அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
20
               

பார்த்திபன் மீது பலமான குற்றச்சாடடு இருந்தபோதிலும், சிறையிலே அவனுக்கு மரியாதை காட்டினர். பணத்தின் செல்வாக்கு அங்கும் தலை காட்டிற்று. பஞ்சத்திலடிபட்டுப் பசி தாங்கமாட்டாமல் திருட்டுத் தொழிலிலே ஈடுபட்டவர்கள் அங் மிருகங்கள் போல் கிடந்தனர். ஏழைகளை வஞ்சித்து, ஒரு மங்கையின் உயிரைப் போக்கும் மகா பாதக எண்ணங் கொண்ட பார்த்திபன், சீமான் ஆலாலசுந்தரரின் வாரிசு, செல்வக் குடியில் பிறந்தவன் என்ற காரணத்துக்காக அவனைச் சிறையிலே மரியாதையுடன் நடத்தினர். பார்த்திபனுக்குப் பண பலம் இருக்கிறது. சீமையிலிருந்து நிபுணத்துவம் வாய்ந்த ஒரு வக்கீல் வருகிறார். அவர் எப்படியும் வழக்கைப் பார்த்திபன் பக்கம் வெற்றயாகும் படி நடத்துவார் என்று ஊரார் பேசிக் கொண்டனர். ஆலாலசுந்தரர் தமது சொத்து முழுவதையும் செலவழித்தாகிலும் பார்த்திபனைக் காப்பாற்றுவார் என்றுபேசிக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை காவலாளிகள் (வார்டர்கள்) பார்த்திபனின் பணிவாகவே நடந்து கொண்டனர்.

“அடித்தாலும் ஒரு பத்து ஆயிரம், இலட்சம் அடிக்க வேண்டும் இப்படி அரையே அரைக்கால் ரூபாயைத் திருடி விட்டு, ஆறுமாதம் அவதிப்படுகிறோம். நாம் இதிலும் முட்டாளாகத்தான் இருக்கிறோம். முடிச்சவிழ்க்கும் நேரத்திலே போலீசாரிடம் சிக்கினால், முதுகுத்தோல் உரிந்து விடுகிறது. சிறையிலே ‘சீ’ வகுப்பு, களி உருண்டை, கம்பளித் துணி, கட்டாந் தரையிலே படுக்கை, காவலாளியிடம் தொல்லை, நமக்கு. சீமான் போல உலாவுகிறார்கள். ஆயிரமாயிரமாக, இலட்ச இலட்சமாகக் கொள்ளையடித்த பேர்வழீகள். அமாவாசையைப் பார்த்து, அர்த்த ராத்திரியிலே சிறு தூறல் இருக்கும்போது, புறக்கடையிலே புகுந்து, கன்னம் வைக்கிறோம். மை இருட்டிலே பாம்பு கடித்தாலும், தேள் கொட்டினாலும் ‘ஆ’வென்று அழமுடியாது. வீட்டுக்காரன் விழித்துக் கொண்டு பிடித்து விட்டானோ; பாதி உயிர் போய்விடும், அங்கே நடக்கும் பூஜையால். இவ்வளவு ஆபத்தும் இருக்கிறது தெரிந்து துணிந்து திருடுகிறோம். சிக்கி கொண்டால் சிரழிவுபடுகிறோம். இந்த ‘ஏ’ வகுப்பிலே பெரிய ஆபீசர்கள் உலவுகிறார்கள், ஒரு சிரமமுமின்றி. சூட்சமமாக ‘செக்’ புத்தகத்திலே சேட்டை செய்தவனும், இமிடேஷனை வைரமாகக் காட்டியவனும், முலாமிட்டதைத் தங்கமென்று கூறி ஏமாற்றியவனும்! அவன் வெளியேயும் மோட்டாரிலே உலவினான். பங்களாவிலே வசித்தான். மின் விசிறியின் கீழ் உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டே ஊர்க்குடியைக் கெடுத்து வந்தான். இங்கேயும் அவனுக்குப் பால், பழம், படுக்கக் கட்டில், குளிக்கக் தனி அறை கிடைக்கிறது. நாம் சிறையிலே கிடக்கும் நேரத்திலே நமது பெண்டு பிள்ளைகள் பிச்சை எடுக்கின்றனவோ, எங்கேனும் கூலி வேலை செய்து வயிற்றைக கழுவிக் கொண்டிருக்கின்றனவோ, யார் கண்டார்கள்? இந்த ‘ஏ’ வகுப்பு பெண்டு பிள்ளைகள் அதே பங்களாவிலே குஷாலாகத்தான் இருக்கின்றனர்” என்று ‘சீ’ வகுப்பிலே சிக்கிக் கிடக்கும் கைதிகள் மனத்திலே தோன்றாமலிருக்க முடியுமா? எவ்வளவுக் கொள்ளவு கொள்ளயடித்த தொகை அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நிலைமை உயருகிறது தண்டனைச் சாலையிலே. இது என்ன விதமான நீதியைச் சார்ந்ததோ தெரியவில்லை. சிறையிலும் சரி, வெளியிலும் சரி, செல்வவான் இந்த மரியாதையைப் பெறுகின்றான். மூட்டைப் பூச்சியை நசுக்கும் மக்கள், பாம்புக்குப் பயந்து பால் ஊற்றுகிறார்களே அதுபோலத்தான் சிறை நீதியும் இருக்கிறது என்று அந்த ‘சீ’ வகுப்புக் கைதிகள் சிந்திக்காமலிருக்க முடியுமா? பார்த்திபனை அவர்கள் காண நேரிட்ட போதெல்லாம் இது போன்ற எண்ணங்கள் தோன்றின. ஒருவருக் கொருவர் இரகசியமாகப் பேசிக் கொண்டனர்.

“எவளோ ஒரு குட்டியைக் கொலை செய்ய இருந்தானாம். மாட்டிக் கொண்டான். தூக்குக் கிடைத்துவிடும்” என்று கூறினான், ஒரு கைதி.

