலை பெற வேண்டும். அதற்காக நாங்கள் எவ்விதத் தியாகம் செய்யவும் தயார். ஆனால் அது எப்படி நடக்கும்? பீரங்கியும் வெடிகுண்டும் வைத்துக் கொண்டிருக்கும் வெள்ளைக்காரனை வெறுங்கையுடைய நாங்கள் என்ன செய்ய முடியும்? இங்கே கொஞ்சம் ஆயுதம் இருக்கிறது. ஆயிரம் பேர் இருக்கிறோம். என்றாலும் இது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய பலத்தைத் தாக்கப் போதுமா? எனக்குத் தைரியம் இல்லை” என்று கூறினார்.

இந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்ற குமாருக்கு கொஞ்சம் திகைப்பு உண்டாயிற்று. அவனுடைய முகத்திலே சீற்றமும் தோன்றிற்று. பார்த்திபனை நோக்கி, “முதலாளித் தனத்தை முறியடிக்கவே முகாம் அமைக்கிறோம் என்று ஆரம் பத்திலிருந்து இன்றுவரை சொல்லி வந்தீரே. இப்போது பரத கண்ட விடுதலை என்று வேறு பாஷையிலே பேசுகிறீரே, இது என்ன?” என்று கேட்டான்.

“தம்பியின் தீட்சணியம், கொஞ்சம் மட்டுப்ட வேண்டும். பார்த்திபா! நமது வேலையின் மிக முக்கியமன கட்டம் இப்போது. இந்தச் சமயத்திலே, இப்படிப்பட்ட இலட்சிய வாதிகளைக் கொஞ்சம் கட்டுக் காவலிலே வைத்திருக்க வேண்டும்” என்றான் ஜப்பானியன்.

“விபரீதமான வாத் செய்கிறீரே! இலட்சியவாதியை அடக்க வேண்டும்! பேஷ்! இந்த இருட்டு உலகிலே இவ்வளவு காலம் அடைபட்டு மாடு போல் உழைத்து மக்கள் சுற்றத்தை மறந்து, குற்றவாளி போல வெளி உலகிலே தலைகாட்டாது நான் பாடுபடுவது எதற்கு? இலட்சியவாதியை அடக்கி வைக்க வேண்டும் என்ற இறுமாப்பான பேச்சைக் காதிலே கேட்பதற்காக? இலட்சியவாதியிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையே தெரியாதா, உமக்கு?” என்று ஜப்பானியனை நோக்கி ஆச்சரியத்துடன் கேட்டான் குமார்.

அவன் புன்சிரிப்புடன், கண்களைச் சிமிட்டிக் கொண்டே, “இலட்சியவாதியைத் தட்டிக் கொடுத்து, வேலையிலே ஈடுபட வைக்க வேண்டும். வேலை ஆரம்பமானதும், இலட்சியவாதியைக் காரியவாதி கட்டுப்படுத்துவான். இதுதான் வேலை முறை. போகப் போகத் தெரியும்” என்று கூறிவிட்டுப் பார்த்திபனை அழைத்துக் கொண்டு தன் விடுதிக்குப் போனான்.

பிரமநாயகம், குமாரின் உதவியை எந்தச் சமயத்திலும் பெற முடியும் என்ற தைரியம் அடைந்தார். நிலைமையையும் தெரிந்து கொண்டார். குமார், சமதர்ம ஆட்சியை எப்படியாவது நிறுவ வேண்டும் என்று ஆவல் கொண்டான். புரட்சிப்படை தயாரித்து, அந்தப் புதுமுறையைக் கொண்டு வரலாமென்று குமாருக்குப் பார்த்திபன் ஆசையூட்டினான். இலட்சிய வெறி பிடித்த குமார், பார்த்திபனுடைய உள் எண்ணம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பார்த்திபன் சிலம்புக்கு ஏற்ற விதத்திலே ஆடினான். பார்த்திபன் இலட்சியவாதியாகிய குமாரை, இருட்டு உலகிலே ஒரு பாசறை அமைக்கச் செய்தான். இடையே ஜப்பானியனுடன் ரகசிய ஏற்பாடு நடைபெற்றது. புரட்சிப்படை புனிதப்படையாக மாறிற்று. சமதர்ம ஆட்சியை உண்டாக்கும் போக்குக்கு மாறாக ஜப்பானியனுடைய கையாளாக வேண்டிய போக்கு வளரலாயிற்று. இது குமாருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. இந்த நிலைமையை எந்த நேரத்திலும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிரமநாயகத்துக்கு ஏற்பட்டதும், முதலிலே தோன்றிய திகைப்பும் திகிலும் போய்விட்டன. தெளிவாக விஷயத்தைத் தெரிந்து கொண்டால், காரியத்தை வெற்றியாக முடித்து விடலாம் என்று தீர்மானித்து, குமாரின் வாயைக் கிளறத் தொடங்கினர்.

