அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
11
                     

இளையபூபதி, இரவு 8 மணியாகுமா? என்று மீண்டு மொருமுறை கேட்டுத்தான் விடை பெற்றுக் கொண்டு போனான். “இரவு 8 மணியாகுமா?” என்று கேட்டதிலே அவனுடைய ஏக்கம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. பாபம் புதிய மோகம்! இளைய பருவம்! எங்கும் அடிபடாத ஆசாமி!

அன்று இரவு சாஸ்திரியும் நானும் அவன் ஒரே அடியில் வீழ்ந்தது பற்றிப் பேசிச் சிரித்தோம்.

இளைய பூபதியைவிட அவனுடைய கடியாரம் அவசரப் பட்டது போலும். ஏழரை... மணிக்கே, அது எட்டு என்று காட்டி விட்டது. பூபதியும் பூஜைக்கு வந்தான். அன்று பூபதி வரும்போது சாஸ்திரி பின்கட்டில் குளித்துக் கொண்டிருந்தார். நான் பூபதியை வரவேற்றேன். வாயால் ஒன்றும் சொல்ல

வில்லை. கண் இருக்கும்போது வாய் எதற்கு? சாஸ்திரி குளித்துவிட்டு வருவதற்குள், பூபதி என்னைப் பூஜை செய்தான். நான் பூஜை சாமான்களை எடுத்து வந்து வைத்தேன். ஒன்றிரண்டு சாமான் (தவறிக்) கீழே விழுந்தன. பூபதி நான் எடுப்பதற்குள் அவைகளை எடுத்தான், என் கையில் கொடுத்தான். அவனுடைய கடியாரத்தைவிட கைவிரல்கள் மகா அவசரம்! சாமானை மட்டும் என் கையில் கொடுத்தனவா? தீண்டவும் தீண்டின. ஒரே நாள் பூஜையில் இவ்வளவு கிடைத்தது என அவனுக்குச் சந்தோஷம்.

“தாங்கள் ஒரே குமாரர்தானோ?”

“ஆமாம்! ஒரே பிள்ளைதான். பெண்கூடக் கிடையாது.”

இந்தச் சுருக்கமான சம்பாஷணைக்குப் பிறகு நான் மௌனம் சாதித்தேன். வலையில் விழுந்த மீன் வறுபடாமலா போகும்.

“இந்தப் பூஜைக்கு என்ன பெயர்?”

“இஷ்டசித்தி விநாயக பூஜை.”

மீண்டும் நான் வாயை மூடிவிட்டேன். அவன் தன் கண்களால் என் இருதயமெனும் கதவைத் தட்டினான். நான் புன்சிரிப்பு என்னும் சாளரத்தை மட்டுமே திறந்தேன். சாஸ்திரியும் வந்தார். பூஜையும் ஆரம்பமாயிற்று.

பூஜை முடிந்ததும். இரண்டு தேவாரம் பாடினேன். என்ன உருக்கம்! என்ன இனிமை! என்று இளைய பூபதி கூறினார். திருவாசகத்துக்குருகாதார் உண்டா? என்றார் சாஸ்திரியார். “அதுவும் அம்மாவின் பாட்டு...” என்று பூபதி துதிக்கத் தொடங் கினார். “அவளுக்குக் கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டு” என்று சாஸ்திரி காரணங் கூறினார். “ஜமீன்தார்வாள் கேட்காத பாட்டா? எத்தனையோ தாசிகளின் பாட்டைக் கேட்டிருப்பாரே” என்று நான் துவக்கினேன். “சேச்சே! தாசிகள் பழக்கம் அவருக்கு ஏண்டி இருக்கப்போகிறது. பரமசாது. சகலகுண சம்பன்னன் அவர்” என்று சாஸ்திரி பூஜித்தார். “அம்மா சொன்னது போல் நான் பாட்டுக் கேட்டிருக்கிறது உண்மைதான். ஆனால் தாசிகள் பழக்கம் கிடையாது” என்றான் பூபதி. “யார் நம்புவா இவாளை” என்று நான் கூறினேன். இளையபூபதி இளித்தான்.

