அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
10
                     

“சுக்லாம்பரதரம்” என்று நான் பழி தீர்க்கும் படலத்தைத் துவக்கினேன். கணபதி சாஸ்திரிகள் என் கருவியானார். அவருக்கு இஷ்டசித்தி விநாயகர் பணம் தந்தார்! கணபதி சாஸ்திரி, என்னிடம் கொண்ட பிரேமைக்கு அளவு கிடையாது. நான் அவரைப்பற்றி அவ்வப்போது காட்டிய அலட்சியங் களுக்கும் அளவு கிடையாது.

அவர் வீட்டுக்கு வரும் வேகத்தில் நான் வெளியே புறப் படுவேன். குறுக்கே அவர் பேசக்கூடாது. கூடவும் வரக்கூடாது. நான் திரும்பிவரும் வரையில் கணபதி சாஸ்திரி காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருப்பார். வர வில்லையே, வரவில்லையே என்று அந்த வயோதிகர் காத்துக் கொண்டிருக்கக் காணும் நான், “படு! படு! ஆண் உலகமே படு! எத்தனையோ பெண்களை எவ்வளவோ ஆண்கள் மனம்நோகச் செய்கிறார்கள் அல்லவா? எத்தனை குடும்பத்திலே குத்து, வெட்டு, உதை, கோணற்கூத்துக்கள், ஆண்களால் நடக்கின்றன. எவ்வளவு குடும்பங்களிலே ஆடவன், பெண்ணை அடிமையாகக் கொண்டு ஆட்டிப் படைக்கிறான். அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு ஏன்? என்கிறான். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று போதித்துவிட்டு கல்லைவிடக் கடினமான மனதுடன் பெண்ணை நடத்துகிறான். அவர்களை அப்பாடு படுத்தும் ஆண்கள் கூட்டத்தைச் சேர்ந்த சாஸ்திரிகளே, தெரிகிறதா பழி தீர்க்கும்போது, படு!” என்று நான் மனதிற்குள் கூறிக் கொள்வேன். டாக்டரே, இப்படியும் நான் இருந்திருப்பேனா, இருதயமே கிடையாதா என்று யோசிப்பீர். உம்மைப் போலவே பலரும் யோசிப்பார்கள். ஆம்! நான் பனப்பேயானேன். பேய் பயங்கர ரூபம் என்று கூறுவார்கள். அதுவல்ல நான். பிரேமையை ஊட்டி ஆணை அடக்கி ஆட்டிப் படைக்கும் அழகுள்ள பேயானேன். என் முதல் பலி கணபதி! இரண்டொரு மாதங்களில் கணபதி சாஸ்திரிகள் என் ஏவலாளியானான். துப்பாக்கிக்குத் தோட்டா இல்லையானால் தூரத்தானே எறிவார்கள்? கணபதி சாஸ்திரிகளிடமும் காசு இல்லை. எனவே நான் கடுகடுத்தேன், சாஸ்திரிகள் கெஞ்சினார். “நான் கையில் பணமில்லாது கலவி செய்ய வந்தீரோ, கடனானால் எழுந்து போம் சாமி!” என்றேன். கணபதி சாஸ்திரிகள் அவ்வளவு எளிதிலே போவாரா? வேலை கொடுத்தால் தானே போவார் வெளியே. அந்தச் சமயத்தில்தான் அவருக்குச் சரியான வேலை கொடுத்தேன். ஜமீன்தாரரை சரிப்படுத்தவாவது வேண்டும் அல்லது அவருக்குத் தொல்லையாவது கொடுக்க வேண்டும். அதற்கோர் வழி சொல்லு என்றேன்.