“ஆகா! நமது நாட்டுக்கு நல்லகாலம் தொடங்கிவிட்டது. விடுதலை வரப் போகிறது. அடிமைத்தனம் ஒழியப் போகிறது” எ“னறு பிரமநாயகம், பரவசமாகிவிட்டவர் போலக் கூவினார்.
அவருடைய தோளைப் பிடித்துக் குலுக்கிக் குமார், “முட்டாளே! அந்தக் குள்ளனும் கள்ளனும் கூறினது கேட்டு ஏமாந்த சோணகிரியாகிவிட்டாயா? அந்தப் பாவிகள் என்னை நம்ப வைத்து மோசம் செய்கிறார்கள். உனக்குத் தெரியாது. அவர்கள் சூது. நீ இங்கே இன்றுதானே வந்தாய் இளித்த வாயனே! இங்கே அவர்கள் ஏற்பாடு செய்யும் அக்கிரமம் உனக்குத் தெரியவில்லையா?” என்று பதைபதைத்துக் கேட்டான்.

“நீ யார்? புனிதப் படையின் தளபதி போல நடிக்கிறாய். ஆனால் உன் போக்கும் பேச்சும், உன்னை ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்டு என்று காட்டுகிறது” என்று பிரமநாயகம் கேட்டார். கோபப்பாவனையில்.
“நானா பிரிட்டிஷ் ஏஜெண்டு? பைத்தியக்காரா? நான் யாருக்கம் கையாளல்ல. கயவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே. என் பேச்சைக் கேள். நான் விரும்புவது சமதர்மம்! அதற்காகவே இந்த இருட்டு உலகிலே, எவ்வளவோ கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். சமதர்ம ஆட்சிக்குப் புரட்சி நடத்துவதாகக் கூறின பார்த்திபன் இப்போது ஜப்பானியனுடன் கூடிக் கொண்டு ஏதோ ஓர் சதியாலோசனை செய்கிறான். எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை. வெறுப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. நீ இந்த இடத்துக்குப்ப புதியவன். நி யோசனை செய்து பார்” என்று கூறினான்.

“யோசனை ஏன்? நாட்டு விடுதலைக்கு வழி கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த நேரத்தில் மேனம் மிதுனம் பார்க்கலாமோ! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா? வெள்ளைக்காரர்களை விரட்ட வழி கிடைக்கிறது என்ற உடனே எனக்கு ஆனந்தம் அளவு கடந்து உண்டாகிறது” என்று மிக்க ஆர்வத்தோடு பிரமநாயகம் பேசினார்.

“அடடா! அந்தப் பாவிகள் எந்த உணர்ச்சியைக் கிளப்பி விட வேண்டும் என்று கருதினார்களோ, அதுதானே நடக்கிறது. ஐயா! தேசபக்தி கொண்டவரே! இந்தத் தேசத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. உனக்கு மட்டும்தான் என்று எண்ணிவிடாதே. ஆனால் அந்த விடுதலையை ஜப்பானியன் ஏன் வாங்கித் தருகிறேன் என்று கூறினான். அவனை நம்பலாமா? அவன் தேச விடுதலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை மொழி கூறி நம்மைத் தூண்டி விட்டுக் கலகத்தை நடத்திப் பிறகு, இங்கு ஜப்பானிய சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தவேதந்திரமாக வேலை செய்கிறான். இது தெரியவில்லை?” என்று குமார் கூறிவிட்டு ஜப்பானியரின் நாடு பிடிக்கும் வெறி பற்றி விளக்கினான்.