மூன்றாம் நாள் நடுநிசிப் பூஜை! இரண்டு நாள் பழக்கமும் நடுநிசி நேரமும் சும்மா விடுமா பூபதியை! வரும் போதே அம்மாவைதான் கேட்டான்! சாஸ்திரி குளியலுக்குச் சென்றபோது, என் கூடவே கலந்து சாமான்களை எடுத்து வைத்தான். கைவிரல் பட்டதுபோய், உடலோமோத ஆரம்பித்து விட்டது. உள்ளம் மோதிவிட்ட பிறகு இது சகஜந்தானே.

“அவர் வந்துடப்போறாரே” என்றேன் நான். இது எச்சரிக்கை.

“குளித்துவிட்டு வரநேரமாகும்” என்று பூபதி குழைந்து கூறினான்.

“கண்டு விட்டால் ஆபத்து” என்று நான் பயமுறுத்தினேன். கொல்லையில் புகுந்த காளையாயிற்றே அவன், பயிரை அழிக்கப் பயப்படுவானா?

“தலை போவதானாலும் தயார்” என்றான்.

“அவ்வளவு துணிந்து விட்டீர்” என்று நான் தூண்டினேன். பூபதி என்னைத் தழுவிக் கொண்டான் பதில் கூறுவதற்குப் பதிலாக.

“இது என்ன காரியம்? அடுக்குமா?” என்று மெள்ளக் கேட்டேன்.

“என்ன காரியமா? என் உயிர் நிலைக்க இது செய்தே தீர வேண்டும்” என்று அவன் கொஞ்சினான்.

“முடியவே முடியாது” என்றேன். காரியம் மிஞ்சி விட்டது. “இதுபோல் எவ்வளவு நாழிகை என்னைக் கட்டிப் பிடித்து நிற்கப் போகிறீர்” என்றேன் நான் கேலியாக. “உலகமே எதிர்த்தாலும் சரி! உன் கணவன் என் தøயை வீசி எறிந்தாலும் சரி! ஒரு முத்தம் நீ கொடுக்கும்வரை இப்படித்தான் நிற்பேன்” என்றான். காமவெறி தலைக்கு ஏறிவிட்டது.

“கண்ணாளா, உன்மீதும் எனக்கு பிரியந்தான்; நான் அவருக்கு மூன்றாம்தாரம். இருந்தாலும் இம்மாதிரி காரியம், பாபம் இதுவரை நடந்தது போதும் விட்டு விடு” என்று நான் தர்மோபதேசம் செய்தேன். தண்டனைக்கே பயப்படமாட்டேன் என்று சொன்னவன் தர்ம போதனைக்கா பயப்படப் போகிறான். சாஸ்திரியார் வரும் காலடிச் சத்தம் கேட்டது “விடு! விடு!” என்று நான் படபடத்துக் கேட்டேன். “கொடு! கொடு!” என்று அவன் மூச்சுத் திணற கேட்டான். என்ன செய்வது? “ஒரு முத்தம் ஒரே ஒரு முத்தம்!” என்றான் பூபதி! எங்கள் இதழ்கள் நெருங்கின. அவனது கண்கள் தானாக மூடிக் கொண்டன. சாஸ்திரியாரின் காலடிச் சத்தத்தை மீறிவிட்டது, நான் தந்த முத்தம்!