இஷ்டசித்தி விநாயக பூஜையில் கைதேர்ந்த கணபதி சாஸ்திரிகள் ஓர் யுக்தி சொன்னார். ஜமீன்தாரரின் மகளுக்குக் கலியாணம் நிச்சயமாகி வருவதாகவும், மிகப் பெரிய இடமென்றும், ஒரே பிள்ளை என்றும், அந்த இடத்துச் சம்பந்தத்திற்காக ஜமீன்தார் வெகு பாடுபட்டு வருகிறார் என்றும், இந்த நேரத்தில் கமலாவை விட்டு ஜமீன்தார் மீது கேஸ் தொடுப்பதாக வக்கீல் நோட்டீசு கொடுத்து விட்டால், ஜமீன்தார் பெட்டியிலிட்ட பாம்பு போல் அடங்கிவிடுவார் என்றும் சாஸ்திரிகள் கூறினார். நான் சந்தோஷத்தால் துள்ளினேன். சாஸ்திரிகள் சொன்னபடி கேஸ் போட்டு மிரட்ட வேண்டுமென்றல்ல. ஜமீன்தாரர் தேடிப்பிடிக்கும் ஆசை மருகமனை என் அடிமை
யாக்கி, ஜமின்தாரரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று தீர்மானித்தே நான் துள்ளினேன். சாகசம் என்னிடம் இருக்கும் போது, இது சாயாது போகுமா? மேலும் எடுத்த காரியம் விக்கின மாகாதிருக்க, இதோ கணபதி சாஸ்திரி கைவசம் இருக்கிறார். பார்ப்போம் ஒரு கை என்று தீர்மானித்து, எந்த விதத்தில் இதைச் செய்வது என்று யோசித்தேன். இரவு பகல் இதே சிந்தனைதான். நாட்கள் ஆக ஆக மனம் பதற ஆரம்பித்தது. ஜாதகப் பொருத்தம் சரியாக இருப்பதாக கணபதி சாஸ்திரிகள் சேதி கொண்டு வந்தார். இஷ்டசித்தி விநாயகருக்கு இலட்சார்ச்சனை செய்து விட்டார்களாம். இருபதாயிரம் ரூபாய் செலவில் பெண்ணுக்கு நகைகளாம், மாப்பிள்ளையின் குணாதிசயமோ மகாப் பிரமாதமாம் நல்ல படிப்பாம், சத்சகவாசமாம். வீண் ஜோலிக்குப் போகாதவராம், வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாம். இவ்வளவும் கணபதி சாஸ்திரிகள் கண்டறிந்து கூறிய சேதிகளே. இவைகளைக் கேட்கக் கேட்க, நான் கொண்ட உறுதி தளரவில்லை. இப்படிப்பட்டவனைத்தான் எனக்கு இரையாக்கிக் காட்ட வேண்டும். இத்தகைய மருமகனை அடையப் போகிறோம் என்று எண்ணும் ஜமீன்தாரரின் மனதில் மண் போட வேண்டும். என் அக்காவின் அழகை விரும்பி, பின்னர் வீண் சந்தேகத்தால் வெறுத்து, எங்களுக்குத் தொல்லை கொடுத்த ஜமீன்தாரர், என் அழகு, அவரது குடும்பத்தின் குதூகலத்தைக் கொலை செய்தது என்று அறிய வேண்டும். அப்போதுதான் பழி தீர்க்கும் வேலை முடிந்ததாக ஆகும் என்று எண்ணினேன். ஜமீன்தாரரின் மகள் ஜெயலட்சுமியை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் மட்டும் ஜெமீன்தாரர் வீட்டில் பிறக்காது, சாதாரணக் குடும்பத்திலே பிறந்திருந்தால், ஆயிரம் ‘சொட்டு’ சொல்வார்கள். நான் பொறாமையினால் கூறவில்லை. அவளுக்கு மூக்கு சப்பை, கண்கள் சிறிது, நெற்றி மூன்று விரற் கடைகூட இராது, கழுத்தோ குறுகல், நிறமோ அவிந்த நெருப்பு, படிப்போ சூனியம், பாட்டோ கேட்கவேண்டியதில்லை. குணமோ பொல்லாதது. பணம் இருக்கிறது பெட்டியிலும் பேழையிலும். அவன் பணத்தையா மணம் செய்து கொள்ளப் போகிறான்! இவளைக் கண்டால் என்ன எண்ணுவான்!