பிரமநாயகம் கடைசிவரையில் குமாரின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டார். ஜப்பானியரின் நல்லெண்ணத்தைப் பற்றிச் சந்தேகிக்க முடியாது என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்.

கோபங்கொண்ட குமார் வாதிட்டான், வற்புறுத்தினான். உபமான உபமேயங்களோடு பேசிப் பார்த்தான். உலக நிலைமை பற்றி உருக்கமாக உரைத்தான். எதற்கும் பிரமநாயகம் ஏதாவது மறுப்புரைத்துக் கொண்டடே இருக்கக் கண்டு, குமார் மேலுங் கோபங்கொண்டு, “மரமண்டைக்காரனான உன்னிடம் பேசுவதில் பயனில்லை! நீ கூலி! ஜப்பானின் எலும்புத் துண்டு போட்டால் வாலைக் குழைக்கும் வர்க்கந்தான். உன்னிடம் பேசிக் காலத்தை வீணாக்குவானேன்! நான் இந்தப் பாசறை அமைக்கப் பாடுபட்டவன். பல ஆயிரம் ரூபாய் தொழிலாளர் நிதியாகக் கிடைத்ததை இதிலே கொடியிருக்கிறேன். எனக்கில்லாத உரிமை இந்தப் பார்த்திபனுக்கு ஏது? ஜப்பானியனுடன் கூடிச் சதி செய்வதை நான் நேரிலேயே கண்டித்துவிடப் போகிறேன். தலை போவதானாலும் சரி” என்று கூறிவிட்டு, ஆவேசம் கொண்டவன் போல் ஜப்பானியன் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான்.

அதே சமயத்தில் ஜப்பானியனின், பார்த்திபனுக்கு இந்தியா, பர்மா, மலாய் பகுதிகள் பொறிக்கப்பட்டிருந்த பூகோளப் படத்தைக் காட்டி, ஜப்பானியருடைய போர்த் திட்டங்களை விளக்கிக் கொண்டிருந்தான். “பார்த்திபா! யுத்தம் ஆரம்பமானதும் பசிபிக் கடலை, எங்கள் கடற்படை கலக்கிவிடும். சிங்கப்பூர் சிதறும், ரங்கூன் நாசமாகும். பர்மா பிடிபடும் பிறகு...”என்று கூறிவிட்டுப் புன்சிரிப்புடன் பார்த்திபனைப் பார்த்தான்.

“பிறகு..?” என்று பார்த்திபன் கேட்டான். “பிறகா? ஒரே பாய்ச்சல்! அரக்கானிலிருந்து கிளம்பினால் கல்கத்தா! கல்கத்தா விலிருந்து ஒரு படை டெல்லி! மற்றொரு படை சென்னை! இன்னொரு படை பம்பாய்! பார்த்திபா! அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் மதயானைகள்! அவைகளை அடக்கும் அங்குசம் டோக்கியோவிலே தயாராக இருக்கிறது” என்று ஜப்பானியன் கூறினான் களிப்புடன்.

“ஜப்பானிய சாம்ராஜ்ஜியத்தின் வீரதீரம் இருக்கட்டும். நமது ஒப்பந்தம் ஜப்பானிய சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்படுமா என்பது தெரிய வேண்டுமே! மலேசியாவை வீழ்த்துவோம். பசிபிக் கடலைக் குடிப்போம், பர்மாவைப் பிடிப்போம் என்று கூறிக் கொண்டே போனால் போதுமா? நமது ஒப்பந்தம் என்ன ஆகும்? அதைக் கூறும்!” என்று கேட்டான் பார்த்திபன்.

“இதிலே என்ன சந்தேகம்? பர்மாவிலே ஜப்பானியர் பிரவேசித்ததும் இந்தியா விடுதலை அடையும்” என்றான் ஜப்பானியன்.

