அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
16
                     

போலீசாரிடம் பிடிபட்டபோது, முத்துராமலிங்கம், சொன்ன வாசகம், என் மனதிலே ஏனோ ஒருவிதமான வேதனையைக் கிளப்பிவிட்டது. அவனுடைய போக்குக் கண்டு, நான் கோபப்பட்டேன். முதலில் வலிய வலியச் சண்டைக்கிழுத்தான். வம்பு தும்பு பேசினான்; முரட்டுத்தனமாகவே நடந்து கொண்டான்; இதனால் அவன்மீது எனக்குக் கோபந்தான் பிறந்தது. இளைய பூபதியின், உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி ஒரு துளியும் கவலைகொள்ளாமல், மட்டு மரியாதையின்றி அவரிடம் பேசினான் என்பதுபற்றி எனக்குக் கோபந்தான். ஆனால் அவன் மீது ஐயர் அபாண்டமான பழி சுமத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தபோது, அவன் ஒரு புது மனிதனாகி விட்டான். பதறவில்லை - பயப்படவில்லை - ஐயர்மீது பாயவில்லை - பூபதியை ஏசவில்லை - மிகமிகத் தைரியமாக நடந்து கொண்டான் - அலட்சியமாகப் பார்த்தான், ஐயரை! அந்தப் போக்கு எனக்கு ஆச்சரிய மூட்டிற்று - அவனுடைய பேச்சோ, என் மனதிலே சொல்லொணாத வேதனையை மூட்டி விட்டது. இதுதான் இவர்கள் வேலை! என்று அவன் கூறின வார்த்தைகள் ஒவ்வொன்றும், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டுகள் போல என் காதில் பாய்ந்து, மனதிலே தங்கி வேதனையை விளை வித்தன. நிறுத்தி, நிதானமாக, பதறாமல், பயப்படாமல், சொன்னான், இதுதான் இவர்கள் வேலை என்று. சொன்னதும் எனக்கேற்பட்ட வேதனை, சிலவிநாடிகளுக்கெல்லாம், வெட்கமாக மாறிவிட்டது. உண்மை தானே! அவன் அச்சமின்றி, வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசுகிறான் - மனதிற் பட்டதை கூறுகிறான் - வீரமாகப் போராடுகிறான் - பணம் படைத்தவர் என்பதற்காக, ஒருவரிடம் வளைவதோ, குழைவதோ கூடாது. அது ஆண்மையோ அறிவுடைமையோ ஆகாது என்ற கொள்கையை கொண்டவனாக இருக்கிறான் - கோப மூட்டக் கூடியபடி பேசுகிறான் என்ற போதிலும், வஞ்சகனல்ல - பசப்பிப் பேசி அதனால் இலாபம் பெற வேண்டுமென்று எண்ணும் கீழ்த்தரக் குணம் கொண்டவனல்ல! - சூது, சதி செய்பவனல்ல - ஆயினும், அப்படிப் பட்டவனை, அவன் பேசுவது தவறு என்று எடுத்துரைக்க வகையற்று, அவனுடன் வீரமாகப் போரிட்டு வீழ்த்தவும் வகையற்று, அவனை, வஞ்சகமாகத்தானே வீழ்த்தினோம். காரசாரமாகப் பேசினான் - கண்களில் பொறி பறக்கப் பேசினான் - கட்டுக்கு அடங்காது பேசினான் - காளை போலத் துள்ளினான் - தாக்கினான் - எல்லாம் சரி, ஆனால் அவன் கள்ளனல்லவே! அவன், கள்ளன், ரயிலில், ஜெமீன் பூபதியின் பணப்பெட்டியைக் களவாட முயற்சித்தான் என்று சூதாகத்தானே கூறி, அவனைப் போலீசில் சிக்கவைத்து விட்டோம் - இவன் வீணாக வாதாடினான், போராடினான், இவனை அடக்க எங்களால் முடியவில்லை, இவனை அப்புறப் படுத்துங்கள், இவன், எங்களோடு சேர்ந்து பிரயாணம் செய்தால், மேலும் ஏதேனும் தொல்லை தருவான் என்று நேர்மையாகக் கூறி இருக்கலாம், போலீசாரிடம். ஆனால் ஐயர் சொன்னது அதுவல்லவே! நானும் இளையபூபதியும், அவருடைய அபாண்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்தோம் - மறுக்கவில்லை - இலேசாக மகிழ்ச்சிக்கூடக் கொண்டார் இளையபூபதி. ஐயர் மதிமிக்கவர் என எண்ணி - ஆர அமர யோசிக்கும்போதல்லவா, நாங்கள், எவ்வளவு வஞ்சகமாக நடந்து கொண்டோம் என்பது தெரிந்தது. நான் வருத்தமடைந்தேன். இளையபூபதிக்கும் வருத்தம் - ஆனால் காரணம் வேறு. “பயலைச் சரியானபடி உதைத்துப் பாடம் கற்பித்திருக்க வேண்டும் - பல்லை உதிர்த்திருக்க வேண்டும்” என்று கோபத்தோடு பேசினார் - “யாரை அந்த மண்டைக் கர்வியையா! யார், தாங்களா? ஏன்! பயலுக்கு, இப்போது, என்ன சமாராதனையா நடத்தப் போகிறார்கள்! போடு போடுன்னு போட்டு, பின்னி எடுத்துவிட மாட்டாளா போலீசிலே. இலேசிலே விடமாட்டா - இப்படிப்பட்ட தறுதலைப் பயல்களைத் தண்டிக்க அவா இருக்கும்போது, தாங்கள், ஏன் சிரமப்படவேணும்” என்றார் ஐயர் - “அடிப்பார்களா?” - என்று நான் கேட்டேன் - “அடி கொடுப்பதோடு விடுவாளோ - கேசும் போடுவா - தண்டனையும் கிடைக்கும் - இரண்டு வருஷத்துக்குக் குறையாமல், பயல், இப்போது பெரிய லீடர் என்றல்லவா எண்ணிக்கொண்டு கிடக்கிறான் - பொது ஜன சேவை இனி என்ன ஆகும் தெரியுமோ - ரயில் திருடன்னு பட்டம் கிடைக்கும் - பயல் பெட்டிப் பாம்புதான் - இப்படிப்பட்ட பயல்களை மட்டந் தட்டாவிட்டா, நாடு காடான்னா போகும். மட்டு மரியாதை துளி உண்டா - மாட்டிண்டான் சரியா” - என்று ஐயர், விளக்கலானார் - தமது வீரத்தை என்று அவர் எண்ணிக் கொண்டார். எனக்கு அவர் பேச்சு, வீரமாகத் தெரியவில்லை. அவர் பேசப் பேச, எனக்கு, முத்துராமன் சொல்லிவிட்டுப் போன வாசகந்தான், மனதைக் குடைந்தபடி இருந்தது. போலீசாரிடம் சிக்கி அடி உதைபட்டு, வழக்கு ஏற்பட்டு அதனால் தண்டனையும் பெற்று, வதைபடுவதோடு, அவனுடைய பொது வாழ்க்கையுமல்லவா, பாழாகிவிடும் என்பதை எண்ணியபோது உண்மையாகவே, வருத்தமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான், நான் மீண்டும் முத்துராமனைச் சந்தித்தேன், ரயில் சம்பவத்துக்குப் பிறகு - அப்போதுதான் அவன் சொன்னான், தனக்கு ஒரு விபத்தும் நேரிடவில்லை என்பதையும், போலீசார் தன்னை மிரட்டியதோடு, சம்பவம் முடிந்துவிட்டதாகவும், நான் மிக மகிழ்ச்சியடைந்தேன்.