“அவள் இவனை விட்டுவிட்டு எவனையாவது இழுத்துக் கொண்டு போயிருப்பாள். மனுஷனுக்கு ரோஷம் இருக்காதா? அதனால்தான் அவளைக் கொலை செய்ய நிலைத்திருப்பான்” என்று வேறொர் கைதி கூறினான்.

“ரோஷம் இருந்ததே தவிர, அந்த முட்டாள் ஒரு கையலா காதவன் போலிருக்கே. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகி இருக்க வேண்டாமா? அவளைக் கொல்ல முடியாமல் கூண்டிலே வந்து சிக்கிக் கொண்டான்” என்று ஒரு சிவப்புத் தொப்பி சீற்றத்தோடு கூறினான். அவன் பக்கத்து வீட்டுக்காரனோடு தன் மனைவி பேசினது கண்டு சந்தேகப்பட்டு அரிவாளால் அவள் தலையை வெட்டிய அசகாயசூரன்.

இப்படித் தன்னைப் பற்றிக் கைதிகள் பலவிதமாகப் பேசிக் கொள்வது பற்றிப் பார்த்திபன் கவலைப்படவில்லை. அந்தக் கைதிகளை அவன் அலட்சியமாகவே பார்த்தான். சமூகத்தின் கூளங்கள் இவர்கள் என்று கருதினான்.

‘என் மனைவி எவ்வளவோ இதமாகத்தான் சொன்னாள். வேண்டாம். வம்புக்குப் போகாதீர்கள். நான் ஏழைகள் அநியாயமாக யாராவது நம்மை நடத்தினால் கூட நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியவர்கள். பணம் பாதாளம் வரை பாயும். போலீசிலே நாம் சிக்கிக் கொண்டால் தப்ப முடியாத என்று புத்தி கூறினாள். ஆனால் ரோஷம் எனக்கு. எங்கள் வீட்டுச் சுவரை வேண்டுமென்றே இடித்த பக்கத்து வீட்டுக்காரன் கன்னத்திலே ஒரு அறை கொடுத்தேன். அந்தப் பாவிப் பயலுக்குப் பல் சொத்தை. பொல பொலவென்று உதிர்ந்தது. குபுகுபுவென்று இரத்தம் ஒழுகிற்று. டாக்டர் சர்டிபிகேட் வாங்கினான். எவனோ ஒரு வாயாடி வக்கீலை வைத்து வழக்காடினான். நானோ வரட்டுப்பயல். வந்து சேரவேண்டி நேரிட்டது இந்த இடத்திற்கு” என்று ஏழ்மையால் இடர்ப்பாடு, சிறைப்பட்டவன் கூறிட அதைக் கேட்டு அவனுக்கு ஆறுதல் கூறவேண்டி மற்றோர் கைதி, “ஆமாம்! ஒரு பெரிய சந்தேகம் எனக்கு. நாம் குற்றம் செய்தோம். அதற்காகத் தண்டிக்கப் படுகிறோம். சிறையிலே இருக்கிறோம். இது நம்மைத் திருத்துமாம்! திருந்தாவிட்டாலும் மற்றவர்களுக்கு பயமூட்டுவதன் மூலம் எச்சரிக்கையாவது செய்யும். குற்றம் செய்த நமக்கு இந்தத் தொல்லை தருவது ஒரு விதத்திலே முறை என்றே கூறலாம். ஆனால் நமது மனைவி மக்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. நாம் சிறைப்பட்டதால் அவர்கள் கஷ்டப் படுகிறார்கள். நம்மை இங்கே கொண்டு வந்ததினால் சர்க்கார் தெரியாமல் நிரபராதிகளைத் தண்டிக்கிறார்கள். இது நியாயமா? நமக்காவது, வீட்டை விட்டு இங்கே அடைபட்டுக் கிடக்கிறோமே. அது ஒன்றுதான் கஷ்டம். அப்படியொன்றும் நாம் வெளியே வாழ்கிறபோது மாடமாளிகையிலே இல்லை. இங்கே இருப்பதும் குடிசையல்ல! பெரிய கோட்டை!! வேளைக்கு வேளை, வேலை அதிகமின்றி, கவலையின்றிச் சோறு; தணி மணிக்கும் குறைவில்øல். இந்த அளவு உணவும் பெற, ஆலைகளிலேவேலை செய்யும் ஆட்கள் படுகிற கஷ்டம் கொஞ்சமல்ல. ஆகவே நம்மைத் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு சர்க்கார் நமக்கு ஒரு விதத்திலே நன்மையே செய்கிறார்கள். குற்றம் செய்த நமக்க ஒரு விதத்திலே நன்மையே செய்கிறார்கள். குற்றம் செய்த நமக்கு இந்த நன்மை புரியும் சர்க்கார், தங்களையும் அறியாமல் குற்றமே செய்யாத நமது குழந்தை குட்டிகளை மனைவி மக்களையும் வாடும்படி செய்து விடுகிறார்கள் தண்டனை அவர்களுக்கல்லவா கிடைக்கிறது. நாம் ஜெயிலிலே இருப்பதால், நமது குடும்பம் பட்டினி கிடக்க நேரிடுகிறது மனைவி மாடென உழைக்கவும் குழந்தைகள் கேட்பாரற்றுக் கெட்டுவிடவும், ஊரார் குடும்பத்தைப் பழிக்கவும் நேரிடுகிறதே. இந்த விசித்திரமான விளைவு, விவேகிகள் வகுத்த சட்டத்தினாலே ஏற்படுகிறதே, இதை எண்ணும்போதுதான் எனக்கு ஏக்கம் பிறக்கிறது. இரவிலே தூக்கம் வருவதிலலை” என்று கூறுவான்.

