அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
8
                     

“அக்கா, அந்த வைரக் கம்மல்காரியைப் பார்த்தாயா! என்று நான் கமலாவைக் கேட்டேன். அந்தச் சமயத்திலே எனக்கிருந்த கோபம் ஏதாவது பேசி, கவனத்தை வேறு பக்கம் திருப்பினாலன்றி, மிகப் பொல்லாததாகப் போகும் போலிருந்தது. ஆகவேதான் அக்காவிடம் பேசினேன்.”

“பார்த்தேன்; அவளுக்குக் கிளி மூக்கு, மைக்கண்ணு, குறுங்கழுத்து, மகா தளுக்குக்காரியாக இருப்பாள்” என்று அக்கா சமுத்திரிகா லட்சணம் பற்றிப் பேச ஆரம்பித்தாள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேனே தவிர, அக்காவைப் போலப் பார்த்ததும் ‘போட்டோ’ பிடிப்பது போல் அவளுடைய அங்க இலட்சணங்களைக் கவனிக்கவில்லை. எனக்கோ மனம் தடுமாறிக் கிடந்தது. ஏன் இராது? தான் காதலித்த முத்து வேறோர் மங்கையுடன் உல்லாசமாகப் பேசிக் கொண்டு வரக் கண்டால் என் மனம் நிம்மதியாகவா இருக்கும்? என் தங்கச் சங்கிலி எப்படியோ வேறொருவளிடம் சிக்கி, அதனை அவள் அணிந்து கொண்டு என் எதிரிலே வந்தால், அவளுடைய கழுத்தின் அழகைக் கவனித்துக் கொண்டா இருப்பேன். சங்கிலியை வெடுக்கெனத்தானே கழற்றப் போவேன். நான் மட்டுமா? யாரும் அப்படித்தானே செய்வார்கள்? அதுபோல தான் எனக்கு இருந்தது முத்து அவளுடன் வந்தபோது. அந்த ஆத்திரம் எனக்கு வரக்காரணம் என் ஆசை. ஆசைக்குக் காரணம் அவன் காட்டிய ஜாடைகள். ஆசைகாட்டி மோசம் செய்வது அழகா?”

“என்னடி விமலா யோசிக்கின்றாய்?” என்று கமலா கேட்டாள்.

“ஒன்றுமில்லை; அவள் தளுக்குக்காரிதான். நீ சொன்னது உண்மைதான்” என்று நான் கூறினேன்.

“ஆனால் அவனிடம் அவள் ஜம்பம் சாயாது. அவன் பலே பேர்வழி” என்றாள் கமலா.

“வீட்டுக்குப் போகலாமா?” என்று நான் கூறினேன். எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. என் நிலையைத் தெரிந்து கொண்ட கமலா, “பைத்யக்காரப் பெண்ணே! இதற்காகவா ஆயாசப்படுவது? அவன் யாரோ, நீ யாரோ. உங்களுக்குள் என்ன சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. எதற்கு இவ்வளவு ஆத்திரம்? துணிக் கடைக்குச் சென்றால் கண்ணுக்குப் பிடித்தமான எல்லாச் சேலைகளையுமா வாங்குகிறோம். அதுபோல்தான் மனித வாழ்விலும் மனம் நாடுவதோ பல. கிடைப்பதோ ஏதோ ஒன்று. ஆனால் ஆடவருக்கு இருக்கும் வசதி பெண்ணினத்துக்குக் கிடைப்பதில்லை, கிடைக்காததால்தான் உலகத்திலே எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டும் இன்னமும் குடும்பம் என்ற ஒரு முறை நிலைத்திருக்கிறது. பல மலர்களிடை சென்று தேன் மொண்டு உண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகள் போல் ஆடவர் உள்ளனர். மாதர்மலர்போல் உள்ளனர். காரிகைகள் கசங்கிய ரோஜா” என்று அக்கா கூறினாள். “ஆமாம்! உண்மைதான்! எனக்குத் தூக்கம் வருகிறது. வீடு போவோம் வா” என்று மறுபடியும் கூப்பிட்டேன்.