நான் மட்டும் அவனை முதலில் சந்தித்துப் பேசி கொஞ்சம் பழகச் சந்தர்ப்பம் கிடைத்து விட்டால், பிறகு ஆசாமி, நான் ஆட்டி வைக்கிறபடி ஆடித்தானே தீர வேண்டும். அழகு அபின் போன்றதுதானே, ஆனால் நான் அவனைச் சந்தித்துப் பழக வேண்டுமே. இதற்குக் கணபதி சாஸ்திரியின் ஒத்தாசை இல்லாது முடியாது. அதிலும் நான் செய்ய எண்ணிய தந்திரத்துக்கு சாஸ்திரி இலேசில் ஒப்புக்கொள்ள மாட்டான். எனவே, என் யோசனை பூர்த்தியானதும், கணபதி சாஸ்திரியை வரங்கேட்டேன். அவன் கொடுத்தேன்! கொடுத்தேன்!! என்று ஆனந்தமாகக் கூறினான்; என்ன வரம் என்றுகூடக் கேட்கவில்லை. என்ன வரம் என்று கேட்டால் நான் கோபித்துக் கொள்வேன் என்பது சாஸ்திரியின் பயம்.

சாஸ்திரிகளிடம் என் யோசனையைப் கூறினேன். முதலிலே சாஸ்திரிக்கு அருவருப்பாக இருந்தது. பிறகு கோபம் வந்தது. மறுபடி பயம் புறப்பட்டது. பின்னர் சந்தேகம் கிளம்பிற்று. ஒவ்வொன்றையும் நான் ஓட்டினேன். பிறகு சாஸ்திரி ‘ததாஸ்த்து’ கூறினான்.

மறுதினம் என் ஏற்பாட்டின்படி, சாஸ்திரி, ஜமீன்தாரர் வீடு சென்று, நான் சொன்னபடி காரியத்தைச் சாதித்துக் கொண்டு, என் வீடு வந்தார். உள்ளே நுழையும் போதே, ‘காயா? பழமா?’ என்று நான் கேட்டேன். சாஸ்திரி பூனூலை உருவினார். உடனே ‘பழம்’ என்று தெரிந்து கொண்டு “இஷ்டசித்தி விநாயகர் அங்கே கோயிலில் இருப்பதாகக் கூறுகிறார்களே, விஷயம் தெரியா தவர்கள். இதோ இருக்கிறீரே” என்று கூறிச் சாஸ்திரிகளைக் களிக்கச் செய்தேன். பரிமளப் பாக்குத் தூளும், ‘ரவேச’ வெற்றிலையும் நைவேத்யமாக வைத்து, விசிறி கொண்டு வீசியபடி, வேதியரைச் சேதி விசாரித்தேன். ஆனந்தத்தைச் சற்று நேரம் அனுபவித்து விட்டுப் பிறகே கூற முடியும் என்றார் சாஸ்திரி. ஆகவே வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கேட்டேன். “முதலிலே நானொன்று கேட்கிறேன் விமலா, உனக்காக நான் இவ்வளவு சிரமப்பட்டுக் காரியத்தைச் சாதிக்கிறேனே, நீ கடைசியில் என்னை நடுத்தெருவிலே விட்டுவிட்டு, புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போய் விட்ட கதை போல், அந்தப் பயல் பின்னோடே போயிட்டா, என் கதி என்னாகும். அதை முதலிலே சொல்லு” என்றார் சாஸ்திரிகள்.