சிறைச்சாலையிலே பேசப்படும் விஷயங்களே தனிரகம்! பல விஷயங்களைப் பேசுவர். கைதிகள், கைதிகளிலே பக்திமான்கள் உண்டு. பால்மணம் மாறாத குழந்தையை அரைச்சவரன் கையணிக்காகக் கொன்றவன் என்ற குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட கைதி, அதிகாலையிலே அளிக்கப்படும் அரிசிக் கஞ்சியை சூரியநாராயணனுக்கு நிவேதனம் செய்யா முன்பு சாப்பிடமாட்டான். அவ்விதமான பக்திமான்களாகவும், சிறையிலே இருப்பர். பல்வேறு வகை அவர்கள், பல்வேறு போக்கு, பேச்சு பலரகம். ஆனால் பார்த்திபனிடம் அவர்கள் யாவரும் கொஞ்சம் மரியாதையை காட்டுவது வாடிக்கை. “அவனுக்கு என்னப்பா குறை? பணம் இருக்கிறது!” என்று கூறுவர் மெல்லி குரலிலே. சிறையிலே அடைப்பட்ட நேரத்திலுங்கூடச் செல்வந்தனிடம் ஏழை சற்று அடங்கியே நடக்க வேண்டியிருந்தது. கூண்டிலே இருப்பினும் சிங்கத்திடம் பயந்து மனிதர் இருப்பது போல! நீதியின் போல் தவறாது என்ற நம்பிக்கையற்ற உள்ளம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது. காரணம் பணத்தின் ஆதிக்கம் பலப்பல அதிசயங்களைச் செய்து முடிப்பதைப் பார்த்துப் பார்த்து மக்கள் திகைப்படைந்து விட்டிருக்கின்றனர். இந்தத் திகைப்புதான் சிறையிலே பார்த்திபனைக் கண்டதும், மற்றவர்கள் மதிக்கும்படி செய்தது.

துப்பறியும் பிரமநாயகம் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். முதலமைச்சர், வேறு ஒருவரை நியமித்து விட்டார். இந்தச் செய்தி பத்திரிகையிலே வெளிவந்தபோது ஊரிலே பரபரப்பு ஏற்பட்டது. கீர்த்தி வாய்ந்த பிரமநாயகத்தாலேயே முடியாத காரியத்தை வேறு யார் சாதிக்க முடியும் என்று ஜனங்கள் பேசிக் கொண்டனர். பிரமநாயகத்தின் ராஜினாமாவால் உண்டான பரபரப்பு அடங்குவதற்குள் வேறோர் செய்தி வெளிவந்தது. மக்களைத் தூக்கிவாரிப் போடும் படியான செய்தி.

பாத்திபன் கம்பி நீட்டினான்!

சிறையிலிருந்து ஓடிவிட்டான்!

புரட்சிக்காரரின் வேலையா? என்ற கொட்டை எழுத்துத் தலைப்புகளுடன் பார்த்திபன் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்ட செய்தி வெளிவந்தது. மந்திரிசபை மருண்டது! மக்கள் கொதித்தனர்! “பார்த்திபன் ஓடி விட்டான்! ஓடிவிட்டான்!” என்ற காட்டுதீ பரவி ஊரைக் கலக்கி விட்டது.

“எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடிவிட்டானாம்.”

“அவன் ஜாலக்காரனாச்சே. இரும்புக் கம்பிகள் கேவலம் தும்புதான்!”

“பணம் பாருங்களய்யா! சிறையிலே போட்டுப் பூட்டினால்கூட, வெளியே வந்துவிடுகிறது.”

“குபேரனிடம், எமன்கூடப் பயப்படுவானாம். இந்த லோகத்திலும் சரி, வேறெந்த லோகத்திலும் சரி. அந்தச் சக்தியின் முன்பு வேறெதுவும் தலைகாட்டாது சார்.”

“ப்படிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டனர் பார்த்திபன் சிறையிலிருந்து தப்பித்துக் கொண்ட செய்தியைக் குறித்து.

“இது ஒரு பிரமாதமில்லை சார்! 1900ம் வருஷமோ, பதினோராம் வருஷமோ சரியாகக் கவனமில்லை. அப்போது ஒரு அற்புதம் நடந்தது சார், இதற்கு அப்பனாக கைதியைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்தினார்கள். நின்ற உடனே, பூகம்பம் போல ஒரு மாதிரியாக இருந்தது. கோர்ட்டிலே இருந்தவர்கள் ஜட்ஜ் உட்பட, பயந்து ஓட்டமாக வெளியே ஓடினர். கைதி, புன்சிரிப்புடன் கூண்டைவிட்டு வெளியேறினான். ஜட்ஜின் மோட்டாரிலே உட்கார்ந்து கொண்டு தானே ஓட்டிக் கொண்டு போய்விட்டான். இன்று வரையிலே ஆள் அகப்பட வில்லை. மோட்டாரும் கிடைக்கவில்லை” என்ற ஒருவர் கூறினார். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் மற்றொருவர். “நம்ம நரசிம்மாச்சாரியின் மருமகப்பிள்ளை தெரியுமோ, நாராயணமூர்த்தி, அவருக்குக் குப்புசாமி ஜோதிடர் சொன்னாராம் சார்!! குப்புசாமி ஜோதிடர் நேரிலே இதைப் பார்த்தாராம்” என்று அற்புதத்தை உரைத்தவர் கூற, சந்தேகி, “பேப்பரிலே இதுபோல வெளிவரவில்லையே” என்று சொல்ல “வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்று, ஜட்ஜும் மற்றவர்களும் பேப்பர்காரர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்களாம். விஷயத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று” என பதில் கூறிச் சமாளித்தார். கற்பனையைச் செய்தியாக வழங்கிய பேர்வழி.

