அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
2
               

பார்வதிபாய், பி.ஏ. ஓர் நாகரிக நங்கை! அனாதை ஆசிரமத்திலே வளர்ந்து, அறிவின் துணையால் படித்துப் பட்டம் பெற்று, பிரசாரம் புரிவதிலே ஆவல் கொண்டு, விவேகிகள் சங்கத்திலே சேர்ந்து,பார்த்திபனின் காதலுக்குப் பாத்திரமானவள். கல்யாணத்தை இரண்டோர் ஆண்டிலே முடித்து விடலாம் என்று பார்த்திபன் கூறினான். ஆனால் அவள் ஒன்றும் சகுந்தலையாகவில்லை! துஷ்யந்தனைச் சற்றுத் தூரத்திலேயே வைத்திருந்தாள்.

டைபாய்டு சுரத்தினால் கஷ்டப்பட்ட களைப்புத் தீர டாக்டர்கள் பார்வதியை ஓர் கிராமத்திலே போய் ஓய்வாக இருக்கச் சொன்னார்கள். பார்த்திபனிடம் சிபாரிசுக் கடிதம் வாங்கிக் கொண்டு, மிராசுதார் வசித்து வந்த சுந்தரபுரிக்கு வந்து குமாருக்குச் சொந்தமாக இருந்து, மிராசுதாரரின் சுவாதீனத்துக்கு வந்த வீட்டிலே,வேலைக்காரியுடன் தங்கினாள்.

பார்வதிபாயின் தரிசனத்துக்காக பார்த்திபன், அடிக்கடி சுந்தரபுரிக்கு வரலானான். அந்த ‘விஜயம்’ ஜெயத்துக்கு “அபஜெயமாக” முடிந்தது. எவளோ ஒரு சிறுக்கியுடன் கூடிக் கெட்டுப் போகிறார் பார்த்திபர் என்று, நாரதகான லோலம் செய்து விட்டாள். குருக்கள் சும்மா இல்லை. எனவே மிராசுதாரர், “இந்தப் பையனுக்குச் சொத்து வைத்துவிட்டுச் சாவதைவிட, பாதி தமயந்திக்கும் பாதி சிவன் கோவிலுக்கும் எழுதி வைத்துவிடப் போகிறேன்” என்று பேசத் தொடங்கினார்.

பார்த்திபன் காதுக்கு இது எட்டியதும், “அந்த லோபியின் சொத்து எனக்கேன்? அது கோயிலுக்கோ, குளத்துக்கோ, போகட்டும்” என்று கோபமாகப் பேசலானான். சுந்தரபுரியிலே பிரசாரம் நடத்தினான். சொத்தை இழந்த குமாருக்குத் தூபமிட்டான். குமார் வெறும் உணர்ச்சியால் தாக்குண்ட மின்சார உருவம்! பார்த்திபனிடம் விசை இருந்தது. ஏவினால் தீர்ந்தது மிராசுதாரரின் வாழ்வு! இவ்வளவு ஆபத்து வந்துவிட்டது. அவ்வளவு சம்பத்துப் படைத்த சீமானுக்கு!!

பார்வதியின் அழகு மற்றோர் ஆபத்தை உண்டாக்கி விட்டது. அவளைக் கண்டு பேசவும் விருந்துக்கு அழைக்கவும் மிராசுதாரர் அடிக்கடி அங்குப் போக ஆரம்பித்தார். அவள் மரியாதையாக வரவேற்பதை இவர் சம்மதிக்கிறாள் என்று எண்ணிக் கொள்வார். அவள் நாகரிகமாகப் பேசுவதை இவர் நம் எண்ணத்தைத் தெரிந்து கொண்டாள் என்று கருதிப் பூரிக்கலானார். பார்வதி ஆடவரின் மனப்போக்கை அறியாதவளல்ல! எவ்வளவு பேதமை இந்தக் கிழத்துக்கு?”என்று எண்ணிச் சிரிப்பாள். மிராசுதாரர் ஜாடையாகத் தன் கருத்தை தெரிவிக்கலானார். பார்வதிக்கு ஒரு யோசனை பிறந்தது. சொத்து பார்த்திபனுக்குக் கிடைத்தாலும்,பார்த்திபன் பேச்சுக்கேற்றபடி காரியத்தைச் செய்வானோ, மாட்டானோ என்ற சந்தேகம் அவளுக்கு. ஆகவே, மிராசுதாரரின் ‘நோய்’ தீருமுன்,பொதுக் காரியத்துக்கு எவ்வளவு சொத்து உபயோகப் படுத்த முடியுமோ அதுவரையில் இலாபம் என்று தீர்மானித்தான். அதற்கேற்றபடி நடக்கலானாள்.

“தங்கள் சொத்து பூராவும் பார்த்திபனுக்குத்தான் சேருமாமே.”

“நான் இஷ்டப்பட்டால்தான், சுயசம்பாத்தியமாச்சே.”

“ஊரிலே சொல்கிறார்கள். அவர்கூடச் சொன்னார்.”

“செய்யணும். எனக்கும் பார்த்திபனுக்குத்தான் சொத்தை தரவேண்டும் என்ற விருப்பம். ஆனால்...”

“அது என்ன மிராசுதார்வாள்! ஆபத்தான ஆனால் போடுகிறீர்-”

“ஒன்றுமில்லை. முதல் மனைவிக்குக் குழந்தையில்லா விட்டால் என்ன? வேறே ஒரு கலியாணம் செய்து கொள்வது தானே என்று ஊரிலே சில முக்கியஸ்தர்கள் பேசுகிறார்கள்.”

“சந்தோஷமான செய்தி! பெண் பார்த்தாய் விட்டதோ?”

“பார்வதி! கேலியா செய்கிறாய்?”

“என்னைக் கலியாணம் செய்து கொள்ளுங்களேன்.”

“வேடிக்கை செய்கிறாய். எனக்கு மட்டும் உண்மையில் அந்தப் பாக்கியம் கிடைத்தால்...”

“எனக்கு ஒரு விரதம் இருக்கிறது. யார் இந்த மாகாணத்திலே யே பொதுக் காரியத்ததுக்கு அதிகமான பொருள் செலவிடு கிறார்களோ,அவர்களையே கலியாணம் செய்து கொள்வதென்று நான் சபதம் செய்திருக்கிறேன். அது நிறைவேறவும் உங்கள் ஆசை நிறைவேறவும் உங்களிடம் சொத்து இருக்கிறது.”

“நிஜமாகவா, பார்வதி! நிச்சயமாகச் சொல். என்னென்ன கோயிலுக்கு என்னென்ன செய்ய வேண்டும் சொல், இந்த வினாடியே செய்கிறேன்.”

“கோயிலுக்கு என்ன குறை வந்துவிட்டது. குடிசைகளைக் கவனியும் முதலிலே. ஏழைகளுக்கு வழி செய்ய வேண்டும். நான் நாளைக்கு ஒரு பட்டியல் அனுப்புகிறேன். அதன்படியும் தருமம் செய்யுங்கள். ஆறுமாதமான பிறகு, நான் உம்மைக் கலியாணம் செய்து கொள்ளுகிறேன். விஷயம் பார்த்திபனுக்குத் தெரியக் கூடாது.

மிராசுதாரர் வேகமாகத் தலையை அசைத்தார். வழக்கமாக கைகுலுக்குவது போல் பார்வதி அன்றும் மிராசுதாரரின் கைகளைக் குலுக்கினாள். அவரோ அந்தக் கைகளைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். அதற்கே அவருடைய கரங்கள் நடுங்கின.