உள்ளபடி நல்ல கேள்விதான். நான் வேறொரு ஆளைப் பிடிக்க, இந்த ஆளையே வேட்டைக்காரனாக்கினேன். புது ஆள் கிடைத்ததும் தன் கதி என்னாகுமோ என்ற கவலை சாஸ்திரிக்கு இருக்குமல்லவா? பில்வமங்களைச் சிந்தாமணிக்கு அறிமுகப் படுத்திவிட்ட நண்பன், சிந்தாமணியும் பில்வமங்களும் சிருங்கார சாஸ்திர ஆராய்ச்சி செய்யும் போவோம் என்றுரைத்து விட்டு, சிங்காரத் தோட்டம் சென்றபோது, சிந்தாமணி! ஆ சிந்தாமணி! காதகி சிந்தாமணி! என்று நண்பன் கதறிய கதைபோல் முடியுமோ என்று சாஸ்திரிகளுக்குச் சஞ்சலம் வந்தது. ஆனால் நான் சிந்தாமணியா? நானோ சீறும் நாகம். இந்த சாஸ்திரிகளைக் கடித்தேன். விஷம் மண்டைக்கு ஏறிவிட்டது. இனிப் புது ஆளைக் கடிப்பேன். இதில் என்ன பொறாமை!

சாஸ்திரிகளின் சஞ்சலம், நான் சிரித்துக் கொண்டே தந்த சூடான காப்பியினால் தீர்ந்து விட்டது. சாஸ்திரிகள் சமதர்மத்தைக் கூறித் தொடங்கினார்.

இஷ்டசித்தி விநாயக பூஜையால் கஷ்டமின்றி வருமானம் பெற்று வாழும் கணபதி சாஸ்திரி, தாம் போய்க் கண்ட வெற்றி பற்றிக் கூறலானார்.

கேளும் பெண்ணே விமலா! சென்றேன் - கண்டேன் - வென்றேன் - என்று மூன்று வார்த்தைகளில் முடித்து விடட்டுமா அல்லது விரிவாகக் கூறட்டுமா சேதியை; விரிவாகவா? சரி! இலட்சார்ச்சனை நடத்துகிறேன் கேள்.

முதலிலே நீ சொன்ன யோசனை என்னைத் தூக்கி வாரிப் போட்டது. ஜமீன்தாரர் காரியத்திலே குறுக்கிடுவது என்றாலே மகா ஆபத்து. அதிலும் கலியாணம் காரியத்திலே குறுக்கிடுவது பிரமாதமான ஆபத்து. மேலும் நீயோ, மாப்பிள்ளை வீட்டுக்கே போக வேண்டும், மாப்பிள்ளையையே வசப்படுத்திவிட்டுக் கலியாணத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று கூறினாய். இது தலைபோகும் காரியமாக முடியுமே என்று தத்தளித்தேன். கடைசியல் தலை போனாலும், தங்கமே! உன் சேவையிலே போகட்டும். இது எப்போதும் போகப்போகிற தலையே தவிர, சாஸ்வதமா? என்று எண்ணி வேதாந்தியானேன்.

ஜமீன்தாரரிடம் சென்று வில்வம் விபூதி கொடுத்து விட்டு நின்றேன். இந்தக் காலம்தான் தலைகீழாக இருக்கிறதே! இந்த ஜமீன்தாரர் அப்பா காலத்திலே, அக்ரகாரத்துக்குள் நுழைவ தென்றாலே அடக்க ஒடுக்கமாக நுழைவார். பிராமணனைக் கண்டால் பயபக்தியாக நடப்பார். அவாளை உட்காரச் சொல்லிவிட்டு நிற்பார். அவாளே பிறகு, ஜமீன்தார்வாள் உட்காரணும் உட்காரணும் என்று சொல்வார். பிறகு உட்கார்ந்து உபரிப்பா. அந்தக் காலம் மலையேறிப் போயிட்டு தேன்னோ, இந்த ஜமீன்தாரிடம் நான் விபூதி தந்தேன். வாங்கிப் பக்கத்திலே வைச்சுண்டு, வைக்கப்போர் விஷயத்தைப் பற்றிச் பேச ஆரம்பித்தார். வேலன் பேசி, முருகன் பேசி, முத்தன் பேசி ஆனபிறகு, என்னாய்யா குருக்கள் க்ஷேமந்தானா? எப்படி இருக்கு உங்க போக்கு வரத்து என்று ஆரம்பித்தார். நின்றபடி பதில் சொன்னேன். ‘உட்காருமே சூத்ராள் இருக்கிற இடத்திலே உட்காரப் படாதோ’ என்றார். என்ன ஜமீன்தார்வாள் ஏதேதோ சொல்றேள். நமக்குள் இம்மாதிரி பிராமணா - சூத்ரா என்ற பேதம் இந்தக் காலத்துக்கு ஏது? என்றேன். அவர் சிரித்துவிட்டு, நடக்காது! என்றார். ‘ஆமாம்’ என்றேன். “சரி வந்த சேதி சொல் லுங்கோ” என்றார்.