முத்துராமனிடம் சண்டைக்கு நிற்கவேண்டி நேரிட்ட சம்பவத்திற்குப்பிறகு, எங்கள் பிரயாணத்தில், வேறு குறிப்பிடத் தக்க சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. நேரே டில்லி சென்று அங்கு ஐயரின் ஏற்பாட்டின்படி ஒரு ஓட்டலில் தங்கினோம் - காங்கிரஸ் மாநாடு, நடை பெறுவதற்குச் சில நாட்கள் இருந்தன. டில்லியில் தங்கி, பிரபலஸ்தர்களைக் கண்டு பேசியல்லவா, பூபதிக்கு, ஆதரவு திட்ட வேண்டுமென்றார் ஐயர் - அதற்கான பல காரியங்களை அவர் கவனித்துக் கொண்டிருந்தார் - நானும் இளையபூபதியும் டில்லி நகரிலே உல்லாசமாக உலவியும், கடைவீதி சென்று, விதவிதமான சாமான்களை வாங்கி மகிழ்ந்தும், சினிமாக்கள் பார்த்துக் களித்தும், பொழுது போக்கினோம். ஒரு நாள் ஐயர், “பூபதி! ஒரு விசேஷம்” என்ற பீடிகையுடன், பேச்சைத் துவக்கினார்.