“தூக்கமா? துக்கமா?” என்று அக்கா கேட்டாள். நான் பதில் கூறாமலேயே, அக்காவின் கையைப் பிடித்து இழுத்தேன். கமலா சிரித்துக் கொண்டே புறப்பட்டாள். வீடு வந்த சேர்ந்தோம். தவன உற்சவம் யாராருக்கோ எதை எதையோ கொடுத்திருக்கும். நான் கண்டது தலைவலி தான். அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. அந்த மங்கை யாரோ! அவளைத் தான் அவன் உண்மையில் காதலிக்கிறான் போலிருக்கிறது. அவர்கள் ஜாதிப்பெண்கள், கொஞ்சம் அழகாகவும் இருக்கிறாள், பணக்காரி. அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர். அவளிடம் என்னை ‘தாசி’ என்று அவன் கூறின பிறகு, அவன் எப்படி என்னை மணப்பான்? மணந்து கொள்ள மனமிருந்தால் இப்படியா கூறுவான்? என்றெல்லாம் எண்ணி ஏங்கினேன்.

காலையிலே காப்பி சாப்பிடும்போது, “கேட்டாயா விமலா. அவள் யாரோ டிப்டி கலெக்டரின் மகளாம். அவர்கள் ஜாதிப்பெண்ணாம். அவன்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறானாம். அவள் பத்தாம் வகுப்பிலே படிக்கிறாளாம். பந்து ஆடுவாளாம். பாட்டுக் கூட தெரியுமாம்” என்று சேதி கூறினாள் கமலா.

“நானும் அப்படித்தான் இருக்குமென்று எண்ணினேன். அக்கா அப்படிப்பட்டவளைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு நடக்கும்போது அவன், என்மீது ஏதோ அளவு கடந்த ஆசை இருப்பதாகவும், என்னைக் கலியாணம் செய்து கொள்வ தாகவும் கூறினான்” என்று நான் கேட்டேன்.

“போடி முட்டாளே! இதுகூட ஒரு ஆச்சரியமா! குழந்தை கள் அழுதால் உனக்கு என்ன வேண்டும், ஆனை வேண்டுமா, பூனை வேண்டுமா என்று கேட்டு எப்படியாவது அழுகையை நிறுத்துகிறது போல, அவன் உன்னைச் சம்மதிக்கச் செய்ய ஏதோ ஆசை வார்த்தை பேசினான். நீ ஏன் நம்புகிறாய்” என்று அக்கா கூறினாள்.

“ஆண்களுக்குப் இந்தச் சுபாவம் இருக்குமென நான் எண்ணவில்லை. அக்கா பெண்களிடம்தான் இது இருக்கும் என எண்ணினேன் என்று கூறினேன். “விமலா! இதோ இன்னமும் சொல்கிறேன் கேள். இன்று அம்மா கிராமத்துக்குச் செல்கிறார்கள். ஜமீன் தாரோ வெளியூர் போயிருக்கிறார். இன்று மாலை நான் அவனை இங்கே வரவழைக்கிறேன், பார்க்கிறாயா? அந்த வைரக் கம்மல்காரி வீட்டில்தானே இருக்கிறாள். அவளைப் பற்றியும், உன்னைப் பற்றியும் அவன் வாயாலேயே என்னென்ன சொல்லச் சொல்கிறேன் பார்” என்று அக்கா சபதம் கூறிவிட்டு மேலும் சொன்னாள்.