“விடுதலை கிடக்கட்டும்! என் நிலை! அதுபற்றி மௌனம் சாதிக்கிறீரே!” என்று கேட்டான் பார்த்திபன். ஜப்பானியன் சிரித்து விட்டு, “ஓ! மறந்து விடவில்லையே! ஜப்பானிய சாம்ராஜ்ஜியத்தின் நேசரான உமக்குத்தான் தமிழ்நாட்டு ஆட்சி உரிமை!! நீரே இங்கு கவர்னர்! இதுதான் உம்மிடம் செய்து கொண்ட ஒப்பந்தம். டோக்கியோ இதனை ஏற்றுக் கொண்டு விட்டது” என்று கூறினான்.

“டோக்கியோ, நமது ஒப்பந்தத்தை அங்கீகரித்து விட்ட தல்லவா! பேஷ்! இனி உமது திட்டத்தைக் கூறும். இம்மியளவும் கெடாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் பார்த்திபன்.

ஜப்பானியன் பார்த்திபனை நோக்கி, “நமது திட்டம் மிகச் சுலபமானது. ஜப்பானியப் படைகள் பர்மாவிலே புகுந்ததும், இங்கே நமது திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் இயக்கதின் மூலம் வெள்ளையர்கள் மீது நாட்டிலே மூட்டப் பட்டிருக்கும் அதிருப்தியை ஜப்பான் சாதகமாக்கிக் கொள்ளும். பர்மா வேலø முடிந்ததும் இங்கு நாம் வெள்ளைக்காரருக்கு விரோதமான ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். நாமாக அவசரப்பட்டு ஆரம்பிக்கக் கூட வேண்டியதில்லை. காங்கிரஸ் இயக்கத்தார் ஏதாவது திட்டம் எதுவாக இருப்பினும் அதனை டோக்கியோ பயன்படுத்திக் கொள்ளும். காந்தியார் கூட எதிர்பார்க்க முடியாதபடி டோக்கியோ அவருடைய திட்டத்தை உபயோகிக்கும். அதே சமயத்திலே, நாமும் செயலில் ஈடுபடுவோம்” என்று ஜப்பானியன் கூறிவிட்டுக் கொஞ்சம் மெல்லிய குரலிலே, “பார்த்திபா! உடலுக்கு இரத்தக் குழாய்கள் போல, நாட்டுக்குப் போக்குவரத்துச் சாதனங்களைக் கெடுத்தால் போதும், பிரிட்டிஷாரின் யுத்த முயற்சி கெடும்” என்று கூறிக் கொண்டிருக்கையில் ஜப்பானியன் துள்ளி எழுந்தான்.

தன் காலிலே இருந்த பூட்சைக் கழற்றினான். காதருகே வைத்துக் கொண்டான். முகம் மலர்ந்தது. தலையை அசைத்தான். பார்த்திபன் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, “பேஷ்! முகூர்த்தவேளை நெருங்கி விட்டது. பார்த்திபா! பெரிய துறை முகத்தை எங்கள் படை பிடித்துவிட்டது!” என்று கூறிவிட்டு பூட்சை மறுபடியும் காலில் அணிந்தபடி, “இதிலே உள்ள இரகசிய ரேடியோ மூலம் செய்தி கிடைத்துவிட்டது. இனித் தாமதிக்கக் கூடாது. நம்மிடம் இருப்பர்களிலே தைரியசாலிகளா
கவும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் உள்ளவர்களுக்கு நான் கொஞ்சம் பயிற்சியளிக்க வேண்டும்” அது முடிந்ததும் நமது வேலைத் திட்டம் ஆரம்பமாகும்” என்று கூறினான்.