“இமாசலத்திலே இருபதாண்டுகள் தவம் செய்து வரப் பிரசாதம் செய்த ஒரு மகான், இங்கு மானச கோகுலம் அமைத்து நடத்திக் கொண்டு வருகிறார். மானச கோகுலத்திலே யார் வேண்டுமானாலும் போக முடியாது - ஒரு முறையாவது போகிற பாக்யம் பெற்றவாளோ பெறுகிற புண்யத்துக்கு அளவு கிடையாது” என்றார்.

ஐயர் இளையபூபதியை அழைத்து வந்ததோ அரசியலில் பெரிய இடம் கிடைக்கச் செய்வதற்கு - இப்போதோ யாரோ மகானுடைய அருளை வாங்கித் தருவதாகக் கூறுகிறார் - இதற்கு டில்லி வரவேண்டுமா - மகான்களுக்கு என்ன பஞ்சமா, நமது பக்கத்திலே - என்று நான் எண்ணிக்கொண்டேன் - கேட்க வில்லை - ஏனென்றால் ஐயர், மிக ஆர்வத்தோடு, அந்த மகானைப் பற்றிப் பேசலானார்.

“மானசகோகுலம், அமாவாசைக்கு அமாவாசைதான் நடைபெறுகிற வாடிக்கை. ஊரெல்லாம், உலகெல்லாம் அமாவாசையன்று இருள் - ஆனால் இந்த மகானுடைய, மானச கோகுலத்தில் அன்று பௌர்ணமி. அதாவது, அன்று ஆஸ்ரமம் ஜோதி மயமாக இருக்குமாம். இரவு எட்டு மணிக்கு, கோகுலம் சென்றால், பத்துமணி வரையிலே, பூஜாக்கிரகவாசம் - அந்த இரண்டு மணி நேரபூஜை முடிந்ததும் மானசீக கோகுலம், ஏற்பட்டு விடுகிறதாம் - அதாவது, பூஜாக்கிரகவாச விசேஷத்தால் அதிலே ஈடுபட்ட புருஷர்களெல்லாம், கிருஷ்ணபரமாத்மாவின் பிரதி பிம்பங்களாகி விடுகிறாளாம் - ஸ்திரீகளெல்லாம், கோகுல கோபிகைகளாகி விடுகிறாளாம் - ஜோதி மயமான மண்டபத்தில் தங்களை மறந்து ஆடிப்பாடிக் கொண்டிருப்பாளாம். சூர்யோதயம் வரையில். பிறகு, பூஜாக்கிரகம் சென்று பழையபடி சுயஉணர்வு பெற்று, வீடு திரும்புவது முறையாம். இந்த மானசீக கோகுலத்திலே ஒரு முறையாவது போக, மகாராஜாக்களெல்லாம், அந்த மகானிடம் மண்டியிட்டுக் காத்துக் கொண்டிருப்பாளாம். மாங்காட்டு மணீன்னு எனக்கொரு சிநேகிதன் உண்டு - பால்ய சினேகம் - அவனுடைய மருமான், இந்த ஆஸ்ரமத்திலே வேலையில் இருக்கிறான் - அவன் சொன்னான் சகல விவரமும் - சொன்னதோடில்லை - நாம், இந்த ஆமாவாசையன்று, மானசீககோகுலம் போக, ஏற்பாடும் செய்து விட்டான்” என்றார். ஐயர், சொன்னது கேட்டு எனக்கு ஒன்றும் அளவுகடந்த பிரியம் ஏற்படவில்லை; இளையபூபதிக்கு மட்டும், ஆர்வம் அளவுக்கு மீறிப்போய்விட்டது - ஐயர் இதை அறிந்து, மானசீக கோகுலத்தைப் பற்றிய விவரங்களை மேலும் மேலும் வர்ணனைகளுடன் சொல்லலானார். மிகவும் இரகசியமாக இந்த ஏற்பாடு நடைபெறுவதால், பலருக்குத் தெரியாது என்றார்.