இவ்வண்ணமாக பலருடைய மூளைக்குத் தொல்லை கொடுத்த பார்த்திபன், “போலிசாம் போலீஸ்!” என்று போலீஸ் இலாகாவை கேலி செய்தபடி போக்கு வண்டிகளிலே சென்று கொண்டிருந்தான், பட்டிக்காட்டான் போல மாறுவேடம் தரித்து! தன்னை நள்ளிரவிலே தப்பிச் செல்வதற்கு உதவி செய்த காவலாளியின் குணாதிசயத்தைப் புகழ்ந்தான்! பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்பதைக் கூட அவன் யோசிக்கவில்லையே, எவ்வளவு யோக்கியன் என்று பாராட்டினான். அவனுக்கு எத்தனை யோக்கியன் என்று பாராட்டினான். அவனுக்கு எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். மாறுவேடம் போட்டுக் கொள்வதிலும், துப்பறி பவர்களை ஏய்ப்பதிலும் தனக்கு இருக்கும் சாமர்த்தியத்தால், கடைசிவரை ஆபத்தின்றிக் காலந்தள்ளிவிட முடியும் என்று நம்பினான். சிறையிலிருந்து எதிர்பாராத விதமாக ஒரு காவற்காரனின் கருணையினால் வெளியே வரும் அதிருஷ்டம் தனக்கு இருக்கும்போது யார்தான் என்ன செய்ய முடியும் என்று எண்ணிக் களித்தான்.

அவனுக்கு விடுதலையின் மூலம் மகிழ்ச்சி அளித்த துப்பறியும் பிரமநாயகம், அவனைப் பின் தொடர்ந்து பல மாறு வேடங்களிலே வருவது பார்த்திபனுக்குத் தெரியாது.

மாறு வேடமணிந்து, காடு மேடு சிற்றூர், கிராமம் பல கடந்து சென்று கொண்டிருந்த பார்த்திபனைப் பின் தொடர்ந்து சென்றால், குமார் ஒளிந்திருக்கும் இடமும், அங்கு நடக்கும் செயலும் தெரிந்துவிடும் என்ற நோக்கத்துடனேயே துப்பறியும் பிரமநாயகம், அவனைப் பின்தொடர்ந்தார். அவருடைய இரகசிய ஏற்பாட்டின்படியேதான், அவருடைய ஆள் ஒருவன் சிறைக்காவலனாக நடித்துச் சிறை சென்று, பார்த்திபனின் நண்பனாக நடித்து வெளியே அனுப்பி விட்டான். விடுதலை கிடைத்து விட்டது, என்று மகிழ்ந்த பார்த்திபனுக்கு தெரியாது, தனக்குக் கிடைத்த விடுதலையே பிறகு கெடுதலாக முடியும் என்பது.

பார்த்திபனின் மாறுவேடங்கள், அத்தகைய வேடங்கள் அணிவதிலே பயிற்சி பெற்ற பிரமநாயகத்திற்குத் தெரியாமற் போகவில்லை. பிரமநாயகத்தின் மாறுவேடங்களை அறியும் அளவு அறிவு அந்தத் துறையிலே பார்த்திபனுக்குக் கிடையாது. எனவே ஒரு நாள் ஆண்டிவேடம் போட்டிருந்த பார்த்திபனை, அதேபோல வேடமிட்டுப் பிரமநாயகம் சந்தித்தபோது, பார்த்திபன் ஏமாற்றமடைந்தான்.

“சதாசிவம்... சாது எங்கே போவது?” என்று ஆண்டி மொழி பேசினார் பிரமநாயகம்.

“எங்கே போனால் உனக்கென்ன?” என்று பார்த்திபன் பழைய முடுக்குடன் பதில் சொன்னான்.

“போகுமிடம் பாழே! புறப்படுமிடமும் பாழே! எவ்விடமும் பாழேகாண் ஏகம்பநாதனே!” என்று பிரமநாயகம் ஆண்டி கோலத்திற்கேற்ற தத்துவம் பேசிவிட்டு, “சாமி கோவிக்கப்படாது. இந்தக் கட்டை இந்தப் பக்கத்துக்குப் புதுசு. இருப்பிடம் யாழ்ப்பாணம். போகுமிடம் என்று ஒன்றுமில்லை. துணை தேடிடும் இக்கட்டைக்குக் கொஞ்சம் வழிகாட்ட வேண்டும்” என்று கெஞ்சினார்.

உண்மை ஆண்டியாக இருந்தால்தானே, பார்த்திபனுக்கு உடன் வர விரும்பு ஆண்டிக்கு ஏற்றவிதமாகப் பேசவும் முடியும். அவன் உள்ளத்திலே எவ்வளவோ வேதனை. இந்த நேரத்திலே இவன் யாரோ ஒரு சபளைக்காரன் என்ற சலிப்பு. அதனால், “ஆண்டியாம், ஆண்டி! தடித் தாண்டவராயன் போலிருந்து கொண்டு, காவி என்ன உனக்கு? கட்டை வண்டி இழுத்தாலும் கால் வயிறு நிரம்புமே” என்று ஏசினான்.

“சாமி பேசும் பாஷையிலே பல ஆசாமிகள், பேசுவதை இந்தக் கட்டை கேட்டதுண்டு. ஆனால் ஆண்டிக்கு ஏன் இந்த அதிகாரப் பேக்சு? ஆண்டிக்கு ஆண்டி ஆதரவு. ஆண்டுகளுக்கு ஆண்டவன் ஆதரவு என்று இந்தக் கட்டை சொல்லித்தானா சாமிக்குத் தெரிய வேண்டும்?” என்று கேட்டுவிட்டு, அருகே நெருங்கி, “சாமிக்குக் காலையிலே புகை கிடைக்கவில்லையோ? இந்தக் கட்டையிடம் கால்பலம் இருக்கிறது. சாமிக்குத் தேவையோ?” என்று கேட்டார் கொஞ்சம் கஞ்சாவைக் காட்டியபடி.