எடுத்த காரியம் ஜெயமாக முடிந்தால் ஏற்படும் ஆனந்தமே தனியானது. கதிர் முற்றியதும் உழுதவன் முகம் ஜொலிக்கிறது. அரும்பு மலர்ந்ததும் மணம் வீசுகிறது. செங்காய் கனியானதும் நாக்கில் ஜலம் ஊறுகிறது. இதுபோல்தான் எனக்கு ஆனந்தம். இளையபூபதி கேட்ட ஒரு முத்தம், எனது வாழ்க்கையிலேயே ஓர் முதல் வெற்றி! அவன் தவித்த தவிப்பும், கெஞ்சியதும், கொஞ்சியதும், என்னைப் போற்றியதும், புகழ்ந்ததும், சந்தியங்களைச் சரமாரியாகக் கொட்டியதும், எவ்வளவு என்று எண்ணுகிறீர்கள். இப்போதாவது நான் இந்தவிதமான உலகிலே உழன்று தெளிவு பெற்றிருக்கிறேன். அந்தக் காலம் எனது ஆரம்பப் பருவம். அப்போது சமாளித்து, சாகசமாகவே நடந்து கொண்டேனே, அதுதான் அதிசயம். என்னதான் தாசியாக இருந்தாலும், அவன் செய்த ‘பூஜை’ உள்ளபடி என் மனதில் சற்றுச் சபலம் தட்டத்தான் செய்தது. எவ்வளு கள்ளங்கபடமற்றவன்! வெள்ளை மனது! சொன்னதை நம்புகிறான். என்னை அசல் சாஸ்திரியின் சம்சாரமென்றே நம்பினான். பூஜை விஷயமும் உண்மை என்றே எண்ணினான். துள்ளிவிளையாடும் மான் மறைந்து இருந்து எறிந்த வேலுக்கு இரையானதுபோல், இளைய பூபதி என் காமமென்னும் சாஸ்திரப் பிரயோகத்தால் சாய்ந்தான். சாய்ந்தவன் சகல உண்மைகளையும் எப்டியும் ஓர் நாள் தெரிந்து கொண்டுதானே தீருவான். அப்போது அவனுக்கெவ்வளவு கோபம் வரும், மனம் எப்படிக் கொதிக்கும், என்னைச் சித்திரவதை செய்யலாம் என்றுகூடத் தோன்றுமல்லவா! இதனை நான் நினைத்தபோது சற்று நடுக்கமாகத்தான் இருந்தது. ஒரு ஜமீன்தாரரின் விரோதத்தைப் போக்க எண்ணிக் கடைசியில் இரண்டு ஜமீன்தாரர்களின் விரோதம் வந்து சேர்ந்தால் என்ன செய்வது என்ற திகிலும் பிறந்தது. இவ்வளவு எண்ணங்களும் மனதிலே தோன்றி முகத்திலே வெற்றி, கவலை இரண்டு தெரியும் விதத்திலே குறிகள் தோன்றின. அவன் பாபம் நான் சாஸ்திரிக்குப் பயந்தே கவலைப்படுகிறேன் என்று கருதி, “எதற்கும் நான் இருக்கிறேன் பயப்படாதே” என்று தைரியங் கூறினான். எனக்குப் பலியானவன் என்னைக் கவலைப்பட வேண்டாமென்று கூறியபோது, பரிதாபமாகத்தான் இருந்தது. விளக்கு நோக்கி வீட்டில் பூச்சி நெருங்கி வந்து விட்டது.