“அது சரி - மகான் - பூஜை - விசேஷ பலன், என்றெல்லாம் பேசுவது கிடக்கட்டும் - புருஷர்களெல்லாம் கிருஷ்ண பரமாத்மா, பெண்களெல்லாம் கோபிகா ஸ்திரீகள் என்றாகிவிடு வார்கள் என்றால் அர்த்தம் என்ன யோசித்துப் பார்த்தால், ரசாபாசமாக அல்லவோ இருக்கிறது” என்று நான் கேட்டுப் பார்த்தேன். “அது, அவாளவாளுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது” என்று பொதுவாகப் பதிலளித்தார். எனக்கு அதற்குமேல், அந்த விஷயமாகக் கிளற விருப்பமில்லை - என் யோசனை எல்லாம், எப்படியாவது, இந்த இடத்துக்குப் போகக் கூடாது - தடுத்துவிடவேண்டும் என்பது - எனக்கும் ஐயருக்கும், இது சம்பந்தமாகப் போட்டி - பலப்பரீட்சை நடந்தது - ‘எவனெவனோ வருவாள், எவளெவளோ வருவாள் - இது என்ன ரசாபாசம்” இது என் வாதம்; “யாரார் வருகிறா தெரியுமோ - எப்படிப்பட்டவாளெல்லாம் வருகிறா தெரியுமோ!” இது ஐயரின் தூபம். என்னை, ஐயர் தோற்கடித்தார் - மூவரும், மானசீக கோகுலம் சென்றோம்.

பெரிய அரண்மனை, அந்த இடம் - யாரோ ஒரு ராஜா வுடையதாம். வெளியே போர்டு எதுவும் கிடையாது - கட்டடத்தின் முன்பகுதியிலேயும். மானசீக கோகுலம் என்பதற்கான அடையாளம் எதுவும் கிடையாது. பழைய இரும்புச் சாமான்கள், விற்குமிடமாக இருந்தது - ஆனால் இங்குள்ள காவற்காரனிடம், ஏதோ ஓர் அடையாளப் பில்லையைக் காட்டியதும், ரகசிய வழியாக, அவன் அழைத்துச் செல்கிறான் மானசீககோகுலத்துக்கு. உள்ளே நுழையும்போதே, எனக்கு அருவருப்புத்தான் - சுமார் நாற்பது ஐம்பதுபேர் இருந்தனர் - சாமான்யர்களல்ல - சீமான்கள், சீமாட்டிகள். பூஜை அறைக்கு, நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம் - அங்கு மிக உயர்தரமான முறையிலே விருந்து - இனிப்புப் பண்டங்கள் ஏராளம் - பானம், ஏதோ ஒரு வகையானது, பருகப் பருக இனித்தது, அதேபோது, போதையும் தந்தது - அந்தப் பூஜை அறையிலிருக்கும் போதே, நிலை, கொஞ்சம் கொஞ்சம் தவற ஆரம்பித்துவிட்டது - ஒருவரை ஒருவர், கிருஷ்ணா - கிருஷ்ணா - என்றுதான் அழைத்துக் கொள்வது - பாடத் தெரியாதவர்கள் பாடினார்கள் - இந்த நிலையிழக்கும் காரியம் நடைபெறும் போது ‘மகான்’ - வந்தார். அவர் வருவதற்கு முன்பு, புல்லாங்குழல் ஊதப்பட்டது - வந்த மகானின் முகம், கிருஷ்ண வேஷம் போடப்பட்டிருந்தது - அவர் வந்ததும் அனைவரும், காலில் வீழ்ந்து வணங்க, அவர் அந்தப் பூஜாக்கிருஹத்திலே உள்ள ஒரு இரகசிய வழியாக வேறோர் மண்டபத்துக்கு அழைத்துச் செல்கிறார் - அங்கு, அருமையான வாத்யவகைகள் - தீபாலங்காரம் - திவ்யமானமணம் ஆடவரெல்லாம் கிருஷ்ண பரமாத்மா - பெண்களெல்லாம் கோபிகைகள் - அவ்வளவுதான் - நடனம் - நடனம் - ரசாபாசம்! கூடுமானவரையில், நான், இளையபூபதியை விட்டுப் பிரியாமல், இருந்து வந்தேன், பல கோபிகைகளின் மீது என் கிருஷ்ண பரமாத்மாவின் பார்வை போயிற்று. நான் என் கிருஷ்ணனை ஜாக்ரதையாகக் கவனித்துக் கொண்டேன் - ஆனால் கடைசி வரையில் சாத்யமா! ஒரு குறும்புக்காரக் கோபிகை, என் கூந்தலைப் பிடித்திபத்துக் கீழே சாய்த்துவிட்டு, என் கிருஷ்ணனை “கண்ணாவாடா, கண்ணின் மணியே! வாடா என் மன்னாவாடா, மாதென்னைத் தேடியே” - என்று பாடிக் கொண்டே, அழைத்துக் கொண்டு போய்விட்டாள் - ஆபாசம் ஏனோ பெண்ணே! ஆனந்தம் கொள்வாய் நீயே” என்று ஒரு கிருஷ்ணன் பாடிக் கொண்டே, என் கரத்தைப் பிடித்திழுத்தான் - ஆனால், “மகான்” அங்கு வந்தார் - அவர் அப்படி வருவது இல்லையாம். வந்தவர், என்னைத் தொட்டிழுத்த கிருஷ்ணனிடமிருந்து என்னை விடுவித்தார் - விடுவித்தார் என்றால் எதற்கு! - அவர் என்னைத் தான் கோபிகையாக்கிக் கொண்டார் - அந்த மண்டபத்தை விட்டு, என்னை வேறோர் இரகசிய வழியாக ஒரு தனி அறைக்கு, வேகவேகமாக இழுத்துச் சென்றார் - கிருஷ்ணா! விடு - கிருஷ்ணா, என்னை விடு என்று நான் பதறினேன்; பதிலே பேசவில்லை - அறையின் கதவை, ஓங்கி அடித்துத் தாளிட்டு விட்டு, அங்கு, மங்கலாக எரிந்து கொண்டிருந்த தீபத்தைப் பெரிதாக்கி, என்னைக் குரூரமாகப் பார்க்கலானார் மகான். நான் சற்றுப் பயந்து போனேன்.