பார்த்திபன் பரங்கிகள் தயாரித்த பக்குவமான போதைகளைச் சாப்பிட்டுப் பழக்கமானவனே தவிர, பண்டாரங்களின் பண்டமான கஞ்சா அபின் பழக்கம் கொண்டவனல்ல. ஆகவே கால் பலத்தைக் கண்ணால் பார்த்ததும் கடுங்கோபம் அவனுக்கு அந்தக் கள்ளி பார்வதி மட்டும் இப்படி அவதி ஏற்படும்படி செய்யாதிருந்தால், இதே நேரத்திலே பீரோவைத் திறந்தால் பூ போட்ட கிளாசும், புதுலேபில் ஒட்டிய பாட்டில்களும், எப்படிக் காட்சியளித்திருக்கும்? அந்த ரசம் பருகிய நமக்கு இந்த ஆண்டி கஞ்சா தருகிறானே என்று எண்ணி ஏங்கினான். அந்த ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள, “அடி, பார்வதி! உன்னை நான் என்ன பாடு படுத்துகிறேன் பார்!” என்று உரக்க கூவினான். சற்று தொலைவிலே பார்வதி நிற்பது போல!

துப்பறியும் ஆண்டி தொடங்கினான் ஆண்டிப் பேச்சை, “ஆமாம் சாமி! அந்தப் பார்வதியால் வந்த வினைதான் இவ்வளவும்” என்றான்.

பார்த்திபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது போலாகி விட்டது. “எந்தப் பார்வதி? என்ன செய்தாள்? என்ன உளறுகிறாய்?” என்று கேட்டான்.

“சாமி, இப்போது அலைவதும் பார்வதியால்தான். இந்தக் கட்டையின் வாழ்க்கை கெட்டதும் பார்வதியினாலேதான்” என்று பிரம்மநாயகம் சொன்னார். பார்த்திபனுக்குக் கொஞ்சம் பயம் பிறந்தது. பயத்தை மறைக்கக் கோபத்தைத் துணை கொண்டு, “ஆண்டிப் பயலே! அர்த்தமற்ற பேச்சுப் பேசாதே. நீ எந்தப் பார்வதியைப் பற்றி இப்படி பேசுகிறாய்?” என்று கேட்டான்.

“சாமி, இந்தக் கட்டையைச் சோதிக்குது. இந்தக் கட்டையும் ஞானவெட்டியான் முதற்கொண்டு தவதீபம் வரை படித்த கட்டைதான்” என்று கூறிப் பதிலளித்தார். அவ்வளவு பற்களையும் இரண்டே அறைகளில் உதிர்த்துவிட எண்ணினான் பார்த்திபன். கோபம் அவ்வளவாகிவிட்டது. அவனுக்கு ஆண்டியின் கரத்தை பிடித்து, “என்னடா பேசுகிறாய்? சொல்வதைச் சரியாகச் சொல்! இல்லாவிட்டால் தோலை உரித்து விடுவேன்” என்று மிரட்டினான் பார்த்திபன்.

பிரமநாயகம் கோபங் கொள்ளவில்லை. “சாமி நிச்சயமாக என்னைச் சோதிக்குது. சாமி இப்போது இவ்வளவு தொலைவு அலைவது எதற்காக? சிவானுக்கிரகம் பெற. அந்தச் சிவானுக் கிரகம் ஏன் இன்னமும் கிடைக்கவில்லை? சிவனுக்கு வேறே இடத்திலே மனம் லயித்திருக்கிறது. எங்கே லயித்திருக்கிறது? பார்வதி தேவியாரிடம்! ஆகவே, பார்வதி தேவியாரின் பாசத்தால் பரமசிவன் பக்தர்களாகிய நம்மைப் பற்றிப் பாராமுக மாக இருக்கிறார். இதனைத்தான் சாமி நினைத்துக் கொண்டு, ‘அடி பார்வதி உன்னை என்ன பாடுபடுத்துகிறேன் பார்’ என்று பேசினது. இது இந்தக் கட்டைக்குத் தெரியவில்லையா? இந்தக் கட்டை, மரக்கட்டையில்லை. மகாதேவன் அருளால் பிறந்த மனிதக் கட்டை!” என்று பிரமநாயகம் பேசினார். பரம்பரை ஆண்டிபோல.

கோபம் போய்விட்டது பார்த்திபனுக்கு, சிரிப்புப் பொங்கிற்று. இப்படிப்பட்ட பேர்வழிகளுடன் சேர வேண்டி நேரிட்டதே என்று. மறு விநாடி மனக் கஷ்டம் ஏற்பட்டது. ஆண்டியை நோக்கிப் பார்த்திபன் சாந்தமாகவே பேசலானான்.

“எத்தனை வருஷமாக ஆண்டியாக இருக்கிறாய்?”

“வருஷக் கணக்கை சாமி கேட்குது? நல்ல கேள்வி! தலைமுறைக் கணக்கைக் கேட்கவேண்டும் சாமி. நாலு தலைமுறையாக ஆண்டிகள் நமது குடும்பம்.”

“நல்லது. உன் பெயர் என்ன?”

“இந்தக் கட்டைக்கு அன்னாபிஷேக ஆண்டி என்று பெயர்.”

“சீ! உன் பழைய பெயர்?”

“சாமி அதைக் கேட்குதா! இந்தக் கட்டைக்கு அப்பன் வைத்த பெயர் சுப்பன்.”

“என்னென்ன வேலை தெரியும்?”

“ஆண்டி வேலைகளா? பழைய வேலைகளைக் கேக்குதா சாமி.”

“பழைய வேலைகளைத்தான் கேட்கிறேன்.”

“பழைய வேலைகளை இந்தக் கட்டை இப்போது செய்வ தில்லை. இருந்தால் என்ன? சாமி கேட்கும் போது சொல்லத் தான் வேண்டும். சந்தடி செய்யாமல் அடித்த பந்து மேலே தாவுவது போலச் சுவரைத் தாண்டிக் குதிக்க முடியும். சாவி இல்லாமல் பூட்டைத் திறக்க முடியும். கொஞ்சம் கூர் இருக்கிற கத்த கிடைத்தால், இழுப்பும போடத் தெரியும். இப்படிப் பல வேலைகள் தெரியும் சுமாராக.”

“திருட்டுப் பயல்தானா? சரி, கிடக்கட்டும், உனக்குச் சோறு கிடைக்க நான் வழி செய்கிறேன். நான் சொல்லுகிறபடி கேட்க வேண்டும்.”

