அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
17
                     

கணபதி சாஸ்திரி! என் முதல் பலி! இளைய பூபதியைச்சிக்கச் செய்வதற்கு எனக்கு உடந்தையாக இருந்து, அதன் மூலமாகவே என்னை இழந்துவிட்ட ஆசாமி. அந்த இளித்த வாயன், எங்கோ காசியாத்திரை போய் விட்டான். ஜமீன்தாரரின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று பயந்து கொண்டு, என்ன ஆனானோ என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன் சிலகாலம் வரை. பிறகு இளையபூபதி என்னை இன்பச் சோலைக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டதால், கணபதி சாஸ்திரியைப் பற்றிய எண்ணமேகூட மறைந்த விட்டது. எதிர்பாராதவிதமான சந்திப்பு நேரிட்டது! மானசீக கோகுலத்தில் கணபதி சாஸ்திரி! நான் திடுக்கிட்டுப் போனேன் - தெளிவும் அதையொட்டித் தைரியமும் வரச் சில நிமிஷங்களாயின. அதுவரையில் கணபதி சாஸ்திரி குரூரமாகப் பார்த்தபடி இருந்தான். புன்னகையையும் பெருமூச்சையும் சமஎடை கலந்து வீசினேன், கணபதி சாஸ்திரியின் கோபத்தைக் குறைக்க, பலித்து பேச ஆரம்பித்தான். படபடவென்றும் - சரி, சரி, பேசட்டும், பேசிவிட்டால் கொதிப்புத் தானாகக் குறைந்துவிடும். நல்லது தான் அது என்று எண்ணிக் கொண்டேன். டாக்டரே! உங்களுடைய வைத்யமுறைக்கும் இதற்கும் சற்று வித்தியாசம். நீங்கள், காய்ச்சல் கொண்டவர்களைப் பேசாமிலிருக்க வேண்டும், பேசினால் ஜுரம் அதிகமாகும் என்று கூறுவீர்கள். உடலில் கொதிப்பு இருக்கும்போது, அது ஒரு சமயம் தேவைப் படக் கூடும். உள்ளத்திலே கொதிப்பு ஏற்பட்டால் அவ்விதமாகப் பேசாமலிருந்து விடக் கூடாது. பேசிப் பேசி ஆத்திரம் வெளியே வார்த்தைகளாகக் கொட்டி விட்டால்தான் கொதிப்பு அடங்கும். பேசாமல் இருந்தால் அந்தக் கொதிப்பு, வளரும், ஆசாமி கருகி விடக் கூடும் - விளைவு என்ன என்பது பற்றிய கவலையுமின்றி, விபரீதமான காரியங்கள் செய்யக்கூடும். கணபதி சாஸ்திரிக்கு, என்மீது எவ்வளவு ஆத்திரம் இருக்கும்! பாவம்! சகஜம்தானே! அவன் கோயிலிலே கூட அவ்வளவு உருக்கமாக அர்ச்சித்தான். இளையபூபதி கிடைத்ததும், இனி உனக்கு விருந்து கிடையாது என்று கூறிவிட்டேன். கோபமாகத்தானே இருக்கும். பலகாலமாக வளர்ந்திட்ட கோபம், பேசி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டால்தான் நல்லது. ஆகவே, நான், அடிக்கடி அவன் பேச்சிலே குறுக்கிடவுமில்லை - அவன் துடுக்குத்தனமாக இரண்டோர் சமயம் தூற்றிய போது கோபித்துக் கொள்ளவில்லை - புன்னகையைக் குறைத்துவிடவு மில்லை - அங்கு இருந்த ஒரு ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, புருவத்தைச் சற்று மேலுக்குத் தூக்கியபடி, புன்னகையுடன், கணபதி சாஸ்திரியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். டாக்டரே! அந்தப் பார்வையும், தினுசும், இப்போது நன்றாக இராது. அப்போது என் இளமையிலே, அந்தப் பார்வை, உம்மைப் போன்று ஊருக்கு உழைப்பவர்களின் உள்ளத்தைக் கூடக் குலுக்கிவிடும் - அவ்வளவு மாயசக்தி இருந்தது அந்தப் பார்வைக்கு. கணபதி சாஸ்திரியின், கோபம், பஞ்சு பஞ்சாயிற்று அந்தப் பார்வையால்!