“ஆண்கள் எந்தப் பெண்ணை எந்த நேரத்தில் கண்டாலும் அந்த நேரத்திற்கு அவளைத்தான் மேனகை, திலோத்தமை, ரம்பை, ஊர்வசி என்று கொஞ்சுவார்கள். உன் மீது இருக்கிற பிரியம் எனக்கு யார்மீதும் இல்லை என்று உறுதி கூறுவார்கள். எப்படியாவது அந்த நேரத்திலே அவள் மனம் குளிர்ந்தால் போதும் என்றுதான் எண்ணுவார்கள். நான் என்ன அவளைவிட சிவப்பா? என்றுகேட்டால், சிவப்பு என்ன ஒரு அழகா, நீ கருப்பாக இருந்தாலும் உன் முகத்திலே இருக்கிற களை அந்தச் சிவப்புக்காரியிடம் கிடையாது என்பார்கள். அவள் எப்போதும் புன்சிரிப்பாக இருக்கிறாள், நான் அப்படியா இருக்கிறேன் என்று கேட்டால், சதா, சிரிப்பது ஒரு அழகா? பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரித்தால் போச்சு. நீதான் சரி. இப்படித்தான் பெரிய மனித வீட்டுப்பெண்கள் இருக்க வேண்டும். முகத்திலே தேஜஸ் இல்லையா? பல்லைக் காட்டினால்தானா அழகு என்று பதில் சொல்வார்கள். நாம எந்தெந்த விதத்திலே குறுக்குக் கேள்விகள் போட்டாலும் எல்லாவற்றிற்கும் ஏதாவதொரு சமாதானம் சொல்லி நம்மை ஏய்ப்பார்கள். இது ஆண்களின் வேலைத்திறன்.”

அக்கா கூறின உண்மையான மொழிகளை நான் பிறகு அனுபவத்தின் மூலம் பல தடவை கண்டேன். டாக்டரே! எத்தனை பேர், கிளியே, மணியே, கரும்பே என்றெல்லாம் என்னிடம் கொஞ்சினார்கள். கடைசியில் கைவிட்டார்கள். எத்தனையோ பேரை நானாக வீட்டுக்குப் போய் விட்டுத்தான் வாருங்களேன். வீட்டில் என்ன எண்ணுவார்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறேன்.

ஏறெடுத்துப் பார்க்கப் பிறகு பலர் மறுத்து விட்டார்கள்.

அன்று மாலை அக்கா சொன்ன பரீட்சை நடந்தது. நான் கமலாவின் படுக்கை அறையின் மறு அறையிலே ஒளிந்து கொண்டிருந்தேன். அக்காவின் ஏற்பாட்டின்படி, அக்கா ஆள் அனுப்பியோ மாடிக்குச் சென்று ஜாடை செய்தோ எப்படியோ முத்துவை, எங்கள் வீட்டிற்கு வரும்படி செய்து விட்டாள். படுக்கையறையிலே, அக்கா கட்டிலின்மீது சாய்ந்து கொண்டு எதிரிலே ஒரு நாற்காலியிலே முத்துவை அமரவைத்துக் கொண்டதாகப் பிறகு தெரியவந்தது. அவர்களின் சம்பா
ஷணையை மட்டுமே நான் கேட்டேன் பக்கத்து அறையிலிருந்து. அதை அப்படியே கூறுகிறேன் கேளுங்கள்.

கமலா : ஏன் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்களே. உட்காரலாமே.

முத்து : என்ன அன்பு கமலா உனக்கு! எவ்வளவு சோபித மாகப் பேசுகிறாய்! என்ன சுந்தரமான முகம்.

கமலா : வெறும் முகஸ்துதி; பெண்களை, அழகி, இந்திராணி, மேனகை என்றெல்லாம் புகழ்ந்து, ஆண்கள் ஏய்ப்பதே வாடிக்கை. அது கிடக்கட்டும்; அன்று தவன உற்சவத்தன்று உம்முடன் வந்தாளே ஒரு பெண், பொம்மை மாதிரி, அவளை விடவா நான் அழகு?

முத்து : சந்தேகமா அதற்கு? பூர்ண சந்திரனுக்கும் தேய்பிறைக்கும், வித்தியாசமில்லையா?

கமலா : அவள் என்னைவிட இளையவள்.

முத்து : வயதில் மட்டுமல்ல. வடிவத்திலும்.

கமலா : என்னைவிட அவள் நல்ல சிவப்பு.

முத்து : சாயம் பூசிக் கொண்டவள்போல்.