புலிக்கு இரத்த ருசி கிடைத்ததும், மேலும் இரத்தம் குடிக்கவே அலையும் என்பார்கள். மிருகத்தின் வெறிக்கும் காமாந்தகாரத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? எது முதல் முத்தம் இளையபூபதி எனும் புலிக்கு முதல் இரத்த ருசி. மேலும் மேலும் அதைப்பருக அவன் பதைத்தான். சாஸ்திரி அடுத்த நிமிடம் அங்குவந்து பூஜையைத் துவக்கியதால் என் அதரம் தப்பிற்று. அன்றைய பூஜையும் முடிந்த மறுதினமும் பூஜை நடந்தது. மறுதினம் முதற் கொண்டு இளைய பூபதி பூஜை விடுதியிலேயே தங்க வேண்டுமென்ற ஏற்பாட்டின்படியே தங்கினான். அந்த ஏற்பாடு இல்லாது போனால் பூபதியின் இருதயமே இரு கூறாகிப் போயிருக்கும். சாஸ்திரிகள் மௌன விரதம் பூண்டார் பூஜை சதாகாலமும், எங்கள் சல்லாபமோ சமயம் நேரிட்டபோதெல்லாம் நடந்தது. ஆண்களை ஆசை பிடித்து ஆட்டத் தொடங்கினால் அவர்கள் எதுவும் செய்யத் தயார்தானே. வீரம், சூரத்தனம், விறுவிறுப்பு எல்லாம் மாயமாகத்தானே போய்விடும். இளையபூபதி என் கண் ஜாடையை கட்டளையாகக் கொண்டு ஆடி நின்றான். அந்தச் சமயத்தில் நான் எதைக் கேட்டாலும் கொடுக்கச் சித்தமாக இருந்தான். நான் எதைச் செய்யச் சொன்னாலும், சம்மதம் என்பான். என்னால் அவனுக்கும் அவன் தகப்பனாருக்கும் சண்டை மூட்டிவிட முடியும்! அவனுடைய வீட்டிலேயே அவன் கள்ளனாகி, பணமும் எடுத்து வரவேண்டுமென என்னால் ஏவ முடியும். கணபதி சாஸ்திரிகள் கழுத்தைத் திருகிப் போடும்படிச் செய்ய முடியும்! கதைகளிலே சொல்வார்களே புலிப்பால் கொண்டுவா என்றால் கூடக் கொண்டு வருவான் என்று, அந்த நிலைமையிலே இருந்தான் ஆசாமி. எல்லாம் எதற்கு? பெரிய யானையை அடக்க சிறிய அங்குசம் உதவுவது போல், ஆண்களின் அட்டகாசத்தை அடக்க பெண்களின் சாகசம் உதவுகிறது!

“இஷ்டசித்தி விநாயகர் இனி எனக்கு வேறு என்ன பிரசாதம் தரவேண்டும். உன்னை எனக்குத் தந்த பிறகு இனி வேறு எதைக் கொடுக்க வேண்டும்?”

“நான் கணபதி சாஸ்திரிகளின் மனைவி, அவர் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் குருக்கள். கவனமிருக்கட்டும்!”

“ஆமாம்! நீ சாஸ்திரியின் மனைவிதான். ஆனால் என் காதலி, இது இஷ்டசித்தியார் தந்த வரப்பிரசாதம்.”

“இன்னும் இரண்டு தினங்கள்தானே இந்த இன்பம்.”

“அப்படியென்று நீயும் எண்ணியிருந்திருப்பாய், சாஸ்திரியாரும் கருதியிருப்பார். ஆனால் நான் இதை என் நிரந்தர இன்பமாக்க நெஞ்சில் உறுதிகொண்டு விட்டேன்.”

“அது உமது எண்ணம்! காரியம், கருத்தின்படியே தானா நடக்கும்? நாமொன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக முடியும்.”

“அப்படியென்று சாஸ்திரியும் என் அப்பாவும் எனக்கு மாமனாராகலாம் என்ற மனோராஜ்யம் செய்து வரும் ஜமீன் தாரரும் இரண்டொரு நாட்களிலே பேசிக் கொள்வார்கள்.”

“என்ன? என்ன? எனக்கு விளங்கவில்லையே. பூஜை முடிந்ததும் நாங்கள் ஊருக்குப் போகத்தானே போகிறோம்.”

“ஆமாம்! ஆனால் பூஜைதான் முடியப் போவதில்லையே!”

“விஷயத்தைச் சொல்லுங்கள். நீர் பேசுவதே அதிசயமாக இருக்கிறது. பயமாகக்கூட இருக்கிறது.”