“அடிகாதகி! கள்ளி! என்னைத் துரோகம் செய்து விட்டாயே, கடைசிவரையில் தப்பித்துக் கொள்ளலாம் என்று தானே எண்ணிக் கொண்டாய். இவனால் என்ன ஆகும், பஞ்சைப் பார்ப்பான்தானே என்று எண்ணிக் கொண்டாய். இப்போது? என்னிடம் சிறைப்பட்டிருக்கிறாய். இளையபூபதி கிடைத்துவிட்டான், இனி நம்மை யார் என்ன செய்ய முடியும் என்று எண்ணி இறுமாப்புடன் இருந்து வந்தாயே, பார் இப்போது, படு அவதி, பாபி! நான் உனக்கு ஒரு குறையும் செய்யவில்லை. குரங்கு, கோல் கொண்டவனிடம் கூத்தாடிக் கிடப்பது போல, உன்னிடம் நான் இருந்து வந்தேன். என்னை வஞ்சித்தாய். கோயிலிலே பூஜை செய்யும் ஏழைக் குருக்கள், என்ன சாதித்து விட முடியும் என்று எண்ணிக் கொண்டாய். பார்த்தாயா என்னுடைய அந்தஸ்த்தை, செல்வத்தை, அதிகாரத்தை!! மானசீக கோகுலம்! மன்னர்கள்கூட மயங்கும் இடம்! இந்த இடத்திலே, நான் இட்டதுதான் சட்டம். வெட்டு தலையை என்றால் போதும், தீர்ந்தது. விரட்டு இளையபூபதியை என்று உத்தரவிட்டால் போதும், அவனிடம் இலட்சக்கணக்கிலே பணம் இருந்தாலும், கவலையில்லை, விரட்டி விடுவார்கள் என் சீடகோடிகள். வல்லவனுக்கு, எதுவும் சாத்யமாகும் - எங்கும் அவனுக்கு வசதி கிடைக்கும். தெரிந்து கொள்ளடி தெளிவற்றவளே - இங்கு நான் தங்கத் தட்டில்தான் சாப்பிடுகிறேன் - வெள்ளி வட்டிகளில் பழரசம் - வெட்டிவேர் விசிறி, அதற்கு வெள்ளிப் பிடி - வெல்வெட்டு மெத்தை - வேளைக்கோர் விதமான பட்டுப் பீதாம்பரம் - ஆடிப்பாடி எனக்கு மகிழ்வூட்டப் பலர் - எல்லாம் என் அப்பன் கண்ணன் திருவருளால்! இவ்வளவும், நமது ஊருக்கு நெடுந்தொலைவிலுள்ள இந்த டில்லிப் பட்டணத் திலே கிடைத்திருக்கிறது. என்னை வஞ்சித்த, உன்னைப் பற்றி நானும் கொஞ்சநாள் எண்ணி ஏங்கினேன் - பிறகு மறந்து போனேன். தற்செயலாக உன்னைக் கண்டேன், கடைவீதியில் அந்தக் காளையுடன். பிறகு, என் வேவுகாரர்கள் வேலை செய்தனர் - இதோ என் எதிரே நீ இருக்கிறாய் - உன்னை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இங்கே - என்ன வேண்டு மானாலும்.”