ஆரம்பமே சுப சூசகமாக இல்லையே. நாம் சொன்னால் நம்புவானோ மாட்டானோ என்று சமசயமாகத்தான் இருந்தது. பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். பாடத்தை ஒப்பித்தேன் - “கலியாண விஷயமா ஒரு யோசனை. நேற்று இஷ்டசித்தி விநாயகர் சொப்பனத்திலே பிரசன்னமாகி, பிரசாதம் அருளி, “இந்தக் கலியாணத்துக்கு முந்தி சுமங்கலி மூலியமாக மாப்பிள்ளை வசம் சேர்ப்பிக்கணும். மாப்பிள்ளைக்கு மனம் மருளும்படி ஏதோ சேதி போயிருக்கு. அது மாறணும், மங்களகரமாகத் திருமணம் முடியுணும்னா இதைச் செய்யுங்கோ என்று சொல்லி மறைந்தார்” என்றேன். ஜமீன்தாரர் சிரத்து விட்டு, “குருக்கள் சொப்பனத்திலா விநாயகர் வருகிறார்; விமலா வருகிறதாக் கேள்விப்பட்டேன்” என்றார். எப்படியோ விஷயம் அவர் காதுக்கு எட்டிவிட்டது. மறுத்துப் பேசினால் பயனில்லை. ஆகவே மழுப்பலாக, “ஏதோ கர்மசேஷம்! ஆனால் அது நீங்கி ரொம்ப காலமாயிடுத்து. இப்போ போக்குவரத்தே கிடையாது. அவா, சரியான மனுஷாளாக இருந்தா, தாங்கள் அவாளைக் கைவிடுவேளோ” என்றேன். ஆசாமி ஏமாந்தான். “சரி! அது கிடக்கு சனி. மாப்பிள்ளை வீட்டுக்கு நம் வீட்டுப் பெண்டுகள் யாரும் இப்ப போகக் கூடாது. மேலும் நாமாகவே போனலும் ‘பிகுவு’ கெட்டுவிடுமே. இதற்கென்ன செய்வது” என்றார். “நானும் என் ஆத்துக்காரியும் போயிட்டு வாரோம். தங்களுக்காக இதுகூடச் செய்யாது போவேனா” என்றேன். “சரி! செய்யுங்கோ. எனக்கு இந்தச் சொப்பனத்திலே சாமி வந்தது, பிரசாதம் கொடுத்தது என்பதிலே நம்பிக்கை கிடையாது. வீட்டிலே பெண்கள் காதிலே விழுந்தா நம்புவா. அதற்காகவே உம்மைப் போகச் சொல்கிறேன். அப்படியே, அங்கே எவனாவது, இந்தக் கமலா விஷயமாக வம்பளப்பான். அதெல்லாம் அறுந்துவிட்டது. அந்தக் கழுதைகள் முகாலோபனம் கூடச் செய்வதில்லை ஜமீன் தாரர் என்று சொல்லும்” என்றார் ஜமீன்தாரர். பழம் நழுவிப் பாலில் விழுந்ததா! “இதுபோல் நானும் என் ஆத்துக்காரியும் வருவதாக ஒரு கடிதம் தபாலிலும், ஒரு கடிதம் கையிலும் கொடுக்கணும். அப்பதானே அவாளும் நம்புவா” என்றேன். கடிதம் கொடுத்தார். தபாலில் ஒன்று போட்டார். பார் கடிதத்தைப் படித்து” - என்று சாஸ்திரிகள் கூறி, ஜமீன்தாரர் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அது வருமாறு:-