கமலா : நான் அழகா? என் தங்கை விமலா அழகா?

முத்து : கமலா, வீணாக ஏன் பேச வேண்டும். நீயே அழகி. உன் தங்கையின் முகத்திலே அசடு கொட்டுமே. எனக்கு தெரியாதா என்ன? நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பித்துக் கொள்ளி போல முறைத்து முறைத்துப் பார்க்கும்.

கமலா : பார்ப்பது மட்டுந்தானா?

முத்து : உன்னிடம் மறைப்பானேன். கண் அடிக்கும். சிரிக்கும், கடிதங்கூட எழுதி இருக்கிறாள். நீ வெளியே சொல்லி விடாதே. எனக்கு அவளிடம் பிரேமை கிடையாது. உன் மீதே எனக்குக் காதல்; இது நிச்சயம்.

கமலா : இதுதான் ஆண்பிள்ளையின் சுபாவம். எந்தெந்த நேரத்திலே எந்தெந்தப் பெண் எதிரிலே இருக்கிறாளோ, அவளே அழகி, அவளே ரூபவதி, அவளே ஒய்யாரி என்று கூறுவார்கள். ஏதாவது கூறி ஏய்ப்பதே அவர்களின் வேலை.

முத்து : இது சாதாரணப் பழக்கந்தான். ஆனால் காதல் கொண்டவன் இப்படி நடக்கமாட்டான்.

கமலா : காதலும், சாதலும் அதெல்லாம் புத்தகத்தில், நாடகத்தில், சினிமாவில், உலகத்திலே கண்ணுக்கு ஏற்றதைக் கிடைத்தவன் கொள்ளை கொள்வதுதான், காதலாக இருக்கிறது. கமலாவின் முகத்தில் நீரோட்டம் இருக்கும் வரையில், கமலா விடம் காதல், பிறகு விமலா, பிறகு சாமலா. ஆண்கள் கதையே அதுதானே.

முத்து : எல்லா ஆண்களும் அப்படி அல்ல.

கமலா : ஆமாம். எல்லாப் பாம்புகளும் ஒரே மாதிரியாக இருக்கிறதில்லையே. அதுபோல. சில தீண்டினதும் தீர்ந்தது. சில தீண்டினால் உடல் முழுதும் வீக்கம். ஆனாலும் எந்த பாம்பு நல்லது? எது விஷமில்லாதது?

முத்து : நானும் ஓர் பாம்புதானா?

கமலா : ஆமாம்! கண்ணாடி விரியன். தோல் பளபளப்பு. ஆனால் விஷப்பையோ ததும்புகிறது. ஆனால் எனக்குப் பாம்புக்கடி அவ்வளவு ஏறுவதில்லை.

முத்து : நானா கண்ணாடி விரியன்? ஆஹா! கமலா! நீ எவ்வளவு வேடிக்கையாகப் பேசுகிறாய். நான் பாம்பானால் இந்நேரம் உன்னைத் தீண்டிவிட்டிருப்பேனே!

கமலா : நான் கட்டிப் போட்டு விட்டேனே.

முத்து : கட்டிவிட்டாயா? இல்லையே, உன் கைகள் என் உடலைத் தழுவவில்லையே.

கமலா : என் ‘சக்தி’ உன்னைக் கட்டிப்போட்டு விட்டது. பிடாரன் ஊதுகுழல் கேட்டதும் புற்றிலிருக்கும் நாகம் படமெடுத்து ஆடுவதுபோல் ஆடுகிறாய்; மோகன ராகம், அதற்கேற்ற நர்த்தனம். இந்த நாக நர்த்தனத்தை விமலா கண்டால் எப்படி இருக்கும்.

முத்து : கமலா! நீ என்னை வலிய வம்புக்கு இழுக்காதே. நான் ஜமீன்தார்போல் உனக்கு சொர்ணாபிஷேகம் செய்ய முடியாது. ஆனால் என் அன்பை, இளமையை உனக்கு அபிஷேகிக்கிறேன்.

கமலா : நான் கல்லுச்சாமியல்லவே!