இந்த முறையிலே கணபதி சாஸ்திரி கொக்கரித்தான். பேச்சு அதிகமாக அதிகமாக ஆத்திரம் குறைந்து கொண்டிருந்தது. நான் பேசாமலிருக்கக் கண்ட கணபதி சாஸ்திரி, “என்னடி கள்ளி, யோசனை? நம்மோடு வந்துள்ள இளையபூபதி எப்படியும் நம்மை அழைத்துக் கொண்டு தானே போவான் என்ற தைரியமோ! அதுதான் நடைபெறாது. என் ஏவலர், அவனை வெளியே அனுப்பி விடுவர் - எங்கே அந்தப் பெண் என்ற கேட்டால், பதில் கிடைக்காது - போலீசில் முறையிடவோ முடியாது. யாரும் இவன் பேச்சை இங்கு மதிக்க மாட்டார்கள் - அதுமட்டுமல்ல - என் சீடர்களிலே சிலர், பெரிய பெரிய அதிகாரிகள். அதனால் திடீரென்று இளையபூபதி மீது, கொள்ளைக் குற்றம், கொலைக் குற்றம், எது வேண்டுமாயினும் விழக்கூடும் - நான் ஆறு வருஷம், பத்து வருஷம் என்று இங்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டும் இளையபூபதிக்கு என்று எண்ணுகிறேனோ, அதன்படி அவனுக்குக் கிடைத்துவிடும். இங்கு அவன் எதுவும் செய்துவிட முடியாது” என்று கூறிவிட்டு, என்னை அந்த அறையிலேயே விட்டு விட்டு, வெளியே சென்றான் - கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டான் - சத்தம்கேட்டது.

இளையபூபதியுடன் வாழ்ந்து வந்த வாழ்வு தீர்ந்து விட்டது என்று நான் தீர்மானித்து விட்டேன் - கணபதி சாஸ்திரியின் பேச்சு, எனக்கு வெறும் மிரட்டலாகப்பட வில்லை. பாவம்! என் பொருட்டுத் தகப்பனை விரோதித்துக் கொண்டு, சொத்தைக் கரைத்துப் பழைய ஜமீன்தாருடன் பகைமை கொண்டு, படாத பாடுபட்ட இளையபூபதியிடமிருந்து நான் பிரிக்கப்பட்டு விடுவேன் என்பது தெரிந்து நான் கொஞ்சம் வருத்தமுற்றேன். ஆனால் ஏதும் செய்ய முடியாத நிலையில் சிக்கிக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு வேண்டுமானால், கணபதி சாஸ்திரியை, ஏதாவது தந்திரத்தால் ஏமாற்றலாம்; ஆனால் இந்த நேரத்திலே, அவனை ஒன்றும் செய்ய முடியாது என்பது நன்றாகப் புரிந்து விட்டது. சரி - வெற்றி கணபதி சாஸ்திரிக்குத் தான். ஆரம்ப வெற்றி, என்ன சொன்னானோ, எப்படி மிரட்டினானோ, தெரியாது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம், இளைய
பூபதியை அந்த இடத்தைவிட்டு துரத்தியே விட்டான் கணபதி சாஸ்திரி. வெற்றிக் களிப்புடன், என்னிடம் சேதியைக் கூறினான். அவனுடைய வெற்றி பரிபூணமாகி விட்டது - ஆகவே ஆனந்தமடைந்தான்! நான் கோகுலதாசியானேன்! கணபதி சாஸ்திரியின் காமக் கூடாரத்திலே, முக்கியமான வளானேன் - டாக்டரே! என் வாழ்விலே இப்படித்தான், அடிக்கடி, எதிர்பாராத மாறுதல்கள், எல்லாம் என்னாலே ஏற்பட்டவை என்றும் கூறிவிட முடியாது. டில்லிப் பட்டணத்துக்கு நாங்கள் புறப்பட்டபோது, என் வாழ்வில் இப்படி ஒரு பெரிய மாறுதல் நடைபெறும் என்று எண்ணியிருக்க