“பயப்படாதே ஆனந்தம். இன்றிரவு நாமிருவரும் இங்கிருந்து கிளம்பி, இந்த ஊரை விட்டே ஓடிவிட நான் ஏற்பாடு செய்துவிட்டேன். நமது ஆசைக்குக் குறுக்கே நிற்கும் சாஸ்திரி, என் அப்பா, முதலிய எதுவும் நம்மைத் தீண்டாத தேசம் சென்றுவிட வேண்டும்”

“ஐயையோ நான் மாட்டேன். ஊர் நிந்தனைக்கு ஆளாக மாட்டேன்.”

“அது உன் முடிவானால் என் பிணத்துக்கு நீ உன் கண்ணீரால் அபிஷேகம் செய்ய நேரிடும்.”

“ஐயையோ இது என்ன தர்ம சங்கடம்?”

இந்தச் சம்பாஷணை நான் இளையபூபதியுடன் அன்றிரவே ஓடிவிடுவது என்ற விதத்தில்தான் முடிந்தது. அதுதான் நடந்தது. ஜமீன் குடும்பங்கள் இரண்டும் தத்தளித்தன, தவித்தன. கணபதிசாஸ்திரி தமது குட்டு வெளியாகாதிருக்க, காசி சென்றுவிட்டதாகக் கேள்வி. நாங்கள் ஓடிவிடப் போவதாகச் சாஸ்திரிக்கும் நான் சொல்லவில்லை. சாஸ்திரியிடம் நான் சொல்லி வைத்தது, பூஜை என்ற சாக்கில் இளைய பூபதியை வீட்டிற்கு வரப் போகச் செய்து வசியப்படுத்தி, மணமாக இருந்த பெண்ணின்மீது ஏதாவது தோஷங் கூறிக் கல்யாணத்தை நடக்க வொட்டாது தடுத்துவிடுவது என்ற முறையில் தான் சொன்னேன். இளைய பூபதியைக் காணும்வரை அந்த விதமாகத்தான் செய்ய வேண்டு மென்று நானும் எண்ணியிருந்தேன். ஆனால் பூபதி கூறிய யோசனை ஜமீன்தார் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள இன்னும் அதிகமாக உதவும் எனத் தெரிந்ததும், சாஸ்திரிக்கும் சொல்லாமல் நாங்கள் கிளம்பி விட்டோம். குற்றாலம் போய்ச் சேர்ந்தோம். போகும் வழியில் நான் சாஸ்திரியின் மனைவி அல்ல என்பதையும், தாசி என்பதையும் சாஸ்திரி என்னைத் தன் மனைவி போல் நடித்தால், ஜமீன் வீட்டில் பூஜை செய்து பெரும் பொருள் பெற்றுப் பணம் தருவதாகக் கூறியே அழைத்து வந்ததாகவும் கூறினேன். இளைய பூபதிக்கு இச்சேதி கோபத்தையும், வருத்தத் தையும் கொடுத்தது. ஆனால் என் கண்ணீரும் பெருமூச்சும், சோகப் பார்வையும், அவரது கோபத்தை மாற்றி விட்டன. நாங்கள் குற்றாலத்தில் குஷாலாகவே வாழ்ந்து வந்தோம். நான் தாசி. என்னை இதற்காக யார் என்ன கண்டிக்க முடியும்? அவரோ மேஜர். யார் அவரைத் தடுக்க முடியும்? இருவருக்கும் இதோபதேசம் செய்வார்கள்! ஆனால் இதே குற்றம் செய்திராவிட்டாலும் வேறு ஏதாவது குற்றம் செய்த பேர்வழிகளாகவே உபதேசம் செய்ய வருபவர்களிலே அனேகமாக இருப்பார்கள். அத்தகையோர் உபதேசம் எமக்கு ஏன்? நாங்கள் இளம் பருவத்தினர். என்னிடம் அழகு, ஜமீன்தார் மகனிடம் பணம். என் அழகை அவருடைய பணத்துக்கு அடகு வைத்தேன்! நான் வைக்கா விட்டால், வேறு எவரேனும் அடகு வைக்கத் தயார்தானே! நானும் இவரிடம் அடகு வைக்காவிட்டால், வேறு வியாபாரியிடம் ஈடாக வைத்திருப்பேன். இந்த முறை மாறினால்தானே இளைய பூபதி போன்றவர்கள் சீர்பட முடியும். இல்லையானால் இந்த விமலா இல்லா விட்டால் வேறு ஒருவள் கிடைக்கிறாள். நாற்றம் போக மருந்திட்டுக் கழுவாத நாசிக்கு “நீ அந்தக் கெட்ட வாடையை நுகராதே உடலுக்குக் கேடு” என்று உபதேசம் செய்தால் நடக்குமா?