“கேட்கிறேன். பழைய வேலையா, புதிசா இருக்கா சாமி?”

“பழைய அனுபவத்தை கொண்டு புதிய வேலை ஒன்று செய்யணும். இதோ பார். நான் உன்னைப் போலப் பண்டாரப் பயல் இல்லை. இப்படி ஆண்டி போல வேஷம் போட்டிருக் கிறேன். நான் பெரிய போலீஸ் ஆபீசர்.”

“ஐயையோ! போலீசு சாமியா நீங்க. புண்ணியம் உங்க பிள்ளை குட்டிகளுக்கு. என்னை மாட்டி விட்டுவிடாதீங்க.”

“மடையா! சும்மா கிட. மிரளாதே. ஆண்டி வேடம் போட்டிருக்கிறேன் என்பதை மறந்துவிடு. ஆண்டி என்றே நினைத்துக் கொள்.”

“நெஞ்சிலே பயம் புகுந்து குடையுதே சாமி.”

“பயத்தோடு வேலை செய். உனக்கு ஒரு ஆபத்தும் ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“ஆண்டிக்கு ஆண்டி உதவி செய்யாமலிருக்க முடியுமா சாமி? எனக்கு என்ன வேலை கொடுக்கிறீர்களோ அதனை நான் செய்து முடிக்கிறேன். ஆனால், எனக்குக் கொஞ்சம் மட்டமான புத்தி. ஆகவே எந்தக் காரியத்தை நான் செய்ய வேண்டுமானாலும், கொஞ்சம் நிதானமாக நடக்கும்” என்று பண்டாரக் கோலத்திலிருந்து பிரமநாயகம் கூறிடக் கேட்ட பார்த்திபன். மகிழ்ந்து, “அன்னாபிஷேகம்! நான் சொல்லப்போகும் விஷயம் வெளியே தெரிந்தால், காரியம் கெட்டுவிடும். நீ இரகசியத்தைக் காப்பாற்றக்கூடியவனா என்பது எனக்குத் தெரிய வேண்டும். முதலில், உளறுவாயனாக இருந்தால் உன்னால் எனக்கு உதவிக்குப் பதில் உபத்திரவம் தானே வரும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இந்த விஷயத்திலே” என்று பீடிகையைப் பலமானதாக்கினான்.
பிரமநாயம், “சாமி! என்னால் எது முடிவதானாலும் முடியாமற் போவதானாலும் சரி, ஒன்று மட்டும் நிச்சயமாக என்னால் முடியும். வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டால், பிறகு பூட்டினவர்களாகத் திறந்தால்தான் திறக்கும். இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாவிட்டால், இந்தக் காவி உடை எங்கள் குடும்பத்திலே நாலு தலைமுறையாக இருந்திருக்க முடியுமா? சாயம் அதிக சீக்கிரத்திலே வெளுத்து விட்டிருக்குமே” என்று கூறிப் பார்த்திபனுக்கு தைரிய மூட்டினார். நெடுநேரம் யோசித்து விட்டு,“ஆண்டி! அதிக சிரமம் ஒன்றுமில்லை. அடுத்த பௌர்ணமிக்கு அதாவது இன்னும் ஆறு நாட்களில், ஆயிரம் ஆண்டிகளைத் திரட்டித் தர உன்னால் முடியுமா?” என்று பார்த்திபன் கேட்டான்.

பிரமநாயகம், “இதுதானா பிரமாதம்? ஒரு ஆயிரம் என்ன, ஒன்பது ஆயிரம் வேண்டுமானாலும் திரட்டலாம். ஆண்டி களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், ஆயிரம் ஆண்டிகள் ஏன்? எதற்காக என்று சொல்லி அவர்களைத் திரட்டுவது? கேட்பார்களே!” என்று கேட்டார்.

“பௌர்ணமி அன்று பண்டாரங்களுக்குப் பழம் பாயசத்துடன் சாப்பாடு.”

“சாப்பாடா! ஆயிரம் ஆண்டிகள் போதுமா? ஐம்பதாயிரம் போதுமா? என்ன சாமி! இதை ஒர பெரிய வேலையாகச் சொல்கிறீர். சோறு என்ற சொல் கேட்டாலே நூறு காதம் ஓடி வருமே, பண்டாரக் கூட்டம். இதற்கு நான் வேண்டுமா வேலை செய்ய? அரை நாளிலே முடித்துவிடக் கூடிய அற்பக் காரியம். இதற்கு ஆறு நாட்கள் ஏன்?”

“அதிகம் பேர் வேண்டாம். ஆயிரம் போதும், ஆயிரம் ஆண்டிப் பயல்களைச் சாமளிப்பதே கஷ்டம்.”

“அது உண்மைதான். ஆள் ஒன்றுக்கு ஒரு வேளைக்கு அரைப்படி அரிசி கேட்பார்கள். நாள் ஒன்றுக்கு நாலு வேளை போடுவதானாலும் சலிக்க மாட்டார்கள். ஆமாம் சாமி! ஆயிரம் ஆண்டிகள் வேண்டுமென்றீரே, ஆண்கள் மட்டுமா, பெண்களும் வேண்டுமா?”

“பெண்கள் வேண்டாம்.”

“சரி, ஒரு பெரிய தொல்லை விட்டது. பெண்களையும் கொண்டு வருவதென்றால், பெரிய சிரமம் இருக்கிறது. இந்தப் பயல்களிலே நாலுக்கு ஒண்ணு, ஆறுக்க ஒண்ணு என்று இருக்கும். அதுகளை அழைத்து வந்தால் அந்தப் பஞ்சாயத்துத் தீர்த்து வைக்கவே நமக்கு நேரம் இராது. சாமி! சாப்பாடு எந்த இடத்திலே?”