முடியுமா! செல்வமும் சுகமும் சாமரம் வீச இளையபூபதி பராக்குக் கூற கதர்க்கடை ஐயர் களிப்பூட்டும் பேச்சுப்பேச, பூரண திருப்தியுடன்தானே சென்றேன். ரயிலில் இரண்டாம் வகுப்பில், என் வாழ்விலே நேரிட வேண்டிய தொல்லைகள் தீர்ந்து விட்டன. இனி நிம்மதியாகக் காலங்கழிக்க முடியும் என்றுதான் நம்பினேன். அப்படிப்பட்ட சமயத்திலே இந்த இடி நேரிட்டது. “ஏன் இவள் இப்படி ஆகிவிட்டாள்? முன்பு, மிகுந்த அந்தஸ்துடன் வாழ்ந்து வந்தாளே! ஒய்யாரமாக இருப்பாளே! ஜமீன்தாரரின் நேசத்தைப் பெற்றிருந்தாளே! இப்போது, வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு வாடிக்கிடக்கிறாளே! ஏனு?” என்று என்னைப்பற்றி விசாரித்து விட்டு, உண்மைக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல், அவர்களே பதிலும் கூறி விடுகிறார்கள். “கெட்டு அலைந்தாள். கர்வம் பிடித்தவள். பணத்தாசையினால் பாழானாள்” என்றெல்லாம் கூறுகிறார்கள். டில்லியில் எனக்கு ஏற்பட்ட பேரிடிக்குக் காரணம் நானா! நானாகவே, சில சமயங்களில் எண்ணிக் கொள்வதுண்டு, பூவும் காயும் பூத்தும் காய்த்தும் இருக்க, அழகாக விளங்கும் செடி கொடிகள் மரங்கள், ஒரு குற்றமும் செய்யாதிருக்கும்போதே, பெருங்காற்று அடித்து, மலரையும் காய்களையும் பிய்த்து எறிந்துவிட்டு, அலங்கோலமாக்கி விடவில்லையா? அதுபோல என் வாழ்விலே, அவ்வப்போது எனக்குக் கிடைத்த சுகத்தை, வேறு யாராரோ செய்யும் செயல்கள் சூறாவாளியாக மாறி, அழித்து விடுகிறது போலும் என்று எண்ணிக் கொள்வேன். இளையபூபதியுடன் இன்பமாகக் காலங்கழிக்க முடியும் என்ற நம்பிக்கையை, இந்தக் கணபதி சாஸ்திரி நொறுக்கினான். சில நாட்களுக்குப் பிறகு, அவன் என்னை என் இஷ்டப்படி ஊர் போக அனுமதிப்பானோ என்று எண்ணினேன். அவனோ, இளையபூபதியை யாரைக் கொண்டோ மிரட்டித் துரத்தி விட்டதுடன், நான் இனி என்றென்றும் அவனுடன் அந்த மானசீக கோகுலத்தில் ராதாமாதாவாக வாழ வேண்டியதுதான் என்று தீர்மானமாகக் கூறிவிட்டான். அதற்கான ஏற்பாடு செய்து விட்டான்.

என்ன ‘ஜாலவித்தை’ செய்து, அவன் அவ்வளவு பேரையும் மயக்கி வைத்திருந்தானோ தெரியவில்லை - அங்கு வந்தவர்கள், மதியற்றவர்களல்ல - உயர்தரமான அதிகாரிகள் மதிநுட்பமிகுந்த வியாபாரிகள் - வெளிதேசங்கள் சென்று திரும்பியவர்கள். இப்படிப் பட்டவர்களே தவிர, கடைகண்ணி வைத்துப் பிழைப்பவர்கள், கையெழுத்தும் போடத் தெரியாத வர்கள், அன்றாடம் ஜீவனத்துக்கு வேலை செய்பவர்கள் என்பன போன்றவர்கள் அல்ல. மானசீக கோகுலத்தின் மாட்சி பற்றிக் கவிபாடிக் கொண்டு வந்து கொடுத்துக் கோபாலரிடம் (கணபதி சாஸ்திரி) கடாட்சம் பெற்றுக் கொண்டு போனவர்களும் உண்டு.“ நான் ராதாமாதாவான பிறகு, என்னிடமும், அந்தப் பக்த கோடிகள், பரிவும் பக்தியும் காட்டினர்.