இளையபூபதிக்கு வீட்டிலிருந்து, முதலில் இதோபதேசம் செய்வதும், பிறகு மிரட்டியும், பிறகு சபித்தும் கடிதங்கள் வந்தன. இதோபதேசக் கடிதத்திற்கு, “இது விதிவசம். விலக்க முடியாது” என்று பதிலும், மிரட்டல் கடிதத்துக்கு “இது சகஜம், உலகத்திலே நடப்பதுதான்” என்று விளக்கமான பதிலும், சபித்து எழுதிய கடிதத்துக்குப் பாகப் பிரிவினைக்கு வழக்கிட உத்தேசமென்ற வக்கீல் நோட்டீசும் பதிலாகக் கிடைத்தன. இடையிலே இளையபூபதி நாலைந்து கடன் பத்திரங்களில் கையொப்பமிட்டார். நான் இரண்டு மூன்று முறை வீட்டுக்கு மணியார்டர்கள் அனுப்பினேன்.

குற்றாலத்தில், எங்களுக்கு, வாழ்க்கை நன்றாகவே இருந்தது. நான்கூட முதலிலே கொஞ்சம் பயந்தேன். ஊரார் என்ன சொல்வார்களோ என்று. ஆனால் ஜமீன்தார் வீட்டு மகன் அட்டைக் கருப்பாக இருந்தாலும் மாநிறம் என்று சொல்வது போல், சீமான் வீட்டுப்பிள்ளை சுத்தப் பைத்யமாக இருந்தாலும், சில வேலைகளில் புத்திசுவாதீனமாக இருப்பதில்லையாம். வேதாந்த சாஸ்திரங்களைப் படித்தால் கொஞ்சம் கலக்கமாம் என்று சொல்வது போல, சில நாட்கள் சென்றதும், ஏதோ பாலியம், கண்ணுக்குப் பிடித்தமானவளோடு தமாஷாகக் காலங் கழிக்கிறார். இது ஒரு பெரிய தவறா? அவர் சந்யாசியா? அந்த அம்மாள்தான் என்ன யோகியா? இது சகஜமாக நடப்பதுதானே” என்று பலரும் கூறத் தொடங்கினார்கள்.