“என்ன பயிற்சி?” என்று பார்த்திபன கேட்க, ஜப்பானியன், “பிரமாதமாக ஒன்றுமில்லை. தண்டவாளங்களை அகற்றுவது எப்படி? ரயில்களைக் கவிழ்ப்பது எவ்விதம்? தபாலாபீசுகளை எந்த நேரத்திலே கொளுத்துவது என்பன போன்ற சில்லறை விஷயங்கள்தான்” என்று சிரித்தபடி கூறிக் கொண்டே பார்த்திபனை கட்டி அணைத்துக் கொண்டு, “பார்த்திபா! ரயில்கள் கவிழ வேண்டும்! தபாலாபீசுகள் எரிய வேண்டும்! கட்டிடங்கள் தூளாக வேண்டும்! இந்தக் காரியம் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலே ஜப்பானியப்படை இந்தியாவிலே நுழையும்” என்று ஆனந்தமாகக் கூறினான்.

ஜப்பானியன், ரயில்கள் கவிழ்க்கப்பட வேண்டும், தபாலாபீசுகள் தீப்பற்றி எரிய வேண்டும் என்று பேசுகையிலே, அவனுடைய கண்களிலே தீப்பொறி பறந்தது. ஆவேசம் வந்தவன் போல ஆடினான்.

அவன் உரையைக் கேட்டுவிட்டான் குமார்! திடுக்கிட்டுப் போனான். பார்த்திபனைக் கூவி அழைத்தான்.

“இந்தக் குள்ளன் என்னவெல்லாமோ குளறுகிறானே! என்ன விஷயம்?” என்று கோபமாகக் கேட்டான்.

ஜப்பானியன் கோபமாகச் சிரித்துவிட்டு, “இருபது ஆண்டுகளாக இந்தியாவிலே இருந்து வந்தேன். என் தாய் நாட்டை விட்டு எத்தனையோ வேடங்களிலே உலவி வந்தேன். உங்கள் தமிழைக் கற்றுக் கொண்டேன். எதற்காகத் தெரியுமா?” என்று கேட்டான்.

“எங்கள் நாட்டிலே இடர் விளைவிக்க!” என்று பதிலளித்தான் குமார். பிரமநாயகத்தின் மனம் மகிழ்ச்சியுற்றது.

“அல்லடா முட்டாள்களே! உங்கள் நாட்டை ஆங்கிலேய ரிடமிருந்து விடுவிக்க” என்றான் ஜப்பானியன். அந்தப் பல்ல வியைத் துணையாகக் கொண்டு பார்த்திபன், சுதந்திரத்தின் மேன்மை பற்றிப் பாடலானான். குமார் கொதிப்புடன் இருந்ததால் பார்த்திபனும் ஜப்பானியனும் கூடிக்கொண்டு ஏவிய சொல்லம்புகளுக்குத் தக்க பதில் கூறமுடியாது இருந்தான். இந்தக் காட்சியை கவனித்து இருந்த பிரமநாயகம், தெளிவான குரலிலே ஆனால் கோபமின்றி, “சுதந்திரத்தின் மேன்மையை மறுப்பவர் மடையர்கள்!” என்று கூறினார்.

உடனே பார்த்திபன் சந்தோஷமடைந்து, குமாரை நோக்கி, “கேள் குமார்! ஒரு ஆண்டிக்கு இருக்கும் அரசியல் அறிவுகூட உனக்கு இல்லையே! சுதந்திரத்தின் சூட்சுமத்தை மறக்கும் பேர் வழி உண்மையிலே மடையன்” என்று கூறினான். பிரமநாயகம், “சுதந்திரம் மேன்மையானது. அதைப் பெறுவது நமது பிறப்புரிமை. அதைத் தர மறுப்பது கொடுமை” என்று பேசினார். “பேஷ்! சபாஷ்! குமாரின் காதிலே இந்தச் சிந்து ஒலிக்கட்டும். இன்னொரு தடவை கூறு. அவன் மூளையிலே இருக்கும் அழுக்குப் போகுமட்டும் கூறு” என்று பார்த்திபன் கூறினான்.