என்னால் தவிர்க்க முடியாத நிலையிலே நான் சிக்கிக் கொண்டேன் - சில நாட்கள் சஞ்சலப்பட்டேன் - பிறகு ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, புதிய இடத்துக்கும் புதிய நிலைமைக்கும் ஏற்றபடி என்னை நானே மாற்றி அமைத்துக் கொள்ளவும், கணபதி சாஸ்திரியின் மனதைக் குளிரச் செய்யவும் பழகிக் கொண்டேன். அதாவது, நான் ராதாமாதா வேலையை ஏற்றுக் கொண்டேன். சுலபமான வேலை. என்ன காரணத்தினாலோ பக்திப் போதைக் கொண்ட சீடர்களுக்கு காட்சி தருவது பூஜையின் போது, மற்ற நேரத்தில் கணபதி சாஸ்திரியின் பூஜையை ஏற்றுக் கொள்வது! இவ்வளவுதானே! பல நாட்களுக்குப் பிறகு, நான் பக்குவமாகப் பேசியும், பலவிதமாகக் கொஞ்சியும், கெஞ்சியும், கணபதி சாஸ்திரியிடம், மானசீக கோகுலம், அமைத்ததைத் தெரிந்து கொண்டேன். முதலிலே கணபதி சாஸ்திரி இடந்தரவே இல்லை - ஏதாவது சாக்குக் கூறியே என் வாயை அடைத்து விடுவான்.

“எப்படி, இவ்வளவு ஆசாமிகளைச் சொக்க வைத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டேன். அவனோ, “எல்லாம், தபோபலமடி, தபோபலம்” என்பான் - தாம்பூலத் தட்டிலிருந்து வெற்றிலையை எடுத்து, நான் கட்டிக் கொண்டிருந்த பட்டுப் புடவையில் துடைத்து, அளவறிந்து சுண்ணாம்பு தடவி, அன்பு கனியும் பார்வையுடன், மடித்த வெற்றிலையை, கணபதி சாஸ்திரியின் அதரத்தருகே கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, “சொல்லுங்களேன், என்னிடம் கூடச் சொல்லப்படாதா?” என்று மறுபடியும் கேட்பேன் - கணபதி, ஒரு விநாடி மயங்குவான். மறு கணம் சமாளித்துக் கொண்டு, “சொல்லுங்களேன், என்னிடம் கூடச் சொல்லப்படாதா?” என்று மறுபடியும் கேட்பேன் - கணபதி, ஒரு விநாடி மயங்குவான். மறு கணம் சமாளித்துக் கொண்டு,“தபோபலம்தானடி - ஏன், உனக்குச் சந்தேகமா! தபோபலம், இவனுக்கு ஏது என்கிற எண்ணமோ, தாசிலோலனான இவனுக்கு, கேவலம் அர்ச்சகத் தொழில் செய்து கொண்டிருந்த இவனுக்கு, தபோபலம் எங்கிருந்து கிட்டும் என்று யோசிக்கிறாயோ? முட்டாளே! தாசிவேசிகளுடன் கூடிக் குலாவிக் கொண்டிருந்தாலும், மனசை ஈஸ்வரத் தியானத்திலே நிலை நிறுத்தி விட்டால் போதுமடி, தபோபலம் தானாக வரும்” - என்று கூறுவார். நான், கோபித்துக் கொள்வேன் - அவன் கொஞ்சுவான், என் கோபத்தைக் குறைக்க - ஆனால் உண்மையை மட்டும் கூற மாட்டான்.