முத்து : என் கண்கண்ட தெய்வம் நீ!

கமலா : பக்தன் கோரும் வரம் படுக்கையறைதானே!

முத்து : கேலி செய்யாதே கமலா.

கமலா : ஜாலம் ஏன் செய்கிறீர்?

முத்து : காலம் வீணாகக் கழிகிறது.

கமலா : அவசரப்படாதீர்.

முத்து : கர்ப்பக்கோடி காலமும் பொறுத்துக் கொண்டிருப் பேன். ஆனால் உன் கடைக்கண் மட்டும் சம்மதத்தைத் தெரிவிக் கட்டும்.

கமலா : முழுக் கண்ணும் கூறும் பொறுத்தால். முதுலிலே இரண்டு விஷயம் எனக்குத் தெரிய வேண்டும். நான் விமலாவைக் கலியாணம் செய்து கொள்ளும்படி உம்மை கேட்கப் போவதில்லை. நீர் யாரை வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளும். ஆனால்...

முத்து : உன்னைத் தவிர வேறு ஒரு மாதையும் எண்ணக் கூடாது. அவ்வளவுதானே, நீட்டு கையை, சத்தியம் செய்கிறேன்.

கமலா: அது வேறு இடத்தில் செய்யுங்கள். இனி மேல் அந்தத் தாசி கமலா வீட்டுப் பக்கங்கூட போக மாட்டேன், இது சத்தியம், சிவன் ஆணை, என்று உமது மனைவியிடம் கூறும். எனக்கேன். சத்தியம். எத்தனையோ சத்திய சந்தர்களின் சாயம் வெளுக்கத்தானே, நாங்கள் இருக்கிறோம்.

முத்து : வேறு என்னதான் விஷயம்?

கமலா : நான் வேண்டுமா? விமலா வேண்டுமா? இருவருமா?

முத்து : விபரீதமான உலகம் அல்லவா? கேள்வி மட்டுந் தானா விபரீதம்? தாசிப் பெண்ணிடம் காதல் பேசுகிறீரே, இது விபரீதமாகத் தோன்றவில்லையா?

முத்து : கமலா, இனி நான் போக வேண்டியதுதான்.

கமலா : சலித்து விட்டதோ!

முத்து : இல்லை. வீணாகப் பொழுது போக்க விருப்ப
மில்லை.

கமலா : நானும் காரணமின்றி அழைக்கவில்லை. கட்டிலறைக்குள் உம்மைச் சேர்க்கவில்லை. என் தங்கை உமது தளுக்கைக் கண்டு மயங்கினாள். அவளுக்கு விஷயம் தெரியவே இதனைச் செய்தேன். இதோ அவள் வருகிறாள். அவளிடம் உமது முகத்தைக் காட்டும்.”

என்று கூறிவிட்டு, என் அக்கா, “விமலா, விமலா வாடியம்மா, வந்து உன் ‘நாதனை’ அழைத்துப் போடி” என்று என்னைக் கூவி அழைத்தாள். நான் சம்பாஷணையைக் கேட்டு மிக மிக மனம் பதறி, உடல் துடித்து, வியர்த்துப் போயிருந்தேன். அந்தச் சாகசக்காரனின் கழுத்தை நெரித்துவிடவும், புலிபோல அவன் மேல் பாய்ந்து உடலைக் கீறி, பிய்த்து உள்ளத்தை எடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்றும் எனக்குத் தோன்றிற்று.

ஆனால் நானோ பெண், தாசி. ஊரார் என் மீதுதானே வீண் அபவாதத்தைச் சுமத்துவார்கள். எனவே, கோபம் என்னை அழச் செய்தது. ஆங்காரம் இரந்து மட்டும் பயன் என்ன? அவன் ஓர் ஆண் மகன். உயர்குலம், நானோ விலைமகள். இருப்பினும் அவனது மனம் புண்ணாகி இரணமாகி விடும்படி அவனைப் பேசி ஏசி, காரித்துப்ப வேண்டுமென்று தோன்றிற்று. அறையை விட்டுக் கிளம்பினேன் ஆக்ரோஷத்துடன்.