அவனுடைய பாராட்டுதலுக்காகக் காத்துக் கொண்டிராமல், பிரமநாயகம் பேசலானார். “சுதந்திரத்தைப் பெற முயலாத மக்கள் மனித உணர்ச்சியே இல்லாதவர்கள். சுதந்திரத்தைப் பெற சகல முயற்சிகள் எடுக்க வேண்டியதுதான். ஆனால்...” என்று இழுத்திடவே, பார்த்திபன் குறுக்கிட்டு, “ஆனால் என்ன?” என்று பதைப்புடன் கேட்டான். “ஒன்றுமில்லை! சுதந்திரம் தானமாக வரக்கூடாது. அதைப் பெறவும், பெற்றதை நாம் பிறரிடம் இழந்து விடாதபடி பாதுகாத்துக் கொள்ளும் திறமும் வேண்டும்” என்றார்.

அதுகேட்ட குமார் வெற்றிப் புன்சிரிப்புடன் பார்த்திபனை நோக்கி, “இப்போது நீ கவனி. இந்த ஆண்டிக்கு இருக்கும் யூகமும் உனக்கில்லையே, பார்” என்று சொன்னான்.

ஜப்பானியன், “ஆசியாக் கண்டத்திலே இந்தியாவும் ஜப்பானும் இருக்கின்றன. ஆகவே அவை ஒன்றுக்கொன்று உதவி செய்துக் கொள்வது முறை. அந்த முறையிலேதான் எங்கள் நாடு இந்திய விடுதலைக்காக உதவி செய்கிறது” என்று பிரமநாயகத்தின் வாயடக்கக் கூறினான்.

“ஆசியாக் கண்டத்துப் பழம்பெரும் நாடான சீனாவைச் சித்திரவதை செய்துக் கொண்டே இந்தச் சித்தாந்தத்தைப் பேசும் துணிவு உங்களுக்கு இருக்கிறது. ஆனால், உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நம்பும் மடமை இங்கே பலருக்கு இல்லை” என்று பிரமநாயகம் சவுக்கடி தந்தார். “சபாஷ்!” என்று கூவினான். குமார்! ஓடிச்சென்று பிரமநாயத்தைத் தழுவிக் கொண்டு, “நீ ஆண்டியல்ல! நிச்சயமாக ஆண்டியல்ல” என்று ஆனந்தத்துடன் பேசினான்.

“ஆமாம்! இவன் ஆண்டியல்ல. பார்த்திபா! நீ ஏமாந்து போனாய்” என்று மிரட்சியுடன் கூவினான், ஜப்பானியன்.

“மோசக்காரா! யார் நீ?” என்று மிரட்டினான், பார்த்திபன். “யாரயிருந்தால் என்ன? இவன் யார் என்று தெரிந்தும் உறவு கொண்டாடும் உனக்கு, நான் யார் என்பது பற்றி அவ்வளவு கவலையா அப்பா” என்று கேலி பேசினார் பிரமநாயகம்.

“ஐயா! நான் நம்பி மோசம் போனேன். நானும் இந்தப் பார்த்திபனுமாகத் தொழிலாளர் இயக்கத்தை நடத்தி வந்தோம். நிதி திரட்டினோம். அந்தப் பணத்தை முதலாக வைத்து, இந்தப் பாசறையை அமைக்கலாமென்றும், இரகசியமாக இந்த ஏற்பாட்டை நான் கவனித்துக் கொள்வதென்றும், இவர் வெளியே இருந்து உதவி திரட்டி வருவாரென்றும், புரட்சிக்கு ஏற்ற சமய
மாகப் பார்த்து நடத்துவதென்றும் கூறினான். நான் நம்பினேன்; மோசம் போனேன்” என்று குமார் அழுகுரலிற் கூறினான்.

பிரமநாயகம், “மோசம் போக இருந்தாய், தப்பினாய்” என்று தைரியம் கூறினார்.

“சுட்டுத் தள்ளு இந்த நாய்களை” என்று ஜப்பானியன் உத்தரவிட்டான்.

“சுதந்திரத்தைத் தானமாகத் தருபவனின் பேச்சைப் பார்!” என்று கூறிச் சிரித்துக் கொண்டே ஓர் ஊதுகுழலை எடுத்து ஊதினார், பிரமநாயகம்.