“நீ, என்னை ஏய்த்துவிட்டதும், என் மனம் மகாவேதனை அடைந்தது. புலம்பினேன். ஈஸ்வரா! இந்த மாமிசப் பிண்டத்தின் மீது கொண்ட மோகாந்தக்காரத்தில் ஆயிரத்திலோர் பாகம், பதினாயிரத்திலோர் பாகம், உன் மீது பக்தியாக்கி இருந்தால், அவள், ஒரு ஜமீன்தாரனுக்காக என்னைக் கை விட்டதுபோல, நீ, செய்வாயோ! ஒருக்காலும் கைவிட்டிருக்க மாட்டாய்! நான் நீசன் - பாபி -உன்னை மறந்தேன் - உத்தம தருமத்தை இழந்தேன் - உலக போகத்தில் இச்சை வைத்து அலைந்தேன் - அவதியுற்றேன் - கேவலம் ஒரு தாசி கூட என்னைக் கைவிட்டு விட்டாள் - நான் காதகன் - காமுகன் - கபோதி - கசடன் - என்றெல்லாம், என்னை நானே நிந்தித்துக் கொண்டேன் - ஈஸ்வரா! நான் கெட்டதும் பட்டதும் போதும், இனி, உன் பாத மலரே கதி என்று கதறினேன். அன்றிரவு கனவில் கருட வாகனத்தின் மீதேறி வந்தார், பகவான், “எழுந்
திரடா” என்றார் - “இனி, நீ தன்யனானாய், நேரே, டில்லிக்குப் போ. அங்கு, நமது ஆணையைக் கூறு. இன்னின்னாரிடம் - அவர்களிடம் நான் கனவில் கட்டளை பிறப்பித்திருக்கிறேன், ஆகவே உன்னை அவர்கள் வரவேற்பார்கள் - அவர்களிடம் கூறி, மானசீக கோகுலம் ஏற்படுத்து என்று உத்தரவிட்டு விட்டு மறைந்தார். அதனாலேதான், நான் இந்தத் தலத்தை அமைக்க முடிந்தது” என்று கணபதி சாஸ்திரி கூறினான் ஒரு முறை. பொய்தான். ஆனால், இப்படிப் பலமுறை பொய்களைச் சொல்லி, அலுத்த பிறகு, நிஜம் பேசுவான் என்ற நம்பிக்கை எனக்கு; எனவே சகித்துக் கொண்டேன், அவன் பொய்களை. “உண்மையைச் சொல்ல மாட்டீர்கள்!” என்று மறுபடியும் கேட்பேன் - மறுபடியும் ஏதாவது புளுகுவான்.

“உண்மை இதுதான். உன் நயவஞ்சகத்தால், என் மனம் வெந்து விட்டது. சே! இனி இவள் முகத்திலும் விழிக்கக் கூடாது என்று தீர்மானித்து, தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினேன் - திவ்ய ஷேத்திரங்களை எல்லாம் தரிசித்துக் கொண்டு, கடைசியில் இமாசலம் வந்து சேர்ந்தேன். அங்கு, ஒரு தவசியிடம் சீடனாகி, தவம் செய்து வரப்பிரசாதம் பெற்றேன்” என்று ஒரு வேளை கூறினான். நான் நம்பமாட்டேன் என்பது தெரியும் - இருந்தாலும், அவனுக்கு அவ்விதம் பேசுவதிலே, ஒருவகைச் சந்தோஷம் கடைசியாக உண்மையைச் சொன்னான்.