அதே நேரத்தில், என் பின்புறமிருந்து ஒரு பலமான கை என் வாயைப் பொத்திவிட்டு என்னைத் தடை செய்து நிறுத்தி விட்டது. திடுக்கிட்டுத் திரும்பினேன். ஜமீன்தாரர் என்னை அங்ஙனம் தடுக்கக் கண்டு, மனம் பதறினேன். திடீரென நேரிட்ட இந்தப் பயங்கரப் பிரவேசம் என் நாக்கை அடக்கிவிட்டது.

“கமலாம்பிகா! வெளியே வரலாம்” - என்று கர்ஜித்தார் ஜமீன்தார்.

“ஆ!” என்று கமலா அலறிக் கொண்டே அடைநெகிழ அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் பின்னோடு, மருண்ட பார்வையுடன் முத்துவும் வந்தான்.

ஜமீதாரருக்கு, முகம் சிவந்தது. கமலாவின் முகம் வெளுத்து விட்டது. முத்து நிற்குமிடத்திலேயே நாட்டிய மாடினான். எனக்கோ மயக்கம் வரும் போலிருந்தது.

“துரோகி” என்ற கூச்சல் கேட்டது. ஜமீன்தாரின் கைகள் கமலாவின் ஜடையைப் பிடித்து இழுக்கவும், ஐயோ, அம்மா, அடடா நான் இல்லை என்று மாறி மாறிக் கூக்குரல் கிளம்பவும் கேட்டேன். சோகம், பயம், மயக்கம். என் கண்கள் சுழன்றன. அதைவிட வேகமாக என் மனம் சுழன்றது. நான் ஈனக் குரலில் அக்கா, அத்தான் என்று கூவினேன். மயங்கிக் கீழே வீழ்ந்தேன்.

மயக்கம் தெளிந்து எழுந்தேன். வீடு நிசப்தமாக இருந்தது. நான் கீழே சாயும்போது இருந்த அமளியின் அறிகுறி தென்படவில்லை. ஜமீன்தாரும் இல்லை. அக்காவையும் காணோம். முத்துவும் இல்லை. எனக்குத் திகில் பிடித்துக் கொண்டது. நான் கனவு கண்டுதான் மிரண்டேனோ என்று தோன்றிற்று. ஆனால் கனவல்ல, நிஜமாக நடந்த சம்பவமே என்பதை நிரூபிக்க, சுவரிலே இரத்தக் கறை;என் அழகிய அக்காவின் கூந்தலில் ஓர் முடி அந்த இரத்தத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தது. கமலாவின் தலையை ஜமீன்தார் சுவரிலே பிடித்து இடித்தாரோ என்னவோ; அந்தோ பாபமே! என் பொருட்டு என்ன கதி நேரிட்டது அக்காவுக்கு என்று எண்ணினேன். அக்காவின் அறைக்கு ஓடினேன். அக்கா, படுக்கையில் படுத்துக் கொண்டு விம்மிக் கொண்டிருந்தாள். “ஐயோ அக்கா, என்னால் உனக்கு இந்த அவதி வந்ததே” என்று கூறி, தலையைத் தூக்கி என் மடிமீத வைத்துக் கொண்டேன். அக்கா அலங்கோலமாக இருந்தாள். மண்டையிலே பலமான காயம். வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகி, அதன் கரை, அவளது அதரத்தைக் கப்பிக் கொண்டிருக்கக் கண்டேன். கன்னம் வீங்கியிருந்தது. ஜமீன்தாரரின் கைவிரல்கள் முத்திரை போல், அவளது கன்னத்தில் காணப்பட்டன. கை வளையல்கள் நொறுங்கி, உடலைக் கீறிக் கொண்டிருந்தன. அதனால் ஏற்பட்ட வடுக்கள் பல. சேலையின் ஓரம் கிழிந்து போய்த் தொங்கிக் கொண்டிருந்தது. அவளது இடுப்பருகே என் கைபட்ட போது, ‘ஆ! தொடாதே’ என்று கூவினாள். அங்கு அவர் உதைத்ததினால் உள்காயம். முகம் அழுது அழுது கோரமாகி விட்டிருந்தது. நான் இந்தக் காட்சியைக் கண்டு அழத் தொடங்கினேன். “அக்கா நமது வாழ்க்கை எவ்வளவு கேவலமாக இருக்கிறது” என்று கூறினேன்.