ஜப்பானியனுடைய கூலிகளுக்கும் பிரமநாயகத்தின் படைக்கும் சண்டை மூண்டது.

ஜப்பானியன் தன் நிலைமை தன்குப் பாதமாகி விட்டது தெரிந்து, ஒரு கத்தியால் குத்திக் கொண்டு மாண்டான்.

பார்த்திபன் அவனுடைய ஆட்களுடன் கைது செய்யப் பட்டான்.

பிரமநாயகத்தின் திறமையைப் புகழாதார் இல்லை. மந்திரி சபை மகிழ்ச்சி அடைந்தது. இந்தச் சதி வழக்கு விசாரணையை நாட்டு மக்கள் ஆவலோடு கவனித்து வந்தனர். குமார் அப்ரூவராகி, பார்த்திபனுடைய சகல சேட்டைகளையும் வெளிப்படுத்தினான். ஆயுள் தண்டனை தரப்பட்டது பார்த்திபனுக்கு.

ஆலாலசுந்தரர், தன் வாரிசுக்கு நேரிட்ட கதி கண்ட கலங்கினார். பார்வதி, பழைய நாட்களிலே தயாரித்துக் கொடுத்த பட்டியலின்படி, தனது சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்து விடுவதாகப் பகிரங்கமாகக் கூறிவிட்டார். தொழிலாளருக்கெனத் திரட்டப்பட்ட நிதியைக் கொள்ளையடித்தவன் குமார் என்று, பார்த்திபனுடைய பிரசாரத்தால் ஏமாந்த தொழிலாளர்கள் உண்மை தெரிந்ததும் உவகை அடைந்து, குமாரைத் தங்கள் தோழனாக ஏற்றுக் கொண்டனர்.

பார்வதி, குமாரின் விடுதலை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். சூதுக்காரனின் வலையிலே சிக்கிய குமார் படட கஷ்டங்களைக் கேட்டு அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

“இவ்வளவு அமளிக்கும் ஆதிகாரணம் என்ன தெரியுமா, குமார்?” என்று பார்வதி பரிவுடன் கேட்டாள்.

“பொருளாதார பேதம்” என்றான் இலட்சியத்திலே இலயித்திருந்த குமார். “பொது விவகாரத்தைப் பற்றியல்ல குமார் நான் கேட்பது, பார்த்திபனுடைய விஷயமா?” என்று விளக்கமுரைத்து வினவினாள், பார்வதி.

“ஆதி காரணம் என்ன?” - ஆவலுடன் கேட்டான் குமார். ‘பொறாமைதான்!” என்றாள் பார்வதி.

“ஆமாம்!” என்று குமார், அவள் கூறியதன் முழுப் பொருளையும் உணர்ந்து கொள்ளாமலே கூறினான்.

“குமார்! நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற பொறாமை அவனுக்கு” என்று பார்வதி சொன்னபோது குமாருக்கு என்ன பதில் கூறுவதென்றே தோன்றவில்லை. அவன் நினைப்பதற்கே நெஞ்சம் நடுங்கிய விஷயம் அது! அபாரமான ஆவல். ஆனால் அளவிட முடியாத சந்தேகம், அது நடக்கக் கூடிய காரியமா என்று. “பார்வதி!” என்று குமார் கூறிவிட்டு, ஏதோ கீதம் கேட்டவன் போல இலயித்து விட்டான்.

பார்வதியும் குமாரும் தொழிலாளர் இயக்கக் காரியத்திலே முன்போலவே ஈடுபட்டனர். சுதந்திரம், சமதர்மம் எனும் இலட்சியங்கள் நிறைவேற, முதலிலே இந்தியா மீது கண் வைத்திருக்கும் ஜப்பானியப் போர் வெறியைத் தகர்த்தாக வேண்டும். தொழிலாளர் இதையே இன்றைய திட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இருவரும் நாடெங்கம் பிரசாரம் செய்யலாயினர்.
காதல் மணம் கமழப் பதிவுத் திருமணம் நடைபெற்றது. பிரமநாயகமே அத்திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.