“லட்சுமிசந் என்றோர் கோடீஸ்வரன், இந்த டில்லிப் பட்டணத்துக்கு இருபது மைல் தொலைவிலே உள்ள கிராமத்தில் வசித்து வந்தான். அவனுக்கு ஏராளமான பூஸ்திகி. பெரிய வியாபாரம். நான், உன்னை விட்டுப் பிரிந்ததும், பல இடங்களில் சுற்றி விட்டு, கடைசியாக, அவனைத் தற்செயலாகக் கண்டேன். அவன் தன் கிராமத்தில் ஒரு சிறிய கோயிலைப் புதிதாகக் கட்டி, அதற்கு, விசேஷமான பூஜைகள் செய்தான் - அதற்கு மகத்துவம் ஏற்படுத்த விரும்பி, தெற்கே உள்ள திவ்ய க்ஷேத்திரத்திலிருந்து அர்ச்சகரைத் தன் கோயிலுக்கு வரவழைத்து, வேலைக்கு அமர்த்த எண்ணினான் - நான் அவனைச் சந்தித்ததும், பழம் நழுவிப் பாலில் வீழ்ந்தது போலாயிற்று. நானே அந்தக் கோயில் பூஜைக் காரியங்களைக் கவனித்துக் கொண்டு வரலானேன் - அத்துடன் - அவனுடைய வீட்டிலேயும், நான்தான் பூஜைசெய்வது, இந்த இரண்டு உத்தியோகமும், எனக்குக் கூடுமான வரையில் நல்ல வருமானம் கொடுத்தது. நிம்மதியாக இருந்தேன். தூரதேசத்தில் வசிக்கிறோம் - நமது சிநேகிதர்களை விட்டுப் பிரிந்து தனிக் குடியாக இருக்கிறோம், என்ற ஒரு மனக்குறை தவிர வேறு கிடையாது. கோயிலிலே நான் பல உத்சவாதிகளை ஏற்பாடு செய்தேன் - அப்போதெல்லாம், சன்மானம் கிடைக்கும். எனக்குக் குடியிருக்க லட்சுமிசந், ஒரு தனி ஜாகையும் தானமாகக் கொடுத்திருந்தான். வேளைக்குப் படி கறக்கும் நல்ல பசு - அதைக் கவனித்துக் கொள்ள ஒரு ஆள் - சமையலுக்கு ஒரு பையன் - வீடு பெருக்க மொழுக ஒரு பெண், இவ்வளவும் கிடைத்து, நான் சுகமாகக் காலந் தள்ளிக் கொண்டு வந்தேன். லட்சுமிசந்துக்கு, வியாபாரம் டில்லியில். இரவு எட்டு மணிக்கு மேல், மோட்டாரில் கிராமம் வருவான், ஒவ்வோர் நாளும்.

லட்சுமிசந்துக்கு, இரண்டாந்தாரமாக ஒரு இலாவண்யவதி வாய்த்திருந்தாள் - அவள் பெயர் அகல்யா. அழகும் இளமையும் மிகுந்த, அந்த அகல்யா, லட்சுமி சந்துக்குப் பேத்தியாக இருக்கக் கூடிய பருவம். ஏழைக் குடும்பமாம் - எனவே, இலட்சாதிகாரி யான அந்தக் கிழவனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டிருந்தாள். கிராமத்திலே, சேட் இல்லாதபோது சிலர், இது பற்றிக் கேலியாகப் பேசுவதுண்டு - ஆனால் எதிரே யாரும் ஒரு வார்த்தையும் பேச முடியாது - லட்சுமிசந்துக்குச் செல்வாக்கு அமோகம்.

வழக்கப்படி, மாலை பூஜைக்காக நான், சேட் வீடு சென்றேன் - பூஜை அறையிலே உட்கார்ந்து, பூஜையைத் துவக்கினேன், பக்கத்து அறையிலிருந்தோ, அதை அடுத்த அறையிலிருந்தோ, லட்சுமிசந்தின் மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. உற்றுக் கேட்டேன். அவள் ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டு பேசுகிறாள் - வேறு யாரோ, ‘குசுகுசு’வெனப் பேசுகிறார்கள். முத்தம் கொடுக்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டேன்.