ராஜ பரம்பரை ராதாபுரம் ஜமீன்தார் பகதூர் பாரிஜாத பூபதி அவர்கள் திவ்ய சமூகத்திற்கு,
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அருளின் படி இங்கு நாமும் குடும்பமும் குடிபடைகளும் ஷேமம். தங்கள் ராஜ்யாதி காரியங்கள் சுபமாக நடந்து வருகின்றதென்று நம்புகிறேன். தங்கள் திருக்குமாரருக்கு நமது திருக்குமாரத்தியைத் திருமணம் முடிக்கும் விஷயம் தெய்வ சம்மதம் பெற்றிருப்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இப்பவும் இந்நகர் சித்திவிநாயகர் கோயில் குருக்களாம் ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள், மகா வேதக்கியானி அருள் பெற்றவர். அவருடைய சொப்பனத்தில் இஷ்டசித்தி விநாயகர் எழுந் தருளிப் பிரசாதம் அருளி, திருக்குமார இளையபூபதி வசம் சேர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுச் சென்றார். அவரும் அவரது சகதர்மிணியுமாக தங்கள் ராஜ்யத்துக்கு வருகிறார்கள். தனிக்கிரகம் அருளி உபசாரம் செய்வித்து இஷ்டசித்தியார் பிரசாதத்தை இளையபூபதி பெற்றுப் பூஜிதமாதவராக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன், சுபம்.

இங்ஙனம்
இளைய பூபதிக்கு மாமனாராம்
ஜமீன்தாரரும்
தமது சமபந்தியுமான ஜமீன்தார்.

கடிதத்தைப் படித்துவிட்டு சிரித்தேன், சிரித்தேன், அடக்கவில்லை.

எவ்வளவு முட்டாள்தனம்! ஏதோ காலம் வீதாச்சாரம் மாறுவதால் கொஞ்சம் பிராமணரிடம் முன்போல் பதுங்கிக் கிடக்கும் பழக்கம் சற்று மாறிற்றே தவிர, மற்ற மூடத்தனம் அப்படியேதானே இருக்கிறது. சொப்பனத்திலே விநாயகர் வந்தார் என்ற உடனே எவ்வளவு சுலபத்திலே நம்பிவிடுகிறார்கள். இதனை ஒரு சாஸ்திரி சொன்னதும் சரி என்று நம்பி விட்டாரே இந்த ஜமீன்தார் என்று எண்ணிச் சிரித்தேன்.

“எப்படி என்னுடைய சமர்த்து?” என்று கணபதி சாஸ்திரி கேட்டார்.

“உங்கள் சமர்த்துப் பெரிது என்றோ பிரமாதம் என்றோ நான் கூற மாட்டேன்” என்றேன். சாஸ்திரிகள் முகத்தைச் சுளித்துக் கொண்டு, “என் சாமர்த்தியம் பெரிதாகத் தோன்ற வில்லையோ?” என்று கேட்டார்.

“அதைவிடப் பெரிதல்லவா, அந்த ஜமீன்தாரரின் முட்டாள்தனம்” என்றேன் நான். சாஸ்திரிகள் பாடு குஷி! ஆனந்தத் தாண்டமூர்த்திதான்.

சரி! என் வேலை முடிந்தது. இனிமேல் உன் வேலை என்று கூறி விட்டு,“வா! போகலாம்!! அங்கே, வா, போகலாம்!” என்று பாடலானார்.