“விமலா, நான் எவ்வளவோ சமாதானம் சொன்னேன். அந்த முத்து ஜமீன்தாரின் கால் தன் முதுகில் பாய்ந்ததும் ஓடி விட்டான். இருந்து சமாதானம் கூறவில்லை.

ஆனால், அந்த நேரத்தில் ஆண்டவன் நேரில் வந்து சாட்சி சொன்னாலும் அவர் நம்பியிருக்க மாட்டார். என்னை இவ்வளவு அலங்கோலமாக்கினார். இது மட்டுந்தானா விமலா? என் மண்டையில் பட்ட அடியோடு, ஜமீன்தாரின் கோபம் தீர்ந்து விடாது. நமது வாழ்க்கைக்கே இது பலமா அடியாகப் போகிறது. நினைத்தால்கூட நெஞ்சு பதறுகிறது. உங்களைத் தொலைத்து விட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று கூறிவிட்டுப் போனானே பாவி - அவன் இன்னமும் நம்மை என்னென்ன பாடுபடுத்துவானோ! என் உடல் அலங்கோலமானது போல், நமது குடும்பத்தையே அலங்கோலமாக்கி விடுவானே. அதை நினைத்தால் எனக்குப் பயம் அதிகரிக்கிறது. அவன் பேச்சுத் தானே இந்த ஊருக்குச் சட்டம். அவன் கீறும் கோட்டை யாரும் தாண்டமாட்டார்களே! அவனது கோபம் நம்மை அழித்து விடுமே. நமது கதி என்னாகுமோ?” - என்ற கூறி ஏங்கினாள்.

ஜமீன்தாரரின் அபிமானத்தைப் பெற்றதனாலேயே எங்களுக்குச் செல்வமும் சொல்வாக்கும் இருந்தது. ஊரார் எங்கள் குலத்திலேயே யாருக்கும் தராத மதிப்பு எங்களுக்குத் தந்தனர். பூ போன பிறகு நாரை யார் விரும்புவார்கள்? ஜமீன்தாரின் கோபத்துக்காளான எங்கள் குடும்பம் இனி எவருடைய ஏசலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காகிவிடும் என்பதுஎ னக்குத் தெரியும் கருமேகமற்ற வானத்திலேதானே சந்திரன் தன் முழுச் சோபிதத்தையும் காட்ட முடியும். பெருத்த விருட்சமானாலும் புயல் அடித்தால் பூமியில் வீழ்ந்து தானே போகும். அதுபோல்தானே எங்கள் கதியும். ஏழைகளின் உரிமை பற்றியும், எல்லோரும் சமம் என்பது பற்றியும் எத்தனையோ கதாப்பிரசங்கிகள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஏழைகள் படும்பாட்டை கண்ணால் கண்டிருக்கிறேன். குசேலரின் குழந்தை குட்டிகளுக்குக் கண்ணன் உதவிய கதைப்படிக் கேட்டு, கதை படித்தவருக்கு, கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பால் கொடுத்துமிருக்கிறோம். ஆனால் பன்றி குட்டி போடுவது போல் இப்படிப் பிள்ளைகளைப் பெறுவானேன். தெருவில் அலைய விடுவானேன் என்று பலரும் சொல்லக் கேட்டுமிருக்கிறேன். நிலைகுலைந்தால், நிந்தனைக்கு ஆளாக வேண்டியே வரும். இந்த நியதி மாறவில்லை. இந்நிலையில் எங்கள் கதி என்ன? என்று எண்ண எண்ண பயமே மேலிட்டது.