“இங்குதான். இரகசியம் வேண்டும். சாப்பாடு நடை பெறப் போகிற இடத்தை முன்கூட்டிச் சொல்ல முடியாது. பௌர்ணமியன்று, அந்த ஆயிரம் ஆண்டிகளும் இரவு 8 மணிக்குள் நான் குறிப்பிடும் இடம் வந்து சேர வேண்டும். அங்÷ பூஜைக்குப் பிறகு போஜனம். அந்தப் போஜனம் நடைபெறுகிற இடத்திற்குப் பண்டாரங்களை நான் அழைத்துச் செல்வேன் இடத்தை மட்டும் இப்போது சொல்ல முடியாது. இதற்குச் சம்மதிப்பார்களா பண்டாரங்கள்?”

“இதற்கு மட்டுமா? இன்னும் ஏதாவது ஏழெட்டு கண்டிஷன்கள் சொன்னாலும் சம்மதிக்க ஆண்டிகள் உண்டு. சாமி! ஆயிரம் ஆண்டிகளுடன் ஆறுநாட்களிலே, அதாவது பௌர்ணமி இரவு 8 மணிக்கு நான் தங்களைச் சந்திக்கிறேன். ஆனால், சிரமத்திற்கு என்ன தருவீர்? எதையும் முன் கூட்டிப் பேசி முடித்துக் கொண்டால் பிறகு தகராறு வராமலிருக்கும். அதற்காகத்தான், ஆயிரம் ஆண்டிகளை அன்னம் அளிப்பதாகச் சொல்லி அழைத்தாலும், அதற்காக நீர் குறிப்பிடும் நிபந்தனையைக் கேட்டுச் சில காவிகள் கிலி கொள்ளும் அதுகளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு வர வேண்டும். மேலும் அந்த ஆறு நாட்களிலே என்னென்ன க்ஷேத்திரத்திலே என்னென்ன திரு
விழாவோ! திருவிழா பலமாக இருந்தால் ஆண்டிகள் அங்குதான் போய்விடுவார்கள். போனால் சாப்பாடும் சுகமாகக் கிடைக்கும், காசும் நேரும், கத்திரியும் சுமாராக நடக்கும் என்று அந்தப் பயல்கள் திருவிழா நடக்கும் ஊருக்குப் போய்விடுவார்கள். அப்படிப் போகிறவர்களை மடக்கி அழைத்து வர வேண்டும். ஆகச் செய்யவேண்டிய வேலை கொஞ்சம் இருக்கிறது. இதற்காக இந்தக் கட்டைக்கு என்ன தருவதாக சாமி தீர்மானித்திருக்கிறது என்பது தெரிந்தால் வேலை செய்யக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.

“சோறு கிடைத்தால் போதும் என்று சொன்னது போய் இப்போது பேரம் பேசுகிறாயா? சரி, சரி, உனக்கு உன் ஆயுட்காலம் வரையிலும் சோறு துணி தருவேன், போதுமா?”

“சாமி! கோபிக்கக் கூடாது. என் ஆயுட்காலம் வரையிலே என்று சொல்கிறீர், யார் கண்டார்கள்? இன்றோ நாளையோ இன்னும் கொஞ்ச நேரத்திலே, இரவோ, பகலோ எந்த நேரத்திலோ கைலாயபதி தனது திருவடியிலே என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ, எப்படிச் சொல்ல முடியும்? என் ஆயுள் வரையில் காப்பாற்றுவதாகச் சொல்லும் பேச்சு வேண்டாம் சாமி! குறிப்பாக ஒரு தொகை சொல்லிவிடும்.”

“பணமா? சரி நீயே கேள்! என்னதான் வேண்டும்?”

“ஆண்டிக்கு அரை ரூபா வீதம், ஆயிரம் ஆண்டிக்கு 500 ரூபாய் தந்தால்போதும்.”

“பிச்சைக்காரப்பயல்! சரி, ஐந்நூறுதானே வேண்டும்? சரி, தருகிறேன்.”

என்றால்! தேன் என்ற உடனே தித்திக்குமா சாமி?”

“தடியா! என் வார்த்தையிலே நம்பிக்கையில்லையா?”

“யார் சாமி சொன்னது அப்படி! ஆனால், பண விஷயம் பாருங்கோ, கண்ணாலே பார்த்துக் கையாலே தொட்டுத் தட்டிப் பார்த்துக் காதாலே கேட்டாத்தானே ஒரு சந்தோஷம் பிறக்கும். நீங்க தவறாக எண்ணிவிடக் கூடாது. என் சுபாவம் அது. பணத்தை வாங்கிக் கொண்டால் எனக்கு வேலையில் சுறுசுறுப்பு ஏற்படும். பெட்ரோல் போட்டால்தானே மோட்டார் ஓடுது. அதுபோல.”

“சரி! நான் சீட்டு தருகிறேன் பணத்துக்கு உனக்கும், நான் ஏற்பாடு செய்கிற சாப்பாட்டுச் செலவுக்கும் சேர்த்துப் பணம் தருவார். அதை வாங்கிக் கொண்டு நாளைக்கு இதே இடத்திலே என்னை வந்து சந்திக்க வேண்டும். பிறகு, ஆறாம் நாள் பௌர்ணமியன்று நடக்க வேண்டிய ஏற்பாட்டைக் குறித்து நான் சொல்லுகிறேன்.”

“இந்தப் போச்சு முடிந்ததும், பார்திபன் உடனே 500 ரூபாய் தந்துதவும்படி ஆலாலசுந்தரருக்குச் சீட்டு எழுதி ஆண்டிக் கோலத்திலிருந்த பிரமநாகயத்துக்குத் தந்தான். பிரமநாயகம் சீட்டு எடுத்துக் கொண்டு, புறப்பட்டார் மிக்க சந்தோஷத்துடன். பார்த்திபன் துளியும் சந்தேகித்த முடியாதபடி நடந்து கொண்ட பிரமநாயகம், அவனுடைய எதிர்கால வேலைத் திட்டத்தை அறிந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்கும்படி செய்வித்த ஆண்டிக் கோலத்தைப் பாராட்டிக் கொண்டே, தனது மாளிகை சென்று, மாறுவேடத்தைக் கலைத்து விட்டு, முதலமைச்சரைக் காணச் சென்றார். முதலமைச்சர் பிரமநாயகத்தைக் காணவும் இஷ்டப்படவில்லை என்ற போதிலும் வெறுப்புடன் சில நிமிஷ நேரம் பேட்டிதர முடியும் என்று தெரிவித்தார். பிரம நாயகம் முதலமைச்சரின் கோபத்துக்கும் வெறுப்புக்கும் காரணம் இருப்பது அறிந்தவராதலால் அதற்காக வருந்தவில்லை. மரியாதையுடன் முதலமைச்சருடன் பேசலானார்.

“மிஸ்டர் பிரமநாயகம்! என்ன விசேஷம்?” என்று முதலமைச்சர் கொஞ்சம் அதிகாரத் தோரணையிலே பேச்சைத் துவக்கினார்.

“பார்த்திபன் விஷயமாகத்தான் பேச வந்தேன்” என்று நிதானமாகப் பதிலளித்தார் பிரமநாயகம்.

“பார்த்திபனைப் பிடித்துவிட்டீர் போலிருக்கிறது” என்று கேலியாகக் கேட்டார் முதலமைச்சர்.

“பார்த்திபனைத் தப்பிப் போகச் சொன்னவனுக்கு அவனை மீண்டும் பிடிப்பது கஷ்டமா? பார்த்திபன், என் உள்ளங்கையிலே இருக்கிறான் முதலமைச்சரே! பார்த்திபனை விடுதலை செய்தால், அவனுடைய நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்து தலைமறைவாக இருக்கும் குமார் என்பவனையும், வெடிகுண்டு மர்மத்தையும் கண்டுபிடிக்க வழி ஏற்படும் என்று நான் தெரிவித்தேன். தாங்கள் என் யோசனையை முட்டாள்தனம் என்று கருதினீர்கள். என் பதவியை ராஜினமா செய்தேன். ஆனால் துப்பறியும் வேலையை நான் நிறுத்திக் கொள்ள வில்லை; பார்த்திபன் சிறைச்சாலையிலிருந்து தப்பித்துக் கொண்டு போனது, என் உதவியினால்தான். அது அவனுக்கு தெரியாது” என்று பிரமநாயகம் கூறிக் கொண்டே - ஆலாலசுந்தரருக்குப் பார்த்திபன் தந்த சீட்டைக் காட்டினார்.

அதைப் படித்ததும், முதலலமைச்சர் சந்தோஷத்தால் துள்ளி எழுந்தார்! “அன்னாபிஷேக ஆண்டி யார்?” என்று கேட்டார். பிரமநாயகத்தின் புன்னைகையைக் கண்டார். “ஓகோ! நீங்கள் அப்போது பண்டார சன்னதியாகி விட்டீரா?” என்று கூறிக் கொண்டே ஆனந்தமடைந்து, பிரமநாயகத்தின் கரங்களைப் பிடித்துக் குலுக்கியபடி, “மிஸ்டர் பிரமநாயகம்! உம்முடைய மூளையே மூளை. நான் வீணாகக் கோபித்து கொண்டேன்.” என்று கூறினார்; டெலிபோனை எடுத்தார்.

பிரமநாயகம் சரேலென, டெலிபோனை முதலமைச்சர் கரத்திலிருந்து பிடுங்கிக் கீழே வைத்துவிட்டு, “ஆலாலசுந்தரரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க உத்தேசமா? வேண்டாமா; இப்போது இந்தக் காரியம் செய்தால், என் திட்டம் பாழாகிவிடும். இன்னமும் பார்த்திபனை என் பார்வையிலேயே வைத்திருக்கிறேனே யொழிய குமாரின் இருப்பிடமும் வெடிகுண்டு விஷயமும் தெரிந்து கொள்ள முடியாத நிலையிலே தான் இருக்கிறேன். அந்த இரகசியத்தை விரைவிலே அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. உமது உதவி தேவை” என்று கூறினார்.

“என்ன வேண்டும்? சொல்லும். மிஸ்டர் பிரமநாயகம். என் கையெழுத்திட்ட கடிதம் வேண்டுமானால் கொடுத்து விடுகிறேன். உமக்கு இஷ்டமான உத்தரவை எழுதிக் கொள்ளும். எனக்கு இப்போது உம்மிடம் பூரண நம்பிக்கை பிறந்து விட்டது” என்று முதமைச்சர் சிரிப்புடன் பேசினார்.

பிரமநாயகம், “அவ்வளவு பாக்கியசாலியாக நான் ஆக நேரிட்டது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எனக்கு இப்போது அவசரமாகத் தாங்கள் செய்ய வேண்டிய காரியம் அது அல்ல. ஒரு ஆயிரம் ரிசர்வ் போலீசாரை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்” என்று கேட்க, முதலமைச்சர் வியப்புற்று, “மிஸ்டர் பிரமநாயகம், எந்த ராஜ்யத்தின் மீது படையெடுக்கப் போகிறீர்? என்ன வேடிக்கை! ஒரு ஆயிரம் ரிசர்வ் போலீசா! எதற்கு? பார்த்திபனிடம் பெரிய பட்டாளம் இருக்கிறதா? குமாரிடம் கம்பெனி இருக்கிறதா? எனக்கொன்றும் விளங்கவில்லையே” என்று கேட்டார்.

பிரமநாயகம், “எனக்கும் தெரியத்தான் இல்லை. ஆனால், பண்டாரக் கோலத்திலே இருக்கும் பார்த்திபன், ஆண்டிப்பயல் அன்னாபிஷேகத்துக்குப் பிறப்பித்திருக்கும் உத்தரவின்படி நான் நடந்தாக வேண்டுமல்லவா? ஆகவேதான் ஆயிரம் ரிசர்வ் போலீசாரை ஆண்டி வேடத்திலே சித்தமாக இருக்கச் சொல்லும். நான் இரண்டு நாளிலே வருகிறேன். அவர்களை அழைத்துச் செல்ல” என்று கூறினார்.