கணபதி சாஸ்திரி மகா காரியவாதி. எடுத்த காரியத்தை எப்படியும் முடித்தே தீருபவர். அந்தச் சமர்த்து இல்லாமலா, ஒரு பிள்ளையார் கோயிலில் இருந்து கொண்டு மாடிவீடும், மனைவியும், கூத்தியும், கொடுக்கல் வாங்கலும் வைரக்கடுக் கனும் சம்பாதித்தார். “அவாளவாள் கொடுத்து வைத்தது” என்று சாஸ்திரி கூறுவார். ஆனால் சாஸ்திரியின் குலத்துக்கு இருக்கும் சௌகரியம் மற்றவர்களுக்கு ஏது? உங்களுக்குச் சொன்னால் வேடிக்கையாகத் தோன்றும். சாஸ்திரிகளோ நான் மட்டுமல்ல சினேகிதம். எத்தனையோ இடத்தில் குட்டுப்பட்ட தலை அது. தாசிகள் வீடு போவது பாபம் என்று அவர் படித்த சாஸ்திரங்கள் கூறுமே, இருந்தும் அவர் மதித்தாரா சாஸ்திரங்களை? இல்லை! இப்படி முக்கியமான காரியத்தில், தனக்கு இன்பம் வேண்டும் என்பதற்காக, கற்ற சாஸ்திரத்தை கட்டிப் போட்டுவிட்டு காரியவாதியானாரேயொழிய, கட்டுக்கட்டாக விபூதிதான், கழுத்திலே ருத்திராட்சமாலைதான், காலை மாலை ஜெபம், கார்த்திகை சோமவாரம் விரதம், இவைகளிலே குறைவு கிடையாது! ஆண்டவன் இப்படி முக்கியமான விஷயத்திலே தவறு செய்து விட்டு, பிறகு விரதமும் வேடமும் போட்டால், என்ன எண்ணுவார் என்று கேட்டேன் ஒரு நாள். “போடி போ, சுந்திரமூர்த்தி என்பவருக்கு சாக்ஷாத் சிவனே தாசியின் நேசம் கிடைக்கத் தூது சென்றார் தெரியுமோ” என்று கணபதி சாஸ்திரி கூறினார். இப்படி இருக்கிறது உலகம்!

நான் சொன்னபடி சாஸ்திரி ஜமீன்தாரை ஏய்த்து விட்டார். நான் போட்ட “பிளான்” என்ன தெரியுமோ!

ஜமீன்தாரருக்கு மருமகனாக வரப்போகிறவனை வலையில் போட்டுவிட வேண்டும். அவன் என்னிடம்! சிக்கிய பிறகு கலியாணத்தைத் தடைப்படுத்திவிட வேண்டும். ஜமீன் தாரரின் வயிறு எரிய வேண்டும். இதற்காகத்தான் சொப்பனத்திலே விநாயகர் வந்தார் என்று கதை கூட்டினேன். ஜமீன்தாரரின் கடிதத்தை எடுத்துக் கொண்டு நானும் சாஸ்திரியும் மாப்பிள்ளையின் ஊர் சென்று, அந்த ஜமீன்தாரரால் உபசரிக்கப்பட்டு, தனி வீடடில் அமர்ந்தோம். ஒன்பது நாள் பூஜை செய்து, பிறகுதான் விநாயகர் தந்த பிரசாதத்தை மாப்பிள்ளையிடம் தரவேண்டும் என்று கூறினோம். நான்தான் சாஸ்திரியின் சம்சாரம்! பார்ப்பாத்தி போலவே புடவை கட்டிக் கொண்டேன். பேச்சும் அதுபோலவே பேசினேன். சாஸ்திரிக்குப் பரம சந்தோஷம் “அடி ஆனந்தா!” என்று விநாடிக்கு விநாடி கூப்பிடுவார். என் புதிய வேடத்துக்கு ஆனந்தம் என்று பெயர்.

முதல் நாள் பூஜைக்கு மாலையில் மாப்பிள்ளை எங்கள் வீடு வரவேண்டும். இரண்டாம் நாள் எட்டு மணிக்கு, மூன்றாம் நாள் இரவு பத்து மணிக்கு, நான்காம் நாள் நடுநிசிக்கு, வரவேண்டும். பிறகு 6 நாள் எங்கள் விடுதியிலேயே தங்க வேண்டும் என்று ஏற்பாடு. பூஜை மிக அபூர்வமானது; சர்வ மங்களமும் தரக்கூடியது என்று சாஸ்திரிகள் கூறினார். பூஜை அபூர்வமானதாகத்தான் இருந்தது.