தெரிகிறதாடி, கள்ளி! - என்று கர்ஜித்தார் மகான். என் பயம் அதிகமாகி விட்டது - நான் அலறினேன். அலறு - அலறு - அழு - அழு - எவ்வளவு அழுது என்ன பயன் - சத்தம் வெளியே போகாது - என்றான் அந்த மாபாவி.

நான், அந்த இடத்தை விட்டுத் தப்பித்துக் கொண்டோட முயன்றேன் - முடியவில்லை.

ஒரு முறைதான் என்னை ஏமாற்றிவிட்டாய் - காதகி - இம்முறை முடியாது - அப்போது நான் முட்டாள் - உன் அடிமை - பஞ்சைப் பார்ப்பானாக இருந்தேன் - இப்போது நான், குரு - கோகுல குரு - எனக் கொக்கரித்தான் மற்றவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா என்று எண்ணம். பூஜையின் பலனாக ஏற்படுவதுபோல, இந்தப் பாவிக்குக் கம்சன் என்ற எண்ணம் ஏற்படுகிறதோ என்று நினைத்தேன் - ஆனால் கம்சன் என்ற எண்ணம் ஏற்பட்டால், கிருஷ்ணனை அல்லவா இம்சிப்பான். இவனோ, என்னை இம்சிக்கிறானே, என்ன காரணம் - யார் இவன் - என்று எண்ணினேன் - உடல் படபடவென உதறிற்று.

எப்படி, நமது கோகுலம்! பேச்சு நடை, நொடி, பாவனை, குரல், சகலமும் மாறிப்போய் விட்டதே, அடையாளமே தெரிய வில்லையே என்று யோசிக்கிறாயா! யோசி! யோசித்துக் கொண்டே இரு! - என்று கூறிவிட்டுச் சிரித்தான், அந்தக் காதகன் “நீ... யார்” ... என்று தடுமாறினேன், பேசவே முடியாமல். “நானா... ஏன், தெரிய வில்லையா...” என்று கூறிக்கொண்டே, கிருஷ்ண வேஷத்தைக் கலைக்கலானான்... நான் பயத்தை அடக்கிக் கொண்டு, யார் அந்த வேஷதாரி என்று கூர்ந்து பார்த்தேன் - கிரீடம் - முகமூடி இவைகளை வீசி எறிந்து விட்டு, என் எதிரே நின்றான், கணபதி சாஸ்திரி!