நாலு வேதத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று பெயர் வாங்கியவரும், கோயிலுக்குள் ஆதிதிராவிடர் சென்றால் எப்படித் தீட்டு வரும் என்பதற்கு எண்ணாயிரம் சாஸ்திர ஆதாரம் காட்டக்கூடியவருமான பஞ்சாமிருதப் பிரசங்க பாபவிமோசன சாஸ்திரிகள், குற்றாலத்து நீர் வீழ்ச்சிக்கும் காதல் உள்ளத்திற்கும் உவமை வைத்துப் பேசுவார் எங்கள் எதிரில் “எங்ஙனம் கரடு முரடான கற்பாறைகளில் நீர் ஓடிய போதிலும் அது குளிர்ந்தும், தெளிந்தும் இருக்கிறதோ, அதுபோல் விமலா ஒரு தாசியாக இருந்தபோதிலும், நாங்கள் அவளிடம் கொண்டிருக்கும் காதல் பரிசுத்தமானது. இது பாபக் கிருத்தியமாகாது. விசுவாமித்திர மாகமுனிவர்கூட மேனகையைத் தள்ளிவிடவில்லை. மேலும் ஆண்டவனே அன்பு சொரூபம்.” - என்று தமது மதத்தையே எங்கள் பக்கம் சாட்சி சொல்லும்படி செய்தார். அவர் மட்டும்தானா? நாங்கள் அடிக்கடி குற்றாலத்திலே நடத்திய விருந்துகளுக்கும் கேளிக்கைகளுக்கும் விஜயம் செய்த கனதனவான்களும் அவரவர்களுக்குத் தெரிந்த அறிவை எமக்குச் சாதகமாகவே சாட்சி கூறச் செய்தனர்.

தாசி வீடுகளுக்குப் போய் ரோகங்களைச் சம்பாதித்துக் கொள்ளாதே என்பதைப் பற்றிய ஆராய்ச்சி நூல் எழுதியவராம், ஒரு டாக்டர், அவர்கூறினார் ஒரு நாள் “மனதிலே எழும் இச்சையை அடக்கினால், அதனால் மனம் நொந்து, உடல்வாடி, பிறகு க்ஷயரோகம் வந்துவிடும். ஆகவே ஜமீன்தாரர் தமது மனதுக்குப் பிடித்தமானதை அடைந்தது மகாசரியான காரியம்” என்று. இதுபோல், ஒவ்வொருவரும் ஒவ்வோர் விதமாகப் பேசுவர். அவர்கள் பெற்றபரிசு என் தரிசனம், ஜமீன்தாரரின் தோழமை. அதனால் பண இலாபம், இவைகள்தான். ஒரே ஒரு ஆசாமிதான், இவர்கள் பேசிய மாதிரி எல்லாம் பேசவில்லை. எங்கள் வாழ்க்கையைப் பற்றி ஆச்சரியப்படவுமில்லை. ஒரு யோசனை மட்டும் சொன்னார். “ஜமீன்தாரர், இந்த அம்மாளுடன் கூடி வாழ்ந்தால், வாழ்க்கை இன்பமாக இருக்கு மெனக் கருதினால், உலகமறிய ரிஜிஸ்டர் கலியாணம் செய்து கொள்ளட்டுமே” என்றார். மற்றவர்கள்போல் மலை மலையாக ஆதாரங்களைக் குவிக்கவில்லை. மிகச் சாதாரணமாகக் கூறினார். அது கேட்டு என் மனம் மகிழ்ந்தது. நான் முத்துவை மணம் செய்து கொள்ள எண்ணிய காலமும், அதனால் வந்த வம்புகளும் என் நினைவிற்கு வந்ததும், மனமகிழ்ச்சி மறுகணமே போய் விட்டது. ஜமீன்தாரரின் சிரிப்பும் அந்த யோசனையைக் கேட்டதும் மறைந்து விட்டது. அந்த ஆசாமி போன பிறகு, ஜமீன்தார் சொன்னார், “இந்த ஆள், சாமியில்லை, பூதமில்லை என்று பேசுகிற சுயமரியாதைக்காரர்” என்று. சாமி பூதத்தைப் பற்றி அவர் ஒன்றும் பேசவில்லை. இருக்கிறதா இல்லையா என்று விஷயமே பேசவில்லை. அவர் கூறியதில் அறிவு இருக்கிறது! அது பிடிக்கவில்லை ஜமீன்தாருக்கு. அவருக்கு மட்டுமா? உலகத்திலே பலருக்கு, முக்கால்வாசிப் பேருக்குப் பிடிக்கத்தான் மாட்டேன் என்கிறது.