அந்த இளைஞன் மிக நல்லவன். முதல் நாள் பூஜைக்கு பட்டு அணிந்து விபூதி பூசி, சந்தனப் பொட்டுடன் வந்தான். சாஷ்டாங்கமாக சாஸ்திரிகள் காலில் வீழ்ந்து தெண்டனிட்டான். பூஜை ஆரம்பமாயிற்று. இரண்டொரு நிமிடங்களில் சாஸ்திரி கண்களை மூடிக் கொண்டார். நிஷ்டை. ஆமாம்! அது என் ஏற்பாடுதான்.

அவர் நிஷ்டையிலிருக்கும்போது வாலிபன் “நிர்மல சொருபா! நித்தியானந்தா” என்று மனனம் செய்து கொண்டிருக்க வேண்டும். மனதை வேறு எதன்மீதும் நாடவிடக் கூடாது. கணபதி சாஸ்திரியின் கட்டளை!

சாஸ்திரியின் மனைவியாக இருந்த நான் முதல்நாள் பூஜையின்போது வாலிபனை மதிப்புப் போட்டபடி இருந்தேன். மோகனாஸ்திரங்களை வீசவில்லை. ஆள்சுபாவம் எப்படி, சுலபத்தில் வீழ்த்த முடியுமா? கொஞ்சம் கடினமா? என்பதைத் தெரிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டேன். முதல்நாள் பூஜையில் நான் அதிகம் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு தடவை பூஜைக்காக ஜமீன்தார் வீட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த வெள்ளிக் குத்து விளக்கைத் தூண்டச் சென்றேன். தூண்டிவிட்டு, வெட்கித் தலை குனிந்து வந்து கொண்டிருக்கையில், என் சேலையின் நுனிபாகம் இளைஞனின் தோளிலே பட்டது! இளைஞன் முகத்திலே இன்பக்களை தோன்றிற்று. வீழ்ந்தான் வலையில் என்று எண்ணிக் கொண்டே, அறையில் சென்ற உட்கார்ந்தேன். வாலிபன் நித்யானந்த மனனம் செய்தான், நினைப்பு மட்டும் இந்த ஆனந்தத்தின்மீது தான் இருந்திருக்கும். ஒரு முறை கனைத்தேன். அவனது கண்கள், நான் இருந்த இடத்திற்குப் பாய்ந்தன! புன்சிரிப்பை பரிசளித்தேன். அவன் புளகாங்கிதமடைந்தான். எனது சங்கல்பம் கை கூடுமென்பதற்கு அறிகுறிகள் தாராளமாகக் கிடைத்தன.

சாஸ்திரிகள் நிஷ்டை கலைந்து எழுந்து, நிவேதனம் முதலியவற்றை முடித்துவிட்டு, விபூதி மடலை எடுத்தார். “ஆனந்தம்” என்றழைத்தார். நான் நாணி நடந்து சென்றேன். இளையபூபதி உடலை வளைத்துக் கொண்டு நின்றான். அவனருகேதான் நான் போய் நின்றேன். சாஸ்திரி இருவருக்கும் விபூதி தந்தார். மறுநிமிடம் நான் மறுபடியும் அறைக்குள் வந்துவிட்டேன். இளைய பூபதி,“நாளைய பூஜைக்கு இரவு 8 மணிக்குத்தான் வரவேண்டுமா சாமி” என்று கேட்டான். “ஆம் காலையிலே நான் திருக்கோயில் வழிபாட்டுக்குச் சென்று விடுவேன். பிறகு ஸ்மாசன பூஜைக்குச் செல்வேன், வீடுவர இரவு 7 ஆகும். பூஜை 8 மணிக்குத் தொடங்கும்” என்றார்.

சாஸ்திரிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை விட நான் தந்த புன் சிரிப்பு பூபதிக்குப் பிரேமையை - பித்தத்தை - ஊட்டி விட